Sunday, November 8, 2020

 ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் 10 – த்ரயம்பகம்

                                         சிவபாதசேகரன்

மகா சிவராத்திரியில் த்ரயம்பக் ஆலயம் 

மகாராஷ்ட்ர மாநிலத்தில் நாசிக்கிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது த்ரயம்பகம் என்ற ஜோதிர்லிங்க ஸ்தலம். இங்கு உள்ள பிரம்ம கிரி என்ற குன்றின் அருகில் கோதாவரி, அகல்யா, வைதாணா , மேற்கு முகமாகச் செல்லும் கங்கை ஆகிய நதிகள் உற்பத்தி ஆகின்றன. வேத குருகுலங்களும், ஆசிரமங்களும் யோகப் பயிற்சி மையங்களும் உள்ள சிற்றூர் இது.

சிவபெருமானின் முடியைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரமன் , சிவ சாபத்தால் உலகத்தவர்களால் பூஜிக்கப் படாமல் போகுமாறு ஆன பின்பு,தனது பிழைக்கு வருந்தி, இத்தலத்தை அடைந்து மலை வடிவாகவே உறையும் பரமனை நோக்கித் தவம் செய்தான். ஆகவே  இங்கு சிவபெருமான்  பிரம கிரியாக பிரமனுக்குத்  தோன்றினார் என்கிறது புராணம்.

த்ரயம்பக் ஆலய வெளித் தோற்றம் 

ஒரு சமயம், கௌதம முனிவர் தனது மனைவியான அகலிகையுடன் உலக நன்மைக்காகத் தவம் செய்தார். வருணனது சொற்படி ஒரு குளத்தையும்  உண்டாக்கினார். அதில்  நீர் வற்றாதிருக்கவும், அங்கு நீராடிப் புண்ணிய கர்மாக்களைச் செய்பவர்களுக்கு அளவில்லாத பலனும் உண்டாகுமாறு வரம் பெற்றார்.

 நாளடைவில் அங்கு வந்த முனிவர்கள் பலர் கௌதமர் மீது பொறாமை கொண்டு  ,அவரை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஒருநாள் பசு ஒன்று கௌதமரின் ஆசிரமத்திற்கு எதிரில் இருந்த பயிர்களை மேயவே, அதனை விரட்டுவதற்காக, முனிவரானவர் தன் கையிலிருந்த கோலை அதன் மீது எறிய, அம்மாயப்பசு உயிர்  நீத்தது. இதனால் முனிவரைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. இதற்குப் பிராயச்சித்தம் கூறிய முனிவர்கள், கெளதமர்  பிரம கிரியை 101 பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் என்றும், கோடி பார்த்திவ லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் கங்கையை வரவழைத்து அதில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். கெளதமரும் அவ்வாறு செய்து, சிவபெருமானது கருணைபெற வேண்டித் தவம் செய்தார். அவர் முன்பு காட்சி அளித்த சிவபிரான், அம்முனிவர்களது தீய எண்ணத்தினால் கௌதமருக்குத் தோஷம் எதுவும் ஏற்படாது என்று கூறி, கங்கையைச்  சிறிதளவு தனது ஜடா முடியிலிருந்து வெளிப்படுத்தி அருளினார். அத்தி மரத்தடியிலிருந்து பிரம கிரியில் கங்கை வெளிப்படவே, முனிவரும் அதில் ஸ்நானம் செய்தார். அந்த இடமே பின்னர்  கங்காத்துவாரம் என்று பெயர் பெற்றது. கௌதமர் கொண்டு வந்ததால் கோதாவரி எனவும் பெயர் பெற்றது. தனக்குத் தீங்கு செய்த பிற முனிவர்களையும் மன்னித்தருளுமாறு கங்கையைக்  கௌதம முனிவர் வேண்டினார் . கோடி தீர்த்தங்கள் அதில் சங்கமித்ததால் அதனைக் கோடி தீர்த்தம் என்று வழங்குவார்கள்.

கௌதமர், தர்ப்பையைக் (குசையைக் ) கொண்டு தடுத்ததால் கங்காத் துவாரத்தின் கீழ்ப் புறம் குசாவர்த்த தீர்த்தம் உண்டாயிற்று. கங்காத் துவாரம், குசாவர்த்தம், கோடி தீர்த்தம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்பவர்களுக்கு மறு பிறவி இல்லை என்று புராணம் கூறுகிறது.

குசாவர்த்தத்தின் கிழக்கே கனகல தீர்த்தமும் அதற்குத் தெற்கில் கஞ்சன தீர்த்தமும் உள்ளன. பிர்ம கிரியின் மேலுள்ள கங்கா த்வாரத்தில் கங்கா தேவியின் விக்ரஹம் இருக்கக் காணலாம். அங்குள்ள கோமுகத்தின் வழியாக நீரானது குண்டத்தில் விழுந்து ஓடுகிறது. த்ரயம்பகத்திற்கு வடக்கில் நீல பர்வதத்தில் பில்வ தீர்த்தம் உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்ஹ ராசியில் குரு பிரவேசிக்கையில் கும்ப மேளா நடைபெறுவதால் அப்பொழுது இங்குள்ள நதிகளில் நீராடுவது     மிகுந்த  புண்ணியமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்திர தீர்த்தம், கங்கா சாகரம், கௌதம குண்டம், வாரணாசி தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்களும் உள்ளன.   

கங்கா தேவியின் சன்னதிக்கு அருகில் கௌதமரது குகை இருக்கிறது. அதில், கௌதமர், அகலிகை, ஆகிய திருவுருவங்களையும் நூறு சிவ லிங்கங்களையும் காணலாம்.

பிர்ம கிரி, நீல கிரி , காலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு இடையில் இப் புனிதத் தலம் அமைந்துள்ளது. இம்மூன்று மலைகளையும் பிர்ம, விஷ்ணு,ருத்ர வடிவங்களாகக் கூறுவர்.  பிர்ம கிரி மலையின் உயரம் சுமார் 4000 அடிக்கு மேலாக இருப்பதால் படிக்கட்டுக்களில் ஏறி மேலே செல்லலாம். நீலகிரியின் உச்சியில் ரேணுகா தேவி கோயில் உள்ளது. ஹனுமானின் பிறப்பிடமான அஞ்சனேரி மலை , இங்கிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. த்ரயம்பகேச்வர் கோவிலின் மேற்கில் நிவ்ருதிநாத் கோயில் உள்ளது. அங்கு மார்கழியில் நடைபெறும் உற்சவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவர்.   


கோட்டை போன்ற அமைப்புடைய  மதில்களுக்குள் த்ரயம்பகேச்வரர் கோயில் அமைந்துள்ளது. 1755 முதல் 1786 வரை பேஷ்வா மன்னர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. நானா சாஹிப் பேஷ்வா என்பவர் இதனைக் கட்டி முடித்தார்.  கர்ப்பக்கிருகத்தில் சுயம்புவான லிங்க பீடம் உள்ளது. லிங்கம் இல்லாமல் ஒரு குழி மாத்திரமே காணப்படுகிறது. இதன் மேற்குப் பாகத்தில் சூக்ஷும வடிவில் கங்கை பிரவாகிப்பதால் அப்பகுதி ஈரமாகவே காணப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமியன்றும், சோம வாரங்களிலும் திரளானபக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.மகா சிவராத்திரியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சோமவாரங்களில் சுவாமிக்கு அழகிய கிரீடம் ஒன்றைச் சார்த்துவார்கள்.

15 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நாசாக் வைரத்தால் சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்டதாகவும், 1817 ல் ஆங்கிலேயர்கள் மராத்தா போரில் வென்றவுடன் பாஜி ராவ் என்ற இளவரசர் அந்த வைரத்தை ஆங்கிலேயருக்கு அளித்ததாகவும், பின்னர் அது இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றனர்.

எதிரில் உள்ள மலைக்கோயில் 

இந்தத் தலத்தைச் சுற்றிலும் கிருஷ்ணன் கோயில், இராமர் கோயில், பரசுராமர் கோயில், லக்ஷ்மி நாராயணர் கோயில் முதலிய கோயில்கள் உள்ளன. சுமார் 90 கி.மீ. தூர பிரதக்ஷிணம் செய்யப் பல பக்தர்கள் வருகிறார்கள். அதில், கேதாரேசுவரர், இந்த்ரேச்வரர், காஞ்சநேச்வரர், ராமேச்வரர், கௌதமேச்வரர், த்ரிசந்யேச்வரர், விச்வநாதர், ஜ்வரேச்வரர், முகுந்தேச்வரர்,த்ரிபுவநேச்வரர், குசேச்வரர், கர்பூரேச்வரர் , கால பைரவர், த்ரிசந்த்யா தேவி, புவனேச்வரி, கனகேச்வரி, மஹா விஷ்ணு, ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கிறார்கள்.    


த்ரயம்பகேச்வரர் கோயிலுக்கு அண்மையிலேயே ஒரு சிறு குன்றின் மீது கோயில் ஒன்றைக் காணலாம். மேலே செல்லப் படிக்கட்டுக்கள் அமைந்துள்ளன. உச்சிக்குச் சென்றவுடன் ஊரின் அழகிய தோற்றத்தைக் கண்டு மகிழலாம். 

2 comments:

  1. Asirvadams.thanks for your detailed ddescription of the oorigin of Godavari & Triyambakeswarar. Looting of diamonds by invaders it appears is their main aim.no other country has lost so much as India due to looting. Best wishes janakiraman

    ReplyDelete
  2. Excellent account with correct historic perspectives and clear directions for pilgrims.

    ReplyDelete