Sunday, December 13, 2020

தலையாலங்காடு

 

                                                                                                         தலையாலங்காடு

                                                                                                         சிவபாதசேகரன்                                                  


கங்கை என்னும் கடும் புனலைக் கரந்தான் தன்னைக்

 காமரு பூம்பொழிற் கச்சிக் கம்பன் தன்னை

 அங்கையினில் மான்மறி ஒன்று எந்தினானை

 ஐயாறு மேவினானை ஆரூரானைப்

 பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்

 பரிதிநியமத்தானைப் பாசூரானைச்

 சங்கரனைத் தலையாலங்காடன் தன்னைச்

 சாராதே சால நாள் போக்கினேனே .

                                       -- திருநாவுக்கரசர் தேவாரம்   

 தலமும் இருப்பிடமும்: புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் தெய்வப் பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் 93 வது தலமாக விளங்குவது திருத்தலையாலங்காடு என்னும் தலம். இது வரலாற்று சிறப்பும்புராணச் சிறப்பும் மிக்க தலமாக விளங்குகிறது. இருப்புப்பாதை வழியாகச் செல்வோர் திருவாரூரில் இறங்கி கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் 11 கிலோமீட்டர் பயணித்தால் தலத்தை அடையலாம்சோழசூடாமணி (கடுவாய்) ஆற்றின் வடகரையில் ஐந்து நிமிட நடையில் ஆலயம் அமைந்துள்ளதுதமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து ரயிலில் வருபவர்கள்கும்பகோணத்தில் இறங்கி 25  கிலோமீட்டர் திருவாரூர் செல்லும் பேருந்தில் பயணித்தால் இத்தலத்தை அடையலாம்.

 


தலத்தின் தொன்மை: இந்த ஊரானது தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.இங்குநடைபெற்றபோரில், பாண்டியன்நெடுஞ்செழியன்சோழனை வென்றதால்,தலையாலங்கானத்துச்செருவென்றநெடுஞ்செழியன் எனப்பட்டான் என்று புறநானூறு கூறுகிறது.

தலத்தின்பெருமை:ஆலங்காடுஎனப்படும்தலங்களில் இது முதன்மையானது .இதனை முக வடாரண்யம் என்று வடமொழியில் கூறுவர்.

 


கோவில் அமைப்பு: ஊரின் நடுவே  இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. எதிரில் மகிமை வாய்ந்த சங்கு தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. அதில் அல்லிமலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றனஇதன் மேல்கரையில் படித்துறை விநாயகர் சன்னதி உள்ளது மேல் கரையிலும்தென்கரையிலும் ஸ்நான கட்டங்கள் உள்ளன. மேல்கரையில் ஆலய மதிலை ஒட்டி  ஜப மண்டபம் உள்ளது. 

ராஜகோபுரம் இல்லாததால் நுழைவு வாயிலில் பஞ்சமூர்த்திகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளனர். வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம் பலிபீடம் நந்தி ஆகியவற்றைத் தரிசிக்கலாம்இதன் அருகில் வலப்புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியை காணலாம். மூலவர் சன்னதி சற்று உயரத்தில் காணப்படுகிறதுநின்ற கோலத்தில் கணபதியும்அமர்ந்த கோலத்தில் பாசாங்குசம் ஏந்திய  அம்பிகையும் முன் மண்டபத்தில் இரு புறமும் காணப்படுகின்றனர். சுவாமி சந்நிதி நுழைவாயில் மண்டப முகப்பில் கணபதியும் கந்தனும் காட்சி அளிக்கின்றனர் மகாமண்டபத்தில் நடராஜர் சன்னதியைப் பார்த்தபடி சமயக் குரவர்கள் நால்வர் உள்ளனர். அப்பர் பெருமான்,இத்தலத்துஇறைவனைப்பாடியதிருத்தாண்டகப்பாடல்கள்   கல்வெட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

 


தெற்குப் பிரகாரத்தில்காசி விஸ்வநாதரும் விசாலாக்ஷியும் தனிச் சன்னதி கொண்டுள்ளனர். கன்னி மூலையில் கணபதிக்குத்  தனிச்  சன்னதி உள்ளதுவடமேற்கு மூலையில்முருகன்வள்ளி தெய்வானை சமேதராகக்  காட்சி அளிக்கிறார். வடக்குப் பிராகாரத்தில் தலவிருட்சமான பலாமரம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகக்  காணப்படுகிறது.  கோமுகத்தின் அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளதுஇதன் அருகில் பத்துக்கரங்களுடன்வட திசையை நோக்கியபடி  காளி தேவி காட்சி அளிக்கிறாள்.  பிராகாரத்தில் வில்வ மரம் உயர்ந்து விளங்குகிறதுபைரவர் சன்னதியில்  இரு பைரவர்கள் இருக்கிறார்கள். தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி முகப்பில் கிழக்கு நோக்கியவாறு அனுகிரக சனிபகவான் சன்னதி கொண்டுள்ளார்அம்பிகை சன்னதியின் கோமுகிக்கு அருகில் சண்டிகேஸ்வரி இருக்கக் காணலாம். சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபக் கோஷ்டங்களுள் தக்ஷிணாமூர்த்தி மட்டுமே காணப்படுகிறார். 


மூலவர்விமானம்உயரமானது. இதில் தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணுபிரம்மா முதலிய சுதைச்  சிற்பங்கள் காணப்படுகின்றனஇதன் தென்கிழக்கு முகப்பில்பெரியவடிவில்சோமாஸ்கந்தர்காட்சியளிக்கின்றார். மூலவர்சதுரஆவுடையார்மீதுதரிசனம்தருகிறார்.  ஆடல்வல்லான்  என்றும் நர்த்தனபுரீச்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இப்பெருமானைத் தரிசிக்காது  நாட்களை வீணாக்கி விட்டேன் என்று அப்பர் சுவாமிகள் பாடல் தோறும் குறிப்பிடுகிறார்மேலும்இப்பெருமான்தொண்டர்களுக்குத்தூநெறி காட்டுபவனாகவும்நரகத்தில் விழாமல் நம்மைக் காப்பவனாகவும், மும்மூர்த்தி வடிவில் விளங்குபவனாகவும், அடியார் சிந்தையுட் புகுந்து, நீங்காதவனாகவும், வேத வடிவினனாகவும்கயிலை மலையை எடுத்த அரக்கனை மன்னித்துஅவனுக்கு இராவணன் என்ற பெயர் கொடுத்த கருணாகரனாக விளங்குவதாகவும்  அப்பரின் தேவாரப் பதிகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

அம்பிகையின் திருநாமம் பாலாம்பிகை என்றும் திருமடந்தை என்றும் வழங்கப்படுகிறது. அழகுக்கு ஒருவரும் நிகர் இல்லை எனும்படிக் காட்சி அளிக்கிறாள்உலகன்னையாகிய இவள் கருணையே வடிவமான கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்திருநள்ளாற்றில் இருப்பது போலவே அம்பாள் சந்நிதி வாயில் அருகில் கிழக்கு நோக்கியபடி அனுகிரக சனிபகவான் சன்னதி கொண்டுள்ளார்சனிப்பெயர்ச்சியின் போது இவருக்கு விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. 

 


தேவகோஷ்டத்தில் கண்கவர் குருநாதனாகக் காட்சிதரும் தக்ஷிணாமூர்த்திக்கு வியாழக் கிழமைகளில்அர்ச்சனைகள்நடைபெறுகின்றன. பத்துக்கரங்களுடன் வடக்கு முகமாக அருள்பாலிக்கும் காளிதேவியை மக்கள் வெள்ளிக் கிழமைகளில்வழிபட்டு,வேண்டியவரங்கள்யாவும்பெறுகின்றனர்.   பிராகாரத்தில் மேற்குப் பார்த்த வண்ணம் உள்ள பைரவர் சன்னதியில்  இரண்டு பைரவர்கள் காட்சி அளிக்கின்றனர். ஒரு மூர்த்தியிடம் மட்டும் நாய் வாகனம் உள்ளது தேய்பிறை அஷ்டமியில் இவரை வலம் வந்து எல்லா நலமும் பெறுகிறார்கள்.

தீர்த்தங்கள்: கோவிலுக்கு எதிரிலுள்ள சங்க தீர்த்தம் தீராத பல நோய்களைத் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கப் பெற்றதாக பலரும் கூறக் கேட்கலாம். அருகிலுள்ள செம்பங்குடியில் பல்லாண்டுகளுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்கள் 48 நாட்கள் அதிகாலையில் இங்கு வந்து திருக்குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டு நர்த்தனபுரீச்வரர் சந்நிதியை 11 முறை வலம் வந்துவிட்டுமூலவரைத் தரிசிப்பார்களாம்.  சோழ சூடாமணிஆறுகோயிலுக்குத் தெற்கில் ஓடுகிறது. இதனைக் கடுவாய் நதி என்றும் அழைப்பார்கள்.  இந்தப் புனித நதியின் கரையில் பல சிவாலயங்கள் இருக்கக் காணலாம்.

தலவ்ருக்ஷம்: வடக்குப்பிராகாரத்தில்உள்ளபழமையானபலாமரம்தலவிருக்ஷமாகக் கருதப்படுகிறதுதலத்தின் பெயரோடு கூடிய ஆலமரம் கோயிலுக்குள் தற்போது இல்லை.

புராண வரலாறு: தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசாரவேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான் அம்முயலகன் மீது நடனமாடிய தலம் இது. எனவே தான் சுவாமிக்கு நர்த்தனபுரீச்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. கிருதயுகத்தில் கபில முனிவர்பூஜித்து,தைஅமாவாசை அன்று சிந்தாமணியைப் பெற்றார். . சரஸ்வதிதேவி பூஜித்துஜோதிர் லிங்க தரிசனம்பெற்றாள். இக்கலியுகத்திலும்சங்குதீர்த்தத்தில் நீராடுபவர்கள்குன்மம், முயலகன் நோய்சித்தபிரமைவெண்குஷ்டம்  முதலிய மகாரோகங்களில் இருந்து நிவர்த்திபெறுகிறார்கள். 

வழிபட்டோர்:கபிலமுனிவர்தாருகாவன முனிவர்கள்காளிசனிபகவான், திருநாவுக்கரசு நாயனார் ஆகியோர்.  இத்தலத்திற்கு அருகிலுள்ள குடவாயில்நாலூர்மயானம், பெருவேளூர், கரவீரம் ஆகிய தலங்கள் திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்களைப் பெற்றுள்ளதால், சம்பந்தப் பெருமான் தலையாலங்காட்டிற்கும் எழுந்தருளி, பதிகங்கள் பாடியிருப்பார். அதுபோலவே அருகிலுள்ள ஊர்களான திருவாஞ்சியத்தையும், திருவாரூரையும் பாடியுள்ள சுந்தரரும் இத்தலத்துஇறைவரைப் பாடியிருப்பார். நமது தவக்குறைவால் நமக்கு அப்பதிகங்கள் கிடைக்கவில்லை.

பிறசெய்திகள்:ஆண்டுதோறும்,பங்குனிமாதத்தில் கடைசி இரு நாட்களும்  தொடரும் சித்திரை மாதத்து முதல் இரு நாட்களும் விடியற்காலை சூரிய உதயத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும்போது சூரியபூஜை நடத்தப்படுகிறதுசில ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிகையின் மீது பாம்பு இருப்பதைப் பலரும் கண்டு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த பொழுதுஅப்பாம்பு தனது சட்டையை உரித்து அம்பாள் திருமேனியின் மீது போட்டுவிட்டு மறைந்துவிட்டது.

இங்குள்ளபைரவர்,மிகவும்சக்திவாய்ந்தமூர்த்தியாவார்.தீராதபகைகள், பிரச்சினைகள்பிணிகள்ஆகியவற்றைத்தீர்த்துவைப்பவர். எனவேதேய்பிறை அஷ்டமியின் போதுமக்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து நலம் யாவும்பெறுகின்றனர்.செவ்வாய்க் கிழமைகளில்   காளிதேவியை வழிபட்டுத் திருமணபாக்கியம், புத்திரபாக்கியம் ஆகிய கோரிய வரங்களைப் பெறுகின்றனர்ஒரு காலத்தில் பெரிய ஊராக இருந்ததால் எஞ்சிய கோயில்களின் மூர்த்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

 


கல்வெட்டுகள்: தெற்குப் பிராகாரச் சுவற்றிலும்வடபுறச் சுவற்றிலும்மகாமண்டப முகப்பிலும் உள்ள கல்வெட்டுகள், படி எடுக்கப்பட்டுள்ளனராஜராஜனின் ஆறாவது ஆண்டில் அளிக்கப்பட்ட தேவதானங்களும்அருமை உடையார் குமாரன்மண்டபம் கட்டித் தந்த செய்தியும்அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காலிங்கராயன்என்பவர்,இக்கற்றளியைத்திருப்பணிசெய்ததும் ,   கல்வெட்டுகள் மூலம் அறியப் படுகின்றன.

பூஜைகளும் விழாக்களும்: இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இயங்கும்  இக் கோயிலில்காலையும்மாலையும் பூஜைகள் நடைபெறுகின்றன பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறுகிறதுகுளக்கரை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை நடக்கிறதுதவிரவும் தை அமாவாசையை முன்னிட்டு இரு தினங்கள் சுவாமி புறப்பாடாகிசங்க தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்திரை மாதப் பௌர்ணமி சித்திரை சதயத்தில் அப்பர் குருபூஜைவைகாசி விசாகம்ஆடிப்பூரம்ஆடி-தை வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு விசேஷ அலங்காரம்விநாயகர் சதுர்த்திநவராத்திரி, கந்தசஷ்டிஅன்னாபிஷேகம்கார்த்திகை தீபம் மார்கழி பூஜை மகர சங்கராந்திமகா சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருப்பணிகள்: திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 5.7.1970 அன்று இதற்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதுசில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாலயம் செய்து திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுஅன்பர்கள் ஆதரவுடன் ஆடல்வல்லானின் திருவவருளுடன், பல்வேறு திருப்பணிகள் நிறைவேறி ,8.7.2012 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டுத் திருவாவடுதுறை ஆதீன 23 வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகளால் இக்கோயிலுக்கு ஆடல்வல்லான்சிவகாமி அம்பிகைகாரைக்கால் அம்மையார் ஆகிய உற்சவத் திருமேனிகள் அளிக்கப் பெற்றுப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதுமுதல், நடராஜர் அபிஷேகங்கள் ஆறும் அன்பர்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.   

 


 

உள்ளூர்க்கோவில்கள்: மயிலம்மன்திரௌபதிஅம்மன்ஐயனார்காளி,புற்றடிஅம்மன்ஆகிய கிராமதேவதைகளின் கோவில்கள் இங்கு இருக்கின்றன

சுற்றிலும் உள்ள தலங்கள்இங்கிருந்து திருவாரூர் செல்லும் வழியிலிருந்து மூன்றுகிலோமீட்டர் தொலைவில் எண்கண் சிவாலயம் உள்ளது. இதில் உள்ள முருகன் சன்னதி பிரசித்தமானது. திருவாரூர் சாலையில் காப்பணாமங்கலமும்,  அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கங்காதேவி பூஜித்த  கைலாசநாத சுவாமி ஆலயமும் உள்ளனஇதன் அருகில் அருணகிரிநாதரால் பாடப்பெற்றதலமான த்ரயம்பகபுரம்உள்ளது. இன்னும் சற்றுத் தொலைவில்அப்பரும் ,சம்பந்தரும் பாடிய பெருவேளூரும்கரவீரமும் அமைந்துள்ளன. வடகிழக்கில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் நால்வராலும் பாடப்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் உள்ளது. கும்பகோணம் செல்லும் பாதையில் குடவாயில்நாலூர்நாலூர் மயானம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் உள்ளன .இன்னும் சற்றுத்தொலைவில் திருச்சேறையும்நறையூர்சித்தீச்சரமும் உள்ளன. சேங்காலிபுரம், பருத்தியூர், சிமிழிபுதுக்குடி,  மஞ்சக்குடிஓகை ஆகிய ஊர்களிலும் சிவாலயங்கள் இருக்கின்றன. தலையானங்கானப் போரில் வில்லுக்கு நாண் தயார் செய்து கொடுத்த இடம், நாணல்சேரி எனப்படுகிறது. இங்கு இரு சிவாலயங்கள் உள்ளன. மேலும்தேவார வைப்புத் தலங்களான மணக்காலும், இராப்பட்டீச்சரமும், தனிச்சாத்தங்குடியும் (வடகண்டம்), காட்டூரும்  இதன் அருகில் அமைந்துள்ளன.

சமயப்பணி: சமயப்பணி செய்யும் ஆர்வலர்களும்தல யாத்திரை செய்யும் அடியார்களும் இக்கோயிலின் வளர்ச்சியில் பங்காற்றி, ஆலயம் மேலும் வளர்ச்சியடையவும் ஆலய சிப்பந்திகளின் வாழ்வாதாரம் மேம்படவும், உதவி இறையருள் பெற வேண்டுகிறோம். அடியார் பெருமக்கள் தங்கள் வருகையைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9443500235


 

Saturday, December 5, 2020

ருத்ர பீடங்கள் (தொடர்ச்சி)

                                                                     ருத்ர பீடங்கள் (தொடர்ச்சி)            

                                                                சிவபாதசேகரன்

2 . ஸோம பீடம்: திருநாங்கூருக்குள் அமைந்துள்ள ஸ்ரீ சந்த்ராக்ஷி சமேத ஸ்ரீ அம்ருத புரீசுவரர் கோயில்.

 முற்றிலும் அமைதியான இடம் மட்டுமல்லாமல் மனதுக்கு அமைதியையும் கொடுக்கும் ஆலயமாக  விளங்குகிறது. இது மார்க்கண்டேயர்  வழிபட்டது. திருக்கடவூரைப் போலவே இங்கும் அன்பர்கள் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றை செய்து கொள்ளலாம். சந்திரனும் வழிபட்ட தலம் . 


அம்பிகைக்கு சந்த்ராக்ஷி என்ற நாமம் இருப்பதை , சந்திரன் வழிபட்டதால் ஏற்பட்டது என்கிறார்கள். சந்திர கிரகப் பரிகாரமும் இங்கு செய்யப்படுகிறது. பூர்ண சந்திரனைப் போன்ற முகம் மட்டுமல்லாமல் அழகு வாய்ந்த கண்களை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம்.

 3 மஹாதேவ பீடம்: இத்திருக்கோயிலும்  நாங்கூருக்குள்  அமைந்துள்ளது. நம்பிற் பிரியாள் உடனுறை நம்புவார்க்கன்பர் என்பன சுவாமி -அம்பாள்  திருநாமங்கள் .  இவை வடமொழியில் ஸ்ரீ பக்தவத்ஸலாம்பிகா சமேத ஸ்ரீ பக்தவத்ஸலேசுவரர் என்று வழங்கப் படுகின்றன.


 இங்குள்ள ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சன்னதி விசேஷமானது. 

4 &5 பீம மற்றும் பவ பீடங்கள்:இதே கோயிலின் பிராகாரத்தில் நான்காவதாக நாம் இங்கு குறிப்பிடும் பீம பீடத்தின் மூர்த்தியான ஸ்ரீ காமாக்ஷி சமேத ஸ்ரீ கைலாஸ நாதர் , மற்றும் திருமேனி கூடத்திலிருந்த ஐந்தாவது பீடமாக நாம் குறிப்பிடும் பவ பீடத்தின் மூர்த்தியான ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவரர் ஆகிய சிவ லிங்கங்களை மட்டும் இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 


அந்த இரண்டு பீடங்கள் இருந்த கோயில்கள் சிதிலமாகி விடவே , மூல லிங்கங்களை மட்டும் இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவ்விரு ஆலயங்களையும் முன்பிருந்த இடங்களில் நிறுவி, நித்திய பூஜை நடைபெறச் செய்வது சைவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளுள்  அவசியமானதொன்றாகும்.

6 ஸர்வ பீடம்: ஸ்ரீ நற்றுணை நாயகி சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயம், செம்பதனிருப்பு .


சீர்காழி- திருவெண்காடு சாலையில் உள்ள ஊரில் அமைந்துள்ள சிவாலயம். ஆதியில் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த கோயில் பிற்காலத்தில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. ஆதியில் இருந்த கோயிலில்  விமான கலசம் கருங்கல்லால் அமைக்கப் பட்டிருந்தது  என்று கூறுகிறார்கள். வாஸுகி என்ற நாகம் பூஜித்ததால் சுவாமிக்கு நாகநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாப விமோசனத்திற்காக வாஸுகி , சிவ பெருமானை ஆற்று நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுப் பின்னர் இத்தலத்திற்கு அருகிலுள்ள காத்திருப்பு என்ற தலத்திற்குச் சென்று ஸ்ரீ ஸ்வர்ணபுரீசுவரரை வழிபட்டவுடன் பாவம் நீங்கப் பெற்றது. இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் , வில்வம் . தீர்த்தம், மணிகர்ணிகை ஆறு.

7 பாசுபத பீடம்: நாங்கூருக்குச் சற்று வெளியே இருந்த கோயில் சிதிலமடைந்து விடவே, புதியதாகக் கோயிலைக் கட்டியுள்ளனர்.


 இக்கோயிலில் சுவாமி, ஸ்ரீ நயன வரதேசுவரர் என்றும் அம்பிகை, ஸ்ரீ நளினாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். கண் பார்வை சீராக வேண்டிப் பலர் இங்கு வருகிறார்கள்.

8. ஸத்யோஜாத பீடம் : காத்திருப்பு என்ற ஊரில் அமைந்துள்ள இக் கோயிலின் மூலவர் ஸ்ரீ ஸ்வர்ணபுரீசுவரர் என்றும் அம்பிகை, ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை  என்றும் வழங்கப்படுகின்றனர். வாசுகி என்ற நாகம் சிவபூஜை செய்து சாப விமோசனம் பெற்ற தலம். வாசுகியின் திருவுருவம் வெளிப் ப்ராகாரத்தில் இருப்பதைத் தரிசிக்கலாம்.


ஆதி காலத்தில் தண்டகாரண்யம் எனவும் புராண காலத்தில் பராச வனம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டது.காத்யாயன மகரிஷி குழந்தை வேண்டித் தவம் செய்த இடமாதலால் காத்யாயனர் இருப்பு என்று வழங்கப்பட்டு, அதுவே நாளடைவில் காத்திருப்பு என்றாகி விட்டது. மஹாவிஷ்ணு, மகாபலியை வெல்ல வேண்டி சிவபூஜை செய்த தலம் . பின்னர் விஷ்ணுவானவர், குபேரனைக் கொண்டு கோயிலை நிர்மாணித்தார் என்று புராணம் கூறுகிறது. 


நிதாகர் என்ற சித்தர் இங்கு வழிபட்டுப் பல சித்திகளை அடைந்தார். காக புஜண்டரும் வழிபட்டுப் பேறு பெற்றார். சுந்தரருக்குப் பெருமான் பொன் வழங்கியதாகவும் தல புராணம் கூறும். இங்கு வன்னி மரமும் வேப்ப மரமும் இணைந்து ஸ்தல விருக்ஷங்களாகக் காட்சி அளிக்கின்றன. மேலும் ஹேரண்டர்,அகத்தியர்,கார்கி, கௌதமர், கபிலர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.  மூன்று நிலைக் கோபுரத்தின் வெளியில் திருக்குளம் அமைந்துள்ளது.

 9  அகோர பீடம்: ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்ய சுந்தரேசுவரர் கோயில், கீழைத் திருக்காட்டுப்பள்ளி.


திருவெண்காடு  ஸ்வேதாரண்யேசுவரர் கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. மேற்கு பார்த்த சந்நிதி. விநாயகரை நண்டும், சுவாமியை இந்திரன்,பிரமன்,திருமால் ஆகியோரும் வழிபட்ட சிறப்புடைய தலம். விருத்திராசுரனைக் கொன்ற பழி தீர தேவேந்திரன் இங்கு வந்து வழிபட்டான். ப்ராகாரத்திலுள்ள இரட்டை லிங்க சன்னதியை வழிபட்டால் மோக்ஷம் சித்திக்கும் எனக் கூறப் படுகிறது.

பிரமதேவன் இங்கு பத்து சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகத் தல புராணம் கூறுகிறது. ஒரு முனிவரால் நண்டாக ஆகுமாறு சபிக்கப் பெற்ற கந்தர்வன் ஒருவன், இங்கு வந்து விநாயகரை வழிபட்டுச்  சாபம் நீங்கப்பெற்றான், இங்குள்ள கணபதிக்கருகில் நண்டு உருவம் உள்ளதைக் காணலாம். எனவே, நண்டு விநாயகர் என்றும் கற்கட கணபதி என்றும் பிள்ளையார் அழைக்கப்படுகிறார். மஹாகாள முனிவரும் ஆரண்ய முனிவரும் இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். இவர்களது திருவுருவத்தை ஆலய சுவற்றில் சிற்பமாகக் காணலாம். தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் வழக்கமான சனகாதி முனிவர்களுடன் பிரமனும்,விஷ்ணுவுமாக மொத்தம் அறுவர் , ஆலமர் பெருமானிடம் உபதேசம் பெறுவதைக் காணலாம்.இவர் ராஜயோக தக்ஷிணா மூர்த்தி எனப்படுகிறார். கோளிலித் தலமானதால் இக்கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள கடலின் ஓசை இந்த சன்னதிக்கருகில் கேட்கிறது. முக்கிய விழாக்கள் அனைத்தும் இக்கோயிலில் நடைபெறுகின்றன. நாற்புறமும் தீர்த்தங்களைக் கொண்டு இந்த ஆலயம் விளங்குகிறது.

இத்தலத்துப் பெருமான் மீது திருஞானசம்பந்தர் ஒரு தேவாரத் திருப்பதிகம் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல் வருமாறு:

 “ பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான்

பெய்கழல் நாடொறும் பேணியேத்த

மறையுடையான் மழு வாளுடையான்

வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட

கறையுடையான் கனலாடு கண்ணால்

 காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளி

குறையுடையான் குறட்  பூதச் செல்வன்

குரைகழலே கைகள் கூப்பினோமே  “

 த்விதள விமானத்துடன் சுவாமி விமானம் அழகுறக் காட்சியளிக்கிறது. மூலவர் சுயம்பு வடிவில் அருட் காட்சி வழங்குகின்றார். பன்னீர் மரம் ஸ்தல வ்ருக்ஷமாகவும், அம்ருத தீர்த்தம் ஸ்தலத்தின் தீர்த்தமாகவும் அமைந்துள்ளன.     

10. ருத்ர பீடம்: ஸ்ரீ சுந்தர நாயகி சமேத சுந்தரேசுவரர் ஆலயம்,  திருக்கலிக்காமூர் ( அன்னப்பன் பேட்டை)


திருவெண்காட்டுக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தை சீர்காழி- திருவெண்காடு சாலையில் உள்ள மங்கை மடம் என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்து , திருநகரி,கொனயாம்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 3 கி. மீ சென்று அடையலாம். சீர்காழியிலிருந்து கொனயாம்பட்டினம்  செல்லும் நகரப்பேருந்து இத்தலத்தின் வழியாகச் செல்கிறது.

பராசர முனிவர் வழிபட்ட தலம். தனது தந்தையைக் கொன்ற உதிரன் என்ற அரக்கனை இம்முனிவர், ஒரு யாகம் செய்து அழித்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டுப்  பாவ நீக்கம் பெற்றார்.


மீனவன் ஒருவன் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது வலையில் அம்பிகையின் விக்ரஹம் ஒன்று சிக்கவே அதனை வெளியே எடுத்தபோது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டான். அந்த விக்ரகத்தை கலிக்காமூர் கோயிலில் கொண்டு சேர்த்துப் பிரதிஷ்டை செய்வித்தவுடன் அவனது வயிற்று உபாதை நீங்கியது. இக்காரணத்தால் அம்பிகை கடலுக்குச் சென்று தீர்த்த வாரி நடைபெறுவது வழக்கமானது. மாசி மகத்தில் கடலுக்குச் சென்று சுவாமி தீர்த்தவாரி செய்கையில் அருகிலுள்ள தென் திருமுல்லைவாயில் சுவாமியும் இணைந்து தீர்த்தவாரி செய்வதும் வழக்கம்.

கோயில் சிறிது. திருப்பணியாகிப் புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. ராஜ கோபுரம் இல்லை. பிராகாரத்தில் செல்வ ஸித்தி விநாயகரும், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யரும் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் துர்க்கை எட்டுக் கரங்களுடன் விளங்குகின்றாள். சுவாமி சுயம்பு மூர்த்தி. சன்னதி வாயிலின் இருபுறமும் இரண்டு விநாயகர்களைக் காணலாம். திருஞானசம்பந்தர் அருளிய ஒரு தேவாரத் திருப்பதிகம் இந்தத் தலத்தின் மீது உள்ளது. அதில் வரும் ஒரு பாடல்:

“தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுதேத்தக்

காவியின் நேர்விழி மாதர் என்றும் கவினார் கலிக்காமூர்

மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்

ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.”

இப்பகுதி,வில்வக் காடாக விளங்கியதால் இக்கோயில் விருக்ஷமும் வில்வ மரமே. தீர்த்தமானது , சந்த்ர தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

11. வாமதேவ பீடம்: ஸ்ரீ யோகாம்பிகா சமேத ஸ்ரீ யோகநாத சுவாமி ஆலயம், மங்கைமடம்.


திருவெண்காட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆலயம். மேற்குப் பார்த்த சந்நிதி. கிழக்கு வாயில் வழியாக நுழைகிறோம். தக்ஷ சம்ஹாரம் ஆன பிறகு, ஸதி தேவி சரீரத் தியாகம் செய்திடவே, கோபமுற்ற கயிலாய நாதன் தாண்டவம் ஆடி, சினம் தணிந்த பின் சனகாதியர்க்கு உபதேசிக்கும் குருமூர்த்தியாக ஆலின் கீழ் யோகாசனத்தில் அமர்ந்தார். இத் தலத்து மூலவர் அதன் காரணமாக யோகீசுவரர் என்றும்,அம்பிகை யோகாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். ப்ராகாரத்திலுள்ள  தக்ஷிணாமூர்த்தியும் யோக நிலையில் காணப்படுகிறார். கிழக்குப் பிராகாரத்தில் விநாயகர், ஞானப்பூங்கோதை, முருகன்,மகாலக்ஷ்மி சன்னதிகள் இருக்கின்றன. துர்க்கை மேற்குப் பார்த்தபடி காட்சி தருகிறாள்.மேற்கு பிராகாரத்தில் பைரவர்,சூரியன் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். பலா விருக்ஷமும் பிராகாரத்தில் இருக்கிறது. சூரியனது கிரணங்கள் சுவாமியின் மீது படும் நாட்களில் சூரிய பூஜை நடைபெறுகிறது. சதாசிவ பிரம்மேந்திரர் சிறிது காலம் இங்கு வசித்ததாகக் கூறப்படுகிறது.

12 பிராண பீடம்: ஸ்ரீ அதுல்ய குசாம்பிகா சமேத ஸ்ரீ ஐராவதேசுவரர் கோயில், பெருந்தோட்டம் .


சீர்காழி-திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சோழர் காலத்துத்  திருப்பணியைக் கொண்டது. கல்வெட்டுக்களில் இத்தலம் அத்தீச்வரம் என்று காணப்படுகிறது.ஐராவதமாகிய யானை (அத்தி) வழிபட்டதால் இப்பெயர் வந்தது.

ஒரு சமயம், இந்திரனது சபைக்குத் துருவாச முனிவர் , கயிலை நாதனது பிரசாதத்தை அவனுக்கு அளிக்கும் விருப்பத்துடன் எழுந்தருளினார். ஆனால் இந்திரனோ தேவலோக மங்கையர்களின் நடனத்தைக் கண்டு களித்திருந்து, முனிவரையும் அவர் தந்த பிரசாதத்தையும் மதியாமல், தனது ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். அந்த யானை அதனைத் தனது கால்களால் நிலத்தில் தேய்த்தது. இதைக் கண்டு சினமுற்ற துருவாச முனிவர் இந்திரன்,தனது பதவியை இழப்பான் என்றும் அவனது வெள்ளை யானையானது காட்டானையாக ஆகி பூவுலகில் பிறக்கும் என்றும் சாபமிட்டார்.


காட்டு யானையாக மாறிய ஐராவதம் பல தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தபோது இத்தலத்தை அடைந்து, நந்தவனப் பூக்களால் பெருமானை அர்ச்சித்து வழிபட்டு வந்தது. அப்பூந்தோட்டம், நாளடைவில் பெருந்தோட்டம் என்று மக்களால் வழங்கப்பட்டது. பின்னர் அந்த யானை, திருவெண்காட்டுக்குச் சென்றும் இறைவனை வழிபட்டது. இதனைத் திருஞானசம்பந்தர், தனது திருவெண்காட்டுப் பதிகத்தில்,

“ அடைந்து அயிராவதம் பணிய மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும்” என்று அருளியமை காண்க.   

கர்பக்ருஹ சுவற்றில் ஐராவதம் சிவபூஜை செய்யும் காட்சி, கற்சிற்பமாக உள்ளதைக் காணலாம்.  பிராகாரத்தில் விநாயகர்,முருகன்,மகாலக்ஷ்மி சன்னதிகள் உள்ளன. இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு வாய்ந்த மூர்த்தியாக வாதாடும் விநாயகர் தனிச் சன்னதி கொண்டு மேற்குப் பார்த்த வண்ணம் அருள் பாலிக்கிறார்.   

பெருந்தோட்டத்தில் உள்ள மற்றொரு சிவாலயமான கைலாஸ நாதர் கோயிலையும் அன்பர்கள் தரிசிக்கலாம்.

நிறைவுரை: நாங்கூரிலும் அதன் அருகிலுமாக உள்ள ருத்ர பீடங்களைப் பற்றி அறியாதவர்களுக்கும் , அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இல்லாதவர்களுக்கும் என்றாவது பயன்படலாம் என்ற எண்ணத்தில் அந்தக் கோயில்களைப் பற்றி எழுதலானோம். அப்படியாவது சிலர் இக்கோயில்களைத் தரிசிக்கச் செல்லலாம் என்ற எண்ணத்தின் விளைவே இது. அவ்வாறு தரிசிக்கச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அக்கோயில்கள் யாவற்றிலும்  ஒரு கால பூஜையே நடைபெறுகிறது என்பதையும் அர்ச்சகர்கள் ஏழ்மையிலும் , ஆதரவற்ற நிலையிலும் பூஜையை விடாமல் செய்கிறார்கள் என்பதையும்  கருத்தில் கொண்டு , தரிசனம் செய்துவிட்டு அத்துடன் திரும்பி விடாமல், அக்கோயில்களின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்றவரை உதவிக் கரம் நீட்டியும் , அர்ச்சகர்களை ஆதரித்தும்  சிவ புண்ணியம் பெற வேண்டுகிறோம்.

Tuesday, December 1, 2020

ருத்ர பீடங்கள்

 

                              ருத்ர பீடங்கள்             

                                         சிவபாதசேகரன்

சீர்காழிக்கு அண்மையில் உள்ள நாங்கூர் என்ற ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் அமைந்துள்ள பன்னிரு  சிவாலயங்கள் த்வாதச ருத்ர பீடங்களாகக் கூறப்படுகின்றன.  இதே பகுதியில் பன்னிரு  வைணவ ஆலயங்களும் உள்ளன. இப்பழமை வாய்ந்த ஆலயங்கள் இப்பகுதியின் தெய்வீகத் தன்மையைப் பறை சாற்றுகின்றன. புராண வரலாறுகள் தத்தம் கோயில்களை உயர்வாகக் கூறினும் , ஆன்மிகம் தழைத்தோங்கிய பகுதி இது என்று தயக்கமின்றிக் கூறலாம்.


நாங்கூர் த்வாதச ருத்ர பீடங்களைப் பற்றி அறிவதற்கு முன்னம் இதே ஊரிலுள்ள நாலாயிரம் பிள்ளையார் கோவிலைப் பற்றித் தெரிந்து கொண்டு அங்கிருந்து த்வாதச ருத்ர ஆலயங்களைத் தரிசித்தல் முறை என்று தோன்றுகிறது. இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். வெளி ஊர்களிலிருந்தும், வெளி நாடுகளில் குடியேறிய சிலரும் இப்பெருமானை ஆண்டு தோறும் வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரே கால பூஜையே நடைபெறுவதால் விநாயகரைத் தரிசிக்கவும், கணபதி ஹோமம்,அபிஷேக ஆராதனைகள் செய்து கொள்ளவும்  ஆலய அர்ச்சகரை 9994215144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நாலாயிரம் பிள்ளையார் கோயில்: சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில் நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று. இவரே க்ஷேத்ர கணபதி.

கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான். பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான். நெடும்காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில் , கடும் தவத்தின் பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி, அவனுக்கு வரும்படியாக நான்முகன் வரமளித்து மறைந்தார்.

குகையின் வாயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாலி அப்பாறையை அகற்றிவிட்டு வெளியில் வந்து, கிஷ்கிந்தையை அடைந்தான். அரசன் இல்லாததால் மந்திரிகளும் மக்களும் கோரியபடி சுக்ரீவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் வேளையில் அவனை அரியணையில் வீற்றிருக்கக் கண்ட வாலி கோபமுற்றான். தம்பியான சுக்ரீவனைப் போரிட்டு வென்று நாட்டை விட்டே துரத்தி விட்டான். ஆனால் சுக்ரீவனது மனைவியையோ அல்லது அவனது மகனான அங்கதனையோ சுக்ரீவனோடு அனுப்பவில்லை.  இத்தவறுக்காகவே இராமனால் தண்டிக்கப்பட்டான் என்றும் கூறுவது உண்டு.

காடுகளில் அனுமனோடு திரிந்துகொண்டு வாலிக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த சுக்ரீவன், இராம லக்ஷ்மணர்களைக் கண்டு தான்படும் துயரத்தை அவர்களிடம் கூறினான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த இராமன், மரங்களுக்குப் பின்னால் நின்று கொண்டு வாலியின் மீது பாணம் செலுத்தி அவனை வீழ்த்தினார். அதனால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கும் பொருட்டு, நாங்கூரை அடைந்து காவிரியின் கிளை நதியான மணிகர்ணிகையில் மணல் எடுத்து விநாயகர் திருவுவை அதில் அமைத்துப் பூஜை செய்தார். அசரீரி வாக்கின்படி, தோஷ நிவர்த்திக்காக 4000 வேத விற்பன்னர்களைக் கொண்டு யாகம் செய்ய முற்படுகையில் ஒரு அந்தணர் வரவில்லை. தடை ஏற்படுகிறதே என்று வருந்திய இராமருக்கு ஆறுதல் அளித்துத் தானே ஒரு வேதியராக மகா கணபதி வந்ததால் நாலாயிரத்தில் ஒருவர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே மக்கள் வழக்கில் தற்போது நாலாயிரம் பிள்ளையார் எனப் படுகிறது. இராம பிரானே மணலால் வடிவமைத்த கணபதியாதலால் ஸ்வயம்பு மூர்த்தியாகக் காக்ஷி அளிக்கிறார்.

விநாயகரின் சன்னதி வாயிலில் துவார பாலகர்கள் இருக்கும் இடத்தில் சங்க நிதியும் பத்ம நிதியும் இருக்கிறார்கள். இவர்களே ஹோம சாமான்களை யாகம் செய்வதற்காக எடுத்து வந்ததாக ஐதீகம். அன்று முதல் இருவரும் சன்னதி வாயிலிலேயே நின்று விட்டனர். எல்லா திரவியங்களாலும் பிள்ளையாருக்கு அபிஷேகங்கள் நடை பெறுகின்றன. பால் அபிஷேகம் செய்யும்போது அதில் ஒரு பகுதி, மூர்த்திக்குள் செல்வது அற்புதமாகக் கூறப்படுகிறது. விநாயக சதுர்த்தி விழா அன்பர்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுக்கொரு முறை நாங்கூர் பன்னிரண்டு ஆலயங்களின் மூர்த்திகளும் ஒரே இடத்தில் ரிஷப வாகன சேவை தரும்போது, நாலாயிரம் பிள்ளையாரும் அம்மூர்த்திகளோடு தரிசனம் தருகிறார்.


இராமர் யாகம் செய்வவதற்காகக் கோயில் எதிரில் அமைத்த குண்டம் தற்போது குளமாகக் காட்சியளிக்கிறது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இதிலிருந்த நீர் காவி நிறத்தில் இருந்ததாம். ஆனால் அதில் நீராடினால் வெள்ளை வஸ்திரத்தில்  காவி படிவதில்லையாம்.அதன் பிறகு, குளத்தைத் தூர் வாரப் போய், குளத்து மணலை அகற்றிவிட்டதால் அந்தக் காவி நிறம் போய் எல்லா நீர்நிலைகளில்  உள்ள நீரைப் போன்று தோற்றமளிக்கிறது. 

த்வாதச ருத்ர பீடங்கள்:

1.     தத்புருஷ பீடம் : ஸ்ரீ அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ மதங்கீசுவரர் கோயில், திருநாங்கூர் 


த்வாதச ருத்ர பீடங்களில் இதனை ஹ்ருதய ஸ்தானமாகக் கொள்வர்.  மகா பிரளய காலத்தில் உலகம் யாவும் நீரில் மூழ்கும் தருவாயில் திருவெண்காடு என்ற ஸ்தலம் அழியாமல் இருப்பதைக் கண்டு பிரம்ம குமாரரான மதங்க ரிஷி அங்கு சென்று தவம் புரியலானார். அங்கிருந்த மணிகர்ணிகை என்ற நதியில்  ஒரு தாமரை மலரின் மேல் ஒரு குழந்தையாக அம்முனிவர் காணும்படி தோன்றினாள். அக் குழந்தையைத் தமது தவத்தின் பலனாகவே கருதி, மகிழ்ச்சியுடன் ஏற்று வளர்த்து வந்தார். முனிவரது தவத்தை சோதிக்க வேண்டி, மோகினி வடிவம் கொண்டு விஷ்ணுவானவர் அவர் எதிரே தோன்றினார். தவத்திற்குப் பங்கம் வந்து விட்டது எனக் கருதி, மோகினியைச் சபிக்க முற்பட்ட முனிவர் முன் மோகினியாக வந்த  மகாவிஷ்ணு காக்ஷி அளித்தார். இதன் காரணமாகவே இப்பகுதியில் பன்னிரு  சிவாலயங்களும் பன்னிரு  விஷ்ணு ஆலயங்களும் தோன்றின என்பர்.

நாங்கூரில் உள்ள மதங்கீசுவரர் ஆலயம் பிரதான சாலைக்குச் சற்று உள்ளடங்கி உள்ளது. மிகப் புராதனமான ஆலயம் இது. நுழைவாயிலில் ராஜ கோபுரம் இல்லை. ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் நந்தி மண்டபத்தில் இரண்டு நந்திகள் இருப்பதைப் பார்க்கிறோம். இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்  திசைகளைப் பார்த்தவாறு உள்ளன. மதங்க முனிவரின் ப்ரார்த்தனைப்படி, திருவெண்காட்டிலிருந்து ச்வேதாரண்யேச்வரர் அவரது வளர்ப்புப் புதல்வியாகிய மாதங்கியைத் திருமணம் செய்துகொள்ள எழுந்தருளியதால் ஒரு நந்தி  திருவெண்காடு அமைந்துள்ள திசையை நோக்கி உள்ளது என்கிறார்கள்.

திருமணத்தின் போது முனிவர் சீர்வரிசை கொடுக்க இயலாதது கண்டு மணம் காண வந்திருந்த தேவர்கள் குறை கூற ஆரம்பிக்கவே, எல்லா ஐச்வர்யங்களுக்கும் அதிபதியும் அவற்றைத் தனது பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலுமான ஈச்வரன் , மாதங்கியின் அனைத்து செல்வங்களும் சிவலோகத்தில் இருப்பதைக் கூறி, நந்தி தேவரை அங்கு அனுப்பி அவற்றை எடுத்து வரச் செய்தார். அதன்படி சீர்வரிசைகள் நாங்கூரை வந்தடைந்தபின் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இத்தலத்தில் வைகாசி விசாகத்தன்று திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.    

 தக்ஷ யாகம் நிர்மூலம் ஆனதும் தாக்ஷாயணி தனது  சரீரத்தைத் துறந்ததால் சினமடைந்த பரமன், கோபாவேசத்துடன் தாண்டவம் புரியும்போது அவரது கேசம் பூமியில் பதினொரு இடங்களில் படவே அவ்விடங்களில் சிவலிங்கங்கள் தோன்றலாயின என்றும் கூறப்படுகிறது. அவையே ருத்ர பீடங்கள் எனப்படுகின்றன. அவரை சாந்தமடையச் செய்ய விஷ்ணு மூர்த்தியானவர் அவ்விடங்களுக்குத் தானும் எழுந்தருளவே அவை யாவும் விஷ்ணு ஆலயங்களாயின. இதன் காரணமாகத் தான் நாங்கூரிலும் அதைச் சுற்றிலும் பன்னிரு  சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் தோன்றின என்று புராணம் கூறுகிறது. 

 இக்கோயில் ஒரு ப்ராகாரத்துடன் விளங்குகிறது. கோஷ்டங்களில் பிரமன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். பிராகாரத்தில் உள்ள சன்னதிகளில் வலஞ்சுழி மாதங்க விநாயகர் , சங்கு-சக்கரம் ஏந்திய மோகினி உருவத்துடன் மகாவிஷ்ணு, காளி தேவி ஆகிய மூர்த்திகள் காணப்படுகின்றனர். காளி தேவியின் சன்னதி குறுகிய வாயிலை உடையது. எட்டு கரங்களுடன் தேவி தரிசனம் தருகிறாள். ஊஞ்சலில் அமர்ந்துள்ள காளி இங்கு பிரார்த்தனா மூர்த்தியாக மக்களால் வழிபடப்படுகிறாள்.


 மதங்கீச்வரரது சன்னதி விமானம் ஏகதளத்தைக் கொண்டது. சிவலிங்க மூர்த்தி,பெரிய உருவோடு காட்சி தருகிறார். சுந்தர மூர்த்தி சுவாமிகளது வாக்கில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                  (ஊர்த்தொகை)

“ தாங்கூர் பிணி நின் அடியார்மேல் அகல அருளாயே

  வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே

  நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய்  நல்லூர் நம்பானே

  பாங்கூர் பலி தேர் பரனே பரமா பழனப் பதியானே “

என்ற பாடலில் இத்தலப் பெயர் குறிப்பிடப்படுகிறது . தனிப் பதிகம் கிடைக்காததால் இது வைப்புத் தலமாக வைத்து எண்ணப்படுகிறது.

 பராசவன புராணத்தில் மாதங்கியின் பதினாறு பெயர்கள் கூறப் பட்டுள்ளன. அவையாவன: அஞ்சனாக்ஷி, சங்கீத யோகினி, ராஜ மாதங்கி, ச்யாமா, ச்யாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி , சசிலோசனி, ப்ரதானேசி, ஸுகப்ரியா, வீணாவதி, வைணிகி , முத்ரிணி , ப்ரியகப் ப்ரியா, ஸ்ரீபப்ரியா, கதம்பவன வாஸினி என்பனவாகும். மாதங்கி தேவியே சரஸ்வதிக்கு குருவாக இருப்பதால் தங்களது குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் செய்ய இந்த சன்னதிக்கு அழைத்து வருகிறார்கள்.

 இத்தலத்து மூர்த்தியும், மற்ற ருத்ர பீடங்களில் உள்ள மூர்த்திகளும் ஜூன் மாதத்தில் இத்தலத்திற்கு  ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள். எனவே ஒரே நேரத்தில் பன்னிரு ரிஷப வாகன சேவையைக் காண மக்கள் ஆர்வத்துடன் நாங்கூருக்கு வருகை தருகிறார்கள். அதுபோல பன்னிரண்டு ஆலயங்களிலிருந்து தை அமாவாசையை முன்னிட்டுப் பெருமாள்களும் கருட சேவை தருவது வழக்கம். 

                                                       (ருத்ரபீட தரிசனம் தொடரும்)