Friday, October 16, 2015

கடம்பன்( முருகன்) வழிபட்ட சிவஸ்தலங்கள்

கடம்ப மரத்தைத் தல விருக்ஷமாகக் கொண்ட சிவஸ்தலங்கள் பலவற்றுள் . மதுரை, திருக்கடம்பந்துறை (குளித்தலை) போன்ற தலங்களைச்  சில எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் சுவாமியைக் கடம்பவன நாதர்  என்று அழைக்கிறோம். முருகனுக்கும் கடம்ப மலர் மீது பிரியம் அதிகம். ஆகவே கந்தவேளைக் கடம்பன் என்று நூல்கள் போற்றுகின்றன. தேவாரமும் குமரப் பெருமானை " நம் கடம்பன்" என்று குறிப்பிடுகிறது. " கந்தக் கடம்பன் " என்று கார்மயில் வாகனனை வாயாரப் பாடுவார் அருணகிரிநாதர். சூர சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக முருகப்பெருமான்  சிக்கலுக்கு அருகில் உள்ள கீழ்வேளூரில்(கீவளூர்)சிவபூஜை செய்யும்போது அத்தலத்தைச் சுற்றிலும் ஐந்து (ஒன்பது என்றும் கூறுவர்) தலங்களில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பஞ்சக் கடம்பத் தலங்கள்: ஆழிக்கடம்பனூர் (ஆழியூர்), அகரக் கடம்பனூர் , கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர்  ஆகிய தலங்களைப் பஞ்ச(ஐந்து) கடம்ப க்ஷேத்திரங்களாகக் குறிப்பிடுவர். .

நவகடம்பத்தலங்கள்:   கோயில் கடம்பனூர் , ஆழிக் கடம்பனூர்,  கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர் , வல்ல மங்கலம், பட்ட மங்கலம், சொட்டால் வண்ணம், ஓதியத்தூர்  ஆகிய ஒன்பது தலங்களும் இவ்வரிசையில் அடங்குவன, 

1.பட்டமங்கலம்:   திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள கீவளூரிலிருந்து   கச்சனம் செல்லும் செல்லும் சாலையில் சென்று, தேவூருக்கு முன்னதாகவே உள்ள  பட்டமங்கலத்தை  அடையலாம். இதைப் புழுதிக்குடி என்றும் வழங்குகிறார்கள். சாலையின் ஒரு புறம் சுமார் 1 கி.மீ. தொலைவில் பட்டமங்கலமும், நேர் எதிர்திசையில் 1.5 கி.மீ. தொலைவில் சொட்டால் வண்ணமும் அமைந்துள்ளன. பட்டமங்கலத்தில் உள்ள கோயில் மேற்கு பார்த்தது. கோயில் சிறிது. உள்ளூர் வாசிகள் ஈடுபாட்டுடன் காணப்படுகின்றனர். பிரதோஷத்தில் பலர் தரிசிக்க வருகின்றனர்.  சுவாமிக்கு அபிமுக்தீஸ்வரர் என்றும் அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. அர்ச்சகர் வெளியிலிருந்து வந்து பூஜை செய்கிறார். அழகிய நந்தவனம்  அமைத்து வருகிறார்கள். மேலும் தொடர்புக்கு: 9786582126.

2. சொட்டால் வண்ணம்:  உள்ளூர்க் காரர்கள் பலருக்கு சிவன் கோயில் எங்கு இருக்கிறது என்றே  தெரியவில்லை. சிலர் அதைப் பிள்ளையார் கோயில் என்று அழைக்கிறார்கள். சாலையை ஒட்டிய சிறிய கோயில். அமைதியான சூழல். சுவாமிக்கு விஸ்வநாதர் என்று திருநாமம். மேற்கொண்டு விவரங்கள் சொல்வதற்கு யாரையும் காணோம்.

3. கோயில் கடம்பனூர்: அகரக்கடம்பனூர் என்றும் வழங்கப்படுகிறது. கீழ் வேளூரிலிருந்து சிக்கல் செல்லும் சாலையில் சுமார்  2 கி.மீ. சென்று ஆழியூரில் திரும்பினால் கோயில் கடம்பனூர் ஆலயத்தை அடையலாம். ஒரே பிராகாரம். சற்று விசாலமானது. உழவாரப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. சுவாமி: கைலாச நாதர். தேவி: சௌந்தர நாயகி. முருகப்பெருமானின் திருவுருவம்      தரிசிக்கத்தக்கது. 

4. ஆழியூர்: ஆழிக் கடம்பனூர் என்றும் பெயர் பெற்றது. பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கியுள்ள தலம். எதிரில் பெரிய குளம் அமைந்துள்ளது. இறைவன்: கங்காள நாதர். இறைவி: கற்பகவல்லி. நந்தி மண்டபத்தைத் தாண்டி சுவாமி சன்னதியின் முகப்பு வாயிலின் மேல் அர்த்த நாரீசுவரது திருவுருவத்தைச்  சுதை வடிவில் காணலாம்.  

5. இளங் கடம்பனூர்: ஆழியூருக்கு அண்மையில் இளங் கடம்பனூரும், பெருங் கடம்பனூரும் அமைந்துள்ளன. இளங் கடம்பனூர் ஆலய முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் உள்ளது. அர்ச்சகர் வீடு அருகில் உள்ளது.   2013 ம் ஆண்டு திருப்பணி செய்யப்பெற்று, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
அம்பிகை : சௌந்தர நாயகி  சுவாமி  சோளீசுவரர்

6. பெருங்கடம்பனூர் :   நான்கு வேதங்கள் பூஜித்ததால் சுவாமிக்கு சதுர் வேத புரீசுவரர் என்று பெயர். கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில். சிவாசாரியார் வீடு அருகாமையில் உள்ளது. திருப்பணி செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

7. கடம்பர வாழ்க்கை:  ஆழியூரிலிருந்து செல்லும் பாதை செப்பனிடப்பட்டு வருவதால் அங்கு செல்ல இயலவில்லை. இறை அருளால் மற்றொரு தருணத்தில் தரிசிக்க விழைகிறோம். சுவாமி: விசுவநாதர் ; அம்பிகை: விசாலாக்ஷி.

8. வல்ல மங்கலம் ; 9. ஓதியத்தூர்:  ஆகிய தலங்கள் கீழ்வேளூருக்கு அண்மையில் உள்ளன. இவையும் தரிசிக்க வேண்டிய தலங்கள்.

கீழ் வேளூர்:  வீரஹத்தி தோஷம் நீங்க சிவபூஜை செய்ய முற்பட்ட முருகப்பெருமான், முதலில் மஞ்சளால் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அந்த இடம் தற்போது மஞ்சள்வாடி எனப்படுகிறது.
பின்னர் பதரி வனத்தில் (கீழ் வேளூரில்)அக்ஷயலிங்கப் பெருமானைப் பூஜிக்கையில் அதற்குத் தீய சக்திகளால் இடையூறு வராத வண்ணம் அம்பிகை அஞ்சு வட்டத்தம்மை மூலம் காத்து அருளினாள் . கீழ் வேளூர் கோயிலில் அஞ்சுவட்டத்தம்மையின் சன்னதி பிரபலமானது. பஞ்ச ( நவ) லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முருகப்பெருமான்  தவக்கோலமாகத் தனிச் சன்னதியில் பால சுப்பிரமணியராக  அருள் பாலிக்கிறார். 

சுவாமி சன்னதி கட்டு மலை மீது அமைந்துள்ளது. இது கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில் ஆகும். அற்புதமான அமைப்பைக் கொண்டது. அக்ஷய லிங்க சுவாமி ,    கேடிலியப்பராக , சுயம்பு மூர்த்தியாக அற்புதக் காட்சி வழங்குகின்றார். மற்றோர் சன்னதியில் அகஸ்தியருக்காக  தாண்டவக் காட்சி காட்டிய கோலத்தில் நடராஜப் பெருமானைத் தரிசிக்கிறோம். சம்பந்தராலும் அப்பராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம்.

சிக்கல் சென்று வருபவர்கள்  அதன் மிக அருகிலுள்ள இந்தத் தலங்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும். யாருமே தரிசிக்காத நிலைக்கு எந்தக் கோயிலும் வந்து விடக் கூடாது. இதுபோன்ற கிராமக் கோயில்களுக்கு  அன்பர்கள் செல்வதால் அந்த ஊர் மக்களும் அர்ச்சகர்களும் மிகவும் மகிழ்ந்து வரவேற்பர். அக்கோயில்களும் இதனால் நன்கு பராமரிக்க ஏதுவாகும். தரிசிப்பதோடு நின்று விடாமல் அக்கோயில்களின்  நித்திய பூஜைக்கும்,அர்ச்சகர்களுக்கும் நம்மாலான உதவியைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.