Saturday, May 20, 2017

திருப்புகலூரில் அப்பர் ஐக்கிய விழா

தலத்தின் இருப்பிடம்:சோழ வளநாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் திருப்புகலூரும் ஒன்று. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையில் உள்ள நன்னிலம் ரயிலடியில் இறங்கி அங்கிருந்து  கிழக்கே செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. பேருந்து மூலம் பயணித்தால் கோயில் அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம். பேருந்து நிலையத்திலிருந்து ஆலய முகப்பு வளைவு வழியாக வடக்கில் சிறிது தூரம் நடந்தால் ஆலயத்தை அடையலாம்.

ஆலயமும் அக்கினி தீர்த்தமும் 
ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய  ராஜ கோபுரத்திற்கு எதிரில் அகழி இருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தீர்த்தம், அக்கினி தீர்த்தம் எனப்படுகிறது.அதன் படிக்கட்டருகே சந்திர சேகரர் சன்னதி அமைந்துள்ளது. பாணாசுரன் தனது தாயார் வழிபடுவதற்காக இந்த ஆலயத்தை அடியோடு அகழ்ந்து தோண்ட முற்பட்டும் இயலாமல் போயிற்று. அவன் அவ்வாறு நான்கு புறமும் தோண்டிய பகுதியே அகழி ஆயிற்று. 

அம்பிகை சன்னதி 
ராஜ கோபுர வாயிலைக் கடந்தவுடன் நமது வலப்புறம் தெற்கு நோக்கியவாறு அம்பிகையின் சன்னதியைக் காண்கிறோம். கருந்தாழ் குழலி என்று இந்த அம்பிகை இத்தலத்துத் தேவாரப் பாடலில் குறிப்பிடப்படுகிறாள். வடமொழியில் இந்த இறைவியை சூளிகாம்பாள் என்று அழைக்கின்றனர். இராஜாதி இராஜன் காலத்தில் திருப்பள்ளிக் கட்டில் இந்த அம்பிகைக்கு வழங்கப்பட்டதாகக் கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.

உள் பிராகாரத்தில் வடபகுதியில் புன்னாக  (புன்னை) விருக்ஷம் உள்ளது. இதுவே இத்தலத்தின் புண்ணிய விருக்ஷம் ஆகும். இதனடியில் செய்யப்படும் தியானம் பல  மடங்கு பலனை அளிக்க வல்லது என்பர். 

இத்தலத்தின் பிரதான மூலஸ்தானப் பெருமான், அக்னீசுவரர். சரண்யபுரீசுவரர், கோணப்பிரான் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. இந்த சன்னதியை ஒட்டி மற்றும் ஓர் சிவ சன்னதி இருக்கக் காண்கிறோம். அங்குள்ள சுவாமிக்கு வர்தமாநீசுவரர்  என்றும் அம்பிகைக்கு மனோன்மணி என்றும் நாமங்கள் வழங்கப்படுகின்றன. இந்தப்பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் முருக நாயனார் ஆவார். அக்நீசுவரரைப் பாடிய திருஞானசம்பந்தர் வர்த்தமானீசுவரரையும் ஒரு பதிகத்தால் பாடியிருக்கிறார். அதில் முருக நாயனாரது தொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அப்பர் சன்னதி 
உட்ப்ராகார கன்னி மூலையில் தல விநாயகரான வாதாபி கணபதி எழுந்தருளியுள்ளார். வில்வலன்,வாதாபி ஆகிய இருவரும் வழிபட்ட மூர்த்தி இவர். இதைத் தவிரவும்,பூதேஸ்வரர், பவிஷ்யேசுவரர், அகோர லிங்கம், சிந்தாமணீசுவரர் ஆகிய மூர்த்திகளும், ததீசி, பராசரர், பிருகு, புலஸ்தியர்,ஜாபாலி, பாரத்வாஜர், வாமதேவர், ஆகியோர் பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.  உள் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அப்பர் (திருநாவுக்கரசர்) சன்னதியும் உள்ளது. 

திருவாரூரில் தான் தரிசித்த திருவாதிரை நாள் விழாச் சிறப்பைத்  திருப்புகலூரில் திருஞான சம்பந்தரை சந்தித்தபோது, அவர் கேட்கும்படிப்   பதிகமாக அருளினார் அப்பர் பெருமான். பின்னாளில் , இங்கு வந்தசுந்தரர், ஆலயம் மூடியிருக்கவே, களைத்தவராக, அங்கிருந்த  செங்கல்லைத் தலைக்கு வைத்தவாறு  உறங்கி விட்டுக் கண் விழித்த போது ,அக்கல்லானது    செம் பொன்னாக மாறி இருப்பதைக் கண்டு பரவசமாகித் , " தம்மையே புகழ்ந்து .. " எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் பாடியதாகப் பெரிய புராணம் மூலம் அறிகிறோம். 

இத்தலத்தின் பிரமோற்சவம் வைகாசி விசாகத்தை முன்னிட்டுப் பத்து நாட்கள் நடைபெறுகிறது. அப்பர் சுவாமிகள் இந்தத்தலத்தில்தான் சித்திரை மாத சதயத்தன்று சிவமுக்திப் பேறு பெற்றதால் அவரது வரலாற்றை நினைவுறுத்துவதாகப் பத்து தினங்கள் விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடை பெறுகிறது. 

முதல் நாளன்று, சூலை நோய் தீரப்  பெற்ற வரலாற்று நிகழ்ச்சி விழாவும், இரண்டாம் நாள் பல்லவ மன்னன் அவரை நீற்றறையில் இட்ட பொது, " மாசில் வீணையும் " என்ற பதிகம் பாடி சிவானந்தத்தில் திளைத்திருந்ததும், மூன்றாம் நாள் சமணர்கள் ஏவிய யானை இவரைத் தீங்கு செய்யாது வணங்கிச் சென்றதும், நான்காம் நாள் சமணர்கள் இவரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபோது, நமசிவாயப் பதிகம் பாடிக் கரை ஏறியதும், ஐந்தாம் நாள், பெண்ணாகடத்தில் சூலக் குறியும், ரிஷபக் குறியும் தோள்களில் பொறிக்கப் பெற்றதும், ஆறாம் நாள் , திருநல்லூரில் திருவடி தீக்ஷை பெற்றதும், ஏழாம் நாள் திங்களூரில் அப்பூதி அடிகளின்  பாம்பு தீண்டிய  மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்ததும், எட்டாம் நாளன்று  திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும், திருமறைக்காட்டில் மூடியிருந்த ஆலயக் கதவைப் பதிகம் பாடித் திறந்ததும், ஒன்பதாம் நாள் பழையாறை வடதளியில் சமணர்களால் மூடப்பட்டிருந்த ஆலயத்தைப் பதிகம் பாடித் திறந்ததும், கயிலை யாத்திரை செய்து, திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்டதும், பத்தாம் நாள் காலையில் திருப்பைஞ்ஞீ லியில் கட்டமுது பெற்றதும்  ஆகிய நிகழ்ச்சிகள் ஐதீக விழாக்களாக நடைபெறுகின்றன. 

பத்தாம் திருநாளான சித்திரை சதயத்தன்று மாலை அப்பர் பெருமான் ,ப்ராகாரத்திலுள்ள கட்டமுது மண்டபத்திலிருந்து புறப்பாடாகிப்  பிராகாரத்தில் எழுந்தருளுகிறார். அவர் உழவாரப் பணி செய்ததை நினைவு கூறுவதாகப்  பிராகாரத்தில் உழவாரப் பணி செய்யப்படுகிறது. 

அப்போது இறைவன் அவரைச்  சோதிக்க வேண்டி அவ்விடத்தில் பொன்னும்,மணிகளும் தோன்றச் செய்தபோது, நாட்டம் எதுவும் கொள்ளாமல் அவற்றைப்  பருக்கைக் கற்களோடு கோயிலுக்கு வெளியில் அகற்றிய  வரலாறும் நடத்திக் காட்டப் படுகிறது. 

அரம்பையர் நடனம் 
அப்பரது பெருமையை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் தேவ லோக அரம்பையர்களை அவருக்கு முன்னே தோன்றி நடனமாடச் செய்தபோது, ஐம்புலன்களையும் வென்ற நாவுக்கரசர்,  " பொய்ம்மாயப் பெருங் கடலில்.. " எனத் துவங்கும் பதிகத்தைப் பாடியவுடன் அவரது உறுதியைக் கண்ட அரம்பையர்கள் அங்கிருந்து அகன்ற வரலாற்றைப்  பிராகாரத்தில் செய்து காட்டுகிறார்கள். சிறுமியர்கள் நடனம் ஆடிவிட்டுப் பிறகு அப்பர் பெருமானை வலம் வந்து திருநீறு பெற்றுக் கொண்டு செல்வதாக நடத்திக் காட்டுகிறார்கள். இந்நிகழ்ச்சிகள், இவ்வாலயத்தை நிர்வகிக்கும் வேளக்குறிச்சி ஆதீன கர்த்தரின் முன்னிலையில் நடை பெறுகிறது. 

பிறகு இரவு 12 மணி அளவில் ப்ராகாரத்திலுள்ள அப்பர் சன்னதியில் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும்  சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு அலங்காரமாகி வீதி புறப்பாடு நடைபெற்று,மீண்டும் கோயிலுக்குக் காலை  சுமார் 5 மணிக்கு வந்து சேர்ந்தவுடன், அப்பர் சுவாமிகள் நேராக அக்னீசுவரப் பெருமான் சன்னதிக்கு,          "எண்ணுகேன் " எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடியவாறு வந்தடைகிறார். சுவாமி சன்னதிக்குள் சென்றதும் நாம் காண்பது ஒளிப் பிழம்பு மட்டுமே. " அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார் " என்று இந்த நிலையை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில்  குறிப்பிடுவதை நேரில் காணும் பொது நாம் என்ன பேறு பெற்றோமோ என்று நினைக்கிறோம்.  

நித்திய பூஜைகள் நடைபெறுவதே சிரமாக ஆகி வரும் இந்நாட்களில் இது போன்ற பத்து நாள் உற்சவங்கள் நடத்துவது இன்னமும் சிரமாக இருக்கிறது. ஆலயத்துக்கு வர வேண்டிய வருமானம் முழுவதும் வராவிட்டால் விழாக்களை எவ்வாறு நடத்த முடியும்? உபயதாரர்களை நம்பியே பல ஊர்களில் விழாக்கள் நடை பெறுகின்றன. அவர்களும் பின் வாங்கிவிட்டால் உற்சவம் நின்று போகும் நிலை உருவாகும். அதற்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது. ஆன்மீக அன்பர்கள் இதுபோன்ற விழாக்களை நேரில் கண்டு ( ஆயுளில் ஒரு முறையாவது) மற்றவர்களையும் அனுப்பி வைத்தால் தான் இவற்றைத் தொடர்ந்து நடத்த முடியும். தரிசனம் செய்யவும் வாண வேடிக்கை பார்க்கவும் மட்டும் போகாமல் நம்மால் இந்த சிவ தர்மத்திற்குச்  சிறிதாவது உதவ முடியுமா என்று ஒவ்வொருவரும் சிந்தித்துச்  செயல் படுவது நல்லது.