Tuesday, November 10, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – 11– கேதாரம்

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் 11– கேதாரம்  

                                         சிவபாதசேகரன்

                              திருஞானசம்பந்தர் தேவாரம்

   தொண்டர் அஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார் மலர்

   இண்டை  கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்

   வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரிக்

    கெண்டை பாய சுனை நீல மொட்டலரும் கேதாரமே .

                                        சுந்தரர் தேவாரம்

     வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்

      பாழ்போவது பிறவிக் கடல் பசிநோய் செய்த பறிதான்

      தாழாது அறம் செய்ம்மின் தடங்கண்ணான் மலரோனும்

      கீழ் மேலுற நின்றான் திருக் கேதாரம் எனீரே .


                                                          கேதாரம் - வலைத்தளப் படம் 

பன்னிரண்டு ஜோதிர் லிங்கத் தலங்களுள் தேவாரப் பதிகங்கள் முழுமையாகக் கிடைக்கப் பெற்றுள்ள தலங்கள் மூன்றே ஆகும். அவை திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீ சைலம், இராமேச்வரம் மற்றும் கேதாரம் ஆகியவை. உஜ்ஜைனியும் காசியும் பதிகம் கிடைக்கப்பெறாமல் பெயர் மட்டும் குறிக்கப்பட்ட பாடல்கள் மூலம் வைப்புத் தலங்களாகத் தற்போது  வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் வட எல்லையில் உள்ள இமயமலையில் கர்வால் மலைத் தொடரில் அமைந்துள்ளது கேதாரம் என்ற ஜோதிர்லிங்கத் தலம் . இது உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் 11755 அடிகள் உயரத்தில் விளங்குகிறது. ரிஷிகேஷில் இருந்து சுமார் 220 கி.மீ. தூரத்தில் உள்ளது. சோராபாரி பனிச் சிகரத்திலிருந்து உற்பத்தியாகும் மந்தாகினி நதி இதன் அருகில் ஓடுகிறது. துத்கங்கா,மது கங்கா, ஸ்வர்கத்வாரி , சரஸ்வதி ஆகிய கிளை நதிகளும் அருகே ஓடுகின்றன.   

பனிப் பிரதேசமாகையால் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இங்கு செல்ல முடியும் . குளிர் காலங்களில் கோயிலைப் பூட்டிவிட்டு உற்சவ மூர்த்தியை குப்தகாசிக்கு அருகில் உள்ள உக்கி மத் என்ற இடத்திலுள்ள ஒம்காரேச்வரர் கோவிலுக்குக் கொண்டு வந்து பூஜைகள் செய்கிறார்கள். இங்குதான் பாணாசுரனின் மகளான உஷை, கிருஷ்ணனின் பேரனான அனிருத்தையை மணந்ததாகக் கூறப்படுகிறது. ருத்ரப் பிரயாகையிலிருந்து சுமார் நாற்பது கி.மீ தொலைவில் உக்கிமத் உள்ளது.

ரிஷி கேஷ் வரை ரயிலில் சென்று விட்டு பத்ரி நாத் வரை காரிலோ பஸ்ஸிலோ சென்று அங்கிருந்து கால் நடையாகவோ அல்லது குதிரை மீது ஏறியோ , கேதாரத்திற்கு சென்று தரிசிப்பது உண்டு.தற்போது பட்டா என்ற இடத்திலிருந்து கேதாரத்திற்கு மிகச் சமீபம் வரை போய் வர  ஹெலிகாப்டர் மூலமும் செல்லலாம் . முன்கூட்டியே இப்பயணத்திற்குப் பதிவு செய்து கொள்ளமுடியும்.   


இக்கோயில் ,பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்றும் ஆதி சங்கரர் கட்டியதாகவும் கூறுவார்கள். ஆனால் அதற்கும் முற்பட்டது என்றே பலரும் கருதுகிறார்கள். ஸ்காந்த புராணத்தில் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கரர் இங்கு சித்தி அடைந்ததாகக் கூறுவோரும் உளர். கேதார நாதர் கோயிலருகில் ஆதி சங்கரர் கோயில் இருக்கிறது.

குரு க்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்றாலும், போரில் உற்றார்,உறவினர்,குருமார்கள் ஆகியோரைக் கொன்ற பாவம் அவர்களை வந்தடைந்தது. அதிலிருந்து நீங்குவதற்கு அவர்கள் காசிக்குச் சென்றார்கள் அவர்களுக்குச் சிவபெருமான் தரிசனம் தரவில்லை.  இமயமலையானது  பெருமானது இருப்பிடமாதலால் அங்கு அவரைத் தேடி சென்றனர். குப்த காசியில் பீமன் சுவாமியைக் காளை  வடிவில் கண்டவுடன் அவரைப் பின்பற்ற முயலவே,  அக்காளை  வடிவேற்ற இறைவன் பூமியில் மறைந்தருளினான். பின்னர் பாண்டவர்களுக்கு அக்காளையின் முதுகுப் பகுதியான  கொண்டை ,  கேதாரத்திலும், கரங்கள் துங்கநாத்திலும், நாபியானது மத்யமஹேச்வரத்திலும், முகமானது ருத்ரநாத்திலும் , கேசமானது கபிலேச்வரத்திலும் தரிசனமாயிற்று. அவ்விடங்களில் பாண்டவர்கள் கோயில்களைக் கட்டி ,யாகங்கள் செய்து வழிபட்டனர். காளையின் சிரமாக நேபாளத்தில் டோலேச்வர மகாதேவர் கோயில் கருதப்படுகிறது.

பஞ்ச கேதாரங்களாகக் கேதார்நாத் (11755 அடி ), துங்கநாத் (12070 அடி), ருத்ரநாத் (7500 அடி), மத்ய மகேச்வர் ( 11450 அடி), கபிலேச்வர்( 7200அடி) ஆகிய தலங்களை யாத்திரை செய்வார்கள்.இவற்றில் கபிலேச்வர் கோயில் மட்டுமே ஆண்டு முழுதும் தரிசிக்கமுடியும்.துங்கநாத்தில் ராவணன் சிவபெருமானை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.  ஏனையவற்றை மழை மற்றும் பனிக்காலங்களில் தரிசிக்க முடியாது. துங்கநாத்தில் காசியைச் சேர்ந்த  பிராமணர்களும், பிற இடங்களில் ஆதி சங்கரர் வழிப்படி தென்னிந்திய பிராமணர்களும் பூஜை  செய்கிறார்கள். 170 கி.மீ. தூரம் கொண்ட பஞ்ச கேதார யாத்திரை செய்ய சுமார் இரண்டு வாரங்கள் ஆகும். இதனைக் கௌரி குண்டில் ஆரம்பிப்பார்கள். இந்த இடம் தேவாரம் பெற்ற அனேகதங்காவதம் என்பதாகும். நீல்கண்ட் மலைத்தொடரில் இந்திர நீலப் பருப்பதம் என்ற தலம் உள்ளது ரிஷிகேஷிலிருந்து கௌரி குண்டிற்குச் சாலை வழியாக வாகனங்களில் செல்லலாம். இந்த யாத்திரையில் நந்தா தேவி, சந்கௌபா, கேதார்நாத், நீல்கண்ட் ஆகிய பனி  படர்ந்த மலைச்சிகரங்களைக் கண்டு மகிழலாம்.

சார்தாம்(Char Dham) யாத்திரை மட்டும் செய்பவர்கள், யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களைத் தரிசனம் செய்வார்கள். இதில், ரேவாய் பள்ளத்தாக்கில் யமுனோத்ரியையும், பாகீரதி (கங்கை) நதிக்கருகிலுள்ள கங்கோத்ரியையும், மந்தாகினி நதியருகிலுள்ள கேதாரத்தையும் அலகநந்தா நதிக்கருகில் உள்ள பத்ரி நாத்தையும் காணலாம்.

கேதார்நாத் கோயில் வாயிலில் தரையாக இருந்தாலும், சுற்றிலும் மலைத் தொடர்களும், நதிகளும் ரம்மியமாகக் காட்சி அளிக்கின்றன.  கோயில் வாயிலில் சன்னதியைப் பார்த்தவண்ணம் நந்தி வீற்றிருக்கிறார். சுவாமி சன்னதி தெற்கு பார்த்தது.


                            மலைச் சரிவுக்குப் பின் கோயில் தோற்றம் 

16. 6.2013 அன்று மாலை திடீரென்று பொழிந்த பெருமழை மற்றும் நிலச் சரிவுகளால் கோயிலைச் சுற்றிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கோவிலுக்குப் பின்னாலிருந்த ராக்ஷசப் பாறை ஒன்று மலைச் சரிவிலிருந்து கோயிலை நோக்கி உருண்டு வந்தது. தெய்வாதீனமாக அப்பாறை கோயிலுக்குச் சேதம் ஏதும் விளைவிக்காமல் பெரிய ஓசையுடன் பின்னாலே நின்று விட்டது. அவ்வாறு சுவர் போல நின்றதால் காட்டாற்று வெள்ளம் கோவிலை அழிக்காமல் அதன் இரு புறங்களிலும் சீறிப் பாய்ந்து பேரழிவை ஏற்படுத்தியது. பலர் உயிரிழந்தும் பலத்த காயமடைந்தும் இன்னும் பலர் சாலைகள் மூடப்பட்டு விட்டதால் அங்கங்கே தவித்து நின்ற நிலையில் ஹெலி காப்டர் கம்பெனிகாரர்கள் முன்வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுப் பலரைக் காப்பாற்றினர். பின்னர் இராணுவம், உத்தர் கண்ட் போலீசார் ஆகியோரும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பேருதவியாற்றினர். நாளடைவில் யாத்ரீகர்கள் வரும் சாலைகள் சீரமைக்கப்பட்டுவிட்டன.    

அருகிலுள்ள இடங்கள்:

1 பைரவர் கோயில்: 1 கி.மீ.

2 காந்தி சரோவர் ஏரி: யுதிஷ்டிரர் இங்கிருந்து மோட்சத்திற்குப் போனதாகக் கூறுவார்கள்.

3 ஆதி சங்கரர் கோயில்

4 வாசுகி தல் : 6 கி.மீ. தொலைவிலுள்ள அழகிய ஏரி

5 சோன் பிரயாக் : சோன் கங்கையும் மந்தாகினியும் சங்கமிக்கும் இடம்

          

 

 

      

No comments:

Post a Comment