Friday, April 11, 2014

ஏனமால் வழிபட்ட ஏனங்குடி

வராஹ வடிவெடுத்துத்  திருமாலானவர்  சிவபூஜை செய்த ஸ்தலங்கள் பல உண்டு. அவற்றுள் முக்கியமாகக் கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள சிவபுரம் என்ற தலத்தைக் குறிப்பிடலாம். இங்கு வெள்ளைப் பன்றி வடிவத்தில் பல காலம் தங்கி மகாவிஷ்ணு தவம் செய்ததைத் தேவாரமும் குறிப்பிடுகிறது.

" பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும் ..." என்பது தேவார வாக்கியம். வராகராக  வந்த திருமாலைக் குறிப்பிடும்போது, " ஏன மால்"  என்பார் ஞானசம்பந்தர். ஏனம் என்ற சொல் பன்றியைக் குறிக்கும். அப்போது தனது பிறை போன்று வளைந்த கொம்பை சிவபிரானுக்கு அர்ப்பணித்தார் திருமால்.  பரமேச்வரனது மார்பில் எவை எல்லாம் அணிகலன்களாகத் திகழ்கின்றன என்பதைத் தான் அருளிச்செய்த முதல் திருப்பதிகத்திலேயே குறிப்பிடுகிறார் சம்பந்தப்பெருமான். " முற்றல் ஆமை இள நாகமோடு ஏன முளைக்கொம்பு அவை பூண்டு , வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்..."  என்றார்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள சன்னா நல்லூர் என்ற ஊருக்குக் கிழக்கே காரைக்கால் செல்லும் வழியில் சுமார் நான்கு கி. மீ. தொலைவில் உள்ளது ஏனங்குடி என்ற சிறிய கிராமம். இங்கும் ஏன(பன்றி) வடிவில் மகாவிஷ்ணு சிவபூஜை செய்திருக்கிறார். ஆகவேதான் ஊருக்கு ஏனங்குடி என்ற பெயர் ஏற்பட்டது. பேருந்து சாலையிலிருந்து சுமார் ஒரு கி. மீ. தொலைவில் உள்ளது சிவாலயம். ஊர் எல்லையில் இருப்பதால் கோயிலுக்கு அருகிலேயே வயல்கள் அமைந்துள்ளன.

நுழைவு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தில் உமாமகேச்வரர்கள் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். நுழைந்தவுடன் சுவாமி சன்னதியை நோக்கிய நந்தியைத் தரிசிக்கிறோம். நந்திமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பக் கிருகம் ஆகியவை கருங்கற்களால் அமைக்கப்பெற்றவை.நந்தி மண்டப மேற்புறம் பருத்த வேர்கள் ஊடுருவியிருப்பதால் உடனே திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மேற்கூரையும் ஆங்காங்கே சிதிலம் அடைந்துள்ளது. எல்லா விமானங்களும் செப்பனிடவேண்டிய நிலை. திருமாளிகைப்பத்தி மண்டபமும் , சுற்று மதிலும் இதுபோலத்தான் இருக்கிறது பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வில்வ மரம் இருக்கிறது.

அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரில் மதில் சுவர் வாயில் வழியாகத் திருக்குளம் அமைந்துள்ளதைக் காணலாம். கிழக்கு நோக்கிய திருமாளிகைப்பத்தியில் முதலில் விநாயகரது சன்னதியும், அதை அடுத்துப் பண்டரிநாதனின் சன்னதியும் உள்ளது. இருகைகளையும் இடுப்பில் வைத்தவாறு, தேவியுடனும் நாரதருடனும் காட்சி அளிக்கின்றார் பண்டரிநாதன். இதனை அடுத்து சுப்பிரமணியர், கஜலக்ஷ்மி ஆகியோரது சன்னதிகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. கோயில் கிணற்றையும் இந்தப் பிராகாரத்தில் காண்கிறோம். மேற்கு நோக்கிய மண்டபத்தில் நவக்ரகங்கள் ஒரே திசையை நோக்கியவாறு காட்சி அளிக்கின்றனர்.

கர்ப்பகிருகத்தில் அழகிய சிவலிங்க மூர்த்தியாக திருவாலந்துறையார் என்ற பெயருடன் மூலவர் தரிசனம் தருகிறார். இந்த மூர்த்தியை வழிபட்ட வராகப் பெருமாள், மகாமண்டபத்தில் இருப்பதைக் காணலாம். சுவாமியின் பெயர் ஆல விருக்ஷத்தை ஒட்டி அமைந்திருப்பதால் , ஸ்தல விருக்ஷம் ஆலமரமாகக் கருத இடமுண்டு. அதற்கேற்ப, கோயிலுக்கு வெளியில் ஆல மரம் ஒன்றும் இருக்கிறது. மகாமண்டபத்தில் இருந்தபடியே அம்பிகையின் சன்னதியையும் தரிசிக்கிறோம். மகிழம்பிகை என்று தேவி அழைக்கப்படுகிறாள்.புத்திர பாக்கியம் வேண்டி மகாவிஷ்ணு மகிழ மலர்களால் பூஜித்து, மன்மதனைப் புத்திரனாகப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. ஆலயத்தில் மகிழமரமும் இருக்கக் காணலாம். எனவே இங்குள்ள வராக தீர்த்தத்தில் நீராடி சுவாமியையும் அம்பாளையும் வழிபடுவோர் புத்திர பாக்கியம் கிடக்கப் பெறுவர் என்று கூறுவர். இங்குள்ள பைரவ மூர்த்தியை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்தால் வேண்டிய வரங்கள் யாவும் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது என்றும் சொல்லப்படுகிறது.

அபூர்வ தரிசனம்: எங்கும் இல்லாத வகையில் இங்கு மட்டுமே சண்டிகேஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஆலய சிவாசாரியார் திருப்புகலூரிலிருந்து வந்து பூஜை செய்கிறார்.
இத்தலத்தின் அருகில் உள்ள புத்தகரம், ஆதலையூர், கோட்டூர் ஆகிய ஊர்களின் சிவாலயங்களையும் அன்பர்கள் தரிசிக்க வேண்டும். 
  
இத்தனை பழைமையும் பெருமையும் வாய்ந்த ஏனங்குடி ஆலயத்தைப் புனரமைக்க முன்வந்துள்ள கிராம வாசிகளைப் பாராட்ட வேண்டும். விநாயகர் மற்றும் சுவாமி சன்னதிகளின் விமான வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், சென்ற மாதம் எதிர்பாராத விதமாக இத்திருக்கோயில் தரிசனம் கிடைக்கப்பெற்றோம். நாமும் இப்பணியில் பங்கேற்கவேண்டும் என்ற எண்ணத்தைத் திருவருள் தோற்றுவித்ததால், அன்பர்களின் உதவியுடன் அம்பாள், சுப்பிரமணியர், கஜலக்ஷ்மி, சண்டிகேஸ்வரர் விமானவேலைகளைத் துவக்கினோம். தற்போது அவை முடியும் தருவாயில் இருக்கின்றன.

எஞ்சியுள்ள திருப்பணிகளாவன மேற்கூரை, மதில் ஆகியவற்றைப் பழுது பார்த்தலும், பிராகாரத்தில் வலம் வரத் தரை அமைப்பதும் ஆகும். அன்பர்கள் முன்வந்தால் இவற்றையும் விரைவிலேயே பூர்த்தி செய்து, வரும் ஆனி மாதத்தில் கும்பாபிஷேகம் செய்து விடலாம். திருவருள் துணை இருந்தால் முடியாததும் உண்டோ?  
   

 இதுபோன்ற கிராமக் கோயில்களை நாம் அவசியம் பராமரிக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. புராண வரலாறுகளை நமக்கு உணர்த்துபவை. அவற்றைத் தரிசிப்பதோடு நின்று விடாமல் நம்மால் இயன்ற அளவுக்கு அக்கோயிலின் பராமரிப்புக்கோ, திருப்பணிக்கோ உதவ முன்வர வேண்டும். புகைப்படங்களோடு கட்டுரை எழுதுவதோடு நின்றுவிடாமல் அக்கோயிலுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. பல கிராமக் கோயில்கள் பாழடைந்துவிட்ட  நிலையில் இத்தகைய சிந்தனை நிச்சயமாகப் பலன் தரும். வெளியூர்க் காரர்கள் நம் ஊருக்கு  வந்து திருப்பணி செய்வதைக் கண்டு நாமும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று உள்ளுர்க்காரர்கள் முன்வருவதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்பிக்கை வளர்கிறது.