Monday, October 31, 2011

தலையாலங்காட்டுத் தல வரலாறு

                                              
   திருச்சிற்றம்பலம்
கங்கை எனும் கடும் புனலைக் கரந்தான் தன்னைக்
    காமரு பூம்பொழிற் கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறி ஒன்று எந்தினானை
    ஐயாறு மேயானை ஆரூரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
    பரிதிநியமத்தானைப் பாசூரானைச்
சங்கரனைத் தலையாலங்காடன்தன்னைச்
    சாராதே சால நாள் போக்கினேனே.
திருச்சிற்றம்பலம்
           --- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்

தலமும் இருப்பிடமும்: புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 93 வது தலமாக விளங்குவது திருத்தலையாலங்காடு எனும் தலம்.  இது வரலாற்றுச் சிறப்பும், புராணச் சிறப்பும் மிக்க தலமாக விளங்குகிறது.

இருப்புப் பாதை வழியில் செல்வோர் திருவாரூரில் இறங்கி, கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் 14 கி.மீ. பயணித்தால், தலையாலங்காட்டை அடையலாம். சோழ சூடாமணி ஆற்றின் வடகரையில் 5 நிமிட நடைதொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருபவர்கள், கும்பகோணத்தில் இறங்கி,
25 கி.மீ. தூரம் திருவாரூர் செல்லும்  பேருந்தில் பயணித்தால் இத் தலத்தை அடையலாம்.

தலத்தின் தொன்மை:   தலையாலங்கானத்துப் போர் தமிழக சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன், இங்கு நடைபெற்ற போரில் சோழனை வென்றதால் "தலையாலங்கானத்துச் செரு வென்ற 
நெடுஞ்செழியன்" எனப்பட்டான். 

தலத்தின் பெருமை: ஆலங்காடு எனப்படும் தலங்களுள் இது முதன்மையானது எனக் கருதுவர். இதனை, முக வடாரண்யம் என்று வடமொழியில் கூறுவர்.




கோயில் அமைப்பு: ஊரின் நடுவில் அமைந்துள்ள இச்சிவாலயம்,கிழக்கு நோக்கியது. எதிரில் மகிமை வாய்ந்த சங்க தீர்த்தம்  என்ற திருக்குளம் உள்ளது. இதில் அல்லிமலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. இதன் மேல்கரையில் படித்துறை விநாயகர் சன்னதி உள்ளது. மேல் கரையிலும். தென்கரையிலும் ஸ்நான கட்டங்கள் விளங்குகின்றன. மேல்கரையில், ஆலய மதிலை ஒட்டியபடி ஜப் மண்டபம் உள்ளது.  ராஜ கோபுரம் இல்லாததால் நுழைவு வாயிலில் பஞ்ச மூர்த்திகளோடு கூடிய வாயிலாக அமைக்கப்படுகிறது.வாயிலைக் கடந்து   உள்ளே சென்றால், கொடிமர விநாயகரையும் பலிபீடம், நந்தி ஆகியவற்றையும் தரிசிக்கலாம். இதன் அருகில் வலப்புறம்,  தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியைக் காணலாம். மூலவர் சன்னதி சற்று உயரத்தில் காணப்படுகிறது. நின்ற கோலத்தில் கணபதியும், அமர்ந்த கோலத்தில் பாசாங்குசம் ஏந்தியவளாக அம்பிகையும் முன்மண்டபத்தின்  இரு புறமும் காணப்படுகின்றனர்.

 .


சுவாமி சன்னதியின் நுழைவாயிலில் மகாமண்டப முகப்பில் கணபதியும் கந்தனும் காட்சி அளிக்கின்றனர். மகாமண்டபச் சுவற்றில் அப்பர் பெருமான் இத்தலத்து இறைவனைப் பாடிய திருத்தாண்டகப் பாடல்கள் கல்வெட்டில் அமைக்கப்பெற்றுள்ளது. தெற்கு பிராகாரத்தில் காசி விஸ்வநாதரும் விசாலாக்ஷியும் தனி சன்னதி கொண்டுள்ளனர். கன்னி மூலையில் கணபதிக்குத் தனிச் சன்னதி உள்ளது. வடமேற்கு மூலையில் முருகன்,வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சி அளிக்கிறார். இவ்விரண்டு  சன்னதிகளுக்கும் இடையில் சிவலிங்க மேடை அமைய உள்ளது.


            

வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான பலா மரம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் காணப்படுகிறது. கோமுகத்தின் அருகில்  சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இதன் அருகில் பத்துக் கரங்களுடன் வடக்குத் திசையை நோக்கியவளாகக் காளி தேவி காட்சி அளிக்கிறாள்.இப் ப்ராகாரத்தில் வில்வ மரம் உயர்ந்து விளங்குகிறது. பைரவர் சன்னதியில் இரு பைரவர்கள் உள்ளனர்.  நால்வர்களில் அப்பரும் சுந்தரரும் மட்டுமே இருக்கிறார்கள். சம்பந்தர், மணிவாசகர்  ஆகிய மூர்த்திகள் நூதனமாகப்  பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தெற்கு நோக்கிய அம்பாள சன்னதியின் முகப்பில் கிழக்கு நோக்கியவாறு அனுக்ரக சனி பகவான் சன்னதி கொண்டுள்ளார். அம்பிகை சன்னதியின் கோமுகிக்கு அருகில் சண்டிகேச்வரி இருக்கக் காணலாம்.
       
சுவாமி சன்னதியின் அர்த்தமண்டபச் சுவர்களில் உள்ள பஞ்ச கோஷ்டங்களுள் தக்ஷிணாமூர்த்தி மட்டுமே காணப் படுகிறார். மூலவர் விமானம் உயரமானது. இதில் தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, முதலிய சுதைச் சிற்பங்கள் காணப படுகின்றன.

விமானத்தின் கிழக்கு முகப்பில் பெரிய வடிவில் சோமாஸ்கந்தர காட்சிளிக்கிறார்.

மூர்த்திகள்: தலத்து இறைவர் சதுர ஆவுடையார்மீது கருவறையில் தரிசனம் தருகிறார். முயலகன் மீது ஆடியதால், நர்த்தனபுரீஸ்வரர் என்றும் ஆடவல்லநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.இவரைத் தரிசிக்காமல் நாட்களை வீணாக்கிவிட்டேனே என்று அப்பர் சுவாமிகள் பாடல்தோறும் குறிப்பிடுகிறார். மேலும், இப்பெருமான், தொண்டர்களுக்குத் தூய நெறி காட்டுபவனாகவும், நரகத்தில் வீழாமல் நம்மைக் காப்பவனாகவும்மும்மூர்த்தி வடிவில் விளங்குபவனாகவும், அடியார் சிந்தையில் புகுந்திருந்து நீங்காதவனாகவும், வேத வடிவினனாகவும், கயிலை மலையை எடுத்த அரக்கனை மன்னித்து அவனுக்கு இராவணன் என்ற பெயர் கொடுத்த கருணாகரனாகவும் விளங்குவதாக அப்பர் பெருமானின் தேவாரப் பதிகம் நமக்கு எடுத்துரைக்கிறது.
,           
அம்பிகையின் திருநாமம் பாலாம்பிகை என்பதாகும். இவளைத் திருமடந்தை என்று தலத் திருப்பதிகம் குறிப்பிடுகிறது. அவளது அழகுக்கு ஒருவரும் நிகர் இல்லை என்னும்படிப் பொலிவுடன் காட்சி அளிக்கிறாள். உலகுக்கெல்லாம் தாயான இவள் கருணையே வடிவமானவள். ஊர்  மக்களுக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

திருநள்ளாற்றில் இருப்பது போலவே, அம்பாள சன்னதியின் வாயிலருகில் கிழக்கு நோக்கியபடி, அனுக்ரஹ சனி பகவான் சன்னதி கொண்டுள்ளார். சனிப் பெயர்ச்சியின் போது இவருக்கு விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தேவகோஷ்டத்தில் கண்கவர் குருநாதனாகக் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.


 
பத்துக் கரங்களுடன் வடக்கு முகமாக அருள் பாலிக்கும் காளி தேவியை மக்கள் வெள்ளிக் கிழமைகளில் வழிபட்டு, வேண்டிய வரங்கள் யாவும் பெறுகின்றனர். பைரவர் சன்னதி மிகவும் சிறப்பானது. இரு பைரவர்கள் இங்கு காட்சி அளிக்கின்றனர். ஒருமூர்த்தியிடம் மட்டும் நாய் வாகனம் உள்ளது. தேய் பிறை அஷ்டமியில் திரளான மக்கள் இவரை வலம் வந்து  எல்லா நலமும் பெறுகிறார்கள்.




தீர்த்தங்கள்: கோயிலுக்கு எதிரில் உள்ள சங்க தீர்த்தம் தீராத பல நோய்களையும் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான நோய்கள் இதில்  நீராடியதால் நீங்கப்பெற்றதாகப் பலரும் கூறக் கேட்கலாம். அருகிலுள்ள செம்பங்குடியில் பல்லாண்டுகளுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி  காமகோடி மகா பெரியவர்கள், 48 நாட்கள் அதிகாலையில் இங்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு, நர்தனபுரீஸ்வரர் சன்னதியைப் பதினொரு முறை வலம் வந்து தரிசிப்பார்களாம்.

சோழ சூடாமணி ஆறு, கோயிலுக்குத் தெற்கில் ஓடுகிறது. இதனைக் கடுவாய் நதி என்றும் அழைப்பர். இப்புனித நதியின் கரையில் பல சிவாலயங்கள் இருக்கக் காணலாம்.

விருக்ஷம்: வடக்குப் பிராகாரத்தில் உள்ள பழமையான பலா மரமே இத்தல விருக்ஷமாகக் கருதப்படுகிறது. தலத்தின் பெயரோடு கூடிய ஆல மரம் கோயிலுக்குள் தற்போது இல்லை.

புராண வரலாறு: தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது. எனவேதான், சுவாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியைப் பெற்றுக்கொண்டார். சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றாள்.  

இக்கலியுகத்திலும் சங்குதீர்த்ததில் நீராடுபவர்கள், குன்மம்,முயலகநோய், சித்தப்ரமை,வெண்குஷ்டம் முதலிய மகா ரோகங்களிளிருந்து  நிவர்த்தி பெறுகிறார்கள். 

வழிபட்டோர்: கபில முனிவர், தாருகாவன முனிவர்கள், காளி, சனி பகவான், திருநாவுக்கரசு நாயனார் ஆகியோர். இத்தலத்திற்கு மிக அருகிலுள்ள குடவாயில், நாலூர் மயானம், பெருவேளூர்,கரவீரம் ஆகிய தலங்கள் திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்களைப் பெற்றுள்ளதால், சம்பந்தப்பெருமான் தலையாலங்காட்டிற்கும் எழுந்தருளி, பதிகங்கள் பாடியிருப்பார். அதுபோலவே, அருகிலுள்ள ஊர்களான திருவாஞ்சியத்தையும், திருவாரூரையும் பாடியுள்ள சுந்தரரும் இத்தலத்து இறைவரைப் பாடியிருப்பார். நமது தவக்குறைவால், நமக்கு அப்பதிகங்கள் கிடைக்கவில்லை.

பிற செய்திகள்: ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கடைசி இரு நாட்களும்,  தொடரும் சித்திரை மாதத்து முதல் இரு நாட்களும் விடியற்காலை  சூரியோதயத்தின் போது, சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும்போது சூரியபூஜை நடத்தப்படுகிறது.



சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாம்பிகையின் மீது பாம்பு இருந்ததைப் பலரும் கண்டு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த போது,  அப்பாம்பு, தனது சட்டையை உரித்து அம்பாள் திருமேனியின் மீதே விட்டுவிட்டு மறைந்து விட்டது. இங்குள்ள பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. தீராத பகைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர். எனவே, தேய்பிறை அஷ்டமியின்போது மக்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, நலம் யாவும் பெறுகின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் காளி தேவியை வழிபட்டு, திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் ஆகிய கோரிய வரங்களைப் பெறுகின்றனர். ஒரு காலத்தில் பெரிய ஊராக இருந்ததால், எஞ்சிய கோயில்களின் மூர்த்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

கல்வெட்டுக்கள்: தெற்கு ப்ராகாரச் சுவற்றிலும், வடபுறச் சுவற்றிலும் மகாமண்டப முகப்பிலும் உள்ள கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டுள்ளன.ராஜராஜனின் ஆறாவது ஆண்டு ஆண்டில் அளிக்கப்பட தேவ தானங்களும் அருமை உடையார் குமாரன் செண்டானாதர் உடையார் மகாமண்டபம் கட்டித்தந்த செய்தியும், அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காளிங்க ராஜன் என்பவர்  இக் கற்றளியைத் திருப்பணி செய்த தகவலும் இக்கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

பூஜைகளும் விழாக்களும்: இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் காலையும் மாலையும் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. குளத்தங்கரை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை  நடக்கிறது. தவிரவும், தை அமாவாசையை முன்னிட்டு இரு தினங்கள் சுவாமி புறப்பாடாகி, சங்க தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்திரை மாத பௌர்ணமி, சித்திரை சதயத்தன்று அப்பர் குரு பூஜை, வைகாசி விசாகம், ஆடிப்பூரம்,ஆடி-தை வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு விசேஷ அலங்காரம்,விநாயக சதுர்த்தி, நவராத்திரி, ஸ்கந்த சஷ்டி,அன்னாபிஷேகம்,  கார்த்திகை தீபம், மார்கழி உஷக் கால பூஜை, மகர சங்கராந்தி, மகாசிவராத்திரி,  ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருப்பணிகள்: இக்கோயிலில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 5.7.1970 அன்று இதற்கு முந்தைய கும்பாபிஷேகம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாலயம் செய்து திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அன்பர்கள் ஆதரவும் ஆடல்வல்லானின் அருளும் இருந்தால் விரைவில் திருப்பணிகள் நிறைவேறி கும்பாபிஷேகம் நடைபெறும் என்பது உறுதி.

உள்ளூர்க் கோயில்கள்: மயிலம்மன், திரௌபதி அம்மன், ஐயனார்,காளி புத்தடி அம்மன் ஆகிய தெய்வங்களின் கோயில்களும் இவ்வூரில் இருக்கின்றன.

சுற்றிலும் உள்ள தலங்கள்: இங்கிருந்து திருவாரூர் செல்லும் வழியிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் எண்கண் சிவாலயம் உள்ளது. இதிலுள்ள முருகன் சன்னதி பிரசித்தமானது. திருவாரூர் சாலையில் காப்பணாமங்கலமும், அங்கிருந்து ஒரு கி. மீ. தொலைவில் கங்கா தேவி பூஜித்த  பெரும்பண்ண்யூர்  கைலாசநாத சுவாமி ஆலயமும் உள்ளன. இதன் அருகில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற த்ரியம்பகபுரம் உள்ளது. திருவாரூர் சாலையில் இன்னும் சற்றுத் தொலைவில் சம்பந்தரும் அப்பரும் பாடிய பெருவேளூரும், கரவீரமும் அமைந்துள்ளன. வடகிழக்கில் நான்கு கி. மீ. தொலைவில், நால்வராலும் பாடப்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் உள்ளது. கும்பகோணம் செல்லும் பாதையில் குடவாயில், நாலூர், நாலூர் மயானம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. இன்னும் சற்றுத் தொலைவில் திருச்சேறையும், நறையூர் சித்தீஸ்வரமும் உள்ளன. சேங்காலிபுரம், ஓகை, பருத்தியூர், சிமிழி ஆகிய ஊர்களிலும் சிவாலயங்கள் இருக்கின்றன. தலையானங்கானத்துப் போருக்காக வில்லுக்கு நாண் தயார் செய்து கொடுத்த இடம் நாணல்சேரி எனப்படுகிறது. இங்கு இரு சிவாலயங்கள் உள்ளன.

சமயப்பணி: சமயப் பணி செய்யும் ஆர்வலர்களும் தல யாத்திரை செய்யும் அன்பர்களும் இக்கோயிலின் வளர்ச்சியில் பங்காற்றினால் ஆலயம் புதுப்பொலிவுடன் விளங்கி நன்கு பராமரிக்கப்பட ஏதுவாகும்


மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9443500235