Thursday, September 26, 2019

ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள்-இராமேசுவரம் -III                            ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள்-இராமேசுவரம் III

                                                                சிவபாதசேகரன்


இராமலிங்கப் பிரதிஷ்டை 

தனுஷ்கோடி மகிமை :
நர்மதை நதிக் கரையில் தவம் செய்தால் கொடிய பாவங்களும் விலகும். கங்கைக் கரையில் மரணம் சம்பவித்தால் முக்தி கிடைக்கும். குரு க்ஷேத்திரத்தில் செய்யும் தானம் ப்ரமஹத்யாதி பாவங்களைப் போக்கும்  தனுஷ்கோடியில் செய்யும் தானமும் தவமும் பாவங்களை நீக்கி முக்தி அளித்து, விரும்பிய எல்லாவற்றையும் தரும். உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களும் தனுஷ்கோடி தீர்த்தத்தில் அடக்கம். அனைத்துத் தேவர்களும் இதில் குடிகொண்டிருக்கிறார்கள். புண்ணிய காலங்களில் இங்கு ஸ்நானம் செய்வதால் அதிக பலன்கள் பெறலாம். இங்கு பித்ருக்களுக்குப் பிண்டம் போட்டால் பித்ருக் கடன் நீங்கி அவர்களது ஆசியையும் பெறுவர். இதனைப் பார்த்தாலே முக்தி கிட்டும் என்பதால் ஸ்நான பலனை எப்படி வர்ணிப்பது என்று கேட்கிறது புராணம்.

துரோணரது மைந்தனான அச்வத்தாமன் , தனது தந்தை வஞ்சனையால் கொல்லப்பட்டதை அறிந்து பாண்டவர்களைப் பழி வாங்க எத்தனிக்கையில், கண்ணனது அருளால் பாண்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் இரவில் உறங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னனையும் பாண்டவ குமாரர்களையும் அசுவத்தாமன் கொன்றான்.அக்கொலைப்பழி நீங்குவதற்கு வியாஸரை அணுகினான். அதற்கு அவர், “ உறங்குபவரைக் கொன்றால் அப்பழிக்குப் பிராயச்சித்தம் கிடையாது. இருப்பினும் தனுஷ்கோடி தீர்த்தத்தில் ஒரு மாதம் ஸ்நானம் செய்து இராமநாதரை வழிபட்டால் பழி நீங்கும் “என்றார். அவ்வாறே செய்த அச்வத்தாமனும் பழி நீங்கப்பெற்றான்.

சந்திர வம்சத்தில் பிறந்த நந்தன் என்ற அரசனது குமாரன் தர்மகுப்தன் என்பவன் நம்பிக்கை துரோகம் செய்த குற்றத்திற்காக சித்த சுவாதீனம் இழந்து திரிந்தான். பின்னர் ஜைமினி ரிஷியின் சொற்படி தனுஷ்கோடி தீர்த்த ஸ்நானம் செய்து இராமநாத சுவாமி தரிசனம் செய்ததும் சித்தம் தெளியப்பெற்றான். எனவே சித்தப்பிரமை மட்டுமல்லாது,எல்லா நோய்களையும் நீக்கவல்லது இந்த தீர்த்தம்.

ப்ரஹத்யும்னன் என்ற மன்னன் செய்த வேள்விக்கு ரைப்ய மகரிஷி புரோஹிதம் செய்தபோது, அவரது பிள்ளைகளான பராவசுவும் அச்வாவசுவும் தந்தைக்கு உதவியாக இருந்தனர். ஒரு நாள் மான் தோல் போர்த்துக்கொண்டு உலவிய ரைப்யரைத் துஷ்ட மிருகம் என்று கருதி  பராவசு, ஆயுதத்தால் கொன்று விட்டான். அச்வாவசு தவம் செய்து தந்தை உயிர் பெறவும், தமையன் பிரமஹத்தி தோஷம் நீங்கப்பெறவும் வரம் வேண்டினான். தேவர்கள் அருளியபடித் தமையனைத் தனுஷ்கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்தான். அதனால் பராவசுவின் பழி நீங்கியது. ரைப்ய மகரிஷியும் உயிர் பெற்று எழுந்தார்.
சேது மாதவ தீர்த்தம் 

இராமேசுவரம் கோயிலுக்குள் காணப்படும் தீர்த்தங்கள் இருபத்திரண்டு ஆகும். அவையாவன:

மகாலக்ஷ்மி தீர்த்தம்,சாவித்திரி தீர்த்தம்,காயத்திரி தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,சேதுமாதவ தீர்த்தம்,கந்த மாதன தீர்த்தம்,கவாட்ச தீர்த்தம்,கவய தீர்த்தம்,நள தீர்த்தம்,நீல தீர்த்தம்,சங்கு தீர்த்தம்,சக்கர தீர்த்தம்,பிரமஹத்தி விமோசன தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்,கங்கா தீர்த்தம்,யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சிவதீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், ஸர்வ தீர்த்தம்(மானஸ தீர்த்தம்), கோடி தீர்த்தம் என்பனவாம்.

ஸர்வ தீர்த்த ஸ்நானத்தால் சுதர்சனர் என்பவர் பிறவிக் குருடும்,நரை, திரை,மூப்பு ஆகியனவும் நீங்கப்பெற்றார் எனப்படுகிறது. கோடி தீர்த்தத்தில் நேரடியாக ஸ்நானம் செய்ய முடியாவிட்டாலும் அதற்கென ஒரு அந்தணர் முகந்து ஊற்றும் நீரில் ஸ்நானம் செய்யலாம். இதுவே எல்லா தீர்த்தங்களிலும் மேலானதாகக் கருதப்படுவதால் இதில் ஸ்நானம் செய்து, சுவாமி-அம்பாள் தரிசனம் ஆனபிறகு இராமேசுவரத்தை விட்டுப் புறப்பட வேண்டும் என்பது மரபு. இஷ்ட சித்தியும் ஞானமும்,முக்தியும் தரும் இந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கம்ஸனைக் கொன்ற பாவத்தை கிருஷ்ண பகவான் போக்கிக் கொண்டதாகப் புராணம் கூறுகிறது.

மூன்றாம் பிராகாரத் தூண் வரிசைகளின் அழகு நம்மைப் பிரமிக்க வைக்கிறது 

இந்த அழகிய வேலைப்பாடு அமைந்த பிராகாரம் பற்றியும் இதனை நிர்மாணித்த சேதுபதி மன்னர் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பற்றியும் ஒரு கல்வெட்டு அமைத்திருப்பது காணத்தக்கது .புராண வரலாறுகள் : இராமலிங்கப் பிரதிஷ்டை ,  சுந்தர பாண்டியனின் மகளாக அவதரித்த மகாலக்ஷ்மி ,அந்தண வடிவில் வந்த திருமாலை மணந்து சேது மாதவராகத் தங்கியது, பைரவ மூர்த்தியை இராமபிரான் பிரதிஷ்டை செய்தது, சாகல்ய மகரிஷியை மான் என்று நினைத்து அம்பெய்தியதால் பிரமஹத்தி பீடிக்கப்பட்ட சங்கர பாண்டியன் இராமேசுவரம் வந்து ஓராண்டுக்காலம் இராமநாதரை வழிபட்டதால் பாவம் நீங்கப்பெற்றது, ஆகிய வரலாறுகளைத் தல புராணத்தில் காணலாம்.

இராவணனை சம்ஹரித்தபின் ஸீதா பிராட்டியுடன் இராமபிரான் கடலைத் தாண்டி வருகையில் நளனால் கட்டப்பட்ட சேதுவையும் அனுமன் வெளி வந்த மைனாகம் என்ற மலையையும்,மூவுலகாலும் பூஜிக்கத்தகுந்த அழகிய கடலையும், அதன்கண் அமைந்துள்ள சேது தீர்த்தத்தையும் தேவிக்குக் காட்டினார் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. மேலும்,   “ யாரொருவன் சேதுவில் ஸ்நானம் செய்து, இராமநாதரைவழிபடுகிறானோ அவன் பிரமஹத்தி போன்ற பாவங்களிலிருந்து விடுபடுகிறான். காசிக்குச் சென்று கங்கையில் நீராடி விட்டு, விச்வேசப் பெருமானைத் தரிசித்து விட்டு , அங்கிருந்து கொண்டுவந்த கங்கை நீரால் இராமநாதருக்கு அபிஷேகம் செய்பவன் பாவச் சுமையிலிருந்து முற்றிலும் விடுபடுகிறான். இதில் ஐயமில்லை.” என்றும் கூறினார்.

ராமர் அயோத்திக்குச் சென்று முடி சூட்டிக் கொண்டபின் மீண்டும் தீர்த்த யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாக ஆனந்த இராமாயணம் கூறுகிறது. மேலும் அக்னி புராணம், பிரம்மாண்ட புராணம்,மார்க்கண்டேய புராணம்,கருட புராணம்,விஷ்ணு புராணம்,தேவி புராணம்,ஸ்காந்த புராணம் பத்ம புராணம், அத்திரி ஸ்ம்ருதி,நாராயண ஸ்ம்ருதி, ஆகியவற்றிலும் சேது க்ஷேத்திர மகிமை சொல்லப்பட்டிருக்கிறது.

பிரஹ்மாண்ட புராணத்தில் புண்ணிய காலங்களில் இங்கு பொன் முதலிய தானங்கள் பெறுபவன் ஆயிரம் ஆண்டுகள் அரக்கனாகவும்,கண்ணின்றியும்  தாங்குபவரின்றியும் இருப்பான். அதற்குப் பிராயச்சித்தமாக இங்கு ஒன்பது லக்ஷம் காயத்ரி ஜபிக்க வேண்டும் . கல்பதருவை தானமாகப் பெற்றால் இருபத்தொரு நரகங்களில் வீழ வேண்டும். இதற்குப் பிராயச்சித்தமாக எட்டு லக்ஷம் காயத்ரியை ஜபிப்பதும், பெற்ற தானத்தில் ஒரு பங்கை நற்காரியங்களுக்கு செலவழிப்பதும், பூமியை மும்முறை வலம் வருவதும்,சேதுவில் மூன்று ஆண்டுகள் ஸ்நானம் செய்வதும் சிவ பூஜையும், இராமநாதப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் சொல்லப் பட்டிருக்கிறது. வைத்திய நாத தீக்ஷிதரின் ஸ்ம்ருதி முக்தாபலத்தில் பிராயச்சித்த காண்டத்தில் இதனை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

தலம் பற்றிய நூல்களும் பாடல்களும்: இத்தலத்தின் மீது வடமொழியில் தலபுராணமும், தமிழில் நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேதுப்புராணமும், திருஞான சம்பந்தர் அருளிய இரண்டு  தேவாரத் திருப்பதிகங்களும்,திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரத் திருப்பதிகமும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடலும், தாயுமான சுவாமிகள்,பர்வத வர்த்தனி பேரில் பாடிய மலைவளர் காதலி பதிகமும், சொக்கநாதப்புலவர் பாடிய தேவை உலாவும் முத்துவிஜயம் பிள்ளை இயற்றிய சேதுப்புராண வசனமும், இத்தலத்தின் மீது பாடப்பட்டுள்ளன. சுவாமி-அம்பாள் மீது ஸ்ரீ ராகவனே செய்த ஸ்ரீ ராமநாதாஷ்டகமும், ஸ்ரீ பர்வதவர்தனி அஷ்டகமும் வடமொழி சுலோகங்களாக உள்ளன. சுவாமி பேரில் ஸ்ரீ ராமநாத சுப்ரபாதமும் இருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான  ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்,  சுவாமி பேரில் காமவர்த்தனி இராகத்தில் இயற்றிய ராமநாதம் பஜே ஹம் என்ற கீர்த்தனை சங்கீத உலகில் பிரசித்தமானது.

தாயுமான சுவாமிகள் நிகழ்த்திய அற்புதம்: தாயுமானவர் இங்கு வந்தபோது மழை இல்லாமல் மக்கள் துன்பப்படுவதைப் பார்த்துப் பின் வரும் பாடலைப் பாடினார்:

சைவ சமயம் சமயம் எனில் அச்சமயத்
தெய்வம் பிறை சூடும் தெய்வம் எனில் – ஐவரை வென்று
ஆனந்த வெள்ளத்து அழுந்துவதே முத்தி எனில்
வானங்கள் பெய்க மழை.

என்று பாடியவுடன் கருமேகங்கள் திரண்டு வந்து மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.

கல்வெட்டுக்கள்: இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் சமஸ்கிருதம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ளன. சில செப்பேடுகளும் உண்டு. சேதுபதி மன்னர்களும்,பாண்டிய மன்னர்களும், மதுரை நாயக்கர்களும் இக்கோயிலுக்கு அளித்த கொடைகள் பற்றிக் கல்வெட்டுக்கள் மூலமாக அறிகிறோம். 

நித்திய பூஜையும்,விழாக்களும்: விடியற்காலை 4 மணி முதல் 5 1/2 மணி வரை திருவனந்தல் பூஜை. நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையைக் காண மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் .சூர்ய உதயமானதும் விளா பூஜையும், 9 மணிக்கு மேல் காலசந்தி பூஜையும், நடுப்பகலில் உச்சிக்கால பூஜையும்,மாலையில் சாயரக்ஷையும்,இரவு 9 மணிக்கு மேல் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகின்றன.

இங்கு ஆண்டுதோறும் ஆனி ,ஆடி,மாசி மாதங்களில் மூன்று பிரமோற்ச  வங்களும், வைகாசியில் வசந்த விழாவும் நடைபெறுகின்றன. பிரதி வெள்ளிக்கிழமையும் அம்பிகை நவசக்தி மண்டபத்தில் கொலுவீற்றுத் தரிசனம் தருகிறாள். ஆடியில் திருக்கல்யாணம் நடைபெறும்.

பிதிர்க் கடனை நீக்கவல்ல தலமாதலால் அமாவாசை, கிரஹணம் மகோதய-அர்த்தோதய புண்ணிய காலங்கள், மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் பெருந்திரளான மக்கள் கடல் நீராடிப் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்கள். ஆடி அமாவாசை,தை அமாவாசை தினங்களிலும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வருகின்றனர்.
உஜ்ஜைனி மாகாளி கோயில் 
பிற கோயில்கள்: அக்னி தீர்த்தத்தருகில் மேற்கு பார்த்துள்ள உஜ்ஜைனி மாகாளி கோயில், கந்தமாதன பர்வதம், கோதண்டராமர் கோயில் ஆகியன.

காஞ்சி ஸ்ரீ சங்கர மடம்
யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவஸ்தான அறைகளும், காஞ்சி மடம் , சிருங்கேரி மடம் , காசி மடம், ஆகியனவும் மற்றும் தனியார் விடுதிகளும் உள்ளன.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்குவதும் ஜ்யோதிலிங்க ஸ்தலமும் ஆன இராமேசுவரத்தை தரிசித்து முந்தை வினை முழுதும் நீங்கிப் ,பிறப்பற்ற பெரு வாழ்வு அருளுமாறு ஸ்ரீ இராமலிங்க மூர்த்தியையும் ,ஸ்ரீ பர்வத வர்த்தனி அம்பிகையையும் வேண்டி  உய்வோமாக.    

Wednesday, September 25, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் -இராமேசுவரம்-II

          

                                           சிவபாதசேகரன் கந்தமாதன பர்வதத்திலிருந்து தொலைவில் தெரிவது இராமநாத சுவாமி ஆலயம் 
தீர்த்தச் சிறப்பு: ஒரே கோயிலுக்குள் பல தீர்த்தங்கள் அமைந்துள்ள தனிச் சிறப்பு , இராமநாத சுவாமி ஆலயத்திற்கு மட்டுமே உண்டு. யாத்திரை செய்ய வருவோர் கோயிலுக்கு உள்ளேயும் வெளியிலும் அதன் எல்லையிலும் உள்ள தீர்த்தங்களையும்,அவற்றின் சிறப்புக்களையும் அறிவது மிகுந்த பயன் தரும் என்பதால் இங்கு சற்று விரிவாகவே தருகிறோம்.

முதலாவதாகத் திருப்புல்லாணியில் உள்ள சக்கர தீர்த்தம் எனப்படும் அமிர்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். இதற்குத் தர்ம புஷ்கரணி என்ற பெயரும் உண்டு. ஒரு சமயம் தர்மதேவதை, மகாதேவனைக் குறித்துத் தவம் செய்யும்போது இந்த தீர்த்தத்தை உண்டாக்கியதால் இதற்குத் தர்ம புஷ்கரணி என்று பெயர் ஏற்பட்டது. தர்மதேவதையின் விருப்பப்படி அதனை சிவபெருமான் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். இவ்வரலாற்றை இத்தீர்த்தக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த காலவ மகரிஷியிடம் மஹா விஷ்ணு கூறினார். காவலரின் தவத்தை ஒரு அரக்கன் அழிக்க முன்வந்தபோது முனிவர் விஷ்ணுவைத் தியானிக்கவே நாராயணனும் அவ்வரக்கனைச்  சக்கராயுதத்தால் அழித்து,முனிவரைக் காப்பாற்றினார்.முற்பிறவியில் வசிஷ்டரது சாபத்தால் அரக்க வடிவம் பெற்று சக்கரத்தால் கொல்லப்பெற்று சாப நிவர்த்தி பெற்ற அரக்கன்,  கந்தர்வ வடிவத்துடன் சுவர்க்கம் அடைந்தான். ஆகவே இத்தீர்த்தம் சக்கர தீர்த்தம் எனப்பட்டது. இதில் நீராடினால் பித்ருக்கள் திருப்தி அடைவார்கள். புத்திரப்பேறும் கிடைக்கும். 

தேவி பட்டினத்திற்கு மேற்கே உள்ள புல்லக்கிராமத்தில் உள்ள க்ஷீர குண்டம் மிக்க பெருமை வாய்ந்தது. முத்கல ரிஷியின் யாகத்தினால் மகிழ்ந்த விஷ்ணுவானவர், அம்முனிவருக்குக் காட்சி அளிக்கையில், முத்கலர் ஒரு வரம் கேட்டார். காலையிலும் மாலையிலும் பகவானைத் திருப்திப் படுத்த பால் கிடைக்குமாறு  அருள வேண்டினார். பகவானும் விச்வகர்மாவை அங்கு ஓர் குளம் அமைக்கச் செய்தார். காமதேனுவை அக்குளத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் பால் சொரியச் செய்தருளினார். இதன்மூலம் முனிவரும் தினசரி பால் அளித்துப் பகவானைத் திருப்தி செய்தார். நிறைவாக முக்தியும் பெற்றார். இதனால் இக்குளத்திற்கு க்ஷீர குண்டம் என்ற பெயர் வந்தது. இதில் ஸ்நானம் செய்தால் கொடிய பாவங்கள் நீங்கி முக்தி பெறுவார்கள். அசுவமேதம் செய்த பலனும் கிடைக்கும். காச்யபரின் மனைவியர்களான வினதை,கத்ரு ஆகிய இருவரும்  விவாதம் செய்தபோது கத்ரு வஞ்சித்ததால் வினதைக்கு அடிமை ஆனாள். வினதையின் புத்திரனான கருடன் அமிர்த கலசம் கொண்டுவந்து தனது  தாயாருடன்  அதில் ஸ்நானம் செய்து இருவரும் பவித்திரர்கள் ஆனபின்னர்,, தவறிழைத்த கத்ருவும் காச்யபரின் சொற்படி க்ஷீர குண்டத்தில் நீராடியதால் பாப விமோசனம் பெற்றாள்.

சக்கர தீர்த்தத்தின் தென்புறம் வேதாள தீர்த்தம் உள்ளது. சுதர்சனன், சுகர்ணன் என்ற அந்தண சகோதரர்கள் காலவமுனிவரால் சபிக்கப்பெற்றனர். மூத்தவன் வேதாளமாகியும், இளையவன் மீண்டும் மானுடப்பிறப்பை எய்தியும் மிகவும் துன்புற்றார்கள். பின்னர் காவலரின் வாக்குப்படி இத் தீர்த்தத்தில்  நீராடி,பழைய உருவம் பெற்றனர். வேதாளத்தன்மை நீங்கியதால்அதற்கு  வேதாளதீர்த்தம் எனப்பெயர் வந்தது. இங்கு பித்ருக்களுக்குப் பிண்டதானம் செய்வது சிறப்பாகும்.

கந்தமாதன பர்வதம் 
பாப விநாச தீர்த்தம் : கந்தமாதன பர்வதத்தில் கௌரி ஸமேதனாகப் பரமேச்வரன் மற்ற தேவ கணங்களுடன் நிரந்தரமாக இருந்தருளுகிறார். இதன் காற்றுப் பட்டாலும் பாபங்கள் நசித்துப் போகும். இதனருகிலுள்ள சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து விட்டுக் கந்தமாதனத்தில் பிண்டம் போட்டால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைவார்கள். நரகில் வசித்துக் கொண்டிருந்த பித்ருக்கள் சுவர்க்கம் செல்வார்கள். இதன் மீதுள்ள பல தீர்த்தங்களுள் பாப நாச தீர்த்தமும் ஒன்றாகும். பிரமராக்ஷசால் பீடிக்கப் பட்ட ஒரு அந்தணன் , அகஸ்தியரின் அறிவுரைப்படி பாபநாச தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நீராடி பிரமராக்ஷஸ் நீங்கப்பெற்று இறுதியில் முக்தியும் அடைந்தான்.

கந்த மாதன பர்வத உச்சி 
ஸீதா தீர்த்தம்: கந்தமாதனத்தில் உள்ள இந்த தீர்த்தத்தில் எல்லா தீர்த்தங்களும் தங்களைப் பரிசுத்தமாக்கிகொள்ள வேண்டி இதில் தங்குகின்றபடியால் இதன் பெருமையை அறியலாம். அக்னிப் பிரவேசம் செய்த கற்புக்கரசியான ஸீதா தேவியால் இது உண்டாக்கப்பட்டது. இதில் நீராடினால் பாபம்,துக்கம், தரித்திரம் நீங்கப்பெறுவர். இதில் நீராடியதால் இந்திரனைப் பிடித்த பிரம ஹத்தி தோஷம் நீங்கியது. 
மங்கள தீர்த்தம்: ஸீதா தீர்த்தத்தில் நீராடியபின் மங்கள தீர்த்த ஸ்நானம்  வேண்டும். எல்லா ஐச்வர்யங்களையும் தரவல்ல புண்ணிய தீர்த்தம் இது. மனோஜவன் என்ற சந்திர வம்சத்து அரசன் கெளட தேசத்து அரசனால் தோற்கடிக்கப்பட்டு , நாடு, செல்வம் எல்லாவற்றையும் இழந்து,காட்டில் வசிக்க நேரிட்டபோது அவனுக்கு இரங்கிய பராசர முனிவர், மங்கள தீர்த்த மகிமையை எடுத்துரைத்து,அதில் நீராடினால் இழந்ததெல்லாம் பெறுவாய் என்று அருளினார். அதன்படி மன்னன் தன் மனைவி மக்களோடு இத்தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்ததன் பலனாக, இழந்த நாட்டையும், செல்வத்தையும் பெற்று,நிறைவாக மகனை அரசனாக்கிவிட்டு, மனைவியுடன் சிவலோகம் சென்றான் . இதில் உலக நன்மைக்காக,     ஸீதாலக்ஷ்மியுடன் இராமபிரான் தங்கியிருக்கிறார்.

அமிர்த வாபி: இராமர் தனது வானர சேனையுடன் கடலைத்தாண்டும் உபாயம் பற்றி ஆலோசனை செய்கையில் கடல் அலைகளின் இரைச்சலால்  ஒருவரோடொருவர் பேசுவது கேட்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இராமர்,புருவங்களை நெரித்ததும், சமுத்திர ராஜன் அடங்கிப்போனான். பிறகு ஏகாந்தமாக யோசனை நடைபெற்றதால் இவ்விடம் ஏகாந்த ராமநாதம் என்று வழங்கப்படுகிறது. இந்நிகழ்வால் அங்கு அலைகளின் பேரிரைச்சல் இல்லை என்று சொல்லப்படுகிறது.  

பிரம்ம குண்டம்: இது கந்தமாதனத்தில் உள்ளது. அக்கினி மலையாகத் தோன்றிய லிங்கோத்பவமூர்த்தியின் அடிமுடி தேடிக் காண முடியாத நிலையில், தான் கண்டதாகப் பொய் உரைத்த பிரமனுக்குக் கோயில் இல்லாமல் போகவும், உண்மையை உரைத்த  விஷ்ணுவுக்கு ஆலய வழிபாடு நிகழும் என்றும்  சிவபெருமான் அருளினார். தன் பிழைக்கு வருந்திய பிரமன், கந்தமாதனத்தில் குண்டம் அமைத்து யாகம் செய்தான். அதனால் மகிழ்ந்த மகாதேவர், வேத கர்மாக்களில் பிரமனுக்கு பூஜை நடக்கும் என்றும், விக்ரஹ ஆராதனை மட்டும் நடைபெறாது என்றும் , இந்த யாக குண்டம் செய்த இடம் பிரம குண்டம் என்று வழங்கப்படும் என்றும்,இதன் விபூதியைத் தரித்தால் பஞ்ச மாபாதகங்களும் விலகும் என்றும், முக்தி கிட்டும் என்றும் அருளினார். வியாச பகவானும், இதன் பெருமையைக் கூறும்போது, “ இதன் விபூதியைத்தந்தால் பூதானம் செய்த பலன் உண்டு. கைகளைத் தூக்கி சத்தியமாக மும்முறை உரைக்கிறேன் “ என்று கூறியுள்ளார்.  

ஹனுமத் குண்டம்: அனுமனே இதனை உண்டாக்கியதாகப் புராணம் கூறும். தர்மசகன் என்ற கேகய தேச அரசனுக்கு நூறு மனைவிகள் இருந்தும் மூத்த மனைவி மூலம் ஒரு மகனே பிறந்திருந்தான். அந்தணர்கள் அறிவுறுத்தியதன் பேரில் ஹனுமத் குண்டக் கரையில் அசுவமேத யாகம் செய்ததால் மற்ற மனைவிகளுக்கும் புத்திர பாக்கியம் கிட்டியது.  

அகஸ்திய தீர்த்தம் :இமயத்தில் சிவ-பார்வதி கல்யாணம் நடந்தபோது பூமியை சமன் செய்யத் தென்திசை நோக்கி அகஸ்தியர் வந்தபோது இங்குத் தங்கி ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தினார். இதில் நீராடுபவர்கள் கோரிய பலன்கள் அனைத்தும் பெறுவார்கள் . தீர்க்கதபஸ் முனிவரது புத்திரனான கக்ஷீவான் தனது குருவான உதங்க ரிஷியிடம் கல்வி கற்று, அவர் சொற்படி அகஸ்திய தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்து மூன்று ஆண்டுகள் ஆனபின்னர் அங்கு எழுந்த நான்கு தந்தம் கொண்ட யானையில் ஏறி ஸ்வதயன் என்ற அரசனது மகளான மனோரமையை அத்தீர்த்தக் கரையில் மணம் செய்து கொண்டான்.இந்த சரித்திரம் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறுவர்.

கந்தமாதனத்தில் உள்ள மற்ற தீர்த்தங்களுள் சூரியனுக்குப் பொற்கைகளை அளித்த சக்கர தீர்த்தமும், கால பைரவரின் தோஷத்தை நீக்கிய சிவ தீர்த்தமும், குறிப்பிடத்தக்கவை.
இராம தீர்த்தம்: அச்வத்தாமன் இறந்தான் என்று பாரதப்போரில் தருமபுத்திரனானவர் துரோணரிடம் பொய் சொன்ன பாபம் போக வியாசரின் அறிவுரைப்படி ராம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஒரு மாதம் தங்கி இருந்து,தானங்கள் செய்து தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார் 

லக்ஷ்மண தீர்த்தம் 
லக்ஷ்மண தீர்த்தம்: லக்ஷ்மணர் இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கி அதன் கரையில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டுள்ளார். தன்னை மதியாத சூத முனிவரைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை பலராமர் இதில் ஸ்நானம் செய்ததால் நீக்கிக் கொண்டார் எனப் புராணம் கூறுகிறது.

லக்ஷ்மணன் பிரதிஷ்டை செய்த சிவாலயம் 


பைரவ,கபி தீர்த்தங்கள்  பாம்பனுக்கு அருகிலும், தங்கச்சிமடத்தில் அமிருதவாபிக்கருகில் இரண விமோசன தீர்த்தம், ஸீதையின் தாகத்தைத் தீர்க்க இராமன் வில்லை ஊன்றி உண்டாக்கிய வில்லூருணி தீர்த்தம், ஆகியன உள்ளன. சுக்ரீவ,அங்கத,சாம்பவ,தரும,பீம,அர்ஜுன ,நகுல, சகாதேவ,திரௌபதி தீர்த்தங்கள் கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில் உள்ளன. பரமசிவனால் உண்டாக்கப்பட்டதும் சுகப் பிரம்ம ரிஷி ஸ்நானம் செய்து ஞானம் பெற்றதுமான ஜடா தீர்த்தம் தனுஷ்கோடி செல்லும் பாதையில் கோதண்டராமர் கோயிலுக்கு அருகில் இருக்கிறது.
இவற்றைத் தவிர தேவ, விபீஷன,கஜ,சரப,குமுத ,ஹர ,பனச தீர்த்தங்கள் இருந்ததாகப் புராணம் கூறுகிறது. அவை இப்போது காணப்படவில்லை.

அக்னி தீர்த்தம்: 

அக்னிதீர்த்தம் 
கீழைக் கோபுரத்திற்கு நேர் எதிரில் உள்ள கடலே அக்னி தீர்த்தம் எனப்படுவதாகும்.இராவண சம்ஹாரம் ஆனபிறகு, ஸீதா தேவியை ஏற்றுக்கொள்ளும் முன்பு பிராட்டியின் சுத்திக்காக அக்னி பகவானை ஸமுத்திரத்திலிருந்து அழைத்தபடியால் இந்த இடம் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பாவங்கள் பல செய்த துஷ்புண்ணியன் என்பவன் ரிஷி சாபத்தால் பிசாசாக ஆகித் திரிந்தபோது ,அகஸ்தியர் அவனுக்கு இரங்கித் தன் சிஷ்யனான சுதீக்ஷ்ணரை மூன்று நாட்கள் அக்னி தீர்த்த ஸ்நானம் செய்யச் சொல்லி அப்பிசாச வடிவம் நீங்குமாறு அருளினார். அதன் பலனாக பிசாசு வடிவம் நீங்கித் தேவ வடிவம் பெற்றான்.

தனுஷ்கோடி தீர்த்தம்: தனுஷ்கோடியைப் பார்த்தாலே முக்தி நிச்சயம் என்கிறது புராணம். இராவணனை வென்று விபீஷணனுக்கு முடி சூட்டி விட்டுக் கந்தமாதனத்தை மீண்டும் ஸீதா லக்ஷ்மணர்களுடன் இராமர் வந்து அடைந்தபோது, விபீஷணன் அவரை வணங்கி, “ தாங்கள் கடலில் கட்டிய இந்த அணையின் மூலம் பலசாலிகளான மன்னர்கள் இலங்கைக்கு வந்து என்னையும் என் சந்ததியினரையும் எதிர்ப்பார்கள். ஆகவே தங்களது வில்லின் நுனியால் (தனுஷ்  கோடியால்) இந்த அணையைத் தகர்த்து விடுங்கள்” என்று விண்ணப்பித்தான். அதன்படி அணையானது இராபிரானது வில் நுனியால்  தகர்க்கப்பட்ட காரணத்தால் இவ்விடம் தனுஷ்கோடி என்று வழங்கலாயிற்று.   
                                                       தீர்த்த மகிமைகள் தொடரும் 

Tuesday, September 24, 2019               ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் - இராமேசுவரம் -I

                                           சிவபாதசேகரன் 

கிழக்கு இராஜ கோபுரம்
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போய்அற
வேவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.

              -    திருஞானசம்பந்தர் தேவாரம்

தலத்தின் இருப்பிடம்:

சாலைப்பாலத்திலிருந்து இரயில் பாலமும் கடலும்  
பன்னிரு ஜ்யோதிர்லிங்கத் தலங்களுள் இராமேசுவரம் ஒன்று மட்டுமே  தமிழகத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 160 கி.மீ. தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து சுமார் சுமார் 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஒரு தீவு இது. கடலைக் கடந்து செல்ல இருப்புப் பாதையும்,சாலை மேம்பாலமும் உள்ளன. வலம்புரிச் சங்கின் வடிவில் இத்தீவு உள்ளது.

தலச் சிறப்பு:
பழங்காலந்தொட்டே வடக்கே காசியும் தெற்கே இராமேசுவரமும் புனித யாத்திரைகள் செய்யப்படும் தலங்களாக விளங்குபவை. ஸனாதன தர்மமாகிய இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இவ்விரண்டு      தலங்களையும் ஆயுளில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும் என்று புராணங்களையும் இதிகாசங்களையும் அறிந்த பெரியோர்கள் கூறுகின்றனர். தர்ப சயனம், தேவி பட்டினம் முதலாகத் தனுஷ்கோடி வரையில் உள்ள பகுதியை சேது ஸ்தலம் என்றும் இராம சேது என்றும் கூறுவார்கள். இங்கு கந்தமாதன பர்வதம் இருப்பதால், இங்கு செய்யப்படும் மஹா சங்கல்பத்தில், “ உபய ஸாகரயோர் மத்யே கந்தமாதன பர்வதே “ என்று சொல்வது வழக்கில் உள்ளது.

பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த மஹா புராணத்தில்,     ஸனத்குமார  ஸம்ஹிதையில் ஐம்பது அத்தியாயங்களில் சேது மகாத்மியம் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதில் ஐம்பத்திரண்டாவது அத்தியாயத்தில் இத்தலத்தின் பெருமையை விளக்கும் நான்கு  மந்திரங்கள் ரிக்வேத ஸம்ஹிதையில் ஒன்றும், யஜூர்வேத தைத்ரீய ஸம்ஹிதையில் மூன்றுமாகக் காணப்படுகின்றன.
இராமேசுவரத்தில் செய்யப்படும் ஜபம்,ஹோமம், தவம், தானம் ஆகியவை காசியில் பத்து மாதங்கள் தங்கிய பலன்களைக் காட்டிலும், அதிக பலன்களைத் தர வல்லனவாகும். 

தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து ராமநாத சுவாமியை வழிபட்டால், சிதம்பரத்தில் பத்து மாதங்கள் தங்கிய பலனை அளிக்கும். கும்பகோணம்,மாயூரம்,திருவிடைமருதூர், மதுரை, திருவெண்காடு,ஸ்ரீரங்கம்,விருத்தாசலம்,திருவாரூர்,சீர்காழி,காளஹஸ்தி திருவண்ணாமலை,வைத்தீசுவரன் கோயில்,திருப்பதி,வேதாரண்யம்,காஞ்சி, ஸ்ரீ சைலம், நைமிசாரண்யம் ஆகிய ஸ்தலங்களில் ஓராண்டு தங்கிய பலனை தனுஷ்கோடி தீர்த்த ஸ்நானம் அளிக்க வல்லது.
சாதாரணமாக ஸமுத்திரத்தில் எல்லா நாட்களும் நீராடுவது இல்லை. குறிப்பிட்ட நாட்கள்(திதி,வார,நக்ஷத்திர நியமங்களை ஒட்டி) மட்டுமே நீராட வேண்டும். ஆனால், சேது, கோகர்ணம், அனந்த சயனம்,புருஷோத்தமம் ஆகிய நான்கு ஸ்தலங்களில் எப்பொழுதும் ஸ்நானம் செய்யலாம். சேதுவில் அர்த்தோதய காலத்திலும்,மஹோதய காலத்திலும் ஸ்நானம் செய்தால் மனித குலம் முழுவதும் நன்மை பெறும்.

சேது ராமேசுவர யாத்திரை : 
முதலாவதாக இராமநாதபுரத்திற்கு வடக்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள உப்பூர் என்ற தலத்திலுள்ள வெய்யில் உகந்த விநாயகரை வழிபட்டு விட்டு யாத்திரையைத் தொடங்க வேண்டும். பிறகு அங்கிருந்து தெற்கில் தேவி பட்டணம் சென்று ராம பிரான் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படும் நவபாஷாணங்களைத் தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் நேராகத் தனுஷ்கோடிக்குச் சென்று சேதுவில் நீராட வேண்டும். அங்கிருந்து இராமேசுவரம் சென்று, எல்லா தீர்த்தங்களிலும் நீராடி விட்டு இராமநாதரையும் பர்வதவர்த்தனியையும் தரிசித்து விட்டு, கங்கையிலிருந்து கொண்டுவந்த நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.பிறகு  இராமநாதபுரம் வழியாக திருப்புல்லாணிக்குச் சென்று வழிபட வேண்டும். மீண்டும் இராமநாதபுரத்திற்கு வந்து ஆதி சேதுபதி எனப்படும் குகனுக்கு இராமர் பட்டம் கட்டியதைக் குறிக்கும்கல்லினை இராமலிங்க விலாச அரண்மனையில் பார்த்து விட்டு , திரும்பும் வழியில் உத்தரகோச மங்கை, தீர்த்தாடனம், வெற்றியூர்,திருவாடானை ஆகிய புண்ணிய தலங்களையும் தரிசிக்கலாம்.

இராமலிங்கப் பிரதிஷ்டை: 

இலங்கை மன்னன் இராவணன் சீதா தேவியைக் கவர்ந்து சென்றதை ஜடாயுவின் மூலமாக அறிந்த இராமபிரான், பிராட்டியை அரக்கன் அசோக வனத்தில் சிறை வைத்திருப்பதை அனுமன் மூலம் அறிந்து, வானர சேனையுடன் இலங்கைக்குச் சென்று இராவணனை வீழ்த்திவிட்டுத் தேவியை மீட்டுவர ஆயத்தமானான். சேதுமூலம் என்ற தர்ப்ப சயனத்தில் (திருப்புல்லாணியில்) தர்பைப் படுக்கையில் படுத்தவாறு தசரத மைந்தன் தங்கியிருந்தான்.

நளன் முதலிய வானரங்கள் கடலில் அணை கட்டினார்கள். அதன் வழியாக இராம லக்ஷ்மணர்கள் வானர சேனையுடன் இலங்கை சென்று இராவணனது சேனையுடன் போரிட்டனர்.இராம பாணத்தால் இராவணன் வதம் செய்யப்பட்டான். ஜனக புத்திரியான ஸீதா பிராட்டி சிறை மீட்கப்பட்டாள். அயோத்திக்குத் திரும்பும் வழியில் ஸீதா தேவியுடன் இராமன் கந்தமாதன பர்வதத்தில் தங்கிய பொது, இராவணனைக் கொன்ற பாவம் தீருவதற்கு சிவ பூஜை செய்ய வேண்டும் என்று முனிவர்கள் இராமனிடம் அறிவுறுத்தினார்கள். அதன்படி, இராமனும் அனுமனைக் கயிலாயமலைக்குச்  சென்று சிவலிங்கம் கொண்டுவருமாறு பணித்தார். கட்டளையை ஏற்று வான்வழியே சென்ற மாருதியானவர் திரும்பிவரக் கால தாமதம் ஆயிற்று. பிரதிஷ்டை செய்ய வேண்டிய சுப வேளை வந்துவிட்டபடியால், ஜானகி தேவி தனது திருக்கரங்களாலே மணலால் ஒரு சிவலிங்கம் பிடித்துத் தர, அதனையே இராம பிரான் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.

தாமதமாகத் திரும்பிய வாயு மைந்தன், கோபத்துடன் அந்த இலிங்கத்தைத் தனது வாலால் இழுக்கும்போது வால் அறுபட்டு இரத்தம் சிந்தியது. அனுமனை சமாதானம் செய்த இராமன், மாருதியால் கொண்டுவரப்பட்ட இலிங்கத்தை, இராமநாதருக்கு வடக்கில் பிரதிஷ்டை செய்து, பூஜித்தார். அம்மூர்த்தியே விசுவநாதர் என்று வழங்கப்படுகிறது. பூஜா காலங்களில் விசுவநாதருக்குப் பூஜை நடந்த பிறகே, இராமநாத சுவாமியின் பூஜை நடைபெறுகிறது. 
               
ஆலய அமைப்பு: 

வடக்குக் கோபுரம் 
இராமேசுவரம் இரயிலடியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலயம். முதலில் தென்படுவது மேற்குக் கோபுரம். ஆலயத்தைச் சுற்றி நாற்புறமும் தேரோடும் வீதிகள் உள்ளன. நாற்புறமும் வாயில்கள் அமைந்துள்ளன. கிழக்கு வாயிலில் சுவாமி சன்னதிக்கும் அதன் வலப்புறம் அம்பாள் சன்னதிக்கும் இரு வாயில்கள் உள்ளன. சுவாமி சன்னதியின் ராஜ கோபுரம் 126 அடியும், மேற்குக் கோபுரம் 78 அடியும் உயரமுடையவை. கிழக்கு வாயில் வழியே நுழைந்தவுடன் நமக்கு வலப்புறம் தென் திசையை நோக்கியவாறு சிவந்த திருமேனியுடன் ஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார். 

கொடிமரத்தருகே சுதையாலான பெரிய நந்தி இருக்கக் காண்கிறோம். அதன் இருபுறமும் மதுரை நாயக்க மன்னர்களான விசுவநாத நாயக்கர், கிருஷ்ணம்ம நாயக்கர் ஆகியோரது வடிவங்களைக் காண்கிறோம். நுழைவாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. நேராகச் சென்று முதல் பிராகாரத்தை அடைகிறோம்.

முதல் பிராகாரத்தின் தென் கிழக்கே உஷா –பிரத்யுஷா ஸமேத சூரிய பகவானையும் ஸஹஸ்ர லிங்க மூர்த்தியையும் ,நால்வர்,அறுபத்து மூன்று நாயன்மார்கள் தரிசனத்துடன் மேற்குப் பிராகாரத்தில் வஜ்ரேசுவரர், மனோன்மணி, சங்கரநாராயணர், முருகன், அர்தநாரீசுவரர், கங்காள மூர்த்தி, சந்திரசேகரர் ஆகியோரையும், வடக்கில் ஏகாதச ருத்ர லிங்கங்கள், விபீஷணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜ்யோதிர்(ஸ்படிக) லிங்கம், நடராஜர்,ஆகிய மூர்த்திகளையும், கிழக்கே வடபுறத்தில் கிருத்திகா-ரோகிணி சமேத சந்திர பகவானையும் தரிசித்துவிட்டு இராமநாத சுவாமி சன்னதியை அடைகிறோம்.

சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியது. அவருக்கு வடபுறம் உள்ளதும் அனுமனால் கொண்டுவரப்பெற்றதுமான  காசி விசுவநாதரது  சன்னதியும் கிழக்கு நோக்கியது. இங்குள்ள முன்மண்டபத்தில் ஸீதா லக்ஷ்மணருடன் இராம பிரான் காக்ஷி அளிக்கிறார். அருகில் ஸுக்ரீவன் சிரம் தாழ்ந்து நிற்கிறான். இரு கைகளாலும் தான் கொண்டுவந்த இலிங்கத்தை ஏந்திய வண்ணம் அனுமன் நின்றுகொண்டு இருப்பதைப் பார்க்கிறோம்.

முதல் ப்ராகாரத்திலுள்ள தெற்கு வாயில் வழியாக அம்பிகையின் சன்னதியை அடையலாம்.பர்வத வர்த்தனி ,மலைவளர் காதலி என்ற நாமங்கள் கொண்ட இத்தேவி கருணை மிக்க திருவுருவம். இந்த பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் கல்யாண சுந்தர மூர்த்தி, சௌபாக்கிய கணபதி , சந்தான கணபதி, சப்த கன்னிகைகள் , பள்ளிகொண்ட பெருமாள் , சண்டிகேசுவரி ஆகியோர் தரிசனம் தருகின்றனர். வடகிழக்கு மூலையில் பள்ளியறை இருக்கக்காண்கிறோம் 

இத்தலத்தின் மீது ஞான சம்பந்தரும் நாவுக்கரசரும் பாடியருளிய திருப்பதிகக்கல்வெட்டு சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது. அம்பிகை சன்னதியின் முன்புறம் உள்ள மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகளும், இருபுறமும் உள்ள தூண்களில் மனோன்மணி, மாஹேந்த்ரி, கௌமாரி,ராஜ ராஜேசுவரி,லக்ஷ்மி,காளி ,சாமுண்டி ,துவாரபாலகி, சிவ துர்க்கை, வாகீச்வரி, சேதுபதி கடம்பத்தேவர், புவனேசுவரி, அன்னபூர்ணா ஆகியோரது வடிவங்களைக் காண்கிறோம்.
அம்பாள் சன்னதி வாயிலின் இருபுறமும் உள்ள தூண்களில் விஜய ரகுநாத சேதுபதி, முத்திருளப்ப பிள்ளை ,வடுகநாத தேவர், பெரிய திருவுடைய தேவர், சேதுபதி காத்தா தேவர், சின்னண்ணத் தேவர், இரகுநாத சேர்வை ஆகியோரது திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை. 

இராமநாத சுவாமிக்குப் பின்புறம் சேதுமாதவப் பெருமாள் சன்னதி உள்ளது.

இக்கோயிலின் மூன்றாம் பிராகார அழகைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகப்புகழ் வாய்ந்த இதனைச் சுற்றி வரும்போது அதன் எழிலைக் கண்டு பிரமிக்கிறோம். மேலை நாட்டவரும் வியந்து போற்றும் பெருமை மிக்கது இப்பிராகாரம்.  முத்து ராமலிங்க சேதுபதி அவர்களால் கட்டப்பெற்ற இப் ப்ராகாரத்தின் நீளம்,அகலம் மற்றும் உயரம் பற்றிய விவரங்களைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள். கடல் மீது பாலங்கள் இல்லாத காலத்தில் கருங்கற்களை எடுத்து வந்து பிரம்மாண்டமான தூண்களோடு கூடிய பிராகாரங்களை அமைத்து அழியாப் புகழ் பெற்ற சேதுபதி மன்னர்களையும், வடிவமைத்துத் தந்த சிற்பிகளையும் நாம் நெஞ்சார வணங்குகிறோம்.
                                                                                          (தொடரும்)
   

Sunday, September 15, 2019

ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் - பீமசங்கரம்

“ டாகின்யாம் பீமசங்கரம் “  என்று ஜ்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரத்தில் குறிப்பிடப்படும் பீமசங்கரம் என்ற ஸ்தலம் , மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயிலிருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சலாயாத்ரி மலைத் தொடரில் டாகினி மலைப் பகுதியில் இது உள்ளது. இங்குதான் பீமா நதி உற்பத்தி ஆகிறது. பின்னர் அந்நதி தென்கிழக்காக ஓடி சமவெளியை அடைந்து சந்திரபாகா எனவும் பெயர் பெற்றது. நிறைவாக அது ராய்ச்சூர் அருகில் கிருஷ்ணா நதியோடு கலக்கிறது. திருபுராதி அசுரர்களை சிவபெருமான் போரிட எழுந்தபோது அவரது திருமேனியின் வியர்வையில் பீமா நதி தோன்றியது என்கிறார்கள்.

தல வரலாறு: கும்பகர்ணனுக்கும் கற்கடி என்ற ராக்ஷசிக்கும் மகனாகப் பிறந்தவன் பீமாசுரன். தனது தாய் வழிப் பாட்டனை சுதீக்ஷனர் என்ற முனிவரும் , தந்தையான கும்பகர்ணனை இராமனும் கொன்று விட்டதாக அறிந்த பீமாசுரன், அரசர்களையும்,முனிவர்களையும், அந்தணர்களையும் அழிக்க வேண்டிக் கடும் தவம் செய்தான். அதன் பலனாக பிரமதேவனிடம் வரம் பெற்று, அரசர்களைத் துன்புறுத்தினான்.

காமரூப நாட்டு அரசனான ப்ரியதர்மனும் அவனது மனைவியான தட்சிணா தேவியும் சிறந்த சிவபக்தர்கள். அவ்விருவரையும் சிறைப்படுத்திய பீமாசுரன், அவ்வரசனது நாட்டை அபகரித்துக் கொண்டான். அரசனும் அரசியும் தாங்கள் செய்து வந்த நித்திய சிவபூஜையை சிறைச்சாலைக்குள் இருந்தபடியே செய்து வந்தனர். சிறைக்காவலன் மூலம் இதனை அறிந்த பீமாசுரன் நேராகச் சிறைக்குச் சென்று சிவபூஜையை நிறுத்திவிடவேண்டும் என்றும் தன்னை அரசனும் அரசியும் வணங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். இருவரும் அதற்கு மறுக்கவே, கோபங்கொண்ட பீமாசுரன் ஒரு வாளை அவர்கள் மீது வீசினான். அப்போது அவர்கள் பூஜித்த இலிங்கத்திலிருந்து இறைவன் வெளிப்பட்டு அசுரனை அழித்துத் தன் பக்தர்களைக் காப்பாறியருளினான் . அதுமுதல் இத்தலத்துப் பெருமானுக்குப் பீம சங்கரன் என்ற பெயர் ஏற்பட்டது. சூர்ய குலத்து அரசர் பீம் என்பவரின் பிரார்த்தனைக்கு இணங்கி சுவாமி இங்கேயே தங்கி விட்டதால் பீம் சங்கரர் என அழைக்கப்படுகிறார் என்றும் கூறுவதுண்டு.

கிராமவாசி ஒருவர் ஒருமரத்தை வெட்ட முற்படுகையில் அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டதைக் கண்டு பதறிப் போனார். அப்போது ஊரார்கள் ஒரு பசுவை அம்மரத்தருகே கொண்டு வந்து நிறுத்தியபோது அப்பசு தானாகவே அங்கு பால் சொரிந்ததைக் கண்டு அவ்விடத்திலேயே கோயில் கட்டத் தீர்மானித்ததாகவும் கூறுவர். 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலை 18 ம் நூற்றாண்டில் நானா பட்னாவிஸ் என்ற பேஷ்வா திருப்பணி செய்தார். சத்ரபதி சிவாஜி இங்கு வந்து தரிசித்து விட்டுக் கோயிலுக்கு நிபந்தங்கள் அளித்ததாகவும் அறிகிறோம். ஞானேஸ்வர் என்ற மகான் த்ரயம்பகேச்வருக்கும் பீம சங்கரத்திற்கும் விஜயம் செய்துள்ளார். சின்மாஜியப்பா என்ற மன்னர் போர்த்துகீசியர்களை வென்று அவர்களிடமிருந்து ஒரு பெரிய மணியைக் கைப்பற்றி வந்து இந்த ஆலயத்திற்குக் காணிக்கையாக அளித்துள்ளார். சுமார் 500 கிலோ எடையுள்ள இம்மணியை இன்றும் நாம் காணலாம்.
கோயில் நாகர பாணியில் அமைந்துள்ளது. சுவாமி கருவறை தாழ்ந்த இடத்தில் உள்ளது. ஜ்யோதிர் லிங்கத்திலிருந்து நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. கோயிலுக்குப் பின்புறத்தில் பெரிய குளம் ஒன்று உள்ளது. நானாபதன் விஷ் என்பவரால் அது நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்

பழைமை வாய்ந்த இக்கோயிலைச் சுற்றிலும் 108 கோயில்களும் பல தீர்த்தங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வ தீர்த்தம், மோக்ஷ தீர்த்தம்,அக்ஷய தீர்த்தம், பீமா உட்க தீர்த்தம், அமிர்த தீர்த்தம், குப்த மகேச்வர தீர்த்தம், சக்தி விநாயக தீர்த்தம் ஆகியவை சில முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.

சிரவண மாதத்திலும், மகா சிவராத்திரியன்றும், கார்த்திகை மாதத்திலும்  ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.ருத்ராபிஷேகம்,பஞ்சாம்ருத அபிஷேகம் ஆகியவை இந்த ஜ்யோதிர்லிங்க மூர்த்திக்குச் செய்யப்படுகிறது.

இத்தலத்தைச் சுற்றி ஹனுமான் ஏரி , பீமா நதியின் உற்பத்தி ஸ்தானம், சாக்ஷி கணபதி கோயில், போகிரி கோட்டை ஆகியன உள்ளன. மேற்குத்  தொடர்ச்சிமலையின் அடர்ந்த வனப்பகுதியான இதனை வனவிலங்குகள் சரணாலயமாக அமைத்துள்ளார்கள். காட்டு அணில் ( Malabar Giant Squirrel)  இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியில் தங்கி அங்குள்ள பறவை இனங்களையும் மிருகங்களையும் காண்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலை ஏற்றம் ( Trekking) செய்பவர்களும் இவ்விடத்தை நாடி வருகின்றனர். இத்தகைய இயற்கை எழில் கொண்ட காட்டுப் பகுதியைக் கடந்தே பீம சங்கரத்தை அடைகிறோம். இயற்கையையும் இறைவனையும் ஒருசேரக் காணும் பாக்கியமும் பெறுகிறோம்.