ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி
விச்வநாதம் – III
சிவபாதசேகரன்
மணிகர்ணிகை கட்டம்-வாரணாசி (நன்றி- வலைதளப் படம்)
காசியின் மகிமையை முருகப்பெருமான் கூறத் தொடங்கினார்: “ சூரிய
சந்திரர்களும், ஒன்பது கோள்களும், எல்லாப் புவனங்களும், அனைத்துத்
தத்துவங்களும்,அயன்-மால் முதலான தேவர்களும், முக்குணங்களும், விந்து நாதமும் பிரளய
காலத்தில் ஒடுங்கும்போது, வாக்கிற்கும்,
மனத்திற்கும் எட்டாத பேரொளியாகி, என்றும் அழிவின்றி வியாபித்து நிற்கும் சிவ
பரம்பொருள் , தனது திருவுள்ளக்
குறிப்பின்படி, நிகரற்ற புனிதத் தலமாகக்
காசி நகரை, எல்லாப் பூதங்களையும்
படைக்கும் முன்னமே , தான் பார்வதி தேவியுடன் நீங்காது உறையும் வண்ணம் தோற்றுவித்து
அருளினான்.
உலகம் யாவும் கடல் கொள்ளப்பட்டு அழியும் போது இந்நகர்
மட்டும் அழியாதிருந்த காரணத்தால் அவிமுக்தம் எனப்பட்டது. தன்னை நாடுபவர்க்குச்
சிவானந்தம் வழங்குதலால் ஆனந்த கானம் என்றும் பெயர் பெற்றது. தன்னிடமிருந்து உலகைக்
காக்கும் பணி செய்வதற்காக ஒரு புருஷனைத் தோற்றுவிக்க வேண்டி, சிவபிரான் தனது
இடப்பாகத்தை நோக்கியவுடன், கமலக் கண்ணனாகிய திருமால் தோன்றினான். வேதத்தின் துணை
கொண்டு அனைத்தையுமோர்ந்து நாராயணன் என்ற திருநாமத்துடன் திகழ்வாயாக என்று
சிவபெருமான் அருளியவுடன், மாலும் அதனைச்
சிரமேற்கொண்டு ஆங்கு ஓர் பொய்கையை ஏற்படுத்தி, சிறந்த தவம் செய்து வந்தான்.
அத்தவத்தால் மகிழ்ந்த ஈசனும் ,உமா தேவியுடன் காட்சி அளித்து , விரும்பும் வரம்
கேட்குமாறு அருளவே, திருமாலும், “ ஐயனே, முன்னர் ஒரு
பாலனுக்காகக் காலனை உதைத்த தேவரீரது திருப்பாதம் ஏன் நெஞ்சில் நீங்காதிருக்க வரம்
தரல் வேண்டும்” என்று விண்ணப்பித்தான். அவ்வாறே ஆகுக என்று பரமேசனும் அருளினான்.
அப்பொழுதுபெருமானின் காதிலிருந்த குழை
ஒன்று நழுவி அப்பொய்கையில் விழுந்தது. அதனால் அவ்வாவி, மணி கர்ணிகை என்று
பெயர் பெற்றது. அதில் ஸ்நானம் செய்பவர்கள் கால பாசத்திற்கு அகப்படாமல் முக்தி
பெறுவர் என்றும், இங்கிருந்து நூறு யோசனைக்கு அப்பால் வசிப்பவர்களும்காசியையும்,
மணி கர்ணிகையையும் நினைத்தபடியே உயிர் நீத்தால் முக்தி பெறுவர் என்று சிவபெருமான் அருளிச்
செய்தார்.உலகியலில் சிக்கியவர்கள் இப்பேற்றை அடையாமல் பதராகவே வாழ்வார்கள்.
முக்திக்கான மார்க்கம் முதல் யுகத்தில் யோகத்தாலும்,
இரண்டாவது யுகத்தில் அருந்தவத்தாலும், மூன்றாவது யுகத்தில் ஞானத்தாலும்,
நான்காவதாகிய இக்கலியுகத்தில் கங்கையில் நீராடுவதாலும் பெறப் படுவதாகும். தாங்கள்
கோரிய பலன்களைத் தேவர்கள் சிவலிங்க பூஜையால் பெறுவதைப்போல் கங்கையும் தன்னை
அடைந்து நீராடுபவர்க்கு எல்லாப் பேறுகளையும் வழங்க வல்லது. கங்கையில் நீராடச்
செல்வேன் என்று எண்ணியவுடன் அவனது பாவங்கள் அனைத்தும் நசித்துப் போகும். உலக
மாயையில் சிக்காதவர்கள் காசியை அடைந்து முக்தி பெறுவதை அது ஒக்கும். கையில்
பொற்கலசத்தை ஏந்தியவாறு அபய வரத கரத்துடன் பேரொளியோடு தோன்றும் கங்கா தேவியை
உளத்தில் நினைந்தபடி அப்புனித நீராடி , மறையோர் மகிழத் தானங்கள் செய்து வெள்ளியால்
ஆன பிரதிமையைக் கங்கை நீரில் விட்டுப் பூஜை செய்பவரது கொடும் பாவங்கள் நீங்கிப்
பேரின்பம் பெறுவர்.
கலிங்க நாட்டு மறையோன் ஒருவன் கொடும்பாவங்கள் செய்து
வந்தான். ஒரு நாள் காட்டு வழியில் அவன் செல்லுகையில் அவனை ஒரு புலி கொன்றது. அவனது
இடக் காலை ஒரு கழுகு கவ்விக் கொண்டு ஆகாயத்தில் பறந்தபோது மற்றோர் கழுகு அக்காலை
அதனிடமிருந்து பறித்தது. அப்பொழுது அதன் வாயிலிருந்து தவறி அக்காலானது
கங்கையாற்றில் விழுந்தது. இறந்த மறையவனை யம தூதர்கள் கொண்டுபோய் இயமனிடம்
சேர்ப்பித்தனர். அம்மறையவன் செய்த பாவங்களைச் சித்திர குப்தர்கள் யமனுக்கு
எடுத்துரைத்தனர். யமனது கட்டளைப்படி அவ்வந்தணனை நரகத்தில் இட்டார்கள். ஆனால் அவனது
இடக்கால் கங்கையில் வீழ்ந்த புண்ணியத்தால் சிவ பூத கணங்கள் அவனைப் பொன்னாலான
விமானத்தில் ஏற்றி நாக லோகத்தில் விட்டனர். அத்தகைய கங்கைக் கரையில் ஒரு பசுவை
அலங்கரித்து உள்ளம் உவப்ப மறையோருக்குத் தானம் செய்தால் அப்பசுவின் உடலில் எத்தனை
ரோமங்கள் உள்ளனவோ அவ்வளவு காலம் கற்பகத் தருவின் நீழலில் வாழ்வார்கள்.
ஒரு சமயம் திருமாலானவர் சிவபிரானிடம் சென்று, கங்கையில்
நீராடச் சக்தி இல்லாதவர்கள் எவ்வாறு அவ்வருளைப் பெறுவது எனக்கேட்க, பரம சிவனானவர்
, கங்கா தேவியின் ஆயிரம் நாமாக்களை அவருக்கு உபதேசித்து, அந்த நாமங்களை வீட்டில்
எழுதிவைத்து வழிபட்டால், வினைகள் யாவும் நீங்கப்பெற்று, பொருட்செல்வமும்,மக்கட்
செல்வமும் பெற்று ஓங்கி வாழ்வார்கள் என்று அருளிச் செய்தார்.
பகீரதன் தவம் செய்து கங்கையை வரவழைத்ததாலும், திருமாலின்
தவத்தால் சிவபிரான் மகிழ்ந்து வரம் தரும் வேளையில் அவரது காதிலிருந்த மணி வீழ்ந்து
மணி கர்ணிகையைத் தோற்றுவித்ததாலும் காசி நகர் சிறப்புடையதாகும். சார்ந்தோர் பாவங்களை அழித்தலால் வரணை என்றும் கங்கை நீராடுபவரது பாவங்களை
நீங்குவதால் அசி என்றும் இந்நகருக்கு நாமங்கள் உண்டாயின. கணபதியால் காக்கப்படும்
இந்நகரை அடைவது இறைவன் அருள் பெற்றோருக்கே
கிட்டும். முன்னாள் பிரமதேவன் காசியை ஒரு தராசுத் தட்டிலும் வைகுண்டம் முதலிய பிற
உலகங்களைப் பிறிதொரு தட்டிலும் வைக்கையில்
காசி நகர் வைக்கப்பெற்ற தட்டு தாழ்ந்தது. எனவே இந்நகர் அறம்,பொருள்,இன்பம் வீடு
ஆகிய நான்கையும் தரவல்லது . சாரூப்பிய பதவியையும் தர வல்லது.
முன்னொருகால் பிரமனும் மாலும் , நான்கு வேதங்களும் சிவபிரானே முன்னோன் எனக்
கூறியதை ஏற்காது, யாமே பிரமம் எனக் கூறிக் கொண்டதால் அவர்களுக்கு முன்பாகச் சோதிப்
பிழம்பெனத் தோன்றினான் கயிலை நாதன். .அப்போது சிவபெருமானது கோபத்திலிருந்து பைரவ
மூர்த்தி தோன்றி, தனக்கும் ஐந்து சிரங்கள்
உண்டு எனச் செருக்குற்ற பிரமனது ஐந்தாவது தலையைக் கொய்தார். அவரது கோபத்தைக் கண்டு
அஞ்சிய பிரமனும் மாலும் அப் பைரவ மூர்த்தியின் தாள் தொழுதனர். அதனால் கோபம்
நீங்கப்பெற்ற பைரவரை நோக்கிச் சிவபெருமான் , நீ பிரமனது சிரத்தைக் கிள்ளியதால்
தோஷம் ஏற்பட்டு விட்டது. ஆகவே, அத்தலை ஓட்டினை ஏந்தி பன்னீராண்டுகள் பிச்சை
ஏற்றுத் திரிவாயாக என்று மொழிந்தருளினார். தருமமே வடிவாகிய இறைவன் இவ்வாறு தரும
வழி நின்று பிரமனை முறைப்படுத்தினான். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வைகுண்டம்
சென்ற பைரவர் விஷ்ணுவுக்கும் திருமகளுக்கும் அருள் செய்து விட்டுக் காசி மாநகரைச்
சென்றடைந்தார். அக்கணமே அவரது கையிலிருந்த பிரம கபாலம் கையைவிட்டு அகன்றது. அதனால்
அவரைப் பீடித்த தோஷமும் நீங்கியது. அக்கபாலம் விழுந்த இடத்தில் ஒரு தீர்த்தம் ஏற்பட்டது.
கந்தமாதனத்தில் இரத்தினபத்திரன் என்பவனுக்கு பூரண பத்திரன்
என்ற மகன் இருந்தான். அவனது மகன் அரிகேசன் என்பவன் சிறந்த சிவ பக்தன். அவனது
சிவபக்தியைக் காசிக் கண்டம் இவ்வாறு புகழ்கிறது:
“ பெண்ணொரு பாகன் புகழல்லால் நாளும் பெட்பொடும் செவிப்
புலன் கேளா; கண்ணுதல் அன்றி நோக்கிடா கண்கள்; கடவுளை அன்றி உளம் கருதாது ; அண்ணல் தன் நாமம் அன்றி நா உரையாது;
அஞ்சிறைத்தும்பி பாட்டயரும் தண் நறும் கமலச் சேவடிக்கன்றி ஆங்கு அவன் தலை
வணங்கிடாதால் “
பித்துப் பிடித்தவனைப் போல இவ்வாறு இருக்கலாகாது என்று
தந்தை கடியவே, அரிகேசன் மனம் வருந்தியவனாக அங்கிருந்து அகன்று, காசியை அடைந்தான்.
அச் சிறுவனது பக்தியைக் கண்டு மகிழ்ந்த உமா மகேசுவரர்கள், அவனுக்குக் காட்சி
அளித்து, வரமனைத்தும் வழங்கி, நிறைவாகக் கயிலை அடையும் பெரும்பேற்றையும் அருளினர்.
காசியில் உள்ள ஞான தீர்த்தம் சிவதீர்த்தம் எனப்படும். இதன்
பெருமையையும் காசிக் கண்டம் விரிவாகக் கூறுகிறது. இதைக் காட்டிலும் விவரமாக
இல்லறத்தோர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம், ஆசாரம், பிரமச்சரியம் ஆகியவை
கூறப்பட்டுள்ளன.
( காசியின் பெருமைகள் தொடரும் )