Wednesday, June 29, 2016

அம்பரும் அம்பர் மாகாளமும்

அம்பர் ஆலயம் 
அம்பர், அம்பர் மாகாளம் ஆகிய இருதலங்களும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் பெற்றவை. இவ்விரண்டும் ஒன்றோடொன்று 1.5 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ளவை. கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்துகள் இவ்வூர்கள் வழியாகச் செல்கின்றன. அம்பர் என்ற தலம் அம்பல்  என்றும் அம்பர் மாகாளம் என்ற தலம் திருமாகாளம் என்றும் மக்கள் வழக்கில் வழங்கப்படுகின்றன. மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையிலுள்ள பூந்தோட்டம் ரயிலடியிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள திருமாகாளத்தையும் அதன்  அருகிலுள்ள அம்பரையும் தரிசிக்கலாம்.

                                                             
                                                                      அம்பர் 

சங்க நூல்களான  புறநானூறு , நற்றிணை மற்றும்  திவாகர நிகண்டு ஆகிய நூல்கள் மூலம்  அம்பரில் அரசர்களும், கொடையாளிகளும் , புலவர்களும், கலைஞர்களும் வாழ்ந்ததாக அறிகிறோம்.

தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு .

என்ற தனிப்பாடலும் அம்பரின் சிறப்பையும் பெருமையையும் விளக்குகிறது.

தலப்பெயர்கள்:மாகாளபுரம் ,மாகாளிபுரம்,புன்னாகவனம், பிரமபுரி, நந்தராஜபுரம், சம்பகாரண்யம், மாரபுரி ஆகிய பெயர்களும் அம்பருக்கு உண்டு என்பதைத் தலபுராண வாயிலாக அறிகிறோம்.

மூர்த்திகள்:அம்பர் பெருங் கோயில் கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில்களுள் ஒன்று. சுவாமிக்குப் பிரமபுரீசுவரர் என்றும் அம்பிகைக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. நந்தன் என்ற அரசன் இங்கு தங்கி வழிபாட்டு வந்த காலத்தில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அப்பஞ்சம் தீரும்வரை தினமும் அரசனுக்கு ஒருபடிக்காசை விநாயகப் பெருமான் வழங்கியதால்,  அவருக்குப் படிக்காசு விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள பிற ஆலயங்களில் சட்டைநாதர், புவனேசுவரர் பைரவர் ,கயிலாசநாதர், திருமால்,காளி ஆகிய மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

தீர்த்தங்கள்: அரிசிலாறு, அன்னமாம் பொய்கை, இந்திர தீர்த்தம், சூல  தீர்த்தம் ஆகியவை .

ஸ்தல விருக்ஷங்கள்: புன்னை,மருது ஆகியவை.

கோயில் அமைப்பு:
அரிசிலாற்றின் வட கரையில் கிழக்கு நோக்கியபடி இந்த ஆலயம் அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜ கோபுரத்தின் அருகில் இந்திர தீர்த்தம் உள்ளது. ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கட்டு மலையின் மீது சுவாமி சன்னதியும் கீழே அம்பாள் சன்னதியோடு கூடிய வெளிப் பிராகாரத்தையும் காண்கிறோம். சுதை வடிவிலான மிகப்பெரிய நந்தி சுவாமி சன்னதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.
தென்கிழக்கு மூலையில் தல விருக்ஷமான புன்னை மரமும் அதனருகே ஆதி பிரமபுரீசுவரரும், கிணறு வடிவிலுள்ள அன்னமாம் பொய்கையும் ,சோமாசி மாற நாயனார் சன்னதியும் இருப்பதைத் தரிசிக்கிறோம்.

கன்னிமூலையில் விநாயகர் , முருகன்,மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோஷ்டங்களில் பிரமனும் துர்க்கையும் காணப்படுகின்றனர்.சண்டிகேசுவரர் சன்னதியும், பைரவர்,சூரியன் ஆகிய சன்னதிகளும் கிழக்கு பிராகாரத்தில் அம்பாள் சன்னதியும் உள்ளன.

 மாடக்கோயிலின் படிகளை ஏறினால் சோமாஸ்கந்தர் சன்னதியும், மூலவரான பிரமபுரீசுவரர் சன்னதியும் அழகிய விமானங்களோடு அமைந்துள்ளதைக் காண்கிறோம். மலைக் கோயிலின் பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். சுவாமி சன்னதி வாயில் சுவற்றில் சம்பந்தர்  பாடியருளிய பதிகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமி சன்னதியின் மகாமண்டபத்தில் நடராஜ சபை, கணபதி, துவாரபாலகர் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். மூலஸ்தானத்தில் பிரமபுரீசுவரர் அழகிய சிவலிங்கத் திருமேனியோடு காட்சி தருகிறார். பெருமானுக்குப் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிக்கிறோம். மாடக்கோயிலின் கீழ் மண்டபத்தில் சம்பந்தர்,அப்பர்,கோச்செங்கட்சோழர் ஆகிய மூர்த்தங்களைக் காண்கிறோம்.

கட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து சுகந்த குந்தலாம்பிகையின் சன்னதியை அடைந்து அருள் பெறுகிறோம்.  

தல புராணச் செய்திகள்: இத்தலத்திற்கு வடமொழியில் இருந்த புராணம் கிடைக்காமல் இருந்தபோது அவ்வூர் அறிஞர்களும் செல்வந்தர்களும் அதை எப்படியாவது பெற்று தக்க ஒருவரால் தமிழில் செய்யுள் வடிவில் இயற்றுவிக்க வேண்டும் என்று கருதினார்கள். அவர்களுள்  வேலாயுதம் பிள்ளை என்ற செல்வந்தர் , திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் செல்லும்போது அங்கு ஆதீன வித்துவானாக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களது தமிழ்ப்புலமையைக் கேள்வியுற்று, அவர் மூலம் அம்பர்ப் புராணம் இயற்றுவிக்க எண்ணினார்.  நெடுநாட்கள் முயன்றபின் அவ்வடமொழிப் புராணப் பிரதி தஞ்சை சரஸ்வதி மகாலில் கிடைக்கப்பெற்று, அதனைத் தமிழாக்கம் செய்து அதனைக் கொண்டு பிள்ளையவர்களைப் புராணம் இயற்றுமாறு வேண்டவே, அவரும் அவ்வன்புக்கு இணங்கி 1869 ம் ஆண்டு அதனை இயற்றத் தொடங்கினார். வண்டியில் பயணம் செய்த போதும் பிள்ளை அவர்களின் வாயிலிருந்து செய்யுட்கள் மடை திறந்த வெல்லம் போல வெளி வந்தன. அவற்றை உடனிருந்து எழுதிய பிள்ளையவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்களது வாக்காலேயே அந்த அனுபவத்தைக் காண்போம்:

" இவர் விரைவாகச் செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர் என்று பலரும் புகழ்ந்து சொல்லுதலைக் கேட்டு அந்த நிலைமை எப்பொழுதாவது பார்க்கும்படி நேருமோ என்று ஆவலோடு பல நாளாக எதிர்பார்த்திருந்த எனக்கு இவர் பாடல்களைச் சொல்ல அவற்றை எழுதும் பாக்கியம் அன்று கிடைத்ததைக் குறித்து மெத்த சந்தோஷம் அடைந்தேன். இனி யாரேனும் இவர்களைப் போலப் பாடப் போகிறார்களா? என்ற எண்ணமும் எனக்கு அப்போது உண்டாயிற்று... ஒரு மகா கவியின் வாக்கிலிருந்து கவிதாப் பிரவாகம் பெருகிக் கொண்டிருப்ப அதனைக் காதினால் கேட்டும், கையினால் எழுதியும், மனத்தினால் அறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதுதற்கு அரியது."   இப்புராணம் பதினைந்து   படலங்களையும் 1007   செய்யுட்களையும் கொண்டது.

சிவ புராணங்களைக் கேட்பதில் பெரிதும் விருப்பம் கொண்ட நைமிசாரண்ய முனிவர்கள் , எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், கைகளைச்  சிரத்தின் மீது கூப்பி, ஆனந்தக் கண்ணீர் பெருகியவராக பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறலானார்.

இத்தலத்தின் பெருமையை சிவபெருமான் மட்டுமே கூற வல்லவர். வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து  நீங்கப்பெறுவர்.

பிரமன் அருள் பெற்றது:    ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டபின்னர் அப்போர் முடிவுபெறா ததால், நான்கு வேதங்களையும், காயத்ரி மந்திரத்தையும், பிரணவ மந்திரத்தையும் நேரில் வரவழைத்து முடிவு கூறுமாறு கேட்டனர். அத்தேவதைகள் ஒருமித்தவர்களாகப் பரமசிவனே பிரமம் என்று திடமாகக் கூறியும், பிரமனும் மாலும் அதனைக் கேளாது மீண்டும் போர் புரியத் துவங்கினர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினான். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக   நிலத்தை அகழ்ந்து   பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, " நீயே பரம்" எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றான். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டுத் தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தான். அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்பூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தான்.

பிழையை உணர்ந்த பிரமன்,அன்னவடிவம் நீங்குவதற்காகக் காவிரியின் தேகரையிலுள்ள புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டான். அத்தவத்தால் ஏற்பட்ட புகையும் அனலும் யாவரையும் வாட்டியது. திருமாலின் வேண்டுகோளுக்கு இரங்கிய கயிலாயநாதன், பிரமனுக்குக் காட்சி அளித்து, அவன் வேண்டியபடியே, அண்ணா உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறும், கயிலையின் ஒரு கூரான இக்கிரி , பிரம கிரி எனப் பெயர்பெருமாறும் , அங்கு காட்சி அளிக்கும் இறைவன் பிரமபுரீசுவரர் என வழங்கப்படுமாறும், தவம் செய்த பொய்கை, " அன்னமாம் பொய்கை" எனப்படுமாறும், அருள் பெற்ற மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை  அளித்தருளினான்.

காளி வழிபட்டது:   துர்வாச முனிவருக்கும் மதலோலா என்ற தேவ கன்னிகைக்கும் பிறந்த அம்பன்,அம்பரன் என்ற அசுரர்கள் புன்னாக வனத்தை  அடைந்து தவம் செய்து யாவரையும் வெல்லும் ஆற்றலை வரமாகப் பெற்றனர். ஊரின் பெயரும் அம்பர் என்றாயிற்று. யாவரையும் அடிமையாகக் கொண்டு அகந்தையுடன் திரிந்த இருவரையும் கண்டு தேவர்களும் அஞ்சினர். அனைவரையும் காத்தருளுமாறு திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது பெருமான் தனது இடப்பாகத்திளிருந்த அம்பிகையை நோக்கிச் சிறிது முறுவல் செய்யவே, குறிப்புணர்ந்த தேவியானவள் காளியை அங்கு வருமாறு பணித்தாள். அக்கணமே அங்கு தோன்றி, அடிபணிந்த காளியை நோக்கி அவ்விரு அசுரர்களையும் அழித்து வருமாறு கட்டளை இட்டாள். அழகிய கன்னிகை வடிவத்துடன் காளியும், வயோதிக மறையோனாகத் திருமாலும் அங்கிருந்து புறப்பட்டு, அசுரைகளது அரண்மனையை அடைந்தனர்.

கன்னிகையின் அழகில் மயங்கிய இருவரும் தாம் அவளை மணக்க இருப்பதாகக் கூறியதும் முதியவராக வந்த திருமால், உங்களிருவரில் யார் வலிமையானவரோ அவரை என் பெண் மணப்பாள் என்றார். உடனே இரு சகோதரர்களுக்குமிடையில் ஏற்பட்ட போரில் அம்பன் கொல்லப்பட்டான். இனித் தானே அக்கன்னிகையை மணப்பெண் எனக் கருதி,அவளிடம் சென்ரான்  அம்பரன். அப்போது அக்கன்னி ,அனைவரும் அஞ்சும் வண்ணம் பேருருவம் கொண்டு, அவனது மார்பில் உதைத்தாள். காளியானவள் அவனது குடலை மாலையாகப் பூண்டு அனைவரது துயரத்தையும் அகற்றி அருளினாள். விண்ணோரும் மண்ணோரும் அவளைத் துதித்தனர். அவ்வாறு அம்பரனை மாய்த்த இடம் அம்பகரத்தூர் எனப் பட்டது. அசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதர்காகக் காளி, அம்பர் மாகாளத்தில் சிவபெருமானைப் பூசித்து அருள் பெற்றாள்.

சம்கார சீலனை அழித்தது:புலத்திய முனிவர் வம்சத்தில் தோன்றிய சம்கார சீலன் என்பவன் பிரமனைக்  குறித்துத் தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், " நீ புன்னாக வன ஈசனை நோக்கித் தவம் செய்தால் அப்பெருமான் பைரவ மூர்த்தியைக் கொண்டு அந்த அசுரனை அழித்தருளுவார்" எனக் கூறினார்.அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை மாய்வித்தருளினார்.

விமலன் அருள் பெற்றது: காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன்  மனைவியோடும் பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை  வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தான். இறைவன் அவன் முன்னர் காட்சி அளித்து அவன் வேண்டிய வரங்களைத் தந்து,அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தான். மாதேவன் என்ற என்ற மகனைப் பெற்றுப் பின்னர் இறைவனடி சேர்ந்தான். மாதேவனும் தந்தையைப் போலவே அத்தலத்து ஈசனுக்குப் பணிகள் பல செய்து நிறைவாகச் சிவலோக பதவி பெற்றான்.

மன்மதன் வழிபட்டது:  தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனைப் பன்னாள் வழிபாட்டு சாபம் நீங்கப்பெற்றான்.

நந்தன் பிரமஹத்தி நீங்கியது: காம்போஜ தேச அரசனான நந்தன் என்பவன் ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பி எய்தான். அவ்வம்பினால் முனிவன் அக்கணமே மாண்டான். அரசனைப் பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தான். அப்படியும் அது அவனை நீங்கவில்லை. அம்பர் எல்லைக்கு வந்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது. அங்கிருந்த முனிவர்கள் சொற்படி பிரப்ரீசுவரர் கோயிலுக்குச் சென்று பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். அத்தலத்திலேயே தங்கி, கோயிலைத் திருப்பணி செய்வித்தான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை  வந்தடைந்து பணிகள் பல செய்தான். கயிலாயநாதர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றையும் ஸ்தாபித்து ஆலயம் அமைத்தான்.

அப்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு எல்லா உயிர்களும் வருத்தமுறவே, தன்  கையிலுள்ள எல்லாப் பொருள்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருள்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, உயிர்கள் வருந்துவதைக் கண்ட பின்னரும் தான் வாழ்வதை விரும்பவில்லை என்றும் பெருமானே வழி காட்ட வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினான். சின்னாட்களில் பஞ்சம் தீர்ந்து உயிர்கள் மகிழ்ச்சியுற்றன. திருவருளைக் கண்டு வியந்த மன்னனும் பெருமானது மலரடிகளை வழுவாது வழிபட்டுப்  பேரின்பமுற்றான்.

சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார்.
தரிசித்தோர்: கோச்செங்கட்சோழ நாயனார்  மாடக்கோயிலாகத் திருப்பணி செய்து இறைவனை வழிபட்டார். திருஞான சம்பந்தர் இத்தலத்துப் பெருமான் மீது தேவாரப் பதிகம் பாடி அருளியுள்ளார். அப்பர் தேவாரத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்கள்: இராஜராஜரின் கல்வெட்டு ஒரு வணிகன் இக்கோயிலுக்கு இரண்டு விளக்குகள் கொடுத்ததையும் நிபந்தமாக நிலங்களை அளித்ததையும் கல்வெட்டால் அறிகிறோம்.
               
                                                       அம்பர் மாகாளம் 

அம்பருக்கு அண்மையில் உள்ள இத்தலம் தற்போது திரு மாகாளம் எனப்படுகிறது. ஞான சம்பந்தரின் பதிகங்கள் மூன்றைப் பெற்ற தலம்.

கோயில் அமைப்பு: அரசலாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கியபடி ஆலயம் அமைந்துள்ளது. ஐந்து நிலைக் கோபுரம் வாயிலில் உள்ளது கோயிலுக்கு வெளியில் மாகாள தீர்த்தம் அமைந்துள்ளது. இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. சுவாமி பிராகாரத்திற்கு வெளியில் தனிக் கோயிலாக கிழக்கு நோக்கி அம்பிகையின் சன்னதி உள்ளது. இரண்டாவது கோபுர வாயிலைக் கடந்து சுவாமி சன்னதியை அடைகிறோம். மகாமண்டபம்,ஸ்நபன மண்டபம்,அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட மகாகாளேசுவரரின் சன்னதி அழகு வாய்ந்தது.
முதல் பிராகாரத்தில் அறுபத்துமூவர், விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி , உதங்கர்-மதங்கர் முனிவர்கள், வில்லேந்திய வேலவர், மகாலக்ஷ்மி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆகியோரது சன்னதிகளைத் தரிசிக்கிறோம்.

மூர்த்திகள்: இறைவன் மகாகாள நாதர் எனவும் அம்பிகை பயக்ஷயாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். மேலும்,தியாகேசர், அச்சம் தீர்த்த விநாயகர், காக்ஷி கொடுத்தவர்,காளி,நாக கன்னிகை ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கிறோம்

வழிபட்டோர்: அம்பன்-அம்பாசுரனைக் கொன்ற பழி தீரக் காளியும், உமாதேவியை மகளாகப் பெற மதங்க முனிவரும், நாக கன்னிகையும் இறைவனை வழிபட்டுள்ளனர்.    

கல்வெட்டு: முதல் குலோத்துங்கன்,விக்கிரம சோழன், ஆகியோர் காலத்தில் கோயிலுக்குச் செய்த தானங்களைக் கல்வெட்டுக்களால் அறியலாம்.

திருவிழாக்கள்:
வைகாசி ஆயில்யத்தன்று நடைபெறும் சோமாசிமாற நாயனார் குருபூஜையன்று அம்பருக்கும் அம்பர் மாகாளத்திற்கும் இடையில் யாகம் நடத்தப்பெறுகிறது .  திருமாகாளம் கோயிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமாசி மாறருக்கும் சுந்தரருக்கும் காக்ஷி கொடுத்தருளுகின்றனர்.