ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி
விச்வநாதம் – XI
சிவபாதசேகரன்
காசி மாநகரத்தில் உள்ள நவ துர்க்கா ஆலயங்கள் :
சைலபுத்ரி கோயில்: சைலேச்வரரின் அருகிலுள்ள சைலேச்வரி பற்றி காசிக் காண்டம் குறிப்பிடுகிறது. இக் கோயில், மர்ஹியா காட் என்ற இடத்தில் உள்ளது. நவராத்திரியின்போது முதல் நாளன்று இத்தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
பிரமசாரிணி கோயில்: பைரோநாத் சென்று அருகிலுள்ள ப்ரஹ்மேச்வரர்
கோயிலை அடைந்தால் துர்கா காட் என்ற இடத்தில் இத்தேவியைத் தரிசிக்கலாம். நவராத்திரி
இரண்டாவது தின சிறப்பு வழிபாடு இங்கு
நடைபெறுகிறது.
சித்ர கண்டா தேவி கோயில்: சௌக் பகுதியிலிருந்து
நடந்து சென்றால் சித்ரா கண்டா கல்லி என்ற இடத்தில் சித்ரகுப்தேச்வரரைத்
தரிசித்துவிட்டு இந்தத் தேவியைத் தரிசிக்கலாம். நவராத்திரி மூன்றாம் தினத்தில்
விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
கூஷ்மாண்ட துர்க்கா ஆலயம்: தேவர்களையும்
முனிவர்களையும் மிகவும் துன்புறுத்திய துர்காசுரன் என்பவனை அழிப்பதற்காக
சிவபெருமான் பார்வதிதேவியிடம் கூறவே, தேவியானவள் காலாராத்ரியை அனுப்பி அசுரனின்
படைவீரர்களை அழித்தாள். கோபமுற்ற அசுரன் நேரிடையாகவே தேவியிடம் போரிட்டான்.
கடுமையான இப்போரில் அசுரனையும் அவனது படையையும் அம்பிகை அழித்தாள். பின்னர்
தேவர்களால் வஜ்ர பஞ்சகத் துதி செய்யப்பட்ட பின் சாந்தமாயினாள். நவராத்திரி
நான்காவது நாளன்று துர்க்கா குண்ட்
பகுதியிலுள்ள இக்கோயிலில் பக்தர்கள் மிகுதியாக வழிபடுகின்றனர்.
ஸ்கந்த மாதா கோயில்: நவராத்திரியின்போது
ஐந்தாவது தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறும் இக்கோயில், ஜைத்புரா என்ற
இடத்தில் உள்ளது. இதன் அருகில் ஜ்வரஹரேச்வரர், கார்க்கோட கேச்வரர், கார்க்கோடக நாகேச்வரர்,விகடத்வஜ
விநாயகர் ஆகிய கோயில்கள் உள்ளன. துர்காசுரனை வென்ற துர்க்கா தேவி, காசியைக் காக்க
வேண்டி ,அச்வாரூடா, வாகீச்வரி ஆகிய சக்திகளாகத் தோன்றினாள். அத்தேவியரையும்
ஸ்கந்தமாதா கோயிலில் தரிசிக்கலாம்.
காத்யாயனி கோயில் :அமிர்தஜித் என்ற மன்னனுக்கும்
மலயகந்தினி க்கும் குழந்தை பிறந்த போது கிரக நிலைகள் மோசமாக இருந்ததால் பதினாறாவது வயதில் அரசனுக்கு ஆபத்து விளையும்
என்று அறிந்த அரசி, பஞ்ச முத்ரா மஹா பீடத்திலுள்ள விகட தேவியாகிய காத்யாயனி யிடம்
சரணடைந்தாள். தேவியின் கருணையால் அரசியின் மனக் கவலை நீங்கியது. சிந்தியா காட்டில்
ஆத்மவீரேச்வரர் கோயிலில் இத்தேவி காட்சி அளிக்கிறாள்,
காலராத்ரி கோயில் : காசியைக் காப்பதற்காகத்
துர்கா தேவியால் அனுப்பப்பட்ட சக்திகளுள் ஒருவளே காலாராத்ரியாவாள். விச்வநாதர்
கோயிலிலிருந்து சாக்ஷி கணபதி கோயிலைத் தாண்டினால் சுக்ரேச்வரர் கோயில் அருகில்
காலிகா கல்லி என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
அன்னபூரணி (பவானி) கோயில்:
விச்வநாத் கல்லி அருகில் உள்ளது. மஹா கௌரி என்று நவராத்திரியில் எட்டாவது
நாளன்று இந்தத் தேவியை வழிபடுகிறார்கள். இவளது மகிமையைக் காசிக்காண்டத்தில்
விரிவாகக் காணலாம்.நவதுர்கா யாத்திரையில் இக்கோயில் இடம்பெறும்.
ஸித்தேச்வரி
(ஸித்தி தாத்ரி துர்கா)ஆலயம் : நவராத்திரியின்போது ஒன்பதாவது தினத்தன்று
சிறப்பாக வழிபடப் படும் ஆலயம் இது. இதனை ஸித்த பீடம் என்றும் கூறுவர்.அருகே,
சந்த்ர கூபமும், சந்த்ரேச்வரரும் இருப்பதைத் தரிசிக்கலாம்
கால பைரவர் கோயிலருகில் ஸித்தமாதா கல்லியில் உள்ள கோயிலும்
தேவியின் முக்கிய ஆலயமாகக் கருதப்படுகிறது..
நவ கௌரி கோயில்கள் :
முக நிர்மாலிகா கௌரி
கோயில்: சித்ரா நவராத்ரியின் முதல் நாளன்று இக்கோயிலில் சிறப்பு
வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுக்ல பக்ஷ திருதியை அன்று மேற்கொள்ளப்படும் கௌரி
யாத்திரையைப் பற்றிக் காசிக்காண் டத்தில் காணலாம். அந்த யாத்திரையில் இக்கோயிலும்
ஒன்று. காய் கட்டில் உள்ள ஹனுமான்ஜி கோயில் என்ற இடத்திலுள்ள இக்கோயிலை மச்சோத்ரி
வழியாக அடையலாம் .
ஜ்யேஷ்ட கௌரி கோயில்: ஜ்யேஷ்ட மாத சுக்ல
அஷ்டமி தின வழிபாடு இங்கு சிறப்புடையது. வசந்த நவராத்திரியில் இரண்டாம் நாள் இங்கு
விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. மைதாகின் என்ற இடத்திற்கு அருகிலுள்ள சப்த ஸாகர்
மொஹல்லா என்ற பகுதியில் காசி தேவி கோயிலருகே உள்ளது.
சௌபாக்ய கௌரி கோயில்: கௌரி யாத்திரையில் இடம்
பெறும். பண்ஷ் படக் என்ற இடத்திலிருந்து சௌக் நோக்கிச் சென்றால் ஆதி விச்வநாதர்
கோயிலில் சௌபாக்கிய கெளரியைத் தரிசிக்கலாம். இந்தத் தேவி அனைத்து சௌபாக்கியமும்
அருள வல்லவள்.
ஸ்ருங்கார கௌரி கோயில்: சைத்ர நவராத்ரியில் மூன்றாவது நாள் இத்தேவியைத்
தரிசிக்கலாம்.ஞான வாபிக்குப் பின் இக்கோயில் உள்ளது. ஆண்டுக்கு இரு நாட்களே இங்கு
வழிபட முடியும் என்ற நிலை உள்ளது.
விசாலாக்ஷி கௌரி கோயில்: காசி விசாலாக்ஷி என்று
பிரபலமாக வழங்கப்படும் இத்தேவியை, விசால தீர்த்தமாடி வழிபடுவர்.மிர் காட் என்ற
இடத்தில் உள்ள இக்கோயில் ஒரு சக்தி
பீடமாகக் கருதப்படுகிறது.
லலிதா கௌரி ஆலயம்: தசாஸ்வமேத் காட்
அருகில் உள்ள இக்கோயில் லலிதா காட் என்ற
இடத்தில் இருக்கிறது.அருகில் நேபாளி பசுபதிநாத் மந்திர் உள்ளது.
பவானி கௌரி ஆலயம்: அன்ன பூரணி கோயிலருகே
உள்ளது. கௌரி யாத்திரையில் இடம் பெறும் ஆலயம்.
மங்கள கௌரி கோயில் : சூரியனால் வழிபடப்பட்ட
அம்பிகைக்கு இங்கு மங்கள கௌரி என்று பெயர். பைரோநாத் அருகிலுள்ள பஞ்ச கங்கா காட்
என்னுமிடத்தில் உள்ளது. நவராத்திரி எட்டாவது தினத்தில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மகாலக்ஷ்மி கௌரி ஆலயம்: மகாலக்ஷ்மி சக்தி பீடம்
எனப்படும் இந்த இடம் லக்ஷ்மி குண்டம் என்ற பிரபலமான இடத்தில் உள்ளது. சிகி சண்டி,
மயூரி தேவி, உக்ரேச்வரர் சந்நதிகளையும் தரிசிக்கலாம்.
பிற தேவி ஆலயங்கள்:
பண்டி தேவி கோயில் : தசாஸ்வமேத் காட் அருகே
உள்ளது.
சாமுண்டா தேவி கோயில்: லோலார்க் என்ற
இடத்திற்கு வடக்கே காசியைப் பாதுகாக்கும் தேவதையாக இருக்கும் தேவி இவள்.
சண்டி தேவி கோயில்: சப்த மாத்ரிகா தேவிகளுள் சண்டிகா தேவியை
ஒன்றாகக் குறிப்பிடுவர்.சதக் பஜார் என்ற பகுதியில் உள்ளது இக் கோயில்.
சர்ம முண்டா தேவி கோயில்: பெரிய திருவுருவம். தீய
சக்திகளை அழிக்கும் இத்தேவி பதைனி என்ற கோயில் கொண்டு. நவ துர்க்கா கோயில் என்றும்
இதை அழைக்கிறார்கள்.
ஹய கண்டி தேவி கோயில்: லக்ஸா வழியாக லக்ஷ்மி
குண்டம் என்ற இடத்திற்குச் சென்று, கையில் வாளேந்திய நிலையில் தரிசனம் தரும்
இத்தேவியின் கோயிலைக் காணலாம்.
காமாக்யா தேவி கோயில் : பேலுபுராவிலிருந்து
ரத்யாத்ரா செல்லும் வழியில் காமச்சா என்ற இடத்தில் படுக் பைரவர் கோயில் அருகில்
இந்த ஆலயம் உள்ளது. பராசக்தியானவள் துர்காசுரனுடன் போரிடுகையில் உண்டாக்கிய
சக்தியே காமாக்யா ஆவாள். காமாக்ஷி தேவி எனவும் அன்பர்கள் வழங்குவார்கள்.
மணி கர்ணிகா தேவி கோயில்: சௌக் கிலிருந்து
ஆத்மவீரேச்வரர் கோயில் வழியாகச் சென்று சிந்தியா காட்டில் உள்ள இக் கோயிலை அடையலாம்.
ஸங்கட தேவி கோயில்: சௌக் கிலிருந்து சங்கட தேவி கோயிலுக்கு நடந்தே செல்லலாம்.
நவராத்திரியில் எட்டாம் நாள் வழிபாடு இங்கு சிறப்புற நடைபெறுகிறது.
ஸித்த லக்ஷ்மி கோயில்: மணிகர்ணிகா காட்டில்
பிதா மகேச்வரருக்கு அருகே ஸித்த லக்ஷ்மி தரிசனம் தருகிறாள்.
த்ரைலோக்ய ஸுந்தரி கோயில்: துர்காசுரனுடன் யுத்தம்
செய்கையில் தேவியிடம் தோன்றிய சக்திகளுள் ஒருவளே த்ரைலோக்ய ஸுந்தரி ஆவாள்.சௌக்
பகுதியில் மேற்படி பிதாமகேச்வரருக்கு
அருகில் உள்ளது..
திரிபுரா பைரவி கோயில்: தேவியிடமிருந்து
வெளிப்பட்ட மற்றும் ஒரு சக்தியே திரிபுரா பைரவி ஆவாள். மிர்காட் என்ற இடத்தில்
த்ரிபுரேச்வர், ருத்ரேச்வரருக்கு அருகில் இக்கோயில் இருக்கிறது.
வாராஹி தேவி கோயில் : காசிக்கு வந்த யோகினிகளுள்
ஒருவர் வாராஹி தசாச்வமேத கல்லி வழியாகச் சென்றால் மன்மந்திர் காட் என்ற
இடத்தில் உள்ளது இக் கோயில்.
விந்த்யா தேவி கோயில் :ஸங்கட தேவி கோயிலுக்கு வெளியில் உள்ளது . சௌக்கிலிருந்து
நடந்து செல்லலாம்.
விச்வபுஜ கௌரி கோயில்: விசாலாக்ஷி கோயிலுக்கு
அருகில் உள்ள ஆலயம். தரம் கூபம் என்ற இடத்தில் இருக்கிறது.
விஷ்ணு ஆலயங்கள்:
பிந்து மாதவர் கோயில் : காசியில் ஆதி யுகத்தில்
ஆதிமாதவரகவும், த்ரேதா யுகத்தில் ஆனந்த மாதவராகவும்,த்வாபர யுகத்தில் ஸ்ரீ மாதவர்
எனவும்,கலியுகத்தில் பிந்து மாதவராகவும் மஹா விஷ்ணு எழுந்தருளுகிறார். பிந்து
முனிவரின் தவத்திற்கு இரங்கிக் காட்சி கொடுத்ததால் பிந்து மாதவர் எனப்படுகிறார்.
காசி ஒரு புண்ணிய பூமியாதலால் அதனை விட்டு நீங்க மாட்டேன் என்றும் காசி அழிவற்ற
நகரம் என்றும் அம்முனிவரிடம் கூறியருளினார் . பஞ்ச கங்கா கட்டில் இக் கோயில்
உள்ளது.
ஆதி கேசவர் கோயில்: ராஜ்காட் போர்ட் என்ற இடத்தில் இந்தக் கோயில்
இருக்கிறது.
ஆதித்ய கேசவர் கோயில்: இதுவும் ராஜ்காட் போர்ட்
என்ற இடத்தில் உள்ளது.
பீஷ்ம கேசவர் கோயில்: வ்ருத்த காலேச்வரர்
அருகே ம்ருத்யுஞ்சய மகாதேவ் கோயிலுக்குள் பீஷ்ம கேசவரைத் தரிசிக்கலாம்.
ப்ருகு கேசவர் சன்னதி : ப்ரஹ்லாத்
காட்டிலிருந்து நடந்து சென்று கோலா காட் படிகளில் வீற்றிருக்கும் ப்ருகு கேசவரைத்
தரிசனம் செய்யலாம்.
கங்கா கேசவர் கோயில்: தசாஸ்வமேத காட் வழியாக
லலிதா காட் என்ற இடத்திலுள்ள நேபாள பசுபதிநாத் கோயிலுக்குக் கீழ் கங்கா கேசவர்
சன்னதி உள்ளது.
கோபி கோவிந்த கேசவர் கோயில்: மச்சோதரி சென்று நடந்து
செல்லும் தூரத்திலுள்ள லால் காட் என்ற இடத்தில் உள்ள இக்கோயிலை அடை யலாம்.
ஞான கேசவர் கோயில்: ராஜ் காட் கோட்டையில்
கங்கைக்கரையில் உள்ளது இந்தக் கோயில்.
ஹயக்ரீவ கேசவர் கோயில்: பதைனி பகுதியில்
ஆனந்தமயி ஹாஸ்பிடல் அருகில் கோயில் அமைந்துள்ளது.
ப்ரஹலாத கேசவர் கோயில்: ப்ரஹலாத் காட்டில் ப்ரஹலாதேச்வரர் கோயிலில் உள்ள சன்னதி
இது.
த்ரிபுவன கேசவர் கோயில்: தசாஸ்வமேத காட்டில் பண்டி
தேவி என்ற இடத்தில் இந்தக் கோயில் உள்ளது.
வாமன கேசவர் கோயில்: த்ரிலோசனில் பிர்லா
ஹாஸ்பிடல் அருகில் உள்ளது. இங்கு அக்ஷய திருதியை வழிபாடு சிறப்புடையது.
நாரத கேசவர் கோயில்: ப்ரஹலாத் காட்டில்
ப்ரஹலாதேச்வரர் கோயிலில் உள்ளது.
ஞான மாதவர் கோயில்: விச்வநாத சுவாமி
ஆலயத்திற்குள் அக்ஷய வடத்தின் அருகே ஞான மாதவரைத் தரிசிக்கலாம்.
ப்ரயாக் மாதவர் கோயில் : தசாஸ்வமேத காட்டில் ராம்
மந்திர் வளாகத்தில் உள்ளது.
வைகுண்ட மாதவர் கோயில்: சிந்தியா காட்டில் ஹரி
சந்த்ரேச்வரர் மற்றும் வைரோசநேச்வரருக்கு அருகில் உள்ளது.
ஸ்வேத மாதவர் கோயில்: மிர் காட்டில் உள்ள பெரிய ஹனுமான் கோயிலில்
உள்ளது இந்த சன்னதி.
வீர மாதவர் கோயில்: சங்கட தேவி கோயில் வழியே
சென்று வீரே ச்வரருக்கு அருகில் வீர
மாதவரை சேவிக்கலாம்.
அத்யுக்ர நரசிம்ஹர் கோயில்: சௌக் கிலிருந்து கோமத்
சென்றால் கமலேச்வரருக்கு வடபுறம் நரசிம்ஹரை வழிபடலாம்.
கோலாஹல நரசிம்ஹர் கோயில்: மேற்கூறிய அத்யுக்ர நரசிம்ஹருக்கு அருகே கோலாஹல
நரசிம்ஹரைக் காணலாம் .
லக்ஷ்மி நரசிம்ஹர் கோயில்: ராஜ் மந்திர் காட்டுக்கு
அருகில் ஹனுமான் கோயிலுக்கு உள்ளே இந்த சன்னதி இருக்கிறது.
மகாபல நரசிம்ஹர் கோயில்: த்ரிலோசன் அருகில்
காமேச்வரர் கோயில் வளாகத்தில் உள்ளது.
ப்ரசண்ட நரசிம்ஹர் கோயில்: அஸி காட்டில் ஜகன்நாத்
கோயில் என்னுமிடத்தில் உள்ளது.
விதர நரசிம்ஹர் கோயில்
: ப்ரஹலாத் காட்டில் உள்ளது.
விடங்க நரசிம்ஹர் கோயில்: கேதார் காட்டிலுள்ள
கேதாரீச்வரர் கோவில் அருகில் கேதார் காட் படிக்கட்டுக்களில் உள்ளது
த்ரிவிக்ரமர் ஆலயம்: த்ரிலோசநேச்வரர் கோயில்
அருகில் உள்ளது.
தாம்ர வராஹர் ஆலயம்: தாம்ர த்வீபத்திலிருந்து
தோன்றியவர் இவர். சௌக் பகுதியில் நீல்கண்ட் மொஹல்லா மேட்டில் ( நீல்கண்ட் கோயில்
அருகே) உள்ளது.
யக்ஞ வராஹர் ஆலயம்: பஞ்சாக்னி அகட் காட்டில்
ஸ்வர லீனேச்வரர் கோயிலில் அருகில் உள்ளது.
பைரவர் கோயில்கள்:
அஸி தங்க பைரவர் கோயில்: வ்ருத்த காலேச்வரர் அருகே
ம்ருத்யுன்ஜயே ச்வரர் கோயிலில் உள்ள சன்னதி.
பீஷன் பைரவர் கோயில்: பூத பைரவர் என்று
அழைக்கப்படும் இவரது கோயில், ஜ்யேஷ்டேச்வரருக்கு அருகில் உள்ளது.
சண்ட பைரவர் கோயில்: துர்கா தேவி கோயிலுக்குள்
அருள் புரிகிறார்.
கால பைரவர் கோயில்: பைரோநாத் என்ற இடத்தில்
உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம். பிரம கபாலம் பைரவரின் கையிலிருந்து வீழ்ந்த இடமா
தலால் கபால் மோசன் எனப்படுகிறது.அருகில் கபால மோசன தீர்த்தம் இருக்கிறது. அஷ்டமி
வழிபாடுகள் பிரபலமானவை. காசிக்கு வருபவர்கள் தவறாது தரிசிக்க வேண்டிய ஆலயம் இது.
கபால பைரவர் கோயில்: காசியின் வட கிழக்கு
எல்லையில் உள்ள அலிப்பூர் என்ற இடத்தில் உள்ளது.
க்ரோதன் பைரவர் கோயில்: ஆதிபைரவரான இவர்
காமாக்யா கோயில் அருகில் உள்ளார்.
ருரு பைரவர் கோயில் : ஹனுமான் காட்டில் ஹனுமான்
கோயில் அருகே உள்ளது.
ஸம்ஹார பைரவர் கோயில்: மச்சோதரிக்கு அருகே
உள்ளது. காய் காட் படிக்கட்டில் ஏறியும் கோயிலை அடையலாம்.
உன்மத்த பைரவர் கோயில்: காசிக்குப் பத்து கி.மீ.
தொலைவிலுள்ள தியோரா என்ற கிராமத்தில் உள்ள ஆலயம்.
காசிக் கோயில்கள்
பற்றிய விவரங்களைப் பல புத்தகங்களின் துணை கொண்டு எழுதுமாறு கூட்டிய
திருவருளுக்கும் நூலாசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் உரியது.
யாத்திரை செய்பவர்கள் உள்ளூர்வாசிகளின் வழிகாட்டுதல் படி
திட்டமிட்டு காசி நகரக் கோயில்களுக்குச்
செல்வது நல்லது.
No comments:
Post a Comment