Wednesday, August 14, 2019

ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் - வைத்யநாதம்

பர்லி வைத்யநாத் ரயில் நிலையம் 

வைத்யநாதம் என்று சொல்லப்படும் ஜ்யோதிர்லிங்க ஸ்தலம் மகாராஷ்ட்ரத்தில் உள்ள பரலியில் உள்ளது என்று சிலரும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது என்று சிலரும், ஹிமாசல் பிரதேசத்தில் உள்ளது என்று சிலரும் கருதுகிறார்கள். த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரத்தில் “பரல்யாம் வைத்யநாதம் “ என்று வருவதால் இத்தலம் மகாராஷ்ட்ரத்தில் உள்ள  பரலியைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. 

அதே நேரத்தில்,
“ பூர்வோத்தரே பிரஜ்வாலிகா நிதனே
ஸதா வஸந்தம் கிரிஜா ஸமேதம்
ஸுராஸுராதித பாத பத்மம்
ஸ்ரீ வைத்யநாதம் தமஹம் நமாமி “
என்ற ஸ்லோகத்தைச் சுட்டிக்காட்டி, நாட்டின் வடகிழக்கில் உள்ளதாகக் குறிப்பதாலும்,” பிரஜ்வாலா நிதானம்” என்பது சிவமஹா புராணத்தில் ருத்ர சம்ஹிதையில் வரும் “ சிதா பூமி” என்பதாலும், இதுவே தியோகார் நகரின் பழைய பெயர் என்பதாலும் ஜார்கண்டில் உள்ள தியோகாருக்கு அருகில் இத்தலம் உள்ளது என்று கொள்வது பொருத்தமாகிறது என்றும் கருதுவர்.

இவற்றைத்தவிரவும், ஹிமாசல் பிரதேசத்தில் காங்க்ரா ஜில்லாவில் பாலம்பூர் அருகில் இத்தலம் உள்ளது என்றும் ஒரு கருத்து உண்டு.

( தமிழகத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில், திருமழபாடி ஆகிய தலங்களிலும் சுவாமிக்கு வைத்யநாதர் என்ற பெயர் இருந்தாலும் அவை பன்னிரு ஜ்யோதிர் லிங்கங்களுள் அடங்காமை காண்க.)

சிவலிங்கத் திருமேனிகளுக்குள் பன்னிரண்டை மட்டும் ஏன் ஜ்யோதிர் லிங்கங்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று ஒருவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரைக் கேட்டபோது “ எல்லா சிவலிங்க மூர்த்திகளுமே ஜ்யோதிர் லிங்கங்கள்” தான் என்றும், அவற்றில் பன்னிரண்டை விசேஷமாகக் குறிப்பிடுகிறோம் என்றும் பெரியவர் பதில் கூறியதாக அறிகிறோம். இக்கருத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லாமையால் அமைதியாக இருந்ததோடு, என்றாவது ஒருநாள் சிவனருள் நமக்கு உணர்த்தும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இருக்கலாயிற்று. ஆம். நம்பிக்கை வீண் போகவில்லை.

இன்று விடியற்காலையில் கனவின்கண் பெருமான் திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் ஒன்றைச் சுட்டிக் காட்டியருளினான். அப்பாடல் வருமாறு:

“ நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி
 நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்
 கனைகடல் வையகம் தொழு கருக்குடி
 அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்மினே.”

இப்பாடலில் ஒளி மயமான ( ஜ்யோதிர் மயமான ) இறை வடிவத்தைக் கனவிலும் நனவிலும் தரிசித்ததாக ஞான சம்பந்தர் போற்றுகிறார். தம்முள் யார் பெரியவர் என்ற சண்டை பிரம-விஷ்ணுக்களுக்குள் ஏற்பட்டபோது அவர்களிடையே ஒளிப் பிழம்பாக (ஜ்யோதிர்லிங்கமாக) மகா சிவராத்திரி தினத்தன்று உற்பவம் செய்ததால் அதனை லிங்கோத்பவம் என்கிறோம். அதனால் சிவலிங்கத் திருமேனிகள் அனைத்துமே ஜ்யோதிர் மயமானவை என்றும் அப்புராண நிகழ்ச்சியை ஒட்டியே அமைந்துள்ளன என்றும் நமக்குத் தெளிவாகிறது.  
      
பரலி வைத்யநாதம் பற்றி அறிவதன்முன் மற்ற இரு இடங்களில் உள்ள வைத்யநாதம் பற்றியும் அறிவது நல்லது. திருவருள் துணையோடு அவற்றையும் அன்பர்கள் தரிசிக்க வேண்டும்.

பவிஷ்ய புராணத்திலும் மஸ்ய புராணத்திலும் சிறப்பிக்கப்படும் வைத்யநாத க்ஷேத்ரம், ஜார்கண்ட் மாநிலத்தில் ஹவ்ராவிலிருந்து பாட்னா வழியாக டெல்லி செல்லும் ரயில் பாதையில் ஜைஸித்தி என்ற இரயில் நிலையத்திற்கு சுமார் 7 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. வைத்யநாத் திருக்கோயில் கிதௌர் மன்னர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. பின்னர், கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு வந்தபோது, கீட்டிங் என்ற ஆங்கிலேயரின் நேரடியான நிர்வாகத்திற்குள் வந்தது. பின்பு அவரே, இக்கோயிலைத் தலைமை அர்ச்சகரிடம் ஒப்படைத்துவிட்டாராம். இங்கு நடைபெறும் கண்வார் யாத்ரா மிகவும் பிரபலமானது. அப்பொழுது தியோகாருக்கு அருகிலுள்ள ஸுல்தான் குஞ்ஜ் என்ற இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு, சுமார் ஒரு கோடி பக்தர்கள் சிரவண மாதத்தில்( ஜூலை- ஆகஸ்ட் ) வைத்யநாத்துக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். 

ஹிமாசல் பிரதேசத்தில் சுமார் மூவாயிரம் அடிக்கும் அதிக உயரத்தில் இமய மலைத்தொடரில் அமைந்துள்ள வைத்யநாத க்ஷேத்ரம், இந்தியத் தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது. காங்ரா ஜில்லாவில் பாலம்பூருக்கு 16 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயில், பதான்கோட் – மாண்டி நெடுஞ் சாலையில் காங்ராவுக்கும் மாண்டிக்கும் இடையில் அமைந்துள்ளது. பியாஸ் நதியின் உபநதியான பின்வா நதிக் கரையில் இக்கோயில் உள்ளது. இங்குள்ள ஜ்யோதிர் லிங்கம் ஸ்வயம்பு மூர்த்தி ஆவார். கயிலாயத்தில் சிவபெருமானிடமிருந்து பெறப்பட்ட சிவலிங்க மூர்த்தியை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இராவணன் இங்கு தங்கி, அந்தணச் சிறுவன்  உருவில் வந்த விநாயகரிடம் தந்துவிட்டு அனுஷ்டானங்கள் செய்யப் போனதும், மும்முறை அவனைக் கூப்பிட்டுவிட்டு, அவன் வருவதற்குள் அப் பாலவிநாயகர், சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டு மறைந்து விட்டதாகவும், பிறகு, இராவணனால் அம்மூர்த்தியை அங்கிருந்து பெயர்க்க முடியாமல் போனதால் சுவாமி அங்கேயே கோயில் கொண்டு விட்டதாகவும் புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.
கி.பி. 1204 ம் ஆண்டில் மன்யுகா- அஹுகா சகோதரர்கள் இக்கோயிலை நிர்மாணித்ததாகக் கூறுவர். இங்குள்ள கல்வெட்டுக்கள் அதற்கு முன்பும் கோயில் இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

ஆலய முகப்பு 
பரலி வைத்யநாதம் என்ற ஸ்தலம் மகாராஷ்ட்ரத்தில் பீட் ஜில்லாவில் அமைந்துள்ளது. அவுரங்காபாதிலிருந்து 210 கி.மீ.தொலைவிலும் நான்டெட் என்ற ஊருக்கு 105 கி.மீ. தூரத்திலும் உள்ள இத்தலத்தை அடைவதற்கு பர்லி வைஜ்நாத் ரயிலடியில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள கோயிலை அடையலாம். நான்டெட் நகரில்உணவு விடுதிகள் பலவற்றில் தாங்கும் வசதிகள் உள்ளன. அங்கிருந்து சாலை மார்க்கமாக சுமார் மூன்று மணி நேரத்தில் பரலி ஆலயத்தை அடையலாம்.

இராவணனால் பூஜிக்கப்பட்ட ஜ்யோதிர் லிங்கமூர்த்தியின் ஆலய நுழைவு வாயிலில் பல படிகள் அமைந்துள்ளன. இங்குள்ள சுவாமிக்கு நாமே அபிஷேகம் செய்யலாம். தீரா நோய் தீர்க்கவல்ல பெருமானாக விளங்குவதால் வைத்ய நாதர் எனப்படுகிறார்.

மூலவர் விமானம் 
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது தன்வந்திரியோடு அமிர்தமும் வெளிப்பட்டது. அதனை அடையவேண்டி அசுரர்கள் முயற்சிக்கும்போது, விஷ்ணுவானவர் அதனையும் தன்வந்திரியையும்  இங்குள்ள சிவலிங்கமூர்த்தியிடம் மறைத்து வைத்தார். கோபம்கொண்ட அசுரர்கள்,சிவலிங்க மூர்த்தியை சேதப்படுத்த முயன்றபோது அதிலிருந்து ஒரு பேரொளி எழுந்தது. கோடி சூரிய ப்ரகாசத்துடன் தோன்றிய அவ்வொளியைக்கண்டு அஞ்சிய அசுரர்கள் அவ்விடத்திலிருந்து அகன்றனர் என்பது புராணம். எனவேதான் இம்மூர்த்தியைத் தீண்டி பூஜித்தால் நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை.

ஹரியும் ஹரனும் இணைந்து அருள் புரிவதால் இருவருக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன.இருவரது விசேஷ தினங்களும் கொண்டாடப்படுகின்றன. விஷ்ணுவுக்கு வில்வ தளத்தாலும் சிவபெருமானுக்குத துளசியாலும் அர்ச்சனை செய்கிறார்கள். அருகிலுள்ள ஹரிஹர தீர்த்தத்திலிருந்து திருமஞ்சன நீர் கொண்டு வரப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள மலைப் பிரதேசத்தில் மூலிகைகள் பல உள்ளன.இராவணன் கயிலையிலிருந்து கொண்டுவந்த சிவலிங்கபாணம் இவ்விடத்தில் பெயர்க்கமுடியாதபடி நிலைபெற்றுவிட்டது என்பதும் தலபுராணம் தரும் தகவல். கோயிலில் மூலவருக்கு எதிரில் உள்ள ஜன்னல் வழியாக சூரியனின் ஒளிக் கதிர்கள் மூலவர் மீது படும்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிரவண மாதம்,நவராத்திரி,விஜயதசமி மற்றும் மகாசிவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

மராட்டா மால்வா மன்னர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட இந்த ஆலயம், மகாராணி அகல்யாபாய் ஹோல்கர் அவர்களால் கி.பி. 1700 களில் கட்டப்பட்டது. த்ரிசூல்தேவி மலையிலிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுக்  கோயிலைக் கட்டினார்கள். மகாமண்டபத்தில் உள்ள மரவேலைப்பாடுகள் கண்களைக் கவருவனவாக உள்ளன. உயரமாகவும் பருமனாகவும் உள்ள தூண்கள் அங்கே இருக்கக் காண்கிறோம்.

அருகாமையில் உள்ள ஜ்யோதிர்லிங்கத் தலங்களின் தொலைவு விவரம்:
அவுந்த் நாகநாதம்: 118 கி.மீ.
பீமசங்கரம்: 387 கி.மீ.
க்ருஷ்ணேஷ்வர்: 246 கி.மீ.
த்ரயம்பகேஷ்வர் : 397 கி.மீ.                 
இவற்றுள் பீமசங்கரம், த்ரயம்பகேஷ்வர் ஆகிய தலங்களைப் புனேயிலிருந்து அடைவது எளிது.