ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி
விச்வநாதம் – II
சிவபாதசேகரன்
அகத்தியர்-லோபாமுத்திரை - வலைத்தளப் படம் |
காசியின் மகிமையை முருகப்பெருமானிடம் அறிய வேண்டித் தனது
தர்ம பத்தினியாகிய லோபாமுத்திரையுடன் ஆறுமுகக்கடவுள் இனிதுறையும் தலத்தை நோக்கி
யாத்திரை மேற்கொண்ட அகத்திய முனிவர், ஸ்ரீ சைல மலையை வந்தடைந்தார். அம்மலை
சிவலிங்க வடிவுடையது என்றும் இங்கு வருபர்கள் பிறவாவரம் பெறுவர் என்றும்
கூறியருளினார். அதைக் கேட்ட லோபாமுத்திரை காசியை முக்தித் தலமாகச் சிந்திப்பதன்
காரணம் யாது எனக் கேட்டார். அதற்கு விடையாக, அகத்திய மாமுனிவர் கூறியதாவது: பிரயாகை, ஒங்காரேசுவரம், அவந்திகை,
அயோத்தி, மதுரா,கோகரணம்,புஷ்கரம்,துவாரகை, காஞ்சி, பதரிகாசிரமம்,த்ரியம்பகம்,குரு
க்ஷேத்திரம் , நைமிசாரண்யம் ஸ்ரீசைலம் ஆகியவனவும் முத்தி தர வல்ல தலங்களே ஆகும்.
அது போன்று, புனித தீர்த்தங்களில் நீராடுவதும் முக்தியை அளிக்க வல்லதாகும். மானத
தீர்த்தம் ஆடுபவர்க்குப் பொறுமை புலனடக்கம் முதலியவை சித்திக்கும். மனத்தழுக்கு
நீங்கினால் மட்டுமே தீர்த்தமானது கோரிய
பலனை அளிக்கும்.
கற்ற தம் கல்வியும் கடவுட்பூசையும்
நற்றவம் இயற்றலும் நவையில் தானமும்
மற்றுள அறங்களும் மனத்தின்பால் அழுக்கு
அற்றவர்க்கே பயன் அளிக்கும் என்பரால். -
காசி காண்டம்
புனித தீர்த்தங்கள் ஆட வேண்டுவோர் முதலில் விநாயகரை
சிந்தையில் இருத்தி, ஒரு பகல் உணவைத் தவிர்த்து, தீர்த்தமாடிய மறு நாள் பாரணை
செய்ய வேண்டும். பின்னர், மண்,பொன்,பசு ஆகியவற்றைத் தானம் வழங்குதல் மேலும்
சிறப்புடையதாகும். முன்னோர்களுக்கு அத்தீர்த்தக் கரையில் கிரியைகள் செய்ய
வேண்டும்.
காசி,மாயாபுரி,அவந்தி,அயோத்தி,துவாரகை, மதுரா, காஞ்சி ஆகிய
எழும் முக்த்தித் தலங்கள் என்று பேசப்படும். இவற்றைத் தவிரவும் பிரயாகை,
கேதாரம்,ஸ்ரீ சைலம் ஆகியவையும் முக்தித் தலங்களே. மற்ற முக்தித் தலங்கள் காசியை
அடைவதற்கு எதுவாய் இருத்தலால் முக்தி அளிப்பதில் அவை காசிக்கு ஈடாக மாட்டா. இதனை
விளக்குவதற்காக ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக என்றார் அகத்தியர்.
வடமதுரையில் வாழ்ந்து வந்த சிவசன்மா என்ற அந்தணன் வேத
வேதாந்தங்களையும் பிற கலைகளையும் கற்றும் நல்லொழுக்கம் குன்றியவனானான். முதுமை வந்ததும் உடல் தளர்ந்து, தான்
புண்ணியங்கள் ஈட்டத் தவறியதை உணர்ந்தான். “ காலத்தை வீணாகக் கழித்து விட்டேன்.
சிவபெருமானையும் அவன் அடியார்களையும் வணங்கத் தவறி விட்டேன். கோயில்,குளம்,கிணறு
ஆகியவற்றை உண்டாக்கித் தருமம் செய்யவில்லை. யாகங்கள் செய்யவில்லை. தண்ணீர்ப்பந்தல்
கூட வைக்கவில்லை. நிழல் தரும் மரங்களை நடவில்லை. அந்தணர்க்கு ஒரு பிடி அன்னமும்
அளிக்கவில்லை. அவர்களுக்குத் தானம் வழங்கவில்லை . பசுக்களுக்குப் புல் முதலியன
கொடுக்கவில்லை. சனி பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்யவில்லை. ருத்ர-சமகம் பாராயணம்
செய்யவில்லை. விருந்தினர்களை உபசரிக்கவில்லை. கால பாசம் கைக் கொண்டு எமதூதர்கள்
வந்தால் என்ன செய்வேன்! நரகத்தில் துயரம்
அனுபவித்து விட்டு மீண்டும் பிறக்க ஆயத்தமாகிவிட்டேனே! இறந்தால் மனைவியோ,புதல்வர்களோ
செல்வமோ உடன் வரப்போவதில்லை . ஆகவே இவ்வுடல் உள்ள போதே தலயாத்திரையும் தீர்த்த
யாத்திரையும் செய்வேன்” என்று மனத்தில்
நினைத்தவனாய் அயோத்தி, திரிவேணி சங்கமம் ஆகிய தலங்களைத் தரிசித்துவிட்டுக் காசியை வந்தடைந்தான்.
காசியில் மணிகர்னிகையிலும் கங்கையிலும் நீராடி, ரிஷிகள்
,பித்ருக்கள் ஆகியோருக்கான கர்மாக்களை செய்துவிட்டு விசுவநாதப் பெருமானைத்
தரிசித்தான். மற்ற முக்தித் தலங்களையும் தரிசிக்க எண்ணி, காசி நகரை விட்டு
அகன்றான். அத்தலங்களைத் தரிசித்த பின்னர், நிறைவாக மாயாபுரியில் தங்கியிருந்தபோது
அவனைக் குளிர் ஜுரம் பீடித்தது. ஏழு நாட்களுக்குப் பிறகு இறந்த அவனுக்கு அந்தத் தலவாசம்
செய்த பலனால் விஷ்ணு- சாரூபம் பெற்று விண்ணவர்கள் போற்ற விண்ணில் சென்றான்.
வழியில் சில உலகங்களை விஷ்ணு தூதர்கள் அவனுக்குக் காட்டினர்.
முதலில் அலகை
உலகைக்காட்டிய பிறகு கந்தர்வ உ லகைக் காட்டினார்கள். அரிய விரதங்களைக்
கடைப்பிடித்தவரும், பெற்ற பொருளால் தானங்கள் செய்தவரும், விண்ணவர்க்கு யாழ்
வாசிப்போரும் வசிக்கும் உலகம் இது .
பலன்கோரி சிவபூஜைசெய்தவர்களும் ,வேதம் கற்போருக்கு உணவும் உடையும்
கொடுத்தவர்களும் ,பிறருக்கு இயல்-இசை கற்பித்தோரும், வாழும் வித்யாதர உலகையும்
காட்டினர். அப்போது இயமன் எதிரில் தோன்றி , முக்தித்தலங்கள் ஏழையும் தரிசித்த
சிவசன்மனை மகிழ்ச்சியுடன் காண வந்ததாகக் கூறினான். பிறகு விஷ்ணு தூதர்கள், யமலோகத்தையும் சிவசன்மனுக்குக்
காட்டினர் . அங்குப் பாவம் செய்தவர்கள்
தண்டிக்கப்படுவதைக் கண்டான்.அதே சமயத்தில் இறைவனது நாமங்களைச் சொல்லித்
துதிப்போர்கள் நரகத்தில் இடர்ப்படார் என்று அறிந்தான். ( இறைவனது நூற்றெட்டு நாமங்களை
எடுத்துரைக்கும் காசி கண்டப்பாடல்களில் ஒன்று வருமாறு:
நீலகண்டன் மழுவேந்தி நெற்றிக்கண்ணன் பூதேசன்
காலகாலன் விடையூர்ந்தோன் கங்கைசூடி காமாரி
சூலபாணி கரியுரித்தோன் தோகைபாகன் காபாலி
ஆலமுண்டோன் மதிசூடீ அந்தகாரி ஈசானன் )
பின்னர் தேவலோகம் தோன்றியது. அங்கு பாற்கடலில் அமுதத்தோடு
தோன்றிய தேவ மகளிர் இயல்-இசை-நாடகக் கலைகளில் வல்லவர்களாக இருக்கக் கண்டான்.
பிறகு, ஐம்புலன்களை வென்று காயத்திரியை முறைப்படி ஜபித்தவர்கள் வாழும் சூரிய உலகைக் கண்டான். அதோடு, நால் வேதமும்,ஆறங்கமும்
கற்றும் காயத்திரி ஜபம் செய்யாவிடில் அந்தணத் தன்மை நீங்கிவிடும் என்பதை
உணர்ந்தான். காயத்திரிக்கு ஒப்பான மந்திரமும்,காசிக்கு ஒப்பான தலமும்,
விசுவநாதருக்கு ஒப்பான தெய்வமும் தேடினும் இல்லை என்று சிவசன்மன் அறிந்தான்.
காசி நகரில் அருள் பாலிக்கும் பல சிவலிங்க மூர்த்திகள்
பலவற்றையும் தரிசித்தபின்னர் , வீரேச லிங்கத்தின் பெருமையும்,அப்பெருமானை வழிபட்டு, மகப்பேறு அடைந்த விச்வாநரன் செய்த
துதிகளான சிவாஷ்டகத்தைப் பாராயணம் செய்வோர் மகப்பேறு பெறுவர் என்கிறது புராணம்.
மேலும் , வீரேசரின் அருளால் விச்வாநரன் பெற்ற குழந்தையை, அத்திரி,
மரீசி,கார்க்கர், அங்கீரஸ் , வசிஷ்டர்,சிலாதர், உரோமசர், பாரத்துவாஜர் ,
காசிபர்,ஆபஸ்தம்பர், கௌசிகர், கண்வர்,மார்க்கண்டர், வான்மீகி,பிருகு,அகத்தியர் ஆகிய
முனிவர்கள் நேரில் சென்று ஆசீர்வதித்தனர். அக் குழந்தைக்கு ஐந்து வயதானதும்,
முப்புரி நூலிட்டு, வேதம் கற்பித்தனர். அப்போது நாரத முனிவர் அங்கு வந்து
இச்சிறுவனுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும் ஆயுள் முடிந்து விடும் என்று
கூறினார். அதனைக் கேட்ட விச்வாநரன் செய்வதறியாது துயரக்கடலில் ஆழ்ந்தான். ஒருவாறு சமாதானமடைந்தபிறகு, மார்க்கண்டே யனையும்
, சுவேதகேதுவையும் காலனிடமிருந்து
சிவபிரான் காத்ததை நினைவில் கொண்டு தானும் அவ்வாறே இறைவனை வழிபட்டான். 108 குடங்களில் கொணர்ந்த கங்கை நீரால் நாள் தோறும்
ருத்ரம்- சமகம் ஆகியவற்றை ஜபித்து, 1008 குவளை மலர்களால் ஈசனை அர்ச்சித்தான். இதனைக் குறிப்பிடும்
காசிகண்டப் பாடல் வருமாறு:
“ குடங்கள் நூற்றெட்டில் கங்கை குளிர்புனல் ஏந்தி அன்பினு
டன்றினந்தோறும்
தெய்வ உருத்திர சமகத்தாட்டித்
தடந்திகழ் குவளை
ஓராயிரத்து இருநான்கு சாத்தி
அடங்கலர் புரம்
தீயூட்டும் அண்ணலை வழிபட்டானே.”
அப்பாலகனைப் பெருமான் காத்ததோடு, அக்கினி பகவானாக ஆக்கி
அருள் செய்தான். இவ்வாறு விஷ்ணு தூதர்கள் சிவசன்மாவிடம் எடுத்துரைத்தார்கள் .
அடுத்ததாக விஷ்ணு தூதர்கள் சிவசன்மாவுக்கு நிருதி உலகைக்
காட்டினார்கள். பிங்கலாக்ஷன் என்பவன்
காசிக்குச் செல்பவர்களுக்கு இடையூறு செய்பவர்களைத் தண்டித்து அவர்களுக்கு வழியில்
பயம் ஏற்படாதவாறு காத்து வந்தான். ஒரு சமயம் அவன் எதிர்த்தவர்களிடம் போரிடும்போது
இறக்கவே, புண்ணியத்தின் பலனாக நிருதி பதம் பெற்றான். பிறகு, விஷ்ணுகணங்கள்
சிவசன்மாவுக்கு வருண உலகைக்காட்டிக் கூறியதாவது: “ நால் வேதங்களை ஓதியவர்களும்,
உணவும்,நிலமும் அளித்தோரும்,தீர்த்தத்துறைகளில் படிக்கட்டுக்களைக்
கட்டியவர்களும்,தண்ணீர்ப்பந்தல் நிறுவியவர்களும் வாழ்வது வருண உலகம் ஆகும். “ ஒரு மறையவனின் புதல்வன் சிறுவன், முதலையிலிருந்து காப்பாற்றப் பட்டதையும் அவன் காசிக்குச் சென்று
தன பெயரில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அவன் வருண பதம்
பெற்றதையும் சிவசன்மன் அவ்விஷ்ணு தூதர்கள் மூலம் அறிந்தான்.
காசிபரின் மகன் காசியை அடைந்து சிவபிரானை வழிபட்டு அடைந்த
வாயு உலகையும், கலிங்க நாட்டரசன் பால்
தோன்றிய குணநிதி என்பவன் தவம் செய்து ,சிவனருளால் குபேரன் ஆகி, வாழ்ந்து கொண்டிருக்கும்
அழகாபுரியையும் சிவசன்மன்
காணப்பெற்றான்.பிறகு பயன் கருதாது வேள்விகள் செய்து, சிவபக்தியில் மேம்பட்டு
விளங்கியவர்கள் இருக்கும் ஈசான உலகத்தையும், தக்ஷ சாபம் நீங்கவேண்டித் தஞ்சமடைந்த
சந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்தமையால் சிவபெருமான் சந்திர சேகரன் ஆன
வரலாற்றைக் கூறி, அவனுறையும் சந்திரலோகத்தைக்காண்பாயாக என்றனர் விஷ்ணு தூதர்கள்.
காசியை அடைந்து ,புருஷாயுதம் என்ற தவத்தைச் செய்த 27 நக்ஷத்திரப் பெண்கள் வாழும் தாரகை உலகத்தையும், சந்திர உலகத்தையும் அடுத்தபடியாகப் பார்த்தான்.சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப்பிறந்த புதன், காசியை அடைந்து லிங்கப்பிரதிஷ்டை
செய்து, தனக்கு முன்பு காட்சி அளித்த ஈசனிடம் கேட்ட வரம், நாமனைவரும் கேட்க வேண்டியதாகும்: “ அளவற்ற
செல்வங்கள் என்னை வந்து அடைந்தாலும், துன்பக்குழியில் அழுந்தினாலும், சிவ சிந்தனை
அகலாத வரம் அருள்வாய் “ என்று வேண்டினான். இறைவனும் அத்துதிக்கு மகிழ்ந்து அவனை
நவக்கிரகங்களுள் ஒன்றாக ஆக்கி அருள் புரிந்தான். அப்புதனின் உலகையும் சிவசன்மா
வழியில் கண்டான். பிறகு, அசுர குருவான சுக்கிரன் வாழும் உலகையும் , செவ்வாய்,
வியாழன்,சனி ஆகியோரது உலகங்களையும் சிவசர்மா பார்த்தான். தனது பத்தினிகளோடு
காசிக்குச் சென்று வழிபட்ட சப்த ரிஷிகள் வாழும் உலகத்தை அதன்பிறகு கண்டான்.நிறைவாக
விஷ்ணுதூதர்கள் அவனுக்குத் துருவன் பதம் பெற்ற வரலாற்றைக் கூறி, விஷ்ணு
லோகத்தையும் காட்டினர். இவ்வாறு நற்கதி பெற்ற சிவசன்மன், காசியை அடைந்து
சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து முக்தி பெற்றான்.
ஸ்ரீ சைலத்தை அடைந்து சிவ தரிசனம் பெற்ற அகத்தியமுனிவர்,
முருகப்பெருமானது சன்னதியை அடைந்து விழிகள் நீர் பெருக்கத் துதிகள் பல செய்தவுடன் கார்த்திகேயன் அவருக்குக்
காட்சி அளித்தான். இதனால் மயிர்க்கூச்செரிந்த குருமுனியானவர், காசியின் பெருமையைத்
தான் அறிய விரும்புவதாகப் பிரார்த்திக்க,
அதற்கு ஷண்முகப்பெருமான் கூறியதாவது: “ காசியின் பெருமையை ஆயிரம் முகங்களாலும்
கூற இயலாது. ஆறு முகங்களோடு அதை எங்ஙனம் உரைப்பேன் ! இருப்பினும் அதன் பெருமைகளைக்
கூறுகின்றேன் “ என்றார்.
( காசியின் பெருமைகள் தொடரும் )