Thursday, July 25, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள்-தொடர்ச்சி- ஒங்காரேச்வர்

நர்மதையும் ஆலயமும் 
இறைவன் ஓங்கார வடிவினன் ஆதலால் ஒங்காரேசுவரன் என்று அழைக்கப்படுகிறான். அவனது இருப்பிடமும் ஓங்கார வடிவாகிறது.     ஈங்கோய் மலை என்ற தலத்தின் மீது நக்கீரர் அருளிய பாடல் ஒன்றை நாம் இங்கு நினைவு கூர்ந்துவிட்டு, ஜ்யோதிர் லிங்க தரிசனம் செய்வோம்.

“ அடியும் முடியும் அரியும் அயனும்
 படியும் விசும்பும் பாய்ந்தேறி – நொடியுங்கால்
 இன்னதென அறியா ஈங்கோயே ஓங்காரம்
 அன்னதென நின்றான் மலை “

 ஏழு புண்ணிய நதிகளான கங்கை,யமுனை,கோதாவரி,சரஸ்வதி, நர்மதை,ஸிந்து,காவேரி ஆகியவற்றை தியானித்துக் கொண்டே அன்றாடம் நீராடுவது மரபு. இவற்றுள் நர்மதைக்கு மட்டும் மற்ற நதிகளுக்கு இல்லாத தனிச் சிறப்பு உண்டு. இந்நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து, கடலோடு சங்கமம் ஆகும் இடம் வரை உள்ள தூரத்தை ஆற்றின் ஒரு கரை முழுவதுமாகக் கால்நடையாகவே சென்று விட்டு, ஆற்றின் எதிர்க் கரையை படகில் கடந்து மீண்டும் மறு கரை ஓரமாகவே உற்பத்தி ஸ்தானம் வரை நடந்து சென்று வலம் செய்வது பண்டைக்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஏனைய ஆறு நதிகளை இவ்வாறு முழுவதுமாக வலம் செய்வது இல்லை. இதற்குக் காரணம், இந்நதியில் ஏராளமான சிவலிங்க பாணங்கள் வெவ்வேறு அளவில் இருப்பதே ஆகும். அத்தனை சிவலிங்க பாணங்களையும் ஒரு சேர வலம் செய்யக் கருதினார்கள் நம் முன்னோர்கள். 
வழியில் உள்ள பாண லிங்கக் கடை 

நர்மதா பரிக்கிரமத்தின் போது கையில் பணம் எடுத்துச் செல்வது தவிர்க்கப்படுகிறது. காலை முதல் மாலை வரை மட்டுமே நடக்க வேண்டும். வழியில் உள்ள கிராமங்களில் தங்கிக்   கிராமவாசிகள் அன்புடன் கொடுக்கும் உணவை உண்டு, மறு நாள் காலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். இப்படிச் செய்தால் பூர்த்தி செய்வதற்கு ஒரு வருஷத்திற்கும் மேல் ஆகும். மழை மற்றும் குளிர்க் காலங்களில் நடந்து செல்வதும் கடினம் தான். காடுகளையும் மலைப் பிரதேசங்களையும் கடந்து செல்ல வேண்டிய இப்பயணத்தை ஒப்பற்ற நியமத்துடனும் பக்தியுடனும் செய்யும் மக்கள் அநேகர். தற்காலத்தில் வாகனங்கள் மூலமாகப் பதினைந்து தினங்களில் செய்வோரும் உளர்.

 மக்கள் இந்நதியைத் தாயாகவே கருதுவர். “ நர்மதா மையா “ என்றும் “ மா ரேவா “ என்றும் அழைப்பார்கள். ரேவா என்பதற்குப் பாய்ச்சல் என்று அர்த்தம் சொல்வார்கள். நர்மதை அப்படிப் பாய்ந்தோடி வந்து அனைவரது வாழ்வையும் செழிக்கச் செய்து அருளுகிறாள் அல்லவா? சுமார் 1300 கி. மீ. தூரம் ஓடி வந்து நம் வாழ்வை வளம் செய்கிறாள். மத்தியப் பிரதேசத்திலுள்ள மைகல் மலைத்தொடரிலுள்ள அமர்கண்ட் என்ற இடத்தில்(Mai ki bagiya) உற்பத்தி ஆகி, மகாராஷ்டிரத்தைக் கடந்து, குஜராத் மாநிலத்தில் பரூச் பகுதியில் மிதி தலாய்(Mithi thalai) என்னும் இடத்தில் கடலுடன் சங்கமிக்கிறாள். கங்கையின் இடது கரை மட்டுமே புனிதம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் மேற்குத் திசை நோக்கிச் செல்லும் இந்நதியின் இரு கரைகளுமே புனிதமானவை. அதன் இரு கரைகளில் ஜோதிர்லிங்கத் தலங்கள் சிலவும்,பிற சிவாலயங்களும் அமைந்திருக்கக் காணலாம். இந்நதியை வலம் செய்வதால் பிறப்பின் நோக்கம் பூர்த்தி அடைவதாகக் கருதுவர். கங்கையில் ஒரு நாளும் சரஸ்வதியில் ஒரு நாளும் மாதுர் கயையில் ஒரு நாளும் நீராடிய பலனை நர்மதையைத் தரிசித்தவுடனேயே  பெற்று விடலாம் என்று புராணம் கூறுகிறது.

படகிலிருந்து தெரிவது மலையின் எழில் தோற்றம் 
நர்மதை இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து ஓங்கார வடிவில் தோற்றமளிப்பதால் தற்போது  ஓங்காரேஷ்வர் என்று இந்த  ஜ்யோதிர் லிங்கத் தலம் அழைக்கப் படுகிறது. படகின் மூலமாக நர்மதையின் மறு கரையில் உள்ள மலைக் கோயிலை அடையலாம். நர்மதையின் குறுக்கே பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரை ஓரமாக உள்ள இம்மலை கோயிலுக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. பஞ்ச முக கணபதியைத்தரிசித்து விட்டு மலை ஏறுகிறோம். மகா சிவராத்திரியின் போதும் விசேஷ தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் எப்போதும் வாசம் செய்து ஈசனை வழிபடும் தலம் இது. 

ஒங்காரேச்வரரையும், மகாகாலேச்வரரையும், சித்தீச்வரரையும் இங்கு தரிசனம் செய்கிறோம். நூற்றெட்டு சிவலிங்கங்களைக் கொண்ட புண்ணிய பூமி இதுவாகும். சிவபுரியில் ஒங்காரேச்வரர் ஆலயமும், விஷ்ணுபுரியில் அமரேச்வரர் அல்லது மல்லேச்வரர் ஆலயமும் உள்ளன. ஒங்காரேச்வரர் சன்னதியை அடைந்ததும் சுவாமி பள்ளமான இடத்தில் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கக் காணலாம். இரவில் ஆரத்தி நடந்து முடிந்தபிறகு கோயிலில் யாரும் தங்குவதில்லை. அப்போது சுவாமியும் பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடுவதாகவும் அதை யாரும் பார்க்கக்கூடாது என்றும் ஐதீகம். ஒருமுறை இதனை மறைந்திருந்து பார்த்து சோதிக்கச் சென்ற அயல் நாட்டுக்காரர் ஒருவர் மீண்டும் உயிருடன் வரவில்லை என்று கூறப்படுகிறது.    
    
மாந்தாதா என்ற இக்ஷ்வாகு குலத்து அரசன் சௌபரி என்ற முனிவருக்குத் தனது ஐம்பது பெண்களையும் மணம் செய்து கொடுத்தான். அவனது மகனாகிய முசுகுந்தன் மகா சிவ பக்தன். மாந்தாதா ஆண்ட பகுதி மாந்தாதா ஆசிரமம் என்று வழங்கப்படுகிறது. இம்மன்னனது விக்கிரகம் ஒங்காரேச்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ளது.

ஒரு காலத்தில் கோகரணத்தில் வழிபட்டு விட்டு, நாரத முனிவர் விந்திய மலையை அடைந்தார். அப்போது அவர் மேரு மலையின் பெருமையை விந்திய மலையிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டுப் பொறாமை கொண்ட விந்தியமலை, தானும் மேருவைப் போலவே பெருமை அடைய வேண்டும் எனக் கருதி, ஓங்கார ரூபத்தில் ஒரு சிவலிங்கத்தையும், பார்த்திவ லிங்கத்தையும் நர்மதைக் கரையில் வழிபட்டு வந்தது. இதனால் மகிழ்ந்த சிவபெருமான், விந்தியத்தின் முன் தோன்றி, வேண்டிய வரத்தைக் கேட்குமாறு அருளினான்.

எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவனாகத தான் ஆக வேண்டும் என்ற வரத்தை அம்மலை கேட்டது. அவ்வாறு அருளுகையில், “ நீ ஒருக்கால் இறுமாப்புக் கொண்டால் எனது அடியவன் உன்னை சிறியதாக ஆக்கி விடுவான் “ என்றார். ( பின்னர் அகத்திய முனிவர், மேருவைக் குறுக வைத்ததையும் , உக்கிர பாண்டியன் மேருவைச் செண்டால் அடித்து அதன் செருக்கை அடக்கியதையும் புராணங்கள் கூறுகின்றன.) விந்திய மலை யந்திர வடிவில் பூஜித்த லிங்க மூர்த்தி ஒங்காரேச்வரராகவும், பார்த்திவ லிங்கம் அமலேச்வரமாகவும் தற்போது அங்கு தோற்றமளிக்கின்றன. பன்னிரு ஜ்யோதிர் லிங்கங்களைக் குறிப்பிடும் ஸ்தோத்திரத்திலும் “ ஓங்காரம் அமலேச்வரம் “ என்று இவ்விரு ஆலயங்களையும் இணைத்தே கூறப்பட்டிருக்கிறது.

அமலேச்வரத்தைச் சிலர் அமரேச்வரம் என்றும் வழங்குவர். இதற்குக் கர்த்தமேச லிங்கமானது உபலிங்கமாகும். இதனைத் தவிரவும், வைடூர்ய மணி பர்வதத்தில் கௌரி சோமநாதர் கோயிலும் உள்ளது. சுமார் ஐந்தடி உயரமுள்ள சோமநாத மூர்த்தியைத் முன்னால் நின்று தரிசிப்போருக்குத் தங்களது முற்பிறப்பும், பின்னால் நின்று தரிசிப்போருக்கு பிற் பிறப்பும் தெரியவரும் என்று கேள்விப்பட்ட     அவுரங்கசீப், முன்னின்று பார்த்தபோது அதில் பன்றி உருவம் தெரிந்ததாகவும் கோபமுற்ற அவன், அம்மூர்த்தியை நெருப்புக்கு இரை ஆக்கியதால் வெண்ணிறமாக இருந்த மூர்த்தி கறுத்து விட்டதாகவும் கூறுவார்கள்.    

வழித்தடம்: உஜ்ஜைன் நகரிலிருந்து ஓங்காரேஷ்வர் வருவதற்குப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. வடக்கிலிருந்து வருபவர்கள் இந்தூர் வழியாக உஜ்ஜைனியை அடைந்து அங்கிருந்து ஓங்காரேஷ்வரை அடையலாம்.  

வாழ்வில் ஒரு தடவையேனும் வழிபட வேண்டும் என்று எழுதாமல் பலமுறைகள் சென்று நர்மதையில் நீராடி ஓங்காரேச்வரரின் அருள் பெற வேண்டும் என்றே எழுதுமாறு உள்ளிருந்து நம்மைத் திருவருள் தூண்டுகிறது. தரிசித்து விட்டுப் பிரிய மனமில்லாமல் திரும்பிப் பார்த்தபடியே விடை பெறும் அற்புதத் தலங்களுள் இதுவும் ஒன்று. நர்மதையில் ஸ்நானம் செய்யும்போது பெறும் ஆனந்தத்தை வெறும் வார்த்தைகளால் எப்படி விவரிக்க முடியும் ?

Wednesday, July 3, 2019

ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் – 3. உஜ்ஜைனி


தூரத்தில் தெரிவது மஹாகாளேசுவர சுவாமி ஆலயம் 

ஏழு மோக்ஷபுரிகளுள் ஒன்றான உஜ்ஜைனி, முற்காலத்தில் அவந்திகா என்று வழங்கப்பட்டது. மாளவ தேசமாகிய அவந்தி நாட்டுத் தலை நகராக விளங்கிய இதுவே விக்கிரமாதித்தன் தோன்றியதும், அவனது மரணத்திற்குக் காரணமாக இருந்த சாலிவாகனன் வசித்ததும் ஆகிய சரித்திரப்புகழ் பெற்றது. இவ்விருவரையும் முன்னிட்டு இரு சகாப்தங்கள் தோன்றின. நர்மதை நதிக்கு வடக்கே விக்கிரம சகமும், தெற்கில் சாலிவாகன சகமும் தோன்றின. மகாகவிகளான காளிதாசன்,தண்டி,பர்திருஹரி ஆகியோர் வாழ்ந்ததும் இந்நகரில்தான். இந்நாட்டை ஜைன மன்னனாகிய சுதன்வா என்பவன் ஆண்டதால் உஜ்ஜைனி என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டது. சிப்ரா நதியின் கரையில் உள்ள இந்நகர எல்லையில் மாள்வா என்ற புராதன பட்டணமும், விக்கிரமாதித்தன் காலத்திய கோட்டையின் சின்னங்களும் உள்ளன.

விக்கிரமாதித்தன் 
விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளி நகருக்கு உள்ளும் , காளிதாசனுக்கு அருள் செய்த காளி ஊருக்கு 2 கி. மீ. வெளியிலும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். தேவகியின் எட்டாவது குழந்தையால் தனக்கு மரணம் வரும் என்று அறிந்த கம்சன், அவள் ஈன்றெடுத்த பெண் குழந்தையை வீசி எறிந்து கொல்ல முயன்றபோது அப்பெண் குழந்தை காளியாக உருக்கொண்டு, பின்னர் உஜ்ஜைனியில் வந்து தங்கியதாகப் புராணம் கூறும். கயிலை மலையிலிருந்து இராவணன் கொண்டு வந்த காளியே இங்கு தங்கியதாகவும் கூறுவர். இவளே விக்கிரமாதித்தனுடன் நேரிடையாகப் பேசியதாகவும் காளிதாசனை மகா கவியாக ஆக்கியவள் என்றும் உலகம் போற்றுகிறது. விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளியை ஹரசித்தி மாதா என்றும் அழைக்கிறார்கள்.

மேகத்தைத் தூதுவிடுவதாக அமைக்கப்பெற்ற மேகதூதம் என்ற தனது காப்பியத்தில், மகாகவி காளிதாசன், மேகத்தை நோக்கி, “ விந்திய மலைக்கு வடக்கே செல்லும் மேகமே, நீ செல்லும் வழியிலிருந்து சற்று விலகியிருந்தாலும், அவந்திகா நகரையும், அங்கு எழுந்தருளியுள்ள ஈசனையும் காணத் தவறாதே. ஒருவேளை நீ காணாவிட்டால் கண் பெற்ற பயனை அடைய மாட்டாய்” என்று சொல்வதாக அமைத்துள்ளது இன்புறத்தக்கது.

சிப்ரா நதி 
ஊர் நடுவே உள்ள மகா காளேச்வரர் ஆலயத்திற்கு ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். இந்த ஆலயம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கருவறையில் சுமார் மூன்று அடி உயரத் தோற்றத்துடன் மகாகாள நாதர் காட்சி அளிக்கிறார். ஆவுடையார் பூமிக்கு அடியில் இருக்கிறது. சுவாமி தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார்.ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்களுள் தக்ஷிண முகமாக அமைந்துள்ள மூலவர் சன்னதி இது மட்டுமே ஆகும்.  ஜ்யோதிர் லிங்க பாணத்தைக் கண் குளிரத் தரிசிக்கலாம். தினமும் விடியற்காலை சுமார் நான்கு மணிக்கு நடைபெறும் விபூதி அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆரத்தியும் (பஸ்மாரத்தி) பிரசித்தியானவை. நாள்தோறும் ஐந்து முறை ஆரத்தி நடைபெறும். நடுவில் உள்ள நிலையில் ஓங்காரேச்வரர் சன்னதியும், மேல் தளத்தில் நாக சந்திரேசுவரர் சன்னதியும் உள்ளன.நாக பஞ்சமியன்று மட்டுமே நாக சந்திரேசுவரரைத் தரிசிக்கலாம். பிராகாரத்திலுள்ள கோடி தீர்த்தம் புனிதமானது .இந்த ஆலயம் மராட்டிய, சாளுக்கிய, பூமிஜா கலைப் பாணியில் அமைந்துள்ளது. சுவாமி கருவறை விமானம் நேர்த்தியாக அமைந்துள்ளது.திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலம் உஞ்சேனை மாகாளம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரத்னமாலா என்ற மலையில் வசித்து வந்த அரக்கன் ஒருவன் மகாகாளநாதரின் பரம பக்தர்களாக விளங்கிய நான்கு அந்தணச் சிறுவர்களைக் கொன்று விடுவதாக மிரட்டவே, அச்சிறுவர்கள் ஈசனைத் தஞ்சம் அடைந்தனர். பெருமானும் அங்குத் தோன்றி, அரக்கனை அழித்து.அவர்களைக் காப்பாற்றினான். அத்தலத்திலேயே நிரந்தரமாக வீற்றிருந்து அடியார்களுக்கு எல்லா நலன்களையும் அருளுமாறு அக்குழந்தைகள் வேண்டவே, அதற்கிசைந்த சிவபிரான், அதுமுதல் அந்நகரில் கோயில் கொண்டு விளங்குகின்றான் என்று தல புராணம் கூறுகின்றது.

இங்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளாவில் நீராடி , இறைவனைத் தரிசிக்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். சந்நியாசிகள் பலரும் வருகை தருவர்.

கால பைரவர் ஆலயம் 
காசியைப்போலவே இங்கும் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது. அவருக்கு எதிரில் நின்ற வண்ணமாக நாய் காணப்படுகிறது. குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டும் மராட்டா பாணியில் தலையில் பக்ரி அணிவிக்கப்பட்டும் பெரிய உருவில் கால பைரவர் காட்சி தருகிறார். அவரே இந்நகரக் காவல் தெய்வமாகவும்,சேனாபதியாகவும் போற்றப்படுகிறார். காலபைரவ வழிபாடு,கபாலிகர்களுக்கும், அகோரிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாலை நேரங்களில் இக்கோயிலில் ஏற்றப்படும் தீபங்கள் காண்போரைப் பரவசப்படுத்துபவை. உயர்ந்து விளங்கும் தீபஸ்தம்பத்தின் மீது ஏறி விளக்குகளை ஏற்றுகிறார்கள்.

ஆதியில் இருந்த கோயிலைப் பத்ரேசன் என்பவர் கட்டியதாக ஸ்காந்த புராணத்தில் உள்ள அவந்தி காண்டம் குறிப்பிடுகிறது. மூன்றாம் பானிப்பட்டு போருக்குப் பிறகு, மகாதாஜி ஷிண்டே என்பவர் உஜ்ஜைனியை மீட்டார். போரில் வெற்றி பெற்றால் பைரவருக்குப் பக்ரி (தலைப்பாகை) அணிவிப்பதாக வேண்டிக் கொண்டார். அவரது பிரார்த்தனை பலித்தபின் , தானே முன்வந்து இக்கோயிலைத் திருப்பணி செய்தார். 

உஜ்ஜைனியில் உள்ள முக்கியக் கோயில்கள்:

ஹர்சித்தி மாதா கோயில் : 52 வது சக்தி பீடமாக இதனைக் கூறுகிறார்கள். இவளது அருளுக்குப் பாத்திரமான விக்கிரமாதித்தன், தனது தலையை பதினோரு முறை வெட்டி அர்ப்பணித்தான் என்றும் ஒவ்வொரு முறையும் காளி தேவியின் அருளால் தலையானது உடலோடு மீண்டும் சேர்ந்து விடும் என்றும் வரலாறு கூறும்.

மகா கணபதி கோயில் :
மகாகாளேச்வரர் ஆலயத்திற்கு வடக்கில் உள்ளது. இங்கு விநாயகப்பெருமான் மிகப்பெரிய சுதை உருவில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் இளம் சிறுவர்கள் வேதம் கற்கிறார்கள்.
வேத வகுப்பு 


ஸ்ரீ கோபால் மந்திர்: சாத்ரி சௌக்கில் உள்ள இந்தக் கோயிலில் ராதை, கிருஷ்ணன் ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கலாம். இதனைக் கட்டியவர், பைஜா பாய் ஆவார்.

காளி கோயில்: மேற்கண்ட கோபால் மந்திர் அருகில் உள்ளது. காளிதாசனுக்கு அருளிய காளி இவள். பெரிய உருவுடன் காட்சி அளிக்கும் இவளைக் கண்கண்ட தெய்வமாக யாத்ரீகர்கள் வழிபடுகின்றனர்.

மற்றும் ஓங்காரேசுவரர், அகலேசுவரர், ரிண முக்தேசுவரர், மங்களேசுவரர், ஆகியோரது சன்னிதிகளையும், கிருஷ்ணனின் குருவான சந்தீப ரிஷியின் ஆசிரமம் இருந்த இடத்தையும், பர்த்திருஹரியின் குகையையும் தரிசிக்கலாம். 

வேத காலம் முதற்கொண்டே உஜ்ஜைனி நகரம் சிறந்து விளங்கியதாகத் தெரிகிறது. அசோகச் சக்கரவர்த்தி இதனை ஆண்டிருக்கிறார். பின்னர் முகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட இந்நகரம், 1810 ம் ஆண்டு முதல் சிந்தியா அரசர்களின் ஆளுகைக்கு வந்தது.
இந்தூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து ரயில் மூலமாகவும் சாலை மார்கத்திலும் உஜ்ஜைனியை வந்து அடையலாம். இங்கு தங்குவதற்கான வசதிகள் இருப்பதால் அனைத்து ஆலயங்களையும் நிதானமாகத் தரிசிக்க முடியும். மேலும் மோக்ஷத்தைத் தரவல்ல தலமாக இருப்பதால் ஒரிரவேனும் தங்கி ,சிப்ரா நதியில் நீராடிவிட்டு மகாகாளேசுவரரையும் , காளி, பைரவர் ஆகிய மூர்த்திகளையும் தரிசனம் செய்துவிட்டு  வருதல் மரபு ஆகும்.