Friday, October 16, 2015

கடம்பன்( முருகன்) வழிபட்ட சிவஸ்தலங்கள்

கடம்ப மரத்தைத் தல விருக்ஷமாகக் கொண்ட சிவஸ்தலங்கள் பலவற்றுள் . மதுரை, திருக்கடம்பந்துறை (குளித்தலை) போன்ற தலங்களைச்  சில எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் சுவாமியைக் கடம்பவன நாதர்  என்று அழைக்கிறோம். முருகனுக்கும் கடம்ப மலர் மீது பிரியம் அதிகம். ஆகவே கந்தவேளைக் கடம்பன் என்று நூல்கள் போற்றுகின்றன. தேவாரமும் குமரப் பெருமானை " நம் கடம்பன்" என்று குறிப்பிடுகிறது. " கந்தக் கடம்பன் " என்று கார்மயில் வாகனனை வாயாரப் பாடுவார் அருணகிரிநாதர். சூர சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக முருகப்பெருமான்  சிக்கலுக்கு அருகில் உள்ள கீழ்வேளூரில்(கீவளூர்)சிவபூஜை செய்யும்போது அத்தலத்தைச் சுற்றிலும் ஐந்து (ஒன்பது என்றும் கூறுவர்) தலங்களில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பஞ்சக் கடம்பத் தலங்கள்: ஆழிக்கடம்பனூர் (ஆழியூர்), அகரக் கடம்பனூர் , கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர்  ஆகிய தலங்களைப் பஞ்ச(ஐந்து) கடம்ப க்ஷேத்திரங்களாகக் குறிப்பிடுவர். .

நவகடம்பத்தலங்கள்:   கோயில் கடம்பனூர் , ஆழிக் கடம்பனூர்,  கடம்பர வாழ்க்கை, இளங் கடம்பனூர், பெருங் கடம்பனூர் , வல்ல மங்கலம், பட்ட மங்கலம், சொட்டால் வண்ணம், ஓதியத்தூர்  ஆகிய ஒன்பது தலங்களும் இவ்வரிசையில் அடங்குவன, 

1.பட்டமங்கலம்:   திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள கீவளூரிலிருந்து   கச்சனம் செல்லும் செல்லும் சாலையில் சென்று, தேவூருக்கு முன்னதாகவே உள்ள  பட்டமங்கலத்தை  அடையலாம். இதைப் புழுதிக்குடி என்றும் வழங்குகிறார்கள். சாலையின் ஒரு புறம் சுமார் 1 கி.மீ. தொலைவில் பட்டமங்கலமும், நேர் எதிர்திசையில் 1.5 கி.மீ. தொலைவில் சொட்டால் வண்ணமும் அமைந்துள்ளன. பட்டமங்கலத்தில் உள்ள கோயில் மேற்கு பார்த்தது. கோயில் சிறிது. உள்ளூர் வாசிகள் ஈடுபாட்டுடன் காணப்படுகின்றனர். பிரதோஷத்தில் பலர் தரிசிக்க வருகின்றனர்.  சுவாமிக்கு அபிமுக்தீஸ்வரர் என்றும் அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. அர்ச்சகர் வெளியிலிருந்து வந்து பூஜை செய்கிறார். அழகிய நந்தவனம்  அமைத்து வருகிறார்கள். மேலும் தொடர்புக்கு: 9786582126.

2. சொட்டால் வண்ணம்:  உள்ளூர்க் காரர்கள் பலருக்கு சிவன் கோயில் எங்கு இருக்கிறது என்றே  தெரியவில்லை. சிலர் அதைப் பிள்ளையார் கோயில் என்று அழைக்கிறார்கள். சாலையை ஒட்டிய சிறிய கோயில். அமைதியான சூழல். சுவாமிக்கு விஸ்வநாதர் என்று திருநாமம். மேற்கொண்டு விவரங்கள் சொல்வதற்கு யாரையும் காணோம்.

3. கோயில் கடம்பனூர்: அகரக்கடம்பனூர் என்றும் வழங்கப்படுகிறது. கீழ் வேளூரிலிருந்து சிக்கல் செல்லும் சாலையில் சுமார்  2 கி.மீ. சென்று ஆழியூரில் திரும்பினால் கோயில் கடம்பனூர் ஆலயத்தை அடையலாம். ஒரே பிராகாரம். சற்று விசாலமானது. உழவாரப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. சுவாமி: கைலாச நாதர். தேவி: சௌந்தர நாயகி. முருகப்பெருமானின் திருவுருவம்      தரிசிக்கத்தக்கது. 

4. ஆழியூர்: ஆழிக் கடம்பனூர் என்றும் பெயர் பெற்றது. பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கியுள்ள தலம். எதிரில் பெரிய குளம் அமைந்துள்ளது. இறைவன்: கங்காள நாதர். இறைவி: கற்பகவல்லி. நந்தி மண்டபத்தைத் தாண்டி சுவாமி சன்னதியின் முகப்பு வாயிலின் மேல் அர்த்த நாரீசுவரது திருவுருவத்தைச்  சுதை வடிவில் காணலாம்.  

5. இளங் கடம்பனூர்: ஆழியூருக்கு அண்மையில் இளங் கடம்பனூரும், பெருங் கடம்பனூரும் அமைந்துள்ளன. இளங் கடம்பனூர் ஆலய முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் உள்ளது. அர்ச்சகர் வீடு அருகில் உள்ளது.   2013 ம் ஆண்டு திருப்பணி செய்யப்பெற்று, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
அம்பிகை : சௌந்தர நாயகி  சுவாமி  சோளீசுவரர்

6. பெருங்கடம்பனூர் :   நான்கு வேதங்கள் பூஜித்ததால் சுவாமிக்கு சதுர் வேத புரீசுவரர் என்று பெயர். கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில். சிவாசாரியார் வீடு அருகாமையில் உள்ளது. திருப்பணி செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

7. கடம்பர வாழ்க்கை:  ஆழியூரிலிருந்து செல்லும் பாதை செப்பனிடப்பட்டு வருவதால் அங்கு செல்ல இயலவில்லை. இறை அருளால் மற்றொரு தருணத்தில் தரிசிக்க விழைகிறோம். சுவாமி: விசுவநாதர் ; அம்பிகை: விசாலாக்ஷி.

8. வல்ல மங்கலம் ; 9. ஓதியத்தூர்:  ஆகிய தலங்கள் கீழ்வேளூருக்கு அண்மையில் உள்ளன. இவையும் தரிசிக்க வேண்டிய தலங்கள்.

கீழ் வேளூர்:  வீரஹத்தி தோஷம் நீங்க சிவபூஜை செய்ய முற்பட்ட முருகப்பெருமான், முதலில் மஞ்சளால் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அந்த இடம் தற்போது மஞ்சள்வாடி எனப்படுகிறது.
பின்னர் பதரி வனத்தில் (கீழ் வேளூரில்)அக்ஷயலிங்கப் பெருமானைப் பூஜிக்கையில் அதற்குத் தீய சக்திகளால் இடையூறு வராத வண்ணம் அம்பிகை அஞ்சு வட்டத்தம்மை மூலம் காத்து அருளினாள் . கீழ் வேளூர் கோயிலில் அஞ்சுவட்டத்தம்மையின் சன்னதி பிரபலமானது. பஞ்ச ( நவ) லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முருகப்பெருமான்  தவக்கோலமாகத் தனிச் சன்னதியில் பால சுப்பிரமணியராக  அருள் பாலிக்கிறார். 

சுவாமி சன்னதி கட்டு மலை மீது அமைந்துள்ளது. இது கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில் ஆகும். அற்புதமான அமைப்பைக் கொண்டது. அக்ஷய லிங்க சுவாமி ,    கேடிலியப்பராக , சுயம்பு மூர்த்தியாக அற்புதக் காட்சி வழங்குகின்றார். மற்றோர் சன்னதியில் அகஸ்தியருக்காக  தாண்டவக் காட்சி காட்டிய கோலத்தில் நடராஜப் பெருமானைத் தரிசிக்கிறோம். சம்பந்தராலும் அப்பராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம்.

சிக்கல் சென்று வருபவர்கள்  அதன் மிக அருகிலுள்ள இந்தத் தலங்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும். யாருமே தரிசிக்காத நிலைக்கு எந்தக் கோயிலும் வந்து விடக் கூடாது. இதுபோன்ற கிராமக் கோயில்களுக்கு  அன்பர்கள் செல்வதால் அந்த ஊர் மக்களும் அர்ச்சகர்களும் மிகவும் மகிழ்ந்து வரவேற்பர். அக்கோயில்களும் இதனால் நன்கு பராமரிக்க ஏதுவாகும். தரிசிப்பதோடு நின்று விடாமல் அக்கோயில்களின்  நித்திய பூஜைக்கும்,அர்ச்சகர்களுக்கும் நம்மாலான உதவியைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.  

Saturday, September 5, 2015

ஜீவன்முக்தி வழங்கும் திருப்புனவாசல்

காசிக்கு சமமான சிவஸ்தலங்கள் பலவற்றில் பாண்டிய நாட்டிலுள்ள  திருப்புன வாயிலும் ஒன்று. தற்போது திருப்புனவாசல் என்று மக்களால் அழைக்கப்படும் இத்தலத்தை  விருத்த காசி  என்று  ஸ்தலபுராணம் குறிப்பிடுகிறது. ஊரும் விருத்தபுரி என்றும் பழம்பதி என்றும்  அழைக்கப்பட்டது.

" பாண்டி நாடே பழம்பதி ஆகவும் "  என்று மாணிக்கவாசகரால் போற்றப்படும் பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பதினான்கில் இதுவும் ஒன்று. இப்பழம்பதியை வழிபட்டால் ஏனைய பதிமூன்று தலங்களையும் ஒருசேர வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர்.

காசியில் உயிர் நீப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். ஆனால் தன்னிடம் வந்து வணங்குவோரது பாவங்களைத் தீர்த்து ,ஜீவன் முக்தியையே வழங்குவது திருப்புனவாயில் என்பதை, விருத்தபுரி மஹாத்மியம் கூறுகிறது. சிவமஹாபுராணத்தில் ஏகாதச ருத்ர வைபவ காண்டத்தில் விருத்தபுரி மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு இந்திரபுரம்,சதானந்தபுரம், வஜ்ர துருமவனம், வனமுகம்,கைவல்யபுரம்,விருத்தகாசி, என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. தசதீர்த்தங்களை உடைய புண்ணியத்தலம் இது. அப்பத்து புண்ணிய தீர்த்தங்களாவன: இந்திர தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம், சூரிய புஷ்கரணி,சந்திர புஷ்கரணி, சக்ர தீர்த்தம், சர்பநதி, வருண தீர்த்தம்,கல்யாண தீர்த்தம் என்பன.   யுகத்திற்கு ஒன்றாக நான்குயுகங்களில் வெவ்வேறு ஸ்தல விருக்ஷங்களைக் கொண்ட சிறப்புடையது இத்தலம். கிருத யுகத்தில் சதுரக்கள்ளியும், திரேதா யுகத்தில் குருந்த மரமும், துவாபர யுகத்தில்  மகிழ மரமும், கலியுகத்தில்  புன்னை மரமும் ஸ்தல விருக்ஷங்களாக அமைந்துள்ளன.

திருப்புனவாயிலைச் சுற்றிலும் உள்ள தலங்களுள் தென்கிழக்கில் தீர்த்தாண்டதானமும், வடமேற்கில் பறையத்தூரும், அதன் வடமேற்கில் கல்யாணபுரமும் ,மேற்கில் வெளி முக்தியும், வடக்கில் வசிஷ்டர்  பூஜித்த தலமும் உள்ளன. இவற்றிலும் விருத்தபுரீச்வரரே அருள் செய்வதாகப் புராணம் சொல்கிறது. விருத்தபுரியின் சுற்றுவட்டாரத்தில் எமதர்மனும் அவனது தூதர்களும் நுழையமாட்டார்கள் எனவும் இங்கு உயிர் விடும் அத்தனை பேருக்கும் சிவலோகம் சித்திக்கும் என்றும் தலபுராணத்தால் அறியலாம்.

வைகாசி புனர்பூசத்தில் கொடியேற்றி ஸ்வாதியன்று தேரோட்டமும், விசாகத்தில் தீர்த்தவாரியும் நடைபெற வேண்டும் என்றும் மாசி மகத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, சர்ப்ப நதியில் (பாம் பாற்றில்) தீர்த்தம் கொடுப்பதாகவும் புராண வாயிலாக அறிகிறோம்.

கஜமுகாசுரனை வெல்ல அருள் வேண்டி விநாயகப் பெருமான் இங்கு வந்து, சிவகங்கையில் நீராடிப் பழம்பதிநாதரின் அருள் பெற்றார். தங்கள் தவறை உணர்ந்த திரிபுராதிகள் இங்கு வந்து வழிபட்டு இறைய ருள் பெற்றனர்.  நாரதர் வாயிலாக இத்தலப் பெருமையை அறிந்த அங்காரகன்  இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் செவ்வாய்க் கிழமைகளில் வழிபடுவோரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்படி வரம் பெற்றான். பிரமன் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றது , சந்திரன் தக்ஷனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றது , சுசீலன் என்பவனையும் அவனது மனைவியையும் எமதூதர்கள் கொண்டு செல்ல எத்தனிக்கையில் சிவ கணங்கள் அவர்களை விடுவித்து முக்தி பெற்றது அகத்தியர் திருமணக் கோலம் கண்டது ,வியாக்கிராசுரன் என்பவனை அம்பிகை ,பத்திர காளி உருவில் அழித்தது மகாலக்ஷ்மி பைரவ மூர்த்தியிடம் மகாவிஷ்ணுவைக் காத்துத் தனது மாங்கல்யத்தையும் காக்க வேண்டி வரம் பெற்றது கௌதம ரிஷியின் சாபம் தீர தேவேந்திரன் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபாடு செய்தது, ராமன் பூஜித்து அருள் பெற்றது ஆகிய வரலாறுகளை இப்புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.
தலத்தின் இருப்பிடம்:  புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் வழியாகவும், காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, ஓரியூர்  வழியாகவும்,மதுரையிலிருந்து சிவகங்கை,திருவாடானை வழியாகவும், ராமநாதபுரத்திலிருந்து தொண்டி , சுந்தரபாண்டிய(S.P) பட்டணம் வழியாகவும் திருப்புனவாசலை அடையலாம்.

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. அதன் இருபுறமும் வல்லப கணபதி சன்னதியும் தண்டபாணியின் சன்னதியும் விளங்குகின்றன. திருவாயிலைக் கடந்தவுடன் சூரிய சந்திரர்களையும், கால பைரவரையும் தரிசிக்கிறோம். பெரிய வடிவில் நந்திகேசுவரர் காட்சி தருகிறார்.  மகாமண்டபத்தைத் தாண்டியதும் பிரமாண்ட வடிவில் விருத்தபுரீச்வரர் காட்சி அளிக்கிறார். பாணத்திற்கு மூன்று முழமும் ஆவுடையாருக்கு முப்பது முழமும் உள்ள வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது. உள்ளத்தை நெகிழ வைக்கும் அற்புத தரிசனம். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய மகாலிங்க மூர்த்தி . இவருக்குப் பின்புறம் எப்போதும் அகஸ்திய முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். தினமும் அர்த்த ஜாம பூஜைக்குப்பிறகு, இந்திரன் வழிபடுவதாகவும் ஸ்தல புராணம் கூறும். இந்த சன்னதியின் மேல் அமைந்துள்ள விமானமும் பிரம்மாண்டமானது.

தேவகோஷ்டங்களில் நர்த்தன கணபதி, ஏழடி உயரம் உள்ள வீராசன தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன் , துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். இப்பிராகாரத்தில் மிகப் பழமையான புன்னை விருக்ஷம் உள்ளது , மகிழ விருக்ஷத்தின் கீழ் ஐந்து விநாயக வடிவங்களையும், கபிலர் பூஜித்த சதுர்முக லிங்கத்தையும், கன்னிமூலையில் இந்திரன் பிரதிஷ்டை செய்த ஆகண்டல கணபதி சன்னதியும் அறுபத்து மூன்று நாயன்மார்களையும், விஸ்வநாதர்-விசாலாக்ஷியையும், முருகனது சன்னதியையும் இரண்டு சண்டிகேச்வரர்களைக் கொண்ட சன்னதியையும் தரிசிக்கலாம். சுவாமி பிராகாரம் வலம் வருகையில் சுவாமிக்கு இடது புறத்தில் பெரிய நாயகி சன்னதியையும் அதன் எதிரில் உக்ராகாளியின் சன்னதியையும் தரிசிக்கிறோம். வரப்ப்ரசாதியான காளி தேவி உக் ர வடிவில் இருப்பதால் கண்ணாடியை மட்டுமே காணலாம்.குடைவரைக் காளி என்ற பெயரோடு அடியார்கள் வேண்டிய யாவற்றையும் வழங்கும் தேவி இவள்.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டு யாத்திரை செய்தபோது இங்கு வந்து வழிபட்டுப் பதிகம் பாடியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. சுந்தரரும் இத்தலத்து இறைவனைத் தரிசித்துப் பதிகம் பாடியுள்ளார். அதில் " பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி " என்று அருளியுள்ளதால் இதன் பழமையும் பெருமையும் நன்கு விளங்கும்.

இத்தனை பெருமைகள் வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு 3.9.2015 அன்று மகாகும்பாபிஷேகம் எட்டு கால யாகசாலை பூஜைகளின் நிறைவாக மிக விமரிசையாக நடை பெற்றது. ஏராளமான அன்பர்கள் தரிசித்துக் கண் பெற்ற பயன் பெற்றனர். ராமேச்வர யாத்திரை செல்லும் அன்பர்கள் இத்தலத்தையும், தீர்த்தாண்டதானத்தையும் திருவாடானையையும் ஆவுடையார் கோயிலையும்  உத்தர கோச மங்கையையும் தவறாது தரிசிக்க வேண்டும்.   

Wednesday, March 18, 2015

ஏக பில்வம் சிவார்ப்பணம்.

தெய்வாம்சம் பொருந்திய மரங்களாக வணங்கப்படுபவைகளுள் வில்வமும் ஒன்று. இதனை மஹா லக்ஷ்மி விரும்பி உறைவதால், ஸ்ரீ வ்ருக்ஷம் என்றும் அழைப்பர். இதன் இலைகளால் சிவபெருமானை லக்ஷ்மி அர்ச்சித்து, மஹா விஷ்ணுவை அடையப்பெற்றாள் என்பது வரலாறு. மூன்று தளங்களாகத் திகழும் இதன் இலைகளைப் பறிப்பதற்கும் நியமம் உண்டு. மரத்தின் மேல் கால் வைத்து ஏறாமல் ஏணியின் மூலம் ஏறி, இலைகளைப் பறிக்க வேண்டும். சோமவாரம், சிவராத்திரி,அமாவாசை, பெளர்ணமி,த்வாதசி, ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது. மரக் கிளைகளை வெட்டுவதோ அவற்றை விறகு போலப் பயன் படுத்துவதோ அறவே கூடாது. இதன் கீழ் அமர்ந்து செய்யும் ஜபம்,பாராயணம் ஆகியவற்றுக்கு அதிகப் பலன் உண்டு. இதன் மூன்று தளங்கள்,பிரம்ம, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளையும் குறிப்பதாகக் கூறுவர். பூச்சி அரிக்காத வில்வ இலைகளால்,பிரதோஷம், சோமவாரம்,சிவராத்திரி போன்ற நாட்களில் சிவ சஹஸ்ர நாமம்,ருத்ர த்ரிசதி அர்ச்சனைகள் செய்வர். பிற நாட்களிலும் வில்வ இலைகளால் சிவ அஷ்டோத்திரம் செய்யப் படுகிறது.

ஒரு காலத்தில் வில்வக்காடுகளாகத் திகழ்ந்த இடங்களில் சிவாலயங்கள் இருப்பதை இன்றும் காணலாம். ஒரு சில உதாரணங்களாக, திருவைகாவூர், திருக் கொள்ளம் பூதூர் ஆகிய ஸ்தலங்களைக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் சுவாமிக்கு வில்வாரண்யேச்வரர் என்று பெயர். இவ்விடங்களில் வில்வம், ஸ்தல விருக்ஷமாக அமைந்துள்ளது.

புலியால் விரட்டப்பட்ட வேடன் ஒருவன் திருவைகாவூரில் ஒரு மரத்தின் மீது அமர்ந்து தஞ்சமடைந்தான். அவன் அவ்வாறு அமர்ந்தது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் மகா சிவராத்திரி. இதை அறியாமலே, அம்மரக்கிளைகளில் இருந்து இலைகளைப் பிய்த்துக் கீழே போட்டுக் கொண்டு இருந்தான். மரத்தடியில் இருந்த அம்மையப்பர் அதனை அர்ச்சனையாக ஏற்று அவனுக்கு முக்தி வழங்கி அருளினார் என்பது அத்  தல வரலாறு.

பில்வ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் என்ற அருமையான ஸ்தோத்திரம் இருக்கிறது. இதைப் பாராயணம் செய்து பரமேச்வரனுக்கு வில்வார்ச்சனை செய்தால் சிவ சாயுஜ்யம் பெறலாம் என்பது இதன் கடைசிப்  பாடல். நீண்ட ஆயுள்,புகழ்,வெற்றி ஆகியனவும் பெறலாம் என்கிறது இந்த ஸ்தோத்திரம். இப்படி அர்ச்சனை செய்வதால் பாப நிவர்த்தி ஏற்படும்.

சிவ நாமாக்கள் ஏராளமாக அமைந்து வருவதால் எளிமையாகப் புரிந்து கொண்டு பாராயணம் செய்யலாம்.
சிவம் சாந்தம் உமாநாதம் மஹாத்யான பராயணம்
ஞானப்ரதம் க்ருத்திவாஸம்  ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால், மங்களமானவனும், சாந்த மூர்த்தியும், தியானங்களுக்கு இருப்பிடமானவனும், ஞானத்தை வழங்குபவனும், யானைத் தோல் போர்த்தவனுமான ஈச்வரனை வணங்கி , ஒரு பில்வத்தை சிவார்ப்பணமாக அர்ச்சிக்கிறேன் என்பது பொருள்.

இதேபோன்று, ருத்ராக்ஷதாரியாகவும், பார்வதிக்குப் பிரியமான நாயகனாகவும், பிறை சூடிய பெருமானகவும் வருணனை வருகிறது:
அக்ஷமாலாதரம் ருத்ரம் பார்வதி ப்ரிய வல்லபம்
சந்திரசேகரம் ஈசானம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.

சிவாஷ்டோத்திர நாமாக்களை நினைவு படுத்துவதாக அமைந்த
ஸாமப்ரியம் ஸ்வர மயம் பஸ்மோத்தூளித விக்ரஹம்
ம்ருத்யுஞ்ஜயம் லோகநாதம் ஏக பில்வம் சிவார்ப்பணம்
என்பதும் ,

 ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துவதாக,
சிபி விஷ்டம் சஹஸ்ராக்ஷம்  துந்துப்யம் ச நிஷங்கிணம்
ஹிரண்ய பாஹும் ஸேனான்யம் ஏக பில்வம் சிவார்ப்பணம் .
என்பதும் நாம் அறிந்து மகிழத் தக்கன.

யக்யேச்வரனே யாகத்திற்கு ஏற்படும் இடையூறுகளைப் போக்கி, ஹவிர் பாகத்தை ஏற்றுக் கோரிய பலனை வழங்குகிறான் என்பதை,
யக்ஞ கர்ம பலாத்யக்ஷம்  யக்ஞ விக்ன விநாசகம்
யக்ஞேசம் யக்ஞ போக்தாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால் அறியலாம்.

மூன்று பிறவிகளின் பாவங்களை நீக்கி, சாளக்ராம வழிபாடு, கன்னிகாதானம், கிணறு - குளம் வெட்டுதல் ஆகியவற்றால் கிடைக்கும் பலனை ஒரு வில்வதளத்தால் சிவனை அர்ச்சிப்பதால் சித்திக்கும் என்கிறது இந்த ஸ்தோத்திரம்.

வில்வ மரத்தைப் பார்ப்பதும், அதனைத் தொடுவதும், பாவங்களைப் போக்க வல்லது என்பதை,    " தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய ஸ்பர்சனம் பாப நாசனம் "   என்பதால் இதன் பெருமை அறிய வருகிறது.  அன்பர்கள் அனைவரும் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதோடு,வில்வ தளங்களால் சிவ பூஜை செய்து இகபர பலன்கள் யாவும் பெற வேண்டும் என்று எல்லா உலகங்களுக்கும் தாயாகவும் தகப்பனாகவும் இருந்து அருளும் கருணைக்கடலைப்  பிரார்த்திக்கிறோம்:
ஸர்வ லோகைக பிதரம்   ஸர்வ லோகைக மாதரம்
ஸர்வ லோகைக நாதஞ்ச ஏக பில்வம் சிவார்ப்பணம்.    

Monday, March 2, 2015

கண் தந்த கடவுள்

மனித உடலில் சிரசே பிரதானம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களுள் வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய நான்கும்  தலைப் பகுதியிலேயே உள்ளன. ஐந்தாவதாகிய மெய்யின் ஒரு பகுதியில் தலையும் அடங்கும்.மெய் என்பதற்குப் புறந்தோல் என்றும் சிலர் பொருள் கொள்வது உண்டு. இந்த ஐந்திலும் கண்ணுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அது செயல் படாவிட்டால் மனிதன் முடங்கிப் போகிறான். பிறர் துணையைத் தேடுகிறான். இறைவனது படைப்புக்களைக் கண் கொண்டே காண்கிறான். அப்படிக் காணும் போது,  நல்லனவற்றையும் தீயனவற்றையும் ஒருசேரக் காண்கிறான். திரு அங்க மாலை என்ற திருப் பதிகத்தை அருளிச் செய்த நாவுக்கரசர், கண்களின் பயன் கடல் நஞ்சு உண்டு அண்டங்கள் அனைத்தையும் காத்த பரமேச்வரனைக் காண்பதற்கே என்கிறார். அவனது குஞ்சித பாதத்தைக் கண்ட கண்களால் வேறொன்றையும் காணவும் வேண்டுமோ என்பார் . கண்கள் இரண்டால்  அவன் கழல் கண்டு களிக்க வேண்டும் என்று பாடுகிறார் மணிவாசகர். இறைவனைக் கண்ட களிப்பை, " கண்ணாரக் கண்டேன் நானே " என்று வெளிப்படுத்துகிறது தேவாரம்.

கண் இல்லாதவரும் கண்ணில் குறைபாடு உள்ளவரும் படும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. திருவொற்றியூரை நீங்கேன் என்று சபதம் செய்துவிட்டு, மகிழ மரத்தடியில் சங்கிலியாரை மணந்த சுந்தரர் , திருவாரூர் வசந்தோற்சவம் காண வேண்டி ஒற்றியூர் எல்லையை நீங்கியபோது இரு கண் பார்வையை இழந்தார். மீண்டும் ஒற்றியூர் பெருமானிடமே வந்து ஒரு பதிகம் பாடுகிறார். அதில், கண் இழந்தவன் ,பார்வை உள்ளவனது துணையுடன் ஒரு  கோலைப் பற்றியபடி மெதுவாகப் பின்பற்றிச் செல்லும்போது, கண்ணுள்ளவன் அவனைக் கறகற என்று இழுத்துச் செல்வதுபோன்ற நிலை எனக்கு வந்துவிடாதபடி அருள்வாய் என்று பெருமானிடம் விண்ணப்பிக்கிறார். வீட்டில் உள்ள பெண்டிர்களை  அழைத்தால் ," போ குருடா " என்பார்களாம்.  அடியேனுக்கு அந்நிலை வர விடலாமா என்று இறைவனைத் துதிக்கிறார் நம்பியாரூரர்.

இக்காலத்தும் கண் நோயால் பாதிக்கப்படுவோர் எத்தனையோ பேர் உளர். பலருக்குத் தீர்வு காண முடியாதபடி வேறு பல உடற்கோளாறுகள் தடை செய்கின்றன. அவர்கள் இப்படி எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இறைவன் ஒருவனே நம்மைக் கை விடான் எனத் துணிந்து அவனைச் சரண் அடைகின்றனர்.  கண் நோயைத்  தீர்த்து நலம் தரும் ஆலயங்களை நாடுகின்றனர்.  சிலர் வீட்டிலிருந்தபடியே, ஆதித்ய ஹ்ருதயம் , சூர்ய சதகம்  ஆகிய வடமொழி சுலோகங்களையும், சம்பந்தர் அருளிய புறவார் பனங்காட்டுப்  (பனையபுரம்) பதிகத்தையும், சுந்தரர் கண் பெற வேண்டி அருளிய காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் தலத்துப் பதிகங்களையும் பாராயணம் செய்வது வழக்கம்.

கண் நோய் தீர்க்கும் திருத்தலங்களுள் கண் கொடுத்த வனிதம் என்ற தலம் சிறப்பு வாய்ந்ததும் தொன்மையானதும் ஆகும்.  இத்திருக்கோயில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை மன்னார்குடி செல்லும் வழியிலுள்ள கமலாபுரம் வழியாக 5  கி. மீ. பயணித்தால் அடையலாம். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் கொரடாச் சேரியிலிருந்து 7 கி.மீ. சென்றாலும் அடைய முடியும். கொரடாச்சேரி, கமலாபுரம்,  ஆகிய ஊர்களில் இருந்து கண் கொடுத்த வனிதம் கோயில் வாசல் வழியாக மினி பஸ்கள் செல்கின்றன. ஆட்டோ வசதியும் உண்டு.

தான் பெற்ற குழந்தை கண் பார்வை இல்லாதது கண்ட ஒரு பெண் , தனது கண் பார்வையை எடுத்துக் கொண்டு குழந்தைக்குப் பார்வை அளிக்குமாறு இத்தலத்து இறைவனை வேண்ட, அதற்கு மனமிரங்கிய இறைவன், அக்குழந்தைக்குப் பார்வை தந்து அருளினான் என்பது தல வரலாறு. அதனால் சுவாமிக்கு நயன வரதேசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து சுவாமி,அம்பாள்,சூரியன் ஆகியோருக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்து நலம் பெறுவோர் பலர்.

பாண்டியர்களும்,சோழர்களும் இக்கோயிலைத் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

திருவெண்காட்டைப் போலவே,இங்கும் சித்திரைப் பரணியன்று அமுது படையல் உற்சவம் நடைபெறுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டுவோர் அன்றையதினம் இங்கு வந்து வழிபட்டுத் திருவருள் பெறுகிறார்கள்.
உயரத்தில் அமைந்துள்ள சன்னதியில் அம்பாள்,தேவநாயகி என்ற பெயருடன் காட்சி தருகிறாள். சுமார் ஐந்தரை ஆடி உயர சுயம்பு மூர்த்தியாகப் புகழாபரணீ ச்வரர் , சுவாமி சன்னதிக்கு நேர் பின்புறம் தனிச் சன்னதியில் காட்சி அளிக்கிறார். இவரை வழிபட்டால் நல்ல ஆற்றலும், செல்வமும்,நோய் நீக்கமும் பெறலாம் என்பது நம்பிக்கை.

திருக்குளக்கரையில் உள்ள ஆத்தி மரம் 
பாண்டவை ஆற்றின் வடகரையில் உள்ள இவ்வூர் தீர்த்தச் சிறப்புக் கொண்டது. கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம் உள்ளது. இதன் கரையில் மிகப்பழமையான ஆத்தி மரம் உள்ளது.

தொன்மையான இந்த ஆலயத்தில் மூன்றாம் குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பல உள்ளன. ஊரின் பெயர் ஆலத்தாங்குடி என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. பிற்காலத்தில் வனிதை (பெண்) ஒருத்திக்குக் கண் கொடுத்தமையால் கண் கொடுத்த வனிதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். இக்கோயில், 190 அடி அகலமும், 270 அடி நீளமும் கொண்டு பரந்து விளங்குகிறது.

பலகாலமாக இக்கோயில் மேடிட்டும் இடிந்தும் முட்புதர்களுடனும் காணப்பட்டது. கல்வெட்டு ஆர்வலர்களின் முயற்சியால் மேடிட்ட பகுதிகளை அகற்றி,ஆழ்ந்து பார்க்கும்போது பாண்டியன் குலசேகரனது ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்று முப்பத்திரண்டு அடி நீளமுள்ள வரிகளுடன்  இருப்பது  காணப்பட்டுப் படி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு வரியும் 24 அடி நீளத்துடன் பத்து வரிகளைக் கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் ( கி.பி. 1185 ) கல்வெட்டும் படி எடுக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டுத் திருப்பணிகள் செய்விக்கப்பெற்ற இவ்வாலயம் , வரும் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி அன்று குட முழுக்கு விழாக் காண இருக்கிறது.  மேலும் தகவல்களைத் திரு கண்ணன் அவர்களிடமிருந்து (  9443135129) பெற்று இவ்வைபவத்தில் பங்கேற்கலாம்.

உலகிற்கே கண்ணாக  இருந்து காப்பவனைக் காண வேண்டாமா? கண்டு தொழுது கண் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? அவனைக் காணக் கண் அடியேன் பெற்றவாறு என்று எண்ணி எண்ணி நெக்குருக வேண்டாமா? அதோடு நின்று விடாமல், நாம் பெற்ற இந்த அற்புத தரிசனம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும் அல்லவா? அதற்காக நயன வரதீச்வரனின் கோயிலை நாடுவோம். அனைவரும் நலம் பெற வேண்டுவோம்.  

Thursday, January 15, 2015

இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனார்

நான்கு வேதங்களும் ஓலமிட்டு அலறியும் காண மாட்டாத பரம்பொருள் தனது பரம பக்தனைப் பார்த்து ஓலம் இடுகிறான். தன்  அடியானுக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் பரமன் இதையும் செய்கிறான். எப்படி ஓலம் இட்டான் தெரியுமா? " இயற்பகை முனிவா  ஓலம் " என்று மறைகள் ஓதும் வாயால் ஓலமிட்டான். அப்படியானால் அந்த பக்தர்   முனிவரா என்றால் நாம் நினைப்பதுபோல ஜடாமுடியும், காவி ஆடையும்,கமண்டலமும் தரித்த கோலத்தவர் இல்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே, சிவத்தொண்டு செய்து வந்த ஒப்பற்ற அடியார் அவர். உலகத்தில் பெரும்பாலும்  சராசரி மனிதர்களாக வாழ்ந்துவிட்டுப் போவார்களையே நாம்  காண்கிறோம். அசாதாரண செயல் செய்பவர்களை  " செயற்கரிய செய்பவர்கள் " என்கிறோம். அவர்களே பெரியோர் என்று தமிழ் இலக்கியமும் வாயாரப் புகழ்கிறது.

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படும் இயற்பகை நாயனாரது அவதாரத் தலம், பூம்புகாருக்கு அண்மையில் உள்ள திருச் சாய்க்காடு என்பது. இதனைச் சாயாவனம் என்றும் அழைப்பர். இங்குள்ள சிவாலயம் திருஞானசம்பந்தராலும்,திருநாவுக்கரசு  சுவாமிகளாலும் பாடப்பெற்றது.  சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்தை அடையலாம். இதற்கு மிக அண்மையில் பல்லவநீச்வரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.

சாயாவனத்தில் உள்ள சிவாலயம் குதிரை பூட்டப்பெற்ற தேர் வடிவைக் கொண்ட மாடக் கோவில். இதைத் தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இந்திரன் முயன்றபோது ,கலக்கமடைந்து அம்பிகையானவள் தனது குயில் போன்ற குரலால் கூவியதால் கூவென்ற கோதை என்றும் கோஷாம்பிகை என்றும் வழங்கப்படுகிறாள். ஸ்வயம்பு மூர்த்தியாக மூலவர் , இரத்தின சாயாவனேஸ்வரர் என்ற பெயருடன் அற்புத தரிசனம் தருகிறார்.

உட்ப்ராகாரத்தில் வெவ்வேறு நிலையில் உள்ள கணபதி மூர்த்தங்களைத் தரிசிக்கிறோம். மகாமண்டபத்தில் வில்லேந்திய வேலவரின் சன்னதி இருக்கிறது. இங்கிருந்தபடியே, சுவாமியையும், அம்பிகையையும், இவ்விருவருக்கு இடையில் உள்ள வில்லேந்திய வேலவரையும் ஒருங்கே தரிசனம் செய்கிறோம். வெளிப் பிராகாரத்தில் இயற்பகை நாயனார்,தனது மனைவியாரான கற்புக்கரசியுடன் அருட் காட்சி அளிக்கிறார்.

எதைக் கேட்டாலும் இல்லை என்றும் அப்புறம் பார்க்கலாம் என்றும்  சொல்லும் காலம் இது.  தன்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார் என்பதால், இவரை, சுந்தரமூர்த்தி நாயனார், " இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் " என்று சிறப்பித்தார். வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் , சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டவர். அவரது மனைவியாரும் தனது கணவனாரின் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் செய்து வந்த உத்தமி.  இவரது பெயரைக் கற்பினுக்கரசியார் என்று வழங்குகிறார்கள்.

இவர்களது பெருமையை உலகிற்குக் காட்டவேண்டி, சிவபெருமான் ஓர் அந்தண வேடம் பூண்டு நாயனாரது மனைக்கு எழுந்தருளி, யான் கேட்பது ஒன்று உன்னிடம் உண்டு அதனைக் கொடுக்க சம்மதமானால் சொல்லுகிறேன் என்றார். அதுகேட்ட இயற்பகையார்,  அவரை வணங்கி,  என்னிடம் இருப்பது அனைத்தும் சிவபிரானது அடியவர்களுடைய உடைமை. எதனைக் கேட்டாலும் மகிழ்வுடன் அளிப்பேன்.இதற்கு ஐயம் ஏதும் இல்லை என்றார்   வந்த சிவ வேதியர், " உனது மனைவியை வேண்டி வந்தனம்" என்றவுடன் முன்னைவிட மிகவும் மகிழ்ந்து ,  இது எனக்கு " எம்பிரான் செய்த பேறு "  என்றவறாகத் தனது கற்பில் சிறந்த மனைவியாரிடம் " உன்னை இந்த வேதியர்க்குக் கொடுத்தேன் ": என்றார்.  அதுகேட்ட மனைவியார் , கலக்கமுற்று, மனம் தெளிந்த பின்னர், "  இவ்வாறு தாங்கள் அருள் செய்ததை யான் செய்வதை விட வேறு பேறு உண்டோ " என்று தனது " தனிப் பெரும் கணவனாரை " வணங்கி, வேதியரது திருவடிகளைப் பணிந்து நின்றார்.

இன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், " யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்" என்றார். அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், " இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் " என மொழிந்தார்.

இவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தனது   மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாய்க்காட்டு எல்லை வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில் , அன்பனின் பக்தியை மெச்சிய இறைவன், திரும்பவும் ஆபத்து வந்ததுபோல, " இயற்பகை முனிவா ஓலம்" என்று அழைத்தான். அதோடு, " செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் " என்று ஓலமிட்டான். அதுகேட்ட இயற்பகையார், " இதோ வந்தேன், தங்களுக்குத் தீங்கு விளைப்பவர்  இன்னும் உளரோ? " என்று வாளை  ஓங்கியவராக வந்தார். அப்பொழுது அங்கு அந்தணரைக் காண வில்லை. மனைவியாரை மட்டுமே கண்டார்.  விண்ணிலே உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த இறைவன், " உனது அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். பழுதிலாதவனே, நீ உனது மனைவியோடு நம்முடன் வருவாயாக என அருளி , இருவரையும் சிவலோகத்தில் இருத்தினார்.

இயற்பகை நாயனார்  வீடு பேறு பெற்ற திருநாளான  மார்கழி உத்திரத்தன்று இத்திருக்கோவிலில் மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இயற்பகையார் சன்னதியிலும் அவை நடத்தப்பெற்றபின், ஐக்கிய தீபாராதனை நடைபெறுகிறது. நகரத்தார் பெருமக்கள் மிக்க ஈடுபாட்டுடன் இவ்விழாவைச் சிறப்பாக நடத்துகிறார்கள். நகரத்தார் விடுதியில் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.

வேறு எவரும் செய்ய முடியாத செயலைச் செய்து காட்டிய இயற்பகையார் நம் அனைவராலும் வணங்கப்படும் உயர்ந்த நிலையை அடைந்தார். அது மட்டுமா? அப்புகழுக்கு உறுதுணையாக விளங்கிய அவரது மனைவியார் கற்புக்கரசிக்கும் அதில் பங்கு உண்டு அல்லவா?. இருவருமே உலகியலுக்குப் பகையாக விளங்கிக் காட்டிய தனிப்பெரும் பெருமை வாய்ந்தவர்கள். அவர்தம் பாத மலர்களை வாழ்த்தி வணங்குவோமாக.