Wednesday, February 21, 2018

இரு பிறவியிலும் சிவ பக்தி செய்த செங்கணார்

ஜம்புகேசுவரம் 
நாம் இப்போது காணும் திருவானைக்கா (வல்), ஒரு காலத்தில் யானைகள் மிகுந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் காவிரி ஆறு ஓடுவதால் யானைகள் வசிக்க ஏற்ற பகுதியாக இருந்தது. வடமொழியில் இதைக் கஜாரண்யம் என்பார்கள். இங்கு வேதமே நாவல் மரமாகி அதனடியில் ஜம்புகேசுவரரை வழிபட்டதாக ஸ்தல புராணம் குறிப்பிடுகிறது. 

ஸ்தல புராணச் சுதைச் சிற்பம் 
காட்டு யானைகள் பல இருக்கும்போது, ஒரு யானை மட்டும், முற்பிறப்பின் தொடர்ச்சியாலோ என்னவோ நாவல் மர நீழலில் இருந்த இறைவனைக் காவிரி ஆற்றிலிருந்து நீரைத் தனது துதிக்கையால் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. அதே சமயம், சிவலிங்கப் பெருமான் மீது சருகுகள் விழாத படித் தனது வாயினால் வலையைப் பந்தல் போல அமைத்து சிலந்தியொன்று வழிபட்டது. யானை அபிஷேகம் செய்யும்போது அப்பந்தல் சிதைந்து போகவே, கோபம் கொண்ட சிலந்தி  அந்த யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. வலி பொறுக்கமுடியாமல் யானை, தனது துதிக்கையைத் தரையில் தேய்த்தது. இதனால் இரண்டுமே உயிர் நீத்தன. யானைக்கு முக்தி கொடுத்த ஈசன், கோபித்த சிலந்திக்கு இன்னூம் ஓர் பிறவி கொடுக்கத் திருவுள்ளம் பற்றி, அச்சிலந்தியை சோழ வம்சத்தில் பிறக்கச் செய்தார்.

சோழமன்னன் சுபதேவனுக்கும் அவனது மனைவி கமலவதிக்கும் பல்லாண்டுகள் மக்கட்பேறு இல்லாதிருக்க, இருவரும் தில்லைக் கூத்தனைப் பிரார்த்தித்த பயனாகக்  கமலவதி கருவுற்றாள். மகவு பெறும் வேளையில் அரசவைக்கு வந்த சான்றோர், இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகைக்குப் பிறகு பிறந்தால் உலகையே ஆள்வான் என்று சொல்லவே, அரசியாரும், தன்னைத்  தலை கீழாகக் கட்டித்தொங்க விடுமாறு பணித்தார். அதனால்  ஒரு நாழிகைக்குப் பின்  குழந்தையை ஈன்றெடுத்தார். முற்பிறப்பில் யானையிடம் கொண்ட கோபத்தால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. தனது குழந்தையை அரசியார் அரவணைத்து, உச்சி மோந்து, " என் கோ செங்கணானோ " என்று கூறிவிட்டு உயிர் நீத்து விட்டார். 

கோச்செங்கணானாகிய தவப்புதல்வனைச்  சுபதேவன் அன்புடன் வளர்த்து அவனுக்கு சோழர்குல அரசுரிமையைத் தந்து முடி சூட்டிய பிறகு சிவலோகம் சேர்ந்தான். முற்பிறப்பில் இறைவன் பால் கொண்ட எல்லையற்ற பக்தியின் தொடர்ச்சியாகக் கோச்செங்கட்சோழர் , வெண்ணாவலின்  கீழ் வீற்றிருக்கும் வேத நாயகனுக்குப் பணிகள் பல செய்தார். 

திருநல்லூர் மாடக் கோயில் 
பின்னர் சிவாலயங்கள் பலவற்றை யானை ஏறமுடியாதபடி மாடக்கோயில்களாகக் கட்டுவித்தார். அவ்வாறு எழுபது மாடக் கோயில்கள் கட்டினார் என்பர். தேவார மூவர் வாக்கிலும் இவர் கட்டிய மாடக் கோயில்கள் பல போற்றப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, கீழ்வேளூர், சிக்கல், தேவூர், நல்லூர், நாலூர், குடவாயில், நன்னிலம் , ஆவூர் ஆகிய சில ஊர்களைக் குறிப்பிடலாம். நிகழும் பிறவியில் சிவபக்தி செய்வதே முன்செய்த நல்வினைப் பயன் என்னும் போது தொடர்ந்து இரண்டாவது பிறவியிலும் சிவபக்தி செய்த இம்மன்னரைப் போற்ற வார்த்தைகளே இல்லை. 

சிவாலயங்களுக்கு அமுது படையல் செய்ய  நிவந்தங்களும் ஏற்படுத்தித் தந்ததாகப் பெரிய புராணம் இவரைச் சிறப்பிக்கிறது. பின்னர் தில்லைக்குச் சென்று பன்னாள்  பணி  செய்து, மறையவர்க்கு மாளிகைகள் அமைத்துத் தந்தார். இவ்வாறு சிவப்பணி செய்துவந்த நாயனார், மாசி மாத சதயத் திருநாளன்று பொன்னம்பலவனின் திருவடி நீழலை அடைந்தார். 
   
திருவானைக்காவில் குருபூஜை 
மாசி சதயத்தன்று திருவானைக்காவில் கோச் செங்கட்சோழ நாயனாரது குருபூஜை மிக்க சிறப்பாக நடை பெறுகிறது. சிவனடியார்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். திருமுறைப் பாடல்கள் ஒலிக்கின்றன. நாயனாரது விக்கிரகத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சன்னதிக்கு முன்பு அடியார் பெருமக்கள் புஷ்பப் பந்தல் அருமையாக அமைத்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். நாயன்மாரது சரித்திரத்தை பெரியவர் ஒருவர் சொல்லக்கேட்டு மெய் சிலிர்க்கிறோம். மாலையில் உற்சவ மூர்த்தி புறப்பாடாகித் திருவீதியில் எழுந்தருளச் செய்யப்படுகிறது. இவ்வாறு நாயனார் பால் மிக்க அன்போடு வழிபாடு ஆற்றும் அத்துணை அடியார்களுக்கும் நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். குருவே சிவத்தை நமக்கு எளிமையாகக் காட்டும் கருணையை உடையவர். எனவேதான் குருபூஜையை பக்தி சிரத்தையுடன் செய்தால் சிவபக்தி தானாகவே வந்து விடும். 

திருத்தொண்டர்களது பெருமையை யாரே அறிவார் ?