Thursday, January 15, 2015

இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனார்

நான்கு வேதங்களும் ஓலமிட்டு அலறியும் காண மாட்டாத பரம்பொருள் தனது பரம பக்தனைப் பார்த்து ஓலம் இடுகிறான். தன்  அடியானுக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் பரமன் இதையும் செய்கிறான். எப்படி ஓலம் இட்டான் தெரியுமா? " இயற்பகை முனிவா  ஓலம் " என்று மறைகள் ஓதும் வாயால் ஓலமிட்டான். அப்படியானால் அந்த பக்தர்   முனிவரா என்றால் நாம் நினைப்பதுபோல ஜடாமுடியும், காவி ஆடையும்,கமண்டலமும் தரித்த கோலத்தவர் இல்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே, சிவத்தொண்டு செய்து வந்த ஒப்பற்ற அடியார் அவர். உலகத்தில் பெரும்பாலும்  சராசரி மனிதர்களாக வாழ்ந்துவிட்டுப் போவார்களையே நாம்  காண்கிறோம். அசாதாரண செயல் செய்பவர்களை  " செயற்கரிய செய்பவர்கள் " என்கிறோம். அவர்களே பெரியோர் என்று தமிழ் இலக்கியமும் வாயாரப் புகழ்கிறது.

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படும் இயற்பகை நாயனாரது அவதாரத் தலம், பூம்புகாருக்கு அண்மையில் உள்ள திருச் சாய்க்காடு என்பது. இதனைச் சாயாவனம் என்றும் அழைப்பர். இங்குள்ள சிவாலயம் திருஞானசம்பந்தராலும்,திருநாவுக்கரசு  சுவாமிகளாலும் பாடப்பெற்றது.  சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்தை அடையலாம். இதற்கு மிக அண்மையில் பல்லவநீச்வரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.

சாயாவனத்தில் உள்ள சிவாலயம் குதிரை பூட்டப்பெற்ற தேர் வடிவைக் கொண்ட மாடக் கோவில். இதைத் தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இந்திரன் முயன்றபோது ,கலக்கமடைந்து அம்பிகையானவள் தனது குயில் போன்ற குரலால் கூவியதால் கூவென்ற கோதை என்றும் கோஷாம்பிகை என்றும் வழங்கப்படுகிறாள். ஸ்வயம்பு மூர்த்தியாக மூலவர் , இரத்தின சாயாவனேஸ்வரர் என்ற பெயருடன் அற்புத தரிசனம் தருகிறார்.

உட்ப்ராகாரத்தில் வெவ்வேறு நிலையில் உள்ள கணபதி மூர்த்தங்களைத் தரிசிக்கிறோம். மகாமண்டபத்தில் வில்லேந்திய வேலவரின் சன்னதி இருக்கிறது. இங்கிருந்தபடியே, சுவாமியையும், அம்பிகையையும், இவ்விருவருக்கு இடையில் உள்ள வில்லேந்திய வேலவரையும் ஒருங்கே தரிசனம் செய்கிறோம். வெளிப் பிராகாரத்தில் இயற்பகை நாயனார்,தனது மனைவியாரான கற்புக்கரசியுடன் அருட் காட்சி அளிக்கிறார்.

எதைக் கேட்டாலும் இல்லை என்றும் அப்புறம் பார்க்கலாம் என்றும்  சொல்லும் காலம் இது.  தன்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார் என்பதால், இவரை, சுந்தரமூர்த்தி நாயனார், " இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் " என்று சிறப்பித்தார். வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் , சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டவர். அவரது மனைவியாரும் தனது கணவனாரின் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் செய்து வந்த உத்தமி.  இவரது பெயரைக் கற்பினுக்கரசியார் என்று வழங்குகிறார்கள்.

இவர்களது பெருமையை உலகிற்குக் காட்டவேண்டி, சிவபெருமான் ஓர் அந்தண வேடம் பூண்டு நாயனாரது மனைக்கு எழுந்தருளி, யான் கேட்பது ஒன்று உன்னிடம் உண்டு அதனைக் கொடுக்க சம்மதமானால் சொல்லுகிறேன் என்றார். அதுகேட்ட இயற்பகையார்,  அவரை வணங்கி,  என்னிடம் இருப்பது அனைத்தும் சிவபிரானது அடியவர்களுடைய உடைமை. எதனைக் கேட்டாலும் மகிழ்வுடன் அளிப்பேன்.இதற்கு ஐயம் ஏதும் இல்லை என்றார்   வந்த சிவ வேதியர், " உனது மனைவியை வேண்டி வந்தனம்" என்றவுடன் முன்னைவிட மிகவும் மகிழ்ந்து ,  இது எனக்கு " எம்பிரான் செய்த பேறு "  என்றவறாகத் தனது கற்பில் சிறந்த மனைவியாரிடம் " உன்னை இந்த வேதியர்க்குக் கொடுத்தேன் ": என்றார்.  அதுகேட்ட மனைவியார் , கலக்கமுற்று, மனம் தெளிந்த பின்னர், "  இவ்வாறு தாங்கள் அருள் செய்ததை யான் செய்வதை விட வேறு பேறு உண்டோ " என்று தனது " தனிப் பெரும் கணவனாரை " வணங்கி, வேதியரது திருவடிகளைப் பணிந்து நின்றார்.

இன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், " யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்" என்றார். அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், " இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் " என மொழிந்தார்.

இவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தனது   மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாய்க்காட்டு எல்லை வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில் , அன்பனின் பக்தியை மெச்சிய இறைவன், திரும்பவும் ஆபத்து வந்ததுபோல, " இயற்பகை முனிவா ஓலம்" என்று அழைத்தான். அதோடு, " செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் " என்று ஓலமிட்டான். அதுகேட்ட இயற்பகையார், " இதோ வந்தேன், தங்களுக்குத் தீங்கு விளைப்பவர்  இன்னும் உளரோ? " என்று வாளை  ஓங்கியவராக வந்தார். அப்பொழுது அங்கு அந்தணரைக் காண வில்லை. மனைவியாரை மட்டுமே கண்டார்.  விண்ணிலே உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த இறைவன், " உனது அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். பழுதிலாதவனே, நீ உனது மனைவியோடு நம்முடன் வருவாயாக என அருளி , இருவரையும் சிவலோகத்தில் இருத்தினார்.

இயற்பகை நாயனார்  வீடு பேறு பெற்ற திருநாளான  மார்கழி உத்திரத்தன்று இத்திருக்கோவிலில் மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இயற்பகையார் சன்னதியிலும் அவை நடத்தப்பெற்றபின், ஐக்கிய தீபாராதனை நடைபெறுகிறது. நகரத்தார் பெருமக்கள் மிக்க ஈடுபாட்டுடன் இவ்விழாவைச் சிறப்பாக நடத்துகிறார்கள். நகரத்தார் விடுதியில் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.

வேறு எவரும் செய்ய முடியாத செயலைச் செய்து காட்டிய இயற்பகையார் நம் அனைவராலும் வணங்கப்படும் உயர்ந்த நிலையை அடைந்தார். அது மட்டுமா? அப்புகழுக்கு உறுதுணையாக விளங்கிய அவரது மனைவியார் கற்புக்கரசிக்கும் அதில் பங்கு உண்டு அல்லவா?. இருவருமே உலகியலுக்குப் பகையாக விளங்கிக் காட்டிய தனிப்பெரும் பெருமை வாய்ந்தவர்கள். அவர்தம் பாத மலர்களை வாழ்த்தி வணங்குவோமாக.