Sunday, October 7, 2018

தலையூரில் உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை

அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிவபெருமானுக்கு வெவ்வேறு வகையில் ஒப்பற்ற தொண்டு செய்து வந்தனர் என்பதைப் பெரிய புராணம் மூலம் அறிகிறோம். அதில் சிலர்  பூமாலை சார்த்தியும்,சிலர்  பாமாலை சார்த்தியும், கோயில்கள் எழுப்பியும், மனத்தால் கோயில் கட்டியும், அடியார்களுக்கு அன்னமளித்தும், சிவனடியார்கள் எதைக் கேட்டாலும் தயங்காது கொடுத்தும், இன்னும் சிலர் தன் உடைமைகள் அனைத்தையும் வழங்கியும் தாமே தனக்கு நிகராக விளங்கினர். ஆரூர்ப் பெருமானே, சுந்தரருக்கு அடியார் பெருமை பாடுக என்று அடி எடுத்துத் தந்தார் என்றால் தொண்டர் தம் பெருமையை யாரால் அறிய முடியும் ? 

 திருத்தலையூரில் உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை என்றால்  நம்மில் பெரும்பாலோர்  தலையூர் என்ற ஊர்ப் பெயரையே  கேள்விப்பட்டதில்லை என்கின்றனர். நாயனாரது பெயரையும் கேட்டதில்லையாம். அதைவிட அதிசயம் என்ன என்றால் குருபூஜை என்றால் பிறந்த நாளா என்கின்றனர். உள்ளூர்க்காரர்களுக்கே பலருக்கு இந்த சந்தேகம் வந்துவிட்ட நிலையில் நமக்குத் தெரிந்த அளவில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். 

தலையூர் கோயிலும் பொய்கையும் 
தலையூர் என்பது சோழ நாட்டிலுள்ள ஊர் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். ஆனால் சோழ நாட்டில் இதே பெயரில் இரண்டு இடங்கள் உள்ளன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் ஒன்றும், முசிறிக்கு அருகில் ஒன்றுமாக இரு ஊர்கள் இதே பெயரில் உள்ளன. இரண்டுமே பழமையான சிவாலயங்களைக் கொண்டவை. இரண்டிலுமே, நாயனாரது திருவுருவம் உள்ளது. நாயனார் பொன்னம்பலவாணனின் சேவடி நீழலை அடைந்த புரட்டாசி மாத அசுவினி நக்ஷத்திரத்தன்று இரு ஊர்களிலுமே குருபூஜை நடை பெறுகிறது. இதே போன்று இளையான்குடி மாற நாயனாரது ஊரான இளையான்குடி என்ற பெயரில் திருநள்ளாற்றுக்கு அருகில் ஒன்றும், பாண்டிய நாட்டில் ஒன்றுமாக இரு இடங்கள் உள்ளன. 

தலையூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பசுபதியார் என்பவர் ஆவார். இவர் மலைவல்லியைப் பாகமாகக் கொண்ட சிவபிரானிடத்தில் தூய அன்புடன் அடிமைத் திறம் பூண்டு வந்தார். வேதத்தின் பயனாகிய உருத்திர பாராயணத்தை இடைவிடாது பகலிலும் மாலையிலும் செங்கமலங்கள் விளங்கிய பொய்கையில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தலை மீது கூப்பிய கையினராய் நியமத்துடன் குறைவறச் செய்து வந்தார். இதனால் உமைபாகமுடைய பிரான் பெரிதும் மகிழ்ந்து நாயனாரைச் சிவபுரியை அடையுமாறு பெருங்கருணை புரிந்தார். பேரன்போடு உருத்திரத்தை ஜபித்து வந்ததால் அவரை உருத்திர பசுபதியார் என்ற நாமத்தால் உலகத்தவர் அழைக்கலாயினர். 

நாயன்மார்களது சரித்திரங்கள் நமக்குப் பல்வேறு பாதைகளைக் காட்டுபவை. அவற்றில் ஏதேனும் ஒன்றையாவது நாம் முடிந்தவரை பின்பற்றுவதே பெரிய புராணம் படிப்பதன் பயனும் ஆகும். நாயன்மார்களைப் போல எவராலும் எக்காலத்தும் இணையாக முடியாது என்றாலும் அவர்கள் செய்த பணியை நமக்கு முடிந்த அளவிலாவது பின்பற்றலாம். கோவில் திருப்பணி செய்வதால் எல்லோரும் கோச்செங்கட் சோழ நாயனார் ஆகி விட முடியுமா? இதனை அறியாது தற்காலத்தில், திருப்பணிச் செம்மல்,திருப்பணிச் சக்கரவர்த்தி, திருப்பணித் திலகம் என்று பல பட்டங்களைத் தந்து விடுகின்றனர். கொடுப்பவர்கள் தான் ஏதோ அன்பு மிகுதியில் இப்படிச் செய்கிறார்கள் என்றால் அப்பட்டங்களை வாங்கிக் கொள்பவர்களாவது அவற்றை மறுக்கலாம். போதாக் குறைக்கு அவர்களை அவதார புருஷர் என்றும், நாயன்மார் என்றும் புகழாரம் சூட்டுகின்றனர். இவை யாவும் சிவாபராதங்களே. 
கொல்லுமாங்குடிக்கு அருகில் உள்ள தலையூரில் நாயனாரது குருபூஜையை வெளியூர் அன்பர்கள் செய்து வருகின்றனர். ஏனைய நாட்களில் ஒரே கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் புரட்டாசி அசுவினியன்று களை  கட்டுகிறது. 

பாண்டிச்சேரியிலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து ஹோமம்,அபிஷேக ஆராதனை ஆகியவற்றை செய்கிறது. ருத்ர பாராயணமும் நடை பெறுகிறது. 

நீரில் நின்றபடி ருத்ர ஜபம் 
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அன்பர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக இங்கு வந்து ருத்ர பாராயணம்  செய்கின்றனர். கழுத்தளவு நீரில் இவ்வாறு செய்வதைக் காணும்போது நாயனார் பல நாட்கள் இதேபோல் நீரில் ஒருமைப் பட்ட மனத்துடன் செய்த வரலாற்றைப்  பெரிய புராணம் வாயிலாக எண்ணிப் பார்க்கிறோம். 

இருந்த இடத்தில் இருந்து கொண்டு குருபூஜை செய்கிறேன் என்று சொல்லிக் கொள்வதை விட நாயன்மார்கள் அவதரித்த இது போன்ற கிராமக் கோயில்களுக்கு அன்பர்கள் சென்று இவ்வைபவங்களில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். சமயச் சான்றோர்கள் மக்களை இதற்கு ஆட்படுத்த வேண்டும். இவை எல்லாம் நடவாத வரை, மக்களுக்கு ஊர்ப் பெயரோ, நாயன்மார் பெயரோ குருபூஜை என்று நடைபெறுகின்றது என்றோ தெரிய வாய்ப்பு இல்லை. கேட்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப் படுத்த வேண்டியவர்கள் முன் வர வேண்டாமா ?