Sunday, October 26, 2014

திருக்கொள்ளம்பூதூரில் ஓடத் திருவிழா

இதுவரை  எத்தனை பிறவிகள் எடுத்திருப்போமோ , நமக்குத் தெரியாது. இன்னும் எத்தனை    பிறவிகள் எடுக்கப்போகிறோமோ , அதுவும் தெரியாது. பிறவியைக் கடல் போன்றது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் , " பெருங்கடல்" என்று வள்ளுவர் சொன்னார். இனிப்பிறவாதபடிக் காப்பாய் என்று இறைவனை வேண்டுவார்கள் பெரியோர்கள். ஆகவே, கடலைக் கடப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. நடுக்கடலுள் அகப்பட்டவன் சாதாரணத் துடுப்பைக் கொண்டு எப்படிக் கரை சேர முடியும். அதனால் தான், பஞ்சாக்ஷரமாகிய துடுப்பைக் கொண்டு கரை சேரும் வழியை அருளுவாய் எனத் திருவாசகம் வேண்டுகிறது.

சத்குருநாதனது அருளால் பிறவிக்கடலைத் தாண்டி இறைவனை அடைவது சுலபமாகிவிடுகிறது. பிறவியாகிய பெரிய கடலைத் தாண்டுவதற்குத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களை ஒதிவந்தாலே போதுமானது என்கிறார் நம்பியாண்டார் நம்பிகள். ஏனென்றால் அப்பதிகங்களே  தோணியாக ஆகி, நம்மை ஏற்றிக்கொண்டு கரை சேர்ப்பன என்று அவர் அருளினார்.  அவை ஞானத் தமிழ்ப் பனுவல்கள் என்பதால் அவ்வளவு சக்தி வாய்ந்தவைகளாக ஆகின்றன.

சம்பந்தப்பெருமான் தல யாத்திரையாக சோழ நாட்டுத் தலங்களைத் தரிசித்து வந்தபோது, காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் மறுகரையில் இருந்து பஞ்சாரண்யங்களுள் ஒன்றான வில்வாரண்யம்  தெரிவதைக்  கண்டார். அந்த ஆறு,  முள்ளியாறு என்றும் வழங்கப்படும்.   வில்வாரண்யத்தின் மற்றொரு பெயர் திருக் கொள்ளம் பூதூர்  என்பதாகும். கூவிளம் பூதூர் என்பது இவ்வாறு மாறிற்று என்பர். கூவிளம் என்பது வில்வத்தைக் குறிக்கும்.

வில்வாரண்யத்தில் சுயம்பு மூர்த்தியாகச் சிவபெருமானைத்தரிசித்த பிரம தேவன் , அங்கு ஒரு தீர்த்தம் தனது பெயரில் உண்டாக்கி , இறைவனை வழிபட்டு வந்தான். இதனால் மகிழ்ந்த பெருமான், பூத கணங்களோடும், உமா தேவியாரோடும் எழுந்தருளி, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளி,பிரமனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அருளியதாகத் தல புராணம் கூறுகிறது.   எனவே,இத்தலம், பிரம வனம் என்றும்,பஞ்சாக்ஷர புரம் என்றும் பெயர்கள் பெற்றது. தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத் திவலைகள் சிதறி இங்கு விழுந்து, வில்வ மரங்களாக மாறி, வில்வ வனம் ஆகியது என்பர்.

பொதிகை மலையிலிருந்து இங்கு எழுந்தருளிய அகத்திய முனிவர் , வெட்டாற்றில் நீராடி, இறைவனை வழிபட்டு , ரிஷப வாகன தரிசனம் பெற்றார். நதிக்கும் அகஸ்திய காவேரி என்ற பெயர் ஏற்பட்டது. அர்ச்சுனன் இப்பெருமானை வழிபட்டுப் பாசுபதம் பெற்றதால், காண்டீப வனம் என்று இத்தலம் பெயர் பெற்றது. கொள்ளை அடிக்கும் எண்ணத்தோடு  இத்தலத்திற்கு வந்து இரவு முழுதும் கண் விழித்திருந்த திருடனும் நற்கதி பெற்றான். இத்தலத்தின் அருகே, பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான இடைக்காட்டுச் சித்தரின் கோயில் அமைந்துள்ளது.

முல்லைவனமாகிய திருக்கருகாவூரில் உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில் கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்)   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள வலங்கைமானிலிருந்து , குடவாசல் செல்லும் பாதையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். செல்லூர் நிறுத்தத்தில் இறங்கி மேற்கே 1 கி.மீ. தொலைவு நடந்து வந்து கோவிலை அடையலாம்.   கும்பகோணத்திலிருந்து குடவாசல்,ஓகை வழியாகக் கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கியும் வரலாம். குடவாசலில் இருந்து செல்லூர் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

செல்லூரில் உள்ள குணாம்பிகை சமேத கைலாச நாத சுவாமி ஆலயம் தொன்மையானதும் தரிசிக்க வேண்டுவதும் ஆகும். பிராகாரத்தில் எங்கு நோக்கினாலும் நந்தியாவட்டை மரங்கள் பூத்துக் குலுங்குவதைக்  காணலாம். தனது கலைகளை இழந்த சந்திரன்  இங்கு வழிபட்டு, மீண்டும் அக்கலைகளைப் பெற்றான்.சந்திரனும் சூரியனும் வழிபட்ட புவன பைரவ மூர்த்தி  சக்தி வாய்ந்தவர். வேண்டிய வரம் யாவும் தருபவர். நாகநாதர், சட்டைநாதர் ஆகிய லிங்கமூர்த்திகளின் சன்னதிகள், மூலஸ்தானத்தின் இருபுறமும் அமைந்துள்ளன. இடைவிடாது சித்தர்கள் வழிபடும் புண்ணிய மூர்த்தியாகக் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியவளாகக்  குணா ம்பிகையும் அருட்காட்சி வழங்குகின்றனர். இந்த ஆலயம் திருப்பணி பெற்று, 2.5.2013 அன்று  கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுப் புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

செல்லூரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது அபிவிருத்தீச்வரத்தில் உள்ள அபிமுக்தீச்வரர்  ஆலயம். இந்த ஆலயம் மேற்கு நோக்கியது. திருப்பணி செய்யப் பெற்று  வண்ணப்பூச்சுடன்  அழகுற  விளங்குகிறது.

திருக்கொள்ளம்பூதூர் சிவாலயத்தை முழுதும் கருங் கல்லால் அமைத்து மகத்தான சிவபுண்ணியச்  செயலைச் செய்துள்ளவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள். நச்சாந்துப்பட்டி பெ. ராமன் செட்டியாரும்,பெ.லட்சுமணன் செட்டியாரும் 1930 ல்  இக்கருங்கல் திருப்பணியைத் தொடங்கி,  ஈசுவர ஆண்டு ஆனி 14 ம் தேதி ஞாயிறன்று ( 27.6.1937 ) பெரும் பொருட் செலவில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். இவர்களது  உருவச்சிலைகள் அம்பாள் (சௌந்தர நாயகி ) சன்னதியின் முன்னர் அமைக்கப்பட்டுள்ளது. வீதியில் சத்திரம் ஒன்றையும் அமைத்துள்ளார்கள்.

கோயிலுக்கு முன் புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.கோவிலின் முன் வாயிலில் கோபுரம் இல்லை. ரிஷப வாகன சுதை காணப்படுகிறது , வாயிற் சுவரில் சம்பந்தர்  ஆற்றில் நாவன்மையால் ஓடம் செலுத்திய அற்புதத்தைச்  சுதை வடிவில் வண்ணப் பூச்சோடு அமைத்துள்ளார்கள். இருபுறமும் விநாயகர் திருவுருவங்கள் உள்ளன.சலவைக் கல்லில் தலத்  திருப்பதிகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டினால் வலப்புறம் வசந்த மண்டபம் உள்ளது. இதை ஒட்டி மஹா லக்ஷ்மியின் சன்னதி உள்ளது.இரண்டாம் பிராகாரத்தில் பூச்செடிகளும் மரங்களும் வளர்ந்துள்ளன. அடுத்த வாயிலில் ஐந்து நிலை கோபுரம் உள்ளது. இருபுறமும் பொய்யாக் கணபதி,தண்டபாணி திருவுருவங்கள் உள்ளன.

 உட்பிராகாரத்தில் மடைப்பள்ளியும், நால்வர், ஆதி வில்வமரம், வலம்புரி விநாயகர், சோமாஸ்-கந்தர்  ஷண்முகர், மகாலக்ஷ்மி ,பள்ளியறை, பைரவர்,நவக்கிரகங்கள் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். கோஷ்டங்களில்  கணபதி,தக்ஷிணாமூர்த்தி,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை ஆகிய மூர்த்திகளைத்தரிசனம் செய்கிறோம். அம்பிகையின் சன்னதி தெற்கு நோக்கியது. அழகியத் திருவுருவக் காட்சியை நமக்கு அருளுகிறாள் அன்னை.  மூலவரான  வில்வாரண்ய மூர்த்தியின் அற்புதக் காட்சியைத் தரிசித்துப் பிறவி பெற்ற பயனை அடைகிறோம்.

திருக்கொள்ளம்பூதூரைத் தரிசிக்கத் திருஞானசம்பந்தர் அடியார்களுடன் எழுந்தருளியபோது வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மறுகரையில் உள்ள ஆலயத்தை அடையப் பரிசில் மூலமாகவே செல்ல வேண்டியிருந்தது. வெள்ளத்தால், படகு விடுவோரும் அப்போது இல்லாததால் , சம்பந்தர், அடியார்களோடு பரிசிலில் ஏறித் தனது நாவன்மையே கோலாகக் கொண்டு " கொட்டமே  கமழும்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் துவங்கியதும், ஓடம் தானாகவே அந்த ஆற்றில் செல்லத் துவங்கியது. " ஓடம் வந்து அணையும் " என்ற பாடலை அருளும் போது பரிசில்  மறுகரையை வந்து அடைந்தது, இந்த அற்புதத்தைச்  செய்தவாறு அப்பதிகத்தை நிறைவு  செய்தபடி, ஆலயத்தை வந்தடைந்து பெருமானைத் தரிசித்தார் சம்பந்தர் என்று பெரிய புராணம் கூறுகிறது.

வெட்டாற்றின் கரையில் பல்லக்கு.மறுகரையில் தெரிவது நம்பர் கோயில்
இவ்வாறு வெட்டாற்றில் ஓடம் செலுத்தி ஞான சம்பந்தர் அற்புதம் செய்ததை ஆண்டு தோறும் ஐதீக விழாவாக நடத்தி வருகிறார்கள். ஐப்பசி அமாவாசையைத் தொடரும் பிரதமை அன்று, இவ் விழா நடைபெறுகிறது. வெளியூர் அன்பர்கள் பலர் இதனைத் தரிசிக்க வருகின்றனர். இரவு சுமார் 10 மணி அளவில் திருஞான சம்பந்தர் , அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கோவிலில் இருந்து எழுந்தருளுகிறார். திரு வீதி எங்கும் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் பெருமானுக்கு உற்சாக வரவேற்பு. வெடி மற்றும் வாண வேடிக்கை முழக்கம் ஒருபுறம். இரவு சுமார்  1 மணிக்கு ஆற்றங்கரையை அடைகிறது பல்லக்கு.

விழாக்காண வந்தவர்கள் படகில் ஏறிக்கொண்டு மறு கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார்கள். நிறைவாக ஞானசம்பந்தப்பெருமான் பரிசிலில் எழுந்தருளுகிறார். அக்கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார். அங்கு ஒரு சிறிய  சிவாலயம் உள்ளது. அங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முடிந்தவுடன், மறு நாள் விடியற்காலை சுமார் 5 மணிக்குத் திருப்  பதிகம் பாடியவாறே ஒடமேறி த் திருக் கொள்ளம்பூதூர் வந்தடைகிறார் சம்பந்தர்.
இதே சமயத்தில் கோயிலில் இருந்து சுவாமி அம்பிகையோடு ரிஷப வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியில் சம்பந்தப்பெருமானுக்கு சுமார் 6 மணி அளவில் எதிர் காட்சி அளித்தருளுகிறார். இந்த அருட் காட்சியை நாமும் கண்டு நெகிழ்கிறோம். கண் பெற்ற பயன் பெறுகிறோம். சம்பந்தர் பதிகத்தை நாமும் பாடுகிறோம். நதி வெள்ளத்தைத் தாண்டும் அற்புதம் செய்த அப்பதிகத்தை ஓதியதால் பிறவிப் பெருங்கடலையும் நிச்சயமாக நீந்தி வீடு பெறுவோம் என்ற நிறைவுடன் ரிஷப வாகன தரிசனம் கண்ட கண்கள் வேறொன்றையும் காண வேண்டுமோ என்ற பேரின்பத்தில் திளைத்துக்   கண்கள் நீர்மல்க அவ்விடத்தை நீங்க மனமில்லாமல் நிற்கிறோம்.  

Thursday, October 9, 2014

கழுத்தளவு நீரில் நின்று ருத்ர ஜபம்

புரட்டாசி மாத அச்வினி நன்னாள் - அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான உருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ பரமேச்வரனது குஞ்சித பாத கமலங்களை அடைந்ததை முன்னிட்டு அந்நாளில்  அவரது குருபூஜை  பலதலங்களில் நடைபெறுகிறது. "உருத்திர பசுபதிக்கும் அடியேன் " என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பெற்ற இவர் தலையூர் என்ற தலத்தில் தோன்றியவர். தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்களில் ஊர்கள் இருக்கின்றன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் , ஆக இரு இடங்கள் இவ்வாறு உள்ளன. இவ்விரு இடங்களிலும் உள்ள சிவாலயங்களில்  உருத்திர பசுபதி நாயனாரது மூர்த்தம் உள்ளது. குருபூஜை இந்த இரண்டு இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  அதைக் கொண்டாடிவிட்டு அடுத்த ஆண்டு புரட்டாசி அசுவினி அன்று நாயனாரது நினைவோ ஸ்ரீ ருத்ரத்தின் நினைவோ வருவதைக் காட்டிலும், நாயனார் நமக்குக் காட்டிய சிவபக்தியையும், நியமத்தோடு நாள் தோறும் அவர் ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்து வந்ததையும் கடைப் பிடிப்பதே சிறந்தது.

பசுபதி என்ற இயற்பெயரோடு விளங்கிய நாயனார், அனுதினமும் கழுத்தளவு நீரில் நின்று ,இரு கைகளையும் உச்சிமேல் குவித்துக் கொண்டு ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்து வந்ததைப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. மறையின் பயனாக ருத்ர மந்திரம் திகழ்வதை, சேக்கிழார் பெருமான்,

அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை
வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே

திருமலர்  பொகுட்டிருந்தவன் அனையவர் சில நாள்                                                      

ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.

இவ்வாறு இரவும் பகலும் முறை வழுவாது ருத்ர பாராயணம் செய்தமையால் உலகத்தோர் அவரை ருத்ர பசுபதியார் என்று அழைக்கலாயினர்.
பாராயணம் செய்வோரது கவனத்திற்குப்  பெரியபுராணத்திலிருந்து உணரப்படும் கருத்துக்களைக் காண்போம். பாராயணம் செய்வோருக்கு பக்தியும் ஈடுபாடும் மிகமிக அவசியம் என்பதை ,

" தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி                                                          
   நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்."

என்ற வரிகள் நமக்குக் காட்டுகின்றன.

அவரது பாராயணம் அரும் தவமாகிறது. கழுத்தளவு நீரில் அத்தவச்சுடர் நிற்பதை ,

" நீரிடை நெருப்பு எழுந்தனைய " என்று காட்டுவார்  தெய்வச் சேக்கிழார். பிரமதேவனைப்போல் ஜொலிக்கிறார் நாயனார். அந்த வேத மந்திரத்தை நியதியுடன் ஓதிய நிலையோடு பெருமானது   " ஆடு சேவடி அருகுற அணைந்தனர்."

இது எதனால் நிகழ்ந்தது? ஸ்ரீ ருத்ர பாராயணம் ஸ்ரீ பரமேச்வரனை மகிழ்விப்பது. அதைத்தான் சேக்கிழாரும், " உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்." என்கிறார். நாம் அனு  தினமும் பாவங்களைச் செய்கிறோம். அதற்குப் ப்ராயச்சித்தமாகச் சொல்லப்படுவது ருத்ர பாராயணம். அதனைச் செய்வோரும் செய்விப்போரும் எல்லாப் பாவமும் நீங்குவர். பிணிகளிலிருந்து விடுபடுவர். நீண்ட ஆயுளைப் பெறுவார். மக்கட் செல்வம் பெறுவர். இவ்வாறு அதன் பலன் அளவிடமுடியாததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருளுமாறு இறைவனை ருத்ர மந்திரம் வேண்டுகிறது. நம்மைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்காமல் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறது.

ருத்ர பகவானே! எங்களது பெரியவர்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தவேண்டாம்    (மாநோ மஹாந்த முத மாநோ அர்ப்பகம் மாந உக்ஷந்த முதமான உக்ஷிதம் ) யௌவனர்களையும் ,   கருவிலுள்ள சிசுக்களையும் துன்புறுத்தவேண்டாம்.மேலும் எமது தாய் தந்தையரையும் , பிரியமானவர்களையும் துன்புறுத்தவேண்டாம்.( மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ் தனுவோ ருத்ர ரீரிஷா:) உமது மங்கள உருவத்துடன் எங்களிடம் காக்க வேண்டி வருவீராக.இந்த அழியும் சரீரத்தில் அழியாத சுகத்தை அளிப்பீராக. உமது கணங்கள் சத்ருக்களை அழிக்கட்டும்               (ம்ருடா ஜரித்ரே ருத்ரஸ்தவா நோ அன்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேனா: ) இப்படி பினாகபாணியும், நீலக்ரீவனும் , ஸஹஸ்ராக்ஷனும், கபர்தியும் ,பசுபதியும் ஆகிய பரமேச்வரனை வேதம் துதிக்கிறது. வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாக பஞ்சாக்ஷர மஹா மந்திரம் நடுநாயகமாகத் திகழ்வது இதன் ஒப்பற்ற பெருமையைக் காட்டுகிறது. எனவே ஸ்ரீ ருத்ரத்தின் பெருமைகளை அறிந்து  அதனை ஜபித்து, ஆத்ம பூஜையும், ஆலய பூஜையும் நடைபெற்றால் வீடு மட்டுமல்ல. நாடே நலம் பெறும்.    

Sunday, October 5, 2014

அம்பிகை வடதிசை நோக்கிய சிவத்தலம்

மனோன்மணியாகிய சிவசக்தியின் சன்னதிகள் சிவாலயங்களில் பெரும்பாலும் கிழக்கு அல்லது தெற்குத் திசையையே நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். சுவாமி சன்னதி கிழக்கு  நோக்கியவாறு  இரு க்கும்போது அம்பிகையும் கிழக்கு நோக்கிய வண்ணம் காட்சி தரும் அமைப்பினுக்கு, மதுரை, வட- திருமுல்லைவாயில், மயிலாடுதுறை  போன்ற ஆலயங்களையும் , சுவாமி கிழக்கு நோக்குகையில் அம்பாள் தெற்கு நோக்கிக் காட்சி தரும் தலங்களாகத் திருவலிதாயம்(பாடி), திருவாலங்காடு போன்ற தலங்களையும் சில எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். , சுவாமி மேற்கை நோக்கிக் காட்சி அளிக்கும் தலங்களில் அம்பிகை தெற்கு நோக்குவதை  மயிலாப்பூர், திருவான்மியூர் ,மணக்கால் போன்ற தலங்களிலும், சுவாமி மேற்கு நோக்குகையில் அம்பிகையும் மேற்கு நோக்குவதை சாட்டியக்குடியிலும் தரிசிக்கிறோம். ஆனால் அம்பிகை வடக்கு நோக்கி சன்னதி கொண்டுள்ள  சிவாலயம் , பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருத்துறையூரில் உள்ளது. (இதேபோல் பந்தநல்லூர் பசுபதீச்வரர் ஆலயத்திலும் இறைவனை மணக்க வேண்டித் தவம் புரிபவளாக அம்பிகை வடதிசை நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். இதனை சுட்டிக்காட்டிய அன்பர்க்கு நமது நன்றி).

திருத்துறையூர் என்ற சிற்றூர் , விழுப்புரத்திலிருந்து கடலூர் செல்லும் மார்கத்திலுள்ள இரயில் வண்டி நிலையத்திலிருந்து சுமார்  2 கி. மீ. தொலைவில் உள்ளது. பேருந்து மார்க்கமாக வருபவர்கள், விழுப்புரம்- திண்டிவனம் தேசீய சாலையில் விக்ரவாண்டிக்கு அருகில் உள்ள சுங்கச் சாவடிக்கு அருகே பிரியும் தஞ்சாவூர் சாலையில் பயணித்து, பண்ருட்டிக்கு முன்னால்  வரும் கந்தர்வகோட்டை என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து மேற்கில் சுமார் 4 கி. மீ. செல்லும் பாதையில் சென்றால் ஊரை அடையலாம்.  வழி நெடுகிலும்,கரும்பும்,காய் கறிகளும் பயிரிடப்படும் பசுமையான வயல்கள். பண்ருட்டியிலிருந்து நகரப்பேருந்து நேராக இவ்வூருக்குச் செல்கிறது. கோயில் வாயிலிலேயே இறங்கிக்கொள்ளலாம்.

கிழக்கு வாயில் வழியாக ஆலயத்திற்குள் நுழைகிறோம். இவ் வாயிலிலும் அதற்கு அடுத்த வாயிலிலும் கோபுரம் கட்டப்படவில்லை. நந்தவனத்தில் பூச்செடிகள்  காட்சி அளிக்கின்றன. முதலாவதாகத் தெரிவது, வடக்கு நோக்கிய அன்னையின் சன்னதி. அழகும் கருணையும் ஒருங்கே நமக்குக் காணக் கிடைத்தமைக்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அற்புதமான  கோலம் கொண்டு காட்சி அளிக்கும் இந்த அன்னையை சிவலோக நாயகி என்று அழைக்கிறார்கள். பொதுவாக வடக்கு நோக்கிய கோலத்தைத் தவக்கோலம் என்பர். ஜபம் செய்பவர்களும் வடதிசை நோக்கி அமர்ந்து ஜபம் செய்வதுண்டு. இத்திருக்கோயிலில் இறைவனுக்கு சிஷ்ட குரு நாதர் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு  இப்பெருமான்  தவ நெறி  அருளியதாகப்  புராணம் கூறுகிறது. எனவே அதற்கு முன்பாக அம்பிகையும் பெருமானிடம் உபதேசம் பெற்று, தவக்கோலத்தில் இருப்பதாகக் கொள்ள இடம் உண்டு . ஆகையால் அம்பாளுக்கு சிவலோக நாயகி என்பதைவிட, சிவயோக நாயகி என்ற நாமம்  மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. நமக்கும் சிவஞானத்தைத் தந்தருளுமாறு அம்பிகையைப் பிரார்த்திப்போம். மந்திர உபதேசம் பெற்றுக் கொள்பவர்கள், திருத்துறையூர், ஓமாம்புலியூர், தென்திருமுல்லைவாயில், திருப்பனந்தாள் போன்ற தலங்களில் தக்க குருநாதர் மூலம் உபதேசம் பெற்றுக்கொள்வது சிறப்பு.

இனி, நாம் நந்தி,கொடிமரம்,பலிபீடத்தொடு கூடிய வெளிப்ராகாரத்தை அடைகிறோம். இது விசாலமாக அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய சன்னதியில் ஆறுமுகப்பெருமான் தேவியர்கள் இருபுறமும் நிற்க,மயில் மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார். அழகிய திருவுருவம். இருபுறமும் உள்ள சன்னதிகளில் மகாவிஷ்ணுவையும், பால முருகனையும் தரிசிக்கிறோம். ஸ்தல விருக்ஷமாகச் சரக்- கொன்றை  மரம் அமைந்துள்ளது.

கிழக்கே உள்ள கோஷ்டத்தில்  லிங்கோத்பவமூர்த்தியின் பழமையான திருவுருவத்தையும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியையும் தரிசிக்கிறோம். விமானத்திலும் மூர்த்திகளின் அழகிய சுதை வேலைப்பாடுகளைக்  காண்கிறோம். இதன் அருகாமையில் உள்ள  சுவற்றில் இறைவன் சுந்தரருக்கு உபதேசிக்கும் சிற்பம் காணப்படுகிறது.

கருவறையில் நாகாபரணம் அணிந்து சிஷ்டகுருநாதர்  மேற்குத் திசையை நோக்கியவாறு  தரிசனம் தருகிறார். இப்பெருமான் மீது சுந்தரர் பாடியருளிய ஒரு தேவாரப் பதிகம் உள்ளது. இதில் பெருமானின் புகழோடு, ஊரின் அருகாமையில் ஓடும் பெண்ணை ஆற்றின் வளமும் பேசப்படுகிறது. தனக்குத் தவ நெறி  தந்து அருளுமாறு சுவாமியிடம் இப்பதிகம் மூலம் விண்ணப்பிக்கிறார் சுந்தரர்.இறைவனும் அவ்வாறே அருளிச் செய்ததாகப் பெரியபுராணம் மூலம் அறிகிறோம்.

ஆலயத்திற்கு நேர் கிழக்கில் சைவ சமய சந்தனாசாரியர்களுள் ஒருவரான அருள் நந்தி சிவாசாரியாரின் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தார் இதற்குத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளனர்.  இருபா இருபது, சிவஞான சித்தியார்  ஆகிய ஒப்பற்ற சைவ சித்தாந்த நூல்களை அருளிய இவரை சகலாகம பண்டிதர் என்று குறிப்பிடுவர். " சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை" என்றது, சிவஞான சித்தியார் என்ற இவரது சைவ சித்தாந்த சாத்திர நூலைக் குறிக்கும்.

நடு நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றான திருத்துறையூரை அன்பர்கள் தரிசிப்பதோடு , பிறரையும் தரிசிக்குமாறு ஆற்றுப்படுத்த வேண்டும். இத்தலத்தில் மந்திரோபதேசம் பெறுவதும், ஜபம்,வழிபாடு முதலியன செய்வதும் அளவற்ற நற்பலன்களைத் தருவதை அனுபவ மூலம் அறிந்து கொள்ளலாம். அரை மணி நேரமாவது சன்னதியில் அமர்ந்து தியானம்,பாராயணம் ஆகியவற்றைச்  செய்து, அதோடு இக் கோயிலின் வளர்ச்சிக்கு நம்மாலான உதவியும் செய்தால் நமது யாத்திரை பூரணமாவதை உணர முடியும்.