ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – I
சிவபாதசேகரன்
காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்களாகும்
காசியை வழுத்தும் நாவே நாவெனக் கழறலாமால்
காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும்
காசியை இனிது காணும் கண்களே கண்களாமால் .
---- காசி கண்டம்
காசி விசுவநாதர் - வலைத்தளப் படம் |
ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்களுள் ஒன்றாகவும் ஸப்த
மோக்ஷபுரிகளுக்குள் ஒன்றாகவும் சிறந்து விளங்குவது காசிமாநகர் ஆகும். வியாஸ
முனிவர் அருளிய பதினெண் புராணங்களுள் ஒன்றான ஸ்காந்த மகாபுராணத்தில் காசியின்
பெருமை மிக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஸ்காந்தத்தில் சனத்குமார ஸம்ஹிதை, ஸுத
ஸம்ஹிதை, ப்ரம்ம ஸம்ஹிதை, விஷ்ணு ஸம்ஹிதை, சங்கர ஸம்ஹிதை, சூர ஸம்ஹிதை, என்று ஆறு
ஸம்ஹிதைகள் உள்ளன. அவற்றில் சங்கர
ஸம்ஹிதையானது குமரோற்பவ கண்டம், காசி கண்டம், காளிகா கண்டம் முதலிய
பன்னிரண்டு கண்டங்களை உடையது என்பர்.
அவற்றில் ஒன்றான காசிகண்டத்தைத் தமிழ்ச் செய்யுட்களாக இயற்றியருளியவர் தென்காசியை
ஆண்ட அதிவீரராம பாண்டிய மன்னர் பிரான் ஆவார். இதில் பூர்வ காண்டம், உத்தர காண்டம்
என்று இரு காண்டங்களும், 2526 விருத்தங்களைக் கொண்ட
நூறு அத்தியாயங்களும் உள்ளன. இதைத்
தவிரவும், திருவாவடுதுறை ஆதீனத்து மஹா வித்வான் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம்
பிள்ளையவர்கள் இயற்றிய 1012 செய்யுட்களைக் கொண்ட காசி
ரகசியம் என்ற நூலும் காசியின் பெருமைகளை விரித்துரைக்கும்.
காசி கண்டத்தை இயற்றிய அதிவீரராமபாண்டியர் கி. பி. 1564 ம் ஆண்டில் அரசராக ஆனதைத் தென்காசிக் கோபுரக்
கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இவர் இயற்றிய பிற நூல்களாவன: கூர்ம புராணம், இலிங்க புராணம், வாயு சங்கிதை,
நைடதம், திருக்கருவை வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி,
நறுந்தொகை முதலியனவாம்.
இம்மன்னர்,தமிழ்ப்புலமையும்,வடமொழிப்புலமையும் ஒருங்கே
வாய்க்கப்பெற்றவர். காசிக் கண்டத்தில் கூறப்படும் செய்திகளைச் சுருக்கமாக இனிக்
காண்போம்:
மஹதி என்ற வீணையை உடைய நாரத முனிவர் ஒருசமயம் நர்மதை
நதியில் ஸ்நானம் செய்து விட்டு ஒம்காரேசுவரனாகிய சிவபிரானைத் தரிசித்துவிட்டு
வருகையில் விந்திய மலையைக் கண்டார். மானுட வடிவம் கொண்டு முனிவரை வணங்கிய அம்மலை,
தனக்கு நிகரான மலை எதுவுமில்லை என்று ஆணவத்துடன் கூறியதோடு சூரியனே வலம் வரும் சிறப்புடைய மேரு மலையை அச் சூரியன்
வலம் வரவிடாமல் செய்வேன் என்று அகந்தையும்
கொண்டது. அதனால் உலகில் ஒருபுறம்
தொடந்து வெய்யிலும்,மறுபுறம் தொடச்சியாக இருளும் ஏற்பட்டு உலகம் கலங்கியது. செய்வதறியாது
திகைத்த தேவர்கள், பிரமதேவனை அடைந்து இக்குறை தீரும் வழியைக் கூறியருளுமாறு
வேண்டினர். பிரமனும் காசியில் வாசம் செய்யும் அகஸ்திய முனிவரை அணுகுமாறு
தேவர்களிடம் கூறியருளியதோடு காசியின்
பெருமையையும்,தன்னால் வேத மந்திரங்களைப் புரந்துவருமாறு அந்தணர்கள்
படைக்கப்பட்டதையும், அவர்கள் யாகம் முதலானவை செய்வதற்காகப் பசுக்களைப் படை த்ததையும்
கூறியருளினார் .( பசுவின் மகிமையைக்
கூறும் காசிகண்டப் பாடல் வருமாறு:
கோசலம் தெய்வ நன்னீர் நருமதை ; கோமயம்தான்
ஆசறு யமுனை ; தீம்பால் அலைபுனல் கங்கை ஆகும்;
மாசில் வெண்திங்கள் கண்ணி வரதனும்; அயனும்; மாலும்;
தேசுடை அதனில் என்றும் சேர்ந்து இனிதிருப்பரன்றே . )
பிரமதேவன் சொற்படியே காசியில் இருந்த அகஸ்தியரது ஆசிரமத்தை
நோக்கி விரைந்தனர். சில காலம் அங்கேயே தங்கி, மணிகர்ணிகையில் நீராடிக் காசியின்
மகிமைகளை அறிந்தனர்.அங்கு உயிர் நீக்கும் பறவைகளும் விலங்குகளும்
இறக்கும்போது,அவற்றின் காதுகளில் சிவபெருமானே தாரக மந்திரத்தை உபதேசித்து,
மீண்டும் பிறவாதபடி முக்தி அளித்து அருகிறார் என்றால் இங்கு உயிர் நீக்கும்
மானுடர்களும் அவ்வாறே முக்தி வரம் பெறுவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அதுபோலவே,
கங்கை நதியைக் காண்பதாலும்,அதில் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்தாலும், நீரை
ஸ்பர்சிப்பதாலும் விச்வநாதப் பெருமானது கோயிலை வலம்வந்து ஈசனை
வணங்குவதாலும்,முக்தி மண்டபத்தில் ஒரு நொடியாயினும் தங்குவதாலும் சொல்லற்கரிய வீடு
பேறு கிட்டும். இப்புண்ணியத்தலத்தில் மனிதர்களும் விலங்குகளும் பகை இன்றி வாழ்ந்தனர். மறைமொழியின்படி புலால் உண்ணுவதைத்
தவிர்க்க எண்ணிய பறவைகளும் நீர்நிலைகளில் வாழும் மீன்களை உண்ணுவதைத் தவிர்த்தன.
மக்களும் கள்ளுன்ணாமையைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர்.
புலனைந்தும் வென்ற அகத்திய முனிவரது ஆஸ்ரமத்தைத் தேவர்கள்
அடைந்தவுடன், அவர்களை வரவேற்று ஆசனங்களை அளித்தார் அகஸ்தியர்.அகஸ்தியரையும்
கற்புக்கரசியாகிய அவரது மனைவியாகிய லோபா முத்திரையையும் ஒரு சேர வணங்கினார்கள்
தேவர்கள். கற்பிற்சிறந்த இந்த அன்னை உம்மோடு வாழ்தலால் தங்களை அணுகி எங்களது
குறையைச் சொல்ல வந்தோம் என்றனர் தேவர்கள். (இவ்விடத்தில் கற்பின் பெருமையையும்,
கற்புக்கரசிகளின் இலக்கணத்தையும் விரிவாகவே எடுத்துரைக்கிறது புராணம். கணவன்
உண்டபின் உண்ணுவதும்,உறங்கியபின் உறங்குவதும்,துயில் எழுவதன் முன் எழுவதும்
அம்மாதரசிகளின் தனிச் சிறப்பு. கணவன் பெயரைக் கூறினால் அவனது ஆயுள் குறையும் என்று
எண்ணி அவ்வாறு செய்யத் துணிய மாட்டார்களாம். கொழுநன் சொல் கடவாது உறைதலே கொள்கை எனக்
கொண்டவர்கள் அவர்கள்.)
“வானளாவி வளர்ந்த விந்திய மலையின் அகந்தையால் உலகமே
ஸ்தம்பித்து நிற்கிறது.சூரியனும் செய்வதறியாது விலகி நிற்கிறான். அம்மலையின் வழியை
அடக்கும் ஆற்றல் ஏழ் கடலையும் உண்ட தங்களுக்கே அன்றி வேறு எவர்க்கும் இல்லை” என்று தேவ குருவான பிருகஸ்பதி உரைத்தவுடன்,
அவர்களுக்கு அபயம் தந்த அகஸ்திய மாமுனிவர் , யாம் இப்போதே சென்று வருகிறோம் என்று
கூறியவாறு விந்திய மலையைச் சென்றடைந்தார். முனிவரைக் கண்டு பதைபதைத்த விந்திய மலை
, ஒரு அந்தண உருவம் கொண்டு அவர்முன் வந்து பணிந்து வணங்கியது . இப்போது பணிந்த
அந்நிலையிலேயே இருப்பாய் என்ற முனிவர் பெருமான் தென் திசை நோக்கிச் சென்றார். சூரியனும்
வழக்கம்போலவே மேருவை வலம் வரத் தொடங்கினான்.
பின்னர் காசியை மனத்தால் வணங்கிவிட்டுக் கொல்லாபுரத்தை(தற்போது
கோல்ஹாபூர் எனப்படும் இத்தலம், மகாராஷ்டிரத்தில் உள்ளது) அடைந்தார் அகத்திய
முனிவர். அங்கு கோயில் கொண்டுள்ள லக்ஷ்மியைத் தோத்திரம் செய்தார். அதனால் மகிழ்ந்த
திருமகள், “ முருக வேள் வாயிலாகக் காசியின் மகிமையை உபதேசிக்கப்பெறுவாயாக “ என்று
அருளினாள். முருகவேள் இனிதுறையும் பதியை நோக்கிச் செல்லும் வழியில்
திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீ சைலத்தை அடைந்தார் அகஸ்தியர்.
“ஆசில் வளம் கெழு மூவுலகத்தினும் ஆயும்கால்
காசிநகர்க்கு இணையாகிய நற்பதி காணே மால்
மாசறு திங்கள் முடித்து உயர் மன்றில் மகிழ்ந்து ஆடும்
ஈசனை ஒப்பவர் தேவர் கணத்திடை யாரேயோ “
--- காசி கண்டம்