Thursday, August 2, 2018

                                சிவபுரம் செல்வோம் சிவனருள் பெறுவோம் 
                             
                                                          சிவபாதசேகரன் 

சிவனுறை சிவபுரம் 
ஒரு நாடு வளர்ச்சியும் பாதுகாப்பும் பெற வேண்டுமென்றால் அங்கு கற்றவர்களும்,செல்வந்தர்களும், வீரம் மிக்க படைவீரர்களும் இருத்தல் அவசியம். இம்மூன்றும் ஒரே நபரிடத்தில் இருப்பது மிகவும் அரிது. ஆனால் இம்மூன்றும் ஒருவரிடம் இருக்க வேண்டுமென்றால் இறைவனருள் துணை இருந்தால் மட்டுமே சாத்தியம். அவ்வாறு மூன்றும் பெற வேண்டுவோர் வணங்க வேண்டிய தலம் சிவபுரம் ஆகும். கும்பகோணத்திற்குக் கிழக்கில் சுமார் 5 கி.மீ. தொலைவிலும் காரைக்கால் செல்லும் வழியிலுள்ள சாக்கோட்டைக்கு 2 கி.மீ. தொலைவிலும்  உள்ள இத்தலத்தை நினைபவர்களும் தொழுபவர்களும் இம்மூன்றும் பெறுவர் என்று  திருஞானசம்பந்தர் இந்தத் தல த்தின்மீது பாடிய தேவாரப்பதிகத்தில் காணப்படுகிறது:

" ..  சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே."  என்றும் 

  " .. சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே."  என்றும்            

  " .. சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே. "  என்றும்         
         
அப்பதிக வரிகள் குறிப்பிடுகின்றன. அது மட்டுமல்ல. அவர்கள் புகழுடன் நிலவுலகில் வாழ்வர் என்பதை," .. சிவபுர நகர் தொழும் அவர் புகழ் மிகும் உலகிலே " என்றும் சம்பந்தர் அருளிச் செய்துள்ளார். 

சண்பகாரண்யம், குபேரபுரி ஆகிய பெயர்களையும் உடையது இத்தலம். ஊழிக் காலத்தில் ஊழி வெள்ளத்தில் அமிழ்ந்த பூமியைத்  திருமால் வெள்ளைப் பன்றி உருவம் கொண்டு எடுத்து நிறுத்திய பின்னர் இத தலத்திற்கு  வந்து, சிவபெருமானை வழிபட்ட சிறப்புடையது.   சுவேத வராகர் தனது வெள்ளைக் கொம்பின் நுனியில் பூமியைத் தாங்கி மீட்டுக் கொண்டு வந்த பிறகு, சிவபுரத்தில் வழிபட்டதை, 

" .. எயிறதன் நுதி மிசை இதமமர் புவியது நிறுவிய எழில் அரி வழிபட       அருள்செய்த பதமுடையவன் அமர் சிவபுரம் " எனவும்,                              

   " வெள்ளைப் பன்றி முன்னாள் சென்று அடி வீழ்தரு சிவபுரமே "   என்றும்     ஞான சம்பந்தரும்,                                                                                                                   
   "பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பன்னாளும் வழிபட்டு ஏத்தும் "  என்று திருநாவுக்கரசரும் தமது பதிகங்களில் பாடுவதைக் காணலாம். 

ஒரு சாபத்தின் காரணமாகக் குபேரன் நிலவுலகில் தனபதி என்ற பெயருடன் பிறந்து சாப நிவர்த்திக்காக இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு நலம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. குபேரன் ஒருமுறை கோயிலை வலம் வரும்போது கண்டெடுத்த செப்புப்பட்டயத்தில், ஒரு மாசி மகாசிவராத்திரி தினத்தன்று, தமது ஆண் குழந்தையை அதன் பெற்றோர் அரிந்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் செய்தியைப் படித்து விட்டுத் , தானும் அவ்வண்ணம் செய்ய முற்படுகையில் இறைவனும் இறைவியும் வெளிப்பட்டு, அவனைத் தடுத்து ஆட்கொண்டு, அவனை மீண்டும் குபேரனாக்கியதாகப் புராணம் கூறுகிறது. பெற்றோராக இந்திரனும் இந்திராணியும் , குழந்தையாக அக்னி தேவனும் வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிராகாரத்திலுள்ள பைரவர் சன்னதி 
கிழக்கு நோக்கிய ஆலயத்திற்கு நேர் எதிரில் சந்திர தீர்த்தம் அமைந்துள்ளது. ஐந்து நிலைக் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய பைரவ மூர்த்தியின் சன்னதி இருப்பதைக் காணலாம். இவர் வரப்ப்ரசாதி. அஷ்டமி தினங்களில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. இப்பிராகாரத்தில் நந்தி,கொடி மரம் ஆகியன உள்ளன.  பைரவர் சன்னதிக்கு அருகில் வசந்த மண்டபம் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் நந்தவனம் உள்ளது. 

சூரிய பகவான் 
மூன்று நிலை கோபுரத்தைக் கொண்ட இரண்டாவது நுழை வாயிலைக் கடந்தவுடன் உட்புறம் மேற்கு நோக்கியவாறு சூரியனும் சந்திரனும் எழுந்தருளியுள்ளதைக் காணலாம். சூரிய பகவான் பெரிய திருவுருவம். இந்தப் பிராகாரம் முழுதும் நாட்டுக் கோட்டை நகரத்தாரது கருங்கல் திருப்பணி. . பழைய ஆலயத்தின் கோஷ்டங்களை மட்டும் வைத்துக் கொண்டு  சன்னதிகளை நூதனமாகக் கட்டியுள்ளனர். கல்வெட்டுக்கள் எதுவும் காணப்படவில்லை. ஒருக்கால் திருப்பணிக்கு முன்பிருந்த சிதிலமடைந்த (?) ஆலயத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இருந்திருக்கலாம். 

உள் ப்ராகாரத்தில் கோஷ்டமூர்த்திகளைக் காணும்போது தக்ஷிணா மூர்த்தியினது அருட்கோலத்தில் லயித்து நிற்கிறோம் . அவரது அருகில் வெள்ளைப் பன்றி வடிவில் திருமால் வழிபடுவதைக் காண்கிறோம். அவ்வரலாற்றை அறிவிப்பதாகத் தலத் திருப்பதிகப்பாடலை சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள். 

விஷ்ணு ,வெள்ளைப் பன்றி வடிவில் வழிபடுதல் 
மேற்குப் பிராகாரத்தில் விநாயகர்,முருகன்,கஜலக்ஷ்மி சன்னதிகள் உள்ளன. வடக்குப் பிராகார கோஷ்டத்தில் துர்காம்பிகை அழகுற அருள் பாலிக்கிறார். அருகே சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளது. கிழக்குப்  பிராகார மேடையில் சிவலிங்கங்கள், பைரவர், சனி பகவான் ஆகிய மூர்த்திகளைக் காண்கிறோம்.

மூலவராகிய சிவகுருநாதரின் சன்னதியின் மகாமண்டப  வாயிலில் துவார  பாலகர்கள் உள்ளனர். பரம சிவனாகிய ஜகத்குரு இவ்வாறு திருநாமம் கொண்டு பெரிய இலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் என்று இவரை அப்பர் பெருமான் துதிக்கிறார். இவரைத் தொழுவோர்க்கு வினைகள் நீங்குவதோடு, இரு பிறப்பிலும் துன்பங்கள் வாராது என்கிறார் திருஞானசம்பந்தர். உயர்கதியைத் தரும் தலம் இது என்கிறார் அவர்.  

தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் அம்பிகை ஆர்யாம்பிகை என்ற திருநாமம் கொண்டு அழகிய வடிவாகக் காட்சி அளிக்கிறாள். சிங்கார வல்லி என்றும் மற்றொரு பெயர் உண்டு. ஆதி சங்கரரின் பெற்றோர்களான சிவகுருவும், ஆர்யாம்பாளும் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று காஞ்சி காமகோடி மகா பெரியவர்கள் அருளியுள்ளார்கள். 

தல விருட்சமாக செண்பக மரம் உள்ளது. அஷ்ட லக்ஷ்மிகளும் வாசம் செய்த வீடுகளையும், அழகிய பொன்னாலான ஆலயத்தையும் கொண்டது சிவபுரம் என்று இத்தலத்து முருகனைத்  திருப்புகழால்  பாடிய அருணகிரிநாதர் போற்றுகிறார்.   " திருமடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு அம்பொனின் ஆலய நீடிய சிவபுரம் தனில் வாழ் குருநாயக பெருமாளே "  என்பன அப்பாடலில் வரும் அழகிய வரிகள். 

இதன் அருகில் கிருஷ்ணாபுரம், அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்), கலயநல்லூர்( சாக்கோட்டை), கருக்குடி( மருதாநல்லூர்), திருநாகேசுவரம், நல்லூர் குடந்தை ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. 

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட பழமை வாய்ந்த சிவபுரம் சிவகுருநாத சுவாமி ஆலயம் அன்பர்களால் புனரமைக்கப்பெற்று , இதன் மகா கும்பாபிஷேகம் வரும்,  23.8. 2018 அன்று காலை 8.15 மணிக்கு மேல் 9.20 க்குள் மிகச் சிறப்பாக நடைபெறுவதால் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து சிவனருள் மற்றும்  முத்தேவியர் அருள் பெற்றுப் பெருவாழ்வு பெற வேண்டுகிறோம்.