நாகப்பட்டினம் , காரைக்கால் அம்மையாரது காலத்திலிருந்தே வணிகத்தில் சிறந்து விளங்கிய கடற்கரை நகர் என்பதைப் பெரியபுராணத்தின் மூலம் அறிகிறோம்.இன்றும் அப்படித்தான். அது மட்டுமல்ல. சிறந்த சிவஸ்தலமும் கூடத்தான். சிவராஜதானி என்று அது குறிப்பிடப்படுகிறது. நாகை நீலாயதாக்ஷி என்று அம்பிகையும் இங்கு பிரபலமாகச் சன்னதி கொண்டு அருளுகிறாள். சப்த விடங்கத் தலங்களுள் இதுவும் ஒன்று. தேவார மூவராலும் பாடப்பெற்ற சிறப்பையும் உடையது.மகாசிவராத்திரியன்று நாகராஜா வழிபடுவதும்,புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணித்ததும் ஆகிய புராண வரலாறுகளைக் கொண்டது.
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்தநாயனார் வாழ்ந்ததும் இங்குதான். இவரைத் திருத்தொண்டத்தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார், "கடல் நாகை அதிபத்தன் அடியார்க்கும் அடியேன் " என்று பாடுகிறார்.
பக்த என்ற வடமொழிச்சொல் பத்த என்று தமிழில் வரும். " பத்தனாய்ப் பாடமாட்டேன்.." "பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்" ஆகிய தேவாரத் தொடர்களை நோக்குக. பக்தி என்பது பத்தி என்று வரும். ..."பத்தி செய்த அப்பரசுராமர்க்குப் பாதம் காட்டிய" என வரும் சுந்தரர் வாக்கைக் காண்க. பக்தியிலும் அதிதீவிர பக்தி உடையவர் ஆதலால் அதி பக்தராய் விளங்கிய நாயனார் , அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார். இவர் மீனவ குலத்திற்கு விளக்காக அதில் அவதரித்தவர்.சிவபெருமானிடம் இருந்த அதீதமான பக்தியினால், தமது வலையில் விழும் மீன்களுள் ஒன்றை மீண்டும் கடலிலேயே சிவார்ப்பணமாக விடும் வழக்கத்தை ஒவ்வொருநாளும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அவ்வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் அகப்பட்டது. அதுவும் தங்கமாக ஜொலிக்கும் விலையற்ற ஒன்று. அப்படி இருந்தும் அதனை ஒரு பொருட்டாகத் தனக்கென்று எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார். நாயனாரது பக்தியை மெச்சிய பெருமான் ரிஷபவாகனத்தில் அம்பிகையுடன் தோன்றி அவருக்கு அருளினார் என்பது பெரியபுராணம் காட்டும் வரலாறு.
நாயனார் அருள் பெற்ற ஆவணி மாத ஆயில்ய நக்ஷத்திரத்தன்று நாகை காயாரோகணேச்வர சுவாமி ஆலயத்தில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இதனைக் காண அடியார்பெருமக்கள் வருகிறார்கள். பகலில் நடைபெறும் உற்சவம் இது.
சுவாமி அம்பாள் சன்னதிகளில் தீபாராதனை நடந்தபின்னர், சந்திரசேகரர் மற்றும் அதிபத்தர் ஆகிய மூர்த்திகளுக்குத் தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் சுமார் 3 மணி அளவில் சுவாமி வெள்ளி ரிஷபவாகனத்திலும் நாயனார் படிச்சட்டத்திலும் கடற்கரையை நோக்கிப் புறப்படுகிறார்கள்.
பக்தர்கள் குழாம் பெருமானோடு பின்தொடர்கிறது. மாலை 5 மணி அளவில் கடற்கரையை வந்து அடைந்தவுடன் ,சுவாமி ஒரு பந்தலில் கடலை நோக்கியவண்ணம் தங்குகிறார். சிறிது நேரத்தில் மீனவர்கள் மீன்கொடியை ஏந்திய வண்ணம் ,சீர்வரிசைகளைக் கொண்டு வருகிறார்கள். கடலில் பல படகுகள் இங்கும் அங்குமாகக் கடற்கரையை ஒட்டியவண்ணம் செல்லும்காட்சியை சிறியவர்களும் பெரியவர்களும் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். சில படகுகளில் நமது தேசீயக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.
சிறிது நேரத்தில் நாயனாரது விக்கிரகம் ஒரு படகில் ஏற்றப்படுகிறது. மீனவ நண்பர்களுடன் சிவனடியார்களும் அதில் பயணிக்கிறார்கள். கரையிலிருந்து சுமார் இருநூறு அடி சென்றதும் அதிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தங்க மற்றும் வெள்ளி மீன் பதுமைகளைக் கடலில் எறிகிறார்கள். அவற்றை மீண்டும் கைகளில் ஏந்தியவர்களாக அனைவரும் கரையை வந்து அடைகிறார்கள். அதிபத்த நாயனார் ரிஷபத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை மும் முறை வலம் வருகிறார். சுவாமிக்கும் நாயனாருக்கும் தீபாராதனை நடைபெறுகிறது. இந்த முக்திக் காட்சியைப் பார்த்து அனைவரும் பரவசம் அடைகின்றனர். விபூதிப் பிரசாதம் அன்பர்களுக்கு வழங்கப் பட்டதும், மூர்த்திகள் மீண்டும் திருக்கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர்.
கிடைத்தற்கு இந்த அரிய காட்சி வாழ்க்கையில் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது? ஒருமுறையாவது இதனைக் காண வேண்டாமா? கண் பெற்ற பயனை அடைய வேண்டாமா? இதுவரையில் காணாதவர்கள் அடுத்த ஆண்டு நாகை சென்று காண வேண்டும் என்று எண்ணுவோமா? இறைவனை வேண்டுவோமா? நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.