Sunday, December 1, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – II

    ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் II
                                               சிவபாதசேகரன்

அகத்தியர்-லோபாமுத்திரை -  வலைத்தளப் படம் 
காசியின் மகிமையை முருகப்பெருமானிடம் அறிய வேண்டித் தனது தர்ம பத்தினியாகிய லோபாமுத்திரையுடன் ஆறுமுகக்கடவுள் இனிதுறையும் தலத்தை நோக்கி யாத்திரை மேற்கொண்ட அகத்திய முனிவர், ஸ்ரீ சைல மலையை வந்தடைந்தார். அம்மலை சிவலிங்க வடிவுடையது என்றும் இங்கு வருபர்கள் பிறவாவரம் பெறுவர் என்றும் கூறியருளினார். அதைக் கேட்ட லோபாமுத்திரை காசியை முக்தித் தலமாகச் சிந்திப்பதன் காரணம் யாது எனக் கேட்டார். அதற்கு விடையாக, அகத்திய மாமுனிவர்  கூறியதாவது: பிரயாகை, ஒங்காரேசுவரம், அவந்திகை, அயோத்தி, மதுரா,கோகரணம்,புஷ்கரம்,துவாரகை, காஞ்சி, பதரிகாசிரமம்,த்ரியம்பகம்,குரு க்ஷேத்திரம் , நைமிசாரண்யம் ஸ்ரீசைலம் ஆகியவனவும் முத்தி தர வல்ல தலங்களே ஆகும். அது போன்று, புனித தீர்த்தங்களில் நீராடுவதும் முக்தியை அளிக்க வல்லதாகும். மானத தீர்த்தம் ஆடுபவர்க்குப் பொறுமை புலனடக்கம் முதலியவை சித்திக்கும். மனத்தழுக்கு நீங்கினால் மட்டுமே தீர்த்தமானது  கோரிய பலனை அளிக்கும்.

கற்ற தம் கல்வியும் கடவுட்பூசையும்
நற்றவம் இயற்றலும் நவையில் தானமும்
மற்றுள அறங்களும் மனத்தின்பால் அழுக்கு
அற்றவர்க்கே பயன் அளிக்கும் என்பரால்.   -  காசி காண்டம்

புனித தீர்த்தங்கள் ஆட வேண்டுவோர் முதலில் விநாயகரை சிந்தையில் இருத்தி, ஒரு பகல் உணவைத் தவிர்த்து, தீர்த்தமாடிய மறு நாள் பாரணை செய்ய வேண்டும். பின்னர், மண்,பொன்,பசு ஆகியவற்றைத் தானம் வழங்குதல் மேலும் சிறப்புடையதாகும். முன்னோர்களுக்கு அத்தீர்த்தக் கரையில் கிரியைகள் செய்ய வேண்டும்.

காசி,மாயாபுரி,அவந்தி,அயோத்தி,துவாரகை, மதுரா, காஞ்சி ஆகிய எழும் முக்த்தித் தலங்கள் என்று பேசப்படும். இவற்றைத் தவிரவும் பிரயாகை, கேதாரம்,ஸ்ரீ சைலம் ஆகியவையும் முக்தித் தலங்களே. மற்ற முக்தித் தலங்கள் காசியை அடைவதற்கு எதுவாய் இருத்தலால் முக்தி அளிப்பதில் அவை காசிக்கு ஈடாக மாட்டா. இதனை விளக்குவதற்காக ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக என்றார் அகத்தியர்.

வடமதுரையில் வாழ்ந்து வந்த சிவசன்மா என்ற அந்தணன் வேத வேதாந்தங்களையும் பிற கலைகளையும் கற்றும் நல்லொழுக்கம் குன்றியவனானான்.  முதுமை வந்ததும் உடல் தளர்ந்து, தான் புண்ணியங்கள் ஈட்டத் தவறியதை உணர்ந்தான். “ காலத்தை வீணாகக் கழித்து விட்டேன். சிவபெருமானையும் அவன் அடியார்களையும் வணங்கத் தவறி விட்டேன். கோயில்,குளம்,கிணறு ஆகியவற்றை உண்டாக்கித் தருமம் செய்யவில்லை. யாகங்கள் செய்யவில்லை. தண்ணீர்ப்பந்தல் கூட வைக்கவில்லை. நிழல் தரும் மரங்களை நடவில்லை. அந்தணர்க்கு ஒரு பிடி அன்னமும் அளிக்கவில்லை. அவர்களுக்குத் தானம் வழங்கவில்லை . பசுக்களுக்குப் புல் முதலியன கொடுக்கவில்லை. சனி பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்யவில்லை. ருத்ர-சமகம் பாராயணம் செய்யவில்லை. விருந்தினர்களை உபசரிக்கவில்லை. கால பாசம் கைக் கொண்டு எமதூதர்கள் வந்தால் என்ன செய்வேன்!  நரகத்தில் துயரம் அனுபவித்து விட்டு மீண்டும் பிறக்க ஆயத்தமாகிவிட்டேனே! இறந்தால் மனைவியோ,புதல்வர்களோ செல்வமோ உடன் வரப்போவதில்லை . ஆகவே இவ்வுடல் உள்ள போதே தலயாத்திரையும் தீர்த்த யாத்திரையும் செய்வேன்”  என்று மனத்தில் நினைத்தவனாய் அயோத்தி, திரிவேணி சங்கமம் ஆகிய தலங்களைத் தரிசித்துவிட்டுக்  காசியை வந்தடைந்தான்.

காசியில் மணிகர்னிகையிலும் கங்கையிலும் நீராடி, ரிஷிகள் ,பித்ருக்கள் ஆகியோருக்கான கர்மாக்களை செய்துவிட்டு விசுவநாதப் பெருமானைத் தரிசித்தான். மற்ற முக்தித் தலங்களையும் தரிசிக்க எண்ணி, காசி நகரை விட்டு அகன்றான். அத்தலங்களைத் தரிசித்த பின்னர், நிறைவாக மாயாபுரியில் தங்கியிருந்தபோது அவனைக் குளிர் ஜுரம் பீடித்தது. ஏழு நாட்களுக்குப் பிறகு இறந்த அவனுக்கு அந்தத் தலவாசம் செய்த பலனால் விஷ்ணு- சாரூபம் பெற்று விண்ணவர்கள் போற்ற விண்ணில் சென்றான். வழியில் சில உலகங்களை விஷ்ணு தூதர்கள் அவனுக்குக் காட்டினர்.

முதலில் அலகை  உலகைக்காட்டிய பிறகு கந்தர்வ உ லகைக் காட்டினார்கள். அரிய விரதங்களைக் கடைப்பிடித்தவரும், பெற்ற பொருளால் தானங்கள் செய்தவரும், விண்ணவர்க்கு யாழ் வாசிப்போரும் வசிக்கும் உலகம் இது .  பலன்கோரி சிவபூஜைசெய்தவர்களும் ,வேதம் கற்போருக்கு உணவும் உடையும் கொடுத்தவர்களும் ,பிறருக்கு இயல்-இசை கற்பித்தோரும், வாழும் வித்யாதர உலகையும் காட்டினர். அப்போது இயமன் எதிரில் தோன்றி , முக்தித்தலங்கள் ஏழையும் தரிசித்த சிவசன்மனை மகிழ்ச்சியுடன் காண வந்ததாகக் கூறினான். பிறகு  விஷ்ணு தூதர்கள், யமலோகத்தையும் சிவசன்மனுக்குக் காட்டினர் . அங்குப்  பாவம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதைக் கண்டான்.அதே சமயத்தில் இறைவனது நாமங்களைச் சொல்லித் துதிப்போர்கள் நரகத்தில் இடர்ப்படார் என்று அறிந்தான். ( இறைவனது நூற்றெட்டு நாமங்களை எடுத்துரைக்கும் காசி கண்டப்பாடல்களில் ஒன்று வருமாறு:

நீலகண்டன் மழுவேந்தி நெற்றிக்கண்ணன் பூதேசன்
காலகாலன் விடையூர்ந்தோன் கங்கைசூடி காமாரி
சூலபாணி கரியுரித்தோன் தோகைபாகன் காபாலி
ஆலமுண்டோன் மதிசூடீ அந்தகாரி ஈசானன் )

பின்னர் தேவலோகம் தோன்றியது. அங்கு பாற்கடலில் அமுதத்தோடு தோன்றிய தேவ மகளிர் இயல்-இசை-நாடகக் கலைகளில் வல்லவர்களாக இருக்கக் கண்டான். பிறகு, ஐம்புலன்களை வென்று காயத்திரியை முறைப்படி ஜபித்தவர்கள் வாழும் சூரிய  உலகைக் கண்டான். அதோடு, நால் வேதமும்,ஆறங்கமும் கற்றும் காயத்திரி ஜபம் செய்யாவிடில் அந்தணத் தன்மை நீங்கிவிடும் என்பதை உணர்ந்தான். காயத்திரிக்கு ஒப்பான மந்திரமும்,காசிக்கு ஒப்பான தலமும், விசுவநாதருக்கு ஒப்பான தெய்வமும் தேடினும் இல்லை என்று சிவசன்மன் அறிந்தான்.

காசி நகரில் அருள் பாலிக்கும் பல சிவலிங்க மூர்த்திகள் பலவற்றையும் தரிசித்தபின்னர் , வீரேச லிங்கத்தின் பெருமையும்,அப்பெருமானை  வழிபட்டு, மகப்பேறு அடைந்த விச்வாநரன் செய்த துதிகளான சிவாஷ்டகத்தைப் பாராயணம் செய்வோர் மகப்பேறு பெறுவர் என்கிறது புராணம். மேலும் , வீரேசரின் அருளால் விச்வாநரன் பெற்ற குழந்தையை, அத்திரி, மரீசி,கார்க்கர், அங்கீரஸ் , வசிஷ்டர்,சிலாதர், உரோமசர், பாரத்துவாஜர் , காசிபர்,ஆபஸ்தம்பர், கௌசிகர், கண்வர்,மார்க்கண்டர், வான்மீகி,பிருகு,அகத்தியர் ஆகிய முனிவர்கள் நேரில் சென்று ஆசீர்வதித்தனர். அக் குழந்தைக்கு ஐந்து வயதானதும், முப்புரி நூலிட்டு, வேதம் கற்பித்தனர். அப்போது நாரத முனிவர் அங்கு வந்து இச்சிறுவனுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும் ஆயுள் முடிந்து விடும் என்று கூறினார். அதனைக் கேட்ட விச்வாநரன் செய்வதறியாது துயரக்கடலில் ஆழ்ந்தான்.  ஒருவாறு சமாதானமடைந்தபிறகு, மார்க்கண்டே யனையும் , சுவேதகேதுவையும்  காலனிடமிருந்து சிவபிரான் காத்ததை நினைவில் கொண்டு தானும் அவ்வாறே இறைவனை வழிபட்டான். 108 குடங்களில் கொணர்ந்த கங்கை நீரால் நாள் தோறும் ருத்ரம்- சமகம் ஆகியவற்றை ஜபித்து, 1008 குவளை மலர்களால் ஈசனை அர்ச்சித்தான். இதனைக் குறிப்பிடும் காசிகண்டப் பாடல் வருமாறு:

“ குடங்கள் நூற்றெட்டில் கங்கை குளிர்புனல் ஏந்தி அன்பினு
  டன்றினந்தோறும் தெய்வ உருத்திர சமகத்தாட்டித்
  தடந்திகழ் குவளை ஓராயிரத்து இருநான்கு சாத்தி
  அடங்கலர் புரம் தீயூட்டும் அண்ணலை வழிபட்டானே.”   

அப்பாலகனைப் பெருமான் காத்ததோடு, அக்கினி பகவானாக ஆக்கி அருள் செய்தான். இவ்வாறு விஷ்ணு தூதர்கள் சிவசன்மாவிடம் எடுத்துரைத்தார்கள் .        
அடுத்ததாக விஷ்ணு தூதர்கள் சிவசன்மாவுக்கு நிருதி உலகைக் காட்டினார்கள்.  பிங்கலாக்ஷன் என்பவன் காசிக்குச் செல்பவர்களுக்கு இடையூறு செய்பவர்களைத் தண்டித்து அவர்களுக்கு வழியில் பயம் ஏற்படாதவாறு காத்து வந்தான். ஒரு சமயம் அவன் எதிர்த்தவர்களிடம் போரிடும்போது இறக்கவே,  புண்ணியத்தின் பலனாக  நிருதி பதம் பெற்றான். பிறகு, விஷ்ணுகணங்கள் சிவசன்மாவுக்கு வருண உலகைக்காட்டிக் கூறியதாவது: “ நால் வேதங்களை ஓதியவர்களும், உணவும்,நிலமும் அளித்தோரும்,தீர்த்தத்துறைகளில் படிக்கட்டுக்களைக் கட்டியவர்களும்,தண்ணீர்ப்பந்தல் நிறுவியவர்களும் வாழ்வது வருண உலகம் ஆகும். ஒரு மறையவனின் புதல்வன்  சிறுவன், முதலையிலிருந்து  காப்பாற்றப் பட்டதையும் அவன் காசிக்குச் சென்று தன பெயரில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அவன் வருண பதம் பெற்றதையும் சிவசன்மன் அவ்விஷ்ணு தூதர்கள் மூலம் அறிந்தான்.

காசிபரின் மகன் காசியை அடைந்து சிவபிரானை வழிபட்டு அடைந்த வாயு உலகையும்,  கலிங்க நாட்டரசன் பால் தோன்றிய குணநிதி என்பவன் தவம் செய்து ,சிவனருளால் குபேரன் ஆகி, வாழ்ந்து கொண்டிருக்கும்  அழகாபுரியையும் சிவசன்மன் காணப்பெற்றான்.பிறகு பயன் கருதாது வேள்விகள் செய்து, சிவபக்தியில் மேம்பட்டு விளங்கியவர்கள் இருக்கும் ஈசான உலகத்தையும், தக்ஷ சாபம் நீங்கவேண்டித் தஞ்சமடைந்த சந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்தமையால் சிவபெருமான் சந்திர சேகரன் ஆன வரலாற்றைக் கூறி, அவனுறையும் சந்திரலோகத்தைக்காண்பாயாக என்றனர் விஷ்ணு தூதர்கள்.

காசியை அடைந்து ,புருஷாயுதம் என்ற தவத்தைச் செய்த 27 நக்ஷத்திரப் பெண்கள் வாழும் தாரகை உலகத்தையும், சந்திர உலகத்தையும் அடுத்தபடியாகப் பார்த்தான்.சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப்பிறந்த புதன், காசியை அடைந்து லிங்கப்பிரதிஷ்டை செய்து, தனக்கு முன்பு காட்சி அளித்த ஈசனிடம் கேட்ட வரம்,  நாமனைவரும் கேட்க வேண்டியதாகும்: “ அளவற்ற செல்வங்கள் என்னை வந்து அடைந்தாலும், துன்பக்குழியில் அழுந்தினாலும், சிவ சிந்தனை அகலாத வரம் அருள்வாய் “ என்று வேண்டினான். இறைவனும் அத்துதிக்கு மகிழ்ந்து அவனை நவக்கிரகங்களுள் ஒன்றாக ஆக்கி அருள் புரிந்தான். அப்புதனின் உலகையும் சிவசன்மா வழியில் கண்டான். பிறகு, அசுர குருவான சுக்கிரன் வாழும் உலகையும் , செவ்வாய், வியாழன்,சனி ஆகியோரது உலகங்களையும் சிவசர்மா பார்த்தான். தனது பத்தினிகளோடு காசிக்குச் சென்று வழிபட்ட சப்த ரிஷிகள் வாழும் உலகத்தை அதன்பிறகு கண்டான்.நிறைவாக விஷ்ணுதூதர்கள் அவனுக்குத் துருவன் பதம் பெற்ற வரலாற்றைக் கூறி, விஷ்ணு லோகத்தையும் காட்டினர். இவ்வாறு நற்கதி பெற்ற சிவசன்மன், காசியை அடைந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து முக்தி பெற்றான்.

ஸ்ரீ சைலத்தை அடைந்து சிவ தரிசனம் பெற்ற அகத்தியமுனிவர், முருகப்பெருமானது சன்னதியை அடைந்து விழிகள் நீர் பெருக்கத்  துதிகள் பல செய்தவுடன் கார்த்திகேயன் அவருக்குக் காட்சி அளித்தான். இதனால் மயிர்க்கூச்செரிந்த குருமுனியானவர், காசியின் பெருமையைத்  தான் அறிய விரும்புவதாகப் பிரார்த்திக்க, அதற்கு ஷண்முகப்பெருமான் கூறியதாவது:          “ காசியின் பெருமையை ஆயிரம் முகங்களாலும் கூற இயலாது. ஆறு முகங்களோடு அதை எங்ஙனம் உரைப்பேன் ! இருப்பினும் அதன் பெருமைகளைக் கூறுகின்றேன் “ என்றார்.        
                                                            ( காசியின் பெருமைகள் தொடரும் )   
  

Sunday, November 17, 2019

   ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி  விச்வநாதம் – I  
                                           சிவபாதசேகரன்

காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்களாகும்
காசியை வழுத்தும் நாவே நாவெனக் கழறலாமால்
காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும்
காசியை இனிது காணும் கண்களே கண்களாமால் .
                                                                          ---- காசி கண்டம்

காசி விசுவநாதர் -  வலைத்தளப் படம் 
ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்களுள் ஒன்றாகவும் ஸப்த மோக்ஷபுரிகளுக்குள் ஒன்றாகவும் சிறந்து விளங்குவது காசிமாநகர் ஆகும். வியாஸ முனிவர் அருளிய பதினெண் புராணங்களுள் ஒன்றான ஸ்காந்த மகாபுராணத்தில் காசியின் பெருமை மிக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஸ்காந்தத்தில் சனத்குமார ஸம்ஹிதை, ஸுத ஸம்ஹிதை, ப்ரம்ம ஸம்ஹிதை, விஷ்ணு ஸம்ஹிதை, சங்கர ஸம்ஹிதை, சூர ஸம்ஹிதை, என்று ஆறு ஸம்ஹிதைகள்  உள்ளன. அவற்றில் சங்கர ஸம்ஹிதையானது குமரோற்பவ கண்டம், காசி கண்டம், காளிகா கண்டம் முதலிய பன்னிரண்டு  கண்டங்களை உடையது என்பர். அவற்றில் ஒன்றான காசிகண்டத்தைத் தமிழ்ச் செய்யுட்களாக இயற்றியருளியவர் தென்காசியை ஆண்ட அதிவீரராம பாண்டிய மன்னர் பிரான் ஆவார். இதில் பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்று இரு காண்டங்களும், 2526 விருத்தங்களைக் கொண்ட நூறு அத்தியாயங்களும் உள்ளன.  இதைத் தவிரவும், திருவாவடுதுறை ஆதீனத்து மஹா வித்வான் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய 1012 செய்யுட்களைக் கொண்ட காசி ரகசியம் என்ற நூலும் காசியின் பெருமைகளை விரித்துரைக்கும்.

காசி கண்டத்தை இயற்றிய அதிவீரராமபாண்டியர் கி. பி. 1564 ம் ஆண்டில் அரசராக ஆனதைத் தென்காசிக் கோபுரக் கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இவர் இயற்றிய பிற நூல்களாவன:   கூர்ம புராணம், இலிங்க புராணம், வாயு சங்கிதை, நைடதம், திருக்கருவை வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நறுந்தொகை முதலியனவாம். 

இம்மன்னர்,தமிழ்ப்புலமையும்,வடமொழிப்புலமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர். காசிக் கண்டத்தில் கூறப்படும் செய்திகளைச் சுருக்கமாக இனிக் காண்போம்:

மஹதி என்ற வீணையை உடைய நாரத முனிவர் ஒருசமயம் நர்மதை நதியில் ஸ்நானம் செய்து விட்டு ஒம்காரேசுவரனாகிய சிவபிரானைத் தரிசித்துவிட்டு வருகையில் விந்திய மலையைக் கண்டார். மானுட வடிவம் கொண்டு முனிவரை வணங்கிய அம்மலை, தனக்கு நிகரான மலை எதுவுமில்லை என்று ஆணவத்துடன் கூறியதோடு  சூரியனே வலம் வரும் சிறப்புடைய மேரு மலையை அச் சூரியன் வலம் வரவிடாமல் செய்வேன் என்று அகந்தையும்  கொண்டது.  அதனால் உலகில் ஒருபுறம் தொடந்து வெய்யிலும்,மறுபுறம் தொடச்சியாக இருளும் ஏற்பட்டு உலகம் கலங்கியது. செய்வதறியாது திகைத்த தேவர்கள், பிரமதேவனை அடைந்து இக்குறை தீரும் வழியைக் கூறியருளுமாறு வேண்டினர். பிரமனும் காசியில் வாசம் செய்யும் அகஸ்திய முனிவரை அணுகுமாறு தேவர்களிடம் கூறியருளியதோடு  காசியின் பெருமையையும்,தன்னால் வேத மந்திரங்களைப் புரந்துவருமாறு அந்தணர்கள் படைக்கப்பட்டதையும், அவர்கள் யாகம் முதலானவை செய்வதற்காகப் பசுக்களைப் படை த்ததையும் கூறியருளினார் .(  பசுவின் மகிமையைக் கூறும் காசிகண்டப் பாடல் வருமாறு:

கோசலம் தெய்வ நன்னீர் நருமதை ; கோமயம்தான்
ஆசறு யமுனை ; தீம்பால் அலைபுனல் கங்கை ஆகும்;
மாசில் வெண்திங்கள் கண்ணி வரதனும்; அயனும்; மாலும்;
தேசுடை அதனில் என்றும் சேர்ந்து இனிதிருப்பரன்றே . )

பிரமதேவன் சொற்படியே காசியில் இருந்த அகஸ்தியரது ஆசிரமத்தை நோக்கி விரைந்தனர். சில காலம் அங்கேயே தங்கி, மணிகர்ணிகையில் நீராடிக் காசியின் மகிமைகளை அறிந்தனர்.அங்கு உயிர் நீக்கும் பறவைகளும் விலங்குகளும் இறக்கும்போது,அவற்றின் காதுகளில் சிவபெருமானே தாரக மந்திரத்தை உபதேசித்து, மீண்டும் பிறவாதபடி முக்தி அளித்து அருகிறார் என்றால் இங்கு உயிர் நீக்கும் மானுடர்களும் அவ்வாறே முக்தி வரம் பெறுவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அதுபோலவே, கங்கை நதியைக் காண்பதாலும்,அதில் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்தாலும், நீரை ஸ்பர்சிப்பதாலும் விச்வநாதப் பெருமானது கோயிலை வலம்வந்து ஈசனை வணங்குவதாலும்,முக்தி மண்டபத்தில் ஒரு நொடியாயினும் தங்குவதாலும் சொல்லற்கரிய வீடு பேறு கிட்டும். இப்புண்ணியத்தலத்தில் மனிதர்களும் விலங்குகளும் பகை இன்றி  வாழ்ந்தனர். மறைமொழியின்படி புலால் உண்ணுவதைத் தவிர்க்க எண்ணிய பறவைகளும் நீர்நிலைகளில் வாழும் மீன்களை உண்ணுவதைத் தவிர்த்தன. மக்களும் கள்ளுன்ணாமையைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர். 

புலனைந்தும் வென்ற அகத்திய முனிவரது ஆஸ்ரமத்தைத் தேவர்கள் அடைந்தவுடன், அவர்களை வரவேற்று ஆசனங்களை அளித்தார் அகஸ்தியர்.அகஸ்தியரையும் கற்புக்கரசியாகிய அவரது மனைவியாகிய லோபா முத்திரையையும் ஒரு சேர வணங்கினார்கள் தேவர்கள். கற்பிற்சிறந்த இந்த அன்னை உம்மோடு வாழ்தலால் தங்களை அணுகி எங்களது குறையைச் சொல்ல வந்தோம் என்றனர் தேவர்கள். (இவ்விடத்தில் கற்பின் பெருமையையும், கற்புக்கரசிகளின் இலக்கணத்தையும் விரிவாகவே எடுத்துரைக்கிறது புராணம். கணவன் உண்டபின் உண்ணுவதும்,உறங்கியபின் உறங்குவதும்,துயில் எழுவதன் முன் எழுவதும் அம்மாதரசிகளின் தனிச் சிறப்பு. கணவன் பெயரைக் கூறினால் அவனது ஆயுள் குறையும் என்று எண்ணி அவ்வாறு செய்யத் துணிய மாட்டார்களாம். கொழுநன் சொல் கடவாது உறைதலே கொள்கை எனக் கொண்டவர்கள் அவர்கள்.)

“வானளாவி வளர்ந்த விந்திய மலையின் அகந்தையால் உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது.சூரியனும் செய்வதறியாது விலகி நிற்கிறான். அம்மலையின் வழியை அடக்கும் ஆற்றல் ஏழ் கடலையும் உண்ட தங்களுக்கே அன்றி வேறு எவர்க்கும் இல்லை”  என்று தேவ குருவான பிருகஸ்பதி உரைத்தவுடன், அவர்களுக்கு அபயம் தந்த அகஸ்திய மாமுனிவர் , யாம் இப்போதே சென்று வருகிறோம் என்று கூறியவாறு விந்திய மலையைச் சென்றடைந்தார். முனிவரைக் கண்டு பதைபதைத்த விந்திய மலை , ஒரு அந்தண உருவம் கொண்டு அவர்முன் வந்து பணிந்து வணங்கியது . இப்போது பணிந்த அந்நிலையிலேயே இருப்பாய் என்ற முனிவர் பெருமான் தென் திசை நோக்கிச் சென்றார். சூரியனும் வழக்கம்போலவே மேருவை வலம் வரத் தொடங்கினான்.

பின்னர் காசியை மனத்தால் வணங்கிவிட்டுக் கொல்லாபுரத்தை(தற்போது கோல்ஹாபூர் எனப்படும் இத்தலம், மகாராஷ்டிரத்தில் உள்ளது) அடைந்தார் அகத்திய முனிவர். அங்கு கோயில் கொண்டுள்ள லக்ஷ்மியைத் தோத்திரம் செய்தார். அதனால் மகிழ்ந்த திருமகள், “ முருக வேள் வாயிலாகக் காசியின் மகிமையை உபதேசிக்கப்பெறுவாயாக “ என்று அருளினாள். முருகவேள் இனிதுறையும் பதியை நோக்கிச் செல்லும் வழியில் திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீ சைலத்தை அடைந்தார் அகஸ்தியர்.

“ஆசில் வளம் கெழு மூவுலகத்தினும் ஆயும்கால்
காசிநகர்க்கு இணையாகிய நற்பதி காணே மால்
மாசறு திங்கள் முடித்து உயர் மன்றில் மகிழ்ந்து ஆடும்
ஈசனை ஒப்பவர் தேவர் கணத்திடை யாரேயோ “
                                                                         --- காசி கண்டம் 

Tuesday, October 8, 2019

ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் - நாகேசம்

                                 ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள்- தொடர்ச்சி 

                                                   நாகேசம் 

                                             சிவபாதசேகரன் 



த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரத்தில் “ நாகேசம் தாருகாவனே “ என்று வருவதால் நாகேச க்ஷேத்ரம் தாருகாவனத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. தாரகையும் தாரகனும் வசித்து வந்த காரணத்தால் இவ்விடம் தாருகாவனம் எனப்பட்டது. அதனால் சுவாமிக்கும் நாகநாதர் அல்லது நாகேச்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

மகாராஷ்டிரத்தில் ஸோண்டி ரயிலடியிலிருந்து சுமார் 25 கி,மீ. தொலைவிலுள்ள ஔண்டா என்ற ஊரில் இந்த ஆலயம் இருப்பதால் ஔண்ட் நாக்நாத் என்கிறார்கள். இந்தக்கோயிலை தேவகிரி யாதவ வம்சத்தவர்கள் கட்டியுள்ளனர். அதற்கு முன்பாக, பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது தர்மபுத்திரரால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.

அழகிய சிற்ப வேலைகளைக் கொண்ட இக்கோயிலின் கர்ப்பக்ருக விமானம் அழகிய  வடிவில் உள்ளது. கர்ப்பக் கிரகத்தில் ஒரு மேடை காணப்படுகிறது. அதனருகில் உள்ள சுரங்கப்பாதையில் இறங்கினால் நாகேச்வர ஜ்யோதிர் லிங்க மூர்த்தியைத் தரிசிக்கலாம். ஆதியில் இந்த மூர்த்தி கிழக்கு முகமாகவும்,கோமுகம் வடக்கு நோக்கி இருந்ததாகவும் , ஸ்ரீ நாம்தேவ் என்ற சிவபக்தருக்காகத் தென்முகமாகத் திரும்பியதாகவும் கோமுகமும் அதற்கேற்பக் கிழக்கு நோக்கி மாறியதாகவும்  வரலாறு கூறுகிறது.

ஒரு சமயம் ஸ்ரீ நாம்தேவ் சுவாமிகள் தரிசனத்திற்காக இங்கு வந்து கிழக்கு நோக்கிய நாகநாத மூர்த்திக்கு எதிரில் இருந்துகொண்டு பஜனை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அந்தணர்கள் அவரை சுவாமியை மறைக்காமல் இருந்து கொண்டு பஜனை செய்யுமாறு கூறினர். அதற்கு ராம்தேவ் ஸ்வாமிகள், “ ஈசன் எல்லாத் திசையையும் நோக்கிக் கொண்டு இருக்கிறார். யானும் வேறு திசையில் நின்று கொண்டு பஜனை செய்கிறேன். இறைவன் இந்த அடியவனையும் பார்த்து அருள் புரிவார் “ என்று அவர்களிடம் கூறினார். அதைக்கண்ட அந்தணர்கள் அவரைத் தென்திசையில் இருக்குமாறு செய்தனர். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அதுவரை கிழக்கு நோக்கியிருந்த பெருமான் தனது  பக்தனுக்காகத் தென்திசை நோக்கித் திரும்பியருளினான். வடதிசை நோக்கியிருந்த கோமுகமும் கிழக்கு முகமாகத் திரும்பியது. அதனைக் கண்டோர் அனைவரும் வியந்தவண்ணம் ஸ்ரீ நாமதேவரை வணங்கிப் போற்றினர். அவ்வாறு தென்திசை நோக்கித் திரும்பிய நிலையிலேயே இன்றும் ஜோதிர் லிங்க மூர்த்தி நமக்குக் காட்சியளித்து அருள் பாலிக்கிறார்.

ஆதியில் இந்த ஜ்யோதிர் லிங்கமானது தண்ணீருக்குள் இருந்ததாகவும், வனவாசம் செய்ய வந்த பாண்டவர்கள் பெருமானைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் கேட்டபோது தண்ணீருக்குள் இருந்தது அவர்களுக்குத் தெரிய வந்தது. பீமன் தனது கதாயுதத்தால் நீரை அப்புறப்படுத்தவே , பாண்டவர்களுக்குச் சிவலிங்க தரிசனம் கிட்டியது. அன்றுமுதல் சுவாமி அனைவரும் காணுமாறு வெளிப்படையாகத் தரிசனம் தந்தருளுகிறார்.

கர்ப்பக் கிரகம் அமைந்துள்ள குகைக்கு மேல் மற்றோர் குகையிலும் ஒரு நந்தியும் ஒரு சிவலிங்கமும் காணப்படுகிறது. முகமதியர்கள் நமது ஆலயங்களுக்குத் தீங்கிழைப்பதை அறிந்தபடியால் ,ஒருக்கால் அவர்கள் வந்தால் மேலேயுள்ள குகையில் இருக்கும்  லிங்கமே உண்மையானது என்று ஏமாறுமாறு இவ்வாறு மற்றோர் சன்னதி உருவானது என்கிறார்கள்.

தாருகாவனத்தில் தங்கள் பத்தினிகளுடன் வாழ்ந்த முனிவர்கள், தங்களது கர்மானுஷ்டானங்களால் எதையும் பெற முடியும் என்பதால் கடவுளை வணங்க அவசியம் இல்லை என்று அகந்தையுடன் இருந்தார்கள். அவர்களுக்கு ஞானோபதேசம் செய்வதற்காகத்  தாருகாவனத்தில்  பிக்ஷாடன வடிவமேற்றுப் பரமேச்வரனும், மோகினி உருக்கொண்டு விஷ்ணுவும் வந்ததாகப் புராணம் கூறும்.

நுழைவு வாயில் 
முன்னொரு காலத்தில் தாருகன்  என்ற அசுரன் தனது மனைவியான    தாருகையுடன் இங்கு பதினாறு யோஜனை விஸ்தீரணம் கொண்ட நந்தவனம் அமைத்து வசித்து வந்தான். தாரகையானவள் பார்வதி தேவியைக் குறித்துத் தவம் செய்து அனேக வரங்கள் பெற்றாள். நம்மை எவராலும் வெல்ல முடியாது என்று அகந்தை கொண்டு இருவரும், வேள்வி செய்யும் அந்தணர்களையும் சிவனடியார்கள் பலரையும் சிறையில் அடைத்தார்கள். இதைப் பொறுக்காத ஔர்வ முனிவரின் சாபத்தால் பல அரக்கர்கள் மாண்டனர். எஞ்சிய அரக்கர்களை அழைத்துக்கொண்டு தாருகன் கடல் நடுவில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.

அரக்கனது தொல்லையால் துன்பப்பட்டுக்கொண்டு இருந்த அந்தணர்களுக்கு இரங்கிய சுப்ரியன் என்ற அந்தணன் அவர்களுடன் சிவபூஜை செய்யலானான். இதனை ஒற்றர்கள் மூலம் அறிந்த தாருகன் அப்பூஜையை செய்யவிடாமல் இடையூறு செய்தான். அப்போது சுப்ரியன் பூஜித்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் தாருகனைத் தனது நெற்றிக்கண்ணால் அழித்துத் தனது பக்தர்களைக் காப்பாற்றினார். ஆனால் தாருகை உமாதேவியிடம் வரம் பெற்றதால் எஞ்சிய அசுரர்கள் காக்கப் பெற்றனர். இவ்வாறு அருள் செய்த மூர்த்தியை போகேச்வரர் என்கிறார்கள். இதற்கு ஜில்லிகா, சரஸ்வதி சங்கமத்திலுள்ள பூதேச்வர லிங்கம் உப லிங்கமாகக் கருதப்படுகிறது.

அயோத்திக்கருகில் சரயு நதிக்கருகில் உள்ள நாகேசமே ஜ்யோதிர் லிங்கம் என்று கூறுவோரும் உளர். நாகேசம் தாருகாவனே என்று ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரத்தில் கூறப்படுவதாலும் , தாருகை தனது இருப்பிடத்தை மேற்குக் கடலில் அமைத்திருந்தாள் என்று சிவமஹா புராணம் குறிப்பதாலும் ஔண்டாவில் உள்ள லிங்கமே ஜ்யோதிர்லிங்கம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 
 
சீக்கிய குருமார்களின் தொடர்புடைய இடமாதலால் சீக்கியர்கள் பலர் இங்கு வருகிறார்கள். கோயிலுக்குள் வெளிப்ராகாரத்தை ஒட்டிய இடத்தில் ஒரு குளத்தை ஒட்டிய பாதையில் சென்றால் தத்தாத்ரேய மடமும்,ராதா - கிருஷ்ணா மந்திர்,சந்த்ஜனாபாய் ஜாதே,மற்றும் ஷாம்கிர்குரு என்பவர் இடமும் உள்ளன. இங்கு சீக்கிய சகோதரர்கள்  பஜனை செய்கிறார்கள். இங்கிருந்து சுமார் ஐம்பது கி.மீ தூரத்திலுள்ள நான்டெட் நகரில் அவர்களது பிரசித்திபெற்ற குருத்வாரா உள்ளது. அதனருகில் தங்க வசதியுள்ள அறைகள் இருப்பதால் நாகேசம் செல்பவர்கள் இங்கிருந்து சாலை மார்க்கமாகச் செல்வது எளிது.           

Thursday, September 26, 2019

ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள்-இராமேசுவரம் -III



                            ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள்-இராமேசுவரம் III

                                                                சிவபாதசேகரன்


இராமலிங்கப் பிரதிஷ்டை 

தனுஷ்கோடி மகிமை :
நர்மதை நதிக் கரையில் தவம் செய்தால் கொடிய பாவங்களும் விலகும். கங்கைக் கரையில் மரணம் சம்பவித்தால் முக்தி கிடைக்கும். குரு க்ஷேத்திரத்தில் செய்யும் தானம் ப்ரமஹத்யாதி பாவங்களைப் போக்கும்  தனுஷ்கோடியில் செய்யும் தானமும் தவமும் பாவங்களை நீக்கி முக்தி அளித்து, விரும்பிய எல்லாவற்றையும் தரும். உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களும் தனுஷ்கோடி தீர்த்தத்தில் அடக்கம். அனைத்துத் தேவர்களும் இதில் குடிகொண்டிருக்கிறார்கள். புண்ணிய காலங்களில் இங்கு ஸ்நானம் செய்வதால் அதிக பலன்கள் பெறலாம். இங்கு பித்ருக்களுக்குப் பிண்டம் போட்டால் பித்ருக் கடன் நீங்கி அவர்களது ஆசியையும் பெறுவர். இதனைப் பார்த்தாலே முக்தி கிட்டும் என்பதால் ஸ்நான பலனை எப்படி வர்ணிப்பது என்று கேட்கிறது புராணம்.

துரோணரது மைந்தனான அச்வத்தாமன் , தனது தந்தை வஞ்சனையால் கொல்லப்பட்டதை அறிந்து பாண்டவர்களைப் பழி வாங்க எத்தனிக்கையில், கண்ணனது அருளால் பாண்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் இரவில் உறங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னனையும் பாண்டவ குமாரர்களையும் அசுவத்தாமன் கொன்றான்.அக்கொலைப்பழி நீங்குவதற்கு வியாஸரை அணுகினான். அதற்கு அவர், “ உறங்குபவரைக் கொன்றால் அப்பழிக்குப் பிராயச்சித்தம் கிடையாது. இருப்பினும் தனுஷ்கோடி தீர்த்தத்தில் ஒரு மாதம் ஸ்நானம் செய்து இராமநாதரை வழிபட்டால் பழி நீங்கும் “என்றார். அவ்வாறே செய்த அச்வத்தாமனும் பழி நீங்கப்பெற்றான்.

சந்திர வம்சத்தில் பிறந்த நந்தன் என்ற அரசனது குமாரன் தர்மகுப்தன் என்பவன் நம்பிக்கை துரோகம் செய்த குற்றத்திற்காக சித்த சுவாதீனம் இழந்து திரிந்தான். பின்னர் ஜைமினி ரிஷியின் சொற்படி தனுஷ்கோடி தீர்த்த ஸ்நானம் செய்து இராமநாத சுவாமி தரிசனம் செய்ததும் சித்தம் தெளியப்பெற்றான். எனவே சித்தப்பிரமை மட்டுமல்லாது,எல்லா நோய்களையும் நீக்கவல்லது இந்த தீர்த்தம்.

ப்ரஹத்யும்னன் என்ற மன்னன் செய்த வேள்விக்கு ரைப்ய மகரிஷி புரோஹிதம் செய்தபோது, அவரது பிள்ளைகளான பராவசுவும் அச்வாவசுவும் தந்தைக்கு உதவியாக இருந்தனர். ஒரு நாள் மான் தோல் போர்த்துக்கொண்டு உலவிய ரைப்யரைத் துஷ்ட மிருகம் என்று கருதி  பராவசு, ஆயுதத்தால் கொன்று விட்டான். அச்வாவசு தவம் செய்து தந்தை உயிர் பெறவும், தமையன் பிரமஹத்தி தோஷம் நீங்கப்பெறவும் வரம் வேண்டினான். தேவர்கள் அருளியபடித் தமையனைத் தனுஷ்கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்தான். அதனால் பராவசுவின் பழி நீங்கியது. ரைப்ய மகரிஷியும் உயிர் பெற்று எழுந்தார்.
சேது மாதவ தீர்த்தம் 

இராமேசுவரம் கோயிலுக்குள் காணப்படும் தீர்த்தங்கள் இருபத்திரண்டு ஆகும். அவையாவன:

மகாலக்ஷ்மி தீர்த்தம்,சாவித்திரி தீர்த்தம்,காயத்திரி தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,சேதுமாதவ தீர்த்தம்,கந்த மாதன தீர்த்தம்,கவாட்ச தீர்த்தம்,கவய தீர்த்தம்,நள தீர்த்தம்,நீல தீர்த்தம்,சங்கு தீர்த்தம்,சக்கர தீர்த்தம்,பிரமஹத்தி விமோசன தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்,கங்கா தீர்த்தம்,யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சிவதீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், ஸர்வ தீர்த்தம்(மானஸ தீர்த்தம்), கோடி தீர்த்தம் என்பனவாம்.

ஸர்வ தீர்த்த ஸ்நானத்தால் சுதர்சனர் என்பவர் பிறவிக் குருடும்,நரை, திரை,மூப்பு ஆகியனவும் நீங்கப்பெற்றார் எனப்படுகிறது. கோடி தீர்த்தத்தில் நேரடியாக ஸ்நானம் செய்ய முடியாவிட்டாலும் அதற்கென ஒரு அந்தணர் முகந்து ஊற்றும் நீரில் ஸ்நானம் செய்யலாம். இதுவே எல்லா தீர்த்தங்களிலும் மேலானதாகக் கருதப்படுவதால் இதில் ஸ்நானம் செய்து, சுவாமி-அம்பாள் தரிசனம் ஆனபிறகு இராமேசுவரத்தை விட்டுப் புறப்பட வேண்டும் என்பது மரபு. இஷ்ட சித்தியும் ஞானமும்,முக்தியும் தரும் இந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கம்ஸனைக் கொன்ற பாவத்தை கிருஷ்ண பகவான் போக்கிக் கொண்டதாகப் புராணம் கூறுகிறது.

மூன்றாம் பிராகாரத் தூண் வரிசைகளின் அழகு நம்மைப் பிரமிக்க வைக்கிறது 

இந்த அழகிய வேலைப்பாடு அமைந்த பிராகாரம் பற்றியும் இதனை நிர்மாணித்த சேதுபதி மன்னர் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பற்றியும் ஒரு கல்வெட்டு அமைத்திருப்பது காணத்தக்கது .



புராண வரலாறுகள் : இராமலிங்கப் பிரதிஷ்டை ,  சுந்தர பாண்டியனின் மகளாக அவதரித்த மகாலக்ஷ்மி ,அந்தண வடிவில் வந்த திருமாலை மணந்து சேது மாதவராகத் தங்கியது, பைரவ மூர்த்தியை இராமபிரான் பிரதிஷ்டை செய்தது, சாகல்ய மகரிஷியை மான் என்று நினைத்து அம்பெய்தியதால் பிரமஹத்தி பீடிக்கப்பட்ட சங்கர பாண்டியன் இராமேசுவரம் வந்து ஓராண்டுக்காலம் இராமநாதரை வழிபட்டதால் பாவம் நீங்கப்பெற்றது, ஆகிய வரலாறுகளைத் தல புராணத்தில் காணலாம்.

இராவணனை சம்ஹரித்தபின் ஸீதா பிராட்டியுடன் இராமபிரான் கடலைத் தாண்டி வருகையில் நளனால் கட்டப்பட்ட சேதுவையும் அனுமன் வெளி வந்த மைனாகம் என்ற மலையையும்,மூவுலகாலும் பூஜிக்கத்தகுந்த அழகிய கடலையும், அதன்கண் அமைந்துள்ள சேது தீர்த்தத்தையும் தேவிக்குக் காட்டினார் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. மேலும்,   “ யாரொருவன் சேதுவில் ஸ்நானம் செய்து, இராமநாதரைவழிபடுகிறானோ அவன் பிரமஹத்தி போன்ற பாவங்களிலிருந்து விடுபடுகிறான். காசிக்குச் சென்று கங்கையில் நீராடி விட்டு, விச்வேசப் பெருமானைத் தரிசித்து விட்டு , அங்கிருந்து கொண்டுவந்த கங்கை நீரால் இராமநாதருக்கு அபிஷேகம் செய்பவன் பாவச் சுமையிலிருந்து முற்றிலும் விடுபடுகிறான். இதில் ஐயமில்லை.” என்றும் கூறினார்.

ராமர் அயோத்திக்குச் சென்று முடி சூட்டிக் கொண்டபின் மீண்டும் தீர்த்த யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாக ஆனந்த இராமாயணம் கூறுகிறது. மேலும் அக்னி புராணம், பிரம்மாண்ட புராணம்,மார்க்கண்டேய புராணம்,கருட புராணம்,விஷ்ணு புராணம்,தேவி புராணம்,ஸ்காந்த புராணம் பத்ம புராணம், அத்திரி ஸ்ம்ருதி,நாராயண ஸ்ம்ருதி, ஆகியவற்றிலும் சேது க்ஷேத்திர மகிமை சொல்லப்பட்டிருக்கிறது.

பிரஹ்மாண்ட புராணத்தில் புண்ணிய காலங்களில் இங்கு பொன் முதலிய தானங்கள் பெறுபவன் ஆயிரம் ஆண்டுகள் அரக்கனாகவும்,கண்ணின்றியும்  தாங்குபவரின்றியும் இருப்பான். அதற்குப் பிராயச்சித்தமாக இங்கு ஒன்பது லக்ஷம் காயத்ரி ஜபிக்க வேண்டும் . கல்பதருவை தானமாகப் பெற்றால் இருபத்தொரு நரகங்களில் வீழ வேண்டும். இதற்குப் பிராயச்சித்தமாக எட்டு லக்ஷம் காயத்ரியை ஜபிப்பதும், பெற்ற தானத்தில் ஒரு பங்கை நற்காரியங்களுக்கு செலவழிப்பதும், பூமியை மும்முறை வலம் வருவதும்,சேதுவில் மூன்று ஆண்டுகள் ஸ்நானம் செய்வதும் சிவ பூஜையும், இராமநாதப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் சொல்லப் பட்டிருக்கிறது. வைத்திய நாத தீக்ஷிதரின் ஸ்ம்ருதி முக்தாபலத்தில் பிராயச்சித்த காண்டத்தில் இதனை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

தலம் பற்றிய நூல்களும் பாடல்களும்: இத்தலத்தின் மீது வடமொழியில் தலபுராணமும், தமிழில் நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேதுப்புராணமும், திருஞான சம்பந்தர் அருளிய இரண்டு  தேவாரத் திருப்பதிகங்களும்,திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரத் திருப்பதிகமும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடலும், தாயுமான சுவாமிகள்,பர்வத வர்த்தனி பேரில் பாடிய மலைவளர் காதலி பதிகமும், சொக்கநாதப்புலவர் பாடிய தேவை உலாவும் முத்துவிஜயம் பிள்ளை இயற்றிய சேதுப்புராண வசனமும், இத்தலத்தின் மீது பாடப்பட்டுள்ளன. சுவாமி-அம்பாள் மீது ஸ்ரீ ராகவனே செய்த ஸ்ரீ ராமநாதாஷ்டகமும், ஸ்ரீ பர்வதவர்தனி அஷ்டகமும் வடமொழி சுலோகங்களாக உள்ளன. சுவாமி பேரில் ஸ்ரீ ராமநாத சுப்ரபாதமும் இருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான  ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்,  சுவாமி பேரில் காமவர்த்தனி இராகத்தில் இயற்றிய ராமநாதம் பஜே ஹம் என்ற கீர்த்தனை சங்கீத உலகில் பிரசித்தமானது.

தாயுமான சுவாமிகள் நிகழ்த்திய அற்புதம்: தாயுமானவர் இங்கு வந்தபோது மழை இல்லாமல் மக்கள் துன்பப்படுவதைப் பார்த்துப் பின் வரும் பாடலைப் பாடினார்:

சைவ சமயம் சமயம் எனில் அச்சமயத்
தெய்வம் பிறை சூடும் தெய்வம் எனில் – ஐவரை வென்று
ஆனந்த வெள்ளத்து அழுந்துவதே முத்தி எனில்
வானங்கள் பெய்க மழை.

என்று பாடியவுடன் கருமேகங்கள் திரண்டு வந்து மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.

கல்வெட்டுக்கள்: இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் சமஸ்கிருதம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ளன. சில செப்பேடுகளும் உண்டு. சேதுபதி மன்னர்களும்,பாண்டிய மன்னர்களும், மதுரை நாயக்கர்களும் இக்கோயிலுக்கு அளித்த கொடைகள் பற்றிக் கல்வெட்டுக்கள் மூலமாக அறிகிறோம். 

நித்திய பூஜையும்,விழாக்களும்: விடியற்காலை 4 மணி முதல் 5 1/2 மணி வரை திருவனந்தல் பூஜை. நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையைக் காண மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் .சூர்ய உதயமானதும் விளா பூஜையும், 9 மணிக்கு மேல் காலசந்தி பூஜையும், நடுப்பகலில் உச்சிக்கால பூஜையும்,மாலையில் சாயரக்ஷையும்,இரவு 9 மணிக்கு மேல் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகின்றன.

இங்கு ஆண்டுதோறும் ஆனி ,ஆடி,மாசி மாதங்களில் மூன்று பிரமோற்ச  வங்களும், வைகாசியில் வசந்த விழாவும் நடைபெறுகின்றன. பிரதி வெள்ளிக்கிழமையும் அம்பிகை நவசக்தி மண்டபத்தில் கொலுவீற்றுத் தரிசனம் தருகிறாள். ஆடியில் திருக்கல்யாணம் நடைபெறும்.

பிதிர்க் கடனை நீக்கவல்ல தலமாதலால் அமாவாசை, கிரஹணம் மகோதய-அர்த்தோதய புண்ணிய காலங்கள், மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் பெருந்திரளான மக்கள் கடல் நீராடிப் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்கள். ஆடி அமாவாசை,தை அமாவாசை தினங்களிலும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வருகின்றனர்.
உஜ்ஜைனி மாகாளி கோயில் 
பிற கோயில்கள்: அக்னி தீர்த்தத்தருகில் மேற்கு பார்த்துள்ள உஜ்ஜைனி மாகாளி கோயில், கந்தமாதன பர்வதம், கோதண்டராமர் கோயில் ஆகியன.

காஞ்சி ஸ்ரீ சங்கர மடம்
யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவஸ்தான அறைகளும், காஞ்சி மடம் , சிருங்கேரி மடம் , காசி மடம், ஆகியனவும் மற்றும் தனியார் விடுதிகளும் உள்ளன.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்குவதும் ஜ்யோதிலிங்க ஸ்தலமும் ஆன இராமேசுவரத்தை தரிசித்து முந்தை வினை முழுதும் நீங்கிப் ,பிறப்பற்ற பெரு வாழ்வு அருளுமாறு ஸ்ரீ இராமலிங்க மூர்த்தியையும் ,ஸ்ரீ பர்வத வர்த்தனி அம்பிகையையும் வேண்டி  உய்வோமாக.    

Wednesday, September 25, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் -இராமேசுவரம்-II

          

                                           சிவபாதசேகரன் 



கந்தமாதன பர்வதத்திலிருந்து தொலைவில் தெரிவது இராமநாத சுவாமி ஆலயம் 
தீர்த்தச் சிறப்பு: ஒரே கோயிலுக்குள் பல தீர்த்தங்கள் அமைந்துள்ள தனிச் சிறப்பு , இராமநாத சுவாமி ஆலயத்திற்கு மட்டுமே உண்டு. யாத்திரை செய்ய வருவோர் கோயிலுக்கு உள்ளேயும் வெளியிலும் அதன் எல்லையிலும் உள்ள தீர்த்தங்களையும்,அவற்றின் சிறப்புக்களையும் அறிவது மிகுந்த பயன் தரும் என்பதால் இங்கு சற்று விரிவாகவே தருகிறோம்.

முதலாவதாகத் திருப்புல்லாணியில் உள்ள சக்கர தீர்த்தம் எனப்படும் அமிர்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். இதற்குத் தர்ம புஷ்கரணி என்ற பெயரும் உண்டு. ஒரு சமயம் தர்மதேவதை, மகாதேவனைக் குறித்துத் தவம் செய்யும்போது இந்த தீர்த்தத்தை உண்டாக்கியதால் இதற்குத் தர்ம புஷ்கரணி என்று பெயர் ஏற்பட்டது. தர்மதேவதையின் விருப்பப்படி அதனை சிவபெருமான் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். இவ்வரலாற்றை இத்தீர்த்தக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த காலவ மகரிஷியிடம் மஹா விஷ்ணு கூறினார். காவலரின் தவத்தை ஒரு அரக்கன் அழிக்க முன்வந்தபோது முனிவர் விஷ்ணுவைத் தியானிக்கவே நாராயணனும் அவ்வரக்கனைச்  சக்கராயுதத்தால் அழித்து,முனிவரைக் காப்பாற்றினார்.முற்பிறவியில் வசிஷ்டரது சாபத்தால் அரக்க வடிவம் பெற்று சக்கரத்தால் கொல்லப்பெற்று சாப நிவர்த்தி பெற்ற அரக்கன்,  கந்தர்வ வடிவத்துடன் சுவர்க்கம் அடைந்தான். ஆகவே இத்தீர்த்தம் சக்கர தீர்த்தம் எனப்பட்டது. இதில் நீராடினால் பித்ருக்கள் திருப்தி அடைவார்கள். புத்திரப்பேறும் கிடைக்கும். 

தேவி பட்டினத்திற்கு மேற்கே உள்ள புல்லக்கிராமத்தில் உள்ள க்ஷீர குண்டம் மிக்க பெருமை வாய்ந்தது. முத்கல ரிஷியின் யாகத்தினால் மகிழ்ந்த விஷ்ணுவானவர், அம்முனிவருக்குக் காட்சி அளிக்கையில், முத்கலர் ஒரு வரம் கேட்டார். காலையிலும் மாலையிலும் பகவானைத் திருப்திப் படுத்த பால் கிடைக்குமாறு  அருள வேண்டினார். பகவானும் விச்வகர்மாவை அங்கு ஓர் குளம் அமைக்கச் செய்தார். காமதேனுவை அக்குளத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் பால் சொரியச் செய்தருளினார். இதன்மூலம் முனிவரும் தினசரி பால் அளித்துப் பகவானைத் திருப்தி செய்தார். நிறைவாக முக்தியும் பெற்றார். இதனால் இக்குளத்திற்கு க்ஷீர குண்டம் என்ற பெயர் வந்தது. இதில் ஸ்நானம் செய்தால் கொடிய பாவங்கள் நீங்கி முக்தி பெறுவார்கள். அசுவமேதம் செய்த பலனும் கிடைக்கும். காச்யபரின் மனைவியர்களான வினதை,கத்ரு ஆகிய இருவரும்  விவாதம் செய்தபோது கத்ரு வஞ்சித்ததால் வினதைக்கு அடிமை ஆனாள். வினதையின் புத்திரனான கருடன் அமிர்த கலசம் கொண்டுவந்து தனது  தாயாருடன்  அதில் ஸ்நானம் செய்து இருவரும் பவித்திரர்கள் ஆனபின்னர்,, தவறிழைத்த கத்ருவும் காச்யபரின் சொற்படி க்ஷீர குண்டத்தில் நீராடியதால் பாப விமோசனம் பெற்றாள்.

சக்கர தீர்த்தத்தின் தென்புறம் வேதாள தீர்த்தம் உள்ளது. சுதர்சனன், சுகர்ணன் என்ற அந்தண சகோதரர்கள் காலவமுனிவரால் சபிக்கப்பெற்றனர். மூத்தவன் வேதாளமாகியும், இளையவன் மீண்டும் மானுடப்பிறப்பை எய்தியும் மிகவும் துன்புற்றார்கள். பின்னர் காவலரின் வாக்குப்படி இத் தீர்த்தத்தில்  நீராடி,பழைய உருவம் பெற்றனர். வேதாளத்தன்மை நீங்கியதால்அதற்கு  வேதாளதீர்த்தம் எனப்பெயர் வந்தது. இங்கு பித்ருக்களுக்குப் பிண்டதானம் செய்வது சிறப்பாகும்.

கந்தமாதன பர்வதம் 
பாப விநாச தீர்த்தம் : கந்தமாதன பர்வதத்தில் கௌரி ஸமேதனாகப் பரமேச்வரன் மற்ற தேவ கணங்களுடன் நிரந்தரமாக இருந்தருளுகிறார். இதன் காற்றுப் பட்டாலும் பாபங்கள் நசித்துப் போகும். இதனருகிலுள்ள சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து விட்டுக் கந்தமாதனத்தில் பிண்டம் போட்டால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைவார்கள். நரகில் வசித்துக் கொண்டிருந்த பித்ருக்கள் சுவர்க்கம் செல்வார்கள். இதன் மீதுள்ள பல தீர்த்தங்களுள் பாப நாச தீர்த்தமும் ஒன்றாகும். பிரமராக்ஷசால் பீடிக்கப் பட்ட ஒரு அந்தணன் , அகஸ்தியரின் அறிவுரைப்படி பாபநாச தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நீராடி பிரமராக்ஷஸ் நீங்கப்பெற்று இறுதியில் முக்தியும் அடைந்தான்.

கந்த மாதன பர்வத உச்சி 
ஸீதா தீர்த்தம்: கந்தமாதனத்தில் உள்ள இந்த தீர்த்தத்தில் எல்லா தீர்த்தங்களும் தங்களைப் பரிசுத்தமாக்கிகொள்ள வேண்டி இதில் தங்குகின்றபடியால் இதன் பெருமையை அறியலாம். அக்னிப் பிரவேசம் செய்த கற்புக்கரசியான ஸீதா தேவியால் இது உண்டாக்கப்பட்டது. இதில் நீராடினால் பாபம்,துக்கம், தரித்திரம் நீங்கப்பெறுவர். இதில் நீராடியதால் இந்திரனைப் பிடித்த பிரம ஹத்தி தோஷம் நீங்கியது. 
மங்கள தீர்த்தம்: ஸீதா தீர்த்தத்தில் நீராடியபின் மங்கள தீர்த்த ஸ்நானம்  வேண்டும். எல்லா ஐச்வர்யங்களையும் தரவல்ல புண்ணிய தீர்த்தம் இது. மனோஜவன் என்ற சந்திர வம்சத்து அரசன் கெளட தேசத்து அரசனால் தோற்கடிக்கப்பட்டு , நாடு, செல்வம் எல்லாவற்றையும் இழந்து,காட்டில் வசிக்க நேரிட்டபோது அவனுக்கு இரங்கிய பராசர முனிவர், மங்கள தீர்த்த மகிமையை எடுத்துரைத்து,அதில் நீராடினால் இழந்ததெல்லாம் பெறுவாய் என்று அருளினார். அதன்படி மன்னன் தன் மனைவி மக்களோடு இத்தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்ததன் பலனாக, இழந்த நாட்டையும், செல்வத்தையும் பெற்று,நிறைவாக மகனை அரசனாக்கிவிட்டு, மனைவியுடன் சிவலோகம் சென்றான் . இதில் உலக நன்மைக்காக,     ஸீதாலக்ஷ்மியுடன் இராமபிரான் தங்கியிருக்கிறார்.

அமிர்த வாபி: இராமர் தனது வானர சேனையுடன் கடலைத்தாண்டும் உபாயம் பற்றி ஆலோசனை செய்கையில் கடல் அலைகளின் இரைச்சலால்  ஒருவரோடொருவர் பேசுவது கேட்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இராமர்,புருவங்களை நெரித்ததும், சமுத்திர ராஜன் அடங்கிப்போனான். பிறகு ஏகாந்தமாக யோசனை நடைபெற்றதால் இவ்விடம் ஏகாந்த ராமநாதம் என்று வழங்கப்படுகிறது. இந்நிகழ்வால் அங்கு அலைகளின் பேரிரைச்சல் இல்லை என்று சொல்லப்படுகிறது.  

பிரம்ம குண்டம்: இது கந்தமாதனத்தில் உள்ளது. அக்கினி மலையாகத் தோன்றிய லிங்கோத்பவமூர்த்தியின் அடிமுடி தேடிக் காண முடியாத நிலையில், தான் கண்டதாகப் பொய் உரைத்த பிரமனுக்குக் கோயில் இல்லாமல் போகவும், உண்மையை உரைத்த  விஷ்ணுவுக்கு ஆலய வழிபாடு நிகழும் என்றும்  சிவபெருமான் அருளினார். தன் பிழைக்கு வருந்திய பிரமன், கந்தமாதனத்தில் குண்டம் அமைத்து யாகம் செய்தான். அதனால் மகிழ்ந்த மகாதேவர், வேத கர்மாக்களில் பிரமனுக்கு பூஜை நடக்கும் என்றும், விக்ரஹ ஆராதனை மட்டும் நடைபெறாது என்றும் , இந்த யாக குண்டம் செய்த இடம் பிரம குண்டம் என்று வழங்கப்படும் என்றும்,இதன் விபூதியைத் தரித்தால் பஞ்ச மாபாதகங்களும் விலகும் என்றும், முக்தி கிட்டும் என்றும் அருளினார். வியாச பகவானும், இதன் பெருமையைக் கூறும்போது, “ இதன் விபூதியைத்தந்தால் பூதானம் செய்த பலன் உண்டு. கைகளைத் தூக்கி சத்தியமாக மும்முறை உரைக்கிறேன் “ என்று கூறியுள்ளார்.  

ஹனுமத் குண்டம்: அனுமனே இதனை உண்டாக்கியதாகப் புராணம் கூறும். தர்மசகன் என்ற கேகய தேச அரசனுக்கு நூறு மனைவிகள் இருந்தும் மூத்த மனைவி மூலம் ஒரு மகனே பிறந்திருந்தான். அந்தணர்கள் அறிவுறுத்தியதன் பேரில் ஹனுமத் குண்டக் கரையில் அசுவமேத யாகம் செய்ததால் மற்ற மனைவிகளுக்கும் புத்திர பாக்கியம் கிட்டியது.  

அகஸ்திய தீர்த்தம் :இமயத்தில் சிவ-பார்வதி கல்யாணம் நடந்தபோது பூமியை சமன் செய்யத் தென்திசை நோக்கி அகஸ்தியர் வந்தபோது இங்குத் தங்கி ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தினார். இதில் நீராடுபவர்கள் கோரிய பலன்கள் அனைத்தும் பெறுவார்கள் . தீர்க்கதபஸ் முனிவரது புத்திரனான கக்ஷீவான் தனது குருவான உதங்க ரிஷியிடம் கல்வி கற்று, அவர் சொற்படி அகஸ்திய தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்து மூன்று ஆண்டுகள் ஆனபின்னர் அங்கு எழுந்த நான்கு தந்தம் கொண்ட யானையில் ஏறி ஸ்வதயன் என்ற அரசனது மகளான மனோரமையை அத்தீர்த்தக் கரையில் மணம் செய்து கொண்டான்.இந்த சரித்திரம் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறுவர்.

கந்தமாதனத்தில் உள்ள மற்ற தீர்த்தங்களுள் சூரியனுக்குப் பொற்கைகளை அளித்த சக்கர தீர்த்தமும், கால பைரவரின் தோஷத்தை நீக்கிய சிவ தீர்த்தமும், குறிப்பிடத்தக்கவை.
இராம தீர்த்தம்: அச்வத்தாமன் இறந்தான் என்று பாரதப்போரில் தருமபுத்திரனானவர் துரோணரிடம் பொய் சொன்ன பாபம் போக வியாசரின் அறிவுரைப்படி ராம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஒரு மாதம் தங்கி இருந்து,தானங்கள் செய்து தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார் 

லக்ஷ்மண தீர்த்தம் 
லக்ஷ்மண தீர்த்தம்: லக்ஷ்மணர் இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கி அதன் கரையில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டுள்ளார். தன்னை மதியாத சூத முனிவரைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை பலராமர் இதில் ஸ்நானம் செய்ததால் நீக்கிக் கொண்டார் எனப் புராணம் கூறுகிறது.

லக்ஷ்மணன் பிரதிஷ்டை செய்த சிவாலயம் 


பைரவ,கபி தீர்த்தங்கள்  பாம்பனுக்கு அருகிலும், தங்கச்சிமடத்தில் அமிருதவாபிக்கருகில் இரண விமோசன தீர்த்தம், ஸீதையின் தாகத்தைத் தீர்க்க இராமன் வில்லை ஊன்றி உண்டாக்கிய வில்லூருணி தீர்த்தம், ஆகியன உள்ளன. சுக்ரீவ,அங்கத,சாம்பவ,தரும,பீம,அர்ஜுன ,நகுல, சகாதேவ,திரௌபதி தீர்த்தங்கள் கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில் உள்ளன. பரமசிவனால் உண்டாக்கப்பட்டதும் சுகப் பிரம்ம ரிஷி ஸ்நானம் செய்து ஞானம் பெற்றதுமான ஜடா தீர்த்தம் தனுஷ்கோடி செல்லும் பாதையில் கோதண்டராமர் கோயிலுக்கு அருகில் இருக்கிறது.
இவற்றைத் தவிர தேவ, விபீஷன,கஜ,சரப,குமுத ,ஹர ,பனச தீர்த்தங்கள் இருந்ததாகப் புராணம் கூறுகிறது. அவை இப்போது காணப்படவில்லை.

அக்னி தீர்த்தம்: 

அக்னிதீர்த்தம் 
கீழைக் கோபுரத்திற்கு நேர் எதிரில் உள்ள கடலே அக்னி தீர்த்தம் எனப்படுவதாகும்.இராவண சம்ஹாரம் ஆனபிறகு, ஸீதா தேவியை ஏற்றுக்கொள்ளும் முன்பு பிராட்டியின் சுத்திக்காக அக்னி பகவானை ஸமுத்திரத்திலிருந்து அழைத்தபடியால் இந்த இடம் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பாவங்கள் பல செய்த துஷ்புண்ணியன் என்பவன் ரிஷி சாபத்தால் பிசாசாக ஆகித் திரிந்தபோது ,அகஸ்தியர் அவனுக்கு இரங்கித் தன் சிஷ்யனான சுதீக்ஷ்ணரை மூன்று நாட்கள் அக்னி தீர்த்த ஸ்நானம் செய்யச் சொல்லி அப்பிசாச வடிவம் நீங்குமாறு அருளினார். அதன் பலனாக பிசாசு வடிவம் நீங்கித் தேவ வடிவம் பெற்றான்.

தனுஷ்கோடி தீர்த்தம்: தனுஷ்கோடியைப் பார்த்தாலே முக்தி நிச்சயம் என்கிறது புராணம். இராவணனை வென்று விபீஷணனுக்கு முடி சூட்டி விட்டுக் கந்தமாதனத்தை மீண்டும் ஸீதா லக்ஷ்மணர்களுடன் இராமர் வந்து அடைந்தபோது, விபீஷணன் அவரை வணங்கி, “ தாங்கள் கடலில் கட்டிய இந்த அணையின் மூலம் பலசாலிகளான மன்னர்கள் இலங்கைக்கு வந்து என்னையும் என் சந்ததியினரையும் எதிர்ப்பார்கள். ஆகவே தங்களது வில்லின் நுனியால் (தனுஷ்  கோடியால்) இந்த அணையைத் தகர்த்து விடுங்கள்” என்று விண்ணப்பித்தான். அதன்படி அணையானது இராபிரானது வில் நுனியால்  தகர்க்கப்பட்ட காரணத்தால் இவ்விடம் தனுஷ்கோடி என்று வழங்கலாயிற்று.   
                                                       தீர்த்த மகிமைகள் தொடரும்