Friday, November 13, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – 12– க்ருஷ்ணேஷ்வர்

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் 

 12–க்ருஷ்ணேஷ்வர்(Grushneshwar)

                                         சிவபாதசேகரன்


 மகாராஷ்டிரா மாநிலத்தில் ஔரங்காபாத் நகருக்கு வடமேற்கில் சுமார் 30 கி.மீ.தொலைவில் உள்ளது க்ருஷ்ணேஷ்வர் என்ற ஜோதிர் லிங்க ஸ்தலம். பன்னிரு ஜோதிர் லிங்க வரிசையில் பன்னிரண்டாவதாக அமைவது .

புராதனமான இந்த ஆலயம் முகலாய மன்னர்களால் கி.பி. 13-14 நூற்றாண்டுகளில்  இடிக்கப்பட்டது. தற்போது நாம் காண்பது 18 ம் நூற்றாண்டில் இந்தூர் மகாராணி அகல்யாபாய் ஹோல்கர் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டதாகும். அதற்கு முன்னதாக , சிவாஜி மகாராஜின் பாட்டனார் வெருல் நகரைச் சேர்ந்த மாலோஜி போஸ்லே என்பவர் 16ம் நூற்றாண்டில்  கட்டிய கோயிலும் முகலாயர்களால் இடிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இந்தூர் மகாராணி அவர்கள் இக் கோயிலை மீண்டும் நிர்மாணித்தார்கள். இம்மாதரசி இவ்வாறு காசி போன்ற இடங்களில் முகமதியர்களால் அழிக்கப்பட்ட ஆலயங்களை மீண்டும் எழுப்பினார் என்று வரலாறு கூறுகிறது.

                                                                     வழித்தோற்றம் 

மகாராணி அகல்யாபாய் அவர்களால் மீண்டும் எழுப்பப்பட்ட இக் கோயில் , முழுவதுமாகச் சிவந்த கற்களால் கட்டப்பட்டது. சுவாமி  விமானம் ஐந்து தளங்களைக் கொண்டது. பன்னிரு ஜோதிர் லிங்கத் தலக் கோயில்களுள் இது அளவில் சிறியதாகக் காணப்பட்டாலும் கீர்த்தியில் குறைந்ததல்ல.  

சுவாமிக்கு எதிரில் உள்ள மஹா மண்டபம் 24 தூண்களைக் கொண்டதாகும். அவற்றில்  சிவபுராணக் கதைகள் அழகு வாய்ந்த சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன.  நந்தியெம் பெருமானது அழகிய திருவுருவத்தையும் காண்கிறோம். கருவறையானது  சிறியதும் சதுர வடிவம் ( 17’ x 17 ‘ ) கொண்டதுமாகும்.  விமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளன. சிவமகா புராணம் , ஸ்கந்த புராணம் ஆகிய நூல்களில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம்.  இக் கோயிலுக்கு அருகில் சிவ ஸரோவர் என்ற புனிதமான தீர்த்தம் ஏரியாக உள்ளது. மகா சிவராத்திரி நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு தரிசிக்க வருகிறார்கள்.

க்ருஷ்ணேஷ்வர் ஆலயத்தைத் தரிசித்த பிறகு இதற்கு அண்மையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் சாலை ஓரமாக அமைந்திருக்கும் எல்லோரா குகைக் கோயில்களையும் அவசியம் பார்க்க வேண்டும். UNESCO வினால் உலகப் பாரம்பர்யப் பொக்கிஷங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் இதுவும் ஒன்றாகும்.  

எல்லோரா குகைக் கோயில்கள் கி.பி.ஆறாம் நூற்றாண்டைச்  சேர்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. சுமார் நூற்றுக்கும்  அதிகமான குகைகள் இருந்தாலும் பொது மக்கள் , 34 குகைகளை மட்டுமே பார்க்க முடியும். சயாத்ரி மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைகளில் ஒன்று முதல் பன்னிரண்டாவது குகை வரை புத்த மதத்தொடர்புடையவை. பதின்மூன்றாவது முதல் இருபத்தொன்பதாவது குகை வரை ஹிந்து மதத்தோடு  தொடர்புடையவை. முப்பது முதல் முப்பத்துநான்கு  வரை சமண மதத் தொடர்புடையவை. ஹிந்து மற்றும் புத்த மதக் குகைகள் ராஷ்ட்ர கூட மன்னர்கள் காலத்தவை என்றும், சமண சமயக் குகைகள் யாதவ மன்னர்கள் காலத்தவை என்றும் அறியப்படுகிறது.

பௌத்தக் குகைகள் ஏறத்தாழ கி.பி.600 முதல்  730 வரையிலுள்ள காலகட்டத்தில் அமைக்கப்பெற்றவை. அவற்றுள் ஆறாவது குகை மிகப் பழமையானது. புத்தர்,போதி சத்துவர்கள் சிற்பங்களைத் தவிரவும் , விகாரங்கள்,  அறைகள், மாடங்கள் ஆகியவற்றைக் கொண்டவை அவை. பத்தாம் எண்ணுள்ள குகை , விச்வகர்மா குகை என்பதாகும். அது முக்கியமான வழிபாட்டுக் கூடமாக விளங்குகிறது.

இராவணன் கயிலையைப் பெயர்க்க முயச்சித்தல் 

ஹிந்து மதச் சார்புள்ள குகைகள் ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுக்குள் அமைக்கப்பட்டவை. கணபதி, சிவன்,பார்வதி,துர்க்கை சப்த மாதர்கள், ஆகிய மூர்த்தி வடிவங்களை 21 வது குகையில் காணலாம். அதன் நுழைவாயிலில் பெரிய உருவில் நதி தேவதைகளான கங்கையும் யமுனையும் காட்சியளிக்கின்றனர்.

ஒரே கல்லிலிருந்து பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலை 16 ம் எண்ணுள்ள குகையில் காணலாம். இது முதலாம் கிருஷ்ணா என்ற ராஷ்ட்ர கூட மன்னரால் (கி.பி. 756- 773) கட்டப்பட்டது. நுழைவாயிலில் ஒரு தாழ்ந்த கோபுரம் உள்ளது. ஆலயத்தில் ஒரு சிவலிங்கமும் அதன் எதிரில் நந்தியும் இருக்கக் காணலாம். இராமாயண மகாபாரதச் சிற்பங்கள் வெளிச்சுவர்களில் காணப்படுகின்றன. இதனைக் கண்டு வியந்த கார்மெல் பெக்ஸன் என்பவர், உலக அதிசயம் ( Wonder of the World)என்று வருணித்துள்ளார்.

15 ம் எண்ணுள்ள குகையில் தசாவதாரச் சிற்பங்களைக் கண்டு மகிழலாம். அவை யாவும் உயிரோவியங்கள். நம்மைச் சிலிர்க்கச் செய்பவை. ஹிரண்ய வதம், கஜேந்திர மோக்ஷம், கண்ணன் கோவர்த்தனகிரியை ஏந்தியது, சிவபெருமான் திரிபுரத்தை எரித்தது, அந்தகாசுர சம்ஹாரம், கால சம்ஹாரம் ஆகிய சிற்பங்கள் அவசியம் காணத்தக்கவைகளாகும்.

குகை எண்கள் 14,22 ஆகியவற்றில் இராவணன் கயிலையைத் தூக்க முயன்றது, நீலகண்டன் ஆனது ஆகிய புராண வரலாறுகள் மற்றும் ஏராளமான சிற்ப வரிசைகள் உள்ளன.

சோட்டா  கைலாஸா ,இந்திர சபா, ஜகந்நாத சபா ஆகிய குகைகளில் சமணச் சிற்பங்கள் இருக்கக் காணலாம்.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் எல்லோரா குகைச் சிற்பங்கள் பல உடைக்கப் பட்டுவிட்டன.

நிறைவுரை:

தென்னிந்தியர்கள் பெரும்பாலும்  காசி ,ராமேச்வரம் ஆகிய இரு ஜோதிர்லிங்க யாத்திரைகளையே மேற்கொள்கிறார்கள். மற்ற பத்து ஜோதிர்லிங்கத் தலங்களையும்  அடையாளம் காட்டுவதே இப்பதிவுகளின் நோக்கம். ஒவ்வொரு தலத்தைப் பற்றியும் முழுமையாக அறிய வேண்டுமானால் அங்கெல்லாம் தங்கி உள்ளூர் வாசிகளிடம் மேலும் பல தகவல்களையும் அனுபவங்களையும் அறிந்து கொள்ளலாம். மேலும் அவற்றைப் பற்றிப் பல புத்தகங்களும் வெளிவந்துள்ளன. சுருக்கமாகவேனும் அத்தலங்களைப் பற்றி அறிந்த வரையில் பதிவிட்டால் சிலருக்கு அங்கு சென்று தரிசிக்க ஆர்வம் எழ வேண்டும் என்ற அவாவுடன் வெளியிடப்பட்ட பதிவுகள் இவை.  

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள்  நாகநாதம், வைத்யநாதம், பீமசங்கரம் ஆகியவற்றின் இருப்பிடம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதே பெயர்களில் வேறு இடங்களிலும் ஜோதிர் லிங்க மூர்த்தங்கள் இருப்பதாகவும் கருதுகின்றனர். 

மகாராஷ்ட்ராவிலுள்ள ஔத் நாகநாதம் தவிர, குஜராத்தில் த்வாரகாவிற்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள நாகேஷ்வரும், அல்மொராவின் தாருகாவனப் பகுதியில் உள்ள ஜோகேஷ்வரே நாகேசம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. 

மகாராஷ்ராவில் அமைந்துள்ள வைத்யநாதம் தவிர, ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தியோகர் என்னுமிடத்திலுள்ள கோயிலையும் ஹிமாச்சல ப்ரதேசத்திலுள்ள  பைஜ்நாத் கோயிலையும் வைத்யநாத ஜோதிர்லிங்கமாகக் கருதுகிறார்கள். 

மகாராஷ்டிர பீமசங்கரம் தவிர, கௌஹாதி நகரின் புறத்திலுள்ள டாகினி கோயிலையும் ஜோதிர்லிங்கமாக எண்ணுகின்றனர். 

இவ்வாறாக ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கூறப்பட்டாலும் அவற்றையும் தரிசிப்பதே உயர்வு. 

                                  

Tuesday, November 10, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – 11– கேதாரம்

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் 11– கேதாரம்  

                                         சிவபாதசேகரன்

                              திருஞானசம்பந்தர் தேவாரம்

   தொண்டர் அஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார் மலர்

   இண்டை  கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்

   வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரிக்

    கெண்டை பாய சுனை நீல மொட்டலரும் கேதாரமே .

                                        சுந்தரர் தேவாரம்

     வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்

      பாழ்போவது பிறவிக் கடல் பசிநோய் செய்த பறிதான்

      தாழாது அறம் செய்ம்மின் தடங்கண்ணான் மலரோனும்

      கீழ் மேலுற நின்றான் திருக் கேதாரம் எனீரே .


                                                          கேதாரம் - வலைத்தளப் படம் 

பன்னிரண்டு ஜோதிர் லிங்கத் தலங்களுள் தேவாரப் பதிகங்கள் முழுமையாகக் கிடைக்கப் பெற்றுள்ள தலங்கள் மூன்றே ஆகும். அவை திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீ சைலம், இராமேச்வரம் மற்றும் கேதாரம் ஆகியவை. உஜ்ஜைனியும் காசியும் பதிகம் கிடைக்கப்பெறாமல் பெயர் மட்டும் குறிக்கப்பட்ட பாடல்கள் மூலம் வைப்புத் தலங்களாகத் தற்போது  வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் வட எல்லையில் உள்ள இமயமலையில் கர்வால் மலைத் தொடரில் அமைந்துள்ளது கேதாரம் என்ற ஜோதிர்லிங்கத் தலம் . இது உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் 11755 அடிகள் உயரத்தில் விளங்குகிறது. ரிஷிகேஷில் இருந்து சுமார் 220 கி.மீ. தூரத்தில் உள்ளது. சோராபாரி பனிச் சிகரத்திலிருந்து உற்பத்தியாகும் மந்தாகினி நதி இதன் அருகில் ஓடுகிறது. துத்கங்கா,மது கங்கா, ஸ்வர்கத்வாரி , சரஸ்வதி ஆகிய கிளை நதிகளும் அருகே ஓடுகின்றன.   

பனிப் பிரதேசமாகையால் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இங்கு செல்ல முடியும் . குளிர் காலங்களில் கோயிலைப் பூட்டிவிட்டு உற்சவ மூர்த்தியை குப்தகாசிக்கு அருகில் உள்ள உக்கி மத் என்ற இடத்திலுள்ள ஒம்காரேச்வரர் கோவிலுக்குக் கொண்டு வந்து பூஜைகள் செய்கிறார்கள். இங்குதான் பாணாசுரனின் மகளான உஷை, கிருஷ்ணனின் பேரனான அனிருத்தையை மணந்ததாகக் கூறப்படுகிறது. ருத்ரப் பிரயாகையிலிருந்து சுமார் நாற்பது கி.மீ தொலைவில் உக்கிமத் உள்ளது.

ரிஷி கேஷ் வரை ரயிலில் சென்று விட்டு பத்ரி நாத் வரை காரிலோ பஸ்ஸிலோ சென்று அங்கிருந்து கால் நடையாகவோ அல்லது குதிரை மீது ஏறியோ , கேதாரத்திற்கு சென்று தரிசிப்பது உண்டு.தற்போது பட்டா என்ற இடத்திலிருந்து கேதாரத்திற்கு மிகச் சமீபம் வரை போய் வர  ஹெலிகாப்டர் மூலமும் செல்லலாம் . முன்கூட்டியே இப்பயணத்திற்குப் பதிவு செய்து கொள்ளமுடியும்.   


இக்கோயில் ,பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்றும் ஆதி சங்கரர் கட்டியதாகவும் கூறுவார்கள். ஆனால் அதற்கும் முற்பட்டது என்றே பலரும் கருதுகிறார்கள். ஸ்காந்த புராணத்தில் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கரர் இங்கு சித்தி அடைந்ததாகக் கூறுவோரும் உளர். கேதார நாதர் கோயிலருகில் ஆதி சங்கரர் கோயில் இருக்கிறது.

குரு க்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்றாலும், போரில் உற்றார்,உறவினர்,குருமார்கள் ஆகியோரைக் கொன்ற பாவம் அவர்களை வந்தடைந்தது. அதிலிருந்து நீங்குவதற்கு அவர்கள் காசிக்குச் சென்றார்கள் அவர்களுக்குச் சிவபெருமான் தரிசனம் தரவில்லை.  இமயமலையானது  பெருமானது இருப்பிடமாதலால் அங்கு அவரைத் தேடி சென்றனர். குப்த காசியில் பீமன் சுவாமியைக் காளை  வடிவில் கண்டவுடன் அவரைப் பின்பற்ற முயலவே,  அக்காளை  வடிவேற்ற இறைவன் பூமியில் மறைந்தருளினான். பின்னர் பாண்டவர்களுக்கு அக்காளையின் முதுகுப் பகுதியான  கொண்டை ,  கேதாரத்திலும், கரங்கள் துங்கநாத்திலும், நாபியானது மத்யமஹேச்வரத்திலும், முகமானது ருத்ரநாத்திலும் , கேசமானது கபிலேச்வரத்திலும் தரிசனமாயிற்று. அவ்விடங்களில் பாண்டவர்கள் கோயில்களைக் கட்டி ,யாகங்கள் செய்து வழிபட்டனர். காளையின் சிரமாக நேபாளத்தில் டோலேச்வர மகாதேவர் கோயில் கருதப்படுகிறது.

பஞ்ச கேதாரங்களாகக் கேதார்நாத் (11755 அடி ), துங்கநாத் (12070 அடி), ருத்ரநாத் (7500 அடி), மத்ய மகேச்வர் ( 11450 அடி), கபிலேச்வர்( 7200அடி) ஆகிய தலங்களை யாத்திரை செய்வார்கள்.இவற்றில் கபிலேச்வர் கோயில் மட்டுமே ஆண்டு முழுதும் தரிசிக்கமுடியும்.துங்கநாத்தில் ராவணன் சிவபெருமானை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.  ஏனையவற்றை மழை மற்றும் பனிக்காலங்களில் தரிசிக்க முடியாது. துங்கநாத்தில் காசியைச் சேர்ந்த  பிராமணர்களும், பிற இடங்களில் ஆதி சங்கரர் வழிப்படி தென்னிந்திய பிராமணர்களும் பூஜை  செய்கிறார்கள். 170 கி.மீ. தூரம் கொண்ட பஞ்ச கேதார யாத்திரை செய்ய சுமார் இரண்டு வாரங்கள் ஆகும். இதனைக் கௌரி குண்டில் ஆரம்பிப்பார்கள். இந்த இடம் தேவாரம் பெற்ற அனேகதங்காவதம் என்பதாகும். நீல்கண்ட் மலைத்தொடரில் இந்திர நீலப் பருப்பதம் என்ற தலம் உள்ளது ரிஷிகேஷிலிருந்து கௌரி குண்டிற்குச் சாலை வழியாக வாகனங்களில் செல்லலாம். இந்த யாத்திரையில் நந்தா தேவி, சந்கௌபா, கேதார்நாத், நீல்கண்ட் ஆகிய பனி  படர்ந்த மலைச்சிகரங்களைக் கண்டு மகிழலாம்.

சார்தாம்(Char Dham) யாத்திரை மட்டும் செய்பவர்கள், யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களைத் தரிசனம் செய்வார்கள். இதில், ரேவாய் பள்ளத்தாக்கில் யமுனோத்ரியையும், பாகீரதி (கங்கை) நதிக்கருகிலுள்ள கங்கோத்ரியையும், மந்தாகினி நதியருகிலுள்ள கேதாரத்தையும் அலகநந்தா நதிக்கருகில் உள்ள பத்ரி நாத்தையும் காணலாம்.

கேதார்நாத் கோயில் வாயிலில் தரையாக இருந்தாலும், சுற்றிலும் மலைத் தொடர்களும், நதிகளும் ரம்மியமாகக் காட்சி அளிக்கின்றன.  கோயில் வாயிலில் சன்னதியைப் பார்த்தவண்ணம் நந்தி வீற்றிருக்கிறார். சுவாமி சன்னதி தெற்கு பார்த்தது.


                            மலைச் சரிவுக்குப் பின் கோயில் தோற்றம் 

16. 6.2013 அன்று மாலை திடீரென்று பொழிந்த பெருமழை மற்றும் நிலச் சரிவுகளால் கோயிலைச் சுற்றிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கோவிலுக்குப் பின்னாலிருந்த ராக்ஷசப் பாறை ஒன்று மலைச் சரிவிலிருந்து கோயிலை நோக்கி உருண்டு வந்தது. தெய்வாதீனமாக அப்பாறை கோயிலுக்குச் சேதம் ஏதும் விளைவிக்காமல் பெரிய ஓசையுடன் பின்னாலே நின்று விட்டது. அவ்வாறு சுவர் போல நின்றதால் காட்டாற்று வெள்ளம் கோவிலை அழிக்காமல் அதன் இரு புறங்களிலும் சீறிப் பாய்ந்து பேரழிவை ஏற்படுத்தியது. பலர் உயிரிழந்தும் பலத்த காயமடைந்தும் இன்னும் பலர் சாலைகள் மூடப்பட்டு விட்டதால் அங்கங்கே தவித்து நின்ற நிலையில் ஹெலி காப்டர் கம்பெனிகாரர்கள் முன்வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுப் பலரைக் காப்பாற்றினர். பின்னர் இராணுவம், உத்தர் கண்ட் போலீசார் ஆகியோரும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பேருதவியாற்றினர். நாளடைவில் யாத்ரீகர்கள் வரும் சாலைகள் சீரமைக்கப்பட்டுவிட்டன.    

அருகிலுள்ள இடங்கள்:

1 பைரவர் கோயில்: 1 கி.மீ.

2 காந்தி சரோவர் ஏரி: யுதிஷ்டிரர் இங்கிருந்து மோட்சத்திற்குப் போனதாகக் கூறுவார்கள்.

3 ஆதி சங்கரர் கோயில்

4 வாசுகி தல் : 6 கி.மீ. தொலைவிலுள்ள அழகிய ஏரி

5 சோன் பிரயாக் : சோன் கங்கையும் மந்தாகினியும் சங்கமிக்கும் இடம்

          

 

 

      

Sunday, November 8, 2020

 ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் 10 – த்ரயம்பகம்

                                         சிவபாதசேகரன்

மகா சிவராத்திரியில் த்ரயம்பக் ஆலயம் 

மகாராஷ்ட்ர மாநிலத்தில் நாசிக்கிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது த்ரயம்பகம் என்ற ஜோதிர்லிங்க ஸ்தலம். இங்கு உள்ள பிரம்ம கிரி என்ற குன்றின் அருகில் கோதாவரி, அகல்யா, வைதாணா , மேற்கு முகமாகச் செல்லும் கங்கை ஆகிய நதிகள் உற்பத்தி ஆகின்றன. வேத குருகுலங்களும், ஆசிரமங்களும் யோகப் பயிற்சி மையங்களும் உள்ள சிற்றூர் இது.

சிவபெருமானின் முடியைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரமன் , சிவ சாபத்தால் உலகத்தவர்களால் பூஜிக்கப் படாமல் போகுமாறு ஆன பின்பு,தனது பிழைக்கு வருந்தி, இத்தலத்தை அடைந்து மலை வடிவாகவே உறையும் பரமனை நோக்கித் தவம் செய்தான். ஆகவே  இங்கு சிவபெருமான்  பிரம கிரியாக பிரமனுக்குத்  தோன்றினார் என்கிறது புராணம்.

த்ரயம்பக் ஆலய வெளித் தோற்றம் 

ஒரு சமயம், கௌதம முனிவர் தனது மனைவியான அகலிகையுடன் உலக நன்மைக்காகத் தவம் செய்தார். வருணனது சொற்படி ஒரு குளத்தையும்  உண்டாக்கினார். அதில்  நீர் வற்றாதிருக்கவும், அங்கு நீராடிப் புண்ணிய கர்மாக்களைச் செய்பவர்களுக்கு அளவில்லாத பலனும் உண்டாகுமாறு வரம் பெற்றார்.

 நாளடைவில் அங்கு வந்த முனிவர்கள் பலர் கௌதமர் மீது பொறாமை கொண்டு  ,அவரை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஒருநாள் பசு ஒன்று கௌதமரின் ஆசிரமத்திற்கு எதிரில் இருந்த பயிர்களை மேயவே, அதனை விரட்டுவதற்காக, முனிவரானவர் தன் கையிலிருந்த கோலை அதன் மீது எறிய, அம்மாயப்பசு உயிர்  நீத்தது. இதனால் முனிவரைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. இதற்குப் பிராயச்சித்தம் கூறிய முனிவர்கள், கெளதமர்  பிரம கிரியை 101 பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் என்றும், கோடி பார்த்திவ லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் கங்கையை வரவழைத்து அதில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். கெளதமரும் அவ்வாறு செய்து, சிவபெருமானது கருணைபெற வேண்டித் தவம் செய்தார். அவர் முன்பு காட்சி அளித்த சிவபிரான், அம்முனிவர்களது தீய எண்ணத்தினால் கௌதமருக்குத் தோஷம் எதுவும் ஏற்படாது என்று கூறி, கங்கையைச்  சிறிதளவு தனது ஜடா முடியிலிருந்து வெளிப்படுத்தி அருளினார். அத்தி மரத்தடியிலிருந்து பிரம கிரியில் கங்கை வெளிப்படவே, முனிவரும் அதில் ஸ்நானம் செய்தார். அந்த இடமே பின்னர்  கங்காத்துவாரம் என்று பெயர் பெற்றது. கௌதமர் கொண்டு வந்ததால் கோதாவரி எனவும் பெயர் பெற்றது. தனக்குத் தீங்கு செய்த பிற முனிவர்களையும் மன்னித்தருளுமாறு கங்கையைக்  கௌதம முனிவர் வேண்டினார் . கோடி தீர்த்தங்கள் அதில் சங்கமித்ததால் அதனைக் கோடி தீர்த்தம் என்று வழங்குவார்கள்.

கௌதமர், தர்ப்பையைக் (குசையைக் ) கொண்டு தடுத்ததால் கங்காத் துவாரத்தின் கீழ்ப் புறம் குசாவர்த்த தீர்த்தம் உண்டாயிற்று. கங்காத் துவாரம், குசாவர்த்தம், கோடி தீர்த்தம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்பவர்களுக்கு மறு பிறவி இல்லை என்று புராணம் கூறுகிறது.

குசாவர்த்தத்தின் கிழக்கே கனகல தீர்த்தமும் அதற்குத் தெற்கில் கஞ்சன தீர்த்தமும் உள்ளன. பிர்ம கிரியின் மேலுள்ள கங்கா த்வாரத்தில் கங்கா தேவியின் விக்ரஹம் இருக்கக் காணலாம். அங்குள்ள கோமுகத்தின் வழியாக நீரானது குண்டத்தில் விழுந்து ஓடுகிறது. த்ரயம்பகத்திற்கு வடக்கில் நீல பர்வதத்தில் பில்வ தீர்த்தம் உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்ஹ ராசியில் குரு பிரவேசிக்கையில் கும்ப மேளா நடைபெறுவதால் அப்பொழுது இங்குள்ள நதிகளில் நீராடுவது     மிகுந்த  புண்ணியமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்திர தீர்த்தம், கங்கா சாகரம், கௌதம குண்டம், வாரணாசி தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்களும் உள்ளன.   

கங்கா தேவியின் சன்னதிக்கு அருகில் கௌதமரது குகை இருக்கிறது. அதில், கௌதமர், அகலிகை, ஆகிய திருவுருவங்களையும் நூறு சிவ லிங்கங்களையும் காணலாம்.

பிர்ம கிரி, நீல கிரி , காலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு இடையில் இப் புனிதத் தலம் அமைந்துள்ளது. இம்மூன்று மலைகளையும் பிர்ம, விஷ்ணு,ருத்ர வடிவங்களாகக் கூறுவர்.  பிர்ம கிரி மலையின் உயரம் சுமார் 4000 அடிக்கு மேலாக இருப்பதால் படிக்கட்டுக்களில் ஏறி மேலே செல்லலாம். நீலகிரியின் உச்சியில் ரேணுகா தேவி கோயில் உள்ளது. ஹனுமானின் பிறப்பிடமான அஞ்சனேரி மலை , இங்கிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. த்ரயம்பகேச்வர் கோவிலின் மேற்கில் நிவ்ருதிநாத் கோயில் உள்ளது. அங்கு மார்கழியில் நடைபெறும் உற்சவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவர்.   


கோட்டை போன்ற அமைப்புடைய  மதில்களுக்குள் த்ரயம்பகேச்வரர் கோயில் அமைந்துள்ளது. 1755 முதல் 1786 வரை பேஷ்வா மன்னர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. நானா சாஹிப் பேஷ்வா என்பவர் இதனைக் கட்டி முடித்தார்.  கர்ப்பக்கிருகத்தில் சுயம்புவான லிங்க பீடம் உள்ளது. லிங்கம் இல்லாமல் ஒரு குழி மாத்திரமே காணப்படுகிறது. இதன் மேற்குப் பாகத்தில் சூக்ஷும வடிவில் கங்கை பிரவாகிப்பதால் அப்பகுதி ஈரமாகவே காணப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமியன்றும், சோம வாரங்களிலும் திரளானபக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.மகா சிவராத்திரியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சோமவாரங்களில் சுவாமிக்கு அழகிய கிரீடம் ஒன்றைச் சார்த்துவார்கள்.

15 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நாசாக் வைரத்தால் சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்டதாகவும், 1817 ல் ஆங்கிலேயர்கள் மராத்தா போரில் வென்றவுடன் பாஜி ராவ் என்ற இளவரசர் அந்த வைரத்தை ஆங்கிலேயருக்கு அளித்ததாகவும், பின்னர் அது இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றனர்.

எதிரில் உள்ள மலைக்கோயில் 

இந்தத் தலத்தைச் சுற்றிலும் கிருஷ்ணன் கோயில், இராமர் கோயில், பரசுராமர் கோயில், லக்ஷ்மி நாராயணர் கோயில் முதலிய கோயில்கள் உள்ளன. சுமார் 90 கி.மீ. தூர பிரதக்ஷிணம் செய்யப் பல பக்தர்கள் வருகிறார்கள். அதில், கேதாரேசுவரர், இந்த்ரேச்வரர், காஞ்சநேச்வரர், ராமேச்வரர், கௌதமேச்வரர், த்ரிசந்யேச்வரர், விச்வநாதர், ஜ்வரேச்வரர், முகுந்தேச்வரர்,த்ரிபுவநேச்வரர், குசேச்வரர், கர்பூரேச்வரர் , கால பைரவர், த்ரிசந்த்யா தேவி, புவனேச்வரி, கனகேச்வரி, மஹா விஷ்ணு, ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கிறார்கள்.    


த்ரயம்பகேச்வரர் கோயிலுக்கு அண்மையிலேயே ஒரு சிறு குன்றின் மீது கோயில் ஒன்றைக் காணலாம். மேலே செல்லப் படிக்கட்டுக்கள் அமைந்துள்ளன. உச்சிக்குச் சென்றவுடன் ஊரின் அழகிய தோற்றத்தைக் கண்டு மகிழலாம். 

Saturday, November 7, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – XII

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் XII

                                           சிவபாதசேகரன்


மேலுலகிலிருந்து கங்கையைப் பகீரதன் அருந்தவம் செய்து கொண்டு வந்ததால் பாகீரதி என்றும் ஜன்னு முனிவரது ஆசிரமத்தினுள் புகுந்து வெளி வந்ததால் ஜான்னவீ என்றும் பெயர்களைப் பெற்ற கங்கை, காசியில் உத்தரவாகினியாக ஓடுகிறாள்.  கங்கை,யமுனை,சரஸ்வதி,       க்ருணா, தூதபாபா ஆகிய ஐந்து நதிகள் இங்குக் கூடுவதால் பஞ்ச கங்கா கட்டம் என்ற இடத்தில் புனிதமான துறை இருக்கிறது.

கோஸ்வாமி துளசிதாசர் இங்குத் தங்கியபடியே பல நூல்களை இயற்றினார்.அவரது கோயிலும் இங்கு உள்ளது. அவ்விடத்தைத் துளசி கட்டம் என்கிறார்கள். அவரது பாதுகைகளையும் அவரால் வழிபடப்பட்ட ஹனுமான் விக்ரஹத்தையும் காணலாம்.  ப்ரஹ்லாத கட்டத்தில் துளசி தாசர் இராமாயணம் எழுதியதாகக் கூறுவர்.

கேதார கட்டத்தில் ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் ஸ்தாபித்த குமாரசுவாமி மடம் உள்ளது. சரஸ்வதி தேவி மீது சகலகலாவல்லி மாலை பாடி, ஹிந்துஸ்தானி மொழியில் புலமை பெற்று, டில்லி பாதுஷாவை சந்திக்கச்  சிங்கத்தின் மீதேறிச் சென்று அவர்  வெகுமானங்களைப் பெற்றதாகவும் கருடன் பறக்காத காசியில் தனது தவவலிமையால் கருடன் வட்டமிடச் செய்து அப்பகுதி முழுதையும் பாதுஷாவிடம் பெற்று அங்கே மடத்தை  ஸ்தாபித்ததாக வரலாறு.  அங்குள்ள கேதாரீச்வரர் கோயிலும் மடத்தால் பரிபாலிக்கப் படுவதாகும்.

கால பைரவர் கோயிலில் பூஜை செய்பவர்கள் யாத்திரீகர்களின் முதுகில் தட்டுவார்கள். காசியில் தண்டம் (கால பைரவரின் தண்டனை,முதுகில் தட்டுவது),  பிரயாகையில் முண்டம்(மொட்டை அடித்துக் கொள்வது), கயையில் பிண்டம் ( பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வது) என்ற மூன்றையும் யாத்திரீகர்கள் அனுசரிக்கிறார்கள்.

காசியில் பார்க்கத்தக்க பிற இடங்கள்: கோபால மந்திரம், ரண சோடசி மந்திரம், பல்தேவ்ஜி மந்திரம், நேபாளி மந்திரம் ஆகியவை பிரசித்தி பெற்றவை. க்வாலியர் திவான் தினகர் ராயர் கட்டிய ராம மந்திரம் மிக்க அழகானது. கோரக்நாத மந்திரம், பாபா கோரக் நாதரின் பாதங்களைக் கொண்டு விளங்குவது ஆகும். கபீர் சௌராவில் கபீர் தாசரின் பாதச் சுவடுகளை வைத்திருக்கிறார்கள். அருகே, அவர்பயன் படுத்திய பொருள்களையும் வைத்துள்ளனர். ஜெய்பூர் மகாராஜா ஜெய சிம்மன் என்பவர் டில்லி, மதுரா, உஜ்ஜைன் ஜெய்பூர் ஆகிய இடங்களில் கட்டியுள்ளது போலவே காசியிலும் ஒரு வேதியல் சாலை (Observatory) கட்டியுள்ளார். பாரத மாத கோயிலுக்கும் அநேகர் விஜயம் செய்கிறார்கள். அஸி சங்கமத்திற்கு சுமார் 2  கி.மீ.தொலைவில் உள்ள ராம் நகரில் காசி ராஜாவின் அரண்மனை உள்ளது. மதன் மோகன் மாளவியா ஸ்தாபித்த காசி விச்வ வித்யாலயா(1916) , காசி வித்யா பீடம் ஆகிய கல்விக் கூடங்களும் காசிக்குப் பெருமை சேர்ப்பன. கௌதம புத்தர் நீண்ட காலம் வசித்த சாரநாத் என்ற இடம் இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.  

குரு க்ஷேத்திரப் போர் முடிவடைந்த பின்னர், பாவ நிவர்த்திக்காகப் பாண்டவர்கள் வாரணாசிக்கு வந்து சிவபெருமானை வழிபட்டனர் என்று புராணம் கூறுகிறது. வேத காலத்து நகராகக் கூறப்படும் காசியை முகமது கோரியின் சேனை கி.பி. 1194 ம் ஆண்டு நிர்மூலமாக்கியது. விச்வநாதர் கோயிலும் அழிவுக்கு ஆளானது.இது போன்று பல கோயில்கள் இடிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் கட்டினாலும் முகலாய மன்னர்கள் இடித்து வந்தனர். ராணி அஹல்யா பாய் ஹோல்கர் என்பவரால் கி.பி. 1780 ம் ஆண்டு மசூதிக்கு அருகில் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. இதுவே நாம் இப்போது காணும் விச்வநாதர் கோயிலாகும். கங்கைக் கரையில் காணப்படும் கட்டங்கள், மராத்திய ,பேஷ்வா, ஷிண்டே மன்னர்கள் கட்டியவை.மன்  மந்திர் காட்டில் உள்ள கட்டிட வேலைப்பாடுகள் அழகு மிக்கவை. ஆயுர்வேதம், சங்கீதம் ஆகியவற்றுக்குக் காசியின் பங்கு குறிப்பிடத்தக்கது. வல்லபாசார்யா, சைதன்யா போன்றோர் இசைக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது.

ஆதி சங்கரர் இங்கு இருந்தபோது, மனீஷா பஞ்சகம்,காசி பஞ்சகம் ஆகிய நூல்களை இயற்றினார். சிருங்கேரி சாரதா மடத்தின் 13 வது பீடாதிபதிகளால் கி.பி. 1346 ம் ஆண்டு, கேதாரீச்வரர் கோயிலின்  அருகிலுள்ள மடத்தில் ஸ்ரீ சந்த்ர மௌலீச்வர லிங்கம்ஸ்தாபிக்கப்பட்டது. 

அன்னபூர்ணாஷ்டகம்,விஸ்வநாதாஷ்டகம், கால பைரவாஷ்டகம் முதலிய ஸ்தோத்ரங்கள் நித்திய பாராயணம் செய்யப்படுபவை .

காசியின் பெருமை சொல்லுக்கு அடங்காதது. மேலும் பல தகவல்களை அறிய ஆர்வமுள்ளோருக்குப் பல நூல்கள் துணையாக விளங்குவன எனக் கருதி இத்துடன் நிறைவு செய்கிறோம். 

Sunday, November 1, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – XI

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் XI

                                           சிவபாதசேகரன்

காசி மாநகரத்தில் உள்ள நவ துர்க்கா ஆலயங்கள் :


சைலபுத்ரி
 கோயில்:  சைலேச்வரரின் அருகிலுள்ள சைலேச்வரி பற்றி காசிக் காண்டம் குறிப்பிடுகிறது. இக் கோயில், மர்ஹியா காட் என்ற இடத்தில் உள்ளது. நவராத்திரியின்போது முதல் நாளன்று இத்தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பிரமசாரிணி  கோயில்:  பைரோநாத் சென்று அருகிலுள்ள ப்ரஹ்மேச்வரர் கோயிலை அடைந்தால் துர்கா காட் என்ற இடத்தில் இத்தேவியைத் தரிசிக்கலாம். நவராத்திரி இரண்டாவது  தின சிறப்பு வழிபாடு இங்கு நடைபெறுகிறது.

சித்ர கண்டா தேவி  கோயில்: சௌக் பகுதியிலிருந்து நடந்து சென்றால் சித்ரா கண்டா கல்லி என்ற இடத்தில் சித்ரகுப்தேச்வரரைத் தரிசித்துவிட்டு இந்தத் தேவியைத் தரிசிக்கலாம். நவராத்திரி மூன்றாம் தினத்தில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

கூஷ்மாண்ட துர்க்கா ஆலயம்: தேவர்களையும் முனிவர்களையும் மிகவும் துன்புறுத்திய துர்காசுரன் என்பவனை அழிப்பதற்காக சிவபெருமான் பார்வதிதேவியிடம் கூறவே, தேவியானவள் காலாராத்ரியை அனுப்பி அசுரனின் படைவீரர்களை அழித்தாள். கோபமுற்ற அசுரன் நேரிடையாகவே தேவியிடம் போரிட்டான். கடுமையான இப்போரில் அசுரனையும் அவனது படையையும் அம்பிகை அழித்தாள். பின்னர் தேவர்களால் வஜ்ர பஞ்சகத் துதி செய்யப்பட்ட பின் சாந்தமாயினாள். நவராத்திரி நான்காவது நாளன்று துர்க்கா குண்ட்  பகுதியிலுள்ள இக்கோயிலில் பக்தர்கள் மிகுதியாக வழிபடுகின்றனர்.  

ஸ்கந்த மாதா  கோயில்: நவராத்திரியின்போது ஐந்தாவது தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறும் இக்கோயில், ஜைத்புரா என்ற இடத்தில் உள்ளது. இதன் அருகில் ஜ்வரஹரேச்வரர், கார்க்கோட  கேச்வரர், கார்க்கோடக நாகேச்வரர்,விகடத்வஜ விநாயகர் ஆகிய கோயில்கள் உள்ளன. துர்காசுரனை வென்ற துர்க்கா தேவி, காசியைக் காக்க வேண்டி ,அச்வாரூடா, வாகீச்வரி ஆகிய சக்திகளாகத் தோன்றினாள். அத்தேவியரையும் ஸ்கந்தமாதா கோயிலில் தரிசிக்கலாம்.         

காத்யாயனி  கோயில் :அமிர்தஜித் என்ற மன்னனுக்கும் மலயகந்தினி க்கும்  குழந்தை பிறந்த  போது கிரக நிலைகள் மோசமாக இருந்ததால்  பதினாறாவது வயதில் அரசனுக்கு ஆபத்து விளையும் என்று அறிந்த அரசி, பஞ்ச முத்ரா மஹா பீடத்திலுள்ள விகட தேவியாகிய காத்யாயனி யிடம் சரணடைந்தாள். தேவியின் கருணையால் அரசியின் மனக் கவலை நீங்கியது. சிந்தியா காட்டில் ஆத்மவீரேச்வரர் கோயிலில் இத்தேவி காட்சி அளிக்கிறாள்,

காலராத்ரி  கோயில் : காசியைக் காப்பதற்காகத் துர்கா தேவியால் அனுப்பப்பட்ட சக்திகளுள் ஒருவளே காலாராத்ரியாவாள். விச்வநாதர் கோயிலிலிருந்து சாக்ஷி கணபதி கோயிலைத் தாண்டினால் சுக்ரேச்வரர் கோயில் அருகில் காலிகா கல்லி என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.   

அன்னபூரணி  (பவானி) கோயில்: விச்வநாத் கல்லி அருகில் உள்ளது. மஹா கௌரி என்று நவராத்திரியில் எட்டாவது நாளன்று இந்தத் தேவியை வழிபடுகிறார்கள். இவளது மகிமையைக் காசிக்காண்டத்தில் விரிவாகக் காணலாம்.நவதுர்கா யாத்திரையில் இக்கோயில் இடம்பெறும்.   

ஸித்தேச்வரி  (ஸித்தி தாத்ரி துர்கா)ஆலயம் : நவராத்திரியின்போது ஒன்பதாவது தினத்தன்று சிறப்பாக வழிபடப் படும் ஆலயம் இது. இதனை ஸித்த பீடம் என்றும் கூறுவர்.அருகே, சந்த்ர கூபமும், சந்த்ரேச்வரரும் இருப்பதைத் தரிசிக்கலாம்

கால பைரவர் கோயிலருகில் ஸித்தமாதா கல்லியில் உள்ள கோயிலும் தேவியின் முக்கிய ஆலயமாகக் கருதப்படுகிறது..  

நவ கௌரி  கோயில்கள் :

முக நிர்மாலிகா கௌரி  கோயில்: சித்ரா நவராத்ரியின் முதல் நாளன்று இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுக்ல பக்ஷ திருதியை அன்று மேற்கொள்ளப்படும் கௌரி யாத்திரையைப் பற்றிக் காசிக்காண் டத்தில் காணலாம். அந்த யாத்திரையில் இக்கோயிலும் ஒன்று. காய் கட்டில் உள்ள ஹனுமான்ஜி கோயில் என்ற இடத்திலுள்ள இக்கோயிலை மச்சோத்ரி வழியாக அடையலாம் .    

ஜ்யேஷ்ட கௌரி  கோயில்: ஜ்யேஷ்ட மாத சுக்ல அஷ்டமி தின வழிபாடு இங்கு சிறப்புடையது. வசந்த நவராத்திரியில் இரண்டாம் நாள் இங்கு விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. மைதாகின் என்ற இடத்திற்கு அருகிலுள்ள சப்த ஸாகர் மொஹல்லா என்ற பகுதியில் காசி தேவி கோயிலருகே உள்ளது.

சௌபாக்ய கௌரி  கோயில்: கௌரி யாத்திரையில் இடம் பெறும். பண்ஷ் படக் என்ற இடத்திலிருந்து சௌக் நோக்கிச் சென்றால் ஆதி விச்வநாதர் கோயிலில் சௌபாக்கிய கெளரியைத் தரிசிக்கலாம். இந்தத் தேவி அனைத்து சௌபாக்கியமும் அருள வல்லவள்.

ஸ்ருங்கார கௌரி  கோயில்: சைத்ர  நவராத்ரியில் மூன்றாவது நாள் இத்தேவியைத் தரிசிக்கலாம்.ஞான வாபிக்குப் பின் இக்கோயில் உள்ளது. ஆண்டுக்கு இரு நாட்களே இங்கு வழிபட முடியும் என்ற நிலை உள்ளது.

விசாலாக்ஷி கௌரி  கோயில்: காசி விசாலாக்ஷி என்று பிரபலமாக வழங்கப்படும் இத்தேவியை, விசால தீர்த்தமாடி வழிபடுவர்.மிர் காட் என்ற இடத்தில் உள்ள இக்கோயில்  ஒரு சக்தி பீடமாகக் கருதப்படுகிறது.

லலிதா கௌரி  ஆலயம்: தசாஸ்வமேத் காட் அருகில்  உள்ள இக்கோயில் லலிதா காட் என்ற இடத்தில் இருக்கிறது.அருகில் நேபாளி பசுபதிநாத் மந்திர் உள்ளது.  

பவானி கௌரி  ஆலயம்: அன்ன பூரணி கோயிலருகே உள்ளது. கௌரி யாத்திரையில் இடம் பெறும் ஆலயம். 

மங்கள கௌரி கோயில் : சூரியனால் வழிபடப்பட்ட அம்பிகைக்கு இங்கு மங்கள கௌரி என்று பெயர். பைரோநாத் அருகிலுள்ள பஞ்ச கங்கா காட் என்னுமிடத்தில் உள்ளது. நவராத்திரி எட்டாவது தினத்தில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.   

மகாலக்ஷ்மி கௌரி  ஆலயம்: மகாலக்ஷ்மி சக்தி பீடம் எனப்படும் இந்த இடம் லக்ஷ்மி குண்டம் என்ற பிரபலமான இடத்தில் உள்ளது. சிகி சண்டி, மயூரி தேவி, உக்ரேச்வரர் சந்நதிகளையும் தரிசிக்கலாம்.  

பிற தேவி ஆலயங்கள்:

பண்டி தேவி கோயில் : தசாஸ்வமேத் காட் அருகே உள்ளது.  

சாமுண்டா தேவி  கோயில்: லோலார்க் என்ற இடத்திற்கு வடக்கே காசியைப் பாதுகாக்கும் தேவதையாக இருக்கும் தேவி இவள்.

சண்டி தேவி  கோயில்:  சப்த மாத்ரிகா தேவிகளுள் சண்டிகா தேவியை ஒன்றாகக் குறிப்பிடுவர்.சதக் பஜார் என்ற பகுதியில் உள்ளது இக் கோயில்.

சர்ம முண்டா தேவி  கோயில்: பெரிய திருவுருவம். தீய சக்திகளை அழிக்கும் இத்தேவி பதைனி என்ற கோயில் கொண்டு. நவ துர்க்கா கோயில் என்றும் இதை அழைக்கிறார்கள்.  

ஹய கண்டி தேவி கோயில்: லக்ஸா வழியாக லக்ஷ்மி குண்டம் என்ற இடத்திற்குச் சென்று, கையில் வாளேந்திய நிலையில் தரிசனம் தரும் இத்தேவியின் கோயிலைக் காணலாம்.

காமாக்யா தேவி கோயில் : பேலுபுராவிலிருந்து ரத்யாத்ரா செல்லும் வழியில் காமச்சா என்ற இடத்தில் படுக் பைரவர் கோயில் அருகில் இந்த ஆலயம் உள்ளது. பராசக்தியானவள் துர்காசுரனுடன் போரிடுகையில் உண்டாக்கிய சக்தியே காமாக்யா ஆவாள். காமாக்ஷி தேவி எனவும் அன்பர்கள் வழங்குவார்கள்.   

மணி கர்ணிகா தேவி கோயில்: சௌக் கிலிருந்து ஆத்மவீரேச்வரர் கோயில் வழியாகச் சென்று சிந்தியா காட்டில் உள்ள இக் கோயிலை அடையலாம்.

ஸங்கட தேவி கோயில்: சௌக் கிலிருந்து  சங்கட தேவி கோயிலுக்கு நடந்தே செல்லலாம். நவராத்திரியில் எட்டாம் நாள் வழிபாடு இங்கு சிறப்புற நடைபெறுகிறது.  

ஸித்த லக்ஷ்மி  கோயில்: மணிகர்ணிகா காட்டில் பிதா மகேச்வரருக்கு அருகே ஸித்த லக்ஷ்மி தரிசனம் தருகிறாள்.

த்ரைலோக்ய ஸுந்தரி கோயில்: துர்காசுரனுடன் யுத்தம் செய்கையில் தேவியிடம் தோன்றிய சக்திகளுள் ஒருவளே த்ரைலோக்ய ஸுந்தரி ஆவாள்.சௌக் பகுதியில்  மேற்படி பிதாமகேச்வரருக்கு அருகில் உள்ளது..

திரிபுரா பைரவி  கோயில்: தேவியிடமிருந்து வெளிப்பட்ட மற்றும் ஒரு சக்தியே திரிபுரா பைரவி ஆவாள். மிர்காட் என்ற இடத்தில் த்ரிபுரேச்வர், ருத்ரேச்வரருக்கு அருகில் இக்கோயில் இருக்கிறது.  

வாராஹி தேவி கோயில் : காசிக்கு வந்த யோகினிகளுள் ஒருவர் வாராஹி தசாச்வமேத கல்லி வழியாகச் சென்றால் மன்மந்திர் காட் என்ற இடத்தில் உள்ளது இக் கோயில்.

விந்த்யா தேவி கோயில்  :ஸங்கட தேவி கோயிலுக்கு வெளியில் உள்ளது . சௌக்கிலிருந்து நடந்து செல்லலாம்.

விச்வபுஜ கௌரி  கோயில்: விசாலாக்ஷி கோயிலுக்கு அருகில் உள்ள ஆலயம். தரம் கூபம் என்ற இடத்தில் இருக்கிறது.   

விஷ்ணு ஆலயங்கள்:

பிந்து மாதவர் கோயில் : காசியில் ஆதி யுகத்தில் ஆதிமாதவரகவும், த்ரேதா யுகத்தில் ஆனந்த மாதவராகவும்,த்வாபர யுகத்தில் ஸ்ரீ மாதவர் எனவும்,கலியுகத்தில் பிந்து மாதவராகவும் மஹா விஷ்ணு எழுந்தருளுகிறார். பிந்து முனிவரின் தவத்திற்கு இரங்கிக் காட்சி கொடுத்ததால் பிந்து மாதவர் எனப்படுகிறார். காசி ஒரு புண்ணிய பூமியாதலால் அதனை விட்டு நீங்க மாட்டேன் என்றும் காசி அழிவற்ற நகரம் என்றும் அம்முனிவரிடம் கூறியருளினார் . பஞ்ச கங்கா கட்டில் இக் கோயில் உள்ளது.   

ஆதி கேசவர்  கோயில்:  ராஜ்காட் போர்ட் என்ற இடத்தில் இந்தக் கோயில் இருக்கிறது.    

ஆதித்ய கேசவர் கோயில்: இதுவும் ராஜ்காட் போர்ட் என்ற இடத்தில் உள்ளது.   

பீஷ்ம கேசவர் கோயில்: வ்ருத்த காலேச்வரர் அருகே ம்ருத்யுஞ்சய மகாதேவ் கோயிலுக்குள் பீஷ்ம கேசவரைத் தரிசிக்கலாம்.    

ப்ருகு கேசவர் சன்னதி : ப்ரஹ்லாத் காட்டிலிருந்து நடந்து சென்று கோலா காட் படிகளில் வீற்றிருக்கும் ப்ருகு கேசவரைத் தரிசனம் செய்யலாம்.  

கங்கா கேசவர் கோயில்: தசாஸ்வமேத காட் வழியாக லலிதா காட் என்ற இடத்திலுள்ள நேபாள பசுபதிநாத் கோயிலுக்குக் கீழ் கங்கா கேசவர் சன்னதி உள்ளது.

கோபி கோவிந்த கேசவர் கோயில்: மச்சோதரி சென்று நடந்து செல்லும் தூரத்திலுள்ள லால் காட் என்ற இடத்தில் உள்ள இக்கோயிலை அடை யலாம்.  

ஞான கேசவர் கோயில்: ராஜ் காட் கோட்டையில் கங்கைக்கரையில் உள்ளது இந்தக் கோயில்.  

ஹயக்ரீவ கேசவர் கோயில்: பதைனி பகுதியில் ஆனந்தமயி ஹாஸ்பிடல் அருகில் கோயில் அமைந்துள்ளது.

ப்ரஹலாத கேசவர் கோயில்: ப்ரஹலாத்  காட்டில் ப்ரஹலாதேச்வரர் கோயிலில் உள்ள சன்னதி இது. 

த்ரிபுவன கேசவர் கோயில்: தசாஸ்வமேத காட்டில் பண்டி தேவி என்ற இடத்தில் இந்தக் கோயில் உள்ளது.

வாமன கேசவர் கோயில்: த்ரிலோசனில் பிர்லா ஹாஸ்பிடல் அருகில் உள்ளது. இங்கு அக்ஷய திருதியை வழிபாடு சிறப்புடையது.

நாரத கேசவர் கோயில்: ப்ரஹலாத் காட்டில் ப்ரஹலாதேச்வரர் கோயிலில் உள்ளது. 

ஞான மாதவர் கோயில்: விச்வநாத சுவாமி ஆலயத்திற்குள் அக்ஷய வடத்தின் அருகே ஞான மாதவரைத் தரிசிக்கலாம்.

ப்ரயாக் மாதவர் கோயில் : தசாஸ்வமேத காட்டில் ராம் மந்திர் வளாகத்தில் உள்ளது.

வைகுண்ட மாதவர் கோயில்: சிந்தியா காட்டில் ஹரி சந்த்ரேச்வரர் மற்றும் வைரோசநேச்வரருக்கு அருகில் உள்ளது. 

ஸ்வேத மாதவர் கோயில்:   மிர் காட்டில் உள்ள பெரிய ஹனுமான் கோயிலில் உள்ளது இந்த சன்னதி.

வீர மாதவர் கோயில்: சங்கட தேவி கோயில் வழியே சென்று வீரே ச்வரருக்கு  அருகில் வீர மாதவரை சேவிக்கலாம்.

அத்யுக்ர நரசிம்ஹர் கோயில்: சௌக் கிலிருந்து கோமத் சென்றால் கமலேச்வரருக்கு வடபுறம் நரசிம்ஹரை வழிபடலாம்.

கோலாஹல  நரசிம்ஹர் கோயில்:  மேற்கூறிய அத்யுக்ர நரசிம்ஹருக்கு அருகே கோலாஹல நரசிம்ஹரைக் காணலாம் .

லக்ஷ்மி நரசிம்ஹர் கோயில்: ராஜ் மந்திர் காட்டுக்கு அருகில் ஹனுமான் கோயிலுக்கு உள்ளே இந்த சன்னதி இருக்கிறது.    

மகாபல நரசிம்ஹர் கோயில்: த்ரிலோசன் அருகில் காமேச்வரர் கோயில் வளாகத்தில் உள்ளது.

ப்ரசண்ட நரசிம்ஹர் கோயில்: அஸி காட்டில் ஜகன்நாத் கோயில் என்னுமிடத்தில் உள்ளது.  

விதர நரசிம்ஹர்  கோயில் : ப்ரஹலாத் காட்டில் உள்ளது.  

விடங்க நரசிம்ஹர் கோயில்: கேதார் காட்டிலுள்ள கேதாரீச்வரர் கோவில் அருகில் கேதார் காட் படிக்கட்டுக்களில் உள்ளது   

த்ரிவிக்ரமர் ஆலயம்: த்ரிலோசநேச்வரர் கோயில் அருகில் உள்ளது.

தாம்ர வராஹர் ஆலயம்: தாம்ர த்வீபத்திலிருந்து தோன்றியவர் இவர். சௌக் பகுதியில் நீல்கண்ட் மொஹல்லா மேட்டில் ( நீல்கண்ட் கோயில் அருகே) உள்ளது.

யக்ஞ வராஹர் ஆலயம்: பஞ்சாக்னி அகட் காட்டில் ஸ்வர லீனேச்வரர் கோயிலில் அருகில் உள்ளது.

 

பைரவர் கோயில்கள்:

அஸி தங்க பைரவர் கோயில்: வ்ருத்த காலேச்வரர் அருகே ம்ருத்யுன்ஜயே ச்வரர் கோயிலில் உள்ள சன்னதி.  

பீஷன் பைரவர்  கோயில்: பூத பைரவர் என்று அழைக்கப்படும் இவரது கோயில், ஜ்யேஷ்டேச்வரருக்கு அருகில் உள்ளது.  

சண்ட பைரவர்  கோயில்: துர்கா தேவி கோயிலுக்குள் அருள் புரிகிறார்.

கால பைரவர் கோயில்: பைரோநாத் என்ற இடத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம். பிரம கபாலம் பைரவரின் கையிலிருந்து வீழ்ந்த இடமா தலால் கபால் மோசன் எனப்படுகிறது.அருகில் கபால மோசன தீர்த்தம் இருக்கிறது. அஷ்டமி வழிபாடுகள் பிரபலமானவை. காசிக்கு வருபவர்கள் தவறாது தரிசிக்க வேண்டிய ஆலயம் இது.

கபால பைரவர்  கோயில்: காசியின் வட கிழக்கு எல்லையில் உள்ள அலிப்பூர் என்ற இடத்தில் உள்ளது.  

க்ரோதன் பைரவர்  கோயில்: ஆதிபைரவரான இவர் காமாக்யா  கோயில் அருகில் உள்ளார்.

ருரு பைரவர் கோயில் : ஹனுமான் காட்டில் ஹனுமான் கோயில் அருகே உள்ளது.

ஸம்ஹார பைரவர் கோயில்: மச்சோதரிக்கு அருகே உள்ளது. காய் காட் படிக்கட்டில் ஏறியும் கோயிலை அடையலாம்.

உன்மத்த பைரவர் கோயில்: காசிக்குப் பத்து கி.மீ. தொலைவிலுள்ள தியோரா என்ற கிராமத்தில் உள்ள ஆலயம்.

 காசிக் கோயில்கள் பற்றிய விவரங்களைப் பல புத்தகங்களின் துணை கொண்டு எழுதுமாறு கூட்டிய திருவருளுக்கும் நூலாசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் உரியது.

யாத்திரை செய்பவர்கள் உள்ளூர்வாசிகளின் வழிகாட்டுதல் படி திட்டமிட்டு காசி நகரக் கோயில்களுக்குச்  செல்வது நல்லது.