Friday, October 9, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – V

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் V

                                           சிவபாதசேகரன்


மகளிர்க்கான இலக்கணத்தை அகஸ்திய முனிவருக்கு முருகப் பெருமான் கூறத் தொடங்கினார்: “ நற்குடியில் பிறந்தவளும், உயர்ந்த குணங்களை உடையவளும், சகோதர-சகோதரிகளை உடையவளும், சாமுத்திரிகா லக்ஷணங்கள் பொருந்தப்பெற்றவளும். இனிய சொற்களை உடையவளும் ஆகிய பெண்ணை வேத விதிப்படி மணம் செய்தல் வேண்டும். அப்பெண் இல்லறத்தை நல்லறமாக்குவதோடு கற்புக்கரசியாகத் திகழ்ந்து தர்மத்தைத் துணைவனுடன் சேர்ந்து தழைத்தோங்கச் செய்வாள்.

மறை ஓதுதல்,ஓதுவித்தல், ஆசார சீலராய்த் திகழ்தல், தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் முனிவர்களுக்கும் தர்ப்பணம் செய்தல், வைச்வதேவம் செய்தல் , ஹோமங்கள்/ யாகங்கள் ஆகியன செய்தல் ஆகியவற்றை நியமத்தோடு கடைப்பிடித்து , உலக நன்மை ஒன்றையே  குறிக்கோளாகக் கொண்டு அந்தணர்கள் வாழ வேண்டும்.”

மேற்கூறியவை அன்றி இல்லற தருமங்கள் பலவற்றை மிகவும் விரிவாகக் குமரக் கடவுள் எடுத்துரைப்பதைக் காசிக் கண்டத்தில் காணலாம். அவற்றுள் சிலவற்றையாவது இங்கு காண்போமாக:

நீராடும் போதும் கிரகணகாலங்களிலும் பின்பற்றப் படவேண்டியவை,  எதிரில் வருவோர்களில் எவரை வலம் வர வேண்டும் என்ற விவரம் ஆகியன தெளிவு படுத்தப் படுவதோடு,  கேளிக்கைகளில் மனம் செலுத்துதல் , பகலில் உறங்குதல், நகத்தைக் கடித்தல், சூதாடுதல், உடைந்த பாத்திரத்தில் உண்ணுதல் , தேவையின்றிச்  சிகையை உதறுதல், பொருள்களைக் காலாலகற்றுதல், கை-கால்-முகம் கழுவாது உண்ணுதல், பொய் பேசுதல் ஆகியவை செய்யத்தகாத செயல்களையும் தவிர்க்குமாறு எச்சரிப்பதையும் காண்கிறோம். இவ்வாறு ஒழுக்கத்துடன் வாழ்ந்து நிறைவாகத் தம் மைந்தரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துக் காட்டில் சென்று தவம் புரியக் கடவர். இல்லாவிட்டால் காசிக்குச் சென்று வசித்து அங்கே முக்தி பெறக் கடவர்.

அது மட்டுமன்றி, வானப்ரஸ்தம், சந்நியாசம் ஆகியவற்றின் நெறிகளும், நியமங்களும் மிகவும் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. நிஷ்டை,யோகம்,சமாதி ஆகிய நெறிமுறைகளின் விளக்கங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. உடல் வருந்தாமல் முக்தி அடைய ஒரு வழியும் கூறப்பட்டுள்ளது. அதுவே காசிக்குச் சென்று வசிப்பதாகும். இத்தகைய செய்திகளோடு காசிக் கண்டத்தின் பூர்வ பாகம் முற்றுப் பெறுகிறது.

உத்தர காண்டம், ஸ்ரீ விச்வநாதர் துதியுடன் துவங்குகிறது:

“சீர் கொண்ட மலரவனும் திருமாலும் காண்பரிய

ஏர்கொண்ட பேரொளியை எளியேன் தன் உள்ளத்தும்

நீர் கொண்ட காசியினும் நிலவு பழமறைக் கொழுந்தைக்

கார் கொண்ட மணிமிடற்று எம் கண்ணுதலைவழுத்துவாம். “

மற்ற தலங்களில் ஞானத்தாலும் தவத்தாலும் பெறக் கூடிய முக்தியைக் காசியில் வாசிப்பதன் மூலமே பெற்று விடலாம். மலர்களால் விச்வேசனை அர்ச்சிப்பதே தானம். அங்குள்ள முக்தி மண்டபத்தில் செய்யும் ஜெபமே அரிய தியானமும் ஆகும்.

அடுத்ததாகத் திவோதானன் என்ற மன்னன் காசியை ஆண்டு , குடிமக்களைக் காத்த வரலாற்றைக்கூறிய பின்னர், காசியின் சிறப்பை முருகப்பெருமான் உரைத்தருளினார்.

யோகினிகள் காசியை அடைந்து வழிபட்டதும், சூரியன் காசியில் வழிபட்டுப் பன்னிரண்டு பெயர்கள் பெற்றதும், உலோதாதித்தன் என்ற சூரியன் காசியை அடைந்து வழிபட்டதும்,சுலக்ஷணை என்பவள் தவம் செய்துபேறு பெற்றதும் , சாம்பன், துருபதாதித்தன் கருடன் ஆகியோர்  வழிபட்டதும், பிரமன் காசியை அடைந்து யாகம் செய்ததும், ஒரு பேய் இங்கு நீராடித்  தெய்வ வடிவம் பெற்றதும்,திருமாலின் சொற்படித் திலோதானன் கங்கைக் கரையில் இலிங்கம் ஸ்தாபித்து வழிபட அருளியதும்,  தருமநதி, தூதபாவை,கிரணை , யமுனை,கங்கை ஆகிய ஐந்து நதிகளில் தோய்வோர் முக்தி பெறுதலும், சிவபிரானை நிந்திப்போர் நரகத்தில் சேர்வர் என்று திருமால் உரைத்தலும், மாலானவர் வழிபட்டு , ஆதிகேசவன் முதலாகப் பிரயாகை மாதவன் ஈறாக 23 மாதவர்களாக இருத்தலும், பாசுபத தீர்த்தம், முக்தி தீர்த்தம், தாரக தீர்த்தம், துண்டி தீர்த்தம், பவானி தீர்த்தம், ஞான வாவி, பிதாமக தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் ஆகியவற்றின் மகிமையும், கோ லோகத்திலிருந்து சுனந்தை, சுசீலை, சுமனசை, சுரபி, பத்திரை ஆகிய பஞ்ச தேனுக்கள் வந்து பால் பொழிந்து வாவிகளை நிறைத்ததும் அவற்றில் நீராடியவர் பெறும் பயனும், விசுவநாதர் முனிவர்களுக்கு வரமளித்ததும், கஜாசுரனது தோலை  ஈசன் உரித்துப் போர்த்திக் கொண்டதும், ஒன்பது துர்க்கைகளும்,எட்டு பைரவர்களும், காசிக்குக் காவலாக விளங்குவதும் , ஓங்கார லிங்கம், த்ரிலோசன லிங்கம்,கேதார லிங்கம்,ஆகியவற்றின் மகிமையும், விச்வேசர் முக்தி மண்டபப் பெருமை உரைத்ததும், இந்திரன், துருவாசர் ஆகியோர் வரம் பெற்றதும், தக்ஷன் வேள்வி வீரபத்திரர் மூலம் அழிக்கப்பெற்றதும், வியாஸ முனிவர் சிவபரத்துவம் கூறாது விஷ்ணு பரத்துவம் கூறியதால் அவரது உயர்த்திய கைகளும் , பேசிய நாவும் செயலற்றுப் போனதுவும், பின்னர் ,வியாசர் விச்வநாதரை வழிபட்டு அச்சாபம் நீங்கப்பெற்றதும் , காசி யாத்திரைக்குச் செல்வோர் வழிபடும் முறையும், மிக விரிவாக முருகப் பெருமானால் அகத்தியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அதிவீரராம பாண்டியரால் சுமார் 2500 க்கும் மேற்பட்ட செய்யுள்கள் கொண்டு இயற்றப்பெற்ற காசி கண்டம் என்ற நூலில் காணப்படும் புராண வரலாறுகளை இதுவரையில் பார்த்தோம். இனி, காசி நகரக் கோயில்கள் பற்றி அறிய முற்படுவோமாக.

                                                    ( காசியின் பெருமைகள் தொடரும் )   

     

No comments:

Post a Comment