Wednesday, October 21, 2020

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் VIII

                                           சிவபாதசேகரன்

காசி மாநகரத்தில் உள்ள சிவாலயங்கள் :

                        பன்னிரு ஜோதிர் லிங்கங்கள் - நன்றி- கூகிள் படம் 

காசி விச்வநாதர் கோயில் : காசி காண்டத்தில் மிக விரிவாகக் கூறப்படும் இக்கோயில் சௌக் என்ற இடத்தில் உள்ளது. தசாஸ்வமேத், பன்ஸ் படக், ஞான வாபி ஆகிய இடங்களிலிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம். கர்ப்ப கிருகத்தைத் தவிர, முக்தி மண்டபம், ஸ்ருங்கார மண்டபம்,ஐச்வர்ய மண்டபம், ஞான மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டது இக்கோயில். மணிகர்ணிகையில் நீராடி விச்வேச்வர ஜ்யோதிர் லிங்கத்தைக் கங்கை நீரால் அபிஷேகிக்கலாம். தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் சப்த ரிஷி பூஜை அவசியம் தரிசிக்கத் தக்கது.

அவிமுக்தேச்வரர் கோயில்: காசியின் மறு பெயர் அவிமுக்தம் எனப்படும். மோக்ஷத்தைத் தரவல்லதால் இவ்வாறு கூறப்பட்டது. பழமையும் சிறப்பும் கருதி இக்கோயிலுக்குப் புராணங்களில் மிகவும் முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது. விச்வநாதர் தன்னைத் தான் பூஜிக்கும்போது தினமும் அவிமுக்தேச்வர பூஜை செய்வதாகப் புராணங்களில் காணப் படுகின்றது. இரண்டு சன்னதிகளும் அருகருகே இருந்து வந்தன. அன்னியப் படையெடுப்பால் தகர்க்கப்பட்டு விட்டதால்  பழைய இடத்தில் இருந்த அவிமுக்தேச்வர லிங்கம் தற்போது அங்கு இல்லை.  எனவே        விச்வநாதர் கோயிலில் அவிமுக்தேச்வர லிங்கமும் இட மாற்றம் பெற்று விட்டது.  

கேதாரேச்வரர் கோயில்: காசியில் வசித்து வந்த வசிஷ்டன் என்ற ஒரு பக்தர் ஆண்டு தோறும் சித்திரா பௌர்ணமியன்று இமயமலையில் உள்ள கேதார்நாத் ஜோதிர் லிங்கத்தைத் தரிசித்து வந்தார். வயதான பிறகு அவ்வாறு போக முடியவில்லை. அவரது பிராத்தனைக்கு இரங்கிய சிவபெருமான், அக்காட்சியைக் காசியிலே காட்டுவதாக அருளினார். அதன்படி, கேதாரீசுவரராகக் காசியில் காட்சியளித்தார். இமயத்திலுள்ள கேதார நாதரை வழிபடுவதை விட ஏழு பங்கு அதிகப் பலனை இங்குள்ள கேதார நாதர் வழங்குவதாகக் காசிக் காண்டம் கூறுகிறது. அங்குள்ளதைப் போலவே இங்கும் கௌரி குண்டம் உள்ளது. இங்கு இறப்பவர்கள் உடனே முக்தி பெறுவதாகக் கூறப்படுகிறது. குமாரசாமி மடத்தின் (திருப்பனந்தாள் காசி மடத்தின்) நிர்வாகத்திற்குட்பட்டது இக்கோயில்.

( மடத்திற்கு சொந்தமான ஒரு வீட்டிற்குள் உள்ள  க்ஷேமேச்வரர் என்ற மூர்த்தியை சிவபெருமானால் அனுப்பபெற்ற சிவ கணங்களுள் ஒரு கணமாகிய க்ஷேமக் ஸ்தாபித்ததாகப் புராணத்தால் அறியலாம்.கேதார் காட்டிற்கு அருகில் இந்த க்ஷேமேச்வர் கட் உள்ளது)

கேதாரீச்வரர் கோயிலுக்கு வடபுறம் கேதார் காட் தபால் நிலையம் அருகில் உள்ள சித்ரங்கதேச்வரர் கோயில் உள்ளது        

ஓங்காரேச்வரர் ஆலயம்: படனி டோலா என்ற இடத்தில் மச்சோதரியின் வடபுறம் உள்ளது இக்கோயில். மத்ஸோதரி என்ற தீர்த்தம் இங்கு இருந்ததாகக் காசிக் காண்டத்தால் அறிகிறோம். அந்த நீர்நிலை இப்போது அங்கு இல்லாவிட்டாலும் அதன் பெயரால் இவ்விடம் வழங்கப்படுகிறது. இதன் அருகே அகாரேச்வரர், மகாரேச்வரர் ஆகிய லிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.நாதேச்வரர், பிந்து நாதேச்வரர் ஆகிய மூர்த்திகள் தற்போது காணப்படவில்லை. இங்கு வழிபடுவோர்க்கு மறு பிறவி பற்றிய பயம் இல்லை. இவரைத் தரிசித்தால் ஒரு  லக்ஷம் ருத்ர ஜபம் செய்த பலனும் உலகிலுள்ள எல்லா சிவலிங்கங்களைத்  தரிசித்த பலனும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அஷ்டமி, சதுர்தசி நாட்களில் வழிபடுவதால்  எல்லாப் பாவங்களும் நீங்கும் என்று காசிக் காண்டம் கூறும்.   

 நாகேச்வரர் கோயில்: படனி டோலா என்னுமிடத்தில் போசலா காட் பகுதியில் உள்ள இக்கோயில், மகாராஷ்டிரம் , த்வாரகா ஆகிய இடங்களில் உள்ள ஜோதிர் லிங்கங்களை நினைவு படுத்துகிறது. அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை நீக்க வல்ல சக்தி வாய்ந்த ஆலயம் இது.      

பீமேச்வரர்ஆலயம்: பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களின் ஆலயங்கள் காசியில் உள்ளன. அவற்றுள் , மகாராஷ்டிரத்தில் உள்ள ஜோதிர் லிங்கமான பீம சங்கரத்தை நினைக்கும்படி, காசியிலும் பீமேச்வரர் என்ற பெயரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். நகுலேச்வரருக்குக் கிழக்கில் இக்கோயில் காசி கர்வத் கோயில் என்ற பெயரில் உள்ளது. விச்வநாதர் கோயிலுக்கு வடக்கே சரஸ்வதி படக் சாலையில் சென்றால் இதனை  அடையலாம்.

த்ரயம்பகேச்வரர் கோயில்: நாசிக்கில் உள்ள த்ரயம்பகத்தைக் குறிப்பதாகக் காசியிலும்  கோயில் உள்ளது. ஹால்ஸ் கடோரா என்ற இடத்தில் இருக்கும் கோயிலைப் புருஷோத்தமர் கோயில் என்கிறார்கள்.

த்ரிபுராந்தகேச்வரர் கோயில்: ஸ்ரீசைல மலையில் உள்ள ஜோதிர் லிங்கத்தைக்குறிக்கும் வகையில் காசியில் உள்ள இக்கோயில்  , சிக்ரா திலா என்ற இடத்தில் உள்ளது. இங்கு த்ரிமுக் விநாயகர் சன்னதி உள்ளது. இக்கோயிலை வணங்குவது, ஸ்ரீ சைலத்தைத் தரிசிப்பதற்கு சமமாகும் என்றும் மோக்ஷத்தைத்  தர வல்லது என்றும் கூறப்படுகிறது.

எல்லோரா அருகிலுள்ள க்ருஷ்ணேச்வர ஜோதிர்லிங்கத்தைக் காசியில் காமாக்யா கோயிலிலும் பரலி வைத்யநாத்தில் உள்ள ஜோதிர்லிங்கத்தை பைஜ்நாத் கோயிலிலும் தரிசிக்கலாம்.   

மகாகாலேச்வரர் கோயில்: உஜ்ஜைனியில் உள்ள ஜோதிர் லிங்கத்தினை நினைவு படுத்துவதாகக் காசியில் ம்ருத்யுஞ்ஜய மகாதேவர் கோயிலில் உள்ளது. பிசேச்வர் கஞ்ஜ் வழியாகவும் செல்லலாம்.

( க்ருத்திவாஸேச்வரர் கோயில்: மேற்கூறிய பிஷேச்வர் கஞ்ஜ் என்ற இடத்திற்கு அருகாமையில் உள்ளது. கஜாசுரன் உயிர் நீத்த இடத்தில் க்ருத்திவாஸர் கோயில் கொண்டுள்ளார். இவரே காசியில் உள்ள மிகப் பெரிய லிங்க மூர்த்தியாவார். இங்கு ருத்ர ஜபம் செய்தால் பிற இடங்களில் ஏழு கோடி முறை ருத்ர ஜபம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது காசிக்  காண்டம். காசியிலுள்ள கோடிக் கணக்கான லிங்கன்களுள் பதினான்கு லிங்கங்கள் ஸ்வயம்பு மூர்த்திகள். அவற்றுள் ஒன்றே இந்த மூர்த்தியாவார். பழைய கோயில் இடிக்கப்பட்டுவிட்டதால் ராஜா பட்னிமல் என்பவரால் தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டது. மாக மாதத்திலும் சித்ரா பௌர்ணமியிலும் செய்யப்படும் பூஜைகள் விசேஷமானவை.)         

ராமேச்வரர் (கணேச்வரர் ) ஆலயம்: பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றான ராமேச்வரம் ராமநாத சுவாமியை நினைப்பூட்டுவதாக இந்தக் கோயில் மன்மந்திர் காட்டில் உள்ளது. தசாஸ்வமேத் விச்வநாத் கல்லியிலிருந்து வராஹி கோயிலை நோக்கிச் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

ஸோமேச்வரர் ஆலயம்: குஜராத்தில்(சௌராஷ்ட்ரத்தில்) உள்ள சோம்நாத் ஜோதிர்லிங்கத்தைக் குறிப்பதாக  அமைந்துள்ள இக்கோயிலை வழிபட்டால் சோம்நாத் சென்று வழிபட்டதன் பலன் கிட்டும். மேற்கூறிய வராஹி கோயிலுக்கு அருகில் இக்கோயில் உள்ளது.

இவ்வாறு பன்னிரண்டு ஜோதிர் லிங்க தரிசனமும் காசியில் காண முடிகிறது.

தசாச்வமேதேச்வரர் ஆலயம்: தசாஸ்வமேத காட் வரை படகில் சென்று படிகளை ஏறிச் சென்று தரிசனம் செய்யலாம். பிரம தேவன் பத்து அச்வமேத யாகங்களைச் செய்த இடம் இது. ஆடி அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையன்று இங்கு நீராடி சுவாமி தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியம் என்று கூறுவார். பாவ வினைகள் அகன்று மோக்ஷமும் பெறுவர் என்கிறது புராணம். சீதலா மந்திரின் உட்புறம் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

திவோதாஸேச்வரர் கோயில்: காசியை ஆண்ட திவோதாஸ் என்பவன் மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி, காசியில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவலோகம் பெற்றான் . ஆகவே இங்கு வழிபடுவோர் தமது பாவங்கள் நீங்கிச்  சிவபதம் பெறுவர். தசாஸ்வமேத் கல்லிக்கு அருகில் நடக்கும் தூரத்தில் இக்கோயில் உள்ளது. அருகே விசாலாக்ஷி,அன்னபூரணி தர்மேச்வரர் ஆலயங்கள் உள்ளன. இந்த இடத்தை விச்வபுஜ கௌரி என்று அழைப்பார்கள்.

கோடீச்வரர் கோயில்: தசாச்வமேத் விச்வநாத் கல்லியில் சாக்ஷி கணபதி சன்னதிக்கு அருகில் உள்ள இந்த லிங்க மூர்த்தியை வழிபட்டால் கோடி லிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் எனப்படுகிறது.

தர்மேச்வரர் கோயில்: யமதர்ம ராஜனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தர்மேச்வரரைத் தர்ம கூபத்தில் நீராடிவிட்டுத் தரிசிக்க வேண்டும்.காசியில் வாழ்பவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று மோக்ஷத்தை அடைவார்கள் என்று யமனிடம் சிவபெருமான் அருளியதாகக் காசிக் காண்டம் கூறும். மிர் காட்டில் உள்ள இக்கோயிலை தசாஸ்வமேத் என்ற இடத்திலிருந்து சென்று அடையலாம். கார்த்திகை மாத சுக்ல அஷ்டமியில் தரிசிப்பது சிறப்பு. தர்மகூபத்தில் நீராடி, சிரார்த்தம் செய்தால் கயாவில் செய்வதற்கு சமம் எனப்படுகிறது.         

ம்ருத்யுஞ்ஜேச்வரர் ஆலயம்: வ்ருத்த கால் என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இதனருகில் காலேச்வரர் கோயிலும் உள்ளது. அகால மரணத்தை நீக்கும் தலமாக இக்கோயில் கருதப்படுகிறது.பிசெச்வர் கஞ்ஜ் வழியாக இக்கோயிலை அடையலாம். பலர் இங்கு வந்து ம்ருத்யுஞ்சய ஜபம் செய்வர்.

காலேச்வரர் கோயில்: பைரோனாத்திலிருந்து தண்டபாணி கோயிலுக்குச் சென்றால் அக்கோயிலின் உட்புறம் காலேச்வரர் சன்னதி உள்ளது. பஞ்சகங்கா கட்டம் வரை படகில் சென்றும் இதனை அடையலாம்.

 நீலகண்டேச்வரர் கோயில்: பல்வேறு இடங்களிலிருந்து காசிக்குக் கொண்டுவந்து நந்திகேச்வரலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க மூர்த்திகளில் நீலகண்டேச்வர லிங்கமும் ஒன்றாகும். வழிபடும் அன்பர்களைச் சிவமயமாக்கும் பெருமையைக் காசிக் காண்டத்தில் காணலாம். சௌக் என்ற பகுதியிலிருந்து நீல கண்ட் முஹல்லா என்ற இடத்திலுள்ள இக்கோயிலை அடையலாம். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆதி சுஞ்சுனகிரி மடத்தின் கிளைக்குப் பக்கத்தில் உள்ளது.       

ஆத்ம வீரேச்வரர் கோயில்: காசியில் வாழ்ந்த அமித்ரஜித் என்ற அரசனது மகனுக்குப் பதினாறு வயது ஆகும்போது அவனது ஜாதகத்தால் மன்னனது உயிருக்கு ஆபத்து என்று அமைச்சர்கள் கூறவே, அப்பாலகன் சிவபிரானைக் குறித்துக் கடுந்தவம் செய்தான். அவன் முன்னர் தோன்றிய லிங்க வடிவமே வீரேச்வர லிங்கமாகும். இம்மூர்த்தியைப் பூசிப்பது, மூன்று கோடி சிவலிங்கங்களைப் பூஜிப்பதற்கு சமம் என்று காசி காண்டம் கூறுகிறது. குழந்தைப் பேற்றை அளிக்கும் மூர்த்தி இவர் ஆவார். ஒரு முனிவர் இங்கு வந்து அபிலாஷா அஷ்டக ஸ்தோத்திர பாராயணம் செய்தபோது சிவபெருமான் அவர் முன்னர் எட்டு வயது பாலகனாகக் காட்சியளித்துவிட்டு லிங்கத்தில் மறைந்தருளியதாக வரலாறு கூறும். சிந்தியாகாட் என்ற இடத்திலுள்ள இக்கோயிலுக்குப்  படகு மூலமாகவோ அல்லது சௌக் என்ற இடத்திலிருந்து நடந்தோ செல்லலாம்.

சந்த்ரேச்வரர் கோயில்: சௌக் என்ற இடத்திலிருந்து நடந்தோ,படகிலோ சிந்தியா காட் சென்றால் இந்தக்கோயிலை அடையலாம். இங்குள்ள  லிங்கத்தையும்,சந்த்ர கூபம் என்ற கிணற்றையும் சந்திரன் ஸ்தாபித்ததாகக் காசி காண்டத்தால் அறிகிறோம்.  இங்கு பௌர்ணமி, சோமவார அமாவாசை ஆகிய நாட்கள் விசேஷமானவை. சந்த்ர கூப தீர்த்தம் மிகவும் புனிதமானது. இப்பெருமானின் பக்தர்கள் வேறு எந்த ஊரில் மரணித்தாலும் அமருலகம் அடைவதாகக் காசிக் காண்டம் கூறுகிறது.

மங்களேச்வரர் கோயில்: சிவபெருமானது வியர்வையில் தோன்றிய பௌமகுமாரன் என்பவன் சிவலிங்கம் ஒன்றைக் காசியில் ஸ்தாபித்து வழிபட்டான். அங்காரகன் என்ற பெயரையும், நவக்ரஹங்களுள் ஒன்றாகும் பட்டத்தையும் பெற்றான் . செவ்வாய்க்கிழமையில் இங்கு வழிபடுவதால் எல்லா மங்களங்களும் அடைவதாகப் புராணத்தால் அறியலாம். மேற்கூறிய ஆத்ம வீரேச்வரர் கோயிலுக்கு உட்புறம் சிந்தியா காட்டில் இந்த ஆலயம் உள்ளது. 

புதேச்வரர் கோயில்: சந்திரனுக்கும் தாராவுக்கும் பிறந்த புதனானவன் காசிக்கு வந்து லிங்க ஸ்தாபிதம் செய்து தவம் செய்தான். அவனுக்குக் காட்சி கொடுத்ததால் சுவாமிக்குப் புதேச்வரர் என்ற பெயர் வந்தது. இதுவும் மேலே குறிப்பிட்ட ஆத்ம வீரேச்வரர் கோயிலின் உட்புறம் உள்ளது.

ப்ருஹஸ்பதீச்வரர் கோயில்: அங்கீரஸ முனிவரின் குமாரரான ப்ருஹஸ்பதி, காசிக்கு வந்து லிங்கமொன்று நிறுவி வழிபட்டு இந்த          மூர்த்தியிலிருந்து வந்த ஜோதி வடிவத்தைத்  தரிசித்தார் தேவகுருவாகும் பேற்றையும் பெற்றார். வியாழக்கிழமைகளில் ப்ருஹஸ்பதீச்வரரைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் தரிசிப்பதால் பாவங்கள் அறவே நீகும் என்று காசிக் காண்டம் சொல்கிறது.

சுக்ரேச்வரர் கோயில்: ஒருமுறை சுக்கிரன் காசிக்கு வந்து ஒரு லிங்கத்தையும் கிணறு ஒன்றையும் ஸ்தாபித்து உக்கிரமான தவம் செய்தான். அதனால் மகிழ்ந்த சிவபிரான் அவனுக்கு அந்த லிங்கத்திலிருந்து காட்சியளித்து, அவனைக் கிரகங்களில் ஒருவனாக்கி, அவனுக்கு, இறந்தோரை உயிர்ப்பிக்கும் மந்திரத்தையும் உபதேசித்ததாகக் காசிக் காண்டத்தில் காணப்படுகிறது. அன்ன பூரணா – விச்வேச்வரர் சந்தின் அடுத்த சந்தில் காலிகா கல்லி என்ற இடத்தில் கோயில் இருக்கிறது. சுக்ர கூபக் கிணற்றையும் அங்கே காணலாம்.

சநீச்வரர் கோயில்: சூரியனுக்கும் சாயா தேவிக்கும் புத்திரனான சநைச்சரன் காசியில் ஸ்தாபித்த லிங்கம், சநீச்வரர் என்ற பெயருடன் கோயில் கொண்டு விளங்குகிறது. தரை மட்டத்திற்குக் கீழ் உள்ள லிங்க மூர்த்தியை சனிக் கிழமைகளில் தரிசிப்பது விசேஷம். விச்வநாதர் கோயிலின் தெற்கு வாசலில் இந்த இடம் உள்ளது.

நக்ஷத்ரேச்வரர் கோயில்: ராஜ் காட் போர்ட் என்ற இடத்தில், ஆதி கேசவர் கோயிலின் உள்ளே இக்கோயில் உள்ளது. நக்ஷத்திர தேவதைப் பெண்கள் காசிக்கு வந்து லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு , வரங்களைப் பெற்றார்கள். இந்தப் பெருமானை வழிபட்டால் நக்ஷத்திர தோஷங்கள் நீங்கும்.     

கபஸ்தீச்வரர் கோயில்: பஞ்சகங்கா காட்டில் சூரியனால் வழிபடப்பெற்ற லிங்கமே கபஸ்தீஸ்வரர் எனப்படுகிறது. மங்கள கௌரி என்று பஞ்ச கங்கா காட்டில் உள்ள இக்கோயிலுக்குப்  பைரோநாத் எனப்படும் காலபைரவர் கோயில் வழியாகவும் படகு மூலமும் செல்லலாம்.  

   ( காசியின் சிவலிங்க தரிசனங்களும் பெருமைகளும்  தொடரும் )   

     

1 comment:

  1. தெரியாத விவரங்கள் ஏராளம். மிக நன்று

    ReplyDelete