Thursday, July 25, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள்-தொடர்ச்சி- ஒங்காரேச்வர்

நர்மதையும் ஆலயமும் 
இறைவன் ஓங்கார வடிவினன் ஆதலால் ஒங்காரேசுவரன் என்று அழைக்கப்படுகிறான். அவனது இருப்பிடமும் ஓங்கார வடிவாகிறது.     ஈங்கோய் மலை என்ற தலத்தின் மீது நக்கீரர் அருளிய பாடல் ஒன்றை நாம் இங்கு நினைவு கூர்ந்துவிட்டு, ஜ்யோதிர் லிங்க தரிசனம் செய்வோம்.

“ அடியும் முடியும் அரியும் அயனும்
 படியும் விசும்பும் பாய்ந்தேறி – நொடியுங்கால்
 இன்னதென அறியா ஈங்கோயே ஓங்காரம்
 அன்னதென நின்றான் மலை “

 ஏழு புண்ணிய நதிகளான கங்கை,யமுனை,கோதாவரி,சரஸ்வதி, நர்மதை,ஸிந்து,காவேரி ஆகியவற்றை தியானித்துக் கொண்டே அன்றாடம் நீராடுவது மரபு. இவற்றுள் நர்மதைக்கு மட்டும் மற்ற நதிகளுக்கு இல்லாத தனிச் சிறப்பு உண்டு. இந்நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து, கடலோடு சங்கமம் ஆகும் இடம் வரை உள்ள தூரத்தை ஆற்றின் ஒரு கரை முழுவதுமாகக் கால்நடையாகவே சென்று விட்டு, ஆற்றின் எதிர்க் கரையை படகில் கடந்து மீண்டும் மறு கரை ஓரமாகவே உற்பத்தி ஸ்தானம் வரை நடந்து சென்று வலம் செய்வது பண்டைக்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஏனைய ஆறு நதிகளை இவ்வாறு முழுவதுமாக வலம் செய்வது இல்லை. இதற்குக் காரணம், இந்நதியில் ஏராளமான சிவலிங்க பாணங்கள் வெவ்வேறு அளவில் இருப்பதே ஆகும். அத்தனை சிவலிங்க பாணங்களையும் ஒரு சேர வலம் செய்யக் கருதினார்கள் நம் முன்னோர்கள். 
வழியில் உள்ள பாண லிங்கக் கடை 

நர்மதா பரிக்கிரமத்தின் போது கையில் பணம் எடுத்துச் செல்வது தவிர்க்கப்படுகிறது. காலை முதல் மாலை வரை மட்டுமே நடக்க வேண்டும். வழியில் உள்ள கிராமங்களில் தங்கிக்   கிராமவாசிகள் அன்புடன் கொடுக்கும் உணவை உண்டு, மறு நாள் காலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். இப்படிச் செய்தால் பூர்த்தி செய்வதற்கு ஒரு வருஷத்திற்கும் மேல் ஆகும். மழை மற்றும் குளிர்க் காலங்களில் நடந்து செல்வதும் கடினம் தான். காடுகளையும் மலைப் பிரதேசங்களையும் கடந்து செல்ல வேண்டிய இப்பயணத்தை ஒப்பற்ற நியமத்துடனும் பக்தியுடனும் செய்யும் மக்கள் அநேகர். தற்காலத்தில் வாகனங்கள் மூலமாகப் பதினைந்து தினங்களில் செய்வோரும் உளர்.

 மக்கள் இந்நதியைத் தாயாகவே கருதுவர். “ நர்மதா மையா “ என்றும் “ மா ரேவா “ என்றும் அழைப்பார்கள். ரேவா என்பதற்குப் பாய்ச்சல் என்று அர்த்தம் சொல்வார்கள். நர்மதை அப்படிப் பாய்ந்தோடி வந்து அனைவரது வாழ்வையும் செழிக்கச் செய்து அருளுகிறாள் அல்லவா? சுமார் 1300 கி. மீ. தூரம் ஓடி வந்து நம் வாழ்வை வளம் செய்கிறாள். மத்தியப் பிரதேசத்திலுள்ள மைகல் மலைத்தொடரிலுள்ள அமர்கண்ட் என்ற இடத்தில்(Mai ki bagiya) உற்பத்தி ஆகி, மகாராஷ்டிரத்தைக் கடந்து, குஜராத் மாநிலத்தில் பரூச் பகுதியில் மிதி தலாய்(Mithi thalai) என்னும் இடத்தில் கடலுடன் சங்கமிக்கிறாள். கங்கையின் இடது கரை மட்டுமே புனிதம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் மேற்குத் திசை நோக்கிச் செல்லும் இந்நதியின் இரு கரைகளுமே புனிதமானவை. அதன் இரு கரைகளில் ஜோதிர்லிங்கத் தலங்கள் சிலவும்,பிற சிவாலயங்களும் அமைந்திருக்கக் காணலாம். இந்நதியை வலம் செய்வதால் பிறப்பின் நோக்கம் பூர்த்தி அடைவதாகக் கருதுவர். கங்கையில் ஒரு நாளும் சரஸ்வதியில் ஒரு நாளும் மாதுர் கயையில் ஒரு நாளும் நீராடிய பலனை நர்மதையைத் தரிசித்தவுடனேயே  பெற்று விடலாம் என்று புராணம் கூறுகிறது.

படகிலிருந்து தெரிவது மலையின் எழில் தோற்றம் 
நர்மதை இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து ஓங்கார வடிவில் தோற்றமளிப்பதால் தற்போது  ஓங்காரேஷ்வர் என்று இந்த  ஜ்யோதிர் லிங்கத் தலம் அழைக்கப் படுகிறது. படகின் மூலமாக நர்மதையின் மறு கரையில் உள்ள மலைக் கோயிலை அடையலாம். நர்மதையின் குறுக்கே பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரை ஓரமாக உள்ள இம்மலை கோயிலுக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. பஞ்ச முக கணபதியைத்தரிசித்து விட்டு மலை ஏறுகிறோம். மகா சிவராத்திரியின் போதும் விசேஷ தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் எப்போதும் வாசம் செய்து ஈசனை வழிபடும் தலம் இது. 

ஒங்காரேச்வரரையும், மகாகாலேச்வரரையும், சித்தீச்வரரையும் இங்கு தரிசனம் செய்கிறோம். நூற்றெட்டு சிவலிங்கங்களைக் கொண்ட புண்ணிய பூமி இதுவாகும். சிவபுரியில் ஒங்காரேச்வரர் ஆலயமும், விஷ்ணுபுரியில் அமரேச்வரர் அல்லது மல்லேச்வரர் ஆலயமும் உள்ளன. ஒங்காரேச்வரர் சன்னதியை அடைந்ததும் சுவாமி பள்ளமான இடத்தில் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கக் காணலாம். இரவில் ஆரத்தி நடந்து முடிந்தபிறகு கோயிலில் யாரும் தங்குவதில்லை. அப்போது சுவாமியும் பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடுவதாகவும் அதை யாரும் பார்க்கக்கூடாது என்றும் ஐதீகம். ஒருமுறை இதனை மறைந்திருந்து பார்த்து சோதிக்கச் சென்ற அயல் நாட்டுக்காரர் ஒருவர் மீண்டும் உயிருடன் வரவில்லை என்று கூறப்படுகிறது.    
    
மாந்தாதா என்ற இக்ஷ்வாகு குலத்து அரசன் சௌபரி என்ற முனிவருக்குத் தனது ஐம்பது பெண்களையும் மணம் செய்து கொடுத்தான். அவனது மகனாகிய முசுகுந்தன் மகா சிவ பக்தன். மாந்தாதா ஆண்ட பகுதி மாந்தாதா ஆசிரமம் என்று வழங்கப்படுகிறது. இம்மன்னனது விக்கிரகம் ஒங்காரேச்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ளது.

ஒரு காலத்தில் கோகரணத்தில் வழிபட்டு விட்டு, நாரத முனிவர் விந்திய மலையை அடைந்தார். அப்போது அவர் மேரு மலையின் பெருமையை விந்திய மலையிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டுப் பொறாமை கொண்ட விந்தியமலை, தானும் மேருவைப் போலவே பெருமை அடைய வேண்டும் எனக் கருதி, ஓங்கார ரூபத்தில் ஒரு சிவலிங்கத்தையும், பார்த்திவ லிங்கத்தையும் நர்மதைக் கரையில் வழிபட்டு வந்தது. இதனால் மகிழ்ந்த சிவபெருமான், விந்தியத்தின் முன் தோன்றி, வேண்டிய வரத்தைக் கேட்குமாறு அருளினான்.

எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவனாகத தான் ஆக வேண்டும் என்ற வரத்தை அம்மலை கேட்டது. அவ்வாறு அருளுகையில், “ நீ ஒருக்கால் இறுமாப்புக் கொண்டால் எனது அடியவன் உன்னை சிறியதாக ஆக்கி விடுவான் “ என்றார். ( பின்னர் அகத்திய முனிவர், மேருவைக் குறுக வைத்ததையும் , உக்கிர பாண்டியன் மேருவைச் செண்டால் அடித்து அதன் செருக்கை அடக்கியதையும் புராணங்கள் கூறுகின்றன.) விந்திய மலை யந்திர வடிவில் பூஜித்த லிங்க மூர்த்தி ஒங்காரேச்வரராகவும், பார்த்திவ லிங்கம் அமலேச்வரமாகவும் தற்போது அங்கு தோற்றமளிக்கின்றன. பன்னிரு ஜ்யோதிர் லிங்கங்களைக் குறிப்பிடும் ஸ்தோத்திரத்திலும் “ ஓங்காரம் அமலேச்வரம் “ என்று இவ்விரு ஆலயங்களையும் இணைத்தே கூறப்பட்டிருக்கிறது.

அமலேச்வரத்தைச் சிலர் அமரேச்வரம் என்றும் வழங்குவர். இதற்குக் கர்த்தமேச லிங்கமானது உபலிங்கமாகும். இதனைத் தவிரவும், வைடூர்ய மணி பர்வதத்தில் கௌரி சோமநாதர் கோயிலும் உள்ளது. சுமார் ஐந்தடி உயரமுள்ள சோமநாத மூர்த்தியைத் முன்னால் நின்று தரிசிப்போருக்குத் தங்களது முற்பிறப்பும், பின்னால் நின்று தரிசிப்போருக்கு பிற் பிறப்பும் தெரியவரும் என்று கேள்விப்பட்ட     அவுரங்கசீப், முன்னின்று பார்த்தபோது அதில் பன்றி உருவம் தெரிந்ததாகவும் கோபமுற்ற அவன், அம்மூர்த்தியை நெருப்புக்கு இரை ஆக்கியதால் வெண்ணிறமாக இருந்த மூர்த்தி கறுத்து விட்டதாகவும் கூறுவார்கள்.    

வழித்தடம்: உஜ்ஜைன் நகரிலிருந்து ஓங்காரேஷ்வர் வருவதற்குப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. வடக்கிலிருந்து வருபவர்கள் இந்தூர் வழியாக உஜ்ஜைனியை அடைந்து அங்கிருந்து ஓங்காரேஷ்வரை அடையலாம்.  

வாழ்வில் ஒரு தடவையேனும் வழிபட வேண்டும் என்று எழுதாமல் பலமுறைகள் சென்று நர்மதையில் நீராடி ஓங்காரேச்வரரின் அருள் பெற வேண்டும் என்றே எழுதுமாறு உள்ளிருந்து நம்மைத் திருவருள் தூண்டுகிறது. தரிசித்து விட்டுப் பிரிய மனமில்லாமல் திரும்பிப் பார்த்தபடியே விடை பெறும் அற்புதத் தலங்களுள் இதுவும் ஒன்று. நர்மதையில் ஸ்நானம் செய்யும்போது பெறும் ஆனந்தத்தை வெறும் வார்த்தைகளால் எப்படி விவரிக்க முடியும் ?

Wednesday, July 3, 2019

ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் – 3. உஜ்ஜைனி


தூரத்தில் தெரிவது மஹாகாளேசுவர சுவாமி ஆலயம் 

ஏழு மோக்ஷபுரிகளுள் ஒன்றான உஜ்ஜைனி, முற்காலத்தில் அவந்திகா என்று வழங்கப்பட்டது. மாளவ தேசமாகிய அவந்தி நாட்டுத் தலை நகராக விளங்கிய இதுவே விக்கிரமாதித்தன் தோன்றியதும், அவனது மரணத்திற்குக் காரணமாக இருந்த சாலிவாகனன் வசித்ததும் ஆகிய சரித்திரப்புகழ் பெற்றது. இவ்விருவரையும் முன்னிட்டு இரு சகாப்தங்கள் தோன்றின. நர்மதை நதிக்கு வடக்கே விக்கிரம சகமும், தெற்கில் சாலிவாகன சகமும் தோன்றின. மகாகவிகளான காளிதாசன்,தண்டி,பர்திருஹரி ஆகியோர் வாழ்ந்ததும் இந்நகரில்தான். இந்நாட்டை ஜைன மன்னனாகிய சுதன்வா என்பவன் ஆண்டதால் உஜ்ஜைனி என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டது. சிப்ரா நதியின் கரையில் உள்ள இந்நகர எல்லையில் மாள்வா என்ற புராதன பட்டணமும், விக்கிரமாதித்தன் காலத்திய கோட்டையின் சின்னங்களும் உள்ளன.

விக்கிரமாதித்தன் 
விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளி நகருக்கு உள்ளும் , காளிதாசனுக்கு அருள் செய்த காளி ஊருக்கு 2 கி. மீ. வெளியிலும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். தேவகியின் எட்டாவது குழந்தையால் தனக்கு மரணம் வரும் என்று அறிந்த கம்சன், அவள் ஈன்றெடுத்த பெண் குழந்தையை வீசி எறிந்து கொல்ல முயன்றபோது அப்பெண் குழந்தை காளியாக உருக்கொண்டு, பின்னர் உஜ்ஜைனியில் வந்து தங்கியதாகப் புராணம் கூறும். கயிலை மலையிலிருந்து இராவணன் கொண்டு வந்த காளியே இங்கு தங்கியதாகவும் கூறுவர். இவளே விக்கிரமாதித்தனுடன் நேரிடையாகப் பேசியதாகவும் காளிதாசனை மகா கவியாக ஆக்கியவள் என்றும் உலகம் போற்றுகிறது. விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளியை ஹரசித்தி மாதா என்றும் அழைக்கிறார்கள்.

மேகத்தைத் தூதுவிடுவதாக அமைக்கப்பெற்ற மேகதூதம் என்ற தனது காப்பியத்தில், மகாகவி காளிதாசன், மேகத்தை நோக்கி, “ விந்திய மலைக்கு வடக்கே செல்லும் மேகமே, நீ செல்லும் வழியிலிருந்து சற்று விலகியிருந்தாலும், அவந்திகா நகரையும், அங்கு எழுந்தருளியுள்ள ஈசனையும் காணத் தவறாதே. ஒருவேளை நீ காணாவிட்டால் கண் பெற்ற பயனை அடைய மாட்டாய்” என்று சொல்வதாக அமைத்துள்ளது இன்புறத்தக்கது.

சிப்ரா நதி 
ஊர் நடுவே உள்ள மகா காளேச்வரர் ஆலயத்திற்கு ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். இந்த ஆலயம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கருவறையில் சுமார் மூன்று அடி உயரத் தோற்றத்துடன் மகாகாள நாதர் காட்சி அளிக்கிறார். ஆவுடையார் பூமிக்கு அடியில் இருக்கிறது. சுவாமி தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார்.ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்களுள் தக்ஷிண முகமாக அமைந்துள்ள மூலவர் சன்னதி இது மட்டுமே ஆகும்.  ஜ்யோதிர் லிங்க பாணத்தைக் கண் குளிரத் தரிசிக்கலாம். தினமும் விடியற்காலை சுமார் நான்கு மணிக்கு நடைபெறும் விபூதி அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆரத்தியும் (பஸ்மாரத்தி) பிரசித்தியானவை. நாள்தோறும் ஐந்து முறை ஆரத்தி நடைபெறும். நடுவில் உள்ள நிலையில் ஓங்காரேச்வரர் சன்னதியும், மேல் தளத்தில் நாக சந்திரேசுவரர் சன்னதியும் உள்ளன.நாக பஞ்சமியன்று மட்டுமே நாக சந்திரேசுவரரைத் தரிசிக்கலாம். பிராகாரத்திலுள்ள கோடி தீர்த்தம் புனிதமானது .இந்த ஆலயம் மராட்டிய, சாளுக்கிய, பூமிஜா கலைப் பாணியில் அமைந்துள்ளது. சுவாமி கருவறை விமானம் நேர்த்தியாக அமைந்துள்ளது.திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலம் உஞ்சேனை மாகாளம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரத்னமாலா என்ற மலையில் வசித்து வந்த அரக்கன் ஒருவன் மகாகாளநாதரின் பரம பக்தர்களாக விளங்கிய நான்கு அந்தணச் சிறுவர்களைக் கொன்று விடுவதாக மிரட்டவே, அச்சிறுவர்கள் ஈசனைத் தஞ்சம் அடைந்தனர். பெருமானும் அங்குத் தோன்றி, அரக்கனை அழித்து.அவர்களைக் காப்பாற்றினான். அத்தலத்திலேயே நிரந்தரமாக வீற்றிருந்து அடியார்களுக்கு எல்லா நலன்களையும் அருளுமாறு அக்குழந்தைகள் வேண்டவே, அதற்கிசைந்த சிவபிரான், அதுமுதல் அந்நகரில் கோயில் கொண்டு விளங்குகின்றான் என்று தல புராணம் கூறுகின்றது.

இங்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளாவில் நீராடி , இறைவனைத் தரிசிக்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். சந்நியாசிகள் பலரும் வருகை தருவர்.

கால பைரவர் ஆலயம் 
காசியைப்போலவே இங்கும் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது. அவருக்கு எதிரில் நின்ற வண்ணமாக நாய் காணப்படுகிறது. குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டும் மராட்டா பாணியில் தலையில் பக்ரி அணிவிக்கப்பட்டும் பெரிய உருவில் கால பைரவர் காட்சி தருகிறார். அவரே இந்நகரக் காவல் தெய்வமாகவும்,சேனாபதியாகவும் போற்றப்படுகிறார். காலபைரவ வழிபாடு,கபாலிகர்களுக்கும், அகோரிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாலை நேரங்களில் இக்கோயிலில் ஏற்றப்படும் தீபங்கள் காண்போரைப் பரவசப்படுத்துபவை. உயர்ந்து விளங்கும் தீபஸ்தம்பத்தின் மீது ஏறி விளக்குகளை ஏற்றுகிறார்கள்.

ஆதியில் இருந்த கோயிலைப் பத்ரேசன் என்பவர் கட்டியதாக ஸ்காந்த புராணத்தில் உள்ள அவந்தி காண்டம் குறிப்பிடுகிறது. மூன்றாம் பானிப்பட்டு போருக்குப் பிறகு, மகாதாஜி ஷிண்டே என்பவர் உஜ்ஜைனியை மீட்டார். போரில் வெற்றி பெற்றால் பைரவருக்குப் பக்ரி (தலைப்பாகை) அணிவிப்பதாக வேண்டிக் கொண்டார். அவரது பிரார்த்தனை பலித்தபின் , தானே முன்வந்து இக்கோயிலைத் திருப்பணி செய்தார். 

உஜ்ஜைனியில் உள்ள முக்கியக் கோயில்கள்:

ஹர்சித்தி மாதா கோயில் : 52 வது சக்தி பீடமாக இதனைக் கூறுகிறார்கள். இவளது அருளுக்குப் பாத்திரமான விக்கிரமாதித்தன், தனது தலையை பதினோரு முறை வெட்டி அர்ப்பணித்தான் என்றும் ஒவ்வொரு முறையும் காளி தேவியின் அருளால் தலையானது உடலோடு மீண்டும் சேர்ந்து விடும் என்றும் வரலாறு கூறும்.

மகா கணபதி கோயில் :
மகாகாளேச்வரர் ஆலயத்திற்கு வடக்கில் உள்ளது. இங்கு விநாயகப்பெருமான் மிகப்பெரிய சுதை உருவில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் இளம் சிறுவர்கள் வேதம் கற்கிறார்கள்.
வேத வகுப்பு 


ஸ்ரீ கோபால் மந்திர்: சாத்ரி சௌக்கில் உள்ள இந்தக் கோயிலில் ராதை, கிருஷ்ணன் ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கலாம். இதனைக் கட்டியவர், பைஜா பாய் ஆவார்.

காளி கோயில்: மேற்கண்ட கோபால் மந்திர் அருகில் உள்ளது. காளிதாசனுக்கு அருளிய காளி இவள். பெரிய உருவுடன் காட்சி அளிக்கும் இவளைக் கண்கண்ட தெய்வமாக யாத்ரீகர்கள் வழிபடுகின்றனர்.

மற்றும் ஓங்காரேசுவரர், அகலேசுவரர், ரிண முக்தேசுவரர், மங்களேசுவரர், ஆகியோரது சன்னிதிகளையும், கிருஷ்ணனின் குருவான சந்தீப ரிஷியின் ஆசிரமம் இருந்த இடத்தையும், பர்த்திருஹரியின் குகையையும் தரிசிக்கலாம். 

வேத காலம் முதற்கொண்டே உஜ்ஜைனி நகரம் சிறந்து விளங்கியதாகத் தெரிகிறது. அசோகச் சக்கரவர்த்தி இதனை ஆண்டிருக்கிறார். பின்னர் முகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட இந்நகரம், 1810 ம் ஆண்டு முதல் சிந்தியா அரசர்களின் ஆளுகைக்கு வந்தது.
இந்தூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து ரயில் மூலமாகவும் சாலை மார்கத்திலும் உஜ்ஜைனியை வந்து அடையலாம். இங்கு தங்குவதற்கான வசதிகள் இருப்பதால் அனைத்து ஆலயங்களையும் நிதானமாகத் தரிசிக்க முடியும். மேலும் மோக்ஷத்தைத் தரவல்ல தலமாக இருப்பதால் ஒரிரவேனும் தங்கி ,சிப்ரா நதியில் நீராடிவிட்டு மகாகாளேசுவரரையும் , காளி, பைரவர் ஆகிய மூர்த்திகளையும் தரிசனம் செய்துவிட்டு  வருதல் மரபு ஆகும்.           

Saturday, April 13, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் ஸ்ரீ சைலம் 3 ம் பகுதி

ஸ்ரீ  சைலத்தைப் பல நூல்கள்  புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம், இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும் மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை,, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி, ஆகியவை  இத்தலத்தின் மகிமையைக்  கூறும் நூல்களாகும். தேவார மூவரான திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்  ஆகியோர்  இத்தலத்தின் மீது திருப் பதிகங்கள் பாடி அருளியுள்ளார்கள். 

கி.பி. 1 ம் நூற்றாண்டில் இத்தலம் சாத வாகனர்களால் சிரிதான்  என்று வழங்கப்பட்டது. புலமாவி என்ற சாதவாகன மன்னனின் நாசிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. சாதவாகனர்களின் தோழர்களான இக்ஷுவாக்கள் இதனை ஸ்ரீ பர்வதம் என்று அழைத்தார்கள். பின்னர் நான்காம் நூற்றாண்டில் சிம்ம வர்ம பல்லவன் இப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டான். த்ரிலோசனபல்லவன் என்பவன் ஸ்ரீ சைலக் காட்டின் ஒரு பகுதியைப் புனரமைத்து அந்தணர்களை அங்கு இருத்தினான். இப்பணியைப் பின்னர் பல்லவர்களை வென்ற சோழர்கள் செய்து முடித்தார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த விஷ்ணுகுண்டியர்கள் இப்பகுதியை ஆண்டனர். அப்போது ஸ்ரீ சைல ஆலயம் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. 

பின்னர்  கடம்பர்கள் இதனைச்  சிறிது காலம் ஆண்டனர்.  ஆறாம் நூற்றாண்டில் கரிகால் சோழனின் சந்ததியினர் கடப்பா, கர்னூல் பகுதிகளை ஆண்டனர். பின்னர் கி.பி. 973 வரை ராஷ்ட்ரகூடர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். மீண்டும் சாளுக்கியர்களது ஆட்சி மலர்ந்தபோது, சோழர்கள்  அவர்களை வென்றனர். 12 ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் காகதீயர்களின் வசமாயிற்று.  பிரதாப ருத்ரன் என்பவர் தன்  மனைவியோடு இங்கு வந்து மல்லிகார்ஜுனருக்குத்  துலாபாரம் தந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. கி.பி. 1323 ல்  காகதீய அரசன் முகமதியர்களால் சிறை பிடிக்கப்பட்டு டெல்லிக்குக்  கொண்டு செல்லும் வழியில் இறந்தான். காகதீய அரசும் அதோடு வீழ்ந்தது. 

ஆந்திரத்தின் 72 சிற்றரசர்கள் முகமதியர்களோடு போரிட்டு  மீண்டும் இந்து ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். இவர்களுள் அத்தங்கி வேமா ரெட்டி என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவரது குல தெய்வம் திரிபுராந்தகத்தில் உள்ள மூர்த்தியே ஆவார். ப்ரோலய ரெட்டி என்பவர் தன்னை  ஸ்ரீசைல மல்லி கார்ஜுனரின்  பாத சரண தாசன் என்று சொல்லிக் கொண்டார். ஸ்ரீ சைல மலை ஏறி வரும் பக்தர்களுக்காக ரெட்டி மன்னர்கள் படிக்கட்டுக்களை அமைத்ததாக சாசனங்கள் மூலம்  அறிகிறோம். ஸ்ரீ சைலத்தில் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணா நதிக்குச் செல்வதற்குப்  படிக்கட்டுக்கள் கட்டப்பட்டன.  அன மேவா ரெட்டியின் ஆட்சிக்கு ஸ்ரீ சைலம், மகா நந்தி பகுதிகள் உட்பட்டன. விஜயநகரப் பேரரசு இப்பகுதியை வசமாக்கிக் கொண்ட பிறகு, ஆலய முன் மண்டபம், தெற்கு கோபுரம்  ஆகியவை கட்டப்பெற்றன. நிறைய தானங்கள் அளிக்கப் பட்டன. கிருஷ்ண தேவ ராயர் காலத்தில் கிழக்கு கோபுரமும் ரத வீதியில் மண்டபங்களும் கட்டப்பட்டன. விமானத்திற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. பிற்காலத்தில் அனேக பக்தர்கள் மூலம்  கொடிமரம், நந்தவனம், கோயில் மணி ஆகியவை அளிக்கப்பட்டன. 

கி.பி. 1674 ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ்  இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பிற்காலத்தில் ஸ்ரீ சைல ஆலயத்தின் மீது படையெடுப்பு நிகழ்ந்தபோது மராட்டிய வீரர்கள் கடைசி வீரன் உள்ளவரை போரிட்டதாகக் கூறுவர். அவர்களது சந்ததியினர் இன்றும் ஆண்டுக்கு ஒரு முறை  தங்களது முன்னோரது நினைவாக இங்கு வருகை தந்து வழிபடுகிறார்கள். 

முகலாய அரசன் ஔரங்கசீப்பின்  ஆட்சிக்கு உட்பட்ட பிறகு இப்ராஹீம் கான் என்பவன் அனுதாப அடிப்படையில் ஸ்ரீ சைல ஆலய சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தான். இப்பிரதேசம் ஹைதராபாத் நவாபுகளின் வசமான பிறகு இச்சொத்துக்கள் ஸ்ருங்கேரி சங்கர மடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நவாப் தனது அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளைக் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுத்து விட்டான். அதில் ஸ்ரீசைல தேவஸ்தானமும் அடங்கும். ஆங்கிலேயர்கள் , இவ்வாலய நிர்வாகத்தைப் புஷ்பகிரி பீடத்திடம் ஒப்படைத்தனர். ஆனால் நிர்வாகம் சரிவர செயல் படாது போகவே, ஆலயம் மிகவும் பழுதடைந்தது. 1949 வரை ஒரு குழுவின் பொறுப்பில் இருந்த இவ்வாலய நிர்வாகத்தை  , அறநிலையத் துறை மேற்கொண்டது. 

மகா சிவராத்திரி தேர்த் திருவிழா 
ஸ்ரீ சைல ஆலயம்: சுமார் இருபது அடி உயர  மதில் சுவற்றின்  வெளிப்புறம் , சிற்பங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் , பார்வதி திருமணம், நடராஜர், கஜ சம்ஹாரம், பாற்கடல் கடைதல் , கண்ணப்பர் சிவபூஜை, கணபதியின் சிவபூஜை, பிக்ஷாடனர், கணபதியின் நாட்டியத்திற்கு அனுமன் குழல் ஊதுதல், மகிஷாசுர மர்த்தனி , லக்ஷ்மி கணபதி முதலிய மூர்த்திகள் இவற்றுள் சிலவாகும். பிராகாரத்தின் எட்டுத் திக்குகளிலும் அஷ்ட திக் பாலகர்களைக் காண்கிறோம். 
ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் 15  ம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரத்தை  கி.பி. 1677 ல்  சத்ரபதி சிவாஜி கட்டினார். பின்னர் மேற்கு கோபுரம், 1966 ல் கட்டப்பட்டது. மல்லிகார்ஜுன சுவாமியின் விமானம் கி.பி. 1230 ம் ஆண்டு காகதீய கணபதி ராஜனின் சகோதரி மைலம்ம தேவியால் கட்டப்பட்டது. கருவறையில் உள்ள ஜ்யோதிர் லிங்க மூர்த்தி சிறிய அளவில் காணப்பட்டாலும் கீர்த்தி மிகவும் பெரிது. விசேஷ நாட்கள் தவிர, அதிக கூட்டம் இல்லாதபோது சுவாமியைத் தீண்ட அனுமதிக்கிறார்கள். 

ஆலயத்தின் முன்புறம் உள்ள ரங்க மண்டபத்தை  விஜய நகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் கட்டினார். இதனுள்  ரத்ன கர்ப்ப கணபதி, பத்ர காளி, வீரபத்திரர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். இம்மண்டபத்தின் முன் புறம் உள்ள வீர மண்டபம், 38 தூண்களோடு கட்டப்பட்டது. ஆனால் தற்போது 16 தூண்களே உள்ளன. நந்தி மண்டபத்தில் நந்திக்கு ( சென கல பசவண்ணா ) கடலை மாலை சமர்ப்பிக்கப்படுகிறது. நந்தியம்பெருமானின் திருவுருவம் காண்போரைக் கவர வல்லது. ஆலய வடகிழக்குப் பகுதியில் சப்த மாதர்களைத் தரிசிக்கலாம். இங்குள்ள ஆழ் கிணறு மேற்கூரையோடு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மற்றோர் ஆழ்கிணறு சுவாமி சன்னதிக்குத் தென்புறம் உள்ளது. சப்த மாதா மண்டபத்தை ஒட்டிய ஆழ்கிணறு, விஷ்ணு குண்டம் எனப்படுகிறது. சுவாமி சன்னதிக்கு வடகிழக்கில் அன்னபூர்ணா சன்னதி உள்ளது. இங்கு யாத்ரீகர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. 

சிவபெருமானின்  மூர்த்தங்களான  பவ, சர்வ, ஈசான்ய, பசுபதி, ருத்ர, உக்ர , பீம, மகாதேவ  லிங்க வடிவங்களையும் தரிசிக்கிறோம். இவற்றோடு, ஜல லிங்கம், சூர்ய லிங்கம்,சந்த்ர லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம்,ஆகாச லிங்கம், மோக்ஷ லிங்கம் ஆகியவற்றையும் தரிசிக்கிறோம். குமார ஸ்வாமியான  முருகன் ஆறு திருமுகங்களோடு தரிசனம் தருகிறார். இவரது சன்னதியை ஒட்டியுள்ள மண்டபத்தை ஆஸ்தான மண்டபம் என்றும் அலங்கார மண்டபம் என்றும் அழைப்பார்கள். இதனுள்  மல்லிகர்ஜுனரின் பக்தைகளான அக்கமஹா தேவி, ஹேமா ரெட்டி மல்லம்மா  ஆகியோரின் திருவுருவச் சிலைகளைக் காணலாம். சுவாமி சன்னதிக்குப் பின்புறம் படி ஏறிச் சென்றால் பிரமராம்பிகையின் சன்னதியை அடையலாம். இந்த அம்பிகையின் சன்னதி,  சக்தி பீடங்களுள் ஒன்று.இதனருகில் சீதா தேவி பிரதிஷ்டை செய்த சஹஸ்ர லிங்கம் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு வடகிழக்கிலுள்ள யாகசாலையில் பௌர்ணமி தினங்களில் சண்டி ஹோமம் செய்கிறார்கள்.

மல்லிகார்ஜுனரின் பின்புறம் ஸஹஸ்ர லிங்க சன்னதி உள்ளது. ராமபிரானால்  பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பர். சுவாமிக்குக் கிழக்கில், அத்தி, அரசு, வன்னி மரங்கள் மூன்றும் இணைந்து காணப்படுகின்றன. தத்தாத்ரேயர் இதனடியில் தவம் புரிந்ததாகக் கூறுவார்கள். 

அருகிலுள்ள ஆலயங்கள்: கோயிலைத் தரிசித்துவிட்டு வெளியில் வந்தால், வீரபத்திரர், கங்காதர மூர்த்தி, கிரிஜா சங்கரர், பசுபதிநாதர் ஆகிய மூர்த்திகளையும், கங்கா- பவானி ஸ்நான கட்டம், கோகர்ண தீர்த்தம், சிவாஜி கோபுரத்தின் அருகிலுள்ள சந்த்ர குண்டம், பாதாள கங்கை, ஆகிய தீர்த்தங்களும், 2 கி.மீ. தொலைவில் சாட்சி கணபதி ஆலயமும் உள்ளன. ஸ்ரீ சைலத்தை தரிசித்ததாகக் கைலாயத்தில் சாட்சி சொல்வதல் இந்தக் கணபதியை சாட்சி கணபதி என்கிறார்கள்.  

இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கில் பஞ்ச தாரைகளாக நீர் வீழ்ச்சிகளும், ஆதி சங்கரர் தவம் செய்த இடம் என்று ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் காட்டி அருளிய இடமும் உள்ளன. ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் வரை மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான (  2830 அடிகள் ) சிகரேசுவரத்தைத்  தரிசித்தபடியே மல்லிகார்ஜுனசுவாமியைத் தியானிப்பார்கள்.  இங்கிருந்தபடியே, ராமபிரான் , மல்லிகார்ஜுனரைத் தரிசித்ததாகச் சொல்வர்.  8 கி.மீ  தொலைவிலுள்ள இச்சிகரத்தின் மேலுள்ள வீர சங்கர சுவாமிக்குப் பக்தர்கள் செக்கில் எள்ளை  ஆட்டி  அதனைப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளுக்கு     இடையிலிருந்து மல்லிகார்ஜுன ஆலய சிகரத்தைத் தரிசிக்கிறார்கள். பாதாள கங்கையில் கலக்கும் பீமன்குள  ஊற்றுக்கு அருகில் பீமேசுவர சுவாமி ஆலயம் உள்ளது. பாதாள கங்கையிலிருந்து பரிசிலில் கிருஷ்ணா நதியில் சென்று அக்க மகா தேவி தவம் செய்த குகையை அடையலாம். அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இஷ்ட காமேசுவரி ஆலயத்தையும் பக்தர்கள் பிரார்த்தனைத் தலமாக வழிபடுகிறார்கள். பரிசிலில் அக்கரை  அடைந்தபின், தத்தாத்ரேயர்  தவம் செய்த கதலீ  வனத்தைக் காணலாம். தியானம் செய்வதற்கேற்ற அமைதியான இடம் இது. 

அடர்ந்த காடுகளிடையே அமைந்த அற்புதத் தலம் ;  அமைதி தேடுவோர்க்கு  ஏற்ற சூழல். புண்ணிய மூர்த்தியைத் தாங்கும் புண்ணிய சிகரங்கள்; கண்ட மாத்திரத்திலேயே பிறவிப்பிணியை நீக்கிடும் தெய்வீக மலைத் தொடர்கள்; இவை அனைத்தும் ஒருங்கே காட்சி  அளிக்கும்   ஸ்ரீசைல   பர்வதத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது அன்பர்கள் சென்று தரிசித்து நலம் பெற வேண்டும்.        
  

Friday, April 5, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் ஸ்ரீ சைலம் பகுதி 2

மலைகளுக்கு நடுவில் வளைந்து செல்லும் பாதை 
கர்நூலிலிருந்து  ஸ்ரீசைலம்  செல்லும் வழியில் மலைப் பாதைகளில் பயணிக்கிறோம். இரண்டு பக்கமும் மூங்கில் மரக்காடுகள். மைல் கணக்கில் அவை நம்மைத்  தொடர்ந்து வருகின்றன. இத்தனை அடர்ந்த மூங்கில் காடுகளை  அதுவரையில்  பார்த்திராததால், வியப்பின் எல்லைக்கே செல்ல வேண்டி இருந்தது.  அவ்வப்போது  தோன்றும் குரங்குக் கூட்டங்கள்  நம்மைக் குதூகலிக்க வைக்கின்றன. புலி, மான் ஆகியவற்றின்  படங்களை வைத்திருக்கிறார்கள்.  நமது கண்ணில் மட்டும்  அவை தென்படாதது துரதிருஷ்டமே. ஒருவேளை இரவில் அவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கலாம்.  மகாசிவராத்திரியை முன்னிட்டுப் பல பக்தர்கள்  தங்களது தலைகளில் இருமுடி சுமந்து கொண்டு  நடந்தே மலை ஏறிச் செல்வதைப் பார்க்கிறோம்.  ஒருவேளை அவர்கள் வீர சைவர்களாக இருக்கலாம். பிரார்த்தனை செய்துகொண்டு  இப்படி நடந்தே  வருகிறார்கள்.  காட்டுப் பாதையாக இருப்பதால் திருடர்கள் பயமும் உண்டு என்று ஒருவர்  கூறினார்.  திருடர்களுக்கோ, கொடிய விலங்குகளுக்கோ  அஞ்சாமல்  கால் நடையாகவே மலை ஏறும்  பக்தர்களை எப்படிப் புகழ்வது ? 

வழியில் கடக்கும் ஒரு ஆறு 
ஸ்ரீ சைலத் தலபுராணம் தரும் செய்திகளையும் நாம் இங்கே சிந்திக்கலாம். முன்  ஒரு காலத்தில் சிலாத முனிவர் என்பவருக்கு இரு குமாரர்கள் சிவனருளால் பிறந்தனர். அவர்கள்  நந்தி என்றும் பர்வதன் என்றும்  அழைக்கப்பட்டனர். அவ்விருவரும் வயது வந்தவுடன் சிவனை நோக்கித் தவம் புரிந்தனர்.  தான் மலை வடிவாக ஆகி அதன் மீது இறைவன் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் நந்தி பெற்றார். நந்தி பர்வதமாக ஆன இடமே, ஸ்ரீ சைலத்திலிருந்து சுமார்   200  கி.மீ.தொலைவில் உள்ள நந்தியால் என்ற புனிதமான தலம் .  

அடர்ந்த காட்டுப் பிரதேசம் 
பர்வதன் பெருமானிடம் ஒரு வரம் வேண்டிப் பெற்றான். அதாவது, பர்வத மலையாகத் தான் ஆகவும், அதன் மீது பர்வத லிங்கமாகப் பெருமான் எழுந்தருள வேண்டும் என்பதே அது. அந்த சிகரத்தைத் தரிசிப்பவர்கள் முக்தி பெற வேண்டும் என்றும் எல்லா தீர்த்தங்களும் இங்கு சன்னிதி கொள்ள வேண்டும் என்றும்  வேண்டினான். அதன்படி ஸ்ரீ பர்வதம் எனவும் ஸ்ரீ சைலம் எனவும் இத்தலம் அழைக்கப்படலாயிற்று. தேவாரத்திலும் இத்தலம் திருப்பருப்பதம் என்றே குறிப்பிடப்படுகிறது.

கோயிலும் மதில் சுவரும் 
சந்திரவதி  என்ற அரச குமாரி  ஸ்ரீசைல நாதரை மல்லிகைப் பூக்களால் அர்ச்சித்து பூஜை செய்து வந்தபடியால் சுவாமிக்கு மல்லிகார்ஜுனர் என்ற பெயர் வந்தது. மருத மரம் (அர்ஜுன விருக்ஷம்)ஸ்தல விருக்ஷமானதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். வசுமதி என்ற பக்தியின் வேண்டுகோளால் ஸ்ரீ பர்வதம் என்ற பெயர் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.

 உலகை வலம் வந்ததற்கு சமமாக உமாமகேசுவர்களை முதலில் வலம் செய்த  விநாயகப் பெருமான் அவர்களது ஆசி பெற்றதோடு, சித்தி, புத்தி ஆகிய இருவரையும் மணந்தார்.  மயில் ஏறிச் சென்று உலகை நொடிப் பொழுதில் வலம் வந்த குமார சுவாமியான முருகன் கோபம் கொண்டு அவ்விடத்திலிருந்து நீங்கி, கிரௌஞ்ச  மலையைச் சென்றடைந்தார். முருகன் சமாதானமாகாமல் அங்கே தங்கி விடவே, தெய்வ தம்பதியரும் அதற்கு அருகிலுள்ள ஸ்ரீ சைலத்தில் தங்கி விட்டனர். 

மதில் சுவற்றில் சிற்பங்கள் 
சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது, அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி, அரசனை வீர சிவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு, அவனை சந்திக்கச் சென்றாள் . அரசனின் தவறான  செய்கையால் மனம் நொந்து, தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள். ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்க மகா தேவியின் திருவுருவச் சிலை பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. 

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ராமாபுரம் என்ற ஊரில் 14 ம் நூற்றாண்டில் வசித்து வந்த  நாகி ரெட்டி- கௌரம்மாள்  இருவரும் பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ சைலம் வந்தனர். இறைவனருளால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.  அக்குழந்தை மல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். வயது வந்தவுடன் அவளை ,அருகிலுள்ள சித்தாபுரத்தைச் சேர்ந்த பரமா ரெட்டி என்பவனுக்கு மணம் செய்து வைத்தனர். புகுந்த வீட்டுக்கு மல்லம்மா வந்தவுடன் அங்கு பசுக்களும் விளைச்சலும் பல மடங்கு அதிகரித்தன. ஏழைகளுக்கு மல்லம்மா உதவி செய்து வந்தாள் . இதைக் கண்டு பொறாமை  கொண்ட உற்றார் உறவினர்கள், அவளது கணவனிடம் சென்று   வீண் பழி சுமத்தி அவனைக் கோபமுறச் செய்தார்கள். அதை உண்மை என நம்பிய கணவனும், மல்லம்மாவைக் கொன்று விட நினைத்து அவளிடம் சென்றான். ஆனால் அவளோ மெய் மறந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு தனது செயலுக்கு வருந்தினான். மல்லம்மாவும், தவறு செய்த அனைவரையும் மன்னித்து, அனைவருக்கும் சிவ மகிமையைப் போதித்து, கடைசியில் பெருமானுடன் ஐக்கியம் ஆனாள்.  ஸ்ரீ சைல ஆலயத்தில் பின் பிராகாரத்தில் மல்லமாவின் பசுத் தொழுவம் இருக்கிறது. அருகில் மல்லம்மாவின் விக்கிரகமும் இருக்கிறது. 

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் -  சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குலகுருவான ரேவண சித்தர்  ஒருநாரத்தம் பழத்தைக் கொடுத்து, சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே  செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா  எனப் பெயரிட்டனர். அச் சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித்  தன் பெயர்  மல்லையா என்றும் தான்  மிகவும் பசியோடு இருப்பதாகவும் கூறவே, ஸித்தப்பா  ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும்  பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது, அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி, " இவரே மல்லையா " என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்தபோது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் , ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது.  பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா , அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் , தான் வெட்டியகுளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர்  ஆலயம் எழுப்பப்பட்டது.  

சிவபெருமானை மணக்க விரும்பிய ராஜகுமாரி ஒருவள்  இறைவனது  ஆணைப்படி ஒரு வண்டைப் பின்தொடர்ந்து சென்று ஸ்ரீ சைல காட்டுப் பகுதியை அடைந்தாள். அங்கு காட்டு வாசிகள் அவளுக்கு உணவு அளித்தனர். அவள்  கிழ வடிவில் வந்த பெருமானை  மணம் செய்து கொண்டாள். மலை வாசிகள் தங்கள் வழக்கப்படித்   திருமண விருந்து கொடுத்தனர். அதனை ஏற்காமல் இறைவன் அங்கிருந்து கிளம்பும்போது  மல்லையா என்று ராஜகுமாரி பலமுறை அழைத்தும் பலன் இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த ராஜகுமாரி, கிழவரைப் பார்த்து லிங்க வடிவிலேயே இங்கு தங்கி விடுக என்றவுடன் இறைவனும் அப்படியே ஆனார்.  அதைக் கண்ட பார்வதி, வண்டைப் பின் தொடர்ந்து வந்த நீ வண்டாகப் போவது என்று ராஜகுமாரியைச் சபித்தாள். ஸ்ரீசைலத்தில் அம்பாளுக்குப் பிரமராம்பிகை என்ற பெயர் வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. ( பிரமரம் என்பது வண்டைக் குறிக்கும் சொல் ) 

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம்  பாலித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விடவே, சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி, "அஞ்சாதே, உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக "  என்று அருளினார்.  வீட்டிற்குள் சென்ற கேசப்பா, பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு, திருவருளை வியந்தவனாக, அடியார்களுக்கு அன்னம் பாலித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம், அடிகேச்வரம்  எனப்படுகிறது. 

ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ஒரு கயிற்றைக் கொடுத்து, அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். துயில் நீங்கிக் கயிற்றைக் கண்ட சிற்பி, அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது, ஒரு நந்தி  பாறைகளிடையே சிக்கவே, திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான் என்று  சொல்வார்கள். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம்  அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.  

Thursday, March 21, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் ஸ்ரீ சைலம் பகுதி - 1


               ஸ்ரீ சைலம்- பகுதி-1   

ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி ஆலயம்,ஸ்ரீ சைலம் 
குருக்ஷேத்திரத்தில்  தானங்கள் செய்தல் , கங்கையில் நீராடுதல் , நர்மதைக் கரையில் வாசம் செய்தல் காசியில் வசித்தல் ஆகிவற்றால் ஏற்படும்  பலன்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிக பலனை ஸ்ரீ சைல மல்லிகார்ஜுன ஜோதிர் லிங்கத்தைத் தரிசிப்பதால் பெறலாம் என்று ஸ்காந்த மகா புராணம் கூறுகிறது. ஸ்ரீ சைல சிகரத்தைக் கண்டால் மறு பிறவி இல்லை என்று சொல்லப்படும்.

அர்ஜுன (மருத) விருக்ஷத்தைக் கொண்ட தலங்கள் மூன்று. அவையாவன, மல்லிகார்ஜுனம்,புடார்ஜுனம் மற்றும் மத்யார்ஜுனம் என்பதாம். இதில் மல்லிகார்ஜுனம் என்பது ஸ்ரீ சைலத்தையும், புடார்ஜுனம் என்பது திருநெல்வேலிக்கு அருகிலுள்ள திருப்புடை மருதூரையும் மத்யார்ஜுனம் என்பது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரையும் குறிக்கும்.

தலத்தின் இருப்பிடம்: ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது இந்தத் தலம். 384 கி.மீ. பரந்து விளங்கும் இந்த க்ஷேத்திரத்திற்குப் பிரகாசம் ஜில்லாவிலுள்ள திரிபுராந்தகம் , கிழக்கு வாயிலாகவும், கடப்பா ஜில்லாவிலுள்ள சித்த வடம் தெற்கு வாயிலாகவும், மெகபூப் நகர் ஜில்லாவிலுள்ள அலம்புரம் ,மேற்கு வாயிலாகவும், உமாமகேசுவரபுரம் வடக்கு வாயிலாகவும் விளங்குகின்றன.

இதன் தென்கிழக்கில் புஷ்பகிரி க்ஷேத்திரமும், தென்மேற்கில் சோமசீல க்ஷேத்திரமும் , வடமேற்கில் சங்கமேசுவர க்ஷேத்திரமும், வட கிழக்கில் எல்லேச்வர க்ஷேத்திரமும் விளங்குகின்றன.  
{ விஜயவாடாவிலிருந்து ஸ்ரீ சைலம் வரும் வழியில் சுமார் 80 கி.மீ. தொலைவில் குமார கிரியில் திரிபுராந்தகேச்வரர் கோயில் உள்ளது. முற்காலத்தில் ஸ்ரீ சைலத்திற்குக் கால்நடையாகச் சென்ற பக்தர்கள் முதலில் இங்கு தரிசித்து விட்டுச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்த இடமாதலால் குமார கிரி எனப்பட்டது. திரிபுராதிகளை வென்ற பரமேசுவரன், திரிபுரசுந்தரியோடு இங்கு கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீ சைல காண்டத்தில் இத்தலத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் உள்ள குன்றில் தாரகாசுரன் பூஜித்த சிவலிங்கம், தாமிர தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேற்புறக் குன்றில் விஷ்ணு பூஜித்த சிவலிங்கம், ஜானவி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இங்கிருந்து காசிக்கும்,ஸ்ரீ சைலத்திற்கும் சுரங்க வழி இருப்பதாகச் சொல்வர்.

     ஸ்ரீ சைலத்தின் தென்வாயிலாகக் கூறப்படும் சித்தவடம் சுமார் 500 கி.மீ. பரப்பளவு உடையது. அகஸ்த்ய,அத்ரி,ப்ருகு,வசிஷ்டாதி முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்த இடம் இது ஸ்காந்தத்தில் ஸ்ரீ பர்வத காண்டத்தில் இங்கு அனேக வனங்களும், சிகரங்களும், நதிகளும்,தீர்த்தங்களும், சிவ லிங்க மூர்த்திகளும் இருப்பது பற்றி விவரிக்கப்படுகிறது. இங்கு வாசம் செய்து,பினாகினி நதியில் நீராடி சித்தேசுவரரைத் தரிசித்தால் ஜீவன் முக்தி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. சித்தேசுவரர், பால சித்தேசுவரர், கண்டா சித்தேசுவரர், கன்யா சித்தேசுவரர், இஷ்ட சித்தேசுவரர், வியாம சித்தேசுவரர், பஸ்ம சித்தேசுவரர், பிக்ஷா சித்தேசுவரர், பில சித்தேசுவரர், புரா சித்தேசுவரர், ஜல சித்தேசுவரர், ஆகிய சித்தி தர வல்ல லிங்கங்களை இங்குக் காணலாம். காசிக்குச்  சமமான இங்கு வாசம் செய்வதாலும், உயிர்நீப்பதாலும் லிங்க ஸ்வரூபத்தை அடையலாம் என்று ஸ்காந்தம் விவரிக்கிறது. வட பெண்ணை நதிக்கரையில் உள்ள சித்தவடத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி பிரபலமானது.

     கர்நூலிலிருந்து ஹைதராபாத் செல்லும் வழியிலுள்ள அலம்புரம் ரயிலடிக்கு 9 கி.மீ. தொலைவில் யோகாம்பிகா சமேத பால ப்ரம்மேசுவரர் ஆலயம் உள்ளது. நவ பிரம்மாக்களின் சன்னதியோடு கூடிய இக் கோயிலில் யோகாம்பிகா தேவி சக்தி பீட நாயகியாகக் காக்ஷி  அளிக்கிறாள்.  பயங்கர வடிவுடன் காட்சி அளிக்கும் இத்தேவியைப் பக்தர்கள் நேராகத் தரிசனம் செய்யாமல் பக்க வாட்டில் இருந்தே தரிசிக்கிறார்கள். தக்ஷிண காசியாகச் சொல்லப்படும் இத்தலத்தில் ப்ரம்மேசுவரரே காசி விச்வநாதர்.; துங்க பத்திரையே கங்கை.  காசியைப் போலவே இங்கும் கணபதி, கால பைரவர் சன்னதிகளும் 64 படித்துறைகளும் உள்ளன.  

          ஸ்ரீ சைலத்தின் வடக்கு வாயிலாகத் திகழும் உமாமகேசுவரபுரம், ஹைதராபாத் செல்லும் வழியில் மன்னனூர் அல்லது ரங்காபுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.மலை மீதும் அடிவாரத்திலும் இரு சிவாலயங்கள் உள்ளன. இங்குள்ள ருத்ர தாரகையில் நீராடி, சுவாமி தரிசனம் செய்பவர்களைப் பத்து தலைமுறையினர் வணங்குவார்கள். இங்கு செய்யும் தானங்களின் பலன் அளவிட முடியாதது. அந்திம காலத்தை இங்குக் கழிப்பவர்கள், ஈசுவரனோடு இரண்டறக் கலப்பர். குபேரனால் காக்கப்படும் இந்த ஸ்தலத்தை வழிபடுவதற்கு, ரிஷிகளும் சகல தேவதைகளும் மகா சிவராத்திரியன்று வருகிறார்கள் என்று புராணம் கூறும். இங்குள்ள மாமரத்தின் பழத்திலுள்ள வண்டினை நீக்கிவிட்டுப் பாலுடன் கலந்து 21 நாட்கள் உண்டு வந்தால் தேகம் வஜ்ரம் போல் ஆகும் என்றும் இங்கிருந்து காத தூரத்திலுள்ள பத்மாவதி குகையிலுள்ள மிருதங்கத்தை வாசித்தால் அம்பிகை தோன்றி, அமிர்தம் வழங்கி தேவ பதவியை அளிப்பாள் என்று ரத்னாகரம் என்ற நூல் கூறுகிறது.

    ஸ்ரீ சைலத்தின் தென்கிழக்கு வாசலான சோம சீலம் , நெல்லூர்-கடப்பா வழியில் வடபெண்ணை நதிக் கரையில் உள்ளது . ஸ்கந்தன் என்ற ரிஷி தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை சோம தீர்த்தக் கரையில் வைத்து விட்டு நீராடச் சென்றார். இதற்குள் சிவலிங்கமானது அவ்விடத்திலேயே பிரதிஷ்டை ஆகி விட்டது. அந்த ரிஷியின் பெயரால் சுவாமி ஸ்கந்த ஸோமேசுவரர் எனப்படுகிறார். கோயிலின் முன்பு ஓர் ஆலமரம் உள்ளது.
     பிரசூனாசலம் எனப்படும் புஷ்பகிரி ஸ்ரீ சைலத்தின் தென்மேற்கு வாயிலாகக் கருதப்படுகிறது. இது கடப்பா ஜில்லாவில் பெண்ணை நதிக் கரையில் உள்ளது. ஒருசமயம் கருடன் இந்திரலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை எடுத்து வரும்போது அதிலிருந்து ஒரு துளி புஷ்பகிரியில் உள்ள தடாகத்தில் விழவே, அங்கிருந்த மக்கள் அதை அருந்தி, பிறப்பு இறப்பு இன்றி வாழ்ந்தனர். கடைசியில் ஹனுமான் ஒரு பாறையைக் கொண்டு அதனை மூடினான். அம்மலையோ பூவைப்போல அத் தடாகத்தில் மிதந்தது. மும்மூர்த்திகள் அதனை நிலை பெறச் செய்தனர். இங்கு ஆதிகேசுவரர், சந்தான மல்லேசுவரர், லக்ஷ்மி, ஹனுமான் சன்னதிகள் உள்ளன.
    கர்னூல் ஜில்லா நந்தி கொட்கூருக்கு 20  கி.மீ. தூரத்திலுள்ள சங்கமேசுவரம்,  ஸ்ரீ சைலத்தின் உப த்வாரமாக/ வட மேற்கு வாயிலாக  ஸ்ரீ சைல காண்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணா, வேணி, துங்கா, பத்ரா, பீமரதி,  மால, பவநாசனி ஆகிய ஏழு நதிகளும் இங்கு சங்கமிக்கின்றன. கிரகண காலத்தில் ஏழு கடல்களும், சகல தீர்த்தங்களும் இங்கு சங்கமிக்கின்றன. இதுபோன்ற புண்ணிய காலங்களில் இந்த நிவர்த்திசங்கமத்தில்  நீராடினால் யாக பலன் கிட்டும்.   
    
    கல்மாஷபாதன்,விசுவாமித்திரர், சாண்டில்யர், கபிலர் ஆகிய ரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்துள்ளனர்.
     வடக்கு வாயிலான ஏலேசுவரம், பல படை எடுப்புக்களுக்கு ஆளாகித் தற்போது நாகார்ஜுனசாகர் அணையில் மூழ்கியுள்ளது. அதனைத தற்காலத்தில்  புனர் நிர்மாணம் செய்துள்ளனர்.}      
    
 காலப்போக்கில் அழிந்தவை போக , ஐந்து மடங்கள் ஸ்ரீசைல ஆலயத்திற்குத்  தென்மேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவையாவன: மிகப் பழமையான கண்டா மடம். இங்கு கண்டா சித்தேசுவரர் சன்னதியும், வற்றாத கண்டா கர்ண தீர்த்தமும் உள்ளன. அருகில் பீமசங்கரர் மடம், வீர பத்திரர் ஆலயம் ஆகியன உள்ளன. மேலும் விபூதி மடம் , ருத்ராக்ஷ மடம் ,சாரங்கேசுவர முனிவர் வாழ்ந்த சாரங்க தாரா மடம் ஆகியவை உள்ளன.  

Wednesday, March 20, 2019

ஜ்யோதிர் லிங்கங்கள் ஸோம் நாத்- பகுதி 5

இதே இடத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் இருந்ததை அகழ்வாராய்வுகள் உறுதி செய்தன. பழைய கோயிலின் தூண்கள் பெரும்பாலும் கடல் அரிப்புக்கு ஆளாகி விட்டதால் அவற்றின் மேல் ஏற்றப்படும் சிகரத்தைத் தாங்கும் வலிமை அவற்றுக்கு இல்லை. தொல்பொருள் ஆராயச்சித்துறையும் இதனை உறுதி செய்தது. எனவே புதிய கோயிலை அவ்விடத்தில் கட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. கோயிலின் வளர்ச்சிக்கு எதுவாக சுற்றிலும் உள்ள இடத்தை விரிவாக்கம் செய்வது என்று  தீர்மானிக்கப்பட்டது. 1949 ம் ஆண்டு ஜனவரி 23 ம் தேதியன்று சர்தார் படேல் உள்ளிட்ட பிரமுகர்கள் ஜாம்நகரில் கூடி டிரஸ்ட் ஒன்று ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. முன்ஷிஜி அவர்களைக் கொண்டு டிரஸ்டின் ஷரத்துக்கள் (deed)  வரையறுக்கப்பெற்றன.

அகில இந்திய சம்ஸ்க்ருத சர்வகலாசாலை ஒன்றை பிரபாஸில் அமைக்க வேண்டும் என்றும் யாத்திரீகர்கள் தங்கி ஓய்வெடுக்க வீடுகள் அமைக்க வேண்டும் என்றும் கிருஷ்ண பகவான் தனது மானுட உடலை நீத்த தேஹோத் சர்கா என்ற இடத்தை மீண்டும் புனரமைக்க வேண்டும் என்றும்,கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் பல அம்சங்கள் அதில் அடங்கியிருந்தன. சர்தார் படேல் அவர்கள் அக்டோபர் 1949 ல் ட்ரஸ்டிகளை நியமனம் செய்தார். அரசாங்க ஒப்புதலுக்குப் பிறகு, ஸோம்நாத்தின் எழாவதுகோயில் கட்டுவதற்கான தாங்குதளக் (Foundation work) கட்டுமானப் பணிகள் 1950 ம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாளன்று துவங்கியது. வெள்ளியாலான நந்தி ஒன்று சுவாமிக்கு முன்னே அமைக்கப்பெற்றது.

“ This national urge was reflected when Sardar , with uncanny insight , saw that we should never genuinely feel that freedom had come, nor develop faith in our future, unless Somanatha was restored “
                                                                                        - K . M. Munshi

தான் எழுதிய “Somanatha the eternal shrine “என்ற புத்தகத்தை முன்ஷிஜி அவர்கள் சர்தார் படேல் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தவராக,அதில் எழுதியுள்ளதைக் கீழே தருகிறோம்:

“ To Sardar Patel…. But for whom mine eyes would not have seen the shrine of Somanath rise again .”

 நேருவின் விருப்பம் வேறாக இருந்தபோதிலும் எல்லாம் வல்ல சோமநாத சுவாமியின் விருப்பப்படியே ராஷ்ட்ரபதி ராஜேந்திர பிரசாத் அவர்களின் முன்னிலையில் 1951 ம் ஆண்டு மே மாதம் பதினோராம் நாளன்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாகச் செய்விக்கப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் இந்த அபூர்வ வைபவத்தைக் காண வந்திருந்தனர்.

திரிவேணி சங்கமம் 
காசி ராமேசுவரம் செல்வது போலவே ஹிந்துக்கள் தமது ஆயுளில் ஒரு முறையாவது ஸோம்நாத் ஜ்யோதிர் லிங்கத்தைத் தரிசிக்க வேண்டும். கார்த்திகை சோமவாரங்கள், மகாசிவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திரிவேணி சங்கமத்தில் நீராடி,முன்னோருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ஜெய் ஸோம்நாத் - வெளியில் விற்கப்படும் படம் 
கோயிலுக்குச் சற்றுத் தள்ளியே நுழைவாயில் இருப்பதால் நாம் நமது உடைமைகளான கைப்பை, மொபைல் ,கேமெரா போன்றவற்றைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க வேண்டும். பாதுகாப்புப் பரிசோதனைகள் செய்யப்பட பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேராகச் சென்று சோமநாதரின் சன்னதியை அடைகிறோம். அந்த அருட்காட்சியில் நாம் லயிக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால் இவ்வற்புதக் காட்சியைக் காணாமலேயே வாழ்க்கை முடிந்திருக்குமே என்று எண்ணும்போது கண்கள் பனிக்கின்றன. உயரமான ஜ்யோதிர் லிங்கத் திருமேனியைச் சுற்றிலும் வட்டமான ஆவுடையார். ஒளியில் மின்னும் பெருமானின் அழகில் மயங்கி நின்றாலும் அதிக நேரம் நிற்க முடியாமல் பின்னால் பக்தர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பாணத்தின் மீது ஓம் என்று அழகாக சந்தனத்தால் வரைந்திருக்கிறார்கள். 

வெளியில் இருக்கும் ஒரே பிராகாரத்தில் நின்று கொண்டு சுவாமி விமானத்தை அண்ணார்ந்து பார்க்கிறோம். மீண்டும் ஒரு முறை உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை எழுகிறது. அவனைத் தரிசிக்க அருள் செய்தமைக்குக் கைமாறாக நம் வேறு என்ன செய்ய முடியும் ? எவ்வளவு பேருக்கு வாழ்க்கையில் இத்தரிசனம் கிடைக்கிறது? “ என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே “ என்ற திருஞான சம்பந்தரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.

இறைவா , மீண்டும் மீண்டும் உன்னைத் தரிசிக்கும் பாக்கியத்தை அருளுவாயாக என்று பிரார்த்தித்துக் கொண்டே வெளியே வருகிறோம். 

ஸோம்நாத்தில் தரிசிக்க வேண்டிய இடங்கள் பல உண்டு. அவை ஒவ்வொன்றும் சற்றுத் தள்ளியே அமைந்திருப்பதால் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு அனைத்தையும் தரிசிக்கலாம். ஆட்டோகாரர் ஒரு கார்டு தருகிறார். அதில் சுமார் 12 இடங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் நாம் சென்ற ஆட்டோ டிரைவர் பொறுமையாக அழைத்துச் சென்று அவற்றைப் பற்றி விளக்கமும் அளித்தார். அவருக்கு நம் நன்றி உரியது.

புதிய சோமநாத் கோயிலைத் தரிசித்ததும் ஆட்டோவில் ஏறி பழைய சோம்நாத் ஆலயத்தை அடைகிறோம். சிவலிங்க மூர்த்தி ஆழத்தில் இருப்பதைக் காண்கிறோம்.

அடுத்ததாகத்  திரிவேணி சங்கமத்தை அடைகிறோம். அங்கு சரஸ்வதி உள்ளிட்ட மூன்று நதிகள் சங்கமித்துக் கடலோடு கலக்கின்றன. ரம்மியமான காட்சி. கரைகளை சுத்தமாக வைத்திருப்பதை நம்மவர்கள் போய்ப் பார்க்க வேண்டும். கடல் பறவைகள் , யாத்திரீகர்கள் தரும் தான்யங்களைக் கொத்த வட்டமடிக்கின்றன.

பாண கங்கா என்ற இடத்தில் கடலுக்குள் இரு சிவலிங்கங்களைத் தழுவியபடி அலைகள் திரண்டு வருவதைக் கண்டு மெய் சிலிர்க்கிறோம்.

ஆதி சங்கரர் 
இனி த்வாரகா சங்கர மடத்தை அடைகிறோம். அருமையான சூழலில் ஆதி சங்கரர், சிவ லிங்க பாணங்கள் ஆகியவற்றின் தரிசனம் கிடைக்கிறது.

சூரியனுக்கு ஓர் ஆலயம் இருப்பதைக் காண்கிறோம். காலத்தால் மிகப் பழமையான சூரிய பகவானது திருவுருவ தரிசனம் கிடைக்கிறது.
சூர்யா மந்திர் 

ஹிங்கஜ் மாதாஜி குகை என்ற இடத்துக்குச் செல்கிறோம். குகைக்குள்  உட்கார்ந்தபடியே சென்றால் தேவியின் தரிசனம் கிட்டுகிறது.

கீதா மந்திர் என்ற கோயிலுக்குள் கீதோபதேசக் காட்சியைத் தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். தூண்களில் பகவத் கீதை கல்வெட்டாக அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணனின் பாதுகை எனப்படும் இடத்தில் -- கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்ற அதே இடத்தில் பகவானின் பாதுகைகளை நிறுவியிருக்கிறார்கள். இங்கு அமர்ந்து ,அமைதியாக தியானம் செய்ய வருவோர் இருக்கிறார்கள்.

இதைத்தவிரவும் லக்ஷ்மிநாராயண் மந்திர், பல்தேவ் குகை ஆகிய இடங்களுக்கும் நாம் சென்று வழிபடுகிறோம். ஊருக்கு வெளியில் 5 கி.மீ. தொலைவில் வேனேஷ்வர்  கோயிலும், பிட் பஞ்ஜன் மகாதேவர் கோயிலும், பாலகா தீர்த்தமும் உள்ளன.

சிவ சிந்தனைகளோடு நிரம்பித் ததும்பும் மனத்துடன் ஸோம்நாத் யாத்திரையை நிறைவு செய்கிறோம்.