Saturday, April 13, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் ஸ்ரீ சைலம் 3 ம் பகுதி

ஸ்ரீ  சைலத்தைப் பல நூல்கள்  புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம், இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும் மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை,, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி, ஆகியவை  இத்தலத்தின் மகிமையைக்  கூறும் நூல்களாகும். தேவார மூவரான திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்  ஆகியோர்  இத்தலத்தின் மீது திருப் பதிகங்கள் பாடி அருளியுள்ளார்கள். 

கி.பி. 1 ம் நூற்றாண்டில் இத்தலம் சாத வாகனர்களால் சிரிதான்  என்று வழங்கப்பட்டது. புலமாவி என்ற சாதவாகன மன்னனின் நாசிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. சாதவாகனர்களின் தோழர்களான இக்ஷுவாக்கள் இதனை ஸ்ரீ பர்வதம் என்று அழைத்தார்கள். பின்னர் நான்காம் நூற்றாண்டில் சிம்ம வர்ம பல்லவன் இப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டான். த்ரிலோசனபல்லவன் என்பவன் ஸ்ரீ சைலக் காட்டின் ஒரு பகுதியைப் புனரமைத்து அந்தணர்களை அங்கு இருத்தினான். இப்பணியைப் பின்னர் பல்லவர்களை வென்ற சோழர்கள் செய்து முடித்தார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த விஷ்ணுகுண்டியர்கள் இப்பகுதியை ஆண்டனர். அப்போது ஸ்ரீ சைல ஆலயம் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. 

பின்னர்  கடம்பர்கள் இதனைச்  சிறிது காலம் ஆண்டனர்.  ஆறாம் நூற்றாண்டில் கரிகால் சோழனின் சந்ததியினர் கடப்பா, கர்னூல் பகுதிகளை ஆண்டனர். பின்னர் கி.பி. 973 வரை ராஷ்ட்ரகூடர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். மீண்டும் சாளுக்கியர்களது ஆட்சி மலர்ந்தபோது, சோழர்கள்  அவர்களை வென்றனர். 12 ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் காகதீயர்களின் வசமாயிற்று.  பிரதாப ருத்ரன் என்பவர் தன்  மனைவியோடு இங்கு வந்து மல்லிகார்ஜுனருக்குத்  துலாபாரம் தந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. கி.பி. 1323 ல்  காகதீய அரசன் முகமதியர்களால் சிறை பிடிக்கப்பட்டு டெல்லிக்குக்  கொண்டு செல்லும் வழியில் இறந்தான். காகதீய அரசும் அதோடு வீழ்ந்தது. 

ஆந்திரத்தின் 72 சிற்றரசர்கள் முகமதியர்களோடு போரிட்டு  மீண்டும் இந்து ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். இவர்களுள் அத்தங்கி வேமா ரெட்டி என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவரது குல தெய்வம் திரிபுராந்தகத்தில் உள்ள மூர்த்தியே ஆவார். ப்ரோலய ரெட்டி என்பவர் தன்னை  ஸ்ரீசைல மல்லி கார்ஜுனரின்  பாத சரண தாசன் என்று சொல்லிக் கொண்டார். ஸ்ரீ சைல மலை ஏறி வரும் பக்தர்களுக்காக ரெட்டி மன்னர்கள் படிக்கட்டுக்களை அமைத்ததாக சாசனங்கள் மூலம்  அறிகிறோம். ஸ்ரீ சைலத்தில் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணா நதிக்குச் செல்வதற்குப்  படிக்கட்டுக்கள் கட்டப்பட்டன.  அன மேவா ரெட்டியின் ஆட்சிக்கு ஸ்ரீ சைலம், மகா நந்தி பகுதிகள் உட்பட்டன. விஜயநகரப் பேரரசு இப்பகுதியை வசமாக்கிக் கொண்ட பிறகு, ஆலய முன் மண்டபம், தெற்கு கோபுரம்  ஆகியவை கட்டப்பெற்றன. நிறைய தானங்கள் அளிக்கப் பட்டன. கிருஷ்ண தேவ ராயர் காலத்தில் கிழக்கு கோபுரமும் ரத வீதியில் மண்டபங்களும் கட்டப்பட்டன. விமானத்திற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. பிற்காலத்தில் அனேக பக்தர்கள் மூலம்  கொடிமரம், நந்தவனம், கோயில் மணி ஆகியவை அளிக்கப்பட்டன. 

கி.பி. 1674 ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ்  இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பிற்காலத்தில் ஸ்ரீ சைல ஆலயத்தின் மீது படையெடுப்பு நிகழ்ந்தபோது மராட்டிய வீரர்கள் கடைசி வீரன் உள்ளவரை போரிட்டதாகக் கூறுவர். அவர்களது சந்ததியினர் இன்றும் ஆண்டுக்கு ஒரு முறை  தங்களது முன்னோரது நினைவாக இங்கு வருகை தந்து வழிபடுகிறார்கள். 

முகலாய அரசன் ஔரங்கசீப்பின்  ஆட்சிக்கு உட்பட்ட பிறகு இப்ராஹீம் கான் என்பவன் அனுதாப அடிப்படையில் ஸ்ரீ சைல ஆலய சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தான். இப்பிரதேசம் ஹைதராபாத் நவாபுகளின் வசமான பிறகு இச்சொத்துக்கள் ஸ்ருங்கேரி சங்கர மடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நவாப் தனது அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளைக் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுத்து விட்டான். அதில் ஸ்ரீசைல தேவஸ்தானமும் அடங்கும். ஆங்கிலேயர்கள் , இவ்வாலய நிர்வாகத்தைப் புஷ்பகிரி பீடத்திடம் ஒப்படைத்தனர். ஆனால் நிர்வாகம் சரிவர செயல் படாது போகவே, ஆலயம் மிகவும் பழுதடைந்தது. 1949 வரை ஒரு குழுவின் பொறுப்பில் இருந்த இவ்வாலய நிர்வாகத்தை  , அறநிலையத் துறை மேற்கொண்டது. 

மகா சிவராத்திரி தேர்த் திருவிழா 
ஸ்ரீ சைல ஆலயம்: சுமார் இருபது அடி உயர  மதில் சுவற்றின்  வெளிப்புறம் , சிற்பங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் , பார்வதி திருமணம், நடராஜர், கஜ சம்ஹாரம், பாற்கடல் கடைதல் , கண்ணப்பர் சிவபூஜை, கணபதியின் சிவபூஜை, பிக்ஷாடனர், கணபதியின் நாட்டியத்திற்கு அனுமன் குழல் ஊதுதல், மகிஷாசுர மர்த்தனி , லக்ஷ்மி கணபதி முதலிய மூர்த்திகள் இவற்றுள் சிலவாகும். பிராகாரத்தின் எட்டுத் திக்குகளிலும் அஷ்ட திக் பாலகர்களைக் காண்கிறோம். 
ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் 15  ம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரத்தை  கி.பி. 1677 ல்  சத்ரபதி சிவாஜி கட்டினார். பின்னர் மேற்கு கோபுரம், 1966 ல் கட்டப்பட்டது. மல்லிகார்ஜுன சுவாமியின் விமானம் கி.பி. 1230 ம் ஆண்டு காகதீய கணபதி ராஜனின் சகோதரி மைலம்ம தேவியால் கட்டப்பட்டது. கருவறையில் உள்ள ஜ்யோதிர் லிங்க மூர்த்தி சிறிய அளவில் காணப்பட்டாலும் கீர்த்தி மிகவும் பெரிது. விசேஷ நாட்கள் தவிர, அதிக கூட்டம் இல்லாதபோது சுவாமியைத் தீண்ட அனுமதிக்கிறார்கள். 

ஆலயத்தின் முன்புறம் உள்ள ரங்க மண்டபத்தை  விஜய நகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் கட்டினார். இதனுள்  ரத்ன கர்ப்ப கணபதி, பத்ர காளி, வீரபத்திரர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். இம்மண்டபத்தின் முன் புறம் உள்ள வீர மண்டபம், 38 தூண்களோடு கட்டப்பட்டது. ஆனால் தற்போது 16 தூண்களே உள்ளன. நந்தி மண்டபத்தில் நந்திக்கு ( சென கல பசவண்ணா ) கடலை மாலை சமர்ப்பிக்கப்படுகிறது. நந்தியம்பெருமானின் திருவுருவம் காண்போரைக் கவர வல்லது. ஆலய வடகிழக்குப் பகுதியில் சப்த மாதர்களைத் தரிசிக்கலாம். இங்குள்ள ஆழ் கிணறு மேற்கூரையோடு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மற்றோர் ஆழ்கிணறு சுவாமி சன்னதிக்குத் தென்புறம் உள்ளது. சப்த மாதா மண்டபத்தை ஒட்டிய ஆழ்கிணறு, விஷ்ணு குண்டம் எனப்படுகிறது. சுவாமி சன்னதிக்கு வடகிழக்கில் அன்னபூர்ணா சன்னதி உள்ளது. இங்கு யாத்ரீகர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. 

சிவபெருமானின்  மூர்த்தங்களான  பவ, சர்வ, ஈசான்ய, பசுபதி, ருத்ர, உக்ர , பீம, மகாதேவ  லிங்க வடிவங்களையும் தரிசிக்கிறோம். இவற்றோடு, ஜல லிங்கம், சூர்ய லிங்கம்,சந்த்ர லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம்,ஆகாச லிங்கம், மோக்ஷ லிங்கம் ஆகியவற்றையும் தரிசிக்கிறோம். குமார ஸ்வாமியான  முருகன் ஆறு திருமுகங்களோடு தரிசனம் தருகிறார். இவரது சன்னதியை ஒட்டியுள்ள மண்டபத்தை ஆஸ்தான மண்டபம் என்றும் அலங்கார மண்டபம் என்றும் அழைப்பார்கள். இதனுள்  மல்லிகர்ஜுனரின் பக்தைகளான அக்கமஹா தேவி, ஹேமா ரெட்டி மல்லம்மா  ஆகியோரின் திருவுருவச் சிலைகளைக் காணலாம். சுவாமி சன்னதிக்குப் பின்புறம் படி ஏறிச் சென்றால் பிரமராம்பிகையின் சன்னதியை அடையலாம். இந்த அம்பிகையின் சன்னதி,  சக்தி பீடங்களுள் ஒன்று.இதனருகில் சீதா தேவி பிரதிஷ்டை செய்த சஹஸ்ர லிங்கம் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு வடகிழக்கிலுள்ள யாகசாலையில் பௌர்ணமி தினங்களில் சண்டி ஹோமம் செய்கிறார்கள்.

மல்லிகார்ஜுனரின் பின்புறம் ஸஹஸ்ர லிங்க சன்னதி உள்ளது. ராமபிரானால்  பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பர். சுவாமிக்குக் கிழக்கில், அத்தி, அரசு, வன்னி மரங்கள் மூன்றும் இணைந்து காணப்படுகின்றன. தத்தாத்ரேயர் இதனடியில் தவம் புரிந்ததாகக் கூறுவார்கள். 

அருகிலுள்ள ஆலயங்கள்: கோயிலைத் தரிசித்துவிட்டு வெளியில் வந்தால், வீரபத்திரர், கங்காதர மூர்த்தி, கிரிஜா சங்கரர், பசுபதிநாதர் ஆகிய மூர்த்திகளையும், கங்கா- பவானி ஸ்நான கட்டம், கோகர்ண தீர்த்தம், சிவாஜி கோபுரத்தின் அருகிலுள்ள சந்த்ர குண்டம், பாதாள கங்கை, ஆகிய தீர்த்தங்களும், 2 கி.மீ. தொலைவில் சாட்சி கணபதி ஆலயமும் உள்ளன. ஸ்ரீ சைலத்தை தரிசித்ததாகக் கைலாயத்தில் சாட்சி சொல்வதல் இந்தக் கணபதியை சாட்சி கணபதி என்கிறார்கள்.  

இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கில் பஞ்ச தாரைகளாக நீர் வீழ்ச்சிகளும், ஆதி சங்கரர் தவம் செய்த இடம் என்று ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் காட்டி அருளிய இடமும் உள்ளன. ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் வரை மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான (  2830 அடிகள் ) சிகரேசுவரத்தைத்  தரிசித்தபடியே மல்லிகார்ஜுனசுவாமியைத் தியானிப்பார்கள்.  இங்கிருந்தபடியே, ராமபிரான் , மல்லிகார்ஜுனரைத் தரிசித்ததாகச் சொல்வர்.  8 கி.மீ  தொலைவிலுள்ள இச்சிகரத்தின் மேலுள்ள வீர சங்கர சுவாமிக்குப் பக்தர்கள் செக்கில் எள்ளை  ஆட்டி  அதனைப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளுக்கு     இடையிலிருந்து மல்லிகார்ஜுன ஆலய சிகரத்தைத் தரிசிக்கிறார்கள். பாதாள கங்கையில் கலக்கும் பீமன்குள  ஊற்றுக்கு அருகில் பீமேசுவர சுவாமி ஆலயம் உள்ளது. பாதாள கங்கையிலிருந்து பரிசிலில் கிருஷ்ணா நதியில் சென்று அக்க மகா தேவி தவம் செய்த குகையை அடையலாம். அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இஷ்ட காமேசுவரி ஆலயத்தையும் பக்தர்கள் பிரார்த்தனைத் தலமாக வழிபடுகிறார்கள். பரிசிலில் அக்கரை  அடைந்தபின், தத்தாத்ரேயர்  தவம் செய்த கதலீ  வனத்தைக் காணலாம். தியானம் செய்வதற்கேற்ற அமைதியான இடம் இது. 

அடர்ந்த காடுகளிடையே அமைந்த அற்புதத் தலம் ;  அமைதி தேடுவோர்க்கு  ஏற்ற சூழல். புண்ணிய மூர்த்தியைத் தாங்கும் புண்ணிய சிகரங்கள்; கண்ட மாத்திரத்திலேயே பிறவிப்பிணியை நீக்கிடும் தெய்வீக மலைத் தொடர்கள்; இவை அனைத்தும் ஒருங்கே காட்சி  அளிக்கும்   ஸ்ரீசைல   பர்வதத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது அன்பர்கள் சென்று தரிசித்து நலம் பெற வேண்டும்.        
  

2 comments:

  1. Blessed to read the detailed description of Sree Sailam and its glory

    ReplyDelete
  2. Such a wealth of historic detail! Jnanis will smile at the difficulties caused substantially by invaders and also by the decline of sincere patrons, one after the other, which all had to pass like mist at sunrise because of the will of the Lord. Devoted bhaktas would be affected to tears that the all powerful too had to go through such tumultuous times. He knows how to look after His shrines and is always able to find devoted patrons. This has happened to the famous Vaishnavite shrine of Srirangam. And to a number of smaller and bigger temples. The Infinite's sankalpa is ultimate and is beneficial when devotees pray with sincerity.

    ReplyDelete