Friday, April 5, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் ஸ்ரீ சைலம் பகுதி 2

மலைகளுக்கு நடுவில் வளைந்து செல்லும் பாதை 
கர்நூலிலிருந்து  ஸ்ரீசைலம்  செல்லும் வழியில் மலைப் பாதைகளில் பயணிக்கிறோம். இரண்டு பக்கமும் மூங்கில் மரக்காடுகள். மைல் கணக்கில் அவை நம்மைத்  தொடர்ந்து வருகின்றன. இத்தனை அடர்ந்த மூங்கில் காடுகளை  அதுவரையில்  பார்த்திராததால், வியப்பின் எல்லைக்கே செல்ல வேண்டி இருந்தது.  அவ்வப்போது  தோன்றும் குரங்குக் கூட்டங்கள்  நம்மைக் குதூகலிக்க வைக்கின்றன. புலி, மான் ஆகியவற்றின்  படங்களை வைத்திருக்கிறார்கள்.  நமது கண்ணில் மட்டும்  அவை தென்படாதது துரதிருஷ்டமே. ஒருவேளை இரவில் அவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கலாம்.  மகாசிவராத்திரியை முன்னிட்டுப் பல பக்தர்கள்  தங்களது தலைகளில் இருமுடி சுமந்து கொண்டு  நடந்தே மலை ஏறிச் செல்வதைப் பார்க்கிறோம்.  ஒருவேளை அவர்கள் வீர சைவர்களாக இருக்கலாம். பிரார்த்தனை செய்துகொண்டு  இப்படி நடந்தே  வருகிறார்கள்.  காட்டுப் பாதையாக இருப்பதால் திருடர்கள் பயமும் உண்டு என்று ஒருவர்  கூறினார்.  திருடர்களுக்கோ, கொடிய விலங்குகளுக்கோ  அஞ்சாமல்  கால் நடையாகவே மலை ஏறும்  பக்தர்களை எப்படிப் புகழ்வது ? 

வழியில் கடக்கும் ஒரு ஆறு 
ஸ்ரீ சைலத் தலபுராணம் தரும் செய்திகளையும் நாம் இங்கே சிந்திக்கலாம். முன்  ஒரு காலத்தில் சிலாத முனிவர் என்பவருக்கு இரு குமாரர்கள் சிவனருளால் பிறந்தனர். அவர்கள்  நந்தி என்றும் பர்வதன் என்றும்  அழைக்கப்பட்டனர். அவ்விருவரும் வயது வந்தவுடன் சிவனை நோக்கித் தவம் புரிந்தனர்.  தான் மலை வடிவாக ஆகி அதன் மீது இறைவன் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் நந்தி பெற்றார். நந்தி பர்வதமாக ஆன இடமே, ஸ்ரீ சைலத்திலிருந்து சுமார்   200  கி.மீ.தொலைவில் உள்ள நந்தியால் என்ற புனிதமான தலம் .  

அடர்ந்த காட்டுப் பிரதேசம் 
பர்வதன் பெருமானிடம் ஒரு வரம் வேண்டிப் பெற்றான். அதாவது, பர்வத மலையாகத் தான் ஆகவும், அதன் மீது பர்வத லிங்கமாகப் பெருமான் எழுந்தருள வேண்டும் என்பதே அது. அந்த சிகரத்தைத் தரிசிப்பவர்கள் முக்தி பெற வேண்டும் என்றும் எல்லா தீர்த்தங்களும் இங்கு சன்னிதி கொள்ள வேண்டும் என்றும்  வேண்டினான். அதன்படி ஸ்ரீ பர்வதம் எனவும் ஸ்ரீ சைலம் எனவும் இத்தலம் அழைக்கப்படலாயிற்று. தேவாரத்திலும் இத்தலம் திருப்பருப்பதம் என்றே குறிப்பிடப்படுகிறது.

கோயிலும் மதில் சுவரும் 
சந்திரவதி  என்ற அரச குமாரி  ஸ்ரீசைல நாதரை மல்லிகைப் பூக்களால் அர்ச்சித்து பூஜை செய்து வந்தபடியால் சுவாமிக்கு மல்லிகார்ஜுனர் என்ற பெயர் வந்தது. மருத மரம் (அர்ஜுன விருக்ஷம்)ஸ்தல விருக்ஷமானதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். வசுமதி என்ற பக்தியின் வேண்டுகோளால் ஸ்ரீ பர்வதம் என்ற பெயர் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.

 உலகை வலம் வந்ததற்கு சமமாக உமாமகேசுவர்களை முதலில் வலம் செய்த  விநாயகப் பெருமான் அவர்களது ஆசி பெற்றதோடு, சித்தி, புத்தி ஆகிய இருவரையும் மணந்தார்.  மயில் ஏறிச் சென்று உலகை நொடிப் பொழுதில் வலம் வந்த குமார சுவாமியான முருகன் கோபம் கொண்டு அவ்விடத்திலிருந்து நீங்கி, கிரௌஞ்ச  மலையைச் சென்றடைந்தார். முருகன் சமாதானமாகாமல் அங்கே தங்கி விடவே, தெய்வ தம்பதியரும் அதற்கு அருகிலுள்ள ஸ்ரீ சைலத்தில் தங்கி விட்டனர். 

மதில் சுவற்றில் சிற்பங்கள் 
சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது, அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி, அரசனை வீர சிவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு, அவனை சந்திக்கச் சென்றாள் . அரசனின் தவறான  செய்கையால் மனம் நொந்து, தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள். ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்க மகா தேவியின் திருவுருவச் சிலை பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. 

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ராமாபுரம் என்ற ஊரில் 14 ம் நூற்றாண்டில் வசித்து வந்த  நாகி ரெட்டி- கௌரம்மாள்  இருவரும் பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ சைலம் வந்தனர். இறைவனருளால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.  அக்குழந்தை மல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். வயது வந்தவுடன் அவளை ,அருகிலுள்ள சித்தாபுரத்தைச் சேர்ந்த பரமா ரெட்டி என்பவனுக்கு மணம் செய்து வைத்தனர். புகுந்த வீட்டுக்கு மல்லம்மா வந்தவுடன் அங்கு பசுக்களும் விளைச்சலும் பல மடங்கு அதிகரித்தன. ஏழைகளுக்கு மல்லம்மா உதவி செய்து வந்தாள் . இதைக் கண்டு பொறாமை  கொண்ட உற்றார் உறவினர்கள், அவளது கணவனிடம் சென்று   வீண் பழி சுமத்தி அவனைக் கோபமுறச் செய்தார்கள். அதை உண்மை என நம்பிய கணவனும், மல்லம்மாவைக் கொன்று விட நினைத்து அவளிடம் சென்றான். ஆனால் அவளோ மெய் மறந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு தனது செயலுக்கு வருந்தினான். மல்லம்மாவும், தவறு செய்த அனைவரையும் மன்னித்து, அனைவருக்கும் சிவ மகிமையைப் போதித்து, கடைசியில் பெருமானுடன் ஐக்கியம் ஆனாள்.  ஸ்ரீ சைல ஆலயத்தில் பின் பிராகாரத்தில் மல்லமாவின் பசுத் தொழுவம் இருக்கிறது. அருகில் மல்லம்மாவின் விக்கிரகமும் இருக்கிறது. 

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் -  சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குலகுருவான ரேவண சித்தர்  ஒருநாரத்தம் பழத்தைக் கொடுத்து, சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே  செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா  எனப் பெயரிட்டனர். அச் சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித்  தன் பெயர்  மல்லையா என்றும் தான்  மிகவும் பசியோடு இருப்பதாகவும் கூறவே, ஸித்தப்பா  ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும்  பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது, அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி, " இவரே மல்லையா " என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்தபோது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் , ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது.  பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா , அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் , தான் வெட்டியகுளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர்  ஆலயம் எழுப்பப்பட்டது.  

சிவபெருமானை மணக்க விரும்பிய ராஜகுமாரி ஒருவள்  இறைவனது  ஆணைப்படி ஒரு வண்டைப் பின்தொடர்ந்து சென்று ஸ்ரீ சைல காட்டுப் பகுதியை அடைந்தாள். அங்கு காட்டு வாசிகள் அவளுக்கு உணவு அளித்தனர். அவள்  கிழ வடிவில் வந்த பெருமானை  மணம் செய்து கொண்டாள். மலை வாசிகள் தங்கள் வழக்கப்படித்   திருமண விருந்து கொடுத்தனர். அதனை ஏற்காமல் இறைவன் அங்கிருந்து கிளம்பும்போது  மல்லையா என்று ராஜகுமாரி பலமுறை அழைத்தும் பலன் இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த ராஜகுமாரி, கிழவரைப் பார்த்து லிங்க வடிவிலேயே இங்கு தங்கி விடுக என்றவுடன் இறைவனும் அப்படியே ஆனார்.  அதைக் கண்ட பார்வதி, வண்டைப் பின் தொடர்ந்து வந்த நீ வண்டாகப் போவது என்று ராஜகுமாரியைச் சபித்தாள். ஸ்ரீசைலத்தில் அம்பாளுக்குப் பிரமராம்பிகை என்ற பெயர் வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. ( பிரமரம் என்பது வண்டைக் குறிக்கும் சொல் ) 

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம்  பாலித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விடவே, சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி, "அஞ்சாதே, உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக "  என்று அருளினார்.  வீட்டிற்குள் சென்ற கேசப்பா, பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு, திருவருளை வியந்தவனாக, அடியார்களுக்கு அன்னம் பாலித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம், அடிகேச்வரம்  எனப்படுகிறது. 

ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ஒரு கயிற்றைக் கொடுத்து, அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். துயில் நீங்கிக் கயிற்றைக் கண்ட சிற்பி, அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது, ஒரு நந்தி  பாறைகளிடையே சிக்கவே, திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான் என்று  சொல்வார்கள். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம்  அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.  

1 comment: