Sunday, May 27, 2018

ஐயர் மலை - தொடர்ச்சி

மலையடிவாரம் 
                                                    ஐயர் மலை (தொடர்ச்சி)

                                                            சிவபாதசேகரன் 


நைமிசாரண்ய முனிவர்கள் கேட்குமாறு சூத மாமுனிவர் கூறலுற்றார்: "  முன்னாளில் வாயு பகவான் தன் வலிமையால் மேரு மலைச் சிகரங்களைப் பிடுங்கிய குற்றம் நீங்குவதற்காக இரத்தின கிரியை அடைந்து, தன் பெயரினால் ஒரு தீர்த்தம் அமைத்து, நாள் தோறும், மல்லிகை, ஜாதி, மகிழ்,குருந்தம், குவளை, ஆகிய புஷ்பங்களாலும், சண்பகம்,வில்வம் ஆகியவற்றாலும் இரத்தினகிரீசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வந்தான்.  " தபோவாய "  என்று தொடங்கும் மந்திரத்தை உச்சரித்தபடி வாயு தீர்த்தத்தில் நீராடி, சிவபிரானையும், தேவியையும் வழிபட்டு வந்தான். அவ்வாறு வழிபட்டது துலா மாத பௌர்ணமி தினமாகும். ஒருநாள் பூஜை முடிவில் கைகளைச்  சிரத்தின் மீது கூப்பியவாறு, ஆனந்தக்கண்ணீர் மல்க, " தேவேச சம்போ, கங்காதரா,சங்கரா, தேவரீரது திருவடிகளை ஒருபோதும் மறவேன். வேதப்பொருளே, க்ஷேத்ரங்களுக்கு அதிபதீ , எனது பிழை பொறுத்து நற்கதி தர வேண்டும் " என்று பிரார்த்தித்தான். அவனது பக்திக்கு இரங்கிய பெருமானும் உமாதேவியுடன் காட்சி அளித்து, வாயு தேவன் உலகெங்கும் வியாபித்து, ஒவ்வொரு சரீரத்திலும் பிராணன்,அபானன், வியானன், உதானன், சமானன், நாகன்,கூர்மன், கிருகரன், தேவதத்தன் ,தனஞ்சயன் என்ற பத்துப் பெயர்களோடு இருக்குமாறு அருள் பாலித்தார். ஐப்பசிப் பூரணையில் வாயு தீர்த்தத்தில் நீராடுவோர் பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று நற்கதி பெறுவர். எனவும் வரமளித்தருளினார். 

வாயு பகவான் பழி நீங்கப்பெற்ற வரலாற்றை நாரத முனிவர் மூலம் அறிந்த ஆதிசேஷன், தானும் மேருவை அசைத்த குற்றத்தில் ஈடுபட்ட பாவம் நீங்குமாறு, பூலோகத்தை அடைந்து, மேற்குக் கடலோரம் உள்ள கோகரணம், சங்குகரணம், பிரபாசம்,அனந்த சயிலம், சோமேசுவரம் , கபிலேசுவரம் ,கேரள நாட்டைச் சார்ந்த சகிய மலை,ஸ்ரீ கண்டம், வில்வாரண்யம், தர்மேசுவரம், வியாசாசிரமம்,சுசீந்திரம் , அவினாசி,பவானி கூடல், வராகி கூடல், சுவேதாசலம், கருவூர், வாலீசுவரம் , அகஸ்தீசுவரம், திருவையாறு, அறப்பளீசுவரம், அனலேசுவரம், ஈங்கோய் மலை, கதம்ப வனம், சங்கராசலம் ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர்  இரத்தினகிரியை அடைந்து அங்கு தவம் செய்து கொண்டிருந்த வியாசர்,அத்திரி, பாரத்துவாஜர், ஜமதக்கினி, காத்தியாயனர், அதிசிருங்கர், மயூரமுகர், ஆகிய முனிவர்களை வணங்கி, குங்கிலிய மரம் ஸ்தாபித்து அதனருகில் தன பெயரால் ஒரு தடாகத்தையும்  ஏற்படுத்தி, " நமோஸ்து ஸர்பேப்யோ " எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து, தீர்த்தத்தின் நடுவில் சங்கநிதி முதலாகிய நதிகளை ஆவாகித்து,  "ப்ரம்மஜக்ஞானம் : எனத் துவங்கும் மந்திரத்தையும், பஞ்சாக்ஷரத்தையும் ஆயிரத்தெட்டு முறை ஜபித்து, சூரியன் ஸ்தாபித்த கங்காசல  தீர்த்தத்தில் நூற்றெட்டுக் குடங்கள் கொண்டுவந்து பெருமானுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை,நிவேதனம் ஆகியன செய்து, பலமுறை நமஸ்கரித்து  கரங்களைக் கூப்பியவாறு, " உலக நாயகனே, யானை உரி போர்த்த பரம்பொருளே, பிறை சூடிய பெருமானே, அர்த்தநாரீசப் பெருமானே, சிறியேனது குற்றம் பொறுத்தருளுவீராக. " என்று பிரார்த்தனைகள் செய்தான். இதனால் மகிழ்ந்த ஈசனும், " ஆதிசேஷனே, உனது குற்றத்தை நாம் நீக்கி அருளினோம். நீ பரிசுத்தனாவாய் " எனத் திருவாய் மலர்ந்து அருளினார். 

சூதர் மேலும் கூறினார் " சிவத்துரோகமானது இத்தலத்தில் மாத்திரமே நீங்கும். மந்திரங்களில் காயத்திரி போன்று , மேருவின் ஐந்து முடிகளுள் இரத்தினகிரி சிறந்ததாகும். பிற இடங்களில் செய்த பாவங்கள் இங்கு வந்தால் நீங்கும். ஆனால் இங்கு செய்யும் பாவம் இங்கு மட்டுமே நீங்கும். இங்கு நந்தவனம் அமைப்போரும், விளக்கிடுவோரும், சிவசாரூப்பியம் பெறுவர். இத்தலத்தைச் சிந்தித்தாலே,முக்தி பெறலாம். புரட்டாசி சுக்கில பக்ஷ சதுர்த்தசியில் நாக தீர்த்தமாடினால்  சிவாபராதம் நீங்கலாம். சூரிய கிரகண காலத்தில் சூரிய புஷ்கரணியில் ஸ்நானம் செய்தால் குஷ்டம்,அபஸ்மாரம் போன்ற நோய்கள் நீங்கும். இங்கு தில தர்ப்பணம் செய்தால் நீண்ட காலம் கயிலையில் வாழலாம் ." என்றார். 

உதயாசலம் அருகில் மந்தேகம் என்ற தீவில் இருந்த தவ வலிமை பெற்ற அரக்கர்கள், உதயத்தில் சூரியனோடு போர் புரியும்போது சூரியனால் அவர்களை வெல்ல இயலவில்லை. அசரீரி வாக்கின்படி, தேவர்,கருடர், காந்தருவர்,கின்னரர்,கிம்புருஷர், முனிவர்கள் ஆகியோர் வழிபடும் இரத்தினாசலத்திற்குச்  சென்று வழிபட வேண்டி, அசனி என்பவனை சூரியன் அங்கு அனுப்பித்  தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சுவாமிக்கு பூஜைகள் நடத்துவித்தான். அதற்கு மகிழ்ந்த இறைவனும், அவ்வரக்கர்களை வெல்லும் வலிமையை சூரியனுக்கு அளித்தருளினார். சூரியனால் உண்டாக்கப்பெற்ற சூரிய தீர்த்தத்தில் சித்திரை பௌர்ணமியன்று காலையில்" சசித்திரம் " எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறலாம்.  அந்த தினத்தில் சூரியன் உச்சி வேளையில் சுவாமியை பூஜை செய்வது ஆண்டு தோறும் நடை பெறுகிறது. சூரியதீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தால் எல்லா நலன்களும் பெற்று இறுதியில் சிவபிரானது திருவடி நீழலை அடையலாம். அயனம்,விஷு, கிரகண புண்ணிய காலங்களில் இதில் நீராடினாலும் சிவ சன்னதியில் தூப தீபம் இட்டாலும் எல்லா ஐசுவர்யங்களையும் பெறலாம். அங்கு செய்யப்படும் பித்ரு காரியங்களால் பித்ருக்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள். 

இமயமலையின் வடபுறம் உள்ள புஷ்ப பத்திரா நதிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்திய முனிவரைத்  தன்னுடன் தீர்த்த யாத்திரைக்கு வருமாறு நாரதர் வேண்டவே , இருவருமாக புறப்பட்டு, காஷ்மீரம்,பிரபாசம்,வில்வாரண்யம்,கேதாரம்,காசி, பிரயாகை,அவந்தி,கோமதி ஆகிய தலங்களைத் தரிசித்தனர். பின்னர் குசல க்ஷேத்திரத்தைத் தரிசிக்க வேண்டி நாரதர் அகத்தியரிடம் விடை பெற்றுச் சென்றார். பின்னர்  பல சிவக்ஷேத்திரங்களையும் தரிசித்து விட்டு , விந்திய பர்வதத்தில் ஒரு பிரேதத்தைக்கண்டு அதன் வரலாறை அறிந்து கருணை கொண்டவராய், நற்கதி உண்டாக்க வேண்டும் என்று அப்பிரே தத்துடன் அகத்திய முனிவர் கடம்ப வனம் அடைந்தார். அங்குக் காவிரி நீரால் அதன் மீது தெளித்தவுடன், அப்பிரேதம் திவ்விய சரீரம் பெற்று, முனிவரை வணங்கிவிட்டுக் கடம்பவன நாதரையும் அம்பிகையையும் துதித்துப் பின்னர் விமானமேறிக் கயிலாயத்தை அடைந்தது. 


கடம்ப வனத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபிரானை  அகத்தியர் இடைவிடாமல்  சூரிய அஸ்தமனத்திலிருந்து பூஜை செய்து வந்தார். மறு நாள் காலை உதயத்தின்போது அவருக்கு அருள் செய்யும்பொருட்டு அவர் முன் காட்சி அளித்தார். அதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்த முனிவர் பெருமானைப் பலவாறு தோத்திரம் செய்தார். பிறகு இரத்தினகிரியை அடைந்து, மேற்புறத்தில் தனது பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கி, கங்கை முதலிய எல்லாத் தீர்த்தங்களையும் அதில் ஆவாகனம் செய்தார். அதில் தானும் ஸ்நானம் செய்துவிட்டு மத்தியான காலத்தில் வேத மந்திரங்களால் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நிவேதனங்கள் செய்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு,    " கருணைக் கடலே, சர்வலோக நாயகா, இரத்தின கிரீசனே, உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம். " என்று துதித்தார். அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் சுவாமி அவருக்குக் காட்சி அளித்தவுடன், முனிவர் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, " பிரபோ, வேத ரகசியமான ஸ்ரீ  பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை அடியேனுக்கு உபதேசித்து அருள வேண்டும். " என்று பிரார்த்தனை செய்தார். 


அராளகேசி அம்பிகையோடு சர்வாலங்கார சுந்தரராகக் காட்சி அளித்த பெருமான், அகஸ்தியரின் சிரத்தின் மீது தனது திருக் கரங்களை வைத்து, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளினார். அன்று முதல் அகத்தியர் ஜீவன் முக்தரானார். பின்னர் பெருமானை வணங்கி, " தேவரீர் மத்தியான காலத்தில் அடியேனுக்குத் தரிசனனம் தந்ததால் தங்களுக்கு மத்தியான சுந்தரர் என்ற திருநாமம் வழங்கப்பெற வேண்டும். இன்று முதல் பகலில் தரிசனம் செய்வோர் முக்தி பெற வேண்டும். "  என்ற வரம் வேண்டவே சுவாமியும் அவ்வாறே ஆகுக என வரமளித்தருளினார். கார்த்திகை ஞாயிறுகளில் அகஸ்திய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, " உதித்தம் " எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தால் கொடு நோய்கள் அனைத்தும் நீங்கும். அம்மாதத்து செவ்வைக் கிழமைகளில் உதயத்தில் கோமயத்தைச் சிரத்திலிட்டு, : "அக்கினி முர்தா " என்ற மந்திரத்தை உச்சரித்து இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் வறுமை நீங்கிப் பெரும் செல்வம் பெறலாம். 


வீரசேனன் என்ற சூரிய குலத்து அரசன் செங்கோல் செலுத்தி வந்த காலத்தில் அவனைக் காண ஒரு கபாலிகன் வந்தான். அரசனை  உலோகாயுத மார்க்கத்தில் செலுத்தினான். அதன் விளைவாக வைதீகர்களையும்,அறிவுரை சொல்லும் மந்திரிககையும் புறக்கணித்தும்,ஆலய பூஜைகள் நடத்தத் தவறியும் அக்கிரமங்கள் செய்ததால் நாட்டில் மழை பெய்யவில்லை. வேதங்களும்,சத்தியமும், தவமும், அச்சமும்,கற்பும் இருந்தால் தானே நாடு வளமடையும் ! இறைவனது பூஜை இல்லாது போகவே நாடு சுடுகாடு போல் ஆயிற்று. அரசனும் சின்னாட்களில் நோயால் வருந்தி இறந்தொழிந்தான். அவனை யமதூதர்கள் யமனது சொற்படி நரகத்தில் தள்ளினார்கள். அதன்பிறகு கண்டோர் அஞ்சும்படிப் பிரேத வடிவில் விந்திய மலையில் பசியோடு கிடந்தான். 
தனது தீவினையால் இது விளைந்ததே என துக்கப்பட்டான். அப்போது அங்கு உரோமச முனிவர் வருகை தந்தார். அவரைக் கொன்று தின்னும் எண்ணத்துடன் அவரை நோக்கி விரைந்து ஓடினான். ஆனால் முனிவரது தவத் தீ அவனை அருகில் செல்ல முடியாதபடி தடுத்தது. பிழைக்கு வருந்திய அவன்பால் கருணை கொண்ட முனிவர், " கண்டவுடனே பாவங்கள் நீங்கும் இரத்தின கிரிக்குச் சென்றால் உனது பிரேத வடிவம் நீங்கப் பெறுவாய் " என்றார். அதன்படி அவனும் அங்கு சென்று உரோமச தீர்த்தத்தில் மூழ்கி, " யோ ப்ரம்ம "  எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தான். பின்னர் இரத்தினாசலப் பெருமானையும், சுரும்பார்குழலி அம்பிகையையும் தரிசித்தான். நிவேதனங்கள் செய்து, உள்ளன்புடன் பஞ்சாக்ஷர ஜபம் செய்தான். அப்போது அவனுக்கு இரங்கிய இறைவன், அவன் முன்னே காட்சி அளித்தருளினார். உடனே மன்மதனுக்குஒப்பான சரீரம் பெற்றான். அதுமுதல் அந்த தீர்த்தம் பிரேத மோக்ஷ தீர்த்தம் எனப்பட்டது. இதில் ஸ்நானம் செய்தால் பிரேதத்தன்மை ஒருபோதும்  ஏற்படாது. அவனது வம்சத்தவர்களும் மோக்ஷம் பெறுவர். 

பாரத்வாஜ முனிவரும் இங்குத் தவம் செய்து தீர்த்தம் உண்டாக்கினார். வராக வடிவெடுத்த விஷ்ணுவும் அக்னி திசையில் தீர்த்தம் ஏற்படுத்தினார். அந்த விஷு தீர்த்தத்தில் " விஷ்ணோர் லலாட " எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்து ஸ்நானம் செய்பவரது பிருக்கள் திருப்தி அடைவார்கள். இம்மலையின் வடபுறம் துர்க்கா தேவி உண்டாக்கிய கன்யா தீர்த்தம் உள்ளது. அங்கு அவள் ,மகிஷனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றாள் .  மகா நவமியில் அதில் நீராடினால் சர்வ சித்தி உண்டாகும். சிவபெருமான் அருளிய வாளால் மகிஷனது உயிரைத் துர்க்கா தேவி போக்கியதால் வாட் போக்கி என்று பெயர் வந்தது என்று கூறுவதும்  உண்டு. 

ஆரிய தேசத்து மன்னன் ஒருவன் தனது மணிமுடி காணாமல் போகவே அதைத் தேடிப் பல ஊர்களுக்கும் போய்விட்டு முடிவாக இங்கு வந்தான். அப்போது வயதான வேதியன் ஒருவன் இரத்தினகிரிப் பெருமானிடம் அது இருக்கிறது  எனக் கூற, மன்னனும் மலை மீதேறி சன்னதியை அடைந்தான். அப்போது ஒரு அந்தணன் வடிவில் தோன்றிய இறைவன், காவிரி நீரால் இங்குள்ள கொப்பரையை நிரப்பினால் மணி முடி கிடைக்கும் என்று கூறவே அவ்வாறு செய்யலானான். ஆனால் எவ்வளவு முயன்றும் கொப்பரை நிரம்பவில்லை. கோபமுற்ற மன்னன் அவ்வந்தணன் மீது வாளை  வீசவே, அந்தணன் சிவலிங்கத்தில் மறைந்து விட்டான். இலிங்கமூர்த்தியில் இருந்து  இரத்தம் பெருகியதைக் கண்ட மன்னன் வாளால் தன உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். அப்போது இறைவன் அங்குத் தோன்றி அரசனது வாளை விலக்கி (போக்கி )மணிமுடியைத்  தந்து  அருளினான். இதனால் ஏற்பட்ட தழும்பு சுவாமியின் திருமுடியில் இன்றும் உள்ளது. ஆரிய மன்னனின் உருவச் சிலையையும் கோயிலில் காணலாம். 

காஞ்சியைச் சேர்ந்த ஆயர் ஒருவர் தன் தங்கைக்கு மகப்பேறு வேண்டி இத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை நிறைவேறியவுடன்  தன்  தலையைக்  காணிக்கையாக்கினார். அவரது வைராக்கியம் காரணமாக அவரை வைரப் பெருமாள் என்கின்றனர். மலைக்குச் செல்லும் வழியில் இவரது சன்னதியும் அதனருகில் வேப்ப மரமும் உள்ளன. மலைக்காவல் தெய்வமான இவருக்கு இரத்தினகிரீசுவரருக்குத் தீபாராதனை ஆனவுடன், தீபாராதனை செய்கிறார்கள். 

குளித்தலையிலிருந்து இடையர் ஒருவர் தினமும் இங்கு வந்து ஒரு குடம் பசும் பாலை அபிஷேகத்திற்கு அளித்து வந்தார். ஒருநாள் அப்பால் குடத்தை ஒரு காக்கை கவிழ்த்து விடவே, இந்த இடையர் மனம் வருந்தி, உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அப்போது இறைவன் அங்குத் தோன்றி, " அன்பனே, வருந்த வேண்டாம். இம்மலை எனது வடிவே யாகும். அதன் மீது சிந்திய பால் என்னை அபிஷேகித்தது போலாகும் " என்றருளி அக்காக்கையை எரித்தார். அது முதல் இங்குக் காக்கைகள் பறப்பதில்லை. காகம் அணுகா மலை என்றும் பெயர் வந்தது.
சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் ஜோதிர் லிங்கமாகவும், மலை  முழுவதும்  மாணிக்க மயமாகவும் காட்சி அளித்து ஒரு பாறையின் மீது பொன்னை அளித்தான் என்று தல வரலாறு கூறுகிறது. அப்பாறை, " பொன்னிடும் பாறை " எனப்படுகிறது. சித்திரை பிரமோற்சவத்தில் ஐந்தாம் நாள் விழாவில் இவ்வரலாறு இடம் பெறுகிறது


துர்க்கைக்கு தோஷம் நீங்கியதால் இரு பாறைப் பிளவுகளும், அருகில் வாள் போன்ற பாறையும்,சப்த கன்னிகைகளும் இருப்பதை மலையில் பார்க்கலாம். கன்னியர் எழுவர் பலத்த மழைக்கு ஒதுங்க இடமின்றித் தவித்தபோது இறைவன் இங்கு பாறை இடையே குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தித் தஞ்சம் அளித்தார் என்றும் கூறுவர். 

பூம்புகாரை நீங்கிய பதினோரு செட்டிமார்கள் இங்கு வந்து பொன்னிடும் பாறையருகே அமர்ந்து அதனைப் பிரிக்க முற்பட்டபோது அது பன்னிரண்டு பங்காகப் பிரியக் கண்டு அதிசயித்து அப்பன்னிரண்டாவது பங்கை இறைவனுக்கே அளித்தனர். எனவே பன்னிரெண்டாம் செட்டியார் என்று இறைவனை வழங்குவர். 

மன்னர் வழிபட்டதால் சுவாமிக்கு இராஜ லிங்க மூர்த்தி எனப் பெயர் வந்தது. இம்மலையில் பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறாது என்பர். வறண்ட காலங்களில் சகுனக் குன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் மழை பெய்வதாகக் கூறுவர். 


அபிஷேக நீர் வருகை 
ஒவ்வொரு நாளும் 8 கி,மீ. தொலைவிலுள்ள காவிரி ஆற்று நீரைக் குடங்களில் நிரப்பித் தலை மீது சுமந்து  வருகின்றனர் பன்னிரண்டாம் செட்டியார் மற்றும் சோழிய வெள்ளாளர் மரபினர்.

சிவலிங்கப்பெருமான் மீது அபிஷேகித்த பால் சில மணிகளில் தயிராக மாறி விடுகிறது. பிற தெய்வங்களுக்கு அபிஷேகிக்கப்படும் பால் அவ்வாறு தயிராவதில்லை. 

சித்திரையில் சுவாமிக்கு நேர் எதிரில் உள்ள நவத்  துவாரங்கள் வழியாக சூரியன் தனது கிரணங்களால் பெருமானை வழிபடுகின்றான். 

மாதந்தோறும் பௌர்ணமியன்று பக்தர்கள் மூலிகைகள் நிறைந்த இந்த கிரியை வலம் செய்கின்றனர்.  . அவ்வாறு வலம் வரும்போது காட்டுப் பிள்ளையார் கோயிலருகில் நின்று கொண்டு மாணிக்க மலையனே என்று உரக்க அழைத்தால் எதிரொலி கேட்கிறது. 

இம்மலையே சிவவடிவம். " பெருமானே, எங்களது எத்தனையோ பிழைகளைப் பொறுத்தருளும் தேவரீர் இம்மலையின் மீது பாதம் படுமாறு ஏறி வரும் பிழையையும் பொறுத்தருளுவீராக" என்று நெஞ்சகம் குழைந்து சிவ நாமாக்களை ஜபித்தபடியே  மலை ஏறி, மேற்கு நோக்கிய சிவ சன்னதியை அடையலாம். சுவாமி  உயர்ந்த பாணத்துடன் அற்புதக் காட்சி அளிக்கிறார். வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசித்து வரலாமே.

                                                                 மரகதாசல மகிமை அடுத்த பதிவில் 

Tuesday, May 22, 2018

ஐயர் மலை எனப்படும் திருவாட்போக்கி


                                               இரத்தினகிரி மகாத்மியம் 

                                                               சிவபாதசேகரன் 

இரத்தினகிரி என்னும் ஐயர் மலை குளித்தலைக்கு அருகிலுள்ள சிற்றூர். கடல் மட்டத்திலிருந்து 1178  அடிகள் உயரத்தில் உள்ள சிவாலயத்தை அடைய 1017 படிகள் ஏறவேண்டும். வழி நெடுகிலும் உயர்ந்த பாறைகள், மூலிகைச் செடிகள், குரங்குக் கூட்டங்கள் என்பவற்றைப் பார்த்துக் கொண்டே மேலே சென்றால் ரத்னகிரீசுவரரின் ஆலயத்தை அடையலாம். 

திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரப் பதிகம் ஒன்று இத்தலத்தின் பேரில் உள்ளது. அதில் இத்தலத்தின் பெயர் வாட்போக்கி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலதூதுவர் வரும் முன்னம் வாட்போக்கியை வழிபடுங்கள் என்று அப்பர் பெருமான் அதில் உபதேசிக்கிறார்.

நாடி வந்து நமன் தமர் நள்ளிருள் 
கூடி வந்து குமைப்பதன் முன்னமே 
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை 
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே.
  
என்பது அத்திருப்பதிகத்தில் ஒரு பாடல். 


சோழ,பாண்டிய,சாளுக்கிய,விஜயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் சுமார் 50 உள்ளன. திருச்சிராப்பள்ளியிலிருந்து குளித்தலை வழியாக ஐயர் மலையை அடையலாம். மலைக் கோயிலாக இருப்பதால் காலை பத்து மணிக்கு மேல் தான் திறக்கிறார்கள். உச்சிக்கால பூஜை விசேஷமாகக் கருதப்படுவதால் அந்த நேரத்தில்தான் பெரும்பாலானோர் வருகிறார்கள். 



தல வரலாறு: 

ஒரு சமயம், நைமிசாரண்யத்தில் தவத்தில் சிறந்த முனிவர்கள் சிவபெருமானைக் குறித்துத் தியானித்துக் கொண்டு இருக்கும்போது  தவசிரேஷ்டராகிய சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய முனிவர்கள், " முனிவர் பெருமானே, தாங்கள் இங்கு எழுந்தருளிய போதெல்லாம் பல ஸ்தலங்களின் வரலாறுகளைக் கூறி அருளினீர்கள். ஒரு காலத்தில் ஆதி சேஷனுக்கும் வாயுவுக்கும் நிகழ்ந்த போரில் மேரு மலையின் சிகரங்கள் பலவிடங்களில் வீழ்ததாகக் கூறினீர்கள். அவ்வாறு அவை வீழ்ந்த இடங்கள் என்ன என்பதையும் அவற்றின் சிறப்பையும் எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் " என்று பிரார்த்தித்தார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்த சூத முனிவர், " யாராலும் சொல்ல முடியாத பெருமையை உடைய அத்தலங்களைப் பற்றி யான் அறிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன் " என்றார். 

" பாண்டிய நாட்டில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அகஸ்தியரால் வழிபடப்பெற்ற நீலாசலம் என்ற தல்ம் உள்ளது. அங்கு வில்வ மர  நீழலில் எழுந்தருளியிருக்கும் பரமேசுவரனுக்கு ஈசான திசையில் ஓர் மலை இருக்கிறது.  காவிரியின் மேற்கரையில் பூமிக்குள் ஒரு பாகம் அழுந்தியபடி சுவேதாசலம் என்ற மலை உள்ளது. அங்கு தேவ தீர்த்தமும் வன்னி வ்ருக்ஷமும் உள்ளன. இங்கிருந்து மூன்று யோசனை தொலைவில் காவிரியின் தென்புறத்தில் இரத்தின கிரி என்ற மலை உள்ளது. அங்கு மகிமை வாய்ந்த வேப்ப விருக்ஷமும் உள்ளது. தேவேந்திரனுக்கு  சாபம் நிவர்த்தி ஆன தலம் அது. மேலும் காவிரியின் வடகரையில் புளிய விருக்ஷத்தொடு கூடிய மரகதாசலம் என்ற மலையும் இருக்கிறது. இவையன்றிக் கந்த நதிக் கரையில் குண்டிகாசலத்தில் வன்னிகர்ப்பம் என்ற ஸ்தலம் இருக்கிறது. இவற்றுள் இப்போது உங்களுக்கு,  நினைத்த மாத்திரத்தில் எல்லாப் பாவங்களையும் நீக்கும் இரத்தினாசலத்தின் பெருமைகளை ஒருவாறு சொல்கிறேன் " என்றார். 

" இரத்தினகிரீசுவரரைத் தரிசித்த அளவில் எல்லாப் பாவங்களும் விலகும்.இம்மலை பூமியில் விழுந்த வேகத்தால் தரைக்கு உள்ளே ஒரு பாகம் அமிழ்ந்து இருக்கிறது.இது பதிராறு யோசனை உயரமும் மூன்று யோசனை அகலமும் கொண்டது. இங்கு மகிமை வாய்ந்த தேவ தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் உள்ளன. இரத்தின லிங்கம் உமா தேவியால் பூஜிக்கப்பட்டது. இங்கு எட்டு தீர்த்தங்கள் உள்ளன. மலை உச்சியில் தேவ தீர்த்தம் உள்ளது. என் போன்றவர்களால் அதன் பெருமை சொல்லுவது மிகக் கடினம். முனிவர்கள் பலர் இங்குக் கடும் தம் செய்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாக்ஷரமே இம்மலை வடிவு என்பார்கள். வேதப் பொருளாய் விளங்கும் பரமன் இங்கு வீற்றிருக்கிறான். பல்வேறு பிறவிகளிலும் புண்ணியம் செய்தோருக்கே இத்தளத்தின் காட்சி கிடைக்கும் என்பது உண்மை. முறைப்படி தேவ தீர்த்தமாடி, மலைக் கொழுந்தாய்  எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும் சுரும்பார் குழலி அம்பிகையையும் வணகித் தொழுது விட்டு அங்குள்ள வேப்ப விருக்ஷத்தடியில் பஞ்சாக்ஷரஜபம் செய்தால் எல்லாத் தீங்குகளும் நீங்கும். வறுமை, கொடிய நோய்கள் ஆகியவை நீங்கும். ஞானமும் சித்தியும் கைகூடும். " 

அகலிகையை விரும்பிய பாவம் தீர, வியாழ பகவானின் அறிவுரைப்படி, இந்திரன் இரத்தினாசலத்தை அடைந்துதேவியின் சன்னதியில் வேப்ப மர பிரதிஷ்டை செய்தான். மலை உச்சியில்,தனது வஜ்ஜிராயுதத்தால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கிதினமும் காலையில் திரியம்பக மந்திரத்தை உச்சரித்து அதில் நீராடி, சுவாமிக்கும் அம்பிகைக்கும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த மணம் மிக்க மலர்களால் அர்ச்சித்து வணங்கினான். தான் ஸ்தாபித்த தீர்த்தத்தின் அருகிலுள்ள குகையில் அமர்ந்து பஞ்சாக்ஷர ஜபம் செய்து வந்தான். இதனால் அவனது பாவம் நீங்கிற்று. இந்திரனது பூஜையால் மகிழ்ந்த பரமசிவனும், தேவர்கள் சூழ முடியில் சந்திரனைத் தரித்தவராகவும், வெண்ணீறு அணிந்தவராகவும் அம்பிகையோடு ரிஷப வாகனத்தில்எழுந்தருளி  அவனுக்குக் காட்சி அளித்தார். ரத்தினகிரியில் தவம் செய்வோர் அனைவருக்கும் இஷ்ட சித்திகள் நிறைவேறும் என்ற வரத்தையும் அளித்தருளினார். அப்போது இந்திரன் சுவாமியைத் தோத்திரம் செய்தான். அத்தோத்திரத்தை சிவபூஜை முடிவில் படிப்பவர்கள் அஷ்ட ஐசுவர்யங்களையும் பெறுவர். எவ்வித நோய்க்கும் ஆளாக மாட்டார்கள். அரசனாக இருந்தால் போரில் வெற்றி கிட்டும். பக்தர்களுக்கு முக்தி கிடைக்கும். சந்தேகமே  வேண்டாம் என்று சுவாமியே திருவாய் மலர்ந்து அருளினார். 

"தக்ஷிணாயணம்.உத்தராயணம் , விஷு , சூரிய-சந்திர கிரகணம் அமாவாசை,சோமவாரம்,ஜன்ம நக்ஷத்திரம், ஸ்ராத்த தினம் ஆகிய புண்ணிய காலங்களில் தேவ தீர்த்தத்தில்  ஆயாகி என்னும் மந்திரத்தை மும்முறை உச்சரித்து நீராடி விட்டு, வேம்புக்கு அபிஷேகம் செய்து,சுவாமி அம்பாளைத்   தரிசித்து விட்டு, அந்தணர்களுக்குத் தானம் செய்தால் கயா  ஸ்ராத்த பலனைப் பெறலாம். வேம்பினடியில் கன்னிகா தானம் செய்தால் சிவலோகம் சித்திக்கும். 

இரத்தினாசலத்தைச் சுற்றி உள்ள ஐந்து குரோச இடத்திற்குள் அந்தணர்க்கு வீடும் விளைநிலங்களும் தானம் செய்யும் அரசன் சிவரூபம் பெறுவான். ஒரு மாத காலம் இங்குத் தங்கி, தேவ தீர்த்தத்தில் நீராடி, வேம்பைப் பூஜித்தால், குஷ்டம், வாதம் குன்மம் போன்ற கொடு நோய்கள் விலகி விடும். தானே உதிர்ந்த வேம்பின் இலைகளைப் புசித்தால் குருடர்கள் கண் பெறுவர். செவிடர்கள்  கேட்கும் திறனையும், ஊமைகள் பேசும் வன்மையையும் பேச்சு திக்குபவர்களுக்குப் பேச்சும், நல்ல கல்வியும் அங்கக்  குறைவு உள்ளவர்களுக்கு அழகிய சரீரமும் பிள்ளை இல்லாதோருக்குப்   புத்திர பாக்கியமும் வாய்க்கும் . வேம்பின் பெருமையை சிவசன்னதியில் படிப்போர் முக்தி வரம் பெறுவர்." 
                                                                 இரத்தினாசல மகாத்மியம் தொடரும்  

Sunday, April 22, 2018

கடம்பவனம், ரத்னாசலம், மரகதாசலம்



கடம்பவனேசுவரர் கோயில்,குளித்தலை 
                                                                 சிவபாதசேகரன்

திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள அற்புதமான சிவஸ்தலங்கள் மூன்றை நாம் இப்போது சிந்திக்குமாறு திருவருள் கூட்டியுள்ளது. அம்மூன்றின் பெயர்களை நாவினால் உச்சரித்தல் சிறந்த சிவபுண்ணியத்தைத் தரும். நேரில் சென்று தரிசிப்பவர்கள் பெறும் பயன் அளவிட முடியாதது. அம மூன்று தலங்களாவன, கடம்பந்துறை ( குளித்தலை),  திருவாட்போக்கி      ( ஐயர்  மலை ), மற்றும்  திரு ஈங்கோய் மலை என்பனவாம். ஒரே நாளில் காலையில் கடம்பந்துறையையும் , உச்சி வேளையில் ஐயர் மலை எனப்படும் வாட்போக்கியையும், மாலையில் திரு ஈங்கோய்  மலையையும்  தரிசிக்க வேண்டும்.மூன்றுமே தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். அவற்றுள் கடம்பந்துறையும், வாட்போக்கியும் காவிரியின் தென்கரையிலும்,ஈங்கோய் மலை வடகரையிலும் அமைந்துள்ளன.  

இம்மூன்று  தலங்களின் மான்மியன்களைப் பற்றிய சிறு நூல் ஒன்று நம் கைவசம் இருந்த போதிலும் தலங்களை நேரில் சென்று தரிசித்த பிறகே அவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் காலம் தாழ்த்த வேண்டியிருந்தது. இத்தலங்களை இரண்டாவது முறையாகத்  தரிசித்த பிறகே எழுதும் ஆவல் மேலோங்கியது. அப்புத்தகம் 1891 ம்  ஆண்டே வெளியிடப்பட்டதால், தற்போது பக்கங்களைத் திருப்பினால் உடையும் அபாய நிலையில் உள்ளது. அதனை மிகுந்த எச்சரிக்கையுடன் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இம்மூன்று தலங்களுக்கும் வடமொழியில் புராணம் இருந்ததாகவும், அதனை சிதம்பரம் பிரமஸ்ரீ  ஸ்ரீனிவாச சாஸ்த்ரி என்பவரைக் கொண்டு வடமொழியில் அச்சிட்டதாகவும், பின்னர் மேற்படி சாஸ்த்ரி அவர்களைக் கொண்டு தமிழாக்கம் செய்து, பதிப்பித்ததாகவும் அந்நூலில் காணப்படுகிறது. 

கடம்பந்துறை ( குளித்தலை என்று வழங்கப்படுகிறது ):  

இருப்பிடம்: திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 35  கி.மீ. ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு. 

கடம்பவனப் புராணச் செய்திகள்: 

நைமிசாரண்யத்தில் சௌனகாதி ரிஷிகள் சத்திர யாகம் செய்து சிவபெருமானை நோக்கி அருந்தவம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய பிற முனிவர்கள், ஒப்பில்லாத கடம்பவன மகாத்மியத்தை எடுத்துரைக்குமாறு விண்ணப்பித்தனர். அதற்கிசைந்து, சூத முனிவரும் அதனைக் கூறலானார். முன்னம் ஒரு கற்ப காலத்தில், பிரம தேவனானவர் தான் ஓய்வின்றி சிருஷ்டித் தொழிலைச் செய்து வருதலால் மனம் வருந்தி, சிவபெருமானை வந்தித்துச் சிவானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டிக் கயிலை மலையை அடைந்து தனது உள்ளக் கருத்தைச் சிவபிரானிடம் விண்ணப்பித்தார். பிரமனது தோத்திரத்தால் மகிழ்ந்த இறைவன், பிரமனைத் தவம் செய்யுமாறு அருளவே, அதற்கான இடம் கடம்பந்துறை என்றும் திருவாய் மலர்ந்தருளினான். 

திருவருளை எண்ணி மகிழ்ந்த பிரமன், பல்வேறு தலங்களை வணங்கிப் பின் கடம்பவனத்தை அடைந்து, காவிரியில் நீராடி, கடம்ப மர  நிழலில் பல்லாண்டுகள் தவம் புரிந்தான் . அதன் பலனாக, கடம்பவனநாதன் பிரமனுக்குக் காட்சி அளித்து, தனது திருக் கரங்களை  அவனது முடி மேல் வைத்து, " காவிரியை நோக்கி வட திசை நோக்கி இருக்கும் மகாலிங்கத்தில் நாம் எழுந்தருளி, உமாதேவியுடன் ஐந்தொழில் நடனங்கள் செய்து வருவதால் இங்கு நம்மை வழிபடும் அனைவரும் தாம் விரும்பிய அனைத்தையும் பெறுவர். அக்கினித் திக்கில் உள்ள தீர்த்தத்தைச் சீர் செய்து, கிழக்கு நோக்கியவாறு ஒரு சன்னதியை உமா தேவிக்கும் அமைத்துச்  சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவமும் செய்வித்துப் பின்னர் சாயுச்சிய பதவியை அடைவாயாக " என்று அருளி, அம்மகாலிங்கத்தில்  மறைந்தருளினார். அதன்படியே பிரமனும் திருவிழா நடத்திப் பின்பு சிவானந்தம் பெற்றான். 

முன்னொரு காலத்தில் தூம்ர லோசனன் என்ற அசுரன் துர்க்கா தேவியைப் போரிட்டு எதிர்த்தான். அசுரனது கணைகளால் தேவியானவள்  சோர்வுற்றபோது சப்த கன்னியர்கள் அசுரனைக் கோபாவேசத்துடன் போரிட்டனர். அவர்களை எதிர்க்க இயலாத அசுரன் புறம்காட்டி ஓடி, சூரியனை நோக்கித் தவம் புரியும் காத்யாயன முனிவரது ஆசிரமத்திற்குச் சென்று ஒளிந்திருந்தான். அரக்கனைத் தேடி வந்த சப்த மாதர் அங்குத் தவம் புரியும் முனிவரே அசுரனது மாயை எனக் கருதி, அவரைக் கொன்றனர். அதனால் அவர்களைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. அதனைப் போக்கிக் கொள்ள வேண்டி அக்கன்னியர்கள் பல சிவத்தலங்களையும் தரிசித்து விட்டுக்  கடம்பவனத்தை அடைந்தவுடன்   அத்தோஷம் அவர்களை நீங்கியது. ஒருமுறை அகத்திய முனிவர் இங்குத் தவம் செய்வதைக் கண்ட மற்ற முனிவர்கள் அவரை வணங்கி, " இத் தலத்தைத் தரிசித்துக் கபிலைப் பசுவை தானம் செய்வது சிறப்பு " என்கிரார்களே, அதன் மகிமையைத்  தேவரீர் விளக்கி அருளவேண்டும் என்று வேண்ட,அகத்தியரும் கபிலை மான்மியத்தை எடுத்து உரைத்தார். 

கபிலைப் பசுவானது பருத்த கண்களும்,சிவந்த உரோமமும் கொண்டது. அக்னி சம்பந் தப்பட்டது. ஆகவே ஆக்னேயி எனப்பட்டது.  அதன் பால்,தயிர் போன்றவற்றை உட்கொள்ளலாகாது.ஆனால் பஞ்சகவ்யத்தை உண்டால் அஸ்வமேத யாக பலனைப் பெறலாம். இதனை வலம் வந்தால், பூமி முழுதும் வலம் வந்த பலன் கிடைக்கும். இதன் கொம்புகளைக் கழுவி, தண்ணீரைத் தலையில் தெளித்துக்கொண்டால் இஷ்டசித்திகள் யாவும் பெறலாம். தானங்களில் சிறந்தது கபிலைப் பசுவைத் தானம் செய்வதே ஆகும். இப்பசுவில் பத்து வண்ண வகைகள் உண்டு. அவற்றுள் பொன்னிறம் கொண்டதே உத்தமம் என்பர். இதனைப் புண்ணியத் தலங்களில் தானம் செய்தால் சிவனருளைப் பெறுவார்கள். 

கபிலையின் பெருமையைக்கேட்ட முனிவர்கள் அகத்தியரை வணங்கி, " முனிவர் பெருமானே, இங்கு தேவசர்மர் என்பவர் பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்டுச் செய்வதறியாது உழல்கிறார். அவர் ஒரு கபிலையத் தானம் செய்யச் சித்தமாக உள்ளார். அப்பசுவப் பெறத் தகுதியானவர் தங்களைத் தவிர வேறு எவருமில்லை. எனவே தாங்கள் மனமிரங்கி அப் பசுவைப் பெற்றுக் கொண்டு தேவசர்மருக்கு அருள வேண்டும் " என்று வேண்டினார்கள். அகத்தியரும் அவ்வாறு தானம் பெற்றவுடன் தேவசர்மர் தனது பாவம் யாவும் நீங்கப்பெற்று, முனிவர்கள் சூழ, கடம்பவன நாதர் சன்னதியை அடைந்து துதித்தனர். தேவ சர்மரின் ப்ரார்த்தனைக்கிரங்கிய பெருமான், முனிவர்கள் அனைவருக்கும் தாம் முன்னர் மதுரையில் தடாதகைப் பிராட்டியை மணந்த திருக் கோலத்தைக் காட்டி அருளினார்.

 முன்னொரு காலத்தில் சோமகன் என்ற அசுரன் ஒருவன் வேதங்கள் யாவற்றையும் கவர்ந்து கொண்டு பாதாள லோகம் சென்று விட்டான். இதனால் கலக்கமுற்ற விஷ்ணு முதலிய தேவர்கள் கடம்பவனத்தை அடைந்து பெருந்தவம் செய்தனர். அத்தவப்பலனாக விஷ்ணுவானவர் மச்சாவதாரம் எடுத்துப் பாதாளம் சென்று அசுரனை மாய்த்து, வேதங்களை மீண்டும் கொண்டு வந்து கடம்பவனத்தில் ஸ்தாபித்தருளியதால் இத்தலம் வேதபுரி எனப்பட்டது. கடம்பவனநாதரூக்குரிய மந்திரத்தைப்  புண்ணிய காலங்களில் ஜபித்தால் பெறுதற்கரிய பேறுகள் அனைத்தையும் இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் .

கயிலை மலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதனை முறையாக உபதேசம் பெற்றுக் கேளாமல் மறைந்திருந்து முருகப்பெருமான் கேட்ட குற்றத்திற்காக ஊமை ஆயினார். பல்வேறு தலங்களிலும் வழிபட்ட முருகக்கடவுள் கடம்பந்துறையை அடைந்து தவம் செய்யவும், குற்றம் நீங்கப்பெற்றதோடு ,ஊமைத்தன்மையும் நீங்கப்பெற்றார்.  குமாரக்கடவுளின் துதிகளால் மகிழ்ந்த சர்வேசுவரனும் உமையன்னையோடு காட்சி அளித்து சுப்பிரமணிய மூர்த்தியைத் தனது மடி மீதிருத்தி ஞானோபதேசம் செய்தருளினார். அதனால் இத்தலம் ஞானோதயபுரி எனப்பட்டது. 

இங்கு எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிப்போர் எல்லா நற்பலன்களையும் பெறுவர்.  சித்திரை வைகாசி மாதங்களில் பௌர்ணமி தினங்களில் வழிபடுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. இங்கு அன்னதானம் செய்தால் பிற தலங்களில் செய்வதைக் காட்டிலும்  அதிக பலனைப் பெறலாம். 

இதுபோல வடக்கு நோக்கிய தலம் வாரணாசியாகும். இங்கு ஓடும் காவிரி ஆறு கங்கையை ஒக்கும். எனவே இதனைத் தக்ஷிண காசி எனப் பெரியோர் கூறுவார். இங்கு காவிரியில் நீராடி ஜபம் முதலிய அனுஷ்டானங்களைச் செய்து, கடம்பவனேசருக்கும், பாலகுசாம்பிகைக்கும்   அபிஷேகம் செய்து, நிவேதனம் சமர்ப்பித்தல், ஆலயத் திருப்பணி செய்தல் உற்சவங்கள் செய்தல் ஆகியவற்றால் சாயுச்சிய பதவியைப் பெறலாம். ஏழை ஆனாலும் சிறிதளவே பொருள் கொடுப்பவனும்  பாவ நிவர்த்தி பெறுகிறான். 

கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதா யுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு  பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார்.  

யாத்திரை முறை: கொடிய பாவங்களையும்நீக்க வல்ல கடம்பந்துறையை முறைப்படி எவ்வாறு வழிபட வேண்டும் என்று சூத முனிவர் கூறலாயினர்: " விடியற்காலையில் காவிரியில் நீராடி நித்திய கர்மாக்களைச் செய்து விட்டு, மண்ம் மிக்க பூக்களை எடுத்துக் கொண்டு கடம்பவனேசரது ஆலயம் சென்று சுவாமி,அம்பாள் முதலிய மூர்த்திகளைத் தரிசிக்க  வேண்டும். அங்கு யாத்திரா சங்கல்பம் செய்து அந்தணர்க்கு இயன்ற அளவு தானம் செய்து, காவிரிக்குச் சென்று ஓர் குடத்தில் நீரை நிரப்பி, வாட்போக்கி (ஐயர் மலை)யை நோக்கித் தியானித்து விட்டு, ரத்னகிரிக்குச் (ஐயர் மலைக்குச்) சென்று மலை ஏறி அங்கு மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும்,அராளகேசி அம்பிகையையும் (சுரும்பார் குழலி) தரிசித்து , கடம்ப வனத்திலிருந்து கொண்டு வந்த காவிரி நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்விக்க வேண்டும்.

 அங்கிருந்து காவிரியைக் கடந்து திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசலத்தை அடைந்து, மலை ஏறி சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு மீண்டும் கடம்பந்துறையை அடைந்து அர்ச்சனை ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அன்றிரவு அத்  தலத்திலேயே தங்கி மறுநாள் காலை காவிரியில் ஸ்நானம் செய்து தானங்கள் செய்து விட்டு ஆலய தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நூறு முறை கங்கா யாத்திரை செய்வதற்கும், ஆயிரம்முறை சேது யாத்திரை செய்வதற்கும் சமம். இப்புராணத்தைப் படிப்போரும் கேட்போரும் அனைத்து சித்திகளையும் பெறுவார்கள் . இதனால் நாமும் புனிதர்கள் ஆயினோம் " என்று சூதர் நைமிசாரண்ய முனிவர்களிடம் அருளிச் செய்தார். 

                                                        தலப் பாடல்கள் சில: 

பண்ணின் மொழி கேட்கும் பரமனை 
வண்ண நன் மலரான் பல தேவரும் 
கண்ணனும் அறியான் ; கடம்பந்துறை 
நண்ண நம் வினையாயின நாசமே
                                                        --- திருநாவுக்கரசர் தேவாரம்

அழுகு திரிகுரம்பை ஆங்கு அதுவிட்டு ஆவி 
ஒழுகும் பொழுது அறிய வொண்ணா -- கழுகு
கழித்து உண்டு அலையா முன் காவிரியின் தென்பால் 
குழித்தண் டலையானைக் கூறு.
                                                      -- ஐயடிகள் காடவர் கோன் நாயனார் 

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழால் பாடியுள்ளார். 
                 
 அடுத்த பதிவில் : இரத்னகிரி (ஐயர் மலை )மகாத்மியம் 

Wednesday, February 21, 2018

இரு பிறவியிலும் சிவ பக்தி செய்த செங்கணார்

ஜம்புகேசுவரம் 
நாம் இப்போது காணும் திருவானைக்கா (வல்), ஒரு காலத்தில் யானைகள் மிகுந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் காவிரி ஆறு ஓடுவதால் யானைகள் வசிக்க ஏற்ற பகுதியாக இருந்தது. வடமொழியில் இதைக் கஜாரண்யம் என்பார்கள். இங்கு வேதமே நாவல் மரமாகி அதனடியில் ஜம்புகேசுவரரை வழிபட்டதாக ஸ்தல புராணம் குறிப்பிடுகிறது. 

ஸ்தல புராணச் சுதைச் சிற்பம் 
காட்டு யானைகள் பல இருக்கும்போது, ஒரு யானை மட்டும், முற்பிறப்பின் தொடர்ச்சியாலோ என்னவோ நாவல் மர நீழலில் இருந்த இறைவனைக் காவிரி ஆற்றிலிருந்து நீரைத் தனது துதிக்கையால் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. அதே சமயம், சிவலிங்கப் பெருமான் மீது சருகுகள் விழாத படித் தனது வாயினால் வலையைப் பந்தல் போல அமைத்து சிலந்தியொன்று வழிபட்டது. யானை அபிஷேகம் செய்யும்போது அப்பந்தல் சிதைந்து போகவே, கோபம் கொண்ட சிலந்தி  அந்த யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. வலி பொறுக்கமுடியாமல் யானை, தனது துதிக்கையைத் தரையில் தேய்த்தது. இதனால் இரண்டுமே உயிர் நீத்தன. யானைக்கு முக்தி கொடுத்த ஈசன், கோபித்த சிலந்திக்கு இன்னூம் ஓர் பிறவி கொடுக்கத் திருவுள்ளம் பற்றி, அச்சிலந்தியை சோழ வம்சத்தில் பிறக்கச் செய்தார்.

சோழமன்னன் சுபதேவனுக்கும் அவனது மனைவி கமலவதிக்கும் பல்லாண்டுகள் மக்கட்பேறு இல்லாதிருக்க, இருவரும் தில்லைக் கூத்தனைப் பிரார்த்தித்த பயனாகக்  கமலவதி கருவுற்றாள். மகவு பெறும் வேளையில் அரசவைக்கு வந்த சான்றோர், இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகைக்குப் பிறகு பிறந்தால் உலகையே ஆள்வான் என்று சொல்லவே, அரசியாரும், தன்னைத்  தலை கீழாகக் கட்டித்தொங்க விடுமாறு பணித்தார். அதனால்  ஒரு நாழிகைக்குப் பின்  குழந்தையை ஈன்றெடுத்தார். முற்பிறப்பில் யானையிடம் கொண்ட கோபத்தால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. தனது குழந்தையை அரசியார் அரவணைத்து, உச்சி மோந்து, " என் கோ செங்கணானோ " என்று கூறிவிட்டு உயிர் நீத்து விட்டார். 

கோச்செங்கணானாகிய தவப்புதல்வனைச்  சுபதேவன் அன்புடன் வளர்த்து அவனுக்கு சோழர்குல அரசுரிமையைத் தந்து முடி சூட்டிய பிறகு சிவலோகம் சேர்ந்தான். முற்பிறப்பில் இறைவன் பால் கொண்ட எல்லையற்ற பக்தியின் தொடர்ச்சியாகக் கோச்செங்கட்சோழர் , வெண்ணாவலின்  கீழ் வீற்றிருக்கும் வேத நாயகனுக்குப் பணிகள் பல செய்தார். 

திருநல்லூர் மாடக் கோயில் 
பின்னர் சிவாலயங்கள் பலவற்றை யானை ஏறமுடியாதபடி மாடக்கோயில்களாகக் கட்டுவித்தார். அவ்வாறு எழுபது மாடக் கோயில்கள் கட்டினார் என்பர். தேவார மூவர் வாக்கிலும் இவர் கட்டிய மாடக் கோயில்கள் பல போற்றப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, கீழ்வேளூர், சிக்கல், தேவூர், நல்லூர், நாலூர், குடவாயில், நன்னிலம் , ஆவூர் ஆகிய சில ஊர்களைக் குறிப்பிடலாம். நிகழும் பிறவியில் சிவபக்தி செய்வதே முன்செய்த நல்வினைப் பயன் என்னும் போது தொடர்ந்து இரண்டாவது பிறவியிலும் சிவபக்தி செய்த இம்மன்னரைப் போற்ற வார்த்தைகளே இல்லை. 

சிவாலயங்களுக்கு அமுது படையல் செய்ய  நிவந்தங்களும் ஏற்படுத்தித் தந்ததாகப் பெரிய புராணம் இவரைச் சிறப்பிக்கிறது. பின்னர் தில்லைக்குச் சென்று பன்னாள்  பணி  செய்து, மறையவர்க்கு மாளிகைகள் அமைத்துத் தந்தார். இவ்வாறு சிவப்பணி செய்துவந்த நாயனார், மாசி மாத சதயத் திருநாளன்று பொன்னம்பலவனின் திருவடி நீழலை அடைந்தார். 
   
திருவானைக்காவில் குருபூஜை 
மாசி சதயத்தன்று திருவானைக்காவில் கோச் செங்கட்சோழ நாயனாரது குருபூஜை மிக்க சிறப்பாக நடை பெறுகிறது. சிவனடியார்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். திருமுறைப் பாடல்கள் ஒலிக்கின்றன. நாயனாரது விக்கிரகத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சன்னதிக்கு முன்பு அடியார் பெருமக்கள் புஷ்பப் பந்தல் அருமையாக அமைத்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். நாயன்மாரது சரித்திரத்தை பெரியவர் ஒருவர் சொல்லக்கேட்டு மெய் சிலிர்க்கிறோம். மாலையில் உற்சவ மூர்த்தி புறப்பாடாகித் திருவீதியில் எழுந்தருளச் செய்யப்படுகிறது. இவ்வாறு நாயனார் பால் மிக்க அன்போடு வழிபாடு ஆற்றும் அத்துணை அடியார்களுக்கும் நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். குருவே சிவத்தை நமக்கு எளிமையாகக் காட்டும் கருணையை உடையவர். எனவேதான் குருபூஜையை பக்தி சிரத்தையுடன் செய்தால் சிவபக்தி தானாகவே வந்து விடும். 

திருத்தொண்டர்களது பெருமையை யாரே அறிவார் ?  

Wednesday, July 12, 2017

காரைக்கால் அம்மையாரும் மாங்கனித் திருநாள் விழாவும்

காரைக்கால் நகரும், வணிக குலமும் செய்த மாதவத்தின் பயனாகத் , தனதத்தன் என்பவரது மகளாகத்    திருமகளுக்கு நிகரான பேரழகுடன், புனிதவதியார் தோன்றினார். இளமையில் மொழி பயிலும் காலத்திலிருந்தே சிவபிரானிடமும், சிவனடியார்களிடமும் பேரன்பு பூண்டு விளங்கினார். மணப் பருவம் வந்த தனது மகளுக்கேற்ற மணாளனுக்கு மணம் முடிக்கக் கருதிய  தனதத்தன்  , நாகப் பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்பவரது மகனான பரம தத்தனே ஏற்றவன் எனக் கருதினான் . முதியோர்கள் பலரும் காரைக்கால் நகருக்கு வந்து, நீ பெற்றெடுத்த மகளைப் பரமதத்தனுக்கு மணம் புரிவாயாக என்றார்கள். அதன்படி, இருவீட்டாரும் சம்மதித்து, மண நாள் நிச்சயமானதும் மண ஓலை மூலம் உற்றார் உறவினர்களுக்கு அறிவித்தனர். 

மயில் போன்ற புனிதவதியாருக்கும்  காளை  போன்ற பரமதத்தனுக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது. தனது  அருந்தவப்புதல்வியை நாகைக்கு அனுப்ப மனம் வராத தனதத்தன், தன் மகள் இல்லறம் நடத்துவதற்காகக் காரைக்கால் நகரிலேயே ஒரு அழகிய மாடம் அமைத்து அவ்விருவரையும் அங்கு வசிக்கச் செய்தான். இவ்வாறு திருமணம் இனிதே நடந்தேறியபின்னர் , நிதிபதி, நாகைக்குத் திரும்பினான். புனிதவதியாரும், சிவபெருமான் கழலுக்கு அன்பு செய்தவராக, மனையறத்தின் பண்பு வழுவாமல் இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.

சிவனடியார்கள் வந்தால் அவர்களை உபசரித்து,உணவு அருந்தச் செய்து,அவர்களுக்கு ஆடைகளும் ஆபரணங்களும் வழங்குவதை நியமமாகக் கொண்டிருந்தார் புனிதவதியார். அவ்வாறு இருந்து வரும் நாட்களில், ஒரு சமயம், பரமதத்தனிடம் இரு மாங்கனிகளைச்  சிலர்  கொண்டு வந்து தந்தனர் . அவற்றைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன் அவர்களைத்  தனது மனைக்கு அனுப்பி,அக்கனிகளைப் புனிதவதியாரிடம் கொடுக்குமாறு கூறினான். அதன்படி வந்தவர்களும்,அவ்விரு மாங்கனிகளையும் புனிதவதியாரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர். 

பன்னகாபரணரான சிவபெருமானது அடியார் ஒருவர் மிகுந்த பசியோடு அவ்வேளையில் புனிதவதியாரின் மனையை வந்தடைந்தார். அவரது பாதங்களை வணங்கி வரவேற்ற புனிதவதியார், அவரது பசியைத் தீர்க்கக்  கருதி, விரைந்து இன்னமுதாக்கி ,  இதனை விடப் பேறு உண்டோ என்று கருதியவராக அடியாருக்கு அமுது செய்வித்தார். பரமதத்தன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாரது இலையில் படைத்தார். பசி நீங்கிய அடியார், மனமகிழ்ந்து  அவரது செயலை உவந்தவராக அங்கிருந்து நீங்கினார். 


வீடு திரும்பிய பரமதத்தன், நீராடிவிட்டு உணவருந்த வந்தபோது,கற்பில் சிறந்த புனிதவதியார்  அவனுக்கு அமுது செய்விக்கலானார். அப்போது இலையில் இட்ட மாங்கனியை உண்ட வணிகன், தான் அனுப்பிய மற்றொரு கனியையும் இலையில் இடுமாறு பணித்தான். அதனைக் கொண்டு வருவார் போல அகன்ற புனிதவதியார் மனம் தளர்ந்து, இறைவனை வேண்டி நிற்கவே, பெருமான் அருளால் அவரது கைகளில் அதி மதுரமான மாங்கனி ஒன்று வந்தடைந்தது. அதனைப்  பெற்று மிகவும் மகிழ்ந்த புனிதவதியார் உடனே விரைந்து சென்று கணவனாருக்கு அதனைப் படைத்தார். அக்கனியின் சுவை மூவுலகிலும் இருத்தல் அரியது என உணர்ந்த வணிகன், புனிதவதியாரிடம் அக்கனி எவ்வாறு கிடைத்தது என்று உரைக்குமாறு கேட்டான். 

கணவனிடம் உண்மையைக் கூறுவதே முறை என்று எண்ணியவராகப் புனிதவதியார் நடந்தவற்றை எடுத்துக் கூறி, ஈசன் திருவருளே மற்றொரு கனியையும் தந்தது என்றார். அப்படியாயின் அதே போன்ற அதிமதுரக் கனியை ஈசனிடம் மீண்டும் பெற்றுத் தருவாய் என்று பரமதத்தன் கூறினான். அதனைக் கேட்ட புனிதவதியார், இறைவனைத் துதித்து         "எம்பெருமானே, இப்போது தேவரீர் மற்றோர் கனியை வழங்கி அருளாவிட்டால் எனது உரை பொய் என்று ஆகி விடுமே"  என்றார். அப்போது,யாவரும் அதிசயிக்கத்தக்க வகையில், சிவனருளால் ஒரு மாங்கனி அவரது கையை வந்தடைந்தது . அதனைத் தன்  கணவனாரிடம் புனிதவதியார் கொடுத்தவுடன்  பரமதத்தன் அதனைப் பெறக்  கைகளை நீட்டிய போது, அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்ட வணிகன் அஞ்சி நடுங்கினான். புனிதவதியாரை மனைவியாகக் கருதாமல் தெய்வத்தன்மை வாய்ந்த  பெண்ணாகக் கருதி, இனி மேல் அவருடன் கணவனாக வாழ்வது தகாது என எண்ணி , கடல் கடந்து வணிகம் செய்து கொண்டு வருவதாகக் கூறி விட்டு, அங்கிருந்து நீங்கி, சுற்றத்தார் துணையுடன் மரக்கலம் ஒன்றைக் கொண்டு கடல் கடந்து ஒரு நாட்டிற்குச் சென்று பொருளீட்டிய பின்னர்,மீண்டும் நாகைக்கு வந்து சேர்ந்தான். அந்நகரில் மற்றோர் பெண்ணை விவாகம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றான். புனிதவதியாரைத்  தெய்வமாகவே எண்ணிய வணிகன் அப்பெண் குழந்தைக்குப் புனிதவதி என்றே பெயரிட்டான். 


கடல் கடந்து வாணிபம் செய்து மீண்ட பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருப்பதாகச் செய்தி வரவே, புனிதவதியாரை அவரது சுற்றத்தார்கள் ஒரு சிவிகையில் ஏற்றி, பரமதத்தன் இருந்த நகருக்குக் கூட்டி வந்தனர். அவரது வருகையை அறிந்து அச்சம் அடைந்த வணிகன், தனது மனைவியுடனும், பெண் குழந்தையுடனும் புனிதவதியாரது இருப்பிடத்தை அடைந்தான். புனிதவதியாரது புனித அடிகளில் மனைவி-குழந்தையுடன் வீழ்ந்து வணங்கி," நாங்கள் வாழ்வது உமது அருளால்" என்றான்.
இவ்வாறு கணவன் ,தன்னை வணங்குவதைக் கண்டு அச்சமடைந்த புனிதவதியார் , சுற்றத்தார்கள் பக்கத்தில் சென்று ஒதுங்கி நின்றார். பரமதத்தனை " இவ்வாறு செய்தல் தகுமோ "  எனக்  கேட்டார்கள்  சுற்றத்தார்கள். அவர்களை நோக்கிய வணிகன், " இவர் மானுடர் அல்லர். பெரும் தெய்வம். ஆகவே அவரது பெயரையே இக்குழந்தைக்கு இட்டேன். நீங்களும் அவரைப் போற்றிப் பணியுங்கள்" என்றான். அதனைக் கேட்ட சுற்றத்தாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனைக் கண்ட புனிதவதியார், " கணவனுக்கென்றே இவ்வுடலைத் தாங்கி வந்தேன். இந்த வார்த்தைகளைக் கேட்ட படியால், இவ்வுடலின் தசைப் பகுதியைக் கழித்து விட்டுப்  பேய் வடிவம் அடியேன் பெறுமாறு அருள் செய்வாய்" என்று பரமனை வேண்டி நின்றார்.இறைவனும் அவர் வேண்டியபடியே புனிதவதியாரைப் பெண் பேயாக்கினார்  மண்ணும் விண்ணும் வணங்கும் பேய் வடிவத்தை ஈசனருளால் பெற்றார். எங்கும் மலர் மழை பொழிந்தது. தேவ துந்துபிகள் முழங்கின. முனிவர்களும் வணங்கினர். சுற்றத்தார்கள் தொழுது வணங்கியவராக அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

பேய் வடிவம் பெற்றவுடன் இறைவனை, அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணி மாலை ஆகிய துதிகளால் பரவினார் பேயார். பேய் வடிவைக்கண்டவர்கள் அஞ்சி விலகினார். தனது உருவம் எதுவாக இருந்தால் என்ன, ஆண்ட நாயகனாகிய சிவபெருமான் என்னை அறிவார். அதுவே போதுமானது என்ற சிந்தையுடன், கயிலாயத்தை நோக்கிச் சென்றார் புனிதமான வடிவம் பெற்ற மன நிறைவுடன். கால் நடை தளர்ந்ததும்,தலையினால் நடந்து சென்றார். அவ்வெள்ளி மலையின் மீது அவ்வாறு ஏறி வருவதைக் கண்ட உமாதேவியார், இறைவனை நோக்கி , இவ்வாறு பேய் வடிவில் வருவது யார் என்று வினவ, பெருமான்,    " இவள் நம்மைப் பேணும் அம்மை" என்று உலகெலாம் அறியும் வகையில் அருளிச் செய்தார். இவ்வாறு கயிலாய நாதன் அருளவும், பேயார் , அவ்வருளை வியந்து போற்றி, " அப்பா" என்று பிரானது செம்பொற் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். வணங்கிய அம்மையாரது அன்பு கண்டு மகிழ்ந்த இறைவன், " நீ வேண்டும் வரம் யாது " என்று வினவ, அம்மையார், "  தருமமே வடிவாகிய இறைவா, என்றும் குறையாத பேரன்பு கொண்டு உன்னை வழிபட வேண்டும். பிறவாத நிலை பெற வேண்டும். ஒருக்கால் பிறந்து விட்டாலும் உன்னை என்றும் மறவாமல் இருக்க வேண்டும் . நான் மகிழ்ச்சியோடு உன்னைப் பாடி, நீ ஆடும்போது உனது திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்று வரம் வேண்டினார் அம்மை.


" தென்திசையில் உள்ள திருவாலங்காட்டுக்குச் சென்று அங்கு நாம் ஆடும் மாநடம் கண்டு ஆனந்தமயமாகி நம்மைப் பாடுவாய் " என்று இறைவன் கட்டளை இட, காரைக்கால் அம்மை திருவாலங்காட்டைத்   தலையினால் நடந்து சென்றடைந்தார். அங்கு அண்டம் உற நிமிர்ந்தாடும் அப்பனை மூத்த திருப்பதிகம் பாடி வணங்கினார். பின்னர் ஒரு பங்குனி சுவாதி நன்னாளன்று ஆடும் சேவடிக்கீழ் என்றும் இருந்து பாடிக்கொண்டிருக்கும் உயர் நிலையை  இறையருளால் பெற்றார். 


காரைக்காலில் ஆண்டு தோறும் ஆனி  மாதத்தில் மாங்கனி விழா  மிகச் சிறப்பாக நடை பெறுகிறது. ஊரின் மத்தியிலுள்ள சிவாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு ஒரு சன்னதி இருக்கிறது. புராணப்படி, காரைக்கால் அம்மையாரது வரலாறு இவ்விழாவின் போது நடத்திக் காட்டப்படுகிறது. 


புனிதவதியார் ஜனனம், பரமத்தனுடன் திருமணம் ,புனிதவதியாரின் இல்லம் தேடி சிவனடியார் மிக்க பசியுடன் வருதல் போன்ற ஐதீக காட்சிகள் நமக்கு முன்னே தோன்றுகின்றன. பிக்ஷைக்காக பிக்ஷாடனரையே ஊர்வலமாக எழுந்தருளச் செய்கிறார்கள். பவழக் கால் சப்பரத்தில் பெருமான் எழுந்தருளும்போது வழி நெடுகிலும் மக்கள் தீபாராதனை தட்டில் மாம்பழங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கின்றனர். விழாவுக்கு வரும் பக்தர்களும் மாம்பழங்களைப் பிரசாதமாகப் பெற்று மகிழ்கின்றனர். சுவாமியை நோக்கியவாறே அதிகார நந்திகேசுவரரும் எழுந்தருளுகின்றார்.


அதிகார நந்திகேசுவரர் 
அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் பரமதத்தனைத்  தரிசிக்கிறோம். அந்த இடம் காசுக் கடைத் தெரு என்ற வணிகர் வீதியாக அக்காலத்திலிருந்தே வழங்கப்பட்டது. மாலையில் பரமதத்தன் கடல் தாண்டி போவதற்காகப்  பெரிய படகு ஒன்றை ஊர்வலமாக நகரில் எடுத்து வருகிறார்கள். மின் விளக்குகளால் அது அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.  


கடல் தாண்டக் கப்பல் 
இரவில் பரமதத்தனின் இரண்டாவது திருமணத்தை நடத்திக் காட்டுகிறார்கள். செய்தி அறிந்த புனிதவதியார் பல்லக்கில் எழுந்தருளுகிறார். பரமதத்தன், தன்  மனைவி மக்களுடன் அவரை மும்முறை வலம் வந்து வணங்குகின்றனர். விடியற்காலை சுமார் 5 மணி அளவில் காரைக்கால் அம்மையார் யாவரும் போற்றும் பேய் உருவத்துடன், ஊரிலுள்ள சிவாலயத்தை நோக்கி எழுந்தருளும்போது, சுற்றிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன.  மங்கலான தீவர்த்தி ஒளியில் மட்டுமே அம்மையாரைத் தரிசிக்க முடியும்.

 சிவாலயத்தை அடைந்ததும், அம்மையாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் நடைபெறுகிறது. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான அன்பர்கள் வந்திருந்து இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பரவசமாகின்றனர். வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் காணவேண்டிய அற்புத தரிசனம் இது. ஆதி அந்தமில்லா இறைவனின் திருநடனத்தின் போது அருகே இருந்து கீதம் பாடும் பேறு  பெற்ற அம்மையின் மலர்த்தாள் போற்றுவோமாக.  

Saturday, May 20, 2017

திருப்புகலூரில் அப்பர் ஐக்கிய விழா

தலத்தின் இருப்பிடம்:சோழ வளநாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் திருப்புகலூரும் ஒன்று. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையில் உள்ள நன்னிலம் ரயிலடியில் இறங்கி அங்கிருந்து  கிழக்கே செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. பேருந்து மூலம் பயணித்தால் கோயில் அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம். பேருந்து நிலையத்திலிருந்து ஆலய முகப்பு வளைவு வழியாக வடக்கில் சிறிது தூரம் நடந்தால் ஆலயத்தை அடையலாம்.

ஆலயமும் அக்கினி தீர்த்தமும் 
ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய  ராஜ கோபுரத்திற்கு எதிரில் அகழி இருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தீர்த்தம், அக்கினி தீர்த்தம் எனப்படுகிறது.அதன் படிக்கட்டருகே சந்திர சேகரர் சன்னதி அமைந்துள்ளது. பாணாசுரன் தனது தாயார் வழிபடுவதற்காக இந்த ஆலயத்தை அடியோடு அகழ்ந்து தோண்ட முற்பட்டும் இயலாமல் போயிற்று. அவன் அவ்வாறு நான்கு புறமும் தோண்டிய பகுதியே அகழி ஆயிற்று. 

அம்பிகை சன்னதி 
ராஜ கோபுர வாயிலைக் கடந்தவுடன் நமது வலப்புறம் தெற்கு நோக்கியவாறு அம்பிகையின் சன்னதியைக் காண்கிறோம். கருந்தாழ் குழலி என்று இந்த அம்பிகை இத்தலத்துத் தேவாரப் பாடலில் குறிப்பிடப்படுகிறாள். வடமொழியில் இந்த இறைவியை சூளிகாம்பாள் என்று அழைக்கின்றனர். இராஜாதி இராஜன் காலத்தில் திருப்பள்ளிக் கட்டில் இந்த அம்பிகைக்கு வழங்கப்பட்டதாகக் கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.

உள் பிராகாரத்தில் வடபகுதியில் புன்னாக  (புன்னை) விருக்ஷம் உள்ளது. இதுவே இத்தலத்தின் புண்ணிய விருக்ஷம் ஆகும். இதனடியில் செய்யப்படும் தியானம் பல  மடங்கு பலனை அளிக்க வல்லது என்பர். 

இத்தலத்தின் பிரதான மூலஸ்தானப் பெருமான், அக்னீசுவரர். சரண்யபுரீசுவரர், கோணப்பிரான் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. இந்த சன்னதியை ஒட்டி மற்றும் ஓர் சிவ சன்னதி இருக்கக் காண்கிறோம். அங்குள்ள சுவாமிக்கு வர்தமாநீசுவரர்  என்றும் அம்பிகைக்கு மனோன்மணி என்றும் நாமங்கள் வழங்கப்படுகின்றன. இந்தப்பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் முருக நாயனார் ஆவார். அக்நீசுவரரைப் பாடிய திருஞானசம்பந்தர் வர்த்தமானீசுவரரையும் ஒரு பதிகத்தால் பாடியிருக்கிறார். அதில் முருக நாயனாரது தொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அப்பர் சன்னதி 
உட்ப்ராகார கன்னி மூலையில் தல விநாயகரான வாதாபி கணபதி எழுந்தருளியுள்ளார். வில்வலன்,வாதாபி ஆகிய இருவரும் வழிபட்ட மூர்த்தி இவர். இதைத் தவிரவும்,பூதேஸ்வரர், பவிஷ்யேசுவரர், அகோர லிங்கம், சிந்தாமணீசுவரர் ஆகிய மூர்த்திகளும், ததீசி, பராசரர், பிருகு, புலஸ்தியர்,ஜாபாலி, பாரத்வாஜர், வாமதேவர், ஆகியோர் பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.  உள் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அப்பர் (திருநாவுக்கரசர்) சன்னதியும் உள்ளது. 

திருவாரூரில் தான் தரிசித்த திருவாதிரை நாள் விழாச் சிறப்பைத்  திருப்புகலூரில் திருஞான சம்பந்தரை சந்தித்தபோது, அவர் கேட்கும்படிப்   பதிகமாக அருளினார் அப்பர் பெருமான். பின்னாளில் , இங்கு வந்தசுந்தரர், ஆலயம் மூடியிருக்கவே, களைத்தவராக, அங்கிருந்த  செங்கல்லைத் தலைக்கு வைத்தவாறு  உறங்கி விட்டுக் கண் விழித்த போது ,அக்கல்லானது    செம் பொன்னாக மாறி இருப்பதைக் கண்டு பரவசமாகித் , " தம்மையே புகழ்ந்து .. " எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் பாடியதாகப் பெரிய புராணம் மூலம் அறிகிறோம். 

இத்தலத்தின் பிரமோற்சவம் வைகாசி விசாகத்தை முன்னிட்டுப் பத்து நாட்கள் நடைபெறுகிறது. அப்பர் சுவாமிகள் இந்தத்தலத்தில்தான் சித்திரை மாத சதயத்தன்று சிவமுக்திப் பேறு பெற்றதால் அவரது வரலாற்றை நினைவுறுத்துவதாகப் பத்து தினங்கள் விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடை பெறுகிறது. 

முதல் நாளன்று, சூலை நோய் தீரப்  பெற்ற வரலாற்று நிகழ்ச்சி விழாவும், இரண்டாம் நாள் பல்லவ மன்னன் அவரை நீற்றறையில் இட்ட பொது, " மாசில் வீணையும் " என்ற பதிகம் பாடி சிவானந்தத்தில் திளைத்திருந்ததும், மூன்றாம் நாள் சமணர்கள் ஏவிய யானை இவரைத் தீங்கு செய்யாது வணங்கிச் சென்றதும், நான்காம் நாள் சமணர்கள் இவரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபோது, நமசிவாயப் பதிகம் பாடிக் கரை ஏறியதும், ஐந்தாம் நாள், பெண்ணாகடத்தில் சூலக் குறியும், ரிஷபக் குறியும் தோள்களில் பொறிக்கப் பெற்றதும், ஆறாம் நாள் , திருநல்லூரில் திருவடி தீக்ஷை பெற்றதும், ஏழாம் நாள் திங்களூரில் அப்பூதி அடிகளின்  பாம்பு தீண்டிய  மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்ததும், எட்டாம் நாளன்று  திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும், திருமறைக்காட்டில் மூடியிருந்த ஆலயக் கதவைப் பதிகம் பாடித் திறந்ததும், ஒன்பதாம் நாள் பழையாறை வடதளியில் சமணர்களால் மூடப்பட்டிருந்த ஆலயத்தைப் பதிகம் பாடித் திறந்ததும், கயிலை யாத்திரை செய்து, திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்டதும், பத்தாம் நாள் காலையில் திருப்பைஞ்ஞீ லியில் கட்டமுது பெற்றதும்  ஆகிய நிகழ்ச்சிகள் ஐதீக விழாக்களாக நடைபெறுகின்றன. 

பத்தாம் திருநாளான சித்திரை சதயத்தன்று மாலை அப்பர் பெருமான் ,ப்ராகாரத்திலுள்ள கட்டமுது மண்டபத்திலிருந்து புறப்பாடாகிப்  பிராகாரத்தில் எழுந்தருளுகிறார். அவர் உழவாரப் பணி செய்ததை நினைவு கூறுவதாகப்  பிராகாரத்தில் உழவாரப் பணி செய்யப்படுகிறது. 

அப்போது இறைவன் அவரைச்  சோதிக்க வேண்டி அவ்விடத்தில் பொன்னும்,மணிகளும் தோன்றச் செய்தபோது, நாட்டம் எதுவும் கொள்ளாமல் அவற்றைப்  பருக்கைக் கற்களோடு கோயிலுக்கு வெளியில் அகற்றிய  வரலாறும் நடத்திக் காட்டப் படுகிறது. 

அரம்பையர் நடனம் 
அப்பரது பெருமையை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் தேவ லோக அரம்பையர்களை அவருக்கு முன்னே தோன்றி நடனமாடச் செய்தபோது, ஐம்புலன்களையும் வென்ற நாவுக்கரசர்,  " பொய்ம்மாயப் பெருங் கடலில்.. " எனத் துவங்கும் பதிகத்தைப் பாடியவுடன் அவரது உறுதியைக் கண்ட அரம்பையர்கள் அங்கிருந்து அகன்ற வரலாற்றைப்  பிராகாரத்தில் செய்து காட்டுகிறார்கள். சிறுமியர்கள் நடனம் ஆடிவிட்டுப் பிறகு அப்பர் பெருமானை வலம் வந்து திருநீறு பெற்றுக் கொண்டு செல்வதாக நடத்திக் காட்டுகிறார்கள். இந்நிகழ்ச்சிகள், இவ்வாலயத்தை நிர்வகிக்கும் வேளக்குறிச்சி ஆதீன கர்த்தரின் முன்னிலையில் நடை பெறுகிறது. 

பிறகு இரவு 12 மணி அளவில் ப்ராகாரத்திலுள்ள அப்பர் சன்னதியில் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும்  சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு அலங்காரமாகி வீதி புறப்பாடு நடைபெற்று,மீண்டும் கோயிலுக்குக் காலை  சுமார் 5 மணிக்கு வந்து சேர்ந்தவுடன், அப்பர் சுவாமிகள் நேராக அக்னீசுவரப் பெருமான் சன்னதிக்கு,          "எண்ணுகேன் " எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடியவாறு வந்தடைகிறார். சுவாமி சன்னதிக்குள் சென்றதும் நாம் காண்பது ஒளிப் பிழம்பு மட்டுமே. " அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார் " என்று இந்த நிலையை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில்  குறிப்பிடுவதை நேரில் காணும் பொது நாம் என்ன பேறு பெற்றோமோ என்று நினைக்கிறோம்.  

நித்திய பூஜைகள் நடைபெறுவதே சிரமாக ஆகி வரும் இந்நாட்களில் இது போன்ற பத்து நாள் உற்சவங்கள் நடத்துவது இன்னமும் சிரமாக இருக்கிறது. ஆலயத்துக்கு வர வேண்டிய வருமானம் முழுவதும் வராவிட்டால் விழாக்களை எவ்வாறு நடத்த முடியும்? உபயதாரர்களை நம்பியே பல ஊர்களில் விழாக்கள் நடை பெறுகின்றன. அவர்களும் பின் வாங்கிவிட்டால் உற்சவம் நின்று போகும் நிலை உருவாகும். அதற்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது. ஆன்மீக அன்பர்கள் இதுபோன்ற விழாக்களை நேரில் கண்டு ( ஆயுளில் ஒரு முறையாவது) மற்றவர்களையும் அனுப்பி வைத்தால் தான் இவற்றைத் தொடர்ந்து நடத்த முடியும். தரிசனம் செய்யவும் வாண வேடிக்கை பார்க்கவும் மட்டும் போகாமல் நம்மால் இந்த சிவ தர்மத்திற்குச்  சிறிதாவது உதவ முடியுமா என்று ஒவ்வொருவரும் சிந்தித்துச்  செயல் படுவது நல்லது. 

Monday, March 27, 2017

புதுப் பொலிவு பெறும் வைப்பூர் சிவாலயம்

வைப்பூர் என்ற ஊரின் பெயரை அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களைத்தவிர மற்றவர்கள்  கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் சரித்திரம்  வாசித்தவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். மயிலாடுதுறையிலிருந்து ஆண்டிப்பந்தல் வழியாகத் திருவாரூர் சென்றால்  கங்களாஞ்சேரி என்ற ஊர் வரும். அங்கிருந்து கிழக்கே நாகூர் செல்லும் வழியில்தான் வைப்பூர் என்ற ஊர் இருக்கிறது. அதிகப் போக்குவரத்து இல்லாத அமைதியான சாலை. வழி நெடுகிலும் கிராமங்களே உள்ளன. 

இந்த சாலையில் சென்றால் பல சிவத்தலங்களைத் தரிசிக்கலாம். அவற்றில் முக்கியமானது, விற்குடி ஸ்ரீ வீரட்டானேசுவரர் ஆலயம். இது அஷ்ட வீரட்டானங்களில் ஜலந்தராசுர வதம் செய்த வீரச் செயல் நடந்த தலம். சம்பந்தரின் பதிகம் பெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கருங்கல் திருப்பணி செய்திருக்கிறார்கள். 

விற்குடியைத் தரிசித்த பிறகு மீண்டும் நாகூர் சாலைக்கு வந்து மீண்டும் கிழக்கு நோக்கிப் பயணிக்கிறோம். வழியில், சனைச்சரன்  சிவ வழிபாடு செய்த ஈசுவர வாசல் வருகிறது. மூங்கில் மரங்கள் சூழப்பெற்ற ரம்மியமான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சிறு வாய்க்கால். மூங்கில் பாலம் மூலம் கடக்க வேண்டும். சிறியதும் பழமையானதுமான இக்கோயில் உடனடியாகத் திருப்பணி செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அர்ச்சகர் வீடு அருகிலேயே உள்ளது.


பின்னர் பயணம் தொடர்கிறது. வைப்பூர் கடைத்தெருவை அடைந்ததும் இடப்புறம் திரும்பினால் தெருக்கோடியில் ஆலயம் அமைந்துள்ளது. அதற்கு அப்பால் வயல்களே உள்ளன. கோயிலுக்கு எதிரில் அழகான திருக்குளமும் ஸ்தல விருக்ஷ மேடையும் இருக்கின்றன. நாம் முதல் முறையாக இக்கோயிலைத் தரிசித்தபோது கண்கள் குளமாயின. காணக் கூடாத காட்சிகள். சுற்று மதில்  இல்லாததால் உள்ளூரில் சிலர் பிராகாரத்தை மிகவும் அசுத்தப் படுத்தியிருந்தனர். மூக்கைப் பிடித்துக் கொண்டே வலம் வர வேண்டியிருந்தது. 


அரைகுறையாகத் திருப்பணி நடை பெற்றுக் கை விடப்பட்டதோடு, நடந்து வந்த ஒரு கால பூஜையும் நின்று போயிருந்தது. கதவுகளே இல்லாத சன்னதிகள். பிரதிஷ்டை செய்யப்படாத பரிவார மூர்த்திகள், வேரூன்றிப் பிளவு பட்டிருக்கும் விமானங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் கல் மனமும் கரைந்தே தீரும். உள்ளூர்வாசிகள் ஓரிருவரே தினமும் விளக்கேற்றி வந்தனர்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் சேக்கிழார் பெருமானது வாக்கில் வந்துள்ள இவ்வூருக்கு இந்த நிலை வரலாமா? சைவ சமய ஆர்வலர்கள் எங்கே போயினர்? பெரிய ஊர்களில் கயிலாய வாத்திய முழக்கமும் முற்றோதுதலும் செய்து விட்டால் போதும் என்று நினைக்கிறார்களா? இப்பழமை வாய்ந்த தலங்களைப் பற்றி யார்தான் கவலைப் படப் போகிறார்கள் என்றெல்லாம்  யோசிக்க வேண்டியிருந்தது. 

பிறர் என்ன செய்கிறார்கள் என்று வினா எழுப்புவதை விட, நாம் நம்மால் முடிந்த அளவில் என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்ததில் நமது அமைப்புக்கு வழி காட்டும் நல்லன்பர் ஒருவரின் பெருந்துணை இறையருள் காரணமாக வெளிப்பட்டது. திருப்பணிகள் துவங்கலாயின. அதன் விவரங்களை அறியும் முன்பாக  இத் தலப் பெருமையையும் இங்கு அறிந்து கொள்வோமாக.

வைப்பூரில் தாமன் என்பவன் இருந்தான். அவனுக்கு ஏழு புதல்விகள். அவர்களில் மூத்தவளைத் தனது மருமகனுக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தருவதாக வாக்களித்திருந்தான். ஆனால்  ஆசை காரணமாகத் தன வந்தன் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான்.இப்படியே மற்ற ஐந்து பெண்களையும் தனவந்தர்களுக்கே மணம் செய்து கொடுத்தான். ஏழாவது பெண் ஒருத்திக்கே மணம் செய்ய வேண்டியிருந்தது. தன்னையும் மற்ற சகோதரிகளுக்கு நேர்ந்தது போலத்  தந்தை  வேறு ஒரு வரனுக்குக்  கொடுத்துவிட்டால் வாக்கு மீறிய பெரும் பழி வந்து விடுமே என்று அஞ்சித்  தனது முறைப் பையனையே மணக்கத் துணிந்தாள் அப்பெண் . 


அக்கன்னியும் அவளது  முறைப்பையனும் வைப்பூரை விட்டுக் கிளம்பினர். இரவு நேரம் வந்து விட்டபடியால் திருமருகல் என்ற ஊரில் உள்ள மாணிக்க வண்ணரது ஆலயத்தை ஒட்டியிருந்த மடத்தில் உறங்கினர். அப்போது அவ்வணிகப் பிள்ளையை ஒரு பாம்பு கடித்து விட்டதால் விஷம் தலைக்கேறி உடனே அவன் மாண்டு விட்டான். 

துணை யாரும் இல்லாத அந்த அபலைப்பெண் மருகல் பெருமானது திருக்கோயிலை நோக்கிய வண்ணம் கதறலானாள். கடல் நஞ்சை உண்ட பெருமானே, மாலயனாலும் காண முடியாத கடவுளே, சாம்பலாக ஆகுமாறு நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த பின்னர், அவனது மனையாளாகிய ரதி தேவி வேண்டியதற்கு இரக்கப்பட்டுக்  காமனை மீண்டும் உயிர்ப்பித்த கண்ணுதற் பெருமானே. அந்தணச் சிறுவனது உயிரைக் கொள்ள வந்த காலனைக் காலால் கடந்து அப்பாலகனுக்கு அருளிய பன்னகாபரணா, இவ்வணிகனது உடலில் ஏறிய விஷம் இறங்குமாறு காத்து அருளுவாய் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள் அப்பெண். 

சிவனருள் அப்பெண்ணுக்குச் சித்திக்கும் பேறு  அப்போது வாய்ந்தது. சிவத் தல யாத்திரையாக அங்கு எழுந்தருளிய திருஞான சம்பந்தப்பெருமானது திருச் செவிகளில் அப்பெண்ணின் அழு குரல் கேட்கவே, மனமிரங்கிய சீகாழி வள்ளல், அவளை நோக்கியவராகப் , " பயப்படேல் நீ " என்று அபயம் தந்தருளினார். அவளுக்கு நேர்ந்ததை அறிந்த ஞான சம்பந்தர், அப்பெண்ணுக்குக் கருணை காட்டியவராகப் , பாம்பின் விஷம் நீங்கி வணிகன் மீண்டும் உயிர் பெறுமாறு மருகல் பெருமானை வேண்டியபடி , " சடையாய் எனுமால் " எனத் துவங்கும் தேவாரத் திருப்பதிகம் பாடியருளினார். 


                                                                                 படம் உதவி: shaivam.org         
பெருமானே, இரவும் பகலும் கண் துஞ்சாது உன்னையே வழிபடும் இவ்வபலைக்குத் துயரம் ஏற்படுவது தகுமோ என்று பாடியருளினார்.  பதிகம் நிறைவு பெற்றதும் வணிகன் விஷம் நீங்கி உயிர் பெற்று எழுந்தான்.  இருவருமாகக் காழிப் பிள்ளையாரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அவ்விருவருக்கும் முறைப்படி விவாகம் செய்து வைத்தருளினார் சம்பந்தர். திருமருகல் ஆலயத்தில் கோடைக்கால பிரமோற்சவத்தில் ஒரு நாள் செட்டிப் பெண் விவாக ஐதீக நிகழ்ச்சி, கோயிலின்   பிராகாரத்திலுள்ள வன்னி மர  மேடைக்கருகில் விமரிசையாக ஆண்டு தோறும் நடை பெறுகிறது. 

வைப்பூர்  பெண்ணுக்கு  முதலில் சோதனை ஏற்பட்டாலும், அவளது தளராத சிவபக்தியின் காரணமாக சம்பந்தரின் வருகையும் அற்புதமும் நடை பெற்று , அவளுக்குப் பெருங்கருணை கிடைக்க ஏதுவாயிற்று. இப்போது சொல்லுங்கள்.  வைப்பூர் சிவாலயம் சிதைவடைவது தகுமோ? 

இதனைக் காக்க வேண்டும் என்று திருவருள் உணர்த்தியது. முன்னர் நடை பெற்ற திருப்பணியின்போது விமான வேர்கள் முழுமையாக எடுக்கப்படாததால் அப்பகுதியில் மீண்டும் ராட்சச வேர்களுடன் மரங்கள் முளைத்து விட்டன. அவற்றை முழுமையாகக் களையாமல் மேலெழுந்தவாரியாகப் பூசி மூடி விட்டால் திரும்பவும் அவ்விடம் மரம் முளைக்கவே செய்யும். ஆகவே, மிகக் கவனத்துடன் பாதிக்கப்பட்ட பகுதியைப் பிரித்துத்  தடித்த வேர்கள் அகற்றப்பட்டன. சுவாமி அம்பாள் சன்னதிகளில் இவ்வாறு நடந்த பின்னர் உள்ளூர் வாசிகளின் வேண்டுகோளின் படி, விநாயகர், முருகன் சன்னதிகளில் தளம் போடப்பெற்றது. ஆலயத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப் பட்டது. 

அருகிலுள்ள திருப்பயற்றூர் என்னும் தேவாரத் தல ்அர்ச்சகர்  தினமும்வந்து பூஜை செய்கிறார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை உள்ளூர் வாசிகள் பெரும்  முயற்சி செய்கிறார்கள். 

திருப்பணியும் கும்பாபிஷேகமும் நடந்து விட்டால் மட்டும் போதாது. தினசரி பூஜைகள் முறைப்படி செய்விக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்கள் தரிசிப்பதோடு, இந்த ஆலயத்தைப் பராமரிக்கத்  தங்களால் ஆன உதவிகளைச் செய்வதன் மூலம் சிவ புண்ணியம் பெறலாம். அதுவே, நம் குடி முழுவதையும் காப்பதோடு,நமது சமயத்தையும் காத்து நமது சந்ததிகளுக்கு நல் வழி காட்டும்.