Tuesday, May 22, 2018

ஐயர் மலை எனப்படும் திருவாட்போக்கி


                                               இரத்தினகிரி மகாத்மியம் 

                                                               சிவபாதசேகரன் 

இரத்தினகிரி என்னும் ஐயர் மலை குளித்தலைக்கு அருகிலுள்ள சிற்றூர். கடல் மட்டத்திலிருந்து 1178  அடிகள் உயரத்தில் உள்ள சிவாலயத்தை அடைய 1017 படிகள் ஏறவேண்டும். வழி நெடுகிலும் உயர்ந்த பாறைகள், மூலிகைச் செடிகள், குரங்குக் கூட்டங்கள் என்பவற்றைப் பார்த்துக் கொண்டே மேலே சென்றால் ரத்னகிரீசுவரரின் ஆலயத்தை அடையலாம். 

திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரப் பதிகம் ஒன்று இத்தலத்தின் பேரில் உள்ளது. அதில் இத்தலத்தின் பெயர் வாட்போக்கி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலதூதுவர் வரும் முன்னம் வாட்போக்கியை வழிபடுங்கள் என்று அப்பர் பெருமான் அதில் உபதேசிக்கிறார்.

நாடி வந்து நமன் தமர் நள்ளிருள் 
கூடி வந்து குமைப்பதன் முன்னமே 
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை 
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே.
  
என்பது அத்திருப்பதிகத்தில் ஒரு பாடல். 


சோழ,பாண்டிய,சாளுக்கிய,விஜயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் சுமார் 50 உள்ளன. திருச்சிராப்பள்ளியிலிருந்து குளித்தலை வழியாக ஐயர் மலையை அடையலாம். மலைக் கோயிலாக இருப்பதால் காலை பத்து மணிக்கு மேல் தான் திறக்கிறார்கள். உச்சிக்கால பூஜை விசேஷமாகக் கருதப்படுவதால் அந்த நேரத்தில்தான் பெரும்பாலானோர் வருகிறார்கள். தல வரலாறு: 

ஒரு சமயம், நைமிசாரண்யத்தில் தவத்தில் சிறந்த முனிவர்கள் சிவபெருமானைக் குறித்துத் தியானித்துக் கொண்டு இருக்கும்போது  தவசிரேஷ்டராகிய சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய முனிவர்கள், " முனிவர் பெருமானே, தாங்கள் இங்கு எழுந்தருளிய போதெல்லாம் பல ஸ்தலங்களின் வரலாறுகளைக் கூறி அருளினீர்கள். ஒரு காலத்தில் ஆதி சேஷனுக்கும் வாயுவுக்கும் நிகழ்ந்த போரில் மேரு மலையின் சிகரங்கள் பலவிடங்களில் வீழ்ததாகக் கூறினீர்கள். அவ்வாறு அவை வீழ்ந்த இடங்கள் என்ன என்பதையும் அவற்றின் சிறப்பையும் எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் " என்று பிரார்த்தித்தார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்த சூத முனிவர், " யாராலும் சொல்ல முடியாத பெருமையை உடைய அத்தலங்களைப் பற்றி யான் அறிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன் " என்றார். 

" பாண்டிய நாட்டில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அகஸ்தியரால் வழிபடப்பெற்ற நீலாசலம் என்ற தல்ம் உள்ளது. அங்கு வில்வ மர  நீழலில் எழுந்தருளியிருக்கும் பரமேசுவரனுக்கு ஈசான திசையில் ஓர் மலை இருக்கிறது.  காவிரியின் மேற்கரையில் பூமிக்குள் ஒரு பாகம் அழுந்தியபடி சுவேதாசலம் என்ற மலை உள்ளது. அங்கு தேவ தீர்த்தமும் வன்னி வ்ருக்ஷமும் உள்ளன. இங்கிருந்து மூன்று யோசனை தொலைவில் காவிரியின் தென்புறத்தில் இரத்தின கிரி என்ற மலை உள்ளது. அங்கு மகிமை வாய்ந்த வேப்ப விருக்ஷமும் உள்ளது. தேவேந்திரனுக்கு  சாபம் நிவர்த்தி ஆன தலம் அது. மேலும் காவிரியின் வடகரையில் புளிய விருக்ஷத்தொடு கூடிய மரகதாசலம் என்ற மலையும் இருக்கிறது. இவையன்றிக் கந்த நதிக் கரையில் குண்டிகாசலத்தில் வன்னிகர்ப்பம் என்ற ஸ்தலம் இருக்கிறது. இவற்றுள் இப்போது உங்களுக்கு,  நினைத்த மாத்திரத்தில் எல்லாப் பாவங்களையும் நீக்கும் இரத்தினாசலத்தின் பெருமைகளை ஒருவாறு சொல்கிறேன் " என்றார். 

" இரத்தினகிரீசுவரரைத் தரிசித்த அளவில் எல்லாப் பாவங்களும் விலகும்.இம்மலை பூமியில் விழுந்த வேகத்தால் தரைக்கு உள்ளே ஒரு பாகம் அமிழ்ந்து இருக்கிறது.இது பதிராறு யோசனை உயரமும் மூன்று யோசனை அகலமும் கொண்டது. இங்கு மகிமை வாய்ந்த தேவ தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் உள்ளன. இரத்தின லிங்கம் உமா தேவியால் பூஜிக்கப்பட்டது. இங்கு எட்டு தீர்த்தங்கள் உள்ளன. மலை உச்சியில் தேவ தீர்த்தம் உள்ளது. என் போன்றவர்களால் அதன் பெருமை சொல்லுவது மிகக் கடினம். முனிவர்கள் பலர் இங்குக் கடும் தம் செய்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாக்ஷரமே இம்மலை வடிவு என்பார்கள். வேதப் பொருளாய் விளங்கும் பரமன் இங்கு வீற்றிருக்கிறான். பல்வேறு பிறவிகளிலும் புண்ணியம் செய்தோருக்கே இத்தளத்தின் காட்சி கிடைக்கும் என்பது உண்மை. முறைப்படி தேவ தீர்த்தமாடி, மலைக் கொழுந்தாய்  எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும் சுரும்பார் குழலி அம்பிகையையும் வணகித் தொழுது விட்டு அங்குள்ள வேப்ப விருக்ஷத்தடியில் பஞ்சாக்ஷரஜபம் செய்தால் எல்லாத் தீங்குகளும் நீங்கும். வறுமை, கொடிய நோய்கள் ஆகியவை நீங்கும். ஞானமும் சித்தியும் கைகூடும். " 

அகலிகையை விரும்பிய பாவம் தீர, வியாழ பகவானின் அறிவுரைப்படி, இந்திரன் இரத்தினாசலத்தை அடைந்துதேவியின் சன்னதியில் வேப்ப மர பிரதிஷ்டை செய்தான். மலை உச்சியில்,தனது வஜ்ஜிராயுதத்தால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கிதினமும் காலையில் திரியம்பக மந்திரத்தை உச்சரித்து அதில் நீராடி, சுவாமிக்கும் அம்பிகைக்கும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த மணம் மிக்க மலர்களால் அர்ச்சித்து வணங்கினான். தான் ஸ்தாபித்த தீர்த்தத்தின் அருகிலுள்ள குகையில் அமர்ந்து பஞ்சாக்ஷர ஜபம் செய்து வந்தான். இதனால் அவனது பாவம் நீங்கிற்று. இந்திரனது பூஜையால் மகிழ்ந்த பரமசிவனும், தேவர்கள் சூழ முடியில் சந்திரனைத் தரித்தவராகவும், வெண்ணீறு அணிந்தவராகவும் அம்பிகையோடு ரிஷப வாகனத்தில்எழுந்தருளி  அவனுக்குக் காட்சி அளித்தார். ரத்தினகிரியில் தவம் செய்வோர் அனைவருக்கும் இஷ்ட சித்திகள் நிறைவேறும் என்ற வரத்தையும் அளித்தருளினார். அப்போது இந்திரன் சுவாமியைத் தோத்திரம் செய்தான். அத்தோத்திரத்தை சிவபூஜை முடிவில் படிப்பவர்கள் அஷ்ட ஐசுவர்யங்களையும் பெறுவர். எவ்வித நோய்க்கும் ஆளாக மாட்டார்கள். அரசனாக இருந்தால் போரில் வெற்றி கிட்டும். பக்தர்களுக்கு முக்தி கிடைக்கும். சந்தேகமே  வேண்டாம் என்று சுவாமியே திருவாய் மலர்ந்து அருளினார். 

"தக்ஷிணாயணம்.உத்தராயணம் , விஷு , சூரிய-சந்திர கிரகணம் அமாவாசை,சோமவாரம்,ஜன்ம நக்ஷத்திரம், ஸ்ராத்த தினம் ஆகிய புண்ணிய காலங்களில் தேவ தீர்த்தத்தில்  ஆயாகி என்னும் மந்திரத்தை மும்முறை உச்சரித்து நீராடி விட்டு, வேம்புக்கு அபிஷேகம் செய்து,சுவாமி அம்பாளைத்   தரிசித்து விட்டு, அந்தணர்களுக்குத் தானம் செய்தால் கயா  ஸ்ராத்த பலனைப் பெறலாம். வேம்பினடியில் கன்னிகா தானம் செய்தால் சிவலோகம் சித்திக்கும். 

இரத்தினாசலத்தைச் சுற்றி உள்ள ஐந்து குரோச இடத்திற்குள் அந்தணர்க்கு வீடும் விளைநிலங்களும் தானம் செய்யும் அரசன் சிவரூபம் பெறுவான். ஒரு மாத காலம் இங்குத் தங்கி, தேவ தீர்த்தத்தில் நீராடி, வேம்பைப் பூஜித்தால், குஷ்டம், வாதம் குன்மம் போன்ற கொடு நோய்கள் விலகி விடும். தானே உதிர்ந்த வேம்பின் இலைகளைப் புசித்தால் குருடர்கள் கண் பெறுவர். செவிடர்கள்  கேட்கும் திறனையும், ஊமைகள் பேசும் வன்மையையும் பேச்சு திக்குபவர்களுக்குப் பேச்சும், நல்ல கல்வியும் அங்கக்  குறைவு உள்ளவர்களுக்கு அழகிய சரீரமும் பிள்ளை இல்லாதோருக்குப்   புத்திர பாக்கியமும் வாய்க்கும் . வேம்பின் பெருமையை சிவசன்னதியில் படிப்போர் முக்தி வரம் பெறுவர்." 
                                                                 இரத்தினாசல மகாத்மியம் தொடரும்  

4 comments:

 1. Will eagerly await the next instalment of Ratnachala mahatmyam. You may then also explain the significance of the name vaatpokki to this wonderful kshetra, which seems to be a போக்கி of
  பிணி, வறுமை, மனக்கவலை மலடு and பிறவிப் பெருங்கடல் அமிழ்தல். அப்பர் பெருமானின் பதிகப்படி த்லத்தின் பெயர் ஆட்பொக்கியாகக் கூட இருக்கலாமோ? அப்படிப் படித்தாலும் பொருள் விளங்கவில்லை.
  தேசிகன்.

  ReplyDelete
 2. அன்புள்ள சேகர், ஆட்போக்கி என்று எழுத நினைத்து, தவறாக ஆட்பொக்கி என்று குறித்திருக்கிறேன். அப்படியும் இருக்க முடியுமோ?

  ReplyDelete
 3. ஆள் ஆகார் என்றும் பொக்கம் மிக்கவர் என்றும் அய்யனை வழிபடுவதுண்டல்லவா?

  ReplyDelete
 4. வாட்போக்கி என்பது காரணப் பெயர். விரிவை அடுத்த பகுதியில் காணலாம். தாங்கள் காட்டி வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete