Sunday, April 22, 2018

கடம்பவனம், ரத்னாசலம், மரகதாசலம்



கடம்பவனேசுவரர் கோயில்,குளித்தலை 
                                                                 சிவபாதசேகரன்

திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள அற்புதமான சிவஸ்தலங்கள் மூன்றை நாம் இப்போது சிந்திக்குமாறு திருவருள் கூட்டியுள்ளது. அம்மூன்றின் பெயர்களை நாவினால் உச்சரித்தல் சிறந்த சிவபுண்ணியத்தைத் தரும். நேரில் சென்று தரிசிப்பவர்கள் பெறும் பயன் அளவிட முடியாதது. அம மூன்று தலங்களாவன, கடம்பந்துறை ( குளித்தலை),  திருவாட்போக்கி      ( ஐயர்  மலை ), மற்றும்  திரு ஈங்கோய் மலை என்பனவாம். ஒரே நாளில் காலையில் கடம்பந்துறையையும் , உச்சி வேளையில் ஐயர் மலை எனப்படும் வாட்போக்கியையும், மாலையில் திரு ஈங்கோய்  மலையையும்  தரிசிக்க வேண்டும்.மூன்றுமே தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். அவற்றுள் கடம்பந்துறையும், வாட்போக்கியும் காவிரியின் தென்கரையிலும்,ஈங்கோய் மலை வடகரையிலும் அமைந்துள்ளன.  

இம்மூன்று  தலங்களின் மான்மியன்களைப் பற்றிய சிறு நூல் ஒன்று நம் கைவசம் இருந்த போதிலும் தலங்களை நேரில் சென்று தரிசித்த பிறகே அவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் காலம் தாழ்த்த வேண்டியிருந்தது. இத்தலங்களை இரண்டாவது முறையாகத்  தரிசித்த பிறகே எழுதும் ஆவல் மேலோங்கியது. அப்புத்தகம் 1891 ம்  ஆண்டே வெளியிடப்பட்டதால், தற்போது பக்கங்களைத் திருப்பினால் உடையும் அபாய நிலையில் உள்ளது. அதனை மிகுந்த எச்சரிக்கையுடன் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இம்மூன்று தலங்களுக்கும் வடமொழியில் புராணம் இருந்ததாகவும், அதனை சிதம்பரம் பிரமஸ்ரீ  ஸ்ரீனிவாச சாஸ்த்ரி என்பவரைக் கொண்டு வடமொழியில் அச்சிட்டதாகவும், பின்னர் மேற்படி சாஸ்த்ரி அவர்களைக் கொண்டு தமிழாக்கம் செய்து, பதிப்பித்ததாகவும் அந்நூலில் காணப்படுகிறது. 

கடம்பந்துறை ( குளித்தலை என்று வழங்கப்படுகிறது ):  

இருப்பிடம்: திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 35  கி.மீ. ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு. 

கடம்பவனப் புராணச் செய்திகள்: 

நைமிசாரண்யத்தில் சௌனகாதி ரிஷிகள் சத்திர யாகம் செய்து சிவபெருமானை நோக்கி அருந்தவம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய பிற முனிவர்கள், ஒப்பில்லாத கடம்பவன மகாத்மியத்தை எடுத்துரைக்குமாறு விண்ணப்பித்தனர். அதற்கிசைந்து, சூத முனிவரும் அதனைக் கூறலானார். முன்னம் ஒரு கற்ப காலத்தில், பிரம தேவனானவர் தான் ஓய்வின்றி சிருஷ்டித் தொழிலைச் செய்து வருதலால் மனம் வருந்தி, சிவபெருமானை வந்தித்துச் சிவானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டிக் கயிலை மலையை அடைந்து தனது உள்ளக் கருத்தைச் சிவபிரானிடம் விண்ணப்பித்தார். பிரமனது தோத்திரத்தால் மகிழ்ந்த இறைவன், பிரமனைத் தவம் செய்யுமாறு அருளவே, அதற்கான இடம் கடம்பந்துறை என்றும் திருவாய் மலர்ந்தருளினான். 

திருவருளை எண்ணி மகிழ்ந்த பிரமன், பல்வேறு தலங்களை வணங்கிப் பின் கடம்பவனத்தை அடைந்து, காவிரியில் நீராடி, கடம்ப மர  நிழலில் பல்லாண்டுகள் தவம் புரிந்தான் . அதன் பலனாக, கடம்பவனநாதன் பிரமனுக்குக் காட்சி அளித்து, தனது திருக் கரங்களை  அவனது முடி மேல் வைத்து, " காவிரியை நோக்கி வட திசை நோக்கி இருக்கும் மகாலிங்கத்தில் நாம் எழுந்தருளி, உமாதேவியுடன் ஐந்தொழில் நடனங்கள் செய்து வருவதால் இங்கு நம்மை வழிபடும் அனைவரும் தாம் விரும்பிய அனைத்தையும் பெறுவர். அக்கினித் திக்கில் உள்ள தீர்த்தத்தைச் சீர் செய்து, கிழக்கு நோக்கியவாறு ஒரு சன்னதியை உமா தேவிக்கும் அமைத்துச்  சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவமும் செய்வித்துப் பின்னர் சாயுச்சிய பதவியை அடைவாயாக " என்று அருளி, அம்மகாலிங்கத்தில்  மறைந்தருளினார். அதன்படியே பிரமனும் திருவிழா நடத்திப் பின்பு சிவானந்தம் பெற்றான். 

முன்னொரு காலத்தில் தூம்ர லோசனன் என்ற அசுரன் துர்க்கா தேவியைப் போரிட்டு எதிர்த்தான். அசுரனது கணைகளால் தேவியானவள்  சோர்வுற்றபோது சப்த கன்னியர்கள் அசுரனைக் கோபாவேசத்துடன் போரிட்டனர். அவர்களை எதிர்க்க இயலாத அசுரன் புறம்காட்டி ஓடி, சூரியனை நோக்கித் தவம் புரியும் காத்யாயன முனிவரது ஆசிரமத்திற்குச் சென்று ஒளிந்திருந்தான். அரக்கனைத் தேடி வந்த சப்த மாதர் அங்குத் தவம் புரியும் முனிவரே அசுரனது மாயை எனக் கருதி, அவரைக் கொன்றனர். அதனால் அவர்களைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. அதனைப் போக்கிக் கொள்ள வேண்டி அக்கன்னியர்கள் பல சிவத்தலங்களையும் தரிசித்து விட்டுக்  கடம்பவனத்தை அடைந்தவுடன்   அத்தோஷம் அவர்களை நீங்கியது. ஒருமுறை அகத்திய முனிவர் இங்குத் தவம் செய்வதைக் கண்ட மற்ற முனிவர்கள் அவரை வணங்கி, " இத் தலத்தைத் தரிசித்துக் கபிலைப் பசுவை தானம் செய்வது சிறப்பு " என்கிரார்களே, அதன் மகிமையைத்  தேவரீர் விளக்கி அருளவேண்டும் என்று வேண்ட,அகத்தியரும் கபிலை மான்மியத்தை எடுத்து உரைத்தார். 

கபிலைப் பசுவானது பருத்த கண்களும்,சிவந்த உரோமமும் கொண்டது. அக்னி சம்பந் தப்பட்டது. ஆகவே ஆக்னேயி எனப்பட்டது.  அதன் பால்,தயிர் போன்றவற்றை உட்கொள்ளலாகாது.ஆனால் பஞ்சகவ்யத்தை உண்டால் அஸ்வமேத யாக பலனைப் பெறலாம். இதனை வலம் வந்தால், பூமி முழுதும் வலம் வந்த பலன் கிடைக்கும். இதன் கொம்புகளைக் கழுவி, தண்ணீரைத் தலையில் தெளித்துக்கொண்டால் இஷ்டசித்திகள் யாவும் பெறலாம். தானங்களில் சிறந்தது கபிலைப் பசுவைத் தானம் செய்வதே ஆகும். இப்பசுவில் பத்து வண்ண வகைகள் உண்டு. அவற்றுள் பொன்னிறம் கொண்டதே உத்தமம் என்பர். இதனைப் புண்ணியத் தலங்களில் தானம் செய்தால் சிவனருளைப் பெறுவார்கள். 

கபிலையின் பெருமையைக்கேட்ட முனிவர்கள் அகத்தியரை வணங்கி, " முனிவர் பெருமானே, இங்கு தேவசர்மர் என்பவர் பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்டுச் செய்வதறியாது உழல்கிறார். அவர் ஒரு கபிலையத் தானம் செய்யச் சித்தமாக உள்ளார். அப்பசுவப் பெறத் தகுதியானவர் தங்களைத் தவிர வேறு எவருமில்லை. எனவே தாங்கள் மனமிரங்கி அப் பசுவைப் பெற்றுக் கொண்டு தேவசர்மருக்கு அருள வேண்டும் " என்று வேண்டினார்கள். அகத்தியரும் அவ்வாறு தானம் பெற்றவுடன் தேவசர்மர் தனது பாவம் யாவும் நீங்கப்பெற்று, முனிவர்கள் சூழ, கடம்பவன நாதர் சன்னதியை அடைந்து துதித்தனர். தேவ சர்மரின் ப்ரார்த்தனைக்கிரங்கிய பெருமான், முனிவர்கள் அனைவருக்கும் தாம் முன்னர் மதுரையில் தடாதகைப் பிராட்டியை மணந்த திருக் கோலத்தைக் காட்டி அருளினார்.

 முன்னொரு காலத்தில் சோமகன் என்ற அசுரன் ஒருவன் வேதங்கள் யாவற்றையும் கவர்ந்து கொண்டு பாதாள லோகம் சென்று விட்டான். இதனால் கலக்கமுற்ற விஷ்ணு முதலிய தேவர்கள் கடம்பவனத்தை அடைந்து பெருந்தவம் செய்தனர். அத்தவப்பலனாக விஷ்ணுவானவர் மச்சாவதாரம் எடுத்துப் பாதாளம் சென்று அசுரனை மாய்த்து, வேதங்களை மீண்டும் கொண்டு வந்து கடம்பவனத்தில் ஸ்தாபித்தருளியதால் இத்தலம் வேதபுரி எனப்பட்டது. கடம்பவனநாதரூக்குரிய மந்திரத்தைப்  புண்ணிய காலங்களில் ஜபித்தால் பெறுதற்கரிய பேறுகள் அனைத்தையும் இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் .

கயிலை மலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதனை முறையாக உபதேசம் பெற்றுக் கேளாமல் மறைந்திருந்து முருகப்பெருமான் கேட்ட குற்றத்திற்காக ஊமை ஆயினார். பல்வேறு தலங்களிலும் வழிபட்ட முருகக்கடவுள் கடம்பந்துறையை அடைந்து தவம் செய்யவும், குற்றம் நீங்கப்பெற்றதோடு ,ஊமைத்தன்மையும் நீங்கப்பெற்றார்.  குமாரக்கடவுளின் துதிகளால் மகிழ்ந்த சர்வேசுவரனும் உமையன்னையோடு காட்சி அளித்து சுப்பிரமணிய மூர்த்தியைத் தனது மடி மீதிருத்தி ஞானோபதேசம் செய்தருளினார். அதனால் இத்தலம் ஞானோதயபுரி எனப்பட்டது. 

இங்கு எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிப்போர் எல்லா நற்பலன்களையும் பெறுவர்.  சித்திரை வைகாசி மாதங்களில் பௌர்ணமி தினங்களில் வழிபடுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. இங்கு அன்னதானம் செய்தால் பிற தலங்களில் செய்வதைக் காட்டிலும்  அதிக பலனைப் பெறலாம். 

இதுபோல வடக்கு நோக்கிய தலம் வாரணாசியாகும். இங்கு ஓடும் காவிரி ஆறு கங்கையை ஒக்கும். எனவே இதனைத் தக்ஷிண காசி எனப் பெரியோர் கூறுவார். இங்கு காவிரியில் நீராடி ஜபம் முதலிய அனுஷ்டானங்களைச் செய்து, கடம்பவனேசருக்கும், பாலகுசாம்பிகைக்கும்   அபிஷேகம் செய்து, நிவேதனம் சமர்ப்பித்தல், ஆலயத் திருப்பணி செய்தல் உற்சவங்கள் செய்தல் ஆகியவற்றால் சாயுச்சிய பதவியைப் பெறலாம். ஏழை ஆனாலும் சிறிதளவே பொருள் கொடுப்பவனும்  பாவ நிவர்த்தி பெறுகிறான். 

கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதா யுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு  பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார்.  

யாத்திரை முறை: கொடிய பாவங்களையும்நீக்க வல்ல கடம்பந்துறையை முறைப்படி எவ்வாறு வழிபட வேண்டும் என்று சூத முனிவர் கூறலாயினர்: " விடியற்காலையில் காவிரியில் நீராடி நித்திய கர்மாக்களைச் செய்து விட்டு, மண்ம் மிக்க பூக்களை எடுத்துக் கொண்டு கடம்பவனேசரது ஆலயம் சென்று சுவாமி,அம்பாள் முதலிய மூர்த்திகளைத் தரிசிக்க  வேண்டும். அங்கு யாத்திரா சங்கல்பம் செய்து அந்தணர்க்கு இயன்ற அளவு தானம் செய்து, காவிரிக்குச் சென்று ஓர் குடத்தில் நீரை நிரப்பி, வாட்போக்கி (ஐயர் மலை)யை நோக்கித் தியானித்து விட்டு, ரத்னகிரிக்குச் (ஐயர் மலைக்குச்) சென்று மலை ஏறி அங்கு மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும்,அராளகேசி அம்பிகையையும் (சுரும்பார் குழலி) தரிசித்து , கடம்ப வனத்திலிருந்து கொண்டு வந்த காவிரி நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்விக்க வேண்டும்.

 அங்கிருந்து காவிரியைக் கடந்து திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசலத்தை அடைந்து, மலை ஏறி சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு மீண்டும் கடம்பந்துறையை அடைந்து அர்ச்சனை ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அன்றிரவு அத்  தலத்திலேயே தங்கி மறுநாள் காலை காவிரியில் ஸ்நானம் செய்து தானங்கள் செய்து விட்டு ஆலய தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நூறு முறை கங்கா யாத்திரை செய்வதற்கும், ஆயிரம்முறை சேது யாத்திரை செய்வதற்கும் சமம். இப்புராணத்தைப் படிப்போரும் கேட்போரும் அனைத்து சித்திகளையும் பெறுவார்கள் . இதனால் நாமும் புனிதர்கள் ஆயினோம் " என்று சூதர் நைமிசாரண்ய முனிவர்களிடம் அருளிச் செய்தார். 

                                                        தலப் பாடல்கள் சில: 

பண்ணின் மொழி கேட்கும் பரமனை 
வண்ண நன் மலரான் பல தேவரும் 
கண்ணனும் அறியான் ; கடம்பந்துறை 
நண்ண நம் வினையாயின நாசமே
                                                        --- திருநாவுக்கரசர் தேவாரம்

அழுகு திரிகுரம்பை ஆங்கு அதுவிட்டு ஆவி 
ஒழுகும் பொழுது அறிய வொண்ணா -- கழுகு
கழித்து உண்டு அலையா முன் காவிரியின் தென்பால் 
குழித்தண் டலையானைக் கூறு.
                                                      -- ஐயடிகள் காடவர் கோன் நாயனார் 

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழால் பாடியுள்ளார். 
                 
 அடுத்த பதிவில் : இரத்னகிரி (ஐயர் மலை )மகாத்மியம் 

No comments:

Post a Comment