Friday, October 16, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – VII

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் VII

                                           சிவபாதசேகரன்

காசி மாநகரத்தில் விநாயகர்,சூரியன், சிவபெருமான், பராசக்தி, துர்க்கை, விஷ்ணு,நரசிம்ஹர்,பைரவர், ஆகிய தெய்வங்களின் கோயில்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றுள் நாம் அறிந்த வரையில் அவற்றின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. உள்ளூர் வாசிகளிடம் உறுதி செய்து கொண்டு தரிசிக்கச் சென்றால் செல்லும் வழியைத் தெளிவாக அறியலாம்.

விநாயகர் ஆலயங்கள்:


                                                                           நன்றி:வலைத்தளப் படம் 

துண்டி விநாயகர் : துண்டி கணபதி எனப்படும் இவரது சன்னதி, விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது.

கணநாத விநாயகர்: துண்டி கணபதி சன்னதியிலிருந்து ஞான வாபிக்குச் செல்லும் வழியில் உள்ளது.

ஆஷா கணபதி: விசாலாக்ஷி கோயில் அருகில்.( மீர் காட் வரை படகில் சென்று படிகளில்  ஏறினாலும் அடையலாம்)

மணிகர்ணிகா விநாயகர்: மணிகர்ணிகா கட்டத்தில் சடுவா பாபா ஆசிரமத்தின் அருகில் உள்ளது.

ஸித்தி கணபதி: மணிகர்ணிகா காட் பக்கத்திலுள்ள யம தீர்த்தம் அருகில் உள்ளது.

வக்ரதுண்ட விநாயகர்: காசியின் வடபுறம் லோஹாட்டியா என்ற இடத்துக்கு அருகில் உள்ளது.

விக்ன ராஜ கணபதி: ராம் லீலா மைதான் அருகில் உள்ளது.

அர்க் விநாயகர்: லோலார்க் குண்ட்  என்ற இடத்தில் அஸி- கங்கா சங்கமத்திற்கு அருகில் உள்ளது.

துர்க் விநாயகர்: மேற்கூறிய அர்க் விநாயகர் சன்னதிக்குத் தெற்கே அமைந்துள்ளது.

லம்போதர கணபதி: அர்க் விநாயகர் கோவிலுக்கு வடக்கே உள்ளது கேதார் காட் சாலையில் உள்ள இக்கோயிலை சிந்தாமணி கணேஷ் கோயில் என்கிறார்கள். பெரிய மூர்த்தம்.

மோதகப் ப்ரிய கணபதி: த்ரிலோசன் காட் அருகில் உள்ளது. ப்ரஹலாத் காட்  என்றும் வழங்குவர்.

 உத்தண்ட் முண்ட் கணபதி: மேற்படி மோதகப் ப்ரிய கணபதி கோயிலுக்கு  தெற்கில் பில்பில தீர்த்தத்தில் உள்ளது.

நாகேஷ் விநாயகர்: மேற்படி உத்தண்ட் முண்ட் கணபதிக்குத் தென்புறம் உள்ளது. ( சௌக் பக்கத்தில் உள்ள சங்கட தேவி கோயிலருகில் )   

மித்ர விநாயகர்: சௌக் என்ற இடத்திற்கு அருகில் யம தீர்த்தத்தின் வடபுறம் உள்ளது.

ஸ்ரீ யக்ஷ் கணபதி: சௌக் என்ற இடத்திற்கு அருகில் ருத்ர பிரயாக்,       கோத்வால்புராவில் ஒரு வீட்டிற்குள் உள்ளது.  

ப்ரமோத கணபதி: சௌக் என்ற இடத்திற்கு அருகில் நைபலி கப்ரா என்ற இடத்தில் உள்ளது.

ஸ்ருஷ்டி கணபதி: சௌக் என்ற இடத்திற்கு அருகில் காளிகா கல்லி என்ற இடத்தில் சுக்ரேச்வரருக்கு எதிர்  சுவற்றில் உள்ளளர்.

கர்வ விநாயகர்: கங்கையும் வருணையும் சங்கமம் ஆகும் இடத்தில் ராஜ் காட் கோட்டையின் உட்புறம் ஆதி கேசவர் கோயிலருகிலுள்ள வீட்டில் உள்ளது.

ராஜ புத்ர விநாயகர்: கர்வ விநாயகர் கோவிலின் வடகிழக்கே ராஜ் காட் சாலையில் உள்ளது.

வரத விநாயகர்: ராஜ புத்ர விநாயகர் கோவிலுக்கு வட கிழக்கே நயா  மஹா தேவ் காளி மந்திர் /ப்ரஹலாத் காட் என்ற இடத்திலுள்ளது.

பிச்சண்டில் விநாயகர்: வரத விநாயகருக்கு வடகிழக்கே ப்ரஹலாத் காட் என்ற இடத்தில் உள்ளது.

கால விநாயகர் : பிச்சாண்டில் விநாயகருக்குத் தெற்கே ராம் காட் படிக்கட்டில் அரச மரத்தடியில் உள்ளது.  

பிரணவ விநாயகர்: மேற்படி ராஜ புத்ர விநாயகர் கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. த்ரிலோசன் காட்டில் உள்ள ஹிரண்ய கர்பேச்வரர் கோயிலில் இந்த சன்னதி உள்ளது.

தேஹ்லி விநாயகர்: காசியின் நுழைவாயிலில் (20 கி.மீ.) தொலைவில் உள்ள கிராமத்திலுள்ள கோயில்

கூஷ்மாண்ட கணபதி கோயில்: தேஹ்லி கணபதி கோயிலுக்குக் கிழக்கே பூல்வாரியா என்ற இடத்தில் உள்ளது.

பஞ்சாஸ்ய கணபதி: கூஷ்மாண்ட கணபதிக்குக் கிழக்கில் பிசாச் மோசன் என்ற இடத்தில் உள்ளது.பஞ்ச முக கணபதி என்ற நாமமும் உண்டு.

க்ஷிப்ர பிரசாத கணபதி:  பஞ்ச முக விநாயகருக்குக் கிழக்கில் பித்ரேச்வரர் கோயில் என்ற இடத்தில் உள்ளது.

த்வி முக் கணபதி: க்ஷிப்ர ப்ரசாத கணபதிக்குக் கிழக்கே சூரஜ் குண்ட்  என்ற இடத்தில் உள்ளது.

உத்தண்ட் விநாயகர்: மேற்படி தேஹ்லி விநாயகருக்கு மேற்புறம் (ராமேச்வர் அருகிலுள்ள கிராமத்தில்) உள்ளது.

முண்ட விநாயகர்: உத்தண்ட விநாயகர் ஆலயத்திற்குத் தென் கிழக்கே சதன் பஜார் பகுதியில் உள்ளது. தலைப் பகுதியை மட்டுமே தரிசிக்க முடியும்.

ஹேரம்ப விநாயகர்: முண்ட விநாயகருக்குத் தென்கிழக்கில் மல்தஹியா என்னுமிடத்தில் உள்ளது. ( வணிக வளாகத்தின் 2 வது மாடியில்)

சிந்தாமணி விநாயகர்: ஹேரம்ப விநாயகருக்குத் தெற்கில் பாபு பஜார் என்ற இடத்தில் உள்ளது.

ஜ்யேஷ்ட கணபதி: சிந்தாமணி வினாயகருக்குத்தே கிழக்கில் மைதாகின் என்ற இடத்தின் அருகே (ஜ்யேஷ்டேச்வரர் லிங்கம் அருகில்) உள்ளது.

பாஸ் பாணி (பாச பாணி) விநாயகர்: காசியின் வடக்கிலுள்ள சதர் பஜாரில் அமைந்துள்ளது.

விகடத்வஜ விநாயகர்: பாஸ் பாணி விநாயகருக்குத் தெற்கில் தூமாதேவி கோவிலில் தூப் சண்டி என்ற இடத்தில் உள்ளது.

கூட் தண்ட்  விநாயகர்: காசியின் மேல்திசையில் கிநாராம் ஆச்ரமம், க்ரீம் குண்ட் , சிவாலா என்ற இடத்தில் இருக்கிறது.

ஏக தந்த விநாயகர்: கூட் தண்ட் விநாயகருக்கு வடக்கில் புஷ்ப தண்டேச்வர், பெங்காலி தோலா எனுமிடத்தில் இருக்கிறது.

சிங் துண்ட் விநாயகர்: ஏக தந்த விநாயகருக்கு வடக்கில் காளிஸ்புராவில்  (தசாஸ்வமேத காட் அருகில்) உள்ளது 

காளிப் ப்ரிய கணபதி: சிங் துண்ட் விநாயகருக்கு வடபுறம் மனப்ரகாமேச்வரர்  கோயிலில் உள்ளது.(சாக்ஷி விநாயகருக்குப் பின்புறம்)

அபய விநாயகர்: தசாஸ்வமேத காட்டில் சூல்  டங்கேச்வரர் கோயிலில் உள்ளது. 

ஸ்தூல் தண்ட் விநாயகர் : மேற்படி அபய விநாயகருக்குவடக்கில் மன்மந்திர் காட்டின் அருகில் உள்ளது.  

பீம் சண்ட்  விநாயகர் : வாரணாசிக்கு வெளியில் பஞ்சகோசி போகும் வழில் உள்ளது.

சால் கண்ட் விநாயகர்: பீம் சண்ட் விநாயகருக்கு வடக்கில் உள்ளது.

 

சூரியன் ஆலயங்கள்:

காசியை நீங்காது இருப்பதற்காக சூரியன் பன்னிரண்டு இடங்களில் ஆலயம் கொண்டு தரிசனம் தருகிறார்.

அருணாதித்யர்  ஆலயம்: வினதையின் குமாரனான அருணன் பூசித்துத் தனது அங்கஹீனம் நீங்கி ஆதித்தனது சாரதியாகப் பெறும் அருள் பெற்றதால் சூரியபகவான் இங்கு அருணாதித்யர் எனப்படுகிறார்.  த்ரிலோச்சன் காட்டில் உள்ள த்ரிலோசனேச்வரர் கோயிலில் இந்த சன்னதி உள்ளது.

த்ரௌபத் ஆதித்யர் ஆலயம்: பாண்டவர்கள் வனவாசத்தின்போது திரௌபதிக்கு எடுக்க எடுக்கக் குறையாது அன்னம் அளிக்கும் அக்ஷயபாத்திரத்தைக் கொடுத்த ஆதித்யர் இங்கு த்ரௌபதாதித்யர் எனப்படுகிறார். காசிக்கு வருபவர்கள் இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கப் பெறுவர் என்றும் சூரியன் வரமளித்தார். இக்கோயில், அக்ஷய வடம், விச்வேச்வரர் கோயில் அருகில் உள்ளது. அருகில் நகுலேச்வரர் சன்னதியும் உள்ளது.

கங்காதித்யர் கோயில்: கங்கையைத் துதித்தபடி அருள் வழங்குவதால் சூரியனுக்கு இப்பெயர் வந்தது. தசாஸ்வமேத் அருகில் லலிதா காட் என்ற இடத்தில் இந்தக் கோயில் உள்ளது. அருகில் நேபால் பசுமதிநாத் மந்திர் இருக்கிறது.

கேசவாதித்யர் கோயில்: காசியில் சிவலிங்க பூஜை செய்துகொண்டிருந்த மஹாவிஷ்ணு , அப்பூஜையின் சிறப்பை சூரியனுக்குக் கூறியதால் இங்கு கேசவாதித்யர் ஆனார். பாதோதாக தீர்த்தமாடிய பிறகு, கேசசவாதித்தரை ஞாயிற்றுக் கிழமை மற்றும் சப்தமியில் வழிபடுதல் சிறப்பு. இக்கோயில், ராஜ்காட் கோட்டை என்னுமிடத்தில் உள்ளது.    

காலோல்க் ஆதித்யர் கோயில்  : காசிப முனிவரின் மனைவிகளான கத்ரு, வினதை ஆகிய இருவருள், கத்ரு , வினதையை வஞ்சித்து அவளை அடிமையாக்கிக் கொண்டாள். இந்த அடிமையிலிருந்து நீங்குமாறு அவளது புதல்வனான கருடன் காசியில் சிவலிங்க பூஜை செய்ய அறிவுறுத்தினான். அவளுக்குக் காட்சியளித்த சிவபிரான் கருடனை விஷ்ணுவின் வாகனமாக்கியதோடு, சூரியனும் வினதைக்குப்  பாப விமோசனம் அளித்ததாகக் காசி காண்டம் கூறுகிறது.  ப்ரஹலாத் காட் அருகில், காமேச்வர் கோயில் என்ற இடத்தில் இந்த சன்னதி உள்ளது.

 லோலார்க் ஆதித்யர் கோயில்:ஏழேழ் பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கவல்ல இக்கோயில், துளசிகாட் என்ற பகுதியில் உள்ளது. லோலார்க் குண்டத்தில் நீராடி இவரைத் தரிசிக்க மக்கள் வருகிறார்கள். தோல் நோய்கள் நீக்க வல்ல கோயில் என்று இதனைக் காசி காண்டம்  சிறப்பிக்கிறது.

 

மயூக் ஆதித்யர் கோயில்: பஞ்ச கங்கா கட்டில் ஒருமுறை லிங்க ஸ்தாபனம் செய்து சூரியன் தவம் செய்யும்போது எழுந்த வெப்பத்தால் உயிர்கள் வாடின. சிவபெருமான் சூர்யன் முன் காட்சியளித்து அவனை மெதுவாகத் தொட்டவுடன் வெப்பம் குறைந்தது. சூரியனின் பிரகாசத்தால் மயூக் ஆதித்யன் எனப்பட்டான். மயூக் என்ற சொல் வெம்மையைக் குறிப்பதாகும். சிவபெருமானால் தொடப் பட்ட இவரது விக்ரஹம் எப்பொழுதும் ஈரத்தோடு குளிர்ந்து காணப்படுகிறது. மயூக் ஆதித்யரை வழிபட்டால் நோய் அண்டாது என்கிறது காசி காண்டம். பஞ்சகங்கா கட் வரை படகில் சென்று, படி ஏறிச் சென்று கோயிலை  அடையலாம். காலபைரவர் கோயில் வழியாகவும் செல்லலாம்.   இக்கோயிலுக்கு  உள்ளே,  சூரியனால் வழிபடப்பட்ட கபஸ்தீஸ்வரர், மங்கள் கௌரி ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கலாம். இக்கோயிலின் அருகில் ப்ரஹ்மேச்வரர் மற்றும் ப்ரஹ்மசாரிணி கோயில்கள்  இருக்கின்றன.

ஸாம்ப ஆதித்யர் கோயில் : ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி சாப நிவர்த்தி பெற வேண்டி, ஸாம்பன் காசிக்கு வந்து ஸாம்ப குண்டம் நிறுவி சூரிய பகவானைக் குறித்துத் தவம் மேற்கொண்டான். அதனால் அவனைப் பற்றியிருந்த நோய் அகன்றது. அக்குண்டம் தற்காலத்தில் சூரஜ் குண்ட் எனப்படுகிறது . இதில் நீராடி, ஸாம்ப ஆதித்யனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் எனப்படுகிறது. இக்கோயில் சூரஜ் கண்ட் என்ற இடத்தில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபடுவது சிறப்பு.

உத்தர்க் ஆதித்யர் கோயில்: பெற்றோரை இழந்த சுலக்ஷணா என்ற பெண் உத்தர்க் ஆதித்யனை வழிபட்டுக் கொண்டு இருந்தபோது அருகில் இருந்த ஒரு ஆட்டுக்கு மனம் இரங்கினாளாம். அவளுக்குப் பார்வதி-  பரமேச்வரர்கள் தரிசனம் தந்தபோது சுலக்ஷணாவின் வேண்டுகோளை ஏற்ற பார்வதி தேவி, அந்த ஆட்டைத் தனது பணிப் பெண் ஆகுமாறு மாற்றி அருளினாள். இங்குள்ள குண்டம் பக்ரி(யா) குண்டம் எனப்படுகிறது. இதில்  தை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி, சூரிய பகவானைத் தரிசித்தல் மிகுந்த பலனைத் தரும்.  

விமல் ஆதித்யர் கோயில்: விமல்  என்பவன் ,  தொழு நோயால் பாதிக்கப்பட்ட போது காசியில் உள்ள இந்த இடத்திற்கு வந்து சூரியனை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றான். இந்நோயால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற வரத்தையும் பெற்றான். தரிசித்தவுடனேயே அனைத்து நோய்களையும் இந்த சூரிய பகவான் தீர்த்து வைப்பதாகக் காசி காண்டம் உரைக்கிறது. இக்கோயில், காரி கௌன் பின்புறத்தில் கோடவ்லியா அருகே ஜங்கம்பரி என்ற  இடத்தில் உள்ளது.

வ்ருத்த ஆதித்யர் ஆலயம்: வயதில் முதியவராக இருந்த ஹரித் என்பவர் தவம் செய்ய இளமையை சூரியனிடம் வேண்டிப் பெற்றார். எனவே வயோதிகரால் வழிபடப்பெற்ற சூரிய பகவான் வ்ருத்த ஆதித்யர் எனப்படுகிறார். இந்த ஆலயம்,தசாச்வமேத் விச்வநாத் கல்லிக்கு அருகில், பாரே ஹனுமான்ஜிக்குத் தென்புறம், மிர் கட்டில் உள்ளது. படகு மூலம் மீர் கட் சென்றும் அடையலாம்.

யம ஆதித்யர் ஆலயம்: ஸங்கட் கட்டில் யமனால் வழிபடப்பெற்ற யமேச்வர லிங்கப்பெருமானையும், சூர்ய பகவானையும் தரிசிக்கலாம், சூர்யனும் இதனால் யம ஆதித்யர் எனப்படுகிறார். இங்கு யம தீர்த்தம் உள்ளது.

                                                 ( காசியின் பெருமைகள் தொடரும் )   

     

Sunday, October 11, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – VI

 ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் VI

                                           சிவபாதசேகரன்

வலைத்தளப் படம்-நன்றி-விக்கிபீடியா 

காசி மாநகரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களையும், ஸ்நான கட்டங்களையும் தரிசிக்க வேண்டுமென்றால் அங்கு சில வாரங்கள் தங்கினால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் காசிக்குச்  செல்பவர்கள் பெரும்பாலும் ஒரிருநாட்களே தங்கி விட்டுக்  கங்கையிலும் ஒரு சில கட்டங்களில் மட்டுமே  நீராடி விட்டு , விசுவநாதர், விசாலாக்ஷி , அன்னபூரணி, பைரவர், துர்க்கை ஆகிய மூர்த்திகளின் கோயில்களை மட்டுமே தரிசித்து விட்டு   வருகின்றனர். சுமார் 350 க்கும்மேற்பட்ட கோயில்களின் இருப்பிடமும் முக்கிய ஸ்நானகட்டங்களும் அவற்றின் பெருமைகளும் அறிந்து கொள்ளாமலேயே திரும்பி விடுகின்றனர். ஸ்ரீ விசுவநாதப் பெருமான் அருளால் , காசிக் கண்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற ஒரு நூல் கிடைத்தது. அதிலிருந்து பெறப் பட்ட சில முக்கியத் தகவல்களை இங்கு தருகின்றோம்.   நூலாசிரியர்கள் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

முதலாவதாகக் காசியில் உள்ள தீர்த்தங்களின் பெருமையை அறிவோமாக. பகீரதனது தவத்தால் பூமிக்குக் கங்கை வந்தவுடன், சிவபெருமானும் விஷ்ணுவும் அவனுக்குக் காட்சி அளித்ததையும் திருமாலானவர் சுதர்சன சக்கரத்தால் தீர்த்தம் உண்டாக்கியபோது சிவனது காதிலிருந்த குண்டலம் அதி வீழ்ந்து, மணி கர்ணிகா எனப் பெயர் பெற்றதையும் முன்னரே கண்டோம்.அப்பகுதி முழுதும் தெய்வீக ஒளி  வீசியதால்அதற்குக் காசி என்று பெயர் வழங்கப்பட வேண்டும் என்று மகாவிஷ்ணு கூறினார். மத்தியான ஸ்நானத்திற்கு ஏற்ற இடமும் இதுவே. தெற்கில் கங்கா கேசவர் ( லலிதா காட்), வடக்கே ஹரிச்சந்திர மண்டபம், கிழக்கே கங்கை , மேற்கில் சுவர்க்க த்வாரி ( சௌராஹா க்ராஸ் ரோடு ) ஆகியவை மணிகர்ணிகா க்ஷேத்திர எல்லைகளாகும் என்று விஷ்ணு பகவான் கூறியிருக்கிறார். இப்பகுதியானது ஹரிச்சந்திரனது வரலாற்றுத் தொடர்புடையது. படகில் இங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் சக்ர புஷ்கரிணி அருகிலுள்ள கரையில் நீராடலாம்.

 கங்கையில் நீராடுவதால் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும் என்று காசிக் காண்டம் குறிப்பிடுகிறது. அதனை நினைத்தாலே புண்ணியங்கள் வந்து சேருகின்றன. அங்கு செய்யப்படும் தானங்களுக்கும் பலன் அதிகம். அதனால் முன்னோர்களும் நரகத்திலிருந்தால் அதிலிருந்து விடுபட்டு, சுவர்க்கத்தை அடைகிறார்கள். இங்கு கங்கை உத்தர வாகினியாகப் பாய்கிறாள். இங்கு இறக்கும் எல்லா உயிர்களும் முக்தி பெறுகின்றன. வேறு ஊரில் இறந்த உடலின் அஸ்தியைக்  கங்கையில் கரைத்தால் மோக்ஷம் கிட்டிவிடும்.

வருண நதியும் கங்கையும் சங்கமிக்கும் இடத்தில் மஹா விஷ்ணு தனது பாதங்களைக் கழுவிக் கொண்டதல் அந்த இடம் பாதோதக தீர்த்தம் எனப்படுகிறது. இதில் நீராடினால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்களும் நீங்கி விடுகின்றன. மரண பயமும் நீங்கி விடுகிறது. தற்போது அத்தீர்த்தம் ஒரு ஓடை வடிவில் காணப் படுகிறது.அருகில் த்ரிலோசநேச்வரர் கோயில் உள்ளது. அக்ஷய திருதியையன்று இங்கு மக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.  

பஞ்சநத தீர்த்தம் எனப்படும் பஞ்சகங்காவில் நீராடுவது சிறப்பு வாய்ந்தது. இது பிரயாகையில் மாக மாதம் முழுதும் நீராடுவதற்குச் சமம். பித்ரு காரியங்கள் இங்கு செய்வதால் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம். அஸ்வமேத யாக பலனும் கிட்டிவிடுகிறது. கார்த்திகை மாதத்து  மாலை வேளைகளில்  விளக்குகளை மூங்கில் கூடைகளில் வைத்து நீரில் விடுகின்றனர். இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  கார்த்திகை மாத சூர்யோதய காலத்தில் ஏராளமானோர் இங்கு நீராடுகின்றனர்.

பிரமதேவன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்த இடத்தைத் தசா அஸ்வமேத கட்டம் என்கிறார்கள். அங்கு பிரம்மா ஸ்தாபித்த லிங்கத்திற்கு தசாச்வமேதேச்வரர் என்று பெயர். இங்கு செய்யப்படும் ஸ்நானம், ஜபம், பாராயணம், பூஜை,தர்ப்பணம்,தானம் ஆகியவை விசேஷ பலன்களை அளிக்கும். அன்ன தானம் செய்வதும் மிகுந்த பலன் அளிக்க வல்லது. இங்கு ஆடி அமாவாசைக்குப் பிறகு பதினைந்து நாட்கள் ஸ்நானம் செய்து தசாச்வமேதேச்வரரைத் தரிசிக்க வேண்டும். மேலும் இவ்விடத்தில் தினமும் இரவு 7 அணி அளவில் கங்கைக்கு ஆரத்தி செய்யப்படுகிறது.

இந்நகரின் தெற்கே அஸி கங்கா சங்கமம் உள்ளது. வருணும் அஸியும் சங்கமிப்பதால் ஊருக்கு வாரணஸி என்று பெயர் வந்தது. முற்காலத்தில் நதியாக இருந்த அஸி தற்போது ஓடையாகக் காணப்படுகிறது. இந்த இடத்திலும் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது. வருண கங்கா சங்கமம் வரை படகில் சென்று ஸ்நானம் செய்து பஞ்ச கட்ட பிண்டம் தருகின்றனர்.

பிப்பில தீர்த்தம் என்பது தற்போது கிணறு வடிவில் த்ரிலோசநேச்வரர் கோயிலருகில் உள்ளது. அக்ஷய திருதியையன்று இங்கு நீராடுதல் சிறப்பு.

வாரணஸியில் உள்ள பெரிய தீர்த்தம் விமல தீர்த்தமாகும். துர்கா தேவி ஆலயம் செல்லும் வழியில் உள்ள லோலார்க் ஆதித்யர் கோயிலில் உள்ள லோலார்க் குண்டத்திலும் நீராடுவது எல்லா நன்மைகளையும் தரும்.

ஈசானன் என்ற திக்பாலன் தனது சூலத்தால் ஏற்படுத்திய தீர்த்தம் கிணறு வடிவில் ஞான வாபி என்று காட்சியளிக்கிறது. அருகில் விசுவநாதர் கோயில் உள்ளது. ஞானத்தை நீராடுபவர்க்கு அளிப்பதால் இது ஞான வாபி எனப்பட்டது. காசி கண்டம் இதன் பெருமையை வருணிக்கிறது.

கங்கைக் கரையிலுள்ள எல்லா ஸ்நானகட்டங்களின் பெயர்கள், அவற்றின் சிறப்புக்கள் ஆகியவற்றைத் தெரிவிக்கும் நூல்கள் உள்ளன. ஆர்வமுள்ளோர் அதைப் படித்துத் தெரிந்து கொண்டு காசிக்குச் செல்வது உத்தமம்.

காசி நகரக் கோயில்களைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

 

                                          ( காசியின் பெருமைகள் தொடரும் )

Friday, October 9, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – V

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் V

                                           சிவபாதசேகரன்


மகளிர்க்கான இலக்கணத்தை அகஸ்திய முனிவருக்கு முருகப் பெருமான் கூறத் தொடங்கினார்: “ நற்குடியில் பிறந்தவளும், உயர்ந்த குணங்களை உடையவளும், சகோதர-சகோதரிகளை உடையவளும், சாமுத்திரிகா லக்ஷணங்கள் பொருந்தப்பெற்றவளும். இனிய சொற்களை உடையவளும் ஆகிய பெண்ணை வேத விதிப்படி மணம் செய்தல் வேண்டும். அப்பெண் இல்லறத்தை நல்லறமாக்குவதோடு கற்புக்கரசியாகத் திகழ்ந்து தர்மத்தைத் துணைவனுடன் சேர்ந்து தழைத்தோங்கச் செய்வாள்.

மறை ஓதுதல்,ஓதுவித்தல், ஆசார சீலராய்த் திகழ்தல், தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் முனிவர்களுக்கும் தர்ப்பணம் செய்தல், வைச்வதேவம் செய்தல் , ஹோமங்கள்/ யாகங்கள் ஆகியன செய்தல் ஆகியவற்றை நியமத்தோடு கடைப்பிடித்து , உலக நன்மை ஒன்றையே  குறிக்கோளாகக் கொண்டு அந்தணர்கள் வாழ வேண்டும்.”

மேற்கூறியவை அன்றி இல்லற தருமங்கள் பலவற்றை மிகவும் விரிவாகக் குமரக் கடவுள் எடுத்துரைப்பதைக் காசிக் கண்டத்தில் காணலாம். அவற்றுள் சிலவற்றையாவது இங்கு காண்போமாக:

நீராடும் போதும் கிரகணகாலங்களிலும் பின்பற்றப் படவேண்டியவை,  எதிரில் வருவோர்களில் எவரை வலம் வர வேண்டும் என்ற விவரம் ஆகியன தெளிவு படுத்தப் படுவதோடு,  கேளிக்கைகளில் மனம் செலுத்துதல் , பகலில் உறங்குதல், நகத்தைக் கடித்தல், சூதாடுதல், உடைந்த பாத்திரத்தில் உண்ணுதல் , தேவையின்றிச்  சிகையை உதறுதல், பொருள்களைக் காலாலகற்றுதல், கை-கால்-முகம் கழுவாது உண்ணுதல், பொய் பேசுதல் ஆகியவை செய்யத்தகாத செயல்களையும் தவிர்க்குமாறு எச்சரிப்பதையும் காண்கிறோம். இவ்வாறு ஒழுக்கத்துடன் வாழ்ந்து நிறைவாகத் தம் மைந்தரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துக் காட்டில் சென்று தவம் புரியக் கடவர். இல்லாவிட்டால் காசிக்குச் சென்று வசித்து அங்கே முக்தி பெறக் கடவர்.

அது மட்டுமன்றி, வானப்ரஸ்தம், சந்நியாசம் ஆகியவற்றின் நெறிகளும், நியமங்களும் மிகவும் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. நிஷ்டை,யோகம்,சமாதி ஆகிய நெறிமுறைகளின் விளக்கங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. உடல் வருந்தாமல் முக்தி அடைய ஒரு வழியும் கூறப்பட்டுள்ளது. அதுவே காசிக்குச் சென்று வசிப்பதாகும். இத்தகைய செய்திகளோடு காசிக் கண்டத்தின் பூர்வ பாகம் முற்றுப் பெறுகிறது.

உத்தர காண்டம், ஸ்ரீ விச்வநாதர் துதியுடன் துவங்குகிறது:

“சீர் கொண்ட மலரவனும் திருமாலும் காண்பரிய

ஏர்கொண்ட பேரொளியை எளியேன் தன் உள்ளத்தும்

நீர் கொண்ட காசியினும் நிலவு பழமறைக் கொழுந்தைக்

கார் கொண்ட மணிமிடற்று எம் கண்ணுதலைவழுத்துவாம். “

மற்ற தலங்களில் ஞானத்தாலும் தவத்தாலும் பெறக் கூடிய முக்தியைக் காசியில் வாசிப்பதன் மூலமே பெற்று விடலாம். மலர்களால் விச்வேசனை அர்ச்சிப்பதே தானம். அங்குள்ள முக்தி மண்டபத்தில் செய்யும் ஜெபமே அரிய தியானமும் ஆகும்.

அடுத்ததாகத் திவோதானன் என்ற மன்னன் காசியை ஆண்டு , குடிமக்களைக் காத்த வரலாற்றைக்கூறிய பின்னர், காசியின் சிறப்பை முருகப்பெருமான் உரைத்தருளினார்.

யோகினிகள் காசியை அடைந்து வழிபட்டதும், சூரியன் காசியில் வழிபட்டுப் பன்னிரண்டு பெயர்கள் பெற்றதும், உலோதாதித்தன் என்ற சூரியன் காசியை அடைந்து வழிபட்டதும்,சுலக்ஷணை என்பவள் தவம் செய்துபேறு பெற்றதும் , சாம்பன், துருபதாதித்தன் கருடன் ஆகியோர்  வழிபட்டதும், பிரமன் காசியை அடைந்து யாகம் செய்ததும், ஒரு பேய் இங்கு நீராடித்  தெய்வ வடிவம் பெற்றதும்,திருமாலின் சொற்படித் திலோதானன் கங்கைக் கரையில் இலிங்கம் ஸ்தாபித்து வழிபட அருளியதும்,  தருமநதி, தூதபாவை,கிரணை , யமுனை,கங்கை ஆகிய ஐந்து நதிகளில் தோய்வோர் முக்தி பெறுதலும், சிவபிரானை நிந்திப்போர் நரகத்தில் சேர்வர் என்று திருமால் உரைத்தலும், மாலானவர் வழிபட்டு , ஆதிகேசவன் முதலாகப் பிரயாகை மாதவன் ஈறாக 23 மாதவர்களாக இருத்தலும், பாசுபத தீர்த்தம், முக்தி தீர்த்தம், தாரக தீர்த்தம், துண்டி தீர்த்தம், பவானி தீர்த்தம், ஞான வாவி, பிதாமக தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் ஆகியவற்றின் மகிமையும், கோ லோகத்திலிருந்து சுனந்தை, சுசீலை, சுமனசை, சுரபி, பத்திரை ஆகிய பஞ்ச தேனுக்கள் வந்து பால் பொழிந்து வாவிகளை நிறைத்ததும் அவற்றில் நீராடியவர் பெறும் பயனும், விசுவநாதர் முனிவர்களுக்கு வரமளித்ததும், கஜாசுரனது தோலை  ஈசன் உரித்துப் போர்த்திக் கொண்டதும், ஒன்பது துர்க்கைகளும்,எட்டு பைரவர்களும், காசிக்குக் காவலாக விளங்குவதும் , ஓங்கார லிங்கம், த்ரிலோசன லிங்கம்,கேதார லிங்கம்,ஆகியவற்றின் மகிமையும், விச்வேசர் முக்தி மண்டபப் பெருமை உரைத்ததும், இந்திரன், துருவாசர் ஆகியோர் வரம் பெற்றதும், தக்ஷன் வேள்வி வீரபத்திரர் மூலம் அழிக்கப்பெற்றதும், வியாஸ முனிவர் சிவபரத்துவம் கூறாது விஷ்ணு பரத்துவம் கூறியதால் அவரது உயர்த்திய கைகளும் , பேசிய நாவும் செயலற்றுப் போனதுவும், பின்னர் ,வியாசர் விச்வநாதரை வழிபட்டு அச்சாபம் நீங்கப்பெற்றதும் , காசி யாத்திரைக்குச் செல்வோர் வழிபடும் முறையும், மிக விரிவாக முருகப் பெருமானால் அகத்தியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அதிவீரராம பாண்டியரால் சுமார் 2500 க்கும் மேற்பட்ட செய்யுள்கள் கொண்டு இயற்றப்பெற்ற காசி கண்டம் என்ற நூலில் காணப்படும் புராண வரலாறுகளை இதுவரையில் பார்த்தோம். இனி, காசி நகரக் கோயில்கள் பற்றி அறிய முற்படுவோமாக.

                                                    ( காசியின் பெருமைகள் தொடரும் )   

     

Saturday, September 26, 2020

 ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் IV

                                                    சிவபாதசேகரன்


                                                    ஷண்முக நாதன் -நன்றி-வலைத்தளப்படம் 

ஒழுக்கம் எவ்வாறு இன்றியமையாதது என்று  முருகப்பெருமான் கூறத் தொடங்கினார்: “ ஒழுக்கமே ஐசுவரியம் என்பதை அறிந்தும் அதனைப் பின்பற்றாதவர்கள் நரகத்திடைத் துயர் அனுபவிப்பார்கள். நியமத்துடன் வாழ்பவர்கள், பொய் கடிந்து இன்புறும் வண்ணம் பேசுதல், புலன்களை வெல்லுதல், கொலை போன்ற குற்றங்களைக் கடிதல், புனித நதிகளில் நீராடுதல், தீயவர்களது நட்பைத் தவிர்த்தல், விரதம் பூண்டல் , தரும நூலைகளை ஓதுதல் ஆகிய நன்னெறிகளைக் கடைபிடிப்போர் காசி நகரை அடையும் பேறு பெறுவார்கள்.

வைகறையில் துயில் நீங்கி,கணபதி, நீலகண்டன், உமாதேவியார், திருமால் , பிரமன் இந்திரன் ஆகியோரையும்,  மலைகளையும், கடல்களையும் ,தந்தை – தாயரையும் , வசிஷ்டர் முதலிய முனிவர்களையும் அருந்ததி முதலாய கற்புக்கரசிகளையும் ஊர்வசி ஆகிய மாதரையும், காசி மாநகரத்தையும், கௌஸ்துபம் முதலிய மணிகளையும், மந்தாரம் முதலிய விருக்ஷங்களையும் . ஐராவதம் என்ற தேவலோக யானையையும் ஜனகன் முதலான யோகிகளையும், ஆதி சேஷன் ஆகிய நாகங்களையும் வேதங்களையும், நாரதர் ஆகிய ரிஷிகளையும், காமதேனுவையும் , அரிச்சந்திரன் முதலிய வாய்மை குன்றாத வேந்தரையும்,ததீசி முனிவர் உள்ளிட்ட தரும வழி நிற்போரையும், இந்திரனது குதிரையையும், முத்தீ ஓம்பும் மறையோர்களையும், ஆசார வழி நிற்போரையும் மனத்துள் தியானிக்க வேண்டும்.

நீராடியபின், உத்தரியத்தைப் பிழிந்து தோளில் சேர்த்துக் கொண்டு, சந்தியா கிரியைகளை வழுவாது செய்து, மூச்சினை  அடக்கி முறையோடு பிராணாயாமம் செய்து காயத்திரி மந்திரம் ஜபிப்போர், தங்களது  பாவம் நீங்கப்பெற்று , பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்த பலனைப் பெறுவர். இவ்வாறு ஆயிரத்தெட்டு முறை ஜபித்து சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தல் வேண்டும்.  பின்னர் வைச்வதேவம் செய்து, தேவ பூஜை செய்யக் கடவர். வேதம் ஓதுபவர், பிரமசாரிகள், துறவிகள், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு உணவு அளிக்க வேண்டும். பிறகு போஜன விதிப்படி உணவருந்தல் வேண்டும். பிறகு இதிகாச புராணங்களைப் பயிலுதலில் பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் சந்த்யாதி காயத்ரி ஜபங்களைச் செய்ய வேண்டும். பிறகு அகஸ்தியர், முசுகுந்தன் ஆகியோரைத் தியானித்து, சிவபிரானை பூஜித்து வணங்குதல் வேண்டும். தென் திசையில் தலை வைக்காமல் கிழக்குத் திசையில் தலை வைத்துத் துயில் கொள்ள வேண்டும்.  

மக்கட்பேறு கிட்டியவுடன் அக்குழந்தைக்கு வேத விதிப்படி சிகை அமைத்து, பின்னர் நாமகரணம் செய்து, அன்னம் ஊட்டி, எட்டாவது வயதில் அந்தணர்க்கும், பதினொன்றாம் வயதில் க்ஷத்ரியர்க்கும், பன்னிரண்டாம் வயதில் வைசியர்க்கும் உபநயனம் செய்தல் வேண்டும். வேத விதிப்படி அந்தணச் சிறுவர்கள் பிற மனைக்குச்சென்று அன்னம் ஏற்க வேண்டும். குரு சேவை புரிதலை  மிக முக்கியமாகக் கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் ஈடுபடாமல், தண்டம் தாங்கிய கையுடன் பதினாறு ஆண்டுகள் கல்வி கற்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும். அரச குமாரர்களுக்கு இருபத்திரண்டு ஆண்டுகளும் இருபத்து நான்கு ஆண்டுகளும் இவ்வாறு பிரம சரியம் காத்தல் வேண்டும். மறையோர்க்குப் பலாச தண்டமும், மன்னவர்க்கும் வைசியர்க்கும் பலாச மற்றும் வில்வமும் தண்டங்களாகக் கூறப்பட்டுள்ளன. வேதம் பயின்ற பின்னர் சமாவர்தனம் செய்திடல் முக்கியமானது. மாதா,பிதா, குரு ஆகியோரைப் பழிப்பவரிடம் சேர்தலாகாது.

இவ்வாறு பிரமச்சரிய இலக்கணம் கூறிய ஷண்முகக் கடவுள், மகளிர்க்கான இலக்கணத்தைக் கூறத் தொடங்கினார்.       

                                                    ( காசியின் பெருமைகள் தொடரும் ) 

Tuesday, September 22, 2020

        ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் III

                                                     சிவபாதசேகரன்  

                         


                      மணிகர்ணிகை கட்டம்-வாரணாசி (நன்றி- வலைதளப் படம்)

காசியின் மகிமையை முருகப்பெருமான் கூறத் தொடங்கினார்: “ சூரிய சந்திரர்களும், ஒன்பது கோள்களும், எல்லாப் புவனங்களும், அனைத்துத் தத்துவங்களும்,அயன்-மால் முதலான தேவர்களும், முக்குணங்களும், விந்து நாதமும் பிரளய  காலத்தில் ஒடுங்கும்போது, வாக்கிற்கும், மனத்திற்கும் எட்டாத பேரொளியாகி, என்றும் அழிவின்றி வியாபித்து நிற்கும் சிவ பரம்பொருள் , தனது  திருவுள்ளக் குறிப்பின்படி, நிகரற்ற  புனிதத் தலமாகக் காசி நகரை,  எல்லாப் பூதங்களையும் படைக்கும் முன்னமே , தான் பார்வதி தேவியுடன் நீங்காது உறையும் வண்ணம் தோற்றுவித்து அருளினான்.  

உலகம் யாவும் கடல் கொள்ளப்பட்டு அழியும் போது இந்நகர் மட்டும் அழியாதிருந்த காரணத்தால் அவிமுக்தம் எனப்பட்டது. தன்னை நாடுபவர்க்குச் சிவானந்தம் வழங்குதலால் ஆனந்த கானம் என்றும் பெயர் பெற்றது. தன்னிடமிருந்து உலகைக் காக்கும் பணி செய்வதற்காக ஒரு புருஷனைத் தோற்றுவிக்க வேண்டி, சிவபிரான் தனது இடப்பாகத்தை நோக்கியவுடன், கமலக் கண்ணனாகிய திருமால் தோன்றினான். வேதத்தின் துணை கொண்டு அனைத்தையுமோர்ந்து நாராயணன் என்ற திருநாமத்துடன் திகழ்வாயாக என்று சிவபெருமான் அருளியவுடன், மாலும்  அதனைச் சிரமேற்கொண்டு ஆங்கு ஓர் பொய்கையை ஏற்படுத்தி, சிறந்த தவம் செய்து வந்தான். அத்தவத்தால் மகிழ்ந்த ஈசனும் ,உமா தேவியுடன் காட்சி அளித்து , விரும்பும் வரம் கேட்குமாறு அருளவே, திருமாலும், “  ஐயனே, முன்னர் ஒரு பாலனுக்காகக் காலனை உதைத்த தேவரீரது திருப்பாதம் ஏன் நெஞ்சில் நீங்காதிருக்க வரம் தரல் வேண்டும்” என்று விண்ணப்பித்தான். அவ்வாறே ஆகுக என்று பரமேசனும் அருளினான். அப்பொழுதுபெருமானின் காதிலிருந்த குழை  ஒன்று நழுவி அப்பொய்கையில் விழுந்தது. அதனால் அவ்வாவி, மணி கர்ணிகை என்று பெயர் பெற்றது. அதில் ஸ்நானம் செய்பவர்கள் கால பாசத்திற்கு அகப்படாமல் முக்தி பெறுவர் என்றும், இங்கிருந்து நூறு யோசனைக்கு அப்பால் வசிப்பவர்களும்காசியையும், மணி கர்ணிகையையும் நினைத்தபடியே உயிர் நீத்தால்  முக்தி பெறுவர் என்று சிவபெருமான் அருளிச் செய்தார்.உலகியலில் சிக்கியவர்கள் இப்பேற்றை அடையாமல் பதராகவே வாழ்வார்கள்.

முக்திக்கான மார்க்கம் முதல் யுகத்தில் யோகத்தாலும், இரண்டாவது யுகத்தில் அருந்தவத்தாலும், மூன்றாவது யுகத்தில் ஞானத்தாலும், நான்காவதாகிய இக்கலியுகத்தில் கங்கையில் நீராடுவதாலும் பெறப் படுவதாகும். தாங்கள் கோரிய பலன்களைத் தேவர்கள் சிவலிங்க பூஜையால் பெறுவதைப்போல் கங்கையும் தன்னை அடைந்து நீராடுபவர்க்கு எல்லாப் பேறுகளையும் வழங்க வல்லது. கங்கையில் நீராடச் செல்வேன் என்று எண்ணியவுடன் அவனது பாவங்கள் அனைத்தும் நசித்துப் போகும். உலக மாயையில் சிக்காதவர்கள் காசியை அடைந்து முக்தி பெறுவதை அது ஒக்கும். கையில் பொற்கலசத்தை ஏந்தியவாறு அபய வரத கரத்துடன் பேரொளியோடு தோன்றும் கங்கா தேவியை உளத்தில் நினைந்தபடி அப்புனித நீராடி , மறையோர் மகிழத் தானங்கள் செய்து வெள்ளியால் ஆன பிரதிமையைக் கங்கை நீரில் விட்டுப் பூஜை செய்பவரது கொடும் பாவங்கள் நீங்கிப் பேரின்பம் பெறுவர்.

கலிங்க நாட்டு மறையோன் ஒருவன் கொடும்பாவங்கள் செய்து வந்தான். ஒரு நாள் காட்டு வழியில் அவன் செல்லுகையில் அவனை ஒரு புலி கொன்றது. அவனது இடக் காலை ஒரு கழுகு கவ்விக் கொண்டு ஆகாயத்தில் பறந்தபோது மற்றோர் கழுகு அக்காலை அதனிடமிருந்து பறித்தது. அப்பொழுது அதன் வாயிலிருந்து தவறி அக்காலானது கங்கையாற்றில் விழுந்தது. இறந்த மறையவனை யம தூதர்கள் கொண்டுபோய் இயமனிடம் சேர்ப்பித்தனர். அம்மறையவன் செய்த பாவங்களைச் சித்திர குப்தர்கள் யமனுக்கு எடுத்துரைத்தனர். யமனது கட்டளைப்படி அவ்வந்தணனை நரகத்தில் இட்டார்கள். ஆனால் அவனது இடக்கால் கங்கையில் வீழ்ந்த புண்ணியத்தால் சிவ பூத கணங்கள் அவனைப் பொன்னாலான விமானத்தில் ஏற்றி நாக லோகத்தில் விட்டனர். அத்தகைய கங்கைக் கரையில் ஒரு பசுவை அலங்கரித்து உள்ளம் உவப்ப மறையோருக்குத் தானம் செய்தால் அப்பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளனவோ அவ்வளவு காலம் கற்பகத் தருவின் நீழலில் வாழ்வார்கள்.

ஒரு சமயம் திருமாலானவர் சிவபிரானிடம் சென்று, கங்கையில் நீராடச் சக்தி இல்லாதவர்கள் எவ்வாறு அவ்வருளைப் பெறுவது எனக்கேட்க, பரம சிவனானவர் , கங்கா தேவியின் ஆயிரம் நாமாக்களை அவருக்கு உபதேசித்து, அந்த நாமங்களை வீட்டில் எழுதிவைத்து வழிபட்டால், வினைகள் யாவும் நீங்கப்பெற்று, பொருட்செல்வமும்,மக்கட் செல்வமும் பெற்று ஓங்கி வாழ்வார்கள் என்று அருளிச் செய்தார்.

பகீரதன் தவம் செய்து கங்கையை வரவழைத்ததாலும், திருமாலின் தவத்தால் சிவபிரான் மகிழ்ந்து வரம் தரும் வேளையில் அவரது காதிலிருந்த மணி வீழ்ந்து மணி கர்ணிகையைத் தோற்றுவித்ததாலும் காசி நகர் சிறப்புடையதாகும். சார்ந்தோர்  பாவங்களை அழித்தலால் வரணை  என்றும் கங்கை நீராடுபவரது பாவங்களை நீங்குவதால் அசி என்றும் இந்நகருக்கு நாமங்கள் உண்டாயின. கணபதியால் காக்கப்படும் இந்நகரை  அடைவது இறைவன் அருள் பெற்றோருக்கே கிட்டும். முன்னாள் பிரமதேவன் காசியை ஒரு தராசுத் தட்டிலும் வைகுண்டம் முதலிய பிற உலகங்களைப்  பிறிதொரு தட்டிலும் வைக்கையில் காசி நகர் வைக்கப்பெற்ற தட்டு தாழ்ந்தது. எனவே இந்நகர் அறம்,பொருள்,இன்பம் வீடு ஆகிய நான்கையும் தரவல்லது . சாரூப்பிய பதவியையும் தர வல்லது.

முன்னொருகால் பிரமனும் மாலும் ,  நான்கு வேதங்களும் சிவபிரானே முன்னோன் எனக் கூறியதை ஏற்காது, யாமே பிரமம் எனக் கூறிக் கொண்டதால் அவர்களுக்கு முன்பாகச் சோதிப் பிழம்பெனத் தோன்றினான் கயிலை நாதன். .அப்போது சிவபெருமானது கோபத்திலிருந்து பைரவ மூர்த்தி தோன்றி,  தனக்கும் ஐந்து சிரங்கள் உண்டு எனச் செருக்குற்ற பிரமனது ஐந்தாவது தலையைக் கொய்தார். அவரது கோபத்தைக் கண்டு அஞ்சிய பிரமனும் மாலும் அப் பைரவ மூர்த்தியின் தாள் தொழுதனர். அதனால் கோபம் நீங்கப்பெற்ற பைரவரை நோக்கிச் சிவபெருமான் , நீ பிரமனது சிரத்தைக் கிள்ளியதால் தோஷம் ஏற்பட்டு விட்டது. ஆகவே, அத்தலை ஓட்டினை ஏந்தி பன்னீராண்டுகள் பிச்சை ஏற்றுத் திரிவாயாக என்று மொழிந்தருளினார். தருமமே வடிவாகிய இறைவன் இவ்வாறு தரும வழி நின்று பிரமனை முறைப்படுத்தினான். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வைகுண்டம் சென்ற பைரவர் விஷ்ணுவுக்கும் திருமகளுக்கும் அருள் செய்து விட்டுக் காசி மாநகரைச் சென்றடைந்தார். அக்கணமே அவரது கையிலிருந்த பிரம கபாலம் கையைவிட்டு அகன்றது. அதனால் அவரைப் பீடித்த தோஷமும் நீங்கியது. அக்கபாலம் விழுந்த இடத்தில்  ஒரு தீர்த்தம் ஏற்பட்டது.    

கந்தமாதனத்தில் இரத்தினபத்திரன் என்பவனுக்கு பூரண பத்திரன் என்ற மகன் இருந்தான். அவனது மகன் அரிகேசன் என்பவன் சிறந்த சிவ பக்தன். அவனது சிவபக்தியைக் காசிக் கண்டம் இவ்வாறு புகழ்கிறது:

“ பெண்ணொரு பாகன் புகழல்லால் நாளும் பெட்பொடும் செவிப் புலன் கேளா; கண்ணுதல் அன்றி நோக்கிடா கண்கள்; கடவுளை அன்றி உளம் கருதாது  ; அண்ணல் தன் நாமம் அன்றி நா உரையாது; அஞ்சிறைத்தும்பி பாட்டயரும் தண் நறும் கமலச் சேவடிக்கன்றி ஆங்கு அவன் தலை வணங்கிடாதால் “

பித்துப் பிடித்தவனைப் போல இவ்வாறு இருக்கலாகாது என்று தந்தை கடியவே, அரிகேசன் மனம் வருந்தியவனாக அங்கிருந்து அகன்று, காசியை அடைந்தான். அச் சிறுவனது பக்தியைக் கண்டு மகிழ்ந்த உமா மகேசுவரர்கள், அவனுக்குக் காட்சி அளித்து, வரமனைத்தும் வழங்கி, நிறைவாகக் கயிலை அடையும் பெரும்பேற்றையும் அருளினர்.

காசியில் உள்ள ஞான தீர்த்தம் சிவதீர்த்தம் எனப்படும். இதன் பெருமையையும் காசிக் கண்டம் விரிவாகக் கூறுகிறது. இதைக் காட்டிலும் விவரமாக இல்லறத்தோர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம், ஆசாரம், பிரமச்சரியம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.  

       

                                                      ( காசியின் பெருமைகள் தொடரும் )

Sunday, December 1, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – II

    ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் II
                                               சிவபாதசேகரன்

அகத்தியர்-லோபாமுத்திரை -  வலைத்தளப் படம் 
காசியின் மகிமையை முருகப்பெருமானிடம் அறிய வேண்டித் தனது தர்ம பத்தினியாகிய லோபாமுத்திரையுடன் ஆறுமுகக்கடவுள் இனிதுறையும் தலத்தை நோக்கி யாத்திரை மேற்கொண்ட அகத்திய முனிவர், ஸ்ரீ சைல மலையை வந்தடைந்தார். அம்மலை சிவலிங்க வடிவுடையது என்றும் இங்கு வருபர்கள் பிறவாவரம் பெறுவர் என்றும் கூறியருளினார். அதைக் கேட்ட லோபாமுத்திரை காசியை முக்தித் தலமாகச் சிந்திப்பதன் காரணம் யாது எனக் கேட்டார். அதற்கு விடையாக, அகத்திய மாமுனிவர்  கூறியதாவது: பிரயாகை, ஒங்காரேசுவரம், அவந்திகை, அயோத்தி, மதுரா,கோகரணம்,புஷ்கரம்,துவாரகை, காஞ்சி, பதரிகாசிரமம்,த்ரியம்பகம்,குரு க்ஷேத்திரம் , நைமிசாரண்யம் ஸ்ரீசைலம் ஆகியவனவும் முத்தி தர வல்ல தலங்களே ஆகும். அது போன்று, புனித தீர்த்தங்களில் நீராடுவதும் முக்தியை அளிக்க வல்லதாகும். மானத தீர்த்தம் ஆடுபவர்க்குப் பொறுமை புலனடக்கம் முதலியவை சித்திக்கும். மனத்தழுக்கு நீங்கினால் மட்டுமே தீர்த்தமானது  கோரிய பலனை அளிக்கும்.

கற்ற தம் கல்வியும் கடவுட்பூசையும்
நற்றவம் இயற்றலும் நவையில் தானமும்
மற்றுள அறங்களும் மனத்தின்பால் அழுக்கு
அற்றவர்க்கே பயன் அளிக்கும் என்பரால்.   -  காசி காண்டம்

புனித தீர்த்தங்கள் ஆட வேண்டுவோர் முதலில் விநாயகரை சிந்தையில் இருத்தி, ஒரு பகல் உணவைத் தவிர்த்து, தீர்த்தமாடிய மறு நாள் பாரணை செய்ய வேண்டும். பின்னர், மண்,பொன்,பசு ஆகியவற்றைத் தானம் வழங்குதல் மேலும் சிறப்புடையதாகும். முன்னோர்களுக்கு அத்தீர்த்தக் கரையில் கிரியைகள் செய்ய வேண்டும்.

காசி,மாயாபுரி,அவந்தி,அயோத்தி,துவாரகை, மதுரா, காஞ்சி ஆகிய எழும் முக்த்தித் தலங்கள் என்று பேசப்படும். இவற்றைத் தவிரவும் பிரயாகை, கேதாரம்,ஸ்ரீ சைலம் ஆகியவையும் முக்தித் தலங்களே. மற்ற முக்தித் தலங்கள் காசியை அடைவதற்கு எதுவாய் இருத்தலால் முக்தி அளிப்பதில் அவை காசிக்கு ஈடாக மாட்டா. இதனை விளக்குவதற்காக ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக என்றார் அகத்தியர்.

வடமதுரையில் வாழ்ந்து வந்த சிவசன்மா என்ற அந்தணன் வேத வேதாந்தங்களையும் பிற கலைகளையும் கற்றும் நல்லொழுக்கம் குன்றியவனானான்.  முதுமை வந்ததும் உடல் தளர்ந்து, தான் புண்ணியங்கள் ஈட்டத் தவறியதை உணர்ந்தான். “ காலத்தை வீணாகக் கழித்து விட்டேன். சிவபெருமானையும் அவன் அடியார்களையும் வணங்கத் தவறி விட்டேன். கோயில்,குளம்,கிணறு ஆகியவற்றை உண்டாக்கித் தருமம் செய்யவில்லை. யாகங்கள் செய்யவில்லை. தண்ணீர்ப்பந்தல் கூட வைக்கவில்லை. நிழல் தரும் மரங்களை நடவில்லை. அந்தணர்க்கு ஒரு பிடி அன்னமும் அளிக்கவில்லை. அவர்களுக்குத் தானம் வழங்கவில்லை . பசுக்களுக்குப் புல் முதலியன கொடுக்கவில்லை. சனி பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்யவில்லை. ருத்ர-சமகம் பாராயணம் செய்யவில்லை. விருந்தினர்களை உபசரிக்கவில்லை. கால பாசம் கைக் கொண்டு எமதூதர்கள் வந்தால் என்ன செய்வேன்!  நரகத்தில் துயரம் அனுபவித்து விட்டு மீண்டும் பிறக்க ஆயத்தமாகிவிட்டேனே! இறந்தால் மனைவியோ,புதல்வர்களோ செல்வமோ உடன் வரப்போவதில்லை . ஆகவே இவ்வுடல் உள்ள போதே தலயாத்திரையும் தீர்த்த யாத்திரையும் செய்வேன்”  என்று மனத்தில் நினைத்தவனாய் அயோத்தி, திரிவேணி சங்கமம் ஆகிய தலங்களைத் தரிசித்துவிட்டுக்  காசியை வந்தடைந்தான்.

காசியில் மணிகர்னிகையிலும் கங்கையிலும் நீராடி, ரிஷிகள் ,பித்ருக்கள் ஆகியோருக்கான கர்மாக்களை செய்துவிட்டு விசுவநாதப் பெருமானைத் தரிசித்தான். மற்ற முக்தித் தலங்களையும் தரிசிக்க எண்ணி, காசி நகரை விட்டு அகன்றான். அத்தலங்களைத் தரிசித்த பின்னர், நிறைவாக மாயாபுரியில் தங்கியிருந்தபோது அவனைக் குளிர் ஜுரம் பீடித்தது. ஏழு நாட்களுக்குப் பிறகு இறந்த அவனுக்கு அந்தத் தலவாசம் செய்த பலனால் விஷ்ணு- சாரூபம் பெற்று விண்ணவர்கள் போற்ற விண்ணில் சென்றான். வழியில் சில உலகங்களை விஷ்ணு தூதர்கள் அவனுக்குக் காட்டினர்.

முதலில் அலகை  உலகைக்காட்டிய பிறகு கந்தர்வ உ லகைக் காட்டினார்கள். அரிய விரதங்களைக் கடைப்பிடித்தவரும், பெற்ற பொருளால் தானங்கள் செய்தவரும், விண்ணவர்க்கு யாழ் வாசிப்போரும் வசிக்கும் உலகம் இது .  பலன்கோரி சிவபூஜைசெய்தவர்களும் ,வேதம் கற்போருக்கு உணவும் உடையும் கொடுத்தவர்களும் ,பிறருக்கு இயல்-இசை கற்பித்தோரும், வாழும் வித்யாதர உலகையும் காட்டினர். அப்போது இயமன் எதிரில் தோன்றி , முக்தித்தலங்கள் ஏழையும் தரிசித்த சிவசன்மனை மகிழ்ச்சியுடன் காண வந்ததாகக் கூறினான். பிறகு  விஷ்ணு தூதர்கள், யமலோகத்தையும் சிவசன்மனுக்குக் காட்டினர் . அங்குப்  பாவம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதைக் கண்டான்.அதே சமயத்தில் இறைவனது நாமங்களைச் சொல்லித் துதிப்போர்கள் நரகத்தில் இடர்ப்படார் என்று அறிந்தான். ( இறைவனது நூற்றெட்டு நாமங்களை எடுத்துரைக்கும் காசி கண்டப்பாடல்களில் ஒன்று வருமாறு:

நீலகண்டன் மழுவேந்தி நெற்றிக்கண்ணன் பூதேசன்
காலகாலன் விடையூர்ந்தோன் கங்கைசூடி காமாரி
சூலபாணி கரியுரித்தோன் தோகைபாகன் காபாலி
ஆலமுண்டோன் மதிசூடீ அந்தகாரி ஈசானன் )

பின்னர் தேவலோகம் தோன்றியது. அங்கு பாற்கடலில் அமுதத்தோடு தோன்றிய தேவ மகளிர் இயல்-இசை-நாடகக் கலைகளில் வல்லவர்களாக இருக்கக் கண்டான். பிறகு, ஐம்புலன்களை வென்று காயத்திரியை முறைப்படி ஜபித்தவர்கள் வாழும் சூரிய  உலகைக் கண்டான். அதோடு, நால் வேதமும்,ஆறங்கமும் கற்றும் காயத்திரி ஜபம் செய்யாவிடில் அந்தணத் தன்மை நீங்கிவிடும் என்பதை உணர்ந்தான். காயத்திரிக்கு ஒப்பான மந்திரமும்,காசிக்கு ஒப்பான தலமும், விசுவநாதருக்கு ஒப்பான தெய்வமும் தேடினும் இல்லை என்று சிவசன்மன் அறிந்தான்.

காசி நகரில் அருள் பாலிக்கும் பல சிவலிங்க மூர்த்திகள் பலவற்றையும் தரிசித்தபின்னர் , வீரேச லிங்கத்தின் பெருமையும்,அப்பெருமானை  வழிபட்டு, மகப்பேறு அடைந்த விச்வாநரன் செய்த துதிகளான சிவாஷ்டகத்தைப் பாராயணம் செய்வோர் மகப்பேறு பெறுவர் என்கிறது புராணம். மேலும் , வீரேசரின் அருளால் விச்வாநரன் பெற்ற குழந்தையை, அத்திரி, மரீசி,கார்க்கர், அங்கீரஸ் , வசிஷ்டர்,சிலாதர், உரோமசர், பாரத்துவாஜர் , காசிபர்,ஆபஸ்தம்பர், கௌசிகர், கண்வர்,மார்க்கண்டர், வான்மீகி,பிருகு,அகத்தியர் ஆகிய முனிவர்கள் நேரில் சென்று ஆசீர்வதித்தனர். அக் குழந்தைக்கு ஐந்து வயதானதும், முப்புரி நூலிட்டு, வேதம் கற்பித்தனர். அப்போது நாரத முனிவர் அங்கு வந்து இச்சிறுவனுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும் ஆயுள் முடிந்து விடும் என்று கூறினார். அதனைக் கேட்ட விச்வாநரன் செய்வதறியாது துயரக்கடலில் ஆழ்ந்தான்.  ஒருவாறு சமாதானமடைந்தபிறகு, மார்க்கண்டே யனையும் , சுவேதகேதுவையும்  காலனிடமிருந்து சிவபிரான் காத்ததை நினைவில் கொண்டு தானும் அவ்வாறே இறைவனை வழிபட்டான். 108 குடங்களில் கொணர்ந்த கங்கை நீரால் நாள் தோறும் ருத்ரம்- சமகம் ஆகியவற்றை ஜபித்து, 1008 குவளை மலர்களால் ஈசனை அர்ச்சித்தான். இதனைக் குறிப்பிடும் காசிகண்டப் பாடல் வருமாறு:

“ குடங்கள் நூற்றெட்டில் கங்கை குளிர்புனல் ஏந்தி அன்பினு
  டன்றினந்தோறும் தெய்வ உருத்திர சமகத்தாட்டித்
  தடந்திகழ் குவளை ஓராயிரத்து இருநான்கு சாத்தி
  அடங்கலர் புரம் தீயூட்டும் அண்ணலை வழிபட்டானே.”   

அப்பாலகனைப் பெருமான் காத்ததோடு, அக்கினி பகவானாக ஆக்கி அருள் செய்தான். இவ்வாறு விஷ்ணு தூதர்கள் சிவசன்மாவிடம் எடுத்துரைத்தார்கள் .        
அடுத்ததாக விஷ்ணு தூதர்கள் சிவசன்மாவுக்கு நிருதி உலகைக் காட்டினார்கள்.  பிங்கலாக்ஷன் என்பவன் காசிக்குச் செல்பவர்களுக்கு இடையூறு செய்பவர்களைத் தண்டித்து அவர்களுக்கு வழியில் பயம் ஏற்படாதவாறு காத்து வந்தான். ஒரு சமயம் அவன் எதிர்த்தவர்களிடம் போரிடும்போது இறக்கவே,  புண்ணியத்தின் பலனாக  நிருதி பதம் பெற்றான். பிறகு, விஷ்ணுகணங்கள் சிவசன்மாவுக்கு வருண உலகைக்காட்டிக் கூறியதாவது: “ நால் வேதங்களை ஓதியவர்களும், உணவும்,நிலமும் அளித்தோரும்,தீர்த்தத்துறைகளில் படிக்கட்டுக்களைக் கட்டியவர்களும்,தண்ணீர்ப்பந்தல் நிறுவியவர்களும் வாழ்வது வருண உலகம் ஆகும். ஒரு மறையவனின் புதல்வன்  சிறுவன், முதலையிலிருந்து  காப்பாற்றப் பட்டதையும் அவன் காசிக்குச் சென்று தன பெயரில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அவன் வருண பதம் பெற்றதையும் சிவசன்மன் அவ்விஷ்ணு தூதர்கள் மூலம் அறிந்தான்.

காசிபரின் மகன் காசியை அடைந்து சிவபிரானை வழிபட்டு அடைந்த வாயு உலகையும்,  கலிங்க நாட்டரசன் பால் தோன்றிய குணநிதி என்பவன் தவம் செய்து ,சிவனருளால் குபேரன் ஆகி, வாழ்ந்து கொண்டிருக்கும்  அழகாபுரியையும் சிவசன்மன் காணப்பெற்றான்.பிறகு பயன் கருதாது வேள்விகள் செய்து, சிவபக்தியில் மேம்பட்டு விளங்கியவர்கள் இருக்கும் ஈசான உலகத்தையும், தக்ஷ சாபம் நீங்கவேண்டித் தஞ்சமடைந்த சந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்தமையால் சிவபெருமான் சந்திர சேகரன் ஆன வரலாற்றைக் கூறி, அவனுறையும் சந்திரலோகத்தைக்காண்பாயாக என்றனர் விஷ்ணு தூதர்கள்.

காசியை அடைந்து ,புருஷாயுதம் என்ற தவத்தைச் செய்த 27 நக்ஷத்திரப் பெண்கள் வாழும் தாரகை உலகத்தையும், சந்திர உலகத்தையும் அடுத்தபடியாகப் பார்த்தான்.சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப்பிறந்த புதன், காசியை அடைந்து லிங்கப்பிரதிஷ்டை செய்து, தனக்கு முன்பு காட்சி அளித்த ஈசனிடம் கேட்ட வரம்,  நாமனைவரும் கேட்க வேண்டியதாகும்: “ அளவற்ற செல்வங்கள் என்னை வந்து அடைந்தாலும், துன்பக்குழியில் அழுந்தினாலும், சிவ சிந்தனை அகலாத வரம் அருள்வாய் “ என்று வேண்டினான். இறைவனும் அத்துதிக்கு மகிழ்ந்து அவனை நவக்கிரகங்களுள் ஒன்றாக ஆக்கி அருள் புரிந்தான். அப்புதனின் உலகையும் சிவசன்மா வழியில் கண்டான். பிறகு, அசுர குருவான சுக்கிரன் வாழும் உலகையும் , செவ்வாய், வியாழன்,சனி ஆகியோரது உலகங்களையும் சிவசர்மா பார்த்தான். தனது பத்தினிகளோடு காசிக்குச் சென்று வழிபட்ட சப்த ரிஷிகள் வாழும் உலகத்தை அதன்பிறகு கண்டான்.நிறைவாக விஷ்ணுதூதர்கள் அவனுக்குத் துருவன் பதம் பெற்ற வரலாற்றைக் கூறி, விஷ்ணு லோகத்தையும் காட்டினர். இவ்வாறு நற்கதி பெற்ற சிவசன்மன், காசியை அடைந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து முக்தி பெற்றான்.

ஸ்ரீ சைலத்தை அடைந்து சிவ தரிசனம் பெற்ற அகத்தியமுனிவர், முருகப்பெருமானது சன்னதியை அடைந்து விழிகள் நீர் பெருக்கத்  துதிகள் பல செய்தவுடன் கார்த்திகேயன் அவருக்குக் காட்சி அளித்தான். இதனால் மயிர்க்கூச்செரிந்த குருமுனியானவர், காசியின் பெருமையைத்  தான் அறிய விரும்புவதாகப் பிரார்த்திக்க, அதற்கு ஷண்முகப்பெருமான் கூறியதாவது:          “ காசியின் பெருமையை ஆயிரம் முகங்களாலும் கூற இயலாது. ஆறு முகங்களோடு அதை எங்ஙனம் உரைப்பேன் ! இருப்பினும் அதன் பெருமைகளைக் கூறுகின்றேன் “ என்றார்.        
                                                            ( காசியின் பெருமைகள் தொடரும் )