Monday, March 18, 2019

ஜோதிர் லிங்கங்கள் ஸோம்நாத் தொடர்ச்சி

வெராவெல் ரயில் நிலையம். இங்கிருந்து ஸோம்நாத் சுமார் 5 கி.மீ.  

கி.பி. 731 – 738 கால கட்டத்தில் அரேபியப் படைகள் நுழைய முற்பட்டபோது, சாளுக்கிய அரசரான புலிகேசி அதனை முறியடித்து விரட்டினார். சௌராஷ்ட்ரத்தை வளைத்து உஜ்ஜைன் வரை வந்த படைகளை பிரதிஹரா வம்சத்தைச் சேர்ந்த நாகபட்டா என்ற மன்னர் விரட்டியடித்தார்.கி.பி.815ல் இரண்டாம் நாகபட்டா என்ற மன்னரது ஆட்சியில் கனோஜ் தலைநகர் ஆகியது. அப்போதுதான் மூன்றாவது முறையாக ஸோம நாத் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். கி.பி. 1019 ல் போஜ ராஜன் காலத்தில் குஜராத் மிகுந்த வளர்ச்சி பெற்றது. சிவ பக்தரான போஜ ராஜா பல கோயில்களைக் கட்டினார்.

ஸோம்நாத்தில் நம்மை வரவேற்ற காளை 
கி.பி. 1000 ஆண்டில் மகமூத் என்பவன் பெரிய சேனையைத் திரட்டிக் கொண்டு சிந்து வெளியைத் தாண்டிப்  போரிட வந்தான். அப்போது அவனது தந்தைக்கு ஜெயபால மன்னர் எழுதிய கடிதத்தை “The Glory that was Gujraradesha “ என்ற நூலிலிருந்து திரு. முன்ஷிஜி அவர்கள் பின்வருமாறு எடுத்துத் தருவதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படித்து உணர வேண்டும்:

You have heard of, and now know the heroism of the Indians. In difficulties, we fear neither death nor destruction. In affairs of honour and renown, we would woo the fire like roast meat, the dagger like the rays of the sun .”

பதினோரு ஆண்டுகள் கழித்து மகமூத் மீண்டும் படை எடுத்து வந்து, ஜெயபால மன்னரைத் தோற்கடித்தான். மன்னரும்,தனது மகனுக்கு முடி சூட்டிவிட்டுத் தீப் பாய்ந்தார். திரு முன்ஷி அவர்கள், : the conquest of India is the conquest of culture “ என்று குறிப்பிடுகிறார். கி.பி. 1022 வரை மகமூதின் படைகள் மும்முறை தாக்கின. இதற்குப் பின் தான் வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல் துவங்கியது.

கி.பி. 1026 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாவது நாள், சோம்நாத்தைப் பொருத்தவரை ஒரு கருப்பு தினம். கஜினி முகமதின் படைகள் அன்றுதான் ஸோமனாத் மீது தாக்குதல் நிகழ்த்தின. 8 ம்  தேதியன்று பயங்கரப் போர் மூண்டது. ஆலயத்தைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டபோது சுமார் ஐம்பதினாயிரம் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கோட்டையைக் கைப்பற்றிய கஜினி முகமது நேராக ஆலயத்திற்குள் சென்று சிறு பகுதிகளாக ஸோமநாத மூல லிங்கத்தை உடைத்தெறிந்தான். சிவந்த கற்களால் அருமையாகக் கட்டப்பட்டிருந்த இந்த மூன்றாவது ஆலயம் தீக்கு இரையாக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் கஜினி முகமது அங்கு தங்காமல் கஜினிக்கே திரும்பி விட்டான். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரே ஸோம்நாத் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. எதற்காக இக்கோயிலையே குறி வைத்தார்கள் என்றால் இந்துக்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக வரலாற்றைக் கடந்து இந்தக்கோயில் திகழ்ந்ததுதான் ! 

ஐந்தாவது முறையாக இக்கோயில் கட்டப்பட்டபோது கோட்டைச் சுவர்கள் பலப்படுத்தப்பட்டன. அரசர்கள் தரிசிக்கும் இடம் கட்டப்பட்டது. உறுதியான தூண்களைக் கொண்ட மண்டபம் ஸோமநாதர் சன்னதிக்கு முன்னர் நிறுவப்பட்டது. வேதம் ஒதுபவர்களுக்கென்று வீடுகள் கட்டித்தரப்பட்டன. த்ரிபுராந்தகா என்ற பாசுபத ஆச்சார்யார் காலத்தில் பல கோயில்கள் கட்டப்பெற்று பிரபாஸ் சீரும் சிறப்புமாக விளங்கியது.

கி.பி. 1292 ல் அல்லாவுதீன் கில்ஜி டெல்லி சுல்தான் ஆனதும் மீண்டும் பிரபாஸ் அழிவுக்கு ஆளாகியது. ராஜபுத்திரப்படைகள் எவ்வளவோ போரிட்டும் அரேபிய படைகளை வெல்ல முடியவில்லை. ஆலப் கான் என்பவன் கோயிலுக்குள் நுழைந்து சிவ லிங்க மூர்த்தியை சிதைத்து விட்டு அதன் துண்டுகளை டெல்லிக்கு எடுத்துச் சென்றான்.

Sunday, March 17, 2019

ஜோதிர் லிங்கங்கள் ஸோம்நாத் தொடர்ச்சி


சோம்நாத் ஆலயம் மீண்டும் எழுவதற்கு மூல காரணமாய் இருந்த சர்தார் படேல் அவர்களுக்கும் திரு. K.M. முன்ஷி அவர்களுக்கும் ஹிந்துக்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். கோயில் கட்டுவதற்கு காந்தி-நேரு ஆகியோர் மூலம் அரசாங்க உதவி மறுக்கப்பட்ட நிலையிலும், இவ்விருவரும் ஒரு ட்ரஸ்ட் நிறுவி ஆலயத்தை எழுப்பி அழியாப் புகழ் பெற்றனர். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சர்தார் படேலின் திருவுருவச் சிலை சோமநாதர் ஆலயத்தை நோக்கி நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்.

திரு முன்ஷி அவர்கள் அகழ்வாராய்ச்சிகள்  மூலமும், பொறியியல் வல்லுனர்கள் மூலமும் நன்கு பரிசீலித்து இத்தனை அழகான கோயிலை நிர்மாணிக்க உதவியுள்ளார்கள். அவர்கள் எழுதியுள்ள “ Somanatha the shrine eternal “ என்ற அருமையான நூல் முதன் முதலாக 1951 ம் ஆண்டு பாரதீய வித்யா பவன் மூலம் வெளி வந்தது. பின்னர் பல பதிப்புக்கள் வெளிவந்துள்ளன.

மகாபாரதத்தில் பலமுறைகள் சரஸ்வதி நதி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் பிரபாஸ்  இருந்த செய்தி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பாரதப்போர் முடிந்ததும் யாதவர்கள் குடிபோதையில் தங்களுக்குள் போரிட்டு மாண்டார்கள்.கிருஷ்ணபகவானும் பலராமனும் மட்டுமே எஞ்சினார்கள். மான் உறங்கிக்கொண்டிருப்பதாகத் தவறாகக் கருதிய வேடன் ஒருவனது அம்பு அங்கு உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன் மீது பாயவே  கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது. அவ்வாறு கிருஷ்ணன் தனது சரீரத்தை நீத்த இடம், சோம்நாத் கோயிலருகில் உள்ள பாலகடிர்தா என்பதாகும். இங்கு ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா ஆகிய மூன்று நதிகள் கடலோடு சங்கமிக்கின்றன.

புராணங்கள் மூலம் பாதாள லோகத்தில் நாகர்கள் வசித்ததை அறிகிறோம். மூன்று விதமான நெருப்புடன் சரஸ்வதி நதி இங்கு கடலில் கலப்பதாகப் புராணம் கூறும். எனவே அதனை அக்னி தீர்த்தம் என்றும் கூறுவதுண்டு. நாக லோகத்திற்கும் சோமநாதருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் புராணம் விவரிக்கிறது. நாகர்களான பார சைவர்கள் ஆண்ட போது சிவ வழிபாடு மேலோங்கி இருந்தது. ( We find Shiva everywhere in this period” says Jayaswal- K.P. Jayaswal, History of India P. 55) 

நாகர்களது ஆட்சிக்குக் கீழ் குஜராத் இருந்ததாலும் அதில் மிகப் புனிதம் வாய்ந்த பிரபாஸும் இருந்தததாலும்  சிவத்தை முன்னிறுத்திய கலாசாரம் மேலோங்கியது. சமஸ்க்ருத மொழி வளர்ச்சி பெற்றது. காசியிலும், நர்மதைக் கரையிலும் அஸ்வமேத யாகங்கள் நடைபெற்றன. இவ்வாறு நாக மன்னர்கள் ஹிந்துமதத்தின் புதிய எழுச்சிக்கு அஸ்திவாரம் நிறுவியதாக டாக்டர். ஜெயஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.     
ஸோமவித்யா என்ற நூலும், ஸ்காந்த மஹா புராணமும், ஸோமவார அமாவாசையன்று இங்கு உள்ள சரஸ்வதி நதி,மற்றும் கடல் நீராட்டையும், ஸோம நாதர் தரிசனத்தையும் மிகவும் புனிதம் வாய்ந்தவையாகக் குறிப்பிடுகின்றன.

மொகன்சாதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் சிவன் ஹடயோகியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஸோம்நாத்தில் உள்ள லகுளீசர் சிற்பமும் இதையே காட்டுகிறது. பாரத நாடு முழுமைக்கும் பாசுபத வழிபாடு ஸோம்நாத் ஆலயத்தை மையமாகக் கொண்டே இருந்திருக்கிறது. பாசுபத ஆசார்யர்களுள் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த லகுளீசர் என்பவர் நர்மதைக் கரையில் உள்ள ப்ரோச் நகருக்கு அருகில் தோன்றியவர். சிவனது வடிவாகவே எண்ணப்பட்டவர். சோம சர்மா என்ற பாசுபத ஆச்சார்யர் தனது நான்கு மகன்களுடன் பிரபாஸ் தீர்த்தத்திற்கு வந்து தங்கி விட்டார். எனவே கி.பி. முதல் நூற்றாண்டிலேயே ஸோம்நாத்தில் முதல் கோயில் இருந்ததாகக் கொள்ளலாம்.

குப்தர்கள் ஆட்சிக்குப் பிறகு வலபி மன்னர்கள் ஆட்சியில் சோம்நாத்தில் இரண்டாவது கோயில் கட்டப்பட்டது ( கி.பி. 640-649) என்றும் அப்போது பழைய கல்வெட்டுக்கள் மறைந்து போயின என்றும் சரித்திர ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். முதல் கோயில் இருந்த இடத்திலேயே இரண்டாவது கோயிலின் கர்ப்பக் கிருகம் எழுப்பப்பட்டது. கடல் உள்ளே வராதபடி தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. கி.பி. 641-644 களில் சீன யாத்ரீகர் யுவான் சுவாங் சௌராஷ்ட்ரத்திற்கு வருகை தந்தார். நாட்டின் பிற பகுதிகளைப் போலவே இங்கும் கலாசாரம் விளங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

நான்காம் தாரசேன மன்னரது ஆட்சியில் இப்பகுதி பன்னாட்டுத்துறைமுகமாக விளங்கியது.கி.பி.722 ல்      
பாதாமியை ஆண்டு வந்த சாளுக்கியர்கள் கைவசம் வலபியர்களின் அரசு மாறியது. இதே சமயத்தில் தான்  ( கி.பி. 711 ) அரேபியர்களின் பார்வை பாரத நாட்டின் மீது விழுந்தது. சிந்து மாநிலம் வழியாக முன்னேறிய அரேபியப் படை மார்வார், ப்ரோச், உஜ்ஜைன்,மால்வா ஆகிய பகுதிகளை வென்று சௌராஷ்டிர மன்னரையும் வென்று தனது ஆளுகைக்குக் கொண்டு வந்தது. கி.பி. 725-726 ஆண்டுகளில் விதி நம் தேசத்தின் மீது விளையாடத் தொடங்கி விட்டது. “An Unforgettable National disaster “– K.M. Munshi  

Saturday, March 16, 2019

ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்

லிங்கோத்பவ மூர்த்தி 

முன்னுரை: சிவபெருமான் ஒளிமயமானவன். ஜோதியுள் ஜோதி எனத் திகழ்பவன். ஸ்வயம் பிரகாசனாக என்றென்றும் விளங்குபவன். அவ்வொளியிலிருந்து தோன்றியருளியதே சிவலிங்கமாகிய ஜோதி வடிவம். தம்முள் யார் பெரியவர் என்று பிரமனும் விஷ்ணுவும் பல்லாண்டுகள் போரிடும்போது அவர்களுக்கு இடையில் மகா சிவராத்திரி நன்னாளன்று சிவ பெருமான் அழல் மலையாகத் தோன்றியருளியதும்  இருவரும் அந்தச் சுடரொளியின் அடிமுடி காணாது போகவே, ஜோதிர் லிங்கமாகத் தோன்றினான் முழு முதற்கடவுளாகிய சிவபெருமான் என்று சிவ மகாபுராணம் குறிப்பிடுகிறது. இந்த லிங்கோத்பவக்  கோலத்தைத்தான் சிவாலயங்களில் மூலவர் கருவறையின் பின்புறம் நாம் காண்கிறோம்.

ஒரு உருவமும், ஒரு பேரும் இல்லாத அனைத்தும் கடந்த கடவுளை நாம் பல்வேறு உருவங்களும் பெயர்களும் கொண்டவனாக நமது பக்குவத்திற்கேற்ப வழிபடுகிறோம். இதற்கு அடுத்த நிலையே உருவமும் அருவமும் கலந்த உருவாருவ நிலையாகிய இலிங்க வடிவம். இவ்வடிவை வழிபடின்  சிவஞானம் பெற்று அருவ நிலையையும் உணரத் தொடங்க ஏதுவாகிறது. இத்துணை அருமை பெருமைகளை வாய்ந்த சிவ லிங்க வடிவமே பெரும்பாலும் சிவாலயங்களில் நடு நாயகமாக இருக்கக் காண்கிறோம். பிற தேவதா மூர்த்தங்கள் அனைத்தும் உருவ வடிவில் இறைவனைச் சுற்றிலும் அமைந்துள்ளனர். எனவே ஒவ்வொரு சிவலிங்கமும் ஜோதிர் லிங்கமே எனப் பொதுப் படையாகக் கொண்டாலும் நமது நாட்டில் பன்னிரண்டு இடங்களில் உள்ள ஜோதிர் லிங்கங்கள் தொன்மை வாய்ந்ததும், சிறப்பு மிக்கனவுமாகப் பெரியோர்களால் கருதப்பட்டு வருகிறது.
சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் ஜ்யோதிர்லிங்க பூஜை 


பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்: துவாதச ஜோதிர் லிங்கங்களின் இருப்பிடத்தைப் பின் வரும் சுலோகத்தால் அறியலாம்:

சௌராஷ்ட்ரே ஸோமனாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம்; உஜ்ஜயின்யாம் மஹாகாளம்  ஒங்காரமமலேச்வரம்; 
பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீம சங்கரம்  ஸேது பந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே ; வாரணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே ; ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே .
ஏதாநி ஜ்யோதிர்லிங்காநி ஸாயம் ப்ராத: படேந் நர: ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி .   
           

இதன்மூலம்,  ஸோமநாதமும், ஸ்ரீ சைலமும், உஜ்ஜைனி மஹாகாளமும்,ஒங்காரேச்வரமும்,பரலி வைத்யநாதமும், பீமசங்கரமும், ராமேச்வரமும்,, நாகேசமும்,காசி விச்வேசமும், த்ரயம்பகமும், கேதாரமும்,குஸ்மேசமும் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று குறிக்கப்படுகின்றன.                                                                            ஸோமநாதம்                                         
ஸோம நாதர் ஆலயத்தின் எழில் தோற்றம்  
                           
பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது இதுவேயாகும்.
ஸோம லிங்கம் நரோ த்ருஷ்ட்வா ஸர்வபாபாத் ப்ரமுச்யதே ; என்ற வாக்கியம் இதன் பெருமையை உணர்த்தும்.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து வேராவல் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ. சென்றால் அரபிக் கடலோரம் கம்பீரமாய் நிற்கும் ஸோம்நாத் ஆலயத்தை அடையலாம். மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுத் தூய்மையாகக் காட்சி அளிக்கும் இவ்வாலயம் அனைவரையும் பரவசப்படுத்துவது.
மிகப்பழைய காலத்தில் சௌராஷ்டிரத்தின் பிரபாஸ் பட்டன்/ தேவபட்டன பகுதியைச் சேர்ந்ததாக விளங்கியது. இமயமலை தோன்றும் முன்பே இப்பகுதி இருந்ததாகவும், கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளி நாகரிகம் தழைத்தபோது சிவனைப் பசுபதி என்று பெயரிட்டு வணங்கி வந்தனர். பாண்டவர்கள் இப்பகுதியை அமைத்தபோது, அதற்குக் குசஸ்தலி என்று பெயரிட்டனர். பின்னர்தான் இப்பகுதி, சுரதா, சௌராஷ்டிரா என்றெல்லாம் வழங்கப்பட்டது. ஒரு காலத்தில் பிரபாஸ் பன்னாட்டு வணிகச் சிறப்பு வாய்ந்த துறைமுகமாக விளங்கியது.

மேற்குக் கடற்கரை ஓரம் இருந்த தலங்களுள் பாரத காலத்திலிருந்தே பிரபாஸ் மிகப்புனிதம் வாய்ந்த தலமாகக் கருதப்பட்டது. இந்திரன்,சூரியன், முனிவர்கள் பலரும் வழிபட்ட இத்தலத்தைப பாண்டவர்களும், கிருஷ்ணனும்,பலராமனும், வழிபட்டனர். கோகர்ணத்திலிருந்து துவாரகை செல்லும் வழியில் அர்ச்சுனன் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. பரீக்ஷித் மன்னன், ஜனமேஜயன் ஆகியோரும் இங்கு யாத்திரை செய்துள்ளனர். எனவே, க்ருஷ்ணரது காலத்திற்குப் பல காலம் முன்னதாகவே புனிதம் மிக்க தலமாக இது திகழ்ந்துள்ளதை அறியலாம்.

தக்ஷன் தனது 27 பெண்களைச் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். அவர்களுள் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் பிரியமாக இருக்கக்கண்டு மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். அதனால் வெகுண்ட தக்ஷன், சந்திரனின் கலைகள் தேய்ந்து போகும்படி சபித்து விட்டான். அந்நிலையில் சிவபெருமான் ஒருவரே அவனுக்கு அடைக்கலம் தந்து, பிறைச் சந்திரனை ஏற்று அருளியதோடு கலைகள் 15  நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் வளருமாறு அருளினார். அவ்வாறு சந்திரன் இறைவனை வழிபட்ட இடமே பிரபாஸ் என்கிறார்கள். அது முதல் சுவாமிக்கும் சோமநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் ஸோம்நாத் ஆயிற்று.                                                      ஒவ்வொரு ஆலயத்திற்கும் வரலாற்றுப் பின்னணி உண்டு. ஆனால், ஸோம் நாத்திற்கோ சோக மயமான பின்னணி இருக்கிறது. ஆம். சோகம் ஒரு முறை ஏற்பட்டதல்ல. 18 முறைகள் கறை படிந்த சம்பவங்களால் ஏற்பட்ட மாளாத சோகம் அது. நமது வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள போதிலும், புதையுண்ட அவ்வரலாற்றுச் செய்திகள் நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டுவனவாகும். முகலாயப் படையெடுப்புக்களால் சூறையாடப் பெற்று முற்றிலும் அழிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் சோக வரலாற்றைப் பற்றி சுருங்கக் காண்போம்:


குப்தப் பேரரசின் போது இவ்வாலயம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. ஜூனாகாத் நகரைத் தலைநகரமாகக் கொண்ட குப்த சாம்ராஜ்ஜியத்தில் பிரபாஸ் புகழோடு விளங்கியது. ஸோம்நாத்தைப் பராமரிக்க ஒரு கிராமம் அளிக்கப்பட்டது. இவ்வாறு சுமார் இருநூறு ஆண்டுகள் உன்னத நிலையில் இக் கோயில் இருந்து வந்தது. கி.பி. 1026 ம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் நாள் கஜினி முகமதின் முகலாயப் படைகள் இங்கு வந்து கோயிலை நாசம் செய்தன. மூல லிங்கமானது கஜினியினால் உடைக்கப்பட்டது ( இதை எழுதக் கை கூசுகிறது). கோவிலின் விலையுயர்ந்த ஆபரணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. சிறுவர்களும் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டனர்.

பின்னர் ஜுனகாத் அரசர் , அஜ்மீர் மால்வா ஆகியோர், கோயிலை மீண்டும் நிர்மாணித்தனர். ஆனால் கி.பி.1298 ம் ஆண்டு டெல்லி சுல்தான் அல்லாவுதீன் கில்ஜியின் படைகள் இக்கோயிலைத்  தாக்கின. ஜோதிர்லிங்கம் உடைக்கப்பட்டது. பிறகு ராஜா ராவன்வர் என்பவர் மீண்டும் கோயிலை உருவாக்கி, சிவலிங்கத்தைத் ஸ்தாபித்தார். கியாசுதீன் துக்ளக்கின் மகன் பதவி ஏற்றதும் சோம்நாத் ஆலயம் சூறையாடப்பட்டது. சிவலிங்கமும் மூன்றாவது முறையாகக் கொள்ளை அடிக்கப்பட்டது. பின்னர் பிரபாஸ் மற்றும் ஜுனேகாத் அரசர்கள் இணைந்து டெல்லிப் படையை விரட்டி விட்டு, மீண்டும் சோம்நாத் ஆலயத்தைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தனர். ஆனால் ஜாபர் கான் என்பவனால் நான்காவது முறையாக சோம்நாத் ஆலயம் சூறையாடப்பட்டது.1377 ல் ராஜா பஜாடி என்பவர் புதுப்பித்த கோயிலை ஜாபர் கான் இடித்ததால் ஐந்தாம் முறையாக ஆலயம் சூறையாடப்பட்டது. ஆனாலும் இந்துக்கள் அங்கு சென்று பூஜை செய்வதைக் கண்டு சகிக்காமல்,ஜாபர்கான் கோயிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை உடைத்து, பூஜை நடை பெறாதபடி செய்தான். இந்த ஆறாவது தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரமான கொள்ளைகள் நடைபெற்று ஆலயம் சீரழிந்தது.

கி.பி.1415 ல் அகமது ஷா என்பவன் இக்கோயிலின் எந்த பகுதியும் இருக்கலாகாது என்று ஆணை இட்டான். இந்துக்கள் மத மாற்றம் செய்யப்பட்டனர். இதன் பிறகு ஜுனாகத் அரசர் கி.பி. 1451முதல்  ஐந்து ஆண்டுகள் இக்கோயிலைத் திரும்பவும் கட்டி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். கி.பி. 1490 ல் பிரபாஸ் மீண்டும் சூறையாடப்பட்டது. எண்ணற்ற கோயில்கள் அழிக்கப்பட்டன.இந்து உருவங்களைப் பூஜிப்பதைத் தடை செய்தனர். இதனால் மனம் உடைந்த இந்துக்கள் சரஸ்வதி ஆற்றையே இறைவனாக வழிபட்டனர். கி.பி. 1547 ம் ஆண்டு போர்ச்சுகீசியர்களது படையெடுப்புக்கு இப்பகுதி உள்ளானது. அக்பரது காலத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால் கி.பி. 1665 ல் அப்துல் கான் என்பவனுடன் இங்கு வந்த ஔரங்கசீப் முதலில் அந்தணர் ஒருவரையும்,ஒரு பசுவையும் கொன்று விட்டு, ஸோம்னாத்தின் மீது படை எடுத்தான். கி.பி. 1704 ல் மீண்டும் சோம்நாத் மீது படை எடுக்க ஔரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அது நிறைவேறும் முன்பாக 1707 ம்  ஆண்டு மாண்டு போனான். பிறகு கி.பி. 1786 ம் வருடம் இந்தூர் மகாராணி அகல்யா பாய் அவர்கள் சோம்நாத் கோயிலை புனர் நிர்மாணம் செய்து சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். 1947 வரை அமைதியாக இருந்த  நிலையில் ஜுனாகத் நவாப் பாகிஸ்தானுடன் சேர முயற்சி செய்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு ஏற்படவே, நவம்பர் 9 ம் தேதி தான் மட்டும் பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார்.

நவம்பர் 15 ம் தேதி ஜுனாகத் மாகாணம் இந்தியாவுடன் இணைந்தது. இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சீரிய முயற்சியால் சோம்நாத் கோயில் அறக்கட்டளை துவக்கப்பட்டது. ஜாம்நகர் ராஜா திக் விஜய் சிங் அதற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். கி.பி. 1951 ம் ஆண்டு சோம்நாத் ஆலயம் முழுவதுமாகக் கட்டப்பெற்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியான டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.                                                    

Wednesday, December 19, 2018

சத்தி நாயனார் செய்த " ஆண்மைத் திருப்பணி "

வரிஞ்சையூர் சிவாலயம் 
தேவாதி தேவனான பரமசிவனை  அழைக்காமல் பிற தேவர்களை வைத்துக்கொண்டு தக்ஷன் யாகம் செய்தான். சிவபெருமானுக்கு ஆகுதி தராமல் எந்த யாகமும் செய்யலாகாது. தனது வலிமையைக் காட்டவும், சிவனை அவமதிக்கவும் துணிந்த தனது தந்தையை தாக்ஷாயணி  எவ்வளவோ அறிவுறுத்தியும் கேளாத தக்ஷன், சிவ நிந்தையும் செய்தான். அதனைக் கேட்கப் பொ றாத அம்பிகை தனது செவிகளைப் பொத்திக்கொண்டு அந்த வேள்வி அழிய வேண்டும் என்றும் அதில் கலந்து கொண்ட பாவத்திற்காகத்  தேவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சாபமிட்டு விட்டு, சிவ நிந்தையைக் கேட்டதற்காகத் தனது உடலைத் அக்கினிக்கு இரையாக்கினாள் . இதனை அறிந்த சிவபெருமானது சினத்திலிருந்து வெளிப்பட்ட வீரபத்திரர் , தக்ஷனையும், அவனது வேள்வியில் கலந்து கொண்ட தேவர்களையும் தண்டித்தார் என்று ஸ்காந்த மகா புராணம் கூறுகிறது.

சிவனடியார்களை நிந்தித்தவர்களைத்   தண்டிக்க வேண்டும் என்ற உணர்வுடன் தொண்டாற்றியவர் சத்தி நாயனார். அறுபத்து மூவருள் ஒருவரான இவரை , சுந்தரமூர்த்தி சுவாமிகள், "  சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் " என்று பாடுகிறார். தாக்ஷாயணி தேவியார்   சிவ நிந்தையைப்  பொறுக்காமல் சாபமிட்டாள் . ஆனால் சத்தி நாயனாரோ சிவனடியார்களை நிந்தித்தவர்களையும் தண்டித்தார். 

காவிரி பாயும் சோழ வளநாட்டில் வரிஞ்சையூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் நம் நாயனார். திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியிலுள்ள கீழ் வேளூரிலிருந்து  கச்சனம் செல்லும் பாதையில் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தேவூரிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது வரிஞ்சையூர் என்னும் அழகிய கிராமம். தற்போது அதனை வரிஞ்சியூர் என்று அழைக்கிரார்கள். 


சத்தி நாயனார் சன்னதி 
வரிஞ்சையூரில் அவதரித்த சத்தி நாயனார், மாலயன் முதல் தேவர்கள் காண மாட்டாத சிலம்படிகளுக்கு ஆட்செய்து பக்தியில் சிறந்து விளங்கினார். அவரது இயற்பெயர் இன்னதென்று அறியவில்லை. சிவனடியார்களை யாராவது இகழ்ந்தால்,அவர்களது நாக்கினைத்  தண்டாயுதத்தால் வலிந்து, கத்தியினால் அதனை அரிந்து விட்டதால் அவருக்குச் சத்தியார் என்ற பெயர் வழங்கலாயிற்று. சத்தி என்ற  ஆயுதத்தை இதற்காக அவர் ஏந்தி வந்தார். 


சிவனடியாரை இகழ்ந்தோரை நாயனார் தண்டித்தல்- தாராசுரம் சிற்பம் 
இவரது சிவபக்தியைச்  சிறப்பிக்கும் வகையில் இத் தொண்டினைச் சேக்கிழார் பெருமான், " அன்புடன் ஓங்கு சீர்த் திருத் தொண்டு " என்றும், "  ஆண்மைத் திருப்பணி " என்றும் போற்றுவார். மேலும் இச் செயற்கரிய செயலைச் செய்த நாயனாரை, "  வீரத் திருத் தொண்டர் "  என்றும் சிறப்பிக்கிறார். இவ்வாறு சிவனடியார்களை இகழ்ந்தோரது நாவினை அறுத்துத் தூய்மை செய்த நாயனார், பொன்னம்பலத்தில் அனவரதமும் நடமாடும் பெருமானது கழலடியைச் சேர்ந்தார்  என்கிறது பெரிய புராணம். 

வரிஞ்சையூரில் உள்ள சிவாலயத்தில் சத்தி நாயனாருக்காக தனிச் சன்னதி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூப்பிய கரங்களுடன், சுவாமி சன்னதியை நோக்கியவாறு நாயனார் காட்சி அளிக்கிறார். அம்பிகை சன்னதி தெற்கு நோக்கியது. சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் பெரிய புராணத்தில் வரும் சத்தி நாயனார் புராணத்தைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள். ஒரு கால பூஜையே நடைபெறுகிறது. அர்ச்சகர் வெளியூரிலிருந்து வருகிறார்.  பிற ஊர்களில் இருந்து வரும் அடியார்களுக்கு உள்ளூர் அன்பர்கள் ஆலய தரிசனம் செய்து வைக்கிறார்கள். ஐப்பசி மாதப் பூச நக்ஷத்திரத்தன்று நாயனாரது குருபூஜை நடைபெறுகிறது. வெளியூர் அன்பர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். மற்ற நாட்களில் உள்ளூர் அன்பர்கள் தங்களால் இயன்ற பணியைச் செய்து வருகிறார்கள் . 
தொலை தூரத்திலிருந்து இங்கு வரும் அன்பர்கள் குறைவாக இருந்தாலும் , தேவூர், கீழ்வேளூர், திருவாரூர், சிக்கல், நாகை ஆகிய ஊர்களிளிருந்தாவது அன்பர்கள் அடிக்கடி இங்கு தரிசிக்க வர வேண்டும். அதனால் ஆலயம் நன்கு பராமரிக்கப் படுவதுடன், அர்ச்சகரையும் ஊக்குவிக்க முடியும். முதிர்ந்த வயதிலும் வெளியூரிலிருந்து வந்து பூஜை செய்து விட்டுப் போகும் அர்ச்சகர் நலனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா ? 

நாயன்மார்கள் அவதரித்த தலத்தை மக்கள் ஒருபோதும் கை விடலாகாது. இயன்ற வகையில் எல்லாம் அக்கோயில்களுக்கு நம்மாலான உதவியையும் பணியையும் செய்ய முன் வர வேண்டும். போக்குவரத்து வசதிகள் நிரம்ப உள்ள இக்காலத்திலும் நாம் புறக்கணித்தால்,  இனி வரும் சந்ததியர்க்கு முற்றிலுமாக அக்கறை இல்லாமல் போய் விடும். அதற்காகவாவது நாம் வழி நடத்திக் காட்ட வேண்டாமா ? நமது பண்டைய வரலாறுகளும், மரபுகளும், கலைச்  செல்வங்களும் பாதுகாக்கப் பட வேண்டாமா ? நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. 

Sunday, December 16, 2018

பெருமிழலைக் குறும்ப நாயனார் அவதாரத் தலம்


அண்மையில் கும்பகோணம் சென்றிருந்தபோது இந்த அதிசய நிகழ்ச்சி நடந்தது. பேருந்துக்காகக் காத்திருந்தபோது சுமார் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஒருவர் என்னிடம் வந்தார். கரிய நிறம். ஒரு விவசாயியைப் போன்ற எளிய தோற்றம். கையில் ஒரு சிறிய பையை வைத்திருந்தார். என்னிடம் ஏதோ கேட்க வந்தவர் போலத் தோன்றியது. ஆனால் அவரோ தனது கைப்பைக்குள் கையை விட்டுத் துழாவி, ஒரு பொட்டலத்தை எடுத்தார். அதைப் பிரித்துவிட்டு அதிலிருந்த ருத்திராக்ஷ மணியை எடுத்துக் காட்டினார். அதைத்  தான் அணியலாமா என்று பார்த்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சந்தேகத்தை முன்பின் அறியாத என்னிடம் வந்து, அதுவும் பேருந்து நிற்கும் இடத்தில் ஏன் கேட்டார் என்று இன்னமும் புரியவில்லை. அம்மணியைக் கையில் வாங்கிப் பார்த்தேன். ஐந்து முகங்கள் கொண்ட மணி அது. அதை அவர் அணிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அவரது வீட்டிலுள்ளோரோ , சுத்தமாக இருந்தால் தான் அணியலாம் என்று கூறி விட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார். 

வயிறு அசுத்தமானவற்றை ஏற்றுக்கொள்கிறது என்பதால் அவ்வாறு கூறினார்கள் போலிருக்கிறது. ஆனாலும் அவரது உள்ளத்தூய்மையை நோக்கும் போது ஒன்று சொல்லத் தோன்றியது.    அம்மணியைக் கண்டத்தில் (கழுத்தில்) அணிவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.  " அது அணிபவரைத் தூய்மைப் படுத்தவே செய்யும். அணிந்தவுடன் வீட்டார் விரும்புவதுபோலவே தூய சைவ உணவை மட்டுமே உண்ணத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன் " என்று கூறினேன். அந்த நபரும் சமாதானம் அடைந்தார். 

அடுத்தபடியாக அவர் கூறிய செய்தியே என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. அவர் கூறியதாவது : "  நான் திருப்பனந்தாள் செல்லும் வழியில் உள்ள கோயிலாச்சேரியில் வசிக்கிறேன். அங்கு செல்லும் பேருந்துக்காகவே காத்துக் கொண்டு இருக்கிறேன். எங்கள் ஊரில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான பெருமிழலைக் குறும்ப நாயனார் அவதாரம் செய்தார். நீங்கள் அந்தக் கோயிலை அவசியம் தரிசிக்க வேண்டும். திருக்குளத்தை ஒட்டிய சாலையில் நடந்தால் அருகாமையிலேயே கோயில் இருக்கிறது " என்றார். 

மிழலைக் குறும்பர் அவதரித்த பதி பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. " மிழலை நாட்டுப் பெருமிழலை " என்று சேக்கிழாரும் ,  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது என்று சிலரும், திருவீழி மிழலை என்று சிலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கோவிலாச்சேரியே மிழலை என்பதை அன்று தான் கேள்விப்பட முடிந்தது. இருப்பினும் அவரிடம் வினா எழுப்பினேன்,                           " நாயனாருக்கு விக்கிரகம் இருக்கிறதா " என்று   " இருக்கிறது " என்று உடனடியாகப் பதில் வந்தது. அதோடு நான் ஏற வேண்டிய பேருந்தும் வந்து விட்டதால் பேச்சைத் தொடரமுடியவில்லை. விடை பெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறி விட்டேன். இன்று வரை அவரை மீண்டும் பார்க்கவில்லை. ஆனால் எப்படியாவது ஒரு நாள் கோயிலாச்சேரிக்குச் சென்று சிவ தரிசனமும் நாயனார் தரிசனமும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. 

 " மிழலை நாட்டுப் பெரு மிழலை" என்றே இவர் அவதரித்த பதியைக் குறிப்பிடுகிறது பெரிய புராணம். சிவபெருமானுக்கு அடிமை செய்த மிழலைக் குறும்பர் சிவனடியார்களுக்கு அமுதும் நிதியமும் அளித்துப் பிறவிப் பயனைப் பெற்றார். திருவெண்ணெய் நல்லூரில் இறைவனால் ஓலை காட்டி ஆட்கொள்ளப் பெற்ற நம்பியாரூரராகிய சுந்தரரைத் தனது குருவாகக் கொண்டு அவரது பாதம் நினைக்கும் நியமத்தில் தலை சிறந்து நின்றதால் அவருக்கு அணிமா முதலிய சித்திகள் எளிதில் கைவரப் பெற்றன. மாலறியா,நான்முகனும் காணா மலரடிகளை அடையும் உபாயம் இதுவே எனத் தெளிந்து அந்நெறியில் நின்றார். 

ஒரு ஆடி மாதத்து சுவாதி நன்னாளன்று திருவஞ்சைக்களத்தில் இருந்த சுந்தரர்  கயிலைக்குச் செல்ல இருப்பதை யோகத்தால் முன்கூட்டியே அறிந்தார் மிழலைக் குறும்பர். சுந்தரரைப் பிரிந்து  கண்ணின் மணியை இழந்தவரைப் போல வாழேன் என்று துணிந்தவராய் , அவருக்கு முன்பாகச் சிவன் தாளை இன்றே சென்று சேர்வேன் என்று எண்ணி யோகத்தில் ஆழ்ந்தார். ஆடி சித்திரை  நன்னாளன்று, பிரமநாடி வழியாகக் கபாலம் திறக்கப்பெற்றுக் கயிலை நாதனின் கழலடி அடைந்தார். இந்நிகழ்வை திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள் எடுத்துப் போற்றும் பாடலைக் காண்போம்: 

"  சிறை நன் புனல் திருநாவலூராளி செழும் கயிலைக்கு

 இறை நன்கழல் நாளை எய்தும் இவன் அருள் போற்ற  இன்றே 

 பிறை நன் முடியன் அடி அடைவேன் என்று உடல் பிரிந்தான் 

 நறை மலர்த் தார் மிழலைக் குறும்பன் எனு நம்பியே "

கும்பகோணத்திலிருந்து சோழபுரம் வழியாகத் திருப்பனந்தாள் செல்லும் நெடுஞ்சாலையில் இருப்பது கோவிலாச்சேரி என்ற சிறிய கிராமம். பெருவழியை ஒட்டிய திருக்குளத்தை ஒட்டித் திரும்பிச் சிறிது தூரம் சென்றவுடனேயே திருக்கோயில் கண்ணுக்குத் தெரிகிறது. திருப்பணிகள் செய்யப்பெற்றுப் பல  வண்ணங்களுடன் மிளிர்கிறது. ஆனால் ஒரு கால பூஜையே நடைபெறுகிறது. பக்கத்திலுள்ள கல்லூர் என்ற ஊரிலிருந்து அர்ச்சகர் வந்து பூஜை செய்கிறார். 

இத்திருக்கோயில் ஒரே ப்ராகாரத்துடன் விளங்குகிறது. முன் மண்டபத்தைக் கடந்து , மகா மண்டபத்தில் நுழைந்தவுடன்  கிழக்கு நோக்கிய மூலவரான கயிலாய நாதரையும், தெற்கு நோக்கிய காமாக்ஷி அம்பிகையையும் தரிசிக்கிறோம். மகாமண்டபத்தில் சுவாமியை நோக்கியவராகக்  கூப்பிய கரங்களுடன் பெரு  மிழலைக் குறும்ப நாயனார்  காட்சியளிக்கிறார். ஆடி சித்திரையன்று இவரது குருபூஜை நடைபெறுகிறது. வெளிப் பிராகாரத்தை வலம் வந்து ஆலய தரிசனத்தை நிறைவு செய்கிறோம்.  

குடந்தைக்கு அண்மையில் உள்ள இக்கோயிலை அன்பர்கள் தரிசிக்க வேண்டும். எவ்வளவு பேருக்கு இப்படி ஒரு புராணச் சிறப்பு வாய்ந்த கோயில் இருக்கிறது என்று தெரியும் ? ஒருவேளை தெரிந்தாலும் நேரில் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த ஈசனே தோற்றுவிக்க வேண்டும்.  " ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே "  என்று மாணிக்க வாசகர் அருளியது சத்தியமான வார்த்தை. 

Sunday, October 7, 2018

தலையூரில் உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை

அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிவபெருமானுக்கு வெவ்வேறு வகையில் ஒப்பற்ற தொண்டு செய்து வந்தனர் என்பதைப் பெரிய புராணம் மூலம் அறிகிறோம். அதில் சிலர்  பூமாலை சார்த்தியும்,சிலர்  பாமாலை சார்த்தியும், கோயில்கள் எழுப்பியும், மனத்தால் கோயில் கட்டியும், அடியார்களுக்கு அன்னமளித்தும், சிவனடியார்கள் எதைக் கேட்டாலும் தயங்காது கொடுத்தும், இன்னும் சிலர் தன் உடைமைகள் அனைத்தையும் வழங்கியும் தாமே தனக்கு நிகராக விளங்கினர். ஆரூர்ப் பெருமானே, சுந்தரருக்கு அடியார் பெருமை பாடுக என்று அடி எடுத்துத் தந்தார் என்றால் தொண்டர் தம் பெருமையை யாரால் அறிய முடியும் ? 

 திருத்தலையூரில் உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை என்றால்  நம்மில் பெரும்பாலோர்  தலையூர் என்ற ஊர்ப் பெயரையே  கேள்விப்பட்டதில்லை என்கின்றனர். நாயனாரது பெயரையும் கேட்டதில்லையாம். அதைவிட அதிசயம் என்ன என்றால் குருபூஜை என்றால் பிறந்த நாளா என்கின்றனர். உள்ளூர்க்காரர்களுக்கே பலருக்கு இந்த சந்தேகம் வந்துவிட்ட நிலையில் நமக்குத் தெரிந்த அளவில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். 

தலையூர் கோயிலும் பொய்கையும் 
தலையூர் என்பது சோழ நாட்டிலுள்ள ஊர் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். ஆனால் சோழ நாட்டில் இதே பெயரில் இரண்டு இடங்கள் உள்ளன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் ஒன்றும், முசிறிக்கு அருகில் ஒன்றுமாக இரு ஊர்கள் இதே பெயரில் உள்ளன. இரண்டுமே பழமையான சிவாலயங்களைக் கொண்டவை. இரண்டிலுமே, நாயனாரது திருவுருவம் உள்ளது. நாயனார் பொன்னம்பலவாணனின் சேவடி நீழலை அடைந்த புரட்டாசி மாத அசுவினி நக்ஷத்திரத்தன்று இரு ஊர்களிலுமே குருபூஜை நடை பெறுகிறது. இதே போன்று இளையான்குடி மாற நாயனாரது ஊரான இளையான்குடி என்ற பெயரில் திருநள்ளாற்றுக்கு அருகில் ஒன்றும், பாண்டிய நாட்டில் ஒன்றுமாக இரு இடங்கள் உள்ளன. 

தலையூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பசுபதியார் என்பவர் ஆவார். இவர் மலைவல்லியைப் பாகமாகக் கொண்ட சிவபிரானிடத்தில் தூய அன்புடன் அடிமைத் திறம் பூண்டு வந்தார். வேதத்தின் பயனாகிய உருத்திர பாராயணத்தை இடைவிடாது பகலிலும் மாலையிலும் செங்கமலங்கள் விளங்கிய பொய்கையில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தலை மீது கூப்பிய கையினராய் நியமத்துடன் குறைவறச் செய்து வந்தார். இதனால் உமைபாகமுடைய பிரான் பெரிதும் மகிழ்ந்து நாயனாரைச் சிவபுரியை அடையுமாறு பெருங்கருணை புரிந்தார். பேரன்போடு உருத்திரத்தை ஜபித்து வந்ததால் அவரை உருத்திர பசுபதியார் என்ற நாமத்தால் உலகத்தவர் அழைக்கலாயினர். 

நாயன்மார்களது சரித்திரங்கள் நமக்குப் பல்வேறு பாதைகளைக் காட்டுபவை. அவற்றில் ஏதேனும் ஒன்றையாவது நாம் முடிந்தவரை பின்பற்றுவதே பெரிய புராணம் படிப்பதன் பயனும் ஆகும். நாயன்மார்களைப் போல எவராலும் எக்காலத்தும் இணையாக முடியாது என்றாலும் அவர்கள் செய்த பணியை நமக்கு முடிந்த அளவிலாவது பின்பற்றலாம். கோவில் திருப்பணி செய்வதால் எல்லோரும் கோச்செங்கட் சோழ நாயனார் ஆகி விட முடியுமா? இதனை அறியாது தற்காலத்தில், திருப்பணிச் செம்மல்,திருப்பணிச் சக்கரவர்த்தி, திருப்பணித் திலகம் என்று பல பட்டங்களைத் தந்து விடுகின்றனர். கொடுப்பவர்கள் தான் ஏதோ அன்பு மிகுதியில் இப்படிச் செய்கிறார்கள் என்றால் அப்பட்டங்களை வாங்கிக் கொள்பவர்களாவது அவற்றை மறுக்கலாம். போதாக் குறைக்கு அவர்களை அவதார புருஷர் என்றும், நாயன்மார் என்றும் புகழாரம் சூட்டுகின்றனர். இவை யாவும் சிவாபராதங்களே. 
கொல்லுமாங்குடிக்கு அருகில் உள்ள தலையூரில் நாயனாரது குருபூஜையை வெளியூர் அன்பர்கள் செய்து வருகின்றனர். ஏனைய நாட்களில் ஒரே கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் புரட்டாசி அசுவினியன்று களை  கட்டுகிறது. 

பாண்டிச்சேரியிலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து ஹோமம்,அபிஷேக ஆராதனை ஆகியவற்றை செய்கிறது. ருத்ர பாராயணமும் நடை பெறுகிறது. 

நீரில் நின்றபடி ருத்ர ஜபம் 
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அன்பர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக இங்கு வந்து ருத்ர பாராயணம்  செய்கின்றனர். கழுத்தளவு நீரில் இவ்வாறு செய்வதைக் காணும்போது நாயனார் பல நாட்கள் இதேபோல் நீரில் ஒருமைப் பட்ட மனத்துடன் செய்த வரலாற்றைப்  பெரிய புராணம் வாயிலாக எண்ணிப் பார்க்கிறோம். 

இருந்த இடத்தில் இருந்து கொண்டு குருபூஜை செய்கிறேன் என்று சொல்லிக் கொள்வதை விட நாயன்மார்கள் அவதரித்த இது போன்ற கிராமக் கோயில்களுக்கு அன்பர்கள் சென்று இவ்வைபவங்களில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். சமயச் சான்றோர்கள் மக்களை இதற்கு ஆட்படுத்த வேண்டும். இவை எல்லாம் நடவாத வரை, மக்களுக்கு ஊர்ப் பெயரோ, நாயன்மார் பெயரோ குருபூஜை என்று நடைபெறுகின்றது என்றோ தெரிய வாய்ப்பு இல்லை. கேட்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப் படுத்த வேண்டியவர்கள் முன் வர வேண்டாமா ? 

Thursday, August 2, 2018

                                சிவபுரம் செல்வோம் சிவனருள் பெறுவோம் 
                             
                                                          சிவபாதசேகரன் 

சிவனுறை சிவபுரம் 
ஒரு நாடு வளர்ச்சியும் பாதுகாப்பும் பெற வேண்டுமென்றால் அங்கு கற்றவர்களும்,செல்வந்தர்களும், வீரம் மிக்க படைவீரர்களும் இருத்தல் அவசியம். இம்மூன்றும் ஒரே நபரிடத்தில் இருப்பது மிகவும் அரிது. ஆனால் இம்மூன்றும் ஒருவரிடம் இருக்க வேண்டுமென்றால் இறைவனருள் துணை இருந்தால் மட்டுமே சாத்தியம். அவ்வாறு மூன்றும் பெற வேண்டுவோர் வணங்க வேண்டிய தலம் சிவபுரம் ஆகும். கும்பகோணத்திற்குக் கிழக்கில் சுமார் 5 கி.மீ. தொலைவிலும் காரைக்கால் செல்லும் வழியிலுள்ள சாக்கோட்டைக்கு 2 கி.மீ. தொலைவிலும்  உள்ள இத்தலத்தை நினைபவர்களும் தொழுபவர்களும் இம்மூன்றும் பெறுவர் என்று  திருஞானசம்பந்தர் இந்தத் தல த்தின்மீது பாடிய தேவாரப்பதிகத்தில் காணப்படுகிறது:

" ..  சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே."  என்றும் 

  " .. சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே."  என்றும்            

  " .. சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே. "  என்றும்         
         
அப்பதிக வரிகள் குறிப்பிடுகின்றன. அது மட்டுமல்ல. அவர்கள் புகழுடன் நிலவுலகில் வாழ்வர் என்பதை," .. சிவபுர நகர் தொழும் அவர் புகழ் மிகும் உலகிலே " என்றும் சம்பந்தர் அருளிச் செய்துள்ளார். 

சண்பகாரண்யம், குபேரபுரி ஆகிய பெயர்களையும் உடையது இத்தலம். ஊழிக் காலத்தில் ஊழி வெள்ளத்தில் அமிழ்ந்த பூமியைத்  திருமால் வெள்ளைப் பன்றி உருவம் கொண்டு எடுத்து நிறுத்திய பின்னர் இத தலத்திற்கு  வந்து, சிவபெருமானை வழிபட்ட சிறப்புடையது.   சுவேத வராகர் தனது வெள்ளைக் கொம்பின் நுனியில் பூமியைத் தாங்கி மீட்டுக் கொண்டு வந்த பிறகு, சிவபுரத்தில் வழிபட்டதை, 

" .. எயிறதன் நுதி மிசை இதமமர் புவியது நிறுவிய எழில் அரி வழிபட       அருள்செய்த பதமுடையவன் அமர் சிவபுரம் " எனவும்,                              

   " வெள்ளைப் பன்றி முன்னாள் சென்று அடி வீழ்தரு சிவபுரமே "   என்றும்     ஞான சம்பந்தரும்,                                                                                                                   
   "பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பன்னாளும் வழிபட்டு ஏத்தும் "  என்று திருநாவுக்கரசரும் தமது பதிகங்களில் பாடுவதைக் காணலாம். 

ஒரு சாபத்தின் காரணமாகக் குபேரன் நிலவுலகில் தனபதி என்ற பெயருடன் பிறந்து சாப நிவர்த்திக்காக இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு நலம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. குபேரன் ஒருமுறை கோயிலை வலம் வரும்போது கண்டெடுத்த செப்புப்பட்டயத்தில், ஒரு மாசி மகாசிவராத்திரி தினத்தன்று, தமது ஆண் குழந்தையை அதன் பெற்றோர் அரிந்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் செய்தியைப் படித்து விட்டுத் , தானும் அவ்வண்ணம் செய்ய முற்படுகையில் இறைவனும் இறைவியும் வெளிப்பட்டு, அவனைத் தடுத்து ஆட்கொண்டு, அவனை மீண்டும் குபேரனாக்கியதாகப் புராணம் கூறுகிறது. பெற்றோராக இந்திரனும் இந்திராணியும் , குழந்தையாக அக்னி தேவனும் வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிராகாரத்திலுள்ள பைரவர் சன்னதி 
கிழக்கு நோக்கிய ஆலயத்திற்கு நேர் எதிரில் சந்திர தீர்த்தம் அமைந்துள்ளது. ஐந்து நிலைக் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய பைரவ மூர்த்தியின் சன்னதி இருப்பதைக் காணலாம். இவர் வரப்ப்ரசாதி. அஷ்டமி தினங்களில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. இப்பிராகாரத்தில் நந்தி,கொடி மரம் ஆகியன உள்ளன.  பைரவர் சன்னதிக்கு அருகில் வசந்த மண்டபம் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் நந்தவனம் உள்ளது. 

சூரிய பகவான் 
மூன்று நிலை கோபுரத்தைக் கொண்ட இரண்டாவது நுழை வாயிலைக் கடந்தவுடன் உட்புறம் மேற்கு நோக்கியவாறு சூரியனும் சந்திரனும் எழுந்தருளியுள்ளதைக் காணலாம். சூரிய பகவான் பெரிய திருவுருவம். இந்தப் பிராகாரம் முழுதும் நாட்டுக் கோட்டை நகரத்தாரது கருங்கல் திருப்பணி. . பழைய ஆலயத்தின் கோஷ்டங்களை மட்டும் வைத்துக் கொண்டு  சன்னதிகளை நூதனமாகக் கட்டியுள்ளனர். கல்வெட்டுக்கள் எதுவும் காணப்படவில்லை. ஒருக்கால் திருப்பணிக்கு முன்பிருந்த சிதிலமடைந்த (?) ஆலயத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இருந்திருக்கலாம். 

உள் ப்ராகாரத்தில் கோஷ்டமூர்த்திகளைக் காணும்போது தக்ஷிணா மூர்த்தியினது அருட்கோலத்தில் லயித்து நிற்கிறோம் . அவரது அருகில் வெள்ளைப் பன்றி வடிவில் திருமால் வழிபடுவதைக் காண்கிறோம். அவ்வரலாற்றை அறிவிப்பதாகத் தலத் திருப்பதிகப்பாடலை சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள். 

விஷ்ணு ,வெள்ளைப் பன்றி வடிவில் வழிபடுதல் 
மேற்குப் பிராகாரத்தில் விநாயகர்,முருகன்,கஜலக்ஷ்மி சன்னதிகள் உள்ளன. வடக்குப் பிராகார கோஷ்டத்தில் துர்காம்பிகை அழகுற அருள் பாலிக்கிறார். அருகே சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளது. கிழக்குப்  பிராகார மேடையில் சிவலிங்கங்கள், பைரவர், சனி பகவான் ஆகிய மூர்த்திகளைக் காண்கிறோம்.

மூலவராகிய சிவகுருநாதரின் சன்னதியின் மகாமண்டப  வாயிலில் துவார  பாலகர்கள் உள்ளனர். பரம சிவனாகிய ஜகத்குரு இவ்வாறு திருநாமம் கொண்டு பெரிய இலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் என்று இவரை அப்பர் பெருமான் துதிக்கிறார். இவரைத் தொழுவோர்க்கு வினைகள் நீங்குவதோடு, இரு பிறப்பிலும் துன்பங்கள் வாராது என்கிறார் திருஞானசம்பந்தர். உயர்கதியைத் தரும் தலம் இது என்கிறார் அவர்.  

தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் அம்பிகை ஆர்யாம்பிகை என்ற திருநாமம் கொண்டு அழகிய வடிவாகக் காட்சி அளிக்கிறாள். சிங்கார வல்லி என்றும் மற்றொரு பெயர் உண்டு. ஆதி சங்கரரின் பெற்றோர்களான சிவகுருவும், ஆர்யாம்பாளும் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று காஞ்சி காமகோடி மகா பெரியவர்கள் அருளியுள்ளார்கள். 

தல விருட்சமாக செண்பக மரம் உள்ளது. அஷ்ட லக்ஷ்மிகளும் வாசம் செய்த வீடுகளையும், அழகிய பொன்னாலான ஆலயத்தையும் கொண்டது சிவபுரம் என்று இத்தலத்து முருகனைத்  திருப்புகழால்  பாடிய அருணகிரிநாதர் போற்றுகிறார்.   " திருமடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு அம்பொனின் ஆலய நீடிய சிவபுரம் தனில் வாழ் குருநாயக பெருமாளே "  என்பன அப்பாடலில் வரும் அழகிய வரிகள். 

இதன் அருகில் கிருஷ்ணாபுரம், அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்), கலயநல்லூர்( சாக்கோட்டை), கருக்குடி( மருதாநல்லூர்), திருநாகேசுவரம், நல்லூர் குடந்தை ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. 

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட பழமை வாய்ந்த சிவபுரம் சிவகுருநாத சுவாமி ஆலயம் அன்பர்களால் புனரமைக்கப்பெற்று , இதன் மகா கும்பாபிஷேகம் வரும்,  23.8. 2018 அன்று காலை 8.15 மணிக்கு மேல் 9.20 க்குள் மிகச் சிறப்பாக நடைபெறுவதால் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து சிவனருள் மற்றும்  முத்தேவியர் அருள் பெற்றுப் பெருவாழ்வு பெற வேண்டுகிறோம்.