Saturday, September 5, 2015

ஜீவன்முக்தி வழங்கும் திருப்புனவாசல்

காசிக்கு சமமான சிவஸ்தலங்கள் பலவற்றில் பாண்டிய நாட்டிலுள்ள  திருப்புன வாயிலும் ஒன்று. தற்போது திருப்புனவாசல் என்று மக்களால் அழைக்கப்படும் இத்தலத்தை  விருத்த காசி  என்று  ஸ்தலபுராணம் குறிப்பிடுகிறது. ஊரும் விருத்தபுரி என்றும் பழம்பதி என்றும்  அழைக்கப்பட்டது.

" பாண்டி நாடே பழம்பதி ஆகவும் "  என்று மாணிக்கவாசகரால் போற்றப்படும் பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பதினான்கில் இதுவும் ஒன்று. இப்பழம்பதியை வழிபட்டால் ஏனைய பதிமூன்று தலங்களையும் ஒருசேர வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர்.

காசியில் உயிர் நீப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். ஆனால் தன்னிடம் வந்து வணங்குவோரது பாவங்களைத் தீர்த்து ,ஜீவன் முக்தியையே வழங்குவது திருப்புனவாயில் என்பதை, விருத்தபுரி மஹாத்மியம் கூறுகிறது. சிவமஹாபுராணத்தில் ஏகாதச ருத்ர வைபவ காண்டத்தில் விருத்தபுரி மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு இந்திரபுரம்,சதானந்தபுரம், வஜ்ர துருமவனம், வனமுகம்,கைவல்யபுரம்,விருத்தகாசி, என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. தசதீர்த்தங்களை உடைய புண்ணியத்தலம் இது. அப்பத்து புண்ணிய தீர்த்தங்களாவன: இந்திர தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம், சூரிய புஷ்கரணி,சந்திர புஷ்கரணி, சக்ர தீர்த்தம், சர்பநதி, வருண தீர்த்தம்,கல்யாண தீர்த்தம் என்பன.   யுகத்திற்கு ஒன்றாக நான்குயுகங்களில் வெவ்வேறு ஸ்தல விருக்ஷங்களைக் கொண்ட சிறப்புடையது இத்தலம். கிருத யுகத்தில் சதுரக்கள்ளியும், திரேதா யுகத்தில் குருந்த மரமும், துவாபர யுகத்தில்  மகிழ மரமும், கலியுகத்தில்  புன்னை மரமும் ஸ்தல விருக்ஷங்களாக அமைந்துள்ளன.

திருப்புனவாயிலைச் சுற்றிலும் உள்ள தலங்களுள் தென்கிழக்கில் தீர்த்தாண்டதானமும், வடமேற்கில் பறையத்தூரும், அதன் வடமேற்கில் கல்யாணபுரமும் ,மேற்கில் வெளி முக்தியும், வடக்கில் வசிஷ்டர்  பூஜித்த தலமும் உள்ளன. இவற்றிலும் விருத்தபுரீச்வரரே அருள் செய்வதாகப் புராணம் சொல்கிறது. விருத்தபுரியின் சுற்றுவட்டாரத்தில் எமதர்மனும் அவனது தூதர்களும் நுழையமாட்டார்கள் எனவும் இங்கு உயிர் விடும் அத்தனை பேருக்கும் சிவலோகம் சித்திக்கும் என்றும் தலபுராணத்தால் அறியலாம்.

வைகாசி புனர்பூசத்தில் கொடியேற்றி ஸ்வாதியன்று தேரோட்டமும், விசாகத்தில் தீர்த்தவாரியும் நடைபெற வேண்டும் என்றும் மாசி மகத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, சர்ப்ப நதியில் (பாம் பாற்றில்) தீர்த்தம் கொடுப்பதாகவும் புராண வாயிலாக அறிகிறோம்.

கஜமுகாசுரனை வெல்ல அருள் வேண்டி விநாயகப் பெருமான் இங்கு வந்து, சிவகங்கையில் நீராடிப் பழம்பதிநாதரின் அருள் பெற்றார். தங்கள் தவறை உணர்ந்த திரிபுராதிகள் இங்கு வந்து வழிபட்டு இறைய ருள் பெற்றனர்.  நாரதர் வாயிலாக இத்தலப் பெருமையை அறிந்த அங்காரகன்  இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் செவ்வாய்க் கிழமைகளில் வழிபடுவோரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்படி வரம் பெற்றான். பிரமன் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றது , சந்திரன் தக்ஷனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றது , சுசீலன் என்பவனையும் அவனது மனைவியையும் எமதூதர்கள் கொண்டு செல்ல எத்தனிக்கையில் சிவ கணங்கள் அவர்களை விடுவித்து முக்தி பெற்றது அகத்தியர் திருமணக் கோலம் கண்டது ,வியாக்கிராசுரன் என்பவனை அம்பிகை ,பத்திர காளி உருவில் அழித்தது மகாலக்ஷ்மி பைரவ மூர்த்தியிடம் மகாவிஷ்ணுவைக் காத்துத் தனது மாங்கல்யத்தையும் காக்க வேண்டி வரம் பெற்றது கௌதம ரிஷியின் சாபம் தீர தேவேந்திரன் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபாடு செய்தது, ராமன் பூஜித்து அருள் பெற்றது ஆகிய வரலாறுகளை இப்புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.
தலத்தின் இருப்பிடம்:  புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் வழியாகவும், காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, ஓரியூர்  வழியாகவும்,மதுரையிலிருந்து சிவகங்கை,திருவாடானை வழியாகவும், ராமநாதபுரத்திலிருந்து தொண்டி , சுந்தரபாண்டிய(S.P) பட்டணம் வழியாகவும் திருப்புனவாசலை அடையலாம்.

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. அதன் இருபுறமும் வல்லப கணபதி சன்னதியும் தண்டபாணியின் சன்னதியும் விளங்குகின்றன. திருவாயிலைக் கடந்தவுடன் சூரிய சந்திரர்களையும், கால பைரவரையும் தரிசிக்கிறோம். பெரிய வடிவில் நந்திகேசுவரர் காட்சி தருகிறார்.  மகாமண்டபத்தைத் தாண்டியதும் பிரமாண்ட வடிவில் விருத்தபுரீச்வரர் காட்சி அளிக்கிறார். பாணத்திற்கு மூன்று முழமும் ஆவுடையாருக்கு முப்பது முழமும் உள்ள வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது. உள்ளத்தை நெகிழ வைக்கும் அற்புத தரிசனம். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய மகாலிங்க மூர்த்தி . இவருக்குப் பின்புறம் எப்போதும் அகஸ்திய முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். தினமும் அர்த்த ஜாம பூஜைக்குப்பிறகு, இந்திரன் வழிபடுவதாகவும் ஸ்தல புராணம் கூறும். இந்த சன்னதியின் மேல் அமைந்துள்ள விமானமும் பிரம்மாண்டமானது.

தேவகோஷ்டங்களில் நர்த்தன கணபதி, ஏழடி உயரம் உள்ள வீராசன தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன் , துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். இப்பிராகாரத்தில் மிகப் பழமையான புன்னை விருக்ஷம் உள்ளது , மகிழ விருக்ஷத்தின் கீழ் ஐந்து விநாயக வடிவங்களையும், கபிலர் பூஜித்த சதுர்முக லிங்கத்தையும், கன்னிமூலையில் இந்திரன் பிரதிஷ்டை செய்த ஆகண்டல கணபதி சன்னதியும் அறுபத்து மூன்று நாயன்மார்களையும், விஸ்வநாதர்-விசாலாக்ஷியையும், முருகனது சன்னதியையும் இரண்டு சண்டிகேச்வரர்களைக் கொண்ட சன்னதியையும் தரிசிக்கலாம். சுவாமி பிராகாரம் வலம் வருகையில் சுவாமிக்கு இடது புறத்தில் பெரிய நாயகி சன்னதியையும் அதன் எதிரில் உக்ராகாளியின் சன்னதியையும் தரிசிக்கிறோம். வரப்ப்ரசாதியான காளி தேவி உக் ர வடிவில் இருப்பதால் கண்ணாடியை மட்டுமே காணலாம்.குடைவரைக் காளி என்ற பெயரோடு அடியார்கள் வேண்டிய யாவற்றையும் வழங்கும் தேவி இவள்.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டு யாத்திரை செய்தபோது இங்கு வந்து வழிபட்டுப் பதிகம் பாடியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. சுந்தரரும் இத்தலத்து இறைவனைத் தரிசித்துப் பதிகம் பாடியுள்ளார். அதில் " பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி " என்று அருளியுள்ளதால் இதன் பழமையும் பெருமையும் நன்கு விளங்கும்.

இத்தனை பெருமைகள் வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு 3.9.2015 அன்று மகாகும்பாபிஷேகம் எட்டு கால யாகசாலை பூஜைகளின் நிறைவாக மிக விமரிசையாக நடை பெற்றது. ஏராளமான அன்பர்கள் தரிசித்துக் கண் பெற்ற பயன் பெற்றனர். ராமேச்வர யாத்திரை செல்லும் அன்பர்கள் இத்தலத்தையும், தீர்த்தாண்டதானத்தையும் திருவாடானையையும் ஆவுடையார் கோயிலையும்  உத்தர கோச மங்கையையும் தவறாது தரிசிக்க வேண்டும்.   

Wednesday, March 18, 2015

ஏக பில்வம் சிவார்ப்பணம்.

தெய்வாம்சம் பொருந்திய மரங்களாக வணங்கப்படுபவைகளுள் வில்வமும் ஒன்று. இதனை மஹா லக்ஷ்மி விரும்பி உறைவதால், ஸ்ரீ வ்ருக்ஷம் என்றும் அழைப்பர். இதன் இலைகளால் சிவபெருமானை லக்ஷ்மி அர்ச்சித்து, மஹா விஷ்ணுவை அடையப்பெற்றாள் என்பது வரலாறு. மூன்று தளங்களாகத் திகழும் இதன் இலைகளைப் பறிப்பதற்கும் நியமம் உண்டு. மரத்தின் மேல் கால் வைத்து ஏறாமல் ஏணியின் மூலம் ஏறி, இலைகளைப் பறிக்க வேண்டும். சோமவாரம், சிவராத்திரி,அமாவாசை, பெளர்ணமி,த்வாதசி, ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது. மரக் கிளைகளை வெட்டுவதோ அவற்றை விறகு போலப் பயன் படுத்துவதோ அறவே கூடாது. இதன் கீழ் அமர்ந்து செய்யும் ஜபம்,பாராயணம் ஆகியவற்றுக்கு அதிகப் பலன் உண்டு. இதன் மூன்று தளங்கள்,பிரம்ம, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளையும் குறிப்பதாகக் கூறுவர். பூச்சி அரிக்காத வில்வ இலைகளால்,பிரதோஷம், சோமவாரம்,சிவராத்திரி போன்ற நாட்களில் சிவ சஹஸ்ர நாமம்,ருத்ர த்ரிசதி அர்ச்சனைகள் செய்வர். பிற நாட்களிலும் வில்வ இலைகளால் சிவ அஷ்டோத்திரம் செய்யப் படுகிறது.

ஒரு காலத்தில் வில்வக்காடுகளாகத் திகழ்ந்த இடங்களில் சிவாலயங்கள் இருப்பதை இன்றும் காணலாம். ஒரு சில உதாரணங்களாக, திருவைகாவூர், திருக் கொள்ளம் பூதூர் ஆகிய ஸ்தலங்களைக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் சுவாமிக்கு வில்வாரண்யேச்வரர் என்று பெயர். இவ்விடங்களில் வில்வம், ஸ்தல விருக்ஷமாக அமைந்துள்ளது.

புலியால் விரட்டப்பட்ட வேடன் ஒருவன் திருவைகாவூரில் ஒரு மரத்தின் மீது அமர்ந்து தஞ்சமடைந்தான். அவன் அவ்வாறு அமர்ந்தது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் மகா சிவராத்திரி. இதை அறியாமலே, அம்மரக்கிளைகளில் இருந்து இலைகளைப் பிய்த்துக் கீழே போட்டுக் கொண்டு இருந்தான். மரத்தடியில் இருந்த அம்மையப்பர் அதனை அர்ச்சனையாக ஏற்று அவனுக்கு முக்தி வழங்கி அருளினார் என்பது அத்  தல வரலாறு.

பில்வ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் என்ற அருமையான ஸ்தோத்திரம் இருக்கிறது. இதைப் பாராயணம் செய்து பரமேச்வரனுக்கு வில்வார்ச்சனை செய்தால் சிவ சாயுஜ்யம் பெறலாம் என்பது இதன் கடைசிப்  பாடல். நீண்ட ஆயுள்,புகழ்,வெற்றி ஆகியனவும் பெறலாம் என்கிறது இந்த ஸ்தோத்திரம். இப்படி அர்ச்சனை செய்வதால் பாப நிவர்த்தி ஏற்படும்.

சிவ நாமாக்கள் ஏராளமாக அமைந்து வருவதால் எளிமையாகப் புரிந்து கொண்டு பாராயணம் செய்யலாம்.
சிவம் சாந்தம் உமாநாதம் மஹாத்யான பராயணம்
ஞானப்ரதம் க்ருத்திவாஸம்  ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால், மங்களமானவனும், சாந்த மூர்த்தியும், தியானங்களுக்கு இருப்பிடமானவனும், ஞானத்தை வழங்குபவனும், யானைத் தோல் போர்த்தவனுமான ஈச்வரனை வணங்கி , ஒரு பில்வத்தை சிவார்ப்பணமாக அர்ச்சிக்கிறேன் என்பது பொருள்.

இதேபோன்று, ருத்ராக்ஷதாரியாகவும், பார்வதிக்குப் பிரியமான நாயகனாகவும், பிறை சூடிய பெருமானகவும் வருணனை வருகிறது:
அக்ஷமாலாதரம் ருத்ரம் பார்வதி ப்ரிய வல்லபம்
சந்திரசேகரம் ஈசானம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.

சிவாஷ்டோத்திர நாமாக்களை நினைவு படுத்துவதாக அமைந்த
ஸாமப்ரியம் ஸ்வர மயம் பஸ்மோத்தூளித விக்ரஹம்
ம்ருத்யுஞ்ஜயம் லோகநாதம் ஏக பில்வம் சிவார்ப்பணம்
என்பதும் ,

 ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துவதாக,
சிபி விஷ்டம் சஹஸ்ராக்ஷம்  துந்துப்யம் ச நிஷங்கிணம்
ஹிரண்ய பாஹும் ஸேனான்யம் ஏக பில்வம் சிவார்ப்பணம் .
என்பதும் நாம் அறிந்து மகிழத் தக்கன.

யக்யேச்வரனே யாகத்திற்கு ஏற்படும் இடையூறுகளைப் போக்கி, ஹவிர் பாகத்தை ஏற்றுக் கோரிய பலனை வழங்குகிறான் என்பதை,
யக்ஞ கர்ம பலாத்யக்ஷம்  யக்ஞ விக்ன விநாசகம்
யக்ஞேசம் யக்ஞ போக்தாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால் அறியலாம்.

மூன்று பிறவிகளின் பாவங்களை நீக்கி, சாளக்ராம வழிபாடு, கன்னிகாதானம், கிணறு - குளம் வெட்டுதல் ஆகியவற்றால் கிடைக்கும் பலனை ஒரு வில்வதளத்தால் சிவனை அர்ச்சிப்பதால் சித்திக்கும் என்கிறது இந்த ஸ்தோத்திரம்.

வில்வ மரத்தைப் பார்ப்பதும், அதனைத் தொடுவதும், பாவங்களைப் போக்க வல்லது என்பதை,    " தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய ஸ்பர்சனம் பாப நாசனம் "   என்பதால் இதன் பெருமை அறிய வருகிறது.  அன்பர்கள் அனைவரும் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதோடு,வில்வ தளங்களால் சிவ பூஜை செய்து இகபர பலன்கள் யாவும் பெற வேண்டும் என்று எல்லா உலகங்களுக்கும் தாயாகவும் தகப்பனாகவும் இருந்து அருளும் கருணைக்கடலைப்  பிரார்த்திக்கிறோம்:
ஸர்வ லோகைக பிதரம்   ஸர்வ லோகைக மாதரம்
ஸர்வ லோகைக நாதஞ்ச ஏக பில்வம் சிவார்ப்பணம்.    

Monday, March 2, 2015

கண் தந்த கடவுள்

மனித உடலில் சிரசே பிரதானம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களுள் வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய நான்கும்  தலைப் பகுதியிலேயே உள்ளன. ஐந்தாவதாகிய மெய்யின் ஒரு பகுதியில் தலையும் அடங்கும்.மெய் என்பதற்குப் புறந்தோல் என்றும் சிலர் பொருள் கொள்வது உண்டு. இந்த ஐந்திலும் கண்ணுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அது செயல் படாவிட்டால் மனிதன் முடங்கிப் போகிறான். பிறர் துணையைத் தேடுகிறான். இறைவனது படைப்புக்களைக் கண் கொண்டே காண்கிறான். அப்படிக் காணும் போது,  நல்லனவற்றையும் தீயனவற்றையும் ஒருசேரக் காண்கிறான். திரு அங்க மாலை என்ற திருப் பதிகத்தை அருளிச் செய்த நாவுக்கரசர், கண்களின் பயன் கடல் நஞ்சு உண்டு அண்டங்கள் அனைத்தையும் காத்த பரமேச்வரனைக் காண்பதற்கே என்கிறார். அவனது குஞ்சித பாதத்தைக் கண்ட கண்களால் வேறொன்றையும் காணவும் வேண்டுமோ என்பார் . கண்கள் இரண்டால்  அவன் கழல் கண்டு களிக்க வேண்டும் என்று பாடுகிறார் மணிவாசகர். இறைவனைக் கண்ட களிப்பை, " கண்ணாரக் கண்டேன் நானே " என்று வெளிப்படுத்துகிறது தேவாரம்.

கண் இல்லாதவரும் கண்ணில் குறைபாடு உள்ளவரும் படும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. திருவொற்றியூரை நீங்கேன் என்று சபதம் செய்துவிட்டு, மகிழ மரத்தடியில் சங்கிலியாரை மணந்த சுந்தரர் , திருவாரூர் வசந்தோற்சவம் காண வேண்டி ஒற்றியூர் எல்லையை நீங்கியபோது இரு கண் பார்வையை இழந்தார். மீண்டும் ஒற்றியூர் பெருமானிடமே வந்து ஒரு பதிகம் பாடுகிறார். அதில், கண் இழந்தவன் ,பார்வை உள்ளவனது துணையுடன் ஒரு  கோலைப் பற்றியபடி மெதுவாகப் பின்பற்றிச் செல்லும்போது, கண்ணுள்ளவன் அவனைக் கறகற என்று இழுத்துச் செல்வதுபோன்ற நிலை எனக்கு வந்துவிடாதபடி அருள்வாய் என்று பெருமானிடம் விண்ணப்பிக்கிறார். வீட்டில் உள்ள பெண்டிர்களை  அழைத்தால் ," போ குருடா " என்பார்களாம்.  அடியேனுக்கு அந்நிலை வர விடலாமா என்று இறைவனைத் துதிக்கிறார் நம்பியாரூரர்.

இக்காலத்தும் கண் நோயால் பாதிக்கப்படுவோர் எத்தனையோ பேர் உளர். பலருக்குத் தீர்வு காண முடியாதபடி வேறு பல உடற்கோளாறுகள் தடை செய்கின்றன. அவர்கள் இப்படி எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இறைவன் ஒருவனே நம்மைக் கை விடான் எனத் துணிந்து அவனைச் சரண் அடைகின்றனர்.  கண் நோயைத்  தீர்த்து நலம் தரும் ஆலயங்களை நாடுகின்றனர்.  சிலர் வீட்டிலிருந்தபடியே, ஆதித்ய ஹ்ருதயம் , சூர்ய சதகம்  ஆகிய வடமொழி சுலோகங்களையும், சம்பந்தர் அருளிய புறவார் பனங்காட்டுப்  (பனையபுரம்) பதிகத்தையும், சுந்தரர் கண் பெற வேண்டி அருளிய காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் தலத்துப் பதிகங்களையும் பாராயணம் செய்வது வழக்கம்.

கண் நோய் தீர்க்கும் திருத்தலங்களுள் கண் கொடுத்த வனிதம் என்ற தலம் சிறப்பு வாய்ந்ததும் தொன்மையானதும் ஆகும்.  இத்திருக்கோயில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை மன்னார்குடி செல்லும் வழியிலுள்ள கமலாபுரம் வழியாக 5  கி. மீ. பயணித்தால் அடையலாம். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் கொரடாச் சேரியிலிருந்து 7 கி.மீ. சென்றாலும் அடைய முடியும். கொரடாச்சேரி, கமலாபுரம்,  ஆகிய ஊர்களில் இருந்து கண் கொடுத்த வனிதம் கோயில் வாசல் வழியாக மினி பஸ்கள் செல்கின்றன. ஆட்டோ வசதியும் உண்டு.

தான் பெற்ற குழந்தை கண் பார்வை இல்லாதது கண்ட ஒரு பெண் , தனது கண் பார்வையை எடுத்துக் கொண்டு குழந்தைக்குப் பார்வை அளிக்குமாறு இத்தலத்து இறைவனை வேண்ட, அதற்கு மனமிரங்கிய இறைவன், அக்குழந்தைக்குப் பார்வை தந்து அருளினான் என்பது தல வரலாறு. அதனால் சுவாமிக்கு நயன வரதேசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து சுவாமி,அம்பாள்,சூரியன் ஆகியோருக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்து நலம் பெறுவோர் பலர்.

பாண்டியர்களும்,சோழர்களும் இக்கோயிலைத் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

திருவெண்காட்டைப் போலவே,இங்கும் சித்திரைப் பரணியன்று அமுது படையல் உற்சவம் நடைபெறுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டுவோர் அன்றையதினம் இங்கு வந்து வழிபட்டுத் திருவருள் பெறுகிறார்கள்.
உயரத்தில் அமைந்துள்ள சன்னதியில் அம்பாள்,தேவநாயகி என்ற பெயருடன் காட்சி தருகிறாள். சுமார் ஐந்தரை ஆடி உயர சுயம்பு மூர்த்தியாகப் புகழாபரணீ ச்வரர் , சுவாமி சன்னதிக்கு நேர் பின்புறம் தனிச் சன்னதியில் காட்சி அளிக்கிறார். இவரை வழிபட்டால் நல்ல ஆற்றலும், செல்வமும்,நோய் நீக்கமும் பெறலாம் என்பது நம்பிக்கை.

திருக்குளக்கரையில் உள்ள ஆத்தி மரம் 
பாண்டவை ஆற்றின் வடகரையில் உள்ள இவ்வூர் தீர்த்தச் சிறப்புக் கொண்டது. கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம் உள்ளது. இதன் கரையில் மிகப்பழமையான ஆத்தி மரம் உள்ளது.

தொன்மையான இந்த ஆலயத்தில் மூன்றாம் குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பல உள்ளன. ஊரின் பெயர் ஆலத்தாங்குடி என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. பிற்காலத்தில் வனிதை (பெண்) ஒருத்திக்குக் கண் கொடுத்தமையால் கண் கொடுத்த வனிதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். இக்கோயில், 190 அடி அகலமும், 270 அடி நீளமும் கொண்டு பரந்து விளங்குகிறது.

பலகாலமாக இக்கோயில் மேடிட்டும் இடிந்தும் முட்புதர்களுடனும் காணப்பட்டது. கல்வெட்டு ஆர்வலர்களின் முயற்சியால் மேடிட்ட பகுதிகளை அகற்றி,ஆழ்ந்து பார்க்கும்போது பாண்டியன் குலசேகரனது ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்று முப்பத்திரண்டு அடி நீளமுள்ள வரிகளுடன்  இருப்பது  காணப்பட்டுப் படி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு வரியும் 24 அடி நீளத்துடன் பத்து வரிகளைக் கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் ( கி.பி. 1185 ) கல்வெட்டும் படி எடுக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டுத் திருப்பணிகள் செய்விக்கப்பெற்ற இவ்வாலயம் , வரும் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி அன்று குட முழுக்கு விழாக் காண இருக்கிறது.  மேலும் தகவல்களைத் திரு கண்ணன் அவர்களிடமிருந்து (  9443135129) பெற்று இவ்வைபவத்தில் பங்கேற்கலாம்.

உலகிற்கே கண்ணாக  இருந்து காப்பவனைக் காண வேண்டாமா? கண்டு தொழுது கண் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? அவனைக் காணக் கண் அடியேன் பெற்றவாறு என்று எண்ணி எண்ணி நெக்குருக வேண்டாமா? அதோடு நின்று விடாமல், நாம் பெற்ற இந்த அற்புத தரிசனம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும் அல்லவா? அதற்காக நயன வரதீச்வரனின் கோயிலை நாடுவோம். அனைவரும் நலம் பெற வேண்டுவோம்.  

Thursday, January 15, 2015

இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனார்

நான்கு வேதங்களும் ஓலமிட்டு அலறியும் காண மாட்டாத பரம்பொருள் தனது பரம பக்தனைப் பார்த்து ஓலம் இடுகிறான். தன்  அடியானுக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் பரமன் இதையும் செய்கிறான். எப்படி ஓலம் இட்டான் தெரியுமா? " இயற்பகை முனிவா  ஓலம் " என்று மறைகள் ஓதும் வாயால் ஓலமிட்டான். அப்படியானால் அந்த பக்தர்   முனிவரா என்றால் நாம் நினைப்பதுபோல ஜடாமுடியும், காவி ஆடையும்,கமண்டலமும் தரித்த கோலத்தவர் இல்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே, சிவத்தொண்டு செய்து வந்த ஒப்பற்ற அடியார் அவர். உலகத்தில் பெரும்பாலும்  சராசரி மனிதர்களாக வாழ்ந்துவிட்டுப் போவார்களையே நாம்  காண்கிறோம். அசாதாரண செயல் செய்பவர்களை  " செயற்கரிய செய்பவர்கள் " என்கிறோம். அவர்களே பெரியோர் என்று தமிழ் இலக்கியமும் வாயாரப் புகழ்கிறது.

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படும் இயற்பகை நாயனாரது அவதாரத் தலம், பூம்புகாருக்கு அண்மையில் உள்ள திருச் சாய்க்காடு என்பது. இதனைச் சாயாவனம் என்றும் அழைப்பர். இங்குள்ள சிவாலயம் திருஞானசம்பந்தராலும்,திருநாவுக்கரசு  சுவாமிகளாலும் பாடப்பெற்றது.  சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்தை அடையலாம். இதற்கு மிக அண்மையில் பல்லவநீச்வரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.

சாயாவனத்தில் உள்ள சிவாலயம் குதிரை பூட்டப்பெற்ற தேர் வடிவைக் கொண்ட மாடக் கோவில். இதைத் தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இந்திரன் முயன்றபோது ,கலக்கமடைந்து அம்பிகையானவள் தனது குயில் போன்ற குரலால் கூவியதால் கூவென்ற கோதை என்றும் கோஷாம்பிகை என்றும் வழங்கப்படுகிறாள். ஸ்வயம்பு மூர்த்தியாக மூலவர் , இரத்தின சாயாவனேஸ்வரர் என்ற பெயருடன் அற்புத தரிசனம் தருகிறார்.

உட்ப்ராகாரத்தில் வெவ்வேறு நிலையில் உள்ள கணபதி மூர்த்தங்களைத் தரிசிக்கிறோம். மகாமண்டபத்தில் வில்லேந்திய வேலவரின் சன்னதி இருக்கிறது. இங்கிருந்தபடியே, சுவாமியையும், அம்பிகையையும், இவ்விருவருக்கு இடையில் உள்ள வில்லேந்திய வேலவரையும் ஒருங்கே தரிசனம் செய்கிறோம். வெளிப் பிராகாரத்தில் இயற்பகை நாயனார்,தனது மனைவியாரான கற்புக்கரசியுடன் அருட் காட்சி அளிக்கிறார்.

எதைக் கேட்டாலும் இல்லை என்றும் அப்புறம் பார்க்கலாம் என்றும்  சொல்லும் காலம் இது.  தன்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார் என்பதால், இவரை, சுந்தரமூர்த்தி நாயனார், " இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் " என்று சிறப்பித்தார். வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் , சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டவர். அவரது மனைவியாரும் தனது கணவனாரின் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் செய்து வந்த உத்தமி.  இவரது பெயரைக் கற்பினுக்கரசியார் என்று வழங்குகிறார்கள்.

இவர்களது பெருமையை உலகிற்குக் காட்டவேண்டி, சிவபெருமான் ஓர் அந்தண வேடம் பூண்டு நாயனாரது மனைக்கு எழுந்தருளி, யான் கேட்பது ஒன்று உன்னிடம் உண்டு அதனைக் கொடுக்க சம்மதமானால் சொல்லுகிறேன் என்றார். அதுகேட்ட இயற்பகையார்,  அவரை வணங்கி,  என்னிடம் இருப்பது அனைத்தும் சிவபிரானது அடியவர்களுடைய உடைமை. எதனைக் கேட்டாலும் மகிழ்வுடன் அளிப்பேன்.இதற்கு ஐயம் ஏதும் இல்லை என்றார்   வந்த சிவ வேதியர், " உனது மனைவியை வேண்டி வந்தனம்" என்றவுடன் முன்னைவிட மிகவும் மகிழ்ந்து ,  இது எனக்கு " எம்பிரான் செய்த பேறு "  என்றவறாகத் தனது கற்பில் சிறந்த மனைவியாரிடம் " உன்னை இந்த வேதியர்க்குக் கொடுத்தேன் ": என்றார்.  அதுகேட்ட மனைவியார் , கலக்கமுற்று, மனம் தெளிந்த பின்னர், "  இவ்வாறு தாங்கள் அருள் செய்ததை யான் செய்வதை விட வேறு பேறு உண்டோ " என்று தனது " தனிப் பெரும் கணவனாரை " வணங்கி, வேதியரது திருவடிகளைப் பணிந்து நின்றார்.

இன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், " யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்" என்றார். அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், " இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் " என மொழிந்தார்.

இவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தனது   மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாய்க்காட்டு எல்லை வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில் , அன்பனின் பக்தியை மெச்சிய இறைவன், திரும்பவும் ஆபத்து வந்ததுபோல, " இயற்பகை முனிவா ஓலம்" என்று அழைத்தான். அதோடு, " செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் " என்று ஓலமிட்டான். அதுகேட்ட இயற்பகையார், " இதோ வந்தேன், தங்களுக்குத் தீங்கு விளைப்பவர்  இன்னும் உளரோ? " என்று வாளை  ஓங்கியவராக வந்தார். அப்பொழுது அங்கு அந்தணரைக் காண வில்லை. மனைவியாரை மட்டுமே கண்டார்.  விண்ணிலே உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த இறைவன், " உனது அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். பழுதிலாதவனே, நீ உனது மனைவியோடு நம்முடன் வருவாயாக என அருளி , இருவரையும் சிவலோகத்தில் இருத்தினார்.

இயற்பகை நாயனார்  வீடு பேறு பெற்ற திருநாளான  மார்கழி உத்திரத்தன்று இத்திருக்கோவிலில் மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இயற்பகையார் சன்னதியிலும் அவை நடத்தப்பெற்றபின், ஐக்கிய தீபாராதனை நடைபெறுகிறது. நகரத்தார் பெருமக்கள் மிக்க ஈடுபாட்டுடன் இவ்விழாவைச் சிறப்பாக நடத்துகிறார்கள். நகரத்தார் விடுதியில் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.

வேறு எவரும் செய்ய முடியாத செயலைச் செய்து காட்டிய இயற்பகையார் நம் அனைவராலும் வணங்கப்படும் உயர்ந்த நிலையை அடைந்தார். அது மட்டுமா? அப்புகழுக்கு உறுதுணையாக விளங்கிய அவரது மனைவியார் கற்புக்கரசிக்கும் அதில் பங்கு உண்டு அல்லவா?. இருவருமே உலகியலுக்குப் பகையாக விளங்கிக் காட்டிய தனிப்பெரும் பெருமை வாய்ந்தவர்கள். அவர்தம் பாத மலர்களை வாழ்த்தி வணங்குவோமாக. 

Monday, December 15, 2014

பணிக்கு ஏற்ற பலன்

அலுவலக  வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு,போனஸ்  மற்றும் ,பிற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. பதவிக் காலம் முடிந்தும் பல சலுகைகள் தொடர்கின்றன. இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியாக இச்சலுகைகளும் சம்பள உயர்வுகளும் பதவிக்குத் தகுந்தாற்போல அளிக்கப்படுவதுதான். உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதெல்லாம் சொல்வதோடு சரி என்று பலரும் அலுத்துக் கொள்ளக் கேட்டிருக்கிறோம். கடுமையாக உழைப்பவருக்கும் , அந்த அளவுக்கு  உழைக்காதவர்களுக்கும் ஒரே ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது என்று குறைப்படுவோர் ஏராளம்.  பதவி உயர்வு கூட வேண்டியவர்களுக்குத் தரப்படுகிறது என்ற புகார்களும் உண்டு. இது முறையா என்றும் நீதியாகுமா என்றும் கேட்கலாம். மனிதன் வழங்கும் நீதியில் இதுபோன்ற குறைபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் தெய்வத்தின் தீர்ப்பு ஒன்றே பாரபட்சம் இல்லாமலும் பணியின் தரத்திற்கு ஏற்பவும் வழங்கப் படுவதைப்  புராணங்கள் மூலம் அறிகிறோம்.

திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் சைவத்தின் இரு கண்கள். இருவரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்தபோது பஞ்சம் ஏற்பட்டது. அதுவும் இறைவன் செயல் என்றே இரு குருநாதர்களும் ஏற்றுக் கொண்டபோதிலும், அடியார்கள் விண்ணப்பிக்கும் வேளையில் அவ்விண்ணப்பத்தை இறைவனிடம் திருப்பதிகங்கள் ஓதித் தெரிவித்தனர்.  இறைவன் செவி சாய்க்காமல் இருப்பானா? காலநிலையால் கோள்கள் திரிந்து மழை விழாது போனாலும் உண்மை அடியார்களைப் பெருமான் எப்பொழுதும் கை விட மாட்டான் என்பது இவ்வரலாறு கூறும் உண்மை. அதிலும், குரு நாதர்களை அணுகித்  தங்கள் குறைகளை விண்ணப்பித்ததால் , அக் கோரிக்கை எளிதில் நிறைவேற ஏதுவாயிற்று. " உம்மை வழிபட்டார்க்கு அளிக்க அளிக்கின்றோம்" என்று வீழி நாதப் பெருமானே  உலகத்தவர் காணும்படிப் படிக்காசு  அருளிச் செய்ததாகப் பெரிய புராணம் கூறும்.

சிவாலயங்கள் தோறும் தான் ஏந்தியுள்ள உழவாரத்தால் தொண்டாற்றி வந்த அப்பர்  பெருமானுக்கு வாசியில்லாக் காசு வைத்து அருளினான் பரமன். ஞானசம்பந்தருக்கோ   வாசியுடன் காசு வைத்து அருளினான். பின்னர் சம்பந்தர் வாசி தீரப் பாடி வேண்ட, அவருக்கும் நற்காசுகளாய்த் தந்து, பஞ்சம் தீர்த்து அருளினான் என்பது புராண வரலாறு. சம்பந்தப்பெருமான் அம்மையப்பரது மகனார் ஆதலினால் இவ்வாறு திருவருள் புரிந்தான். ஆயின் அப்பரோ ஊழியம் செய்த தொண்டர் என்றபடியால் முதலில் அவருக்கு நற் காசினைக் கொடுத்தானாம். மனித நீதியாக இருந்தால் தன்  மகனுக்குத் தந்துவிட்டுத்தான் பிறருக்குக் கொடுக்கும் படியாக இருந்திருக்கும் .                       " தனக்குப் பிறகு தான் தான-  தருமம் " என்று ஒரு பழமொழியையும் தமக்குச் சாதகம் ஆக்கிக்  கொள்வர். ஆனால் நீதி வடிவான பரமேச்வரனது தீர்ப்புக்கு ஈடு இணை ஏது? ஆகவே, பெருமானை, " நீதியே " என்று வாயார அழைக்கிறார் மாணிக்க வாசகர்.

அதே சமயம், சம்பந்தருக்கும் உரிய நேரத்தில் கருணை பொழியத் தவறவே இல்லை. அவரது தந்தை சீர்காழியில் செய்யும் சிவ வேள்விக்காகத் திருவாவடுதுறைப்  பெருமானை வேண்டி நின்றபோது, சிவபூதகணம் மூலமாக ஆயிரம் பொன் தந்தருளினான் மாசிலாமணி ஈசன். அது எப்படி சாத்தியமாயிற்று?  நம் கையில் இருக்கும் பொருள்கள் எல்லாம் செலவழிந்த நேரத்தில் நாம் சிவனருள் வேண்டிச் சிந்திப்பதில்லை. மாறாக, யாரிடம் சென்றால் பொருள் கிடைக்கும் என்றுதானே சிந்திக்கத் துவங்குகிறோம்!  ஆனால் சம்பந்தரோ, " கையது வீழினும் கழிவுறினும் செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன் " என்று பாடுகிறார். அப்படிப் பக்குவம் வாய்ந்த பெரியோர்களுக்கே சிவனருள் எளிதில் கைகூடும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன் அலுவலகங்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.
திருவீழிமிழலைத் தலத்தை தரிசிப்பதோடு, வீழிநாதப் பெருமானது நீதியின் திறத்தையும் நினைந்து நெக்குருகுவோர்க்கே  இந்த உண்மை புலப்படும். மேலெழுந்தவாரியாகப் புராணங்களைப் படிப்பதைவிட, அவை தரும் நீதியை மகிழ்வுடன் ஏற்று அதன்படி நடக்கக் கடவோம் என்று உறுதி பூண்பதே சிறப்பு.    

Wednesday, November 26, 2014

" ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது "

"  ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ  தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா என்று இதற்கு வெளிப்படையாகப் பொருள் காண்பார்கள். ஆனாலும் இதற்கு உட்பொருள் ஒன்றும் உண்டு. மாயூரம் என்பதை மயிலுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தாமல்,  அவ்வுருவெடுத்து வந்து சிவபூஜை செய்த உமை அன்னைக்கு இணைத்துப் பார்ப்பதே சிறந்த பொருளைத் தரும். அவ்வாறு மயிலம்மனாக வந்து பூஜை செய்து சுய வடிவம் பெற்றுப்  பரமேச்வரனை மணந்து  கொண்ட கௌரிக்கு நிகர் யாரும் இல்லை என்பதால்  " ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " எனப்பட்டது. சுவாமிக்கே கௌரிமாயூர நாதர் என்று பெயர் வரும்படி அரும்தவம் செய்தபடியால் ஊரின் பெயரும் மயிலாடுதுறை ஆயிற்று.

ரிஷப வாகனத்தில் வதான்யேசுவரர் 
காசிக்கு நிகரான தலங்களாக, ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயாவனம் ஆகிய சிவஸ்தலங்களைக் குறிப்பார்கள். அதிலும் மயிலாடுதுறையில் பல இடங்களில் காசி விஸ்வநாதர் ஆலயங்கள் இருப்பதைக் காண்கிறோம். காவிரிக் கரையில் காசியைப்போலவே டுண்டி கணபதிக்கும் கால பைரவருக்கும் சன்னதிகள் உள்ளன. உத்தர மாயூரத்தில் வதான்யேச்வரர்  கோவிலில் உள்ள மேதா தக்ஷிணாமூர்த்தி சன்னதி பிரசித்தி பெற்றது. ஐப்பசி அமாவாசை அன்று கைலாச வாகனத்தில் மேதா தக்ஷிணாமூர்த்தியும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் காவிரிக்கு எழுந்தருளித் தீர்த்தம் தருகிறார்கள். அன்று காவிரியே கங்கை ஆகிவிடுகிறது. வரங்களை வாரிவழங்கும் வள்ளலாராக மூலவர் மேற்குப் பார்த்த சன்னதியில் காட்சி அளிக்கிறார். அம்பிகையும் ஞானத்தை வழங்கும் ஞானாம்பிகையாகத் தரிசனம் தருகிறாள்.

மாயூர நாதருக்கு நான்கு திசைகளிலும் நான்கு சிவாலயங்களில் வள்ளலாராக சிவ  பெருமான் கோயில் கொண்டுள்ளார். கிழக்கே விளநகரில் துறைகாடும் வள்ளல் , மேற்கில் மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், தெற்கில் வாக்கு வழங்கும் வாகீஸ்வர வள்ளல், வடக்கில் வதான்யேச்வர வள்ளல் ஆகிய நாற்றிசை வள்ளல்களுக்கு மத்தியில் கௌரி மாயூர நாதர் பெரிய கோவிலில் அபயாம்பிகையுடன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இப்பகுதியில் உள்ள உயர்ந்த ராஜ கோபு ரங்களில் இந்த ஆலயத்தின் கோபுரமும் ஒன்று.

இவ்வளவு பெருமைகளுக்கும் மேலாக, ஐப்பசி முப்பது தினங்களும் காவிரியின் இரு கரைகளிலும் அமைந்துள்ள பெரிய கோவிலில் இருந்தும், வள்ளலார் கோவிலில் இருந்தும் சுவாமி காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் தரும் தனிச் சிறப்பு உடையது இந்த ஊர். கடைசி நாள் அன்று பெரியகோவிலில் இருந்து மட்டும் அல்லாமல், ஐயாறப்பர் கோயில், பாலக்கரை விஸ்வநாதர் கோயில், கடைத் தெரு விச்வநாதர் கோயில், வடகரையில் உள்ள துலாக்கட்ட விஸ்வநாதர் கோயில், வதான்யேச்வர சுவாமி கோயில் ஆகிய கோயில்களிருந்தும் வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் காவிரிக்கு எழுந்தருளுவர். இந்த உற்சவத்தை முன்னிட்டுப் பல வீடுகளில் வேத பாராயணங்கள் நடத்துகிறார்கள். தங்கள் வீட்டு வைபவமாகக் கருதி, வீதிகளில் உள்ள மக்கள் பங்கேற்று இறையருள் பெறுகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் ஆலயத் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் பல தவில் வித்வான்களோடு இணைந்து ராஜ கோபுரத்தருகில் மல்லாரி வாசிப்பதைக் கேட்கப் பெரும் கூட்டம் கூடுவது வழக்கம். கடைமுக உற்சவத்திலும் இப்படித்தான்.மழை விடாது பொழிந்தாலும்  இசைமழை நிற்காது. குடையைப் பிடித்தவாறே வாசிப்பார்கள். அவர்களது இந்த ஈடுபாட்டுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும்.

துலாக் காவிரி 
சுவாமி காவிரிக்கரைக்கு எழுந்தருளுவதற்கு முன்பாகவே, மக்கள் கூட்டம் காவிரியில் இறங்கி ஆவலோடு பஞ்சமூர்த்திகள் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். சிறுவர்கள் உற்சாகத்துடன் நீச்சல் அடித்த வண்ணம் இருப்பர் . நிறைவாக இருகரைகளிலும் தமது வாகனங்களோடு பஞ்ச மூர்த்திகள் நிற்பதைக் காண இரண்டு கண்கள் போதாது. தீர்த்தவாரி முடிந்து சுவாமி மண்டபத்தில் தங்கிவிட்டு இரவு ஒன்பது மணி அளவில் கோயிலுக்குத் திரும்புகிறார்.

தேவார பாராயணம் செய்தபடியே ஒதுவா மூர்த்திகள் இறைவனைப் பின்தொடர்கின்றனர். வீதிகளில் வசிக்கும் அந்தணர்களில் , வயது முதிர்ந்தோர் உட்படப் பலர், அந்த ஓதுவார்களை வலம் வந்து தம்மால் இயன்ற காணிக்கை தந்து, அவர்களுக்கு வீதியிலேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வதைக் காணமுடிகிறது.

வழி நெடுகிலும் பட்டு சார்த்தித் தீபாராதனைத் தட்டு சமர்ப்பிப்போர் பலர். சுவாமியும் அம்பாளும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு ரிஷப வாகனங்களில் எழுந்தருளுவதை எவ்வாறு வருணிக்க முடியும்? சுவாமிக்கு வெட்டி வேர் ஜடை சார்த்தியும், அம்பிகைக்குக் கல் இழைத்த ராக் கோடி சார்த்தியும் பின் அலங்காரங்கள் செய்யப்பட்டு நம் கண்களை விட்டு அகலாமல் நிற்கின்றன. இந்த தம்பதியரை தரிசிக்க என்ன தவம் செய்தோமோ என்று கண்ணீர் மல்க நெகிழ்கிறோம்.

யானை வரும் முன்னே பஞ்சமூர்த்திகள் வரும் பின்னே 
இத்திருவிழாவைத் தரிசிக்க ஒரு முடவன் வடதிசையிலிருந்து இங்கு வந்து  சேர்ந்தபோது, ஐப்பசி மாதம் முடிந்து  கார்த்திகை மாதம் பிறந்து விட்டதால் தமக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லையே என்று மனம் உடைந்தபோது, அவனுக்கு இரங்கிய பெருமான், இன்றும் உனக்காகக் காவிரியில் தீர்த்தம் தருகிறோம். அதில் மூழ்கினால் ஐப்பசி முப்பது நாளும் மூழ்கிய பலன்களைப் பெறுவாயாக என்று அருள் செய்தார் அக் கருணாமூர்த்தி. இப்போதும் அதுபோலவே கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் முழுக்கை,  முடவன் முழுக்கு என்று அழைக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள். " ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " என்பது சத்தியமான வாக்கு அல்லவா?  
       

Sunday, October 26, 2014

திருக்கொள்ளம்பூதூரில் ஓடத் திருவிழா

இதுவரை  எத்தனை பிறவிகள் எடுத்திருப்போமோ , நமக்குத் தெரியாது. இன்னும் எத்தனை    பிறவிகள் எடுக்கப்போகிறோமோ , அதுவும் தெரியாது. பிறவியைக் கடல் போன்றது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் , " பெருங்கடல்" என்று வள்ளுவர் சொன்னார். இனிப்பிறவாதபடிக் காப்பாய் என்று இறைவனை வேண்டுவார்கள் பெரியோர்கள். ஆகவே, கடலைக் கடப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. நடுக்கடலுள் அகப்பட்டவன் சாதாரணத் துடுப்பைக் கொண்டு எப்படிக் கரை சேர முடியும். அதனால் தான், பஞ்சாக்ஷரமாகிய துடுப்பைக் கொண்டு கரை சேரும் வழியை அருளுவாய் எனத் திருவாசகம் வேண்டுகிறது.

சத்குருநாதனது அருளால் பிறவிக்கடலைத் தாண்டி இறைவனை அடைவது சுலபமாகிவிடுகிறது. பிறவியாகிய பெரிய கடலைத் தாண்டுவதற்குத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களை ஒதிவந்தாலே போதுமானது என்கிறார் நம்பியாண்டார் நம்பிகள். ஏனென்றால் அப்பதிகங்களே  தோணியாக ஆகி, நம்மை ஏற்றிக்கொண்டு கரை சேர்ப்பன என்று அவர் அருளினார்.  அவை ஞானத் தமிழ்ப் பனுவல்கள் என்பதால் அவ்வளவு சக்தி வாய்ந்தவைகளாக ஆகின்றன.

சம்பந்தப்பெருமான் தல யாத்திரையாக சோழ நாட்டுத் தலங்களைத் தரிசித்து வந்தபோது, காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் மறுகரையில் இருந்து பஞ்சாரண்யங்களுள் ஒன்றான வில்வாரண்யம்  தெரிவதைக்  கண்டார். அந்த ஆறு,  முள்ளியாறு என்றும் வழங்கப்படும்.   வில்வாரண்யத்தின் மற்றொரு பெயர் திருக் கொள்ளம் பூதூர்  என்பதாகும். கூவிளம் பூதூர் என்பது இவ்வாறு மாறிற்று என்பர். கூவிளம் என்பது வில்வத்தைக் குறிக்கும்.

வில்வாரண்யத்தில் சுயம்பு மூர்த்தியாகச் சிவபெருமானைத்தரிசித்த பிரம தேவன் , அங்கு ஒரு தீர்த்தம் தனது பெயரில் உண்டாக்கி , இறைவனை வழிபட்டு வந்தான். இதனால் மகிழ்ந்த பெருமான், பூத கணங்களோடும், உமா தேவியாரோடும் எழுந்தருளி, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளி,பிரமனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அருளியதாகத் தல புராணம் கூறுகிறது.   எனவே,இத்தலம், பிரம வனம் என்றும்,பஞ்சாக்ஷர புரம் என்றும் பெயர்கள் பெற்றது. தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத் திவலைகள் சிதறி இங்கு விழுந்து, வில்வ மரங்களாக மாறி, வில்வ வனம் ஆகியது என்பர்.

பொதிகை மலையிலிருந்து இங்கு எழுந்தருளிய அகத்திய முனிவர் , வெட்டாற்றில் நீராடி, இறைவனை வழிபட்டு , ரிஷப வாகன தரிசனம் பெற்றார். நதிக்கும் அகஸ்திய காவேரி என்ற பெயர் ஏற்பட்டது. அர்ச்சுனன் இப்பெருமானை வழிபட்டுப் பாசுபதம் பெற்றதால், காண்டீப வனம் என்று இத்தலம் பெயர் பெற்றது. கொள்ளை அடிக்கும் எண்ணத்தோடு  இத்தலத்திற்கு வந்து இரவு முழுதும் கண் விழித்திருந்த திருடனும் நற்கதி பெற்றான். இத்தலத்தின் அருகே, பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான இடைக்காட்டுச் சித்தரின் கோயில் அமைந்துள்ளது.

முல்லைவனமாகிய திருக்கருகாவூரில் உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில் கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்)   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள வலங்கைமானிலிருந்து , குடவாசல் செல்லும் பாதையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். செல்லூர் நிறுத்தத்தில் இறங்கி மேற்கே 1 கி.மீ. தொலைவு நடந்து வந்து கோவிலை அடையலாம்.   கும்பகோணத்திலிருந்து குடவாசல்,ஓகை வழியாகக் கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கியும் வரலாம். குடவாசலில் இருந்து செல்லூர் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

செல்லூரில் உள்ள குணாம்பிகை சமேத கைலாச நாத சுவாமி ஆலயம் தொன்மையானதும் தரிசிக்க வேண்டுவதும் ஆகும். பிராகாரத்தில் எங்கு நோக்கினாலும் நந்தியாவட்டை மரங்கள் பூத்துக் குலுங்குவதைக்  காணலாம். தனது கலைகளை இழந்த சந்திரன்  இங்கு வழிபட்டு, மீண்டும் அக்கலைகளைப் பெற்றான்.சந்திரனும் சூரியனும் வழிபட்ட புவன பைரவ மூர்த்தி  சக்தி வாய்ந்தவர். வேண்டிய வரம் யாவும் தருபவர். நாகநாதர், சட்டைநாதர் ஆகிய லிங்கமூர்த்திகளின் சன்னதிகள், மூலஸ்தானத்தின் இருபுறமும் அமைந்துள்ளன. இடைவிடாது சித்தர்கள் வழிபடும் புண்ணிய மூர்த்தியாகக் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியவளாகக்  குணா ம்பிகையும் அருட்காட்சி வழங்குகின்றனர். இந்த ஆலயம் திருப்பணி பெற்று, 2.5.2013 அன்று  கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுப் புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

செல்லூரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது அபிவிருத்தீச்வரத்தில் உள்ள அபிமுக்தீச்வரர்  ஆலயம். இந்த ஆலயம் மேற்கு நோக்கியது. திருப்பணி செய்யப் பெற்று  வண்ணப்பூச்சுடன்  அழகுற  விளங்குகிறது.

திருக்கொள்ளம்பூதூர் சிவாலயத்தை முழுதும் கருங் கல்லால் அமைத்து மகத்தான சிவபுண்ணியச்  செயலைச் செய்துள்ளவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள். நச்சாந்துப்பட்டி பெ. ராமன் செட்டியாரும்,பெ.லட்சுமணன் செட்டியாரும் 1930 ல்  இக்கருங்கல் திருப்பணியைத் தொடங்கி,  ஈசுவர ஆண்டு ஆனி 14 ம் தேதி ஞாயிறன்று ( 27.6.1937 ) பெரும் பொருட் செலவில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். இவர்களது  உருவச்சிலைகள் அம்பாள் (சௌந்தர நாயகி ) சன்னதியின் முன்னர் அமைக்கப்பட்டுள்ளது. வீதியில் சத்திரம் ஒன்றையும் அமைத்துள்ளார்கள்.

கோயிலுக்கு முன் புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.கோவிலின் முன் வாயிலில் கோபுரம் இல்லை. ரிஷப வாகன சுதை காணப்படுகிறது , வாயிற் சுவரில் சம்பந்தர்  ஆற்றில் நாவன்மையால் ஓடம் செலுத்திய அற்புதத்தைச்  சுதை வடிவில் வண்ணப் பூச்சோடு அமைத்துள்ளார்கள். இருபுறமும் விநாயகர் திருவுருவங்கள் உள்ளன.சலவைக் கல்லில் தலத்  திருப்பதிகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டினால் வலப்புறம் வசந்த மண்டபம் உள்ளது. இதை ஒட்டி மஹா லக்ஷ்மியின் சன்னதி உள்ளது.இரண்டாம் பிராகாரத்தில் பூச்செடிகளும் மரங்களும் வளர்ந்துள்ளன. அடுத்த வாயிலில் ஐந்து நிலை கோபுரம் உள்ளது. இருபுறமும் பொய்யாக் கணபதி,தண்டபாணி திருவுருவங்கள் உள்ளன.

 உட்பிராகாரத்தில் மடைப்பள்ளியும், நால்வர், ஆதி வில்வமரம், வலம்புரி விநாயகர், சோமாஸ்-கந்தர்  ஷண்முகர், மகாலக்ஷ்மி ,பள்ளியறை, பைரவர்,நவக்கிரகங்கள் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். கோஷ்டங்களில்  கணபதி,தக்ஷிணாமூர்த்தி,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை ஆகிய மூர்த்திகளைத்தரிசனம் செய்கிறோம். அம்பிகையின் சன்னதி தெற்கு நோக்கியது. அழகியத் திருவுருவக் காட்சியை நமக்கு அருளுகிறாள் அன்னை.  மூலவரான  வில்வாரண்ய மூர்த்தியின் அற்புதக் காட்சியைத் தரிசித்துப் பிறவி பெற்ற பயனை அடைகிறோம்.

திருக்கொள்ளம்பூதூரைத் தரிசிக்கத் திருஞானசம்பந்தர் அடியார்களுடன் எழுந்தருளியபோது வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மறுகரையில் உள்ள ஆலயத்தை அடையப் பரிசில் மூலமாகவே செல்ல வேண்டியிருந்தது. வெள்ளத்தால், படகு விடுவோரும் அப்போது இல்லாததால் , சம்பந்தர், அடியார்களோடு பரிசிலில் ஏறித் தனது நாவன்மையே கோலாகக் கொண்டு " கொட்டமே  கமழும்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் துவங்கியதும், ஓடம் தானாகவே அந்த ஆற்றில் செல்லத் துவங்கியது. " ஓடம் வந்து அணையும் " என்ற பாடலை அருளும் போது பரிசில்  மறுகரையை வந்து அடைந்தது, இந்த அற்புதத்தைச்  செய்தவாறு அப்பதிகத்தை நிறைவு  செய்தபடி, ஆலயத்தை வந்தடைந்து பெருமானைத் தரிசித்தார் சம்பந்தர் என்று பெரிய புராணம் கூறுகிறது.

வெட்டாற்றின் கரையில் பல்லக்கு.மறுகரையில் தெரிவது நம்பர் கோயில்
இவ்வாறு வெட்டாற்றில் ஓடம் செலுத்தி ஞான சம்பந்தர் அற்புதம் செய்ததை ஆண்டு தோறும் ஐதீக விழாவாக நடத்தி வருகிறார்கள். ஐப்பசி அமாவாசையைத் தொடரும் பிரதமை அன்று, இவ் விழா நடைபெறுகிறது. வெளியூர் அன்பர்கள் பலர் இதனைத் தரிசிக்க வருகின்றனர். இரவு சுமார் 10 மணி அளவில் திருஞான சம்பந்தர் , அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கோவிலில் இருந்து எழுந்தருளுகிறார். திரு வீதி எங்கும் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் பெருமானுக்கு உற்சாக வரவேற்பு. வெடி மற்றும் வாண வேடிக்கை முழக்கம் ஒருபுறம். இரவு சுமார்  1 மணிக்கு ஆற்றங்கரையை அடைகிறது பல்லக்கு.

விழாக்காண வந்தவர்கள் படகில் ஏறிக்கொண்டு மறு கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார்கள். நிறைவாக ஞானசம்பந்தப்பெருமான் பரிசிலில் எழுந்தருளுகிறார். அக்கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார். அங்கு ஒரு சிறிய  சிவாலயம் உள்ளது. அங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முடிந்தவுடன், மறு நாள் விடியற்காலை சுமார் 5 மணிக்குத் திருப்  பதிகம் பாடியவாறே ஒடமேறி த் திருக் கொள்ளம்பூதூர் வந்தடைகிறார் சம்பந்தர்.
இதே சமயத்தில் கோயிலில் இருந்து சுவாமி அம்பிகையோடு ரிஷப வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியில் சம்பந்தப்பெருமானுக்கு சுமார் 6 மணி அளவில் எதிர் காட்சி அளித்தருளுகிறார். இந்த அருட் காட்சியை நாமும் கண்டு நெகிழ்கிறோம். கண் பெற்ற பயன் பெறுகிறோம். சம்பந்தர் பதிகத்தை நாமும் பாடுகிறோம். நதி வெள்ளத்தைத் தாண்டும் அற்புதம் செய்த அப்பதிகத்தை ஓதியதால் பிறவிப் பெருங்கடலையும் நிச்சயமாக நீந்தி வீடு பெறுவோம் என்ற நிறைவுடன் ரிஷப வாகன தரிசனம் கண்ட கண்கள் வேறொன்றையும் காண வேண்டுமோ என்ற பேரின்பத்தில் திளைத்துக்   கண்கள் நீர்மல்க அவ்விடத்தை நீங்க மனமில்லாமல் நிற்கிறோம்.