அலுவலக வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு,போனஸ் மற்றும் ,பிற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. பதவிக் காலம் முடிந்தும் பல சலுகைகள் தொடர்கின்றன. இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியாக இச்சலுகைகளும் சம்பள உயர்வுகளும் பதவிக்குத் தகுந்தாற்போல அளிக்கப்படுவதுதான். உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதெல்லாம் சொல்வதோடு சரி என்று பலரும் அலுத்துக் கொள்ளக் கேட்டிருக்கிறோம். கடுமையாக உழைப்பவருக்கும் , அந்த அளவுக்கு உழைக்காதவர்களுக்கும் ஒரே ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது என்று குறைப்படுவோர் ஏராளம். பதவி உயர்வு கூட வேண்டியவர்களுக்குத் தரப்படுகிறது என்ற புகார்களும் உண்டு. இது முறையா என்றும் நீதியாகுமா என்றும் கேட்கலாம். மனிதன் வழங்கும் நீதியில் இதுபோன்ற குறைபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் தெய்வத்தின் தீர்ப்பு ஒன்றே பாரபட்சம் இல்லாமலும் பணியின் தரத்திற்கு ஏற்பவும் வழங்கப் படுவதைப் புராணங்கள் மூலம் அறிகிறோம்.
திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் சைவத்தின் இரு கண்கள். இருவரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்தபோது பஞ்சம் ஏற்பட்டது. அதுவும் இறைவன் செயல் என்றே இரு குருநாதர்களும் ஏற்றுக் கொண்டபோதிலும், அடியார்கள் விண்ணப்பிக்கும் வேளையில் அவ்விண்ணப்பத்தை இறைவனிடம் திருப்பதிகங்கள் ஓதித் தெரிவித்தனர். இறைவன் செவி சாய்க்காமல் இருப்பானா? காலநிலையால் கோள்கள் திரிந்து மழை விழாது போனாலும் உண்மை அடியார்களைப் பெருமான் எப்பொழுதும் கை விட மாட்டான் என்பது இவ்வரலாறு கூறும் உண்மை. அதிலும், குரு நாதர்களை அணுகித் தங்கள் குறைகளை விண்ணப்பித்ததால் , அக் கோரிக்கை எளிதில் நிறைவேற ஏதுவாயிற்று. " உம்மை வழிபட்டார்க்கு அளிக்க அளிக்கின்றோம்" என்று வீழி நாதப் பெருமானே உலகத்தவர் காணும்படிப் படிக்காசு அருளிச் செய்ததாகப் பெரிய புராணம் கூறும்.
சிவாலயங்கள் தோறும் தான் ஏந்தியுள்ள உழவாரத்தால் தொண்டாற்றி வந்த அப்பர் பெருமானுக்கு வாசியில்லாக் காசு வைத்து அருளினான் பரமன். ஞானசம்பந்தருக்கோ வாசியுடன் காசு வைத்து அருளினான். பின்னர் சம்பந்தர் வாசி தீரப் பாடி வேண்ட, அவருக்கும் நற்காசுகளாய்த் தந்து, பஞ்சம் தீர்த்து அருளினான் என்பது புராண வரலாறு. சம்பந்தப்பெருமான் அம்மையப்பரது மகனார் ஆதலினால் இவ்வாறு திருவருள் புரிந்தான். ஆயின் அப்பரோ ஊழியம் செய்த தொண்டர் என்றபடியால் முதலில் அவருக்கு நற் காசினைக் கொடுத்தானாம். மனித நீதியாக இருந்தால் தன் மகனுக்குத் தந்துவிட்டுத்தான் பிறருக்குக் கொடுக்கும் படியாக இருந்திருக்கும் . " தனக்குப் பிறகு தான் தான- தருமம் " என்று ஒரு பழமொழியையும் தமக்குச் சாதகம் ஆக்கிக் கொள்வர். ஆனால் நீதி வடிவான பரமேச்வரனது தீர்ப்புக்கு ஈடு இணை ஏது? ஆகவே, பெருமானை, " நீதியே " என்று வாயார அழைக்கிறார் மாணிக்க வாசகர்.
அதே சமயம், சம்பந்தருக்கும் உரிய நேரத்தில் கருணை பொழியத் தவறவே இல்லை. அவரது தந்தை சீர்காழியில் செய்யும் சிவ வேள்விக்காகத் திருவாவடுதுறைப் பெருமானை வேண்டி நின்றபோது, சிவபூதகணம் மூலமாக ஆயிரம் பொன் தந்தருளினான் மாசிலாமணி ஈசன். அது எப்படி சாத்தியமாயிற்று? நம் கையில் இருக்கும் பொருள்கள் எல்லாம் செலவழிந்த நேரத்தில் நாம் சிவனருள் வேண்டிச் சிந்திப்பதில்லை. மாறாக, யாரிடம் சென்றால் பொருள் கிடைக்கும் என்றுதானே சிந்திக்கத் துவங்குகிறோம்! ஆனால் சம்பந்தரோ, " கையது வீழினும் கழிவுறினும் செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன் " என்று பாடுகிறார். அப்படிப் பக்குவம் வாய்ந்த பெரியோர்களுக்கே சிவனருள் எளிதில் கைகூடும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன் அலுவலகங்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.
திருவீழிமிழலைத் தலத்தை தரிசிப்பதோடு, வீழிநாதப் பெருமானது நீதியின் திறத்தையும் நினைந்து நெக்குருகுவோர்க்கே இந்த உண்மை புலப்படும். மேலெழுந்தவாரியாகப் புராணங்களைப் படிப்பதைவிட, அவை தரும் நீதியை மகிழ்வுடன் ஏற்று அதன்படி நடக்கக் கடவோம் என்று உறுதி பூண்பதே சிறப்பு.

No comments:
Post a Comment