Wednesday, September 4, 2013

கும்பாபிஷேகக் காட்சிகள்

கும்பாபிஷேகம் என்றவுடன், ஆலய கும்பங்களின்மீது புனித நீர் ஊற்றப்படுவதே நினைவுக்கு வரும்.  அண்மையில் நல்லூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது ஒரு சிவாச்சாரியார் கூறிய விளக்கம் சற்று வித்தியாசமாகச் சிந்திக்க வைத்தது.
அப்பெரியவர் சொன்னார்:  " கும்பாபிஷேகம் என்றால் கும்பத்துக்கு செய்யப்படும் அபிஷேகம் என்பது மட்டும் அர்த்தம் இல்லை. கும்பித்தல் என்றால் சேர்தல் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வைபவத்தின் போது ஆயிரக்கணக்கான அடியார்களின் கைகள் சேர்ந்து தலைமீது கூப்புகின்றன. பல புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் கும்பத்தின்மீதும்  மூர்த்திகளின் மீதும் ஒருசேர அபிஷேகிக்கப்படுகின்றது. மனங்களும் கைகளும் சேர்ந்து கும்பிக்கின்ற  அற்புதமான வைபவம் இது.  அதையே பெருமான் அபிஷேகமாகவும் ஆராதனையாகவும் ஏற்கிறான் .  "

கும்பித்தல் என்பதற்கு இவ்வாறு பல பொருள்கள் இருக்கக்கூடும். அதிலிருந்துதான் கும்பிடுதல் என்ற சொல்லும் வந்திருக்கலாம். இப்படிச் சேர்ந்த பொருள் கும்பி, கும்பம் என்றெல்லாம்  ஆவது இருக்கட்டும். சாக்கடையில் சேர்ந்த மண்ணைக்கூட கும்பி என்பார்கள். அதே நேரத்தில்   " நின் மலரடிக்கே கூவிடுவாய்; கும்பிக்கே இடுவாய்.." என வரும் திருவாசகத் தொடரில் கும்பி என்றால் நரகம் என்று பொருள் காண்கிறது தருமை ஆதீனத் திருவாசக உரை. அனைவரது கும்பிடுதலுக்கும் புகலிடமான  மலரடிக்கே வருக என்று கூவி அருளி அக்கும்பிக்கே இடுவாயாக என்று வேண்டுவதாகவும் பொருள் கொள்ள ஏதுவாகிறது. கும்பித்த அடியேனை நரகத்தில் இடர்ப்பட விடுவாயோ என்ற கேள்வியாகவும் பொருள் காண்பர்.

நல்லூர்  என்னும் சிறந்த சிவ ஸ்தலத்தில்  திருப்பணிகள் நிறைவேறி, மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காளஹஸ்தி போன்ற ஸ்தலங்களை தக்ஷிண கைலாசம் என்பார்கள். ஆனால் தேவாரத்தில் நல்லூரைக் கயிலைக்கு இணையாக வைத்துப் போற்றியிருப்பதை, " வட பால் கயிலையும் தென்பால் நல்லூரும் அவர் வாழ் பதியே" என்று அப்பர் சுவாமிகளின் திருப்பதிகத்தால் அறியலாம். பாண்டவர்களின் தாயான குந்தி தேவிக்காக சுவாமி ஏழு கடல்களையும் வரவழைத்த பெருமையை உடையது. கும்பகோணத்திற்கு முன்பாகவே மாசி மக ஸ்நான விசேஷத்தைப் பெற்றதும் இந்த நல்லூர் தான்.

அகஸ்தியருக்காகக் கல்யாணக் காட்சி காட்டிய கல்யாண சுந்தர மூர்த்தியின் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. மூலவர் ஸ்வயம்பு மூர்த்தி. பின்னால்  சுதை வடிவில் உமா மகேஸ்வரர்கள் காட்சி அளிக்கிறார்கள். கர்பக் கிருகம் மாடக்கோயில் மீது  அமைந்துள்ளது. கோச்செங்கட் சோழ நாயனார் கட்டியது. மூலஸ்தான விமானத்தின் கம்பீரமும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. அதிலுள்ள பெரிய வடிவிலுள்ள தக்ஷிணாமூர்த்தி, நரசிம்ஹர்  ஆகிய மூர்த்திகள் நம்மைப் பெரிதும் கவர்கின்றன. மாடக் கோயில் படிகளை ஏறும்போது முதலில்  கைலாச கணபதியைத்  தரிசிக்கிறோம்.

அருகிலுள்ள திருச்சத்திமுற்றத்தை வழிபட்ட திருநாவுக்கரசர்  வேண்டியபடியே, அவரை இறைவன் நல்லூருக்கு வா என்று அழைத்து, அவரது சிரத்தின் மீது பாத மலர் சூட்டினான். இன்றும் சுவாமி சன்னதியில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு, இறைவனது பாதுகையை சிரத்தில் வைத்துப் பிரசாதம் வழங்குகிறார்கள். கிடைத்தற்கரிய இப் பாக்கியத்தை எல்லோரும் பெற வேண்டும்.
  
வெளிப்பிராகாரத்தில் தனி சன்னதி கொண்டு வேண்டும் வரம் அருளும் காளி தேவியை தரிசித்து வேண்டுதல்களை செலுத்துகிறார்கள்.  மாடக் கோயிலில் கிரிசுந்தரி என்ற பெயருடன்  அம்பாள்  தரிசனம் தருகிறாள்.

சம்பந்தர்,அப்பர்  ஆகியோரது தேவாரத் திருப்பதிகங்களை உடையது இத்தலம். அமர்நீதி நாயனாரது அன்பை சோதிக்க இறைவனே நேரில் எழுந்தருளி, அடியவரின் பக்தியை உலகறிய வைத்தான். நாயனாரது மடம் கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது.

1991 ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, சரியாக 12  ஆண்டுகள் ஆனபிறகு இக்கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது பாராட்டப் பட வேண்டியது. இங்கிருந்து வெளியூர்களில் வேலை நிமித்தமாகக் குடியேறியவர்கள், தங்கள் ஊரில் நடைபெறும் இந்த வைபவத்திற்காகத் தங்களாலான எல்லா உதவிகளையும் செய்ததோடு, நேரில் வந்து கலந்துகொண்டு அருள் பெற்றார்கள். இது மற்ற கிராமங்களிலும் அவசியம் பின்பற்றப் பட  வேண்டிய ஒன்றாகும். எக்காரணம் கொண்டும் தங்களது சொந்த ஊர் கோயில்களைப் புறக்கணிக்காமல் அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் நல்லூர் வாசிகளைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு சிவக்ருபை கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. இதில் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த ஊரைச் சேர்ந்தவர் இல்லாவிடினும் இதன் பெருமைகளை அறிந்த சென்னை அன்பர் ஒருவர் இங்கு ஒரு கட்டிடம் கட்டி அதில் அன்னதானம் செய்தது மிகவும் பாராட்டத் தக்கது. மற்றொரு அன்பர் ,கோயில் மதில்கள் ,சன்னதிகள் ஆகியவற்றை அழகுற வர்ணம் பூசித் தந்துள்ளார். 100  வருஷங்கள் முன்பு கொடிமரத்தை அமைத்துக் கொடுத்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் ,  அந்தக் கொடிமரம் பழுதாகிவிடவே, புதிய மரத்தை நிறுவி, அதற்குச் செப்புத் தகடுகளைப் பொருத்தியுள்ளார்கள் என்பதும் மற்ற ஊர்க்காரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். 

யாகசாலையையும் மிகச் சிறப்பாக அமைத்திருந்தார்கள். சுவாமி, அம்பாள், காளி தேவி ஆகிய மூன்று பிரதான மூர்த்திகளுக்கும் தனித்தனியே ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு ஆறு கால பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனக் கோயில் ஆதலால் மரபு மாறாமல் இவை  நடத்தப் பெற்றன. மகா சந்நிதானமும் யாக சாலைக்கு எழுந்தருளி தரிசனம் செய்தார்கள். வந்திருந்த ஆயிரக்கணக்கான சேவார்த்திகளுக்கும் ஆங்காங்கே அன்ன தானம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சி ஆகும். அதிக பஸ் வசதி இல்லாத கிராமமாக இருந்தபோதிலும் பக்கத்துக் கிராம மக்கள் சாரிசாரியாகக் கால் நடையாகவே வந்து கும்பாபிஷேகத்தைத் தரிசித்தார்கள்.
கயிலை நாயகன் நல்லூரில் நடத்திக்கொண்ட வைபவம் அல்லவா! அவன் விருப்பமாக உறைவது வடக்கில் கயிலை மலையும் தெற்கில் நல்லூரும் என்று அப்பர் பெருமானும் பாடியிருக்கிறார். எனவே கயிலையில் நடந்த கும்பாபிஷேகமாகவே பாவித்து , நிறைந்த மனத்துடன்  அன்பர்கள் அனைவரும் அந்த "ஆனந்தத் தேன் உறையும் பொந்தைப் பரவி " இல்லம் திரும்பினர்.

நல்லூர்  கும்பாபிஷேகம் ஆன சில நாட்களிலேயே மூவலூரில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயிலடிக்கு மேற்கில் சுமார்  2 கி.மீ. தொலைவில் கும்பகோணத்திற்குச்  செல்லும் சாலையின்  அருகாமையில் உள்ளது மூவலூர் மார்கசகாயேசுவர சுவாமி ஆலயம். வழித்துணை நாதர் என்று இத்தலப் பெருமானைத் தமிழில் அழைப்பர். மங்கள நாயகியாகவும், சௌந்தர நாயகியாகவும் அம்பிகை இரு சன்னதிகள் கொண்டு அருட் காட்சி அளிக்கிறாள்.  அப்பர் தேவாரத்தில் இத்தலப் பெயர் குரிப்பிடப்பட்டதால் இது வைப்புத்தலமாக எண்ணப்படுகிறது. சம்பந்தர் இத்தலத்தை தரிசித்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் அப்போது பாடிய பதிகம் தற்போது கிடைக்கவில்லை.

புன்னை மர நீழலில் பிரமன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் மார்கசகாயேச்வரப் பெருமானைப் பூசித்துள்ளனர். எனவே இவ்வூர் மூவரூர் என்று ஆகிப் பிற்காலத்தில் மூவலூர் என்று ஆயிற்று என்பர். நாகர்களில் தக்ஷகனும், வாசுகியும் பூஜித்த தலம். சோழ,பாண்டிய, விஜயநகர அரசர்கள் காலக் கல்வெட்டுக்களை உடையது.

மூவலூர் கும்பாபிஷேகத்திற்காக சுவாமிக்கும் அம்பாள்  இருவருக்குமாக மொத்தம் பதினைந்து குண்டங்களும் பரிவாரங்களுக்கான குண்டங்களும் அமைக்கப்பெற்று, நான்குகால பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. உள்ளூர்வாசிகளும்  பிற அன்பர்களும் காட்டிய ஆர்வம் மகத்தானது. பன்னிரண்டு ஆண்டுகள் ஆனவுடன் கும்பாபிஷேகம் செய்யப்படும் கோயில் இது.

ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வதால் கோயிலை  நன்கு பராமரிக்க ஏதுவாகிறது. ஆலயப்  புனிதமும் காக்கப் படுகிறது. ஏராளமான ஆலயங்கள் ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் செய்யப் படாததால் மரங்கள் முளைத்து, மிகப்பெரிய திருப்பணி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறன. இதைக் கவனத்தில் கொண்டு உரிய காலத்தில் கும்பாபிஷேகம் செய்ய எல்லோரும் முன்வரவேண்டும். இதனால் எல்லோருக்கும் இறைவழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கவும் சாத்தியமாகிறது.  

Tuesday, August 20, 2013

சிவ ராஜதானி

                            
                      சிவ சிவ
                திருச்சிற்றம்பலம்


               சிவ ராஜதானி
(நாகைப்பட்டினத்துப் பன்னிரு சிவாலயங்கள்)



திருவாதிரையான் திருவருட் சபை, சென்னை.


பணிவுரை
                                                                                         
தெய்வப் பொன்னி நதி வளம் கொழிக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் இருகரைகளிலும் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 190  ஆகும். அவற்றுள், காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்றாக விளங்குவதும், மிகப் பழமையானதும், தேவார மூவராலும் பாடல் பெற்றதும்,சக்தி பீடங்களுள் ஒன்றும், சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றும்,பல்வேறு புராண வரலாறுகளைக் கொண்டதும் ஆகிய தலம், நாகப்பட்டினம் என்று தற்போது வழங்கப்பெறும் நாகைத் திருத்தலம். நாகராஜனாகிய ஆதிசேஷன் வழிபட்ட சிறப்புடையதால்,இப்பெயர் வந்தது என்பர் .

ஊழிக்காலத்தில் அனைத்தும் இங்கு ஒடுங்குவதால்,இத்தலம் சிவராஜதானி எனப்பட்டது எனத் தல புராணம் கூறுகிறது. காயா ரோஹாணர் என்ற பெயருடன் சிவபெருமான் அருட் காட்சி வழங்கும் தலங்கள், காஞ்சி, கும்பகோணம்(மகாமகக் குளக் கரை), நாகை ஆகிய மூன்றுமாம். கயிலை யையும்,காசியையும் போன்று முக்தி மண்டபம் இங்கு இருக்கிறது.

இத்தல எல்லைக்குள், ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி ஆலயம் உள்ளிட்ட பன்னிரண்டு சிவாலயங்கள் உள்ளன. இவை யாவும் புராணச் சிறப்பும்,பழமையும் வாய்ந்தவை. இப்பன்னிரண்டு ஆலயங்களையும் பலர் ஒரே நாளில் தரிசிப்பர்.

இப்பன்னிரண்டு ஆலயங்களின் இருப்பிடம், வரலாறு ஆகியவை பற்றிய செய்திகளுடன் ஒரு சிறு நூல் வெளியிட்டால் இக்கோயில்களைத் தரிசிக்க வருவோர்க்குப் பெரிதும் பயன் படும் என்ற எண்ணத்தால் இச் சிறு முயற்சியை மேற்கொள்கிறோம். சிவராஜதானியாகிய நாகைக்கு வரும் அன்பர்கள் இதனை வரவேற்பர் எனக் கருதி, இதனைத் திருவாதிரையான் திருவருட் சபையின் வெளியீடாக ஆதி புராணனாகிய காயாரோகணப் பெருமானின் மலரடிகளில் சமர்ப்பிக்கிறோம். 
    

 --சிவபாதசேகரன் ,திருவாதிரையான் திருவருட் சபை, சென்னை/  



                                               1. காயாரோகணம்
             (ஸ்ரீ நீலாயதாக்ஷி சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி ஆலயம்)


                      திருச்சிற்றம்பலம்
         நிருத்தனை நிமலன் தன்னை நீணிலம் விண்ணின் மிக்க
         விருத்தனை வேத வித்தை விளைபொருள் மூலமான
         கருத்தனைக் கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
         ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே..
                                                      திருச்சிற்றம்பலம்
                         --- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்

                           
தலமும் இருப்பிடமும்: புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 82 வது தலமாக விளங்குவது திருநாகைக் காரோணம் எனும் இத்தலம்.  இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாகைக்குவர இரயில் மற்றும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.  இரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி. மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

தலத்தின் தொன்மை: பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது.

தலத்தின் பெருமை: உமா தேவியும்,ஆதிசேஷனும்,புண்டரீக முனிவரும் வழிபட்ட தலம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார் அவதரித்த தலமும் இதுவே ஆகும்.  

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்தால்,தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியன அமைந்துள்ளன. சுவாமி பிராகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் இருக்கக் காணலாம். இப்பிராகாரத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன்,முருகன்,கஜலக்ஷ்மி,தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன்,நவக்ரகங்கள்,காட்சி கொடுத்தவர்,நடராஜர்,பிக்ஷாடனர் அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.தியாகராஜர் சன்னதியில் சுந்தர விடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

தீர்த்தங்கள்: சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப் படுகிறது.                     
நாகைப் புராணம் : வடமொழியில் இருந்த இத்தலத்தின் புராணத்தைத் தமிழில் இயற்றித் தருமாறு அன்பர்கள் வேண்டவே, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மகாதேவ சாஸ்திரிகள் என்பவரிடமிருந்து தமிழாக்கம் செய்து கொண்டு, செய்யுள்நடையில்1868ம் ஆண்டு இயற்றினார்கள். புராணம் முழுதும் இயற்றப்பட்டவுடன், 1869 ம் ஆண்டு நாகைப் புராண அரங்கேற்றம் நடைபெற்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் 65 வது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், கீழ்வேளூர் சுப்ரமணிய தேசிகர் ஆகியோர் பிள்ளைஅவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்கள். அதே சமயத்தில் சென்னையிலும் இந்நூல் அச்சேறியது.
            
மகாவித்துவான் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள், இப்புராணத்தின் அருமை பெருமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:
           
 “இந்நூலில் பல நயங்கள் மிகுந்து விளங்கும். சொல்லணி,பொருளணி,    தொடைநயம்,பொருட்சிறப்பு,சுவைநயம்,நீதி,சிவபக்தி,சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். பல புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்.”

ஞானசம்பந்தர் அருளிய திருமுகப் பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப் பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது அறிந்து மகிழத் தக்கது.

2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது, நன்றியுடன் இங்கு நினைவுகூரத் தக்கது.

புராண வரலாறுகள்:ஏழு முனிவர்களுக்கும் சோமாஸ்கந்த வடிவில் காட்சி அளித்தது, அகஸ்தியருக்குத் திருமணக் காட்சி அளித்தது, சாலீசுக மன்னனுக்குத் தரிசனம் அளித்தது, தசரதன் தனியே சனிப் பிரதிஷ்டை செய்தது, சுகுமாரன் என்ற அந்தணனுக்கு சிவராத்திரி அன்று நற்கதி அளித்தது,புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணம் செய்தது, திருமால், பிரமன் முதலிய தேவர்களும், அகத்தியர், வசிஷ்டர் முதலிய முனிவர்களும், முசுகுந்தன்,அரசகேசரி,விசித்திரகவச்சன்,  விரூரகன், பத்திரசேனன் என்னும் அரசர்களும் ,பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்ட தருமன் என்னும் அந்தணர்களும் தருமன் முதலிய வணிகர்களும் வழிபட்டது ஆகியவற்றைப்  புராணம் விரித்து உரைக்கிறது. சுந்தர மூர்த்தி நாயனார் இப்பெருமானைப் பாடிக்,குதிரை, முத்தாரம்,வயிரம், கஸ்தூரி,சாந்து,பொன்,பட்டாடை,காம்பினோடு நேத்திரம்,ஆகியவற்றைப் பெற்றதாகப் பெரிய புராணம் கூறுகிறது.இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில், குதிரைவாகன விழா, சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.

திருவிழாக்கள்: வைகாசியில் பிரமோற்சவமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும்.அப்போது, சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில் புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பா கோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று விட்டு, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடை பெறுகிறது.
          
ஆடிப் பூரத்தில் நீலாயதாக்ஷி அம்பிகைக்கு விமரிசையாக உற்சவம் நடைபெறும். ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி - தை அமாவாசைகளில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.


                      அமர நந்தீசுவரர் கோவில்

                           
           
நாகை பெரிய கோவில் கீழை சன்னதித் தெருவின் முனையில்,கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது இந்த ஆலயம்,சிறிய கோபுர வாசலைக் கொண்டது. நாகைக் காரோணப் புராணத்தில் அமரரேந்திரேச்வரர் என்று காக தீர்த்தப் படலத்தில் சுவாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்கள் வழக்கில் அது,அமர நந்தீஸ்வரர் என ஆயிற்று போலும்!
          
புராண வரலாறு: அகலிகையை நாடிய இந்திரன் கௌதம முனிவரின் சாபத்தால் காக்கையாக மாறினான். சாப விமோசனத்திற்காக நாகை வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான். அதுவே காக்கை தீர்த்தம் எனப்படுவது. தினமும் அதில் நீராடி, காயாரோகனரை வழிபட்டு நற்கதி பெற்றான். ஆலயத்தின் கிழக்கே, ஒரு சிவலிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டான். இம்மூர்த்திக்குஅமரனந்தீசுவரர் என்றும், தீர்த்தத்திற்கு வஞ்சி கங்கை தீர்த்தம் பெயர்கள் ஏற்பட்டன.

ஆலயம் அழகிய கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு விளங்குகிறது.
      
                  அக்கரை குளம் சொக்கநாதர் கோவில்

          
         
நாகை பெரிய கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. குறுகிய தெருக்கள் வழியாகச் செல்லவேண்டும். ஆலயத்தின் அருகில் அழகிய குளம் அமைந்துள்ளது.ஒரே ப்ராகாரத்துடன் கூடிய சிறிய கோயில். செட்டியார் பரம்பரையினர் நிர்வகிக்கின்றனர். மொட்டைக்கோபுர வாயிலின் மேல் சுவாமியின் மடியில் முருகனும் அம்பிகையின் அருகில் கணபதியும் அமர்ந்துள்ளவாறு சுதை வடிவங்கள் உள்ளன. சுவாமி, சுந்தரேசுவரர் என்றும் அம்பிகை, மீனாக்ஷி என்றும் அழைக்கப்படுகின்றனர். நாகைக் கோயில்கள் பண்ணிரண்டின் விவரங்களை ஒரு பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

                                சட்டையப்பர் கோயில்

                          
           
பிரபலமான சிவாலயம். முன்னமே தோன்றியதால் ஆதி காரோணம் என்று வழங்கப்பெறும்.புண்டரீகமுனிவர் ஆதிபுராணருக்குத் தென்மேற்கில் ஒரு ஆசிரமம் அமைத்து, லிங்கப்ரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தார். தினந்தோறும் சர்வ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து,,பெருமானை வழிபட்டு வந்தார். இறைவன் அவரைத் தனது காயத்துடன் ஆரோகணித்துக் கொண்டதால்,காயாரோகணர் எனப்பட்டார். சர்வதீர்த்தமும், புண்டரீக தீர்த்தம் எனப்பட்டது.

கோயில் பெரிது. திருக்குளம் உள்ளே அமைந்திருக்கிறது. தக்ஷிணாமூர்த்திக்கு  அழகிய தனி சன்னதி அமைந்திருக்கிறது.சுவாமிக்கு ஆதி காயாரோகணேசுவரர் என்று பெயர். அம்பிகை இக்ஷுரஸ பாஷிணி எனப்படுகிறாள். அதாவது, கருப்பஞ்சாறு போன்று இனிக்கும் குரல் வளமுடையவள் என்று பொருள் படும்.

இக்கோயிலின் சிறப்பு மூர்த்தியாக சட்டைநாதர் தனிச் சன்னதி கொண்டு அருளுகிறார். கண்கண்ட தெய்வமான இவருக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் அன்பர்கள் பிரார்த்தனை செலுத்த வருகிறார்கள். மிகவும் நியமத்தோடு பூஜைகள் செய்யப்படுகின்றன. சட்டைநாத சுவாமி, அம்பிகையோடு காட்சி அளிப்பது சிறப்பு அம்சம்.


 நாகநாத சுவாமி ஆலயம்

.                       
         
நாகையில் சட்டையப்பர் வடக்கு வீதியின் வட சிறகில் இக்கோயில் அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் அணி செய்கிறது. உள்ளே சென்றால் ஓர் கருங்கல் மண்டபத்தில் விநாயகர்,நந்தி,பலிபீடம் இருக்கக் காணலாம்.சன்னதிக்குச் செல்லும் வழியிலுள்ள சுவற்றில், ஆதிசேஷன் சிவபெருமானைப் பூஜிக்கும் திருவுருவம் இருக்கக் காண்கிறோம்.இடப்புறச் சுவற்றில்,நாக கன்னிகை இருக்கிறாள். அம்பிகை அகிலாண்டேச்வரியாக தனிச் சன்னதி கொண்டு காட்சி அளிக்கிறாள். நாகநாத சுவாமி சன்னதியில் நாகப்புற்றுக்கள் உள்ளன. அருகிலுள்ள மேடையில் ராகு, கேது ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இது சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்பர்.

பிராகாரத்தில், தக்ஷிணாமூர்த்தி,கருவறைச் சுவற்றை ஒட்டி கோஷ்டமாக மட்டும் இராமல் தனிச் சன்னதி கொண்டு விளங்குகின்றார்.இது போன்ற அமைப்பு, இக்கோயிலிலும்,சட்டையப்பர் கோயிலிலும் மட்டுமே உள்ளன.
  
ஸ்தல விருக்ஷமான சரக்கொன்றை தற்போது இல்லை.ஒரே இடத்தில் ஆலும்,வேம்பும் இணைந்த தோற்றத்தையே காண்கிறோம்.இங்கு நாகப்-பிரதிஷ்டைகள் செய்திருக்கிறார்கள்.தென்மேற்கில்வினாயகப்பெருமானின் சன்னதியும்,வடக்குத் திருச்சுற்றில் முருகப்பெருமானது சன்னதியும் உள்ளன. மயில் வாகனனாக, வள்ளி-தெய்வானையுடன் அற்புதக் காட்சி வழங்குகின்றான் ஆறுமுகன். கஜலக்ஷ்மி,துர்க்கை,சண்டேசர்,சூரியன்,சனி, பைரவர் ஆகிய மூர்த்திகளையும் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.
  
புராண வரலாறு: சனத்குமார முனிவரின் வேண்டிக்கோளுக்குக்கிணங்கி, நந்தியெம்பெருமான், நாகையில் திருக்கோயில் கொண்டுள்ள நாகநாதப் பெருமானுடைய பெருமைகளைக் கூறுவதாகப் புராணம் அமைந்துள்ளது. பாதாள உலகை ஆண்டுவந்த ஆதிசேஷனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்ட முனிவரை அணுகினான். சிவ பூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று முனிவர் அருளவே, சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு காலங்களும் முறையே, குடந்தைக் கீழ்க்கோட்டம்(கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி ஆலயம்), திருநாகேசுவரம், திருப்பாம்புரம் ,திரு நாகைக் காரோணம் ஆகிய நான்கு தலங்களை வழிபட்டான். நாகையை அடைந்து, தேவ தீர்த்தத்தில் நீராடி, காயாரோகணப் பெருமானையும், நீலாயதாக்ஷி அம்பிகையையும் முறைப்படி வழிபட்டான்.சர்வ தீர்த்தத்தின் மேல்திசையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். அதன் பயனாக அவனது மனைவி ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள். ஆனால் அக்குழந்தைக்கோ மூன்று தனங்கள் இருக்கக் கண்டு வருந்தலாயினான். அப்போது அசரீரி, “நாகராஜனே! வருந்தாதே. இவளுக்குத் தக்க மணாளன் வரும்போது மூன்றாவது தனம் மறையும்” என ஒலித்தது.
            
ஆதிசேஷனின் மகளான நாக கன்னிகை, நாள்தோறும் ஆதிபுராணரை மனமுருகி வழிபட்டுவந்தாள். ஒருநாள் தேவதீர்த்தக்கரையில் சோழ அரசகுமாரனாகிய சாலீசுகனைக் கண்டாள். அப்போது அவளது மூன்றாவது தனம் மறையவே, இவளே தனது மணாளன் என அறிந்து, தன் பெற்றோரிடம் கூறினாள். பிலத்துவாரம் வழியே நாகலோகம் சென்ற சோழனை ஆதிசேஷன் வரவேற்றுத் தன் மகளை அவனுக்கு மணம் செய்துவித்தான். பின்னர் அவனை அரசாட்சி செய்யுமாறு கூறிவிட்டு, நாகராஜன் நாகையை வந்து அடைந்தான். நாக தீர்த்தத்தில் நீராடித் தான் பிரதிஷ்டை செய்த நாக லிங்கத்தை வழிபாட்டு வந்தான். இத்தீர்த்தத்தில் நீராடுவோரைப் பாம்பு தீண்டினாலும் விஷம் ஏறாமல் இருக்கக் கடவது என்ற வரமும் பெற்றான்.இவ்வாறு மாசி மாத மகாசிவரத்திரியன்று பூஜை செய்யும்போது, இறைவன் காட்சி நல்கினான். அப்போது ஆதிசேஷன், "இறைவா, இந்நகரம் அடியேனது பெயரில் அழைக்கப்படவேண்டும். இந்த லிங்க மூர்த்தியில் தாங்கள் எப்போதும் இருத்தல் வேண்டும். இங்கு வந்து வணங்கும் அன்பர்களுக்கும் வேண்டிய வரம் அனைத்தையும் தந்தருள வேண்டும்.” என்று வீழ்ந்து வணங்கினான். நாகநாதப் பெருமானும் அவன் வேண்டிய வரத்தைத் தந்தருளினார் நாகநாதப்பெருமானது அருளை வேண்டி, வாசுகி, கார்கோ டகன், தனஞ்சயன், ஐராவதன், குளிகன்,சங்கபாலன் ஆகிய நாகங்களும் வழிபட்டதை மேலைத் திருச்சுற்றில் காணலாம். கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகாரத் தலம் எனப்படுகிறது.

சீதையைத் தேடிவந்த இராமபிரான் தென்புறம் ஓர் லிங்கமூர்த்தியை நிறுவி பூஜித்தார். அம்மூர்த்தியே ராமலிங்கேசுவரர் என்பதாகும்.கிரகண காலங்களிலும்,அர்தோதய-மகோதய புண்ணிய காலங்களிலும் இங்குள்ள கடலில் மூழ்கி இராமனாதப் பெருமானை வணங்குவோர், எல்லா நன்மைகளையும் அடைவர். இத்தலத்தை வழிபடுவோர், மணப்பேறு, புத்திரப்பேறு, நோய் நீக்கம்,ஆகியன அருளப்பெறுகிறார்கள் கார்த்திகை சோமவாரம் பங்குனி உத்தரம் மற்றும் மாதந்திர விசேஷ நாட்கள் அனைத்தும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

   
அழகர் கோயில்

                                 
அழகிய நாதருடைய இக்கோயில்,ஒரு அழகிய கற்றளி. மொட்டை ராஜ கோபுர வாசலின் மேல் கணபதியும் கந்தனும் இருபுறமும் நிற்க காட்சிகொடுத்த நாதர் ரிஷபத்தின் மீது சாய்ந்தவாறு அம்பிகையுடன் நமக்குத் தரிசனம் தருகிறார். கருவறையில் சற்று உயரத்தில் அழகிய நாதர் பொலிவுடன் காட்சியளிக்கிறார்.அம்பிகை,சௌந்தரவல்லி என்ற பெயரோடு அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் தனிச் சன்னதி கொண்டு விளங்குகிறாள்.

திருப்பாற்கடலைக் கடையும் போது ஆலகால விஷம் வெளிப்பட்டதால் திருமாலின் மேனி கருமை நிறமாக மாறியது. மீண்டும் தனது அழகைப் பெறுவதற்காக விஷ்ணுவானவர் நாகைக்கு வந்து லிங்கப்ரதிஷ்டை செய்து,அதன் மேற்கில் அம்ருத புஷ்கரணி என்ற தீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டு வந்தார். ஈசனும் அவருக்குக் காட்சி அளித்து, “ நீ கரிய நிறத்தவனாக இருப்பினும் அழகைப் பெறுவாய் “ என்று வரமளித்தார்.  இவ்வாறு தனது அழகை மீண்டும் பெற்ற திருமால்,சௌந்தரராஜப்பெருமாள் என்ற திருநாமத்துடன், இக்கோயிலின் தென்மேற்குத் திசையில் கோயில் கொண்டுள்ளார்.


நடுவூர் கோயில்

                      
நாகைக்கு நடு நாயகமாகத் திகழ்வதால் இத்தலம் நடுவூர் எனப்பட்டது. வடமொழியில் இதனை மத்யபுரி என்பர். சுவாமிக்கு மத்யபுரீஸ்வரர், நடுஸ்தல ஈசர் என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. அம்பிகை,சௌந்தரநாயகி எனப்படுகிறாள்.முன்னொரு காலத்தில்,படைப்புத் தொழிலை அடையவேண்டித் திருமாலின் சொற்படி பிரம தேவன் நாகைக்கு வந்து,ஊரின் நடுவில்ஒரு சிவலிங்கத்தை நிறுவி,அதன் மேற்கே ஒரு தீர்த்தம் உண்டாக்கிவழிபட்டு வந்தார். ஈசனும் வெளிப்பட்டு, பிரமனுக்குப் படைக்கும் தொழிலை அளித்தருளினார். அதுமுதல் தீர்த்தமும் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. திருக்கடவூரில் ஈசனால் தண்டிக்கப்பட்ட இயமனும் இங்கு வந்து வழிபாட்டு, தனது பதவியை மீண்டும் பெற்றான். தீர்த்தத்திற்கு இயம தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.


வீரபத்ர சுவாமி கோயில்

                        

ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் கோயில், அதன் பிரதான மூர்த்தியான வீரபத்ரரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உடையது. வீரபத்திரருக்கென்று தனிச் சன்னதி இருக்கிறது. சிவபெருமானை மதியாது தக்ஷன் செய்த யாகத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக வீரபத்திரர் தோன்றி அத்தேவர்களைத் தண்டித்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக சிவனை வழிபட்டார். பெருமானும், “ யாகத்தில் பயன்படுத்தப்பட்ட மாலைகளை கங்கையில் போட்டு அவை எங்கே கரை சேருகின்றனவோ, அங்குசிவ-லிங்கப்ப்ரதிஷ்டை செய்து என்னை வழிபடுவாயானால், பாவம் நீங்கப்பெறுவாய் “ என்று அருளினார். அம்மாலைகள் நாகையில் கரை ஒதுங்கின. வீரபத்திரரும், காளியைக் காவல் தெய்வமாகக் கொண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து, அப்பெருமானுக்கு விஸ்வநாதர் என்று பெயரும் இட்டார்.


கட்டியப்பர் கோயில்

                           
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும் போது, அமிர்த கலசம் வெளிப்பட்டது. அதனை அசுரர்கள் கைப்பற்றாத வண்ணம் எடுத்துக்கொண்டுபோய் நாகையை அடைந்த தேவர்கள், அதனை வேத தீர்த்தத்தின் தென் கரையில் வைத்துவிட்டு, நீராடச் சென்றார்கள். திரும்பிவந்து பார்க்கையில்,அக்குடம், சிவலிங்கமாக மாறியதுகண்டு வியந்தனர். அவர்களுக்குக் காட்சி கொடுத்த இறைவனும்,அவர்கள் விரும்பியவண்ணம் ஒரு அமிர்த கலசத்தை வரவழைத்துக் கொடுத்தார். தேவர்கள் மிகவும் மகிழ்ந்து,பெருமானைப் போற்றினர்.
   
இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையும் காட்சி சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.   

சுவாமி அம்ருதகடேசுவரர் என்றும் அம்பிகை, பிரம்மானந்த சுந்தரி என்றும் வழங்கப்படுகிறார்கள்.


10 மலை ஈசுவரன் கோயில்

                
ஸ்தல யாத்திரையாக நாகைக்கு வந்த பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும்,அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார். அதன் பயனாக நீண்ட ஆயுள் பெற்றுப் பின்னர் கைலைநாதனின் கழலடி அடைந்தார்.

இக்கோயிலின் நுழை வாயிலில் இராஜ கோபுரம் இல்லை. சுதை வடிவங்களாக ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள். இருபுறமும் கணபதியும் கந்தனும் காட்சி தருகிறார்கள். மாடக்கோயிலின் கீழே நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. மேலே பதினெட்டுப் படிகள் ஏறிச்சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம். பதினாறு பட்டை லிங்கமாக கைலாசநாதப் பெருமான் தரிசனம் தருகிறார்.  
            

11 காசி விசுவநாதர் கோயில்


                         
             
ஸ்ரீ காயாரோகண சுவாமி ஆலயத்தின் தெற்கு மடவிளாகத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் தர்மம் குன்றி, அதர்மம் மேலோங்கி இருந்தபோது, சிவனருளால் நாகையில் தேவ தீர்த்தம் தோன்றியது. அதன் வடகரையில் உள்ள காசி விசுவநாதரை வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். இங்கு முக்தி மண்டபம் அமைந்துள்ளது. இங்குதான் நாகைக் காரோணப் புராணம் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. இங்குள்ள விஸ்வரூப விநாயகரின் திருவுருவம் தரிசிக்கத்தக்கது.

12 அகஸ்தீசுவரர் கோயில்
        
இக்கோயில் வெளிப்பாளயத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீஅகஸ்தீசுவரசுவாமியை அகத்தியமுனிவர் வழிபட்டுள்ளார்.
              
திருக்கயிலையில் சிவ-பார்வதியரின் திருமணம் நடந்தபோது,  வடதிசை தாழவே, பூமியைச் சமன் செய்யும் பொருட்டு, அகத்திய முனிவரைத் தென்திசைக்கு அனுப்பினார் சிவபெருமான். அதன்படி பொதிகையை நோக்கி வந்த முனிவர் நாகையில் தங்கி, காயாரோகணத்தின் வடக்கே ஓர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து, பூஜித்து வந்தார். அதன் கிழக்கில் ஓர் தீர்த்தமும் ஏற்படுத்தினார். அத்தீர்த்தம்
அகத்திய தீர்த்தம் எனப்படுகிறது. கடலில் மறைந்த வண்ணம் தேவர்களை அசுரர்கள் தாக்கும்போது துன்பப்பட்ட தேவர்கள் அகத்தியரை அணுகினர். அகத்திய முனிவரும் கடல்நீரைப் பருகிவிட்டார். அதனால் வெளிவந்த அசுரர்களைத் தேவர்கள் வென்றனர். இவ்வாறு தர்மத்தை நிலைநிறுத்துகையில், அகத்தியர் தங்கி பூஜித்த ஆலயம் இது என்பர்.            
            .

Saturday, March 30, 2013

புனிதமாக்கும் சரித்திரம்


புனிதவதியாரின் சரித்திரமே புனிதம்தான். சிவாலயங்களில் அறுபத்துமூன்று நாயன்மார்களைப் பிராகாரத்தில் பார்க்கிறோம். ஒரு நிமிஷமாவது அத்திருவுருவங்களில் லயித்து நின்றதுண்டா  என்று நம்மை நாமே கேட்டுப்பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாயன்மார் வரிசையில் ஒருவர் மாத்திரம் அமர்ந்திருப்பார். மற்றவர்கள் எல்லோரும் நின்று கொண்டு இருப்பார்கள். அந்த "ஒருவர்" தான் இப் புனிதவதியாராகிய காரைக்கால் அம்மையார். அம்மாதரசியை நினைத்தாலே புனிதம். இறைவனாலேயே "அம்மை" என்று அழைக்கப்பெறும் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்?

 காரைக்காலில் தருமத்தின் வழிப்படி நின்று, வாய்மை மாறாத பெருவணிகனான தனதத்தன் செய்த தவத்தின் பயனாக அவனது மகளாகத் திருமகள் போன்ற பேரழகுடன்  புனிதவதியார் அவதரித்தார். அந்த அழகை, "அழகின் கொழுந்து" என்று சேக்கிழார் சிறப்பிப்பார். மொழி பயிலும் காலம் முதலே, சிவபக்தியிலும் சிவனடியார் பக்தியிலும் சிறந்து விளங்கினார். நாகையில் நிதிபதி என்பவனது மகனாகிய பரமதத்தன் என்பவனைப் புனிதவதியாருக்கு மணம் செய்வித்தார்கள். குலத்திற்கு "அரும் புதல்வி" எனத் தோன்றிய தங்கள் மகளைப் பிரிய மணம் வராத பெற்றோர், மனமக்களைக் காரைக்காலிலேயே தங்கி இல்லறம் நடத்த விரும்பியதால் , அவ்வண்ணமே புது மணத் தம்பதிகள் இல்லறத்தை நல்லறமாக அங்கேயே நடத்தி வரலாயினர்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிவபெருமானுடைய திருவடிக்கீழ் பக்தி நாளுக்கு நாள்  மேன்மேலும் ஒழிவில்லாமல் பெருகியது.அதுவே பின்னாளில், திருவாலங்காட்டில் எடுத்த பாதத்தின் கீழ் என்றும் இருக்கும் வரத்தைப் பெறக் காரணமாக இருந்தது. ஒருநாள் ,பரமதத்தன், தனக்கு வந்த இரண்டு மாங்கனிகளை  வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அன்று, பசியுடன் வந்த சிவனடியாருக்கு அதில் ஒன்றை அவருக்கு அன்னம் பாலிக்கும் போது இலையில் படைத்தார் புனிதவதியார்.  சிவனடியார் சென்றவுடன் , கணவன் வந்து உண்ணும்போது, மற்றொரு மாங்கனியை இலையில் இட்டார். அது மிகவும் சுவையாக இருந்ததால் மற்றொன்றையும் கேட்டான் கணவன். செய்வதறியாமல் திகைத்த புனிதவதியாரின் கையில், இறைவனது அருளால் ஒரு "அதிமதுர"மாங்கனி வந்து அடைந்தது. அப்பழத்தைக் கணவனுக்கு இட்டபோது, அவன்,    "இது முன்பு நீ இட்ட கனியைக் காட்டிலும் மாறுபட்டது. இதுபோன்ற கனி மூவுலகிலும் கிடைப்பது அரிது. உனக்கு எவ்வாறு கிடைத்தது ? என்று கேட்டான். நடந்ததை மனைவியார் கூறக் கேட்ட வணிகன், "அப்படியானால், இறைவனிடமே கேட்டு இதேபோன்ற மற்றொரு கனியையும் வரவழைத்துக் காட்ட முடியுமா? "என்றான். அப்பொழுது இறைவனை தியானித்த புனிதவதியார், "இப்பொழுது மற்றொரு கனியைத் தேவரீர் அளித்து அருளாவிட்டால்  நான் கூறியது பொய் என்று ஆகி விடும் 'என்றவுடன், இறையருளால் மற்றும் ஓர் கனி அவரது கையில் வந்தடைந்தது. அதனைக் கணவன் கையில் கொடுக்கும் போது அப்பழம் கையிலிருந்து மறைந்தது. வணிகன் இதுகண்டு அதிசயமும் அச்சமும் அடைந்தான்.

கடல் கடந்து சென்று பொருள் ஈட்டி வருவதாகக் கூறி, மனைவியை நீங்கிப் பின்னர் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினம் ஒன்றில் ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு,ஒரு பெண் குழந்தையைப் பெற்று அதற்குப் புனிதவதி என்ற பெயரிட்டு வாழ்ந்து வந்தான். இதைக் கேட்ட புனிதவதியாரின் உறவினர்கள் அவரைப் பரமதத்தனிடம் கொண்டு விட்டார்கள். அவனும் , அவனது மனைவியும்,குழந்தையும் தன்னை வணங்கித் தொழுததால் பதைபதைத்தார் புனிதவதியார்,  வணிகன், தன் சுற்றத்தாரிடம், "எல்லோரும் இவரை வணங்குங்கள். இவர் சாதாரண மானுடப் பெண் அல்ல. நற் பெருந்தெய்வம்  ஆவார்  " என்றான். "இனி இவ்வுடம்பைத் தாங்கி என்ன பயன் என்று எண்ணித் தனக்குப் பேய் வடிவைத் தந்தருளும்படி இறைவனிடம் வேண்டினார். அப் பேய்  உருவம் பெற்ற பின் "அற்புதத் திருவந்தாதி" "இரட்டைமணி மாலை" ஆகியவற்றைப் பாடிப் பின்னர் கயிலாயம் செல்லலுற்றார். தலையால் நடந்து வரும் பேயாரை, அம்பிகைக்கு ஈசன் காட்டி, எலும்பு வடிவில் வருவது, "நம்மைப் பேணும் அம்மை காண் உமையே; மற்றிப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்." என்று அருளினார்.

இறைவனது கட்டளைப்படித் திருவாலங்காட்டைத்  தலையால் நடந்து வந்து அடைந்தபோது பெருமானது ஊர்த்துவ தாண்டவத்தைக் கண்டு வணங்கிப் பதிகம் பாடினார்.   பிறவாமை வரம் பெற்ற பேயார், அண்டம்  உற நிமிர்ந்து ஆடும் ரத்தின சபானாதனின் குஞ்சித பாத நீழலில் என்றும் இருக்கும் வரமும் பெற்றார்.

காரைக்கால் அம்மையார் சரித்திரம் தெரிந்தது தானே , மறுபடியும் எழுதுவானேன் என்று சிலர் கேட்கலாம். 1986 ம் ஆண்டு திருவாலங்காட்டில் காஞ்சி மகா பெரியவரின் கட்டளைப்படி , நவராத்திரியின் போது, வேத - தேவார பாராயணங்கள் நடந்தன. பிறகு,காஞ்சிக்குச் சென்று தரிசனத்திற்காகச் சென்ற போது, எங்களிடம், "யாராவது ஒருவர் காரைக்கால் அம்மையார் சரித்திரம் சொல்லுங்களேன். நான் கேட்கிறேன்" என்றார் காஞ்சிப் பெரியவர். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒருவர் சொல்ல முற்பட்டபோது, "அம்மையாரின் தகப்பனார் பெயர் சொல்லவில்லையே" என்றார்கள். அங்கிருந்தவர்களுக்கு ஞாபகம் வராததால், பெரியவர்களே, "தனதத்தன்" என்று சொன்னது இன்றும் நினைவில் நிற்கிறது. எத்தனை முறை கேட்டாலும் திரும்பத்திரும்பக் கேட்கத் தூண்டும் சரித்திரம் இது. எனவேதான் அதனை இங்கு எழுதும்போதும் புனிதமாக ஆவதாகவே கருதுகிறேன்.

மானுட உடல் வெறும் எலும்பாலும் ,நரம்புகளாலும் ஆகிய கூடாக இருந்தும் அதைப் புற ம் தோல் போர்த்த குப்பாயமாகவே மகான்கள் கருதுவார்கள். அழகே வடிவான புனிதவதியாரும், உடலை உதறிவிட்டுப் பேய் உருவம் வேண்டினார் என்பதைச் சேக்கிழார் பெருமான்,
"... மெய்யில் ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி, எற்பு உடம்பே ஆக , வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய் வடிவம் ஆனார்." என்று பாடுகிறார். இறைவனால் "அம்மையே" என்று அழைக்கப்பெற்ற பெரும் பேற்றைப் பெற்ற பேயார் , பெருமான் அருள் நடனம் ஆடும் போது, கீதம் பாடும் பேற்றையும் பெற்றார். பாத புண்டரீகங்கள் போற்றும் நற்கணத்தினில் ஒன்றானார்.

இன்று பங்குனி சுவாதி நன்னாள். காரைக்கால் அம்மையாரது குருபூசைத் திருநாள். அவரது சரித்திரத்தை சிந்தை செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், உடல் அபிமானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்வது. இப் புழுக்  கூட்டுக்கு அழகு படுத்தியே காலத்தைக் கழிக்கும் நாம், அம்மையாரைப் போல உடலை உதற முடியாது போனாலும் அம்மையார் வேண்டிய வரத்தையாவது பரமேச்வரனிடம் வேண்டலாம் அல்லவா?  இதோ அந்தப் பிரார்த்தனை:

"இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்."

நாமும் இப்பாடலைத் தினமும் ஒருமுறை சொல்லி நம்மைப் புனிதப் படுத்திக் கொள்வோம்.