Wednesday, September 4, 2013

கும்பாபிஷேகக் காட்சிகள்

கும்பாபிஷேகம் என்றவுடன், ஆலய கும்பங்களின்மீது புனித நீர் ஊற்றப்படுவதே நினைவுக்கு வரும்.  அண்மையில் நல்லூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது ஒரு சிவாச்சாரியார் கூறிய விளக்கம் சற்று வித்தியாசமாகச் சிந்திக்க வைத்தது.
அப்பெரியவர் சொன்னார்:  " கும்பாபிஷேகம் என்றால் கும்பத்துக்கு செய்யப்படும் அபிஷேகம் என்பது மட்டும் அர்த்தம் இல்லை. கும்பித்தல் என்றால் சேர்தல் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வைபவத்தின் போது ஆயிரக்கணக்கான அடியார்களின் கைகள் சேர்ந்து தலைமீது கூப்புகின்றன. பல புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் கும்பத்தின்மீதும்  மூர்த்திகளின் மீதும் ஒருசேர அபிஷேகிக்கப்படுகின்றது. மனங்களும் கைகளும் சேர்ந்து கும்பிக்கின்ற  அற்புதமான வைபவம் இது.  அதையே பெருமான் அபிஷேகமாகவும் ஆராதனையாகவும் ஏற்கிறான் .  "

கும்பித்தல் என்பதற்கு இவ்வாறு பல பொருள்கள் இருக்கக்கூடும். அதிலிருந்துதான் கும்பிடுதல் என்ற சொல்லும் வந்திருக்கலாம். இப்படிச் சேர்ந்த பொருள் கும்பி, கும்பம் என்றெல்லாம்  ஆவது இருக்கட்டும். சாக்கடையில் சேர்ந்த மண்ணைக்கூட கும்பி என்பார்கள். அதே நேரத்தில்   " நின் மலரடிக்கே கூவிடுவாய்; கும்பிக்கே இடுவாய்.." என வரும் திருவாசகத் தொடரில் கும்பி என்றால் நரகம் என்று பொருள் காண்கிறது தருமை ஆதீனத் திருவாசக உரை. அனைவரது கும்பிடுதலுக்கும் புகலிடமான  மலரடிக்கே வருக என்று கூவி அருளி அக்கும்பிக்கே இடுவாயாக என்று வேண்டுவதாகவும் பொருள் கொள்ள ஏதுவாகிறது. கும்பித்த அடியேனை நரகத்தில் இடர்ப்பட விடுவாயோ என்ற கேள்வியாகவும் பொருள் காண்பர்.

நல்லூர்  என்னும் சிறந்த சிவ ஸ்தலத்தில்  திருப்பணிகள் நிறைவேறி, மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காளஹஸ்தி போன்ற ஸ்தலங்களை தக்ஷிண கைலாசம் என்பார்கள். ஆனால் தேவாரத்தில் நல்லூரைக் கயிலைக்கு இணையாக வைத்துப் போற்றியிருப்பதை, " வட பால் கயிலையும் தென்பால் நல்லூரும் அவர் வாழ் பதியே" என்று அப்பர் சுவாமிகளின் திருப்பதிகத்தால் அறியலாம். பாண்டவர்களின் தாயான குந்தி தேவிக்காக சுவாமி ஏழு கடல்களையும் வரவழைத்த பெருமையை உடையது. கும்பகோணத்திற்கு முன்பாகவே மாசி மக ஸ்நான விசேஷத்தைப் பெற்றதும் இந்த நல்லூர் தான்.

அகஸ்தியருக்காகக் கல்யாணக் காட்சி காட்டிய கல்யாண சுந்தர மூர்த்தியின் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. மூலவர் ஸ்வயம்பு மூர்த்தி. பின்னால்  சுதை வடிவில் உமா மகேஸ்வரர்கள் காட்சி அளிக்கிறார்கள். கர்பக் கிருகம் மாடக்கோயில் மீது  அமைந்துள்ளது. கோச்செங்கட் சோழ நாயனார் கட்டியது. மூலஸ்தான விமானத்தின் கம்பீரமும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. அதிலுள்ள பெரிய வடிவிலுள்ள தக்ஷிணாமூர்த்தி, நரசிம்ஹர்  ஆகிய மூர்த்திகள் நம்மைப் பெரிதும் கவர்கின்றன. மாடக் கோயில் படிகளை ஏறும்போது முதலில்  கைலாச கணபதியைத்  தரிசிக்கிறோம்.

அருகிலுள்ள திருச்சத்திமுற்றத்தை வழிபட்ட திருநாவுக்கரசர்  வேண்டியபடியே, அவரை இறைவன் நல்லூருக்கு வா என்று அழைத்து, அவரது சிரத்தின் மீது பாத மலர் சூட்டினான். இன்றும் சுவாமி சன்னதியில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு, இறைவனது பாதுகையை சிரத்தில் வைத்துப் பிரசாதம் வழங்குகிறார்கள். கிடைத்தற்கரிய இப் பாக்கியத்தை எல்லோரும் பெற வேண்டும்.
  
வெளிப்பிராகாரத்தில் தனி சன்னதி கொண்டு வேண்டும் வரம் அருளும் காளி தேவியை தரிசித்து வேண்டுதல்களை செலுத்துகிறார்கள்.  மாடக் கோயிலில் கிரிசுந்தரி என்ற பெயருடன்  அம்பாள்  தரிசனம் தருகிறாள்.

சம்பந்தர்,அப்பர்  ஆகியோரது தேவாரத் திருப்பதிகங்களை உடையது இத்தலம். அமர்நீதி நாயனாரது அன்பை சோதிக்க இறைவனே நேரில் எழுந்தருளி, அடியவரின் பக்தியை உலகறிய வைத்தான். நாயனாரது மடம் கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது.

1991 ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, சரியாக 12  ஆண்டுகள் ஆனபிறகு இக்கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது பாராட்டப் பட வேண்டியது. இங்கிருந்து வெளியூர்களில் வேலை நிமித்தமாகக் குடியேறியவர்கள், தங்கள் ஊரில் நடைபெறும் இந்த வைபவத்திற்காகத் தங்களாலான எல்லா உதவிகளையும் செய்ததோடு, நேரில் வந்து கலந்துகொண்டு அருள் பெற்றார்கள். இது மற்ற கிராமங்களிலும் அவசியம் பின்பற்றப் பட  வேண்டிய ஒன்றாகும். எக்காரணம் கொண்டும் தங்களது சொந்த ஊர் கோயில்களைப் புறக்கணிக்காமல் அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் நல்லூர் வாசிகளைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு சிவக்ருபை கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. இதில் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த ஊரைச் சேர்ந்தவர் இல்லாவிடினும் இதன் பெருமைகளை அறிந்த சென்னை அன்பர் ஒருவர் இங்கு ஒரு கட்டிடம் கட்டி அதில் அன்னதானம் செய்தது மிகவும் பாராட்டத் தக்கது. மற்றொரு அன்பர் ,கோயில் மதில்கள் ,சன்னதிகள் ஆகியவற்றை அழகுற வர்ணம் பூசித் தந்துள்ளார். 100  வருஷங்கள் முன்பு கொடிமரத்தை அமைத்துக் கொடுத்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் ,  அந்தக் கொடிமரம் பழுதாகிவிடவே, புதிய மரத்தை நிறுவி, அதற்குச் செப்புத் தகடுகளைப் பொருத்தியுள்ளார்கள் என்பதும் மற்ற ஊர்க்காரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். 

யாகசாலையையும் மிகச் சிறப்பாக அமைத்திருந்தார்கள். சுவாமி, அம்பாள், காளி தேவி ஆகிய மூன்று பிரதான மூர்த்திகளுக்கும் தனித்தனியே ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு ஆறு கால பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனக் கோயில் ஆதலால் மரபு மாறாமல் இவை  நடத்தப் பெற்றன. மகா சந்நிதானமும் யாக சாலைக்கு எழுந்தருளி தரிசனம் செய்தார்கள். வந்திருந்த ஆயிரக்கணக்கான சேவார்த்திகளுக்கும் ஆங்காங்கே அன்ன தானம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சி ஆகும். அதிக பஸ் வசதி இல்லாத கிராமமாக இருந்தபோதிலும் பக்கத்துக் கிராம மக்கள் சாரிசாரியாகக் கால் நடையாகவே வந்து கும்பாபிஷேகத்தைத் தரிசித்தார்கள்.
கயிலை நாயகன் நல்லூரில் நடத்திக்கொண்ட வைபவம் அல்லவா! அவன் விருப்பமாக உறைவது வடக்கில் கயிலை மலையும் தெற்கில் நல்லூரும் என்று அப்பர் பெருமானும் பாடியிருக்கிறார். எனவே கயிலையில் நடந்த கும்பாபிஷேகமாகவே பாவித்து , நிறைந்த மனத்துடன்  அன்பர்கள் அனைவரும் அந்த "ஆனந்தத் தேன் உறையும் பொந்தைப் பரவி " இல்லம் திரும்பினர்.

நல்லூர்  கும்பாபிஷேகம் ஆன சில நாட்களிலேயே மூவலூரில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயிலடிக்கு மேற்கில் சுமார்  2 கி.மீ. தொலைவில் கும்பகோணத்திற்குச்  செல்லும் சாலையின்  அருகாமையில் உள்ளது மூவலூர் மார்கசகாயேசுவர சுவாமி ஆலயம். வழித்துணை நாதர் என்று இத்தலப் பெருமானைத் தமிழில் அழைப்பர். மங்கள நாயகியாகவும், சௌந்தர நாயகியாகவும் அம்பிகை இரு சன்னதிகள் கொண்டு அருட் காட்சி அளிக்கிறாள்.  அப்பர் தேவாரத்தில் இத்தலப் பெயர் குரிப்பிடப்பட்டதால் இது வைப்புத்தலமாக எண்ணப்படுகிறது. சம்பந்தர் இத்தலத்தை தரிசித்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் அப்போது பாடிய பதிகம் தற்போது கிடைக்கவில்லை.

புன்னை மர நீழலில் பிரமன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் மார்கசகாயேச்வரப் பெருமானைப் பூசித்துள்ளனர். எனவே இவ்வூர் மூவரூர் என்று ஆகிப் பிற்காலத்தில் மூவலூர் என்று ஆயிற்று என்பர். நாகர்களில் தக்ஷகனும், வாசுகியும் பூஜித்த தலம். சோழ,பாண்டிய, விஜயநகர அரசர்கள் காலக் கல்வெட்டுக்களை உடையது.

மூவலூர் கும்பாபிஷேகத்திற்காக சுவாமிக்கும் அம்பாள்  இருவருக்குமாக மொத்தம் பதினைந்து குண்டங்களும் பரிவாரங்களுக்கான குண்டங்களும் அமைக்கப்பெற்று, நான்குகால பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. உள்ளூர்வாசிகளும்  பிற அன்பர்களும் காட்டிய ஆர்வம் மகத்தானது. பன்னிரண்டு ஆண்டுகள் ஆனவுடன் கும்பாபிஷேகம் செய்யப்படும் கோயில் இது.

ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வதால் கோயிலை  நன்கு பராமரிக்க ஏதுவாகிறது. ஆலயப்  புனிதமும் காக்கப் படுகிறது. ஏராளமான ஆலயங்கள் ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் செய்யப் படாததால் மரங்கள் முளைத்து, மிகப்பெரிய திருப்பணி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறன. இதைக் கவனத்தில் கொண்டு உரிய காலத்தில் கும்பாபிஷேகம் செய்ய எல்லோரும் முன்வரவேண்டும். இதனால் எல்லோருக்கும் இறைவழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கவும் சாத்தியமாகிறது.  

1 comment:

  1. மிக நல்ல வர்ணணை.சங்கரா டிவி யில் மிக மோசமான வர்ணணையை கேட்டதற்கு இது ஒரு நல்ல பரிசு.

    இதற்கு முன் 1991 ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு முன் 40 களில் நடந்தது. இப்பொழுது நடந்தது 23 வருடங்களுக்கு அப்புறம் என்று இருந்திருக்க வேண்டும்

    ராஜன்

    ReplyDelete