Saturday, March 30, 2013

புனிதமாக்கும் சரித்திரம்


புனிதவதியாரின் சரித்திரமே புனிதம்தான். சிவாலயங்களில் அறுபத்துமூன்று நாயன்மார்களைப் பிராகாரத்தில் பார்க்கிறோம். ஒரு நிமிஷமாவது அத்திருவுருவங்களில் லயித்து நின்றதுண்டா  என்று நம்மை நாமே கேட்டுப்பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாயன்மார் வரிசையில் ஒருவர் மாத்திரம் அமர்ந்திருப்பார். மற்றவர்கள் எல்லோரும் நின்று கொண்டு இருப்பார்கள். அந்த "ஒருவர்" தான் இப் புனிதவதியாராகிய காரைக்கால் அம்மையார். அம்மாதரசியை நினைத்தாலே புனிதம். இறைவனாலேயே "அம்மை" என்று அழைக்கப்பெறும் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்?

 காரைக்காலில் தருமத்தின் வழிப்படி நின்று, வாய்மை மாறாத பெருவணிகனான தனதத்தன் செய்த தவத்தின் பயனாக அவனது மகளாகத் திருமகள் போன்ற பேரழகுடன்  புனிதவதியார் அவதரித்தார். அந்த அழகை, "அழகின் கொழுந்து" என்று சேக்கிழார் சிறப்பிப்பார். மொழி பயிலும் காலம் முதலே, சிவபக்தியிலும் சிவனடியார் பக்தியிலும் சிறந்து விளங்கினார். நாகையில் நிதிபதி என்பவனது மகனாகிய பரமதத்தன் என்பவனைப் புனிதவதியாருக்கு மணம் செய்வித்தார்கள். குலத்திற்கு "அரும் புதல்வி" எனத் தோன்றிய தங்கள் மகளைப் பிரிய மணம் வராத பெற்றோர், மனமக்களைக் காரைக்காலிலேயே தங்கி இல்லறம் நடத்த விரும்பியதால் , அவ்வண்ணமே புது மணத் தம்பதிகள் இல்லறத்தை நல்லறமாக அங்கேயே நடத்தி வரலாயினர்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிவபெருமானுடைய திருவடிக்கீழ் பக்தி நாளுக்கு நாள்  மேன்மேலும் ஒழிவில்லாமல் பெருகியது.அதுவே பின்னாளில், திருவாலங்காட்டில் எடுத்த பாதத்தின் கீழ் என்றும் இருக்கும் வரத்தைப் பெறக் காரணமாக இருந்தது. ஒருநாள் ,பரமதத்தன், தனக்கு வந்த இரண்டு மாங்கனிகளை  வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அன்று, பசியுடன் வந்த சிவனடியாருக்கு அதில் ஒன்றை அவருக்கு அன்னம் பாலிக்கும் போது இலையில் படைத்தார் புனிதவதியார்.  சிவனடியார் சென்றவுடன் , கணவன் வந்து உண்ணும்போது, மற்றொரு மாங்கனியை இலையில் இட்டார். அது மிகவும் சுவையாக இருந்ததால் மற்றொன்றையும் கேட்டான் கணவன். செய்வதறியாமல் திகைத்த புனிதவதியாரின் கையில், இறைவனது அருளால் ஒரு "அதிமதுர"மாங்கனி வந்து அடைந்தது. அப்பழத்தைக் கணவனுக்கு இட்டபோது, அவன்,    "இது முன்பு நீ இட்ட கனியைக் காட்டிலும் மாறுபட்டது. இதுபோன்ற கனி மூவுலகிலும் கிடைப்பது அரிது. உனக்கு எவ்வாறு கிடைத்தது ? என்று கேட்டான். நடந்ததை மனைவியார் கூறக் கேட்ட வணிகன், "அப்படியானால், இறைவனிடமே கேட்டு இதேபோன்ற மற்றொரு கனியையும் வரவழைத்துக் காட்ட முடியுமா? "என்றான். அப்பொழுது இறைவனை தியானித்த புனிதவதியார், "இப்பொழுது மற்றொரு கனியைத் தேவரீர் அளித்து அருளாவிட்டால்  நான் கூறியது பொய் என்று ஆகி விடும் 'என்றவுடன், இறையருளால் மற்றும் ஓர் கனி அவரது கையில் வந்தடைந்தது. அதனைக் கணவன் கையில் கொடுக்கும் போது அப்பழம் கையிலிருந்து மறைந்தது. வணிகன் இதுகண்டு அதிசயமும் அச்சமும் அடைந்தான்.

கடல் கடந்து சென்று பொருள் ஈட்டி வருவதாகக் கூறி, மனைவியை நீங்கிப் பின்னர் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினம் ஒன்றில் ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு,ஒரு பெண் குழந்தையைப் பெற்று அதற்குப் புனிதவதி என்ற பெயரிட்டு வாழ்ந்து வந்தான். இதைக் கேட்ட புனிதவதியாரின் உறவினர்கள் அவரைப் பரமதத்தனிடம் கொண்டு விட்டார்கள். அவனும் , அவனது மனைவியும்,குழந்தையும் தன்னை வணங்கித் தொழுததால் பதைபதைத்தார் புனிதவதியார்,  வணிகன், தன் சுற்றத்தாரிடம், "எல்லோரும் இவரை வணங்குங்கள். இவர் சாதாரண மானுடப் பெண் அல்ல. நற் பெருந்தெய்வம்  ஆவார்  " என்றான். "இனி இவ்வுடம்பைத் தாங்கி என்ன பயன் என்று எண்ணித் தனக்குப் பேய் வடிவைத் தந்தருளும்படி இறைவனிடம் வேண்டினார். அப் பேய்  உருவம் பெற்ற பின் "அற்புதத் திருவந்தாதி" "இரட்டைமணி மாலை" ஆகியவற்றைப் பாடிப் பின்னர் கயிலாயம் செல்லலுற்றார். தலையால் நடந்து வரும் பேயாரை, அம்பிகைக்கு ஈசன் காட்டி, எலும்பு வடிவில் வருவது, "நம்மைப் பேணும் அம்மை காண் உமையே; மற்றிப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்." என்று அருளினார்.

இறைவனது கட்டளைப்படித் திருவாலங்காட்டைத்  தலையால் நடந்து வந்து அடைந்தபோது பெருமானது ஊர்த்துவ தாண்டவத்தைக் கண்டு வணங்கிப் பதிகம் பாடினார்.   பிறவாமை வரம் பெற்ற பேயார், அண்டம்  உற நிமிர்ந்து ஆடும் ரத்தின சபானாதனின் குஞ்சித பாத நீழலில் என்றும் இருக்கும் வரமும் பெற்றார்.

காரைக்கால் அம்மையார் சரித்திரம் தெரிந்தது தானே , மறுபடியும் எழுதுவானேன் என்று சிலர் கேட்கலாம். 1986 ம் ஆண்டு திருவாலங்காட்டில் காஞ்சி மகா பெரியவரின் கட்டளைப்படி , நவராத்திரியின் போது, வேத - தேவார பாராயணங்கள் நடந்தன. பிறகு,காஞ்சிக்குச் சென்று தரிசனத்திற்காகச் சென்ற போது, எங்களிடம், "யாராவது ஒருவர் காரைக்கால் அம்மையார் சரித்திரம் சொல்லுங்களேன். நான் கேட்கிறேன்" என்றார் காஞ்சிப் பெரியவர். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒருவர் சொல்ல முற்பட்டபோது, "அம்மையாரின் தகப்பனார் பெயர் சொல்லவில்லையே" என்றார்கள். அங்கிருந்தவர்களுக்கு ஞாபகம் வராததால், பெரியவர்களே, "தனதத்தன்" என்று சொன்னது இன்றும் நினைவில் நிற்கிறது. எத்தனை முறை கேட்டாலும் திரும்பத்திரும்பக் கேட்கத் தூண்டும் சரித்திரம் இது. எனவேதான் அதனை இங்கு எழுதும்போதும் புனிதமாக ஆவதாகவே கருதுகிறேன்.

மானுட உடல் வெறும் எலும்பாலும் ,நரம்புகளாலும் ஆகிய கூடாக இருந்தும் அதைப் புற ம் தோல் போர்த்த குப்பாயமாகவே மகான்கள் கருதுவார்கள். அழகே வடிவான புனிதவதியாரும், உடலை உதறிவிட்டுப் பேய் உருவம் வேண்டினார் என்பதைச் சேக்கிழார் பெருமான்,
"... மெய்யில் ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி, எற்பு உடம்பே ஆக , வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய் வடிவம் ஆனார்." என்று பாடுகிறார். இறைவனால் "அம்மையே" என்று அழைக்கப்பெற்ற பெரும் பேற்றைப் பெற்ற பேயார் , பெருமான் அருள் நடனம் ஆடும் போது, கீதம் பாடும் பேற்றையும் பெற்றார். பாத புண்டரீகங்கள் போற்றும் நற்கணத்தினில் ஒன்றானார்.

இன்று பங்குனி சுவாதி நன்னாள். காரைக்கால் அம்மையாரது குருபூசைத் திருநாள். அவரது சரித்திரத்தை சிந்தை செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், உடல் அபிமானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்வது. இப் புழுக்  கூட்டுக்கு அழகு படுத்தியே காலத்தைக் கழிக்கும் நாம், அம்மையாரைப் போல உடலை உதற முடியாது போனாலும் அம்மையார் வேண்டிய வரத்தையாவது பரமேச்வரனிடம் வேண்டலாம் அல்லவா?  இதோ அந்தப் பிரார்த்தனை:

"இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்."

நாமும் இப்பாடலைத் தினமும் ஒருமுறை சொல்லி நம்மைப் புனிதப் படுத்திக் கொள்வோம்.

1 comment:

  1. If you can include photographs of the beautiful and vast tank, the magnificent raja gopuram, and the lord Nataraja in Oorthava thandavam and some other beautiful pictures of this temple and this village; seeing this holy place and the surroundings will itself purify a Bhaktha.
    thanks
    vidyasagar

    ReplyDelete