Wednesday, September 25, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் -இராமேசுவரம்-II

          

                                           சிவபாதசேகரன் கந்தமாதன பர்வதத்திலிருந்து தொலைவில் தெரிவது இராமநாத சுவாமி ஆலயம் 
தீர்த்தச் சிறப்பு: ஒரே கோயிலுக்குள் பல தீர்த்தங்கள் அமைந்துள்ள தனிச் சிறப்பு , இராமநாத சுவாமி ஆலயத்திற்கு மட்டுமே உண்டு. யாத்திரை செய்ய வருவோர் கோயிலுக்கு உள்ளேயும் வெளியிலும் அதன் எல்லையிலும் உள்ள தீர்த்தங்களையும்,அவற்றின் சிறப்புக்களையும் அறிவது மிகுந்த பயன் தரும் என்பதால் இங்கு சற்று விரிவாகவே தருகிறோம்.

முதலாவதாகத் திருப்புல்லாணியில் உள்ள சக்கர தீர்த்தம் எனப்படும் அமிர்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். இதற்குத் தர்ம புஷ்கரணி என்ற பெயரும் உண்டு. ஒரு சமயம் தர்மதேவதை, மகாதேவனைக் குறித்துத் தவம் செய்யும்போது இந்த தீர்த்தத்தை உண்டாக்கியதால் இதற்குத் தர்ம புஷ்கரணி என்று பெயர் ஏற்பட்டது. தர்மதேவதையின் விருப்பப்படி அதனை சிவபெருமான் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். இவ்வரலாற்றை இத்தீர்த்தக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த காலவ மகரிஷியிடம் மஹா விஷ்ணு கூறினார். காவலரின் தவத்தை ஒரு அரக்கன் அழிக்க முன்வந்தபோது முனிவர் விஷ்ணுவைத் தியானிக்கவே நாராயணனும் அவ்வரக்கனைச்  சக்கராயுதத்தால் அழித்து,முனிவரைக் காப்பாற்றினார்.முற்பிறவியில் வசிஷ்டரது சாபத்தால் அரக்க வடிவம் பெற்று சக்கரத்தால் கொல்லப்பெற்று சாப நிவர்த்தி பெற்ற அரக்கன்,  கந்தர்வ வடிவத்துடன் சுவர்க்கம் அடைந்தான். ஆகவே இத்தீர்த்தம் சக்கர தீர்த்தம் எனப்பட்டது. இதில் நீராடினால் பித்ருக்கள் திருப்தி அடைவார்கள். புத்திரப்பேறும் கிடைக்கும். 

தேவி பட்டினத்திற்கு மேற்கே உள்ள புல்லக்கிராமத்தில் உள்ள க்ஷீர குண்டம் மிக்க பெருமை வாய்ந்தது. முத்கல ரிஷியின் யாகத்தினால் மகிழ்ந்த விஷ்ணுவானவர், அம்முனிவருக்குக் காட்சி அளிக்கையில், முத்கலர் ஒரு வரம் கேட்டார். காலையிலும் மாலையிலும் பகவானைத் திருப்திப் படுத்த பால் கிடைக்குமாறு  அருள வேண்டினார். பகவானும் விச்வகர்மாவை அங்கு ஓர் குளம் அமைக்கச் செய்தார். காமதேனுவை அக்குளத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் பால் சொரியச் செய்தருளினார். இதன்மூலம் முனிவரும் தினசரி பால் அளித்துப் பகவானைத் திருப்தி செய்தார். நிறைவாக முக்தியும் பெற்றார். இதனால் இக்குளத்திற்கு க்ஷீர குண்டம் என்ற பெயர் வந்தது. இதில் ஸ்நானம் செய்தால் கொடிய பாவங்கள் நீங்கி முக்தி பெறுவார்கள். அசுவமேதம் செய்த பலனும் கிடைக்கும். காச்யபரின் மனைவியர்களான வினதை,கத்ரு ஆகிய இருவரும்  விவாதம் செய்தபோது கத்ரு வஞ்சித்ததால் வினதைக்கு அடிமை ஆனாள். வினதையின் புத்திரனான கருடன் அமிர்த கலசம் கொண்டுவந்து தனது  தாயாருடன்  அதில் ஸ்நானம் செய்து இருவரும் பவித்திரர்கள் ஆனபின்னர்,, தவறிழைத்த கத்ருவும் காச்யபரின் சொற்படி க்ஷீர குண்டத்தில் நீராடியதால் பாப விமோசனம் பெற்றாள்.

சக்கர தீர்த்தத்தின் தென்புறம் வேதாள தீர்த்தம் உள்ளது. சுதர்சனன், சுகர்ணன் என்ற அந்தண சகோதரர்கள் காலவமுனிவரால் சபிக்கப்பெற்றனர். மூத்தவன் வேதாளமாகியும், இளையவன் மீண்டும் மானுடப்பிறப்பை எய்தியும் மிகவும் துன்புற்றார்கள். பின்னர் காவலரின் வாக்குப்படி இத் தீர்த்தத்தில்  நீராடி,பழைய உருவம் பெற்றனர். வேதாளத்தன்மை நீங்கியதால்அதற்கு  வேதாளதீர்த்தம் எனப்பெயர் வந்தது. இங்கு பித்ருக்களுக்குப் பிண்டதானம் செய்வது சிறப்பாகும்.

கந்தமாதன பர்வதம் 
பாப விநாச தீர்த்தம் : கந்தமாதன பர்வதத்தில் கௌரி ஸமேதனாகப் பரமேச்வரன் மற்ற தேவ கணங்களுடன் நிரந்தரமாக இருந்தருளுகிறார். இதன் காற்றுப் பட்டாலும் பாபங்கள் நசித்துப் போகும். இதனருகிலுள்ள சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து விட்டுக் கந்தமாதனத்தில் பிண்டம் போட்டால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைவார்கள். நரகில் வசித்துக் கொண்டிருந்த பித்ருக்கள் சுவர்க்கம் செல்வார்கள். இதன் மீதுள்ள பல தீர்த்தங்களுள் பாப நாச தீர்த்தமும் ஒன்றாகும். பிரமராக்ஷசால் பீடிக்கப் பட்ட ஒரு அந்தணன் , அகஸ்தியரின் அறிவுரைப்படி பாபநாச தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நீராடி பிரமராக்ஷஸ் நீங்கப்பெற்று இறுதியில் முக்தியும் அடைந்தான்.

கந்த மாதன பர்வத உச்சி 
ஸீதா தீர்த்தம்: கந்தமாதனத்தில் உள்ள இந்த தீர்த்தத்தில் எல்லா தீர்த்தங்களும் தங்களைப் பரிசுத்தமாக்கிகொள்ள வேண்டி இதில் தங்குகின்றபடியால் இதன் பெருமையை அறியலாம். அக்னிப் பிரவேசம் செய்த கற்புக்கரசியான ஸீதா தேவியால் இது உண்டாக்கப்பட்டது. இதில் நீராடினால் பாபம்,துக்கம், தரித்திரம் நீங்கப்பெறுவர். இதில் நீராடியதால் இந்திரனைப் பிடித்த பிரம ஹத்தி தோஷம் நீங்கியது. 
மங்கள தீர்த்தம்: ஸீதா தீர்த்தத்தில் நீராடியபின் மங்கள தீர்த்த ஸ்நானம்  வேண்டும். எல்லா ஐச்வர்யங்களையும் தரவல்ல புண்ணிய தீர்த்தம் இது. மனோஜவன் என்ற சந்திர வம்சத்து அரசன் கெளட தேசத்து அரசனால் தோற்கடிக்கப்பட்டு , நாடு, செல்வம் எல்லாவற்றையும் இழந்து,காட்டில் வசிக்க நேரிட்டபோது அவனுக்கு இரங்கிய பராசர முனிவர், மங்கள தீர்த்த மகிமையை எடுத்துரைத்து,அதில் நீராடினால் இழந்ததெல்லாம் பெறுவாய் என்று அருளினார். அதன்படி மன்னன் தன் மனைவி மக்களோடு இத்தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்ததன் பலனாக, இழந்த நாட்டையும், செல்வத்தையும் பெற்று,நிறைவாக மகனை அரசனாக்கிவிட்டு, மனைவியுடன் சிவலோகம் சென்றான் . இதில் உலக நன்மைக்காக,     ஸீதாலக்ஷ்மியுடன் இராமபிரான் தங்கியிருக்கிறார்.

அமிர்த வாபி: இராமர் தனது வானர சேனையுடன் கடலைத்தாண்டும் உபாயம் பற்றி ஆலோசனை செய்கையில் கடல் அலைகளின் இரைச்சலால்  ஒருவரோடொருவர் பேசுவது கேட்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இராமர்,புருவங்களை நெரித்ததும், சமுத்திர ராஜன் அடங்கிப்போனான். பிறகு ஏகாந்தமாக யோசனை நடைபெற்றதால் இவ்விடம் ஏகாந்த ராமநாதம் என்று வழங்கப்படுகிறது. இந்நிகழ்வால் அங்கு அலைகளின் பேரிரைச்சல் இல்லை என்று சொல்லப்படுகிறது.  

பிரம்ம குண்டம்: இது கந்தமாதனத்தில் உள்ளது. அக்கினி மலையாகத் தோன்றிய லிங்கோத்பவமூர்த்தியின் அடிமுடி தேடிக் காண முடியாத நிலையில், தான் கண்டதாகப் பொய் உரைத்த பிரமனுக்குக் கோயில் இல்லாமல் போகவும், உண்மையை உரைத்த  விஷ்ணுவுக்கு ஆலய வழிபாடு நிகழும் என்றும்  சிவபெருமான் அருளினார். தன் பிழைக்கு வருந்திய பிரமன், கந்தமாதனத்தில் குண்டம் அமைத்து யாகம் செய்தான். அதனால் மகிழ்ந்த மகாதேவர், வேத கர்மாக்களில் பிரமனுக்கு பூஜை நடக்கும் என்றும், விக்ரஹ ஆராதனை மட்டும் நடைபெறாது என்றும் , இந்த யாக குண்டம் செய்த இடம் பிரம குண்டம் என்று வழங்கப்படும் என்றும்,இதன் விபூதியைத் தரித்தால் பஞ்ச மாபாதகங்களும் விலகும் என்றும், முக்தி கிட்டும் என்றும் அருளினார். வியாச பகவானும், இதன் பெருமையைக் கூறும்போது, “ இதன் விபூதியைத்தந்தால் பூதானம் செய்த பலன் உண்டு. கைகளைத் தூக்கி சத்தியமாக மும்முறை உரைக்கிறேன் “ என்று கூறியுள்ளார்.  

ஹனுமத் குண்டம்: அனுமனே இதனை உண்டாக்கியதாகப் புராணம் கூறும். தர்மசகன் என்ற கேகய தேச அரசனுக்கு நூறு மனைவிகள் இருந்தும் மூத்த மனைவி மூலம் ஒரு மகனே பிறந்திருந்தான். அந்தணர்கள் அறிவுறுத்தியதன் பேரில் ஹனுமத் குண்டக் கரையில் அசுவமேத யாகம் செய்ததால் மற்ற மனைவிகளுக்கும் புத்திர பாக்கியம் கிட்டியது.  

அகஸ்திய தீர்த்தம் :இமயத்தில் சிவ-பார்வதி கல்யாணம் நடந்தபோது பூமியை சமன் செய்யத் தென்திசை நோக்கி அகஸ்தியர் வந்தபோது இங்குத் தங்கி ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தினார். இதில் நீராடுபவர்கள் கோரிய பலன்கள் அனைத்தும் பெறுவார்கள் . தீர்க்கதபஸ் முனிவரது புத்திரனான கக்ஷீவான் தனது குருவான உதங்க ரிஷியிடம் கல்வி கற்று, அவர் சொற்படி அகஸ்திய தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்து மூன்று ஆண்டுகள் ஆனபின்னர் அங்கு எழுந்த நான்கு தந்தம் கொண்ட யானையில் ஏறி ஸ்வதயன் என்ற அரசனது மகளான மனோரமையை அத்தீர்த்தக் கரையில் மணம் செய்து கொண்டான்.இந்த சரித்திரம் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறுவர்.

கந்தமாதனத்தில் உள்ள மற்ற தீர்த்தங்களுள் சூரியனுக்குப் பொற்கைகளை அளித்த சக்கர தீர்த்தமும், கால பைரவரின் தோஷத்தை நீக்கிய சிவ தீர்த்தமும், குறிப்பிடத்தக்கவை.
இராம தீர்த்தம்: அச்வத்தாமன் இறந்தான் என்று பாரதப்போரில் தருமபுத்திரனானவர் துரோணரிடம் பொய் சொன்ன பாபம் போக வியாசரின் அறிவுரைப்படி ராம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஒரு மாதம் தங்கி இருந்து,தானங்கள் செய்து தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார் 

லக்ஷ்மண தீர்த்தம் 
லக்ஷ்மண தீர்த்தம்: லக்ஷ்மணர் இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கி அதன் கரையில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டுள்ளார். தன்னை மதியாத சூத முனிவரைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை பலராமர் இதில் ஸ்நானம் செய்ததால் நீக்கிக் கொண்டார் எனப் புராணம் கூறுகிறது.

லக்ஷ்மணன் பிரதிஷ்டை செய்த சிவாலயம் 


பைரவ,கபி தீர்த்தங்கள்  பாம்பனுக்கு அருகிலும், தங்கச்சிமடத்தில் அமிருதவாபிக்கருகில் இரண விமோசன தீர்த்தம், ஸீதையின் தாகத்தைத் தீர்க்க இராமன் வில்லை ஊன்றி உண்டாக்கிய வில்லூருணி தீர்த்தம், ஆகியன உள்ளன. சுக்ரீவ,அங்கத,சாம்பவ,தரும,பீம,அர்ஜுன ,நகுல, சகாதேவ,திரௌபதி தீர்த்தங்கள் கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில் உள்ளன. பரமசிவனால் உண்டாக்கப்பட்டதும் சுகப் பிரம்ம ரிஷி ஸ்நானம் செய்து ஞானம் பெற்றதுமான ஜடா தீர்த்தம் தனுஷ்கோடி செல்லும் பாதையில் கோதண்டராமர் கோயிலுக்கு அருகில் இருக்கிறது.
இவற்றைத் தவிர தேவ, விபீஷன,கஜ,சரப,குமுத ,ஹர ,பனச தீர்த்தங்கள் இருந்ததாகப் புராணம் கூறுகிறது. அவை இப்போது காணப்படவில்லை.

அக்னி தீர்த்தம்: 

அக்னிதீர்த்தம் 
கீழைக் கோபுரத்திற்கு நேர் எதிரில் உள்ள கடலே அக்னி தீர்த்தம் எனப்படுவதாகும்.இராவண சம்ஹாரம் ஆனபிறகு, ஸீதா தேவியை ஏற்றுக்கொள்ளும் முன்பு பிராட்டியின் சுத்திக்காக அக்னி பகவானை ஸமுத்திரத்திலிருந்து அழைத்தபடியால் இந்த இடம் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பாவங்கள் பல செய்த துஷ்புண்ணியன் என்பவன் ரிஷி சாபத்தால் பிசாசாக ஆகித் திரிந்தபோது ,அகஸ்தியர் அவனுக்கு இரங்கித் தன் சிஷ்யனான சுதீக்ஷ்ணரை மூன்று நாட்கள் அக்னி தீர்த்த ஸ்நானம் செய்யச் சொல்லி அப்பிசாச வடிவம் நீங்குமாறு அருளினார். அதன் பலனாக பிசாசு வடிவம் நீங்கித் தேவ வடிவம் பெற்றான்.

தனுஷ்கோடி தீர்த்தம்: தனுஷ்கோடியைப் பார்த்தாலே முக்தி நிச்சயம் என்கிறது புராணம். இராவணனை வென்று விபீஷணனுக்கு முடி சூட்டி விட்டுக் கந்தமாதனத்தை மீண்டும் ஸீதா லக்ஷ்மணர்களுடன் இராமர் வந்து அடைந்தபோது, விபீஷணன் அவரை வணங்கி, “ தாங்கள் கடலில் கட்டிய இந்த அணையின் மூலம் பலசாலிகளான மன்னர்கள் இலங்கைக்கு வந்து என்னையும் என் சந்ததியினரையும் எதிர்ப்பார்கள். ஆகவே தங்களது வில்லின் நுனியால் (தனுஷ்  கோடியால்) இந்த அணையைத் தகர்த்து விடுங்கள்” என்று விண்ணப்பித்தான். அதன்படி அணையானது இராபிரானது வில் நுனியால்  தகர்க்கப்பட்ட காரணத்தால் இவ்விடம் தனுஷ்கோடி என்று வழங்கலாயிற்று.   
                                                       தீர்த்த மகிமைகள் தொடரும் 

No comments:

Post a Comment