Tuesday, September 24, 2019



               ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் - இராமேசுவரம் -I

                                           சிவபாதசேகரன் 

கிழக்கு இராஜ கோபுரம்
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போய்அற
வேவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.

              -    திருஞானசம்பந்தர் தேவாரம்

தலத்தின் இருப்பிடம்:

சாலைப்பாலத்திலிருந்து இரயில் பாலமும் கடலும்  
பன்னிரு ஜ்யோதிர்லிங்கத் தலங்களுள் இராமேசுவரம் ஒன்று மட்டுமே  தமிழகத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 160 கி.மீ. தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து சுமார் சுமார் 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஒரு தீவு இது. கடலைக் கடந்து செல்ல இருப்புப் பாதையும்,சாலை மேம்பாலமும் உள்ளன. வலம்புரிச் சங்கின் வடிவில் இத்தீவு உள்ளது.

தலச் சிறப்பு:
பழங்காலந்தொட்டே வடக்கே காசியும் தெற்கே இராமேசுவரமும் புனித யாத்திரைகள் செய்யப்படும் தலங்களாக விளங்குபவை. ஸனாதன தர்மமாகிய இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இவ்விரண்டு      தலங்களையும் ஆயுளில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும் என்று புராணங்களையும் இதிகாசங்களையும் அறிந்த பெரியோர்கள் கூறுகின்றனர். தர்ப சயனம், தேவி பட்டினம் முதலாகத் தனுஷ்கோடி வரையில் உள்ள பகுதியை சேது ஸ்தலம் என்றும் இராம சேது என்றும் கூறுவார்கள். இங்கு கந்தமாதன பர்வதம் இருப்பதால், இங்கு செய்யப்படும் மஹா சங்கல்பத்தில், “ உபய ஸாகரயோர் மத்யே கந்தமாதன பர்வதே “ என்று சொல்வது வழக்கில் உள்ளது.

பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த மஹா புராணத்தில்,     ஸனத்குமார  ஸம்ஹிதையில் ஐம்பது அத்தியாயங்களில் சேது மகாத்மியம் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதில் ஐம்பத்திரண்டாவது அத்தியாயத்தில் இத்தலத்தின் பெருமையை விளக்கும் நான்கு  மந்திரங்கள் ரிக்வேத ஸம்ஹிதையில் ஒன்றும், யஜூர்வேத தைத்ரீய ஸம்ஹிதையில் மூன்றுமாகக் காணப்படுகின்றன.
இராமேசுவரத்தில் செய்யப்படும் ஜபம்,ஹோமம், தவம், தானம் ஆகியவை காசியில் பத்து மாதங்கள் தங்கிய பலன்களைக் காட்டிலும், அதிக பலன்களைத் தர வல்லனவாகும். 

தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து ராமநாத சுவாமியை வழிபட்டால், சிதம்பரத்தில் பத்து மாதங்கள் தங்கிய பலனை அளிக்கும். கும்பகோணம்,மாயூரம்,திருவிடைமருதூர், மதுரை, திருவெண்காடு,ஸ்ரீரங்கம்,விருத்தாசலம்,திருவாரூர்,சீர்காழி,காளஹஸ்தி திருவண்ணாமலை,வைத்தீசுவரன் கோயில்,திருப்பதி,வேதாரண்யம்,காஞ்சி, ஸ்ரீ சைலம், நைமிசாரண்யம் ஆகிய ஸ்தலங்களில் ஓராண்டு தங்கிய பலனை தனுஷ்கோடி தீர்த்த ஸ்நானம் அளிக்க வல்லது.
சாதாரணமாக ஸமுத்திரத்தில் எல்லா நாட்களும் நீராடுவது இல்லை. குறிப்பிட்ட நாட்கள்(திதி,வார,நக்ஷத்திர நியமங்களை ஒட்டி) மட்டுமே நீராட வேண்டும். ஆனால், சேது, கோகர்ணம், அனந்த சயனம்,புருஷோத்தமம் ஆகிய நான்கு ஸ்தலங்களில் எப்பொழுதும் ஸ்நானம் செய்யலாம். சேதுவில் அர்த்தோதய காலத்திலும்,மஹோதய காலத்திலும் ஸ்நானம் செய்தால் மனித குலம் முழுவதும் நன்மை பெறும்.

சேது ராமேசுவர யாத்திரை : 
முதலாவதாக இராமநாதபுரத்திற்கு வடக்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள உப்பூர் என்ற தலத்திலுள்ள வெய்யில் உகந்த விநாயகரை வழிபட்டு விட்டு யாத்திரையைத் தொடங்க வேண்டும். பிறகு அங்கிருந்து தெற்கில் தேவி பட்டணம் சென்று ராம பிரான் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படும் நவபாஷாணங்களைத் தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் நேராகத் தனுஷ்கோடிக்குச் சென்று சேதுவில் நீராட வேண்டும். அங்கிருந்து இராமேசுவரம் சென்று, எல்லா தீர்த்தங்களிலும் நீராடி விட்டு இராமநாதரையும் பர்வதவர்த்தனியையும் தரிசித்து விட்டு, கங்கையிலிருந்து கொண்டுவந்த நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.பிறகு  இராமநாதபுரம் வழியாக திருப்புல்லாணிக்குச் சென்று வழிபட வேண்டும். மீண்டும் இராமநாதபுரத்திற்கு வந்து ஆதி சேதுபதி எனப்படும் குகனுக்கு இராமர் பட்டம் கட்டியதைக் குறிக்கும்கல்லினை இராமலிங்க விலாச அரண்மனையில் பார்த்து விட்டு , திரும்பும் வழியில் உத்தரகோச மங்கை, தீர்த்தாடனம், வெற்றியூர்,திருவாடானை ஆகிய புண்ணிய தலங்களையும் தரிசிக்கலாம்.

இராமலிங்கப் பிரதிஷ்டை: 

இலங்கை மன்னன் இராவணன் சீதா தேவியைக் கவர்ந்து சென்றதை ஜடாயுவின் மூலமாக அறிந்த இராமபிரான், பிராட்டியை அரக்கன் அசோக வனத்தில் சிறை வைத்திருப்பதை அனுமன் மூலம் அறிந்து, வானர சேனையுடன் இலங்கைக்குச் சென்று இராவணனை வீழ்த்திவிட்டுத் தேவியை மீட்டுவர ஆயத்தமானான். சேதுமூலம் என்ற தர்ப்ப சயனத்தில் (திருப்புல்லாணியில்) தர்பைப் படுக்கையில் படுத்தவாறு தசரத மைந்தன் தங்கியிருந்தான்.

நளன் முதலிய வானரங்கள் கடலில் அணை கட்டினார்கள். அதன் வழியாக இராம லக்ஷ்மணர்கள் வானர சேனையுடன் இலங்கை சென்று இராவணனது சேனையுடன் போரிட்டனர்.இராம பாணத்தால் இராவணன் வதம் செய்யப்பட்டான். ஜனக புத்திரியான ஸீதா பிராட்டி சிறை மீட்கப்பட்டாள். அயோத்திக்குத் திரும்பும் வழியில் ஸீதா தேவியுடன் இராமன் கந்தமாதன பர்வதத்தில் தங்கிய பொது, இராவணனைக் கொன்ற பாவம் தீருவதற்கு சிவ பூஜை செய்ய வேண்டும் என்று முனிவர்கள் இராமனிடம் அறிவுறுத்தினார்கள். அதன்படி, இராமனும் அனுமனைக் கயிலாயமலைக்குச்  சென்று சிவலிங்கம் கொண்டுவருமாறு பணித்தார். கட்டளையை ஏற்று வான்வழியே சென்ற மாருதியானவர் திரும்பிவரக் கால தாமதம் ஆயிற்று. பிரதிஷ்டை செய்ய வேண்டிய சுப வேளை வந்துவிட்டபடியால், ஜானகி தேவி தனது திருக்கரங்களாலே மணலால் ஒரு சிவலிங்கம் பிடித்துத் தர, அதனையே இராம பிரான் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.

தாமதமாகத் திரும்பிய வாயு மைந்தன், கோபத்துடன் அந்த இலிங்கத்தைத் தனது வாலால் இழுக்கும்போது வால் அறுபட்டு இரத்தம் சிந்தியது. அனுமனை சமாதானம் செய்த இராமன், மாருதியால் கொண்டுவரப்பட்ட இலிங்கத்தை, இராமநாதருக்கு வடக்கில் பிரதிஷ்டை செய்து, பூஜித்தார். அம்மூர்த்தியே விசுவநாதர் என்று வழங்கப்படுகிறது. பூஜா காலங்களில் விசுவநாதருக்குப் பூஜை நடந்த பிறகே, இராமநாத சுவாமியின் பூஜை நடைபெறுகிறது. 
               
ஆலய அமைப்பு: 

வடக்குக் கோபுரம் 
இராமேசுவரம் இரயிலடியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலயம். முதலில் தென்படுவது மேற்குக் கோபுரம். ஆலயத்தைச் சுற்றி நாற்புறமும் தேரோடும் வீதிகள் உள்ளன. நாற்புறமும் வாயில்கள் அமைந்துள்ளன. கிழக்கு வாயிலில் சுவாமி சன்னதிக்கும் அதன் வலப்புறம் அம்பாள் சன்னதிக்கும் இரு வாயில்கள் உள்ளன. சுவாமி சன்னதியின் ராஜ கோபுரம் 126 அடியும், மேற்குக் கோபுரம் 78 அடியும் உயரமுடையவை. கிழக்கு வாயில் வழியே நுழைந்தவுடன் நமக்கு வலப்புறம் தென் திசையை நோக்கியவாறு சிவந்த திருமேனியுடன் ஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார். 

கொடிமரத்தருகே சுதையாலான பெரிய நந்தி இருக்கக் காண்கிறோம். அதன் இருபுறமும் மதுரை நாயக்க மன்னர்களான விசுவநாத நாயக்கர், கிருஷ்ணம்ம நாயக்கர் ஆகியோரது வடிவங்களைக் காண்கிறோம். நுழைவாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. நேராகச் சென்று முதல் பிராகாரத்தை அடைகிறோம்.

முதல் பிராகாரத்தின் தென் கிழக்கே உஷா –பிரத்யுஷா ஸமேத சூரிய பகவானையும் ஸஹஸ்ர லிங்க மூர்த்தியையும் ,நால்வர்,அறுபத்து மூன்று நாயன்மார்கள் தரிசனத்துடன் மேற்குப் பிராகாரத்தில் வஜ்ரேசுவரர், மனோன்மணி, சங்கரநாராயணர், முருகன், அர்தநாரீசுவரர், கங்காள மூர்த்தி, சந்திரசேகரர் ஆகியோரையும், வடக்கில் ஏகாதச ருத்ர லிங்கங்கள், விபீஷணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜ்யோதிர்(ஸ்படிக) லிங்கம், நடராஜர்,ஆகிய மூர்த்திகளையும், கிழக்கே வடபுறத்தில் கிருத்திகா-ரோகிணி சமேத சந்திர பகவானையும் தரிசித்துவிட்டு இராமநாத சுவாமி சன்னதியை அடைகிறோம்.

சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியது. அவருக்கு வடபுறம் உள்ளதும் அனுமனால் கொண்டுவரப்பெற்றதுமான  காசி விசுவநாதரது  சன்னதியும் கிழக்கு நோக்கியது. இங்குள்ள முன்மண்டபத்தில் ஸீதா லக்ஷ்மணருடன் இராம பிரான் காக்ஷி அளிக்கிறார். அருகில் ஸுக்ரீவன் சிரம் தாழ்ந்து நிற்கிறான். இரு கைகளாலும் தான் கொண்டுவந்த இலிங்கத்தை ஏந்திய வண்ணம் அனுமன் நின்றுகொண்டு இருப்பதைப் பார்க்கிறோம்.

முதல் ப்ராகாரத்திலுள்ள தெற்கு வாயில் வழியாக அம்பிகையின் சன்னதியை அடையலாம்.பர்வத வர்த்தனி ,மலைவளர் காதலி என்ற நாமங்கள் கொண்ட இத்தேவி கருணை மிக்க திருவுருவம். இந்த பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் கல்யாண சுந்தர மூர்த்தி, சௌபாக்கிய கணபதி , சந்தான கணபதி, சப்த கன்னிகைகள் , பள்ளிகொண்ட பெருமாள் , சண்டிகேசுவரி ஆகியோர் தரிசனம் தருகின்றனர். வடகிழக்கு மூலையில் பள்ளியறை இருக்கக்காண்கிறோம் 

இத்தலத்தின் மீது ஞான சம்பந்தரும் நாவுக்கரசரும் பாடியருளிய திருப்பதிகக்கல்வெட்டு சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது. அம்பிகை சன்னதியின் முன்புறம் உள்ள மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகளும், இருபுறமும் உள்ள தூண்களில் மனோன்மணி, மாஹேந்த்ரி, கௌமாரி,ராஜ ராஜேசுவரி,லக்ஷ்மி,காளி ,சாமுண்டி ,துவாரபாலகி, சிவ துர்க்கை, வாகீச்வரி, சேதுபதி கடம்பத்தேவர், புவனேசுவரி, அன்னபூர்ணா ஆகியோரது வடிவங்களைக் காண்கிறோம்.
அம்பாள் சன்னதி வாயிலின் இருபுறமும் உள்ள தூண்களில் விஜய ரகுநாத சேதுபதி, முத்திருளப்ப பிள்ளை ,வடுகநாத தேவர், பெரிய திருவுடைய தேவர், சேதுபதி காத்தா தேவர், சின்னண்ணத் தேவர், இரகுநாத சேர்வை ஆகியோரது திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை. 

இராமநாத சுவாமிக்குப் பின்புறம் சேதுமாதவப் பெருமாள் சன்னதி உள்ளது.

இக்கோயிலின் மூன்றாம் பிராகார அழகைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகப்புகழ் வாய்ந்த இதனைச் சுற்றி வரும்போது அதன் எழிலைக் கண்டு பிரமிக்கிறோம். மேலை நாட்டவரும் வியந்து போற்றும் பெருமை மிக்கது இப்பிராகாரம்.  முத்து ராமலிங்க சேதுபதி அவர்களால் கட்டப்பெற்ற இப் ப்ராகாரத்தின் நீளம்,அகலம் மற்றும் உயரம் பற்றிய விவரங்களைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள். கடல் மீது பாலங்கள் இல்லாத காலத்தில் கருங்கற்களை எடுத்து வந்து பிரம்மாண்டமான தூண்களோடு கூடிய பிராகாரங்களை அமைத்து அழியாப் புகழ் பெற்ற சேதுபதி மன்னர்களையும், வடிவமைத்துத் தந்த சிற்பிகளையும் நாம் நெஞ்சார வணங்குகிறோம்.
                                                                                          (தொடரும்)
   

1 comment: