Sunday, December 16, 2018

பெருமிழலைக் குறும்ப நாயனார் அவதாரத் தலம்


அண்மையில் கும்பகோணம் சென்றிருந்தபோது இந்த அதிசய நிகழ்ச்சி நடந்தது. பேருந்துக்காகக் காத்திருந்தபோது சுமார் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஒருவர் என்னிடம் வந்தார். கரிய நிறம். ஒரு விவசாயியைப் போன்ற எளிய தோற்றம். கையில் ஒரு சிறிய பையை வைத்திருந்தார். என்னிடம் ஏதோ கேட்க வந்தவர் போலத் தோன்றியது. ஆனால் அவரோ தனது கைப்பைக்குள் கையை விட்டுத் துழாவி, ஒரு பொட்டலத்தை எடுத்தார். அதைப் பிரித்துவிட்டு அதிலிருந்த ருத்திராக்ஷ மணியை எடுத்துக் காட்டினார். அதைத்  தான் அணியலாமா என்று பார்த்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சந்தேகத்தை முன்பின் அறியாத என்னிடம் வந்து, அதுவும் பேருந்து நிற்கும் இடத்தில் ஏன் கேட்டார் என்று இன்னமும் புரியவில்லை. அம்மணியைக் கையில் வாங்கிப் பார்த்தேன். ஐந்து முகங்கள் கொண்ட மணி அது. அதை அவர் அணிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அவரது வீட்டிலுள்ளோரோ , சுத்தமாக இருந்தால் தான் அணியலாம் என்று கூறி விட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார். 

வயிறு அசுத்தமானவற்றை ஏற்றுக்கொள்கிறது என்பதால் அவ்வாறு கூறினார்கள் போலிருக்கிறது. ஆனாலும் அவரது உள்ளத்தூய்மையை நோக்கும் போது ஒன்று சொல்லத் தோன்றியது.    அம்மணியைக் கண்டத்தில் (கழுத்தில்) அணிவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.  " அது அணிபவரைத் தூய்மைப் படுத்தவே செய்யும். அணிந்தவுடன் வீட்டார் விரும்புவதுபோலவே தூய சைவ உணவை மட்டுமே உண்ணத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன் " என்று கூறினேன். அந்த நபரும் சமாதானம் அடைந்தார். 

அடுத்தபடியாக அவர் கூறிய செய்தியே என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. அவர் கூறியதாவது : "  நான் திருப்பனந்தாள் செல்லும் வழியில் உள்ள கோயிலாச்சேரியில் வசிக்கிறேன். அங்கு செல்லும் பேருந்துக்காகவே காத்துக் கொண்டு இருக்கிறேன். எங்கள் ஊரில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான பெருமிழலைக் குறும்ப நாயனார் அவதாரம் செய்தார். நீங்கள் அந்தக் கோயிலை அவசியம் தரிசிக்க வேண்டும். திருக்குளத்தை ஒட்டிய சாலையில் நடந்தால் அருகாமையிலேயே கோயில் இருக்கிறது " என்றார். 

மிழலைக் குறும்பர் அவதரித்த பதி பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. " மிழலை நாட்டுப் பெருமிழலை " என்று சேக்கிழாரும் ,  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது என்று சிலரும், திருவீழி மிழலை என்று சிலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கோவிலாச்சேரியே மிழலை என்பதை அன்று தான் கேள்விப்பட முடிந்தது. இருப்பினும் அவரிடம் வினா எழுப்பினேன்,                           " நாயனாருக்கு விக்கிரகம் இருக்கிறதா " என்று   " இருக்கிறது " என்று உடனடியாகப் பதில் வந்தது. அதோடு நான் ஏற வேண்டிய பேருந்தும் வந்து விட்டதால் பேச்சைத் தொடரமுடியவில்லை. விடை பெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறி விட்டேன். இன்று வரை அவரை மீண்டும் பார்க்கவில்லை. ஆனால் எப்படியாவது ஒரு நாள் கோயிலாச்சேரிக்குச் சென்று சிவ தரிசனமும் நாயனார் தரிசனமும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. 

 " மிழலை நாட்டுப் பெரு மிழலை" என்றே இவர் அவதரித்த பதியைக் குறிப்பிடுகிறது பெரிய புராணம். சிவபெருமானுக்கு அடிமை செய்த மிழலைக் குறும்பர் சிவனடியார்களுக்கு அமுதும் நிதியமும் அளித்துப் பிறவிப் பயனைப் பெற்றார். திருவெண்ணெய் நல்லூரில் இறைவனால் ஓலை காட்டி ஆட்கொள்ளப் பெற்ற நம்பியாரூரராகிய சுந்தரரைத் தனது குருவாகக் கொண்டு அவரது பாதம் நினைக்கும் நியமத்தில் தலை சிறந்து நின்றதால் அவருக்கு அணிமா முதலிய சித்திகள் எளிதில் கைவரப் பெற்றன. மாலறியா,நான்முகனும் காணா மலரடிகளை அடையும் உபாயம் இதுவே எனத் தெளிந்து அந்நெறியில் நின்றார். 

ஒரு ஆடி மாதத்து சுவாதி நன்னாளன்று திருவஞ்சைக்களத்தில் இருந்த சுந்தரர்  கயிலைக்குச் செல்ல இருப்பதை யோகத்தால் முன்கூட்டியே அறிந்தார் மிழலைக் குறும்பர். சுந்தரரைப் பிரிந்து  கண்ணின் மணியை இழந்தவரைப் போல வாழேன் என்று துணிந்தவராய் , அவருக்கு முன்பாகச் சிவன் தாளை இன்றே சென்று சேர்வேன் என்று எண்ணி யோகத்தில் ஆழ்ந்தார். ஆடி சித்திரை  நன்னாளன்று, பிரமநாடி வழியாகக் கபாலம் திறக்கப்பெற்றுக் கயிலை நாதனின் கழலடி அடைந்தார். இந்நிகழ்வை திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள் எடுத்துப் போற்றும் பாடலைக் காண்போம்: 

"  சிறை நன் புனல் திருநாவலூராளி செழும் கயிலைக்கு

 இறை நன்கழல் நாளை எய்தும் இவன் அருள் போற்ற  இன்றே 

 பிறை நன் முடியன் அடி அடைவேன் என்று உடல் பிரிந்தான் 

 நறை மலர்த் தார் மிழலைக் குறும்பன் எனு நம்பியே "

கும்பகோணத்திலிருந்து சோழபுரம் வழியாகத் திருப்பனந்தாள் செல்லும் நெடுஞ்சாலையில் இருப்பது கோவிலாச்சேரி என்ற சிறிய கிராமம். பெருவழியை ஒட்டிய திருக்குளத்தை ஒட்டித் திரும்பிச் சிறிது தூரம் சென்றவுடனேயே திருக்கோயில் கண்ணுக்குத் தெரிகிறது. திருப்பணிகள் செய்யப்பெற்றுப் பல  வண்ணங்களுடன் மிளிர்கிறது. ஆனால் ஒரு கால பூஜையே நடைபெறுகிறது. பக்கத்திலுள்ள கல்லூர் என்ற ஊரிலிருந்து அர்ச்சகர் வந்து பூஜை செய்கிறார். 

இத்திருக்கோயில் ஒரே ப்ராகாரத்துடன் விளங்குகிறது. முன் மண்டபத்தைக் கடந்து , மகா மண்டபத்தில் நுழைந்தவுடன்  கிழக்கு நோக்கிய மூலவரான கயிலாய நாதரையும், தெற்கு நோக்கிய காமாக்ஷி அம்பிகையையும் தரிசிக்கிறோம். மகாமண்டபத்தில் சுவாமியை நோக்கியவராகக்  கூப்பிய கரங்களுடன் பெரு  மிழலைக் குறும்ப நாயனார்  காட்சியளிக்கிறார். ஆடி சித்திரையன்று இவரது குருபூஜை நடைபெறுகிறது. வெளிப் பிராகாரத்தை வலம் வந்து ஆலய தரிசனத்தை நிறைவு செய்கிறோம்.  

குடந்தைக்கு அண்மையில் உள்ள இக்கோயிலை அன்பர்கள் தரிசிக்க வேண்டும். எவ்வளவு பேருக்கு இப்படி ஒரு புராணச் சிறப்பு வாய்ந்த கோயில் இருக்கிறது என்று தெரியும் ? ஒருவேளை தெரிந்தாலும் நேரில் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த ஈசனே தோற்றுவிக்க வேண்டும்.  " ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே "  என்று மாணிக்க வாசகர் அருளியது சத்தியமான வார்த்தை. 

9 comments:

  1. மிக இனிமையான சம்பவங்கள். மிக அருமையான பொருத்தம். அப்பன்அம் தாளை சுந்தரர் சுவாதி யன்று அடையும் தறுவாயில் தான் பின் தங்கலாகாது என்ற தீர்மானத்துடன் சித்திரையன்றே முக்தி பெற்ற அப்பெரியவரை தரிசிககுமுன் அவர் ஊரார், திருப்பனந்தாளார், அவரிடம் ஆரா அன்புடையார் ஒருவர் உங்களை ஈர்த்து ஆட்கொண்டு வழி நடத்தியது.

    ReplyDelete
  2. அந்த எளியவர் வடிவில் இறையருளே அத்தலத்துக்கு அழைத்துப்போனதோ !!

    ReplyDelete
  3. அருமையான தகவல். இந்த தலம் பெருமிழலைக்குறும்ப நாயனார் அவதாரத் தலம் என்பதற்கு அவரது திருவுருவச்சிலை அன்றி வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தனவா?

    ReplyDelete
  4. AYYA, VANAKKAM . ELLAM SIVAN CHEYAL. VIVARAMANA UNMAIYANA NALLA TAGAVAL MIKKA NANDRI. VAZGHA VALAMUDAN
    ANBAN
    C.KRISHNA KUMAR

    ReplyDelete
  5. மிக்க நன்றி பெருமிழலைக்குறும்ப நாயனார் பற்றிய தகவல்களுக்கு...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வரலாற்று கல்வெட்டு பேரறிஞர் சதாசிவப்பண்டாரத்தார் தான் குறும்பநாயனார் அவதாரம் செய்தது இந்த மிழலை நாடு என்பதையும் குறும்பநாயனார் சிற்பத்தையும் கண்டறிந்து கூறினார்.

    ReplyDelete
  8. அருமையானபதிவு

    ReplyDelete
  9. குறும்பா கவுண்டர் குலத்திற்கு பெருமை... ஜெய் குறும்பா கவுண்டர்

    ReplyDelete