Thursday, June 9, 2011

வேதமும் வேள்வியும் ஆயினான்



மறையுமாய் மறையின் பொருளுமாய் நிற்பவன் சிவபெருமான் என்கிறார் மாணிக்க வாசகர். அவனன்றி செய்யும் வேள்வியும் பயன் அற்றதாகிவிடுவதை தக்ஷ யாகம் நிர்மூலமானதின் மூலம் தெரிந்து கொள்கிறோம். எல்லா உயிர்களிலும் மறைந்து நிற்கும் மாமணி ஜோதியான பரம்பொருளை அறிவார் சிலரே. அவனைத்தவிர வேறு எதையும் நினையாத அருளாளர்களுக்கு மட்டுமே அவனது காட்சி கிட்டுகிறது. இதனை உணர்ந்து கொள்ள அம்பர் மாகாளம் என்ற தலத்தில்நடக்கும் ஐதீக விழாவை அவசியம் தரிசிக்க வேண்டும்.




கோயில் திருமாகாளம் என்று தற்போது அழைக்கப்படும் இத்தலம் , சம்பந்தரின் தேவாரப் பதிகம் பெற்றது. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரிலிருந்து கிழக்கே காரைக்கால் செல்லும் பாதையில் சுமார் நான்கு கி. மீ. தொலைவில் உள்ளது. அருகில் அரசலாறு ஓடுகிறது. ஏழு நிலை கோபுரத்தோடு மதில்கள் சூழ , கிழக்கு நோக்கியவாறு ஆலயம் அமைந்துள்ளது. எதிரில் அழகான திருக்குளம் அமைந்து உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலைத் தாண்டினால் பிராகாரத்தில் சுதையினால் ஆகிய காளியும், நாக கன்னிகையும் காட்சி அளிக்கக் காணலாம். மூலஸ்தானத்தில் சிறிய, அழகிய லிங்க வடிவில் சிவ தரிசனம் கிடைக்கிறது. அம்பராசுரனை சம்ஹரித்ததால் , வீரஹத்தி தோஷம் நீங்க காளிதேவி பூஜித்த மூர்த்தி. இந்த தேவி, வெளிப் பிராகாரத்தில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறாள். சுவாமிக்கு வலது புறம் வெளிப்ராகாரத்தில் , தனி ப்ராகாரத்துடன் பய க்ஷயாம்பிகை என்ற நாமத்துடன் அம்பிகை காட்சி அளிக்கிறாள்.


இறைவனின் முடியைக்கண்டதாகப் பொய் சொன்ன பிரமன் , இங்கு வந்து, அன்னதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் ஸ்நானம் செய்து முப்போதும் வழிபட்டதால் , தனது தெய்வ வடிவத்தைத் திரும்பப்பெற்றான். சம்மார சீலன் என்பவனிடம் இந்திரா பதவியைப் பறிகொடுத்த தேவேந்திரன், இத்தளத்தை அடைக்கலமாக அடைந்து, தவம் செய்யவே, இறைவன் பிரவ வடிவில் சென்று சம்மார சீலனை அழித்து, அவனது அங்கத்தைத் தண்டமாக ஏற்று, சட்டைனாதராகக் காட்சி அளிக்கிறார். விஸ்வாமித்திரரின் தவத்தைக் கலைத்ததால், முனிவரின் சாபத்துக்கு ஆளான மன்மதன், இங்கு வந்து, சாபம் நீங்கப் பெற்றான். புத்திர பாக்கியம் பெற வேண்டி, ஸ்தலயாத்திரையாகக் காசியிலிருந்து வந்த விமலன் என்பவன், தனுர் மாதம் முழுவதும், நியமத்துடன் இங்கு வழிபாட்டு, மகாதேவன் என்ற மைந்தனைப் பெற்றான். இங்கு தை முதல் நாள் மகர சங்கராந்தி அன்று கங்கை வெளிப்படுவதாக ஐதீகம். முனிவர் ஒருவரை அறியாமல் கொன்றதால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் அகல, காம்போஜ நாட்டு நந்தன் என்ற மன்னன் இங்கு வந்தவுடன் அத்தோஷம் நீங்கியது



இங்கிருந்து சுமார் ஒரு கி. மீ. தொலைவில் உள்ள அம்பர் என்ற ஊரில் சோமாசி மாரர் என்ற அந்தணர் தன்மனைவி சுசீலை என்பவளுடன் வசித்து வந்தார். இங்குள்ள சிவாலயம் பிரம தேவனால் வழிபடப் பெற்றது. அதனால்,சுவாமி , பிரம்மபுரீஸ்வரர் எனப்படுகிறார்.இது கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில். சம்பந்தர் பதிகம் பெற்ற தலம். மூலஸ்தான சிவலிங்க மூர்த்திக்குப் பின்னால் சுவற்றில் உமமகேஸ்வரர்களைக் காணலாம். சோமாசி மாறநாயனார் சிவனடியார்களிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர்.அக்காலத்தில் திருவாரூரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் வசித்து வந்தபோது, அவரிடம் சென்று, தான் ஒரு சோம யாகம் செய்ய இருப்பதாகவும் அதற்கு தியாகராஜப் பெருமானை அழைத்துக்கொண்டு சுந்தரர் வைகாசி ஆயில்யத்தன்று அம்பருக்கு வரும்படியும் வேண்டவே, சுந்தரரும் அவ்விதம் செய்வதாக உடன்பட்டார்.



அம்பருக்கும் அம்பர்மாகாளம் கோயிலுக்கும் இடையில் யாக சாலை அமைக்கப்பட்டது. சுந்தரரும்சோமாசி யாரும் இறைவனை எதிர் பார்த்து இருக்கும் போது, சுவாமி ஒரு நீச்ச வேடம் பூண்டு, கையால் பறையை முழங்கிக் கொண்டு, நான்கு வேதங்களும் நான்கு நாய்களாகச் சூழப்பெற்றவனாக, இறந்த கன்றுக்குட்டியைத் தொளில்சுமந்தவனாக யாகசாலைக்கு எழுந்தருளுகிறான். அம்பிகையும் மதுக்குடத்தைத் தலையில் சுமந்தவளாக கணபதியும் கந்தனும் இரு சிறுவர்களாக உடன் வர, இறைவனோடு வருகிறாள். இதைக் கண்ட அந்தணர்கள் யாகசாலையில் இருந்து வெளியேறவே, அவர்களை சுவாமி சபித்தார். பதற்றத்தில் இருந்த நாயனார் இருவரது அச்சத்தையும் தீர்த்துவைக்க மகா கணபதி அந்த இடத்தில் அச்சம் தீர்த்த வினாயகராகக் காட்சி அளித்தார். பின்னர், இரு நாயன்மார்களுக்கும் சுவாமியும் அம்பாளும் நீச்ச ரூபம் மறைத்து, ரிஷப வாகனத்துடன் காட்சி அளித்தனர். அக்கணமே, சோமாசி மாரர்,சுசீலை இருவரும் முக்தி பெற்றனர்.



மேற்கண்ட புராண வரலாறு, ஐதீக விழாவாக வைகாசி ஆயில்யத்தன்று மிகவும் விமரிசையாக இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது. அதிகார நந்தியும், விநாயகரும் , சுந்தரர்-பரவையாரும், சோமாசி மாரர் -சுசீலை ஆகியோர் முன்னதாகவே , அச்சம் தீர்த்த விநாயகர் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலைக்கு எழுந்தருளுகின்றனர். யாகம் முடியும் நேரத்தில் சுவாமியும் அம்பாளும் அங்கு நீச்ச வடிவம் கொண்ட தியாகராஜராகவும் நீலோத்பலாம்பிகை எனவும் வந்தவுடன், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. இறைவனை அறிந்துகொண்ட சோமாசி மாரர்-சுசீலை தம்பதிகள் மும்முறை பிரதட்சிணம் வந்தவுடன் ஐக்கியக் காட்சி நடைபெறுகிறது. உடனே, காட்சிகொடுத்த மூர்த்தி அங்கு எழுந்தருள்கிறார். பக்தர்கள் பரவசத்துடன் "தியாகேசா, மகாதேவா" என்று கோஷிக்கின்றனர். நாமும் கண் பெற்ற பயனைப் பெறுகிறோம்.

No comments:

Post a Comment