சீர்காழிப் புராணத்தை அறிந்து கொள்வதற்குமுன் அதற்குத் தொடர்புடைய ஸ்ரீ ஸ்காந்த மகாபுராணத்தில் சீர்காழியில் தேவேந்திரன் இந்திராணியுடன் சூர- பத்மனுக்குப் பயந்து மூங்கிலில் மறைந்து வாழ்ந்து வந்த சரிதத்தில் இருந்து அறிந்து கொள்வது நல்லது.
வீர மகேந்திர புரத்தில்ஆட்சி செய்துவந்த சூரபத்மன் , அதைச் சுற்றி ஹேமபுரி நீலபுரி , ச்வேதபுரி,வாமாபுரி, பத்மபுரி முதலிய பட்டினங்களை அமைத்தான். பிரம்மா அவனுக்குப் பட்டாபிஷேகமும் செய்து வைத்தார். தேவர்களை வேலைக்காரர்களாக நடத்தினான். இவை எல்லாம் தக்ஷ யாகத்தின் போது , பரமேச்வரனை அழைக்காமல் யாகம் செய்த தக்ஷன் பக்கம் சேர்ந்ததால் ஏற்பட்ட சிவாபராதத்திற்குக் கிடைத்த தண்டனை.
சிவபூஜைக்காகக் காவேரி நதியை வரவழைக்க வேண்டுமாதலால் ,நாரதரின் சொற்படி இந்திரன் கணபதி பூஜை செய்தான். இதனால் சந்தோஷமடைந்த கணபதியானவர், காக்கை வடிவில் சென்று அகஸ்த்தியரின் கமண்டலத்தில் இருந்த காவேரியைக் கவிழ்த்து விட்டார். காக்கை இருந்த இடத்தில் ஒரு பிரம்மச்சாரி தோன்றவே, அகத்தியர் அவனைக் குட்டும் எண்ணத்துடன் அவனைத் தொடர்ந்தார். அப்பொழுது, விநாயகமூர்த்தி, தந்து சுய வடிவத்தைக் காட்டினார். தன தவறுக்கு வருந்திய முனிவர், தன தலையைத் தானே குட்டிக் கொண்டார். அதே நேரத்தில், காவேரியும் பெருக்கெடுத்து ஓடலாயிற்று. சீர்காழி க்ஷேத்ரத்தையும் வளப்படுத்தியது. சோலைகளில் பூத்த பூக்களைக் கொண்டு, தேவேந்திரனும் சிவபூஜையைச் செய்துவந்தான். ஒரு நாள் ,தேவர்களுடன் கைலாயம் சென்று ஸ்ரீ மகாதேவனிடம் முறையிட விரும்பிய இந்திரன், தன மனைவிக்குக் காவலாக, சாஸ்தாவை நியமித்துவிட்டுச் சென்றான். அப்போது இந்திராணியை இழுத்துச் செல்ல முயன்ற அஜமுகியின் கைகளை சாஸ்தா வெட்டி வீழ்த்தினார். இவ்வாறு வேணு (மூங்கில்) வடிவில் ஒளிந்திருந்து இந்திரன் சிவ பூஜை செய்ததால் சீர்காழிக்கு வேணுபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.
சீர்காழிக்கு மொத்தம் பன்னிரண்டு பெயர்கள் புராணத்தில் குறிப்பிடப்படுகின்றன. பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் எனவும், தேவர்கள் தஞ்சம் அடைந்ததால் புகலி எனவும், அசுர குருவும் தேவ குருவும் பூஜித்ததால் வெங்குரு எனவும், பிரளய காலத்தில் உமா மகேஸ்வரர்கள் தொனியில் வந்ததால் தோணிபுரம் எனவும் தரையைப் பிளந்து இரணியாக்கனை வராகமூர்த்தி கொன்றதால் பூந்தராய் எனவும், தலை வடிவில் ராகு பூஜித்ததால் சிரபுரம் எனவும், புறாவால் சோதிக்கப் பட்ட சிபிச் சக்கரவர்த்தி வழிபட்டதால் புறவம் என்றும், சண்பைப் புல்லால் யாதவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட பழி தீரக் கண்ணன் வணங்கியதால் சண்பை எனவும், காளிதேவி பூஜித்ததால் ஸ்ரீ காழி (சீர்காழி) எனவும்,பராசரர் பாவம் நீங்கப் பூஜை செய்ததால் கொச்சைவயம் என்றும், உரோம்ச முனிவர் தனது மலவாதனை நீங்க வழிபட்டதால் கழுமலம் என்றும் பல பெயர்களால் இத்தலம் வழங்கப்படுகிறது.
குரு, லிங்க சங்கம வடிவில் பரமேச்வரன் இத் தோணி சிகரத்தில் காட்சி அளிக்கிறார். கீழ் தளத்தில் லிங்கஸ்வரூபமான பிரம்மபுரீஸ்வரர் சன்னதி. அதன் மேல் இருபது பறவைகள் சுமக்கும் தோணி சிகரம். படிக்கட்டுகளில் ஏறினவுடன் உமாமகேஸ்வரர் தோணி யில் அமர்ந்து இருக்கும் சன்னதியைத் தரிசிக்கலாம். கையில் மான் மழு இல்லாமல் சுவாமி தோன்றுவதால், அவைகளைக் கைகளில் ஏந்துவதற்கு முன்பே ஒரு ஊழிக் காலத்தில் தோன்றிய மூர்த்தி என்பது தெரிய வருகிறது. சிகர உச்சியில் சட்டைநாத சுவாமி சன்னதி இருக்கிறது. பிரம்ம விஷ்ணுக்களை பிரளைய முடிவில் எலும்பாகவும், தோல் சட்டையாகவும் , தண்டமாகவும் கொண்டு காட்சி அளிக்கிறார். இவருக்கு வெள்ளிக் கிழமைகளில் அர்த ஜாம வேளையில் விசேஷ பூஜைகள் நடை பெறுகின்றன.
அம்பாளும் சுவாமியைப் போலவே கிழக்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். அவளது நேர் பார்வையில் பிரம தீர்த்தக் குளம் இருக்கிறது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் திருஞான சம்பந்தருக்குப் ப்ராகாரத்துடனும், திரு- மாளிகைப்பத்தி மண்டபத்துடனும் கூடிய பெரிய சன்னதி உள்ளது. இதன் வாயிலில் அவரது புராண வரலாற்று சுதைகள் அழகாக அமைக்கப் பட்டிருக்கின்றன. வாயிலருகில் சம்பந்தப் பெருமானைக் குருவாகக் கொண்டு தொண்டு செய்துவந்த கணநாத நாயனாருக்குத் தனிச் சன்னதி இருக்கிறது.
சோழ மன்னர்களது திருப்பணிகளையும், கல்வெட்டுக்களையும் கொண்ட இக்கோயில் தருமபுர ஆதீனத்தால் பராமரிக்கப் படுகிறது. இங்கு பிரமோற்சவம் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதில் இரண்டாம் திருநாளன்று, திருஞான சம்பந்தருக்கு இறைவன் ஞானப் பால் அளித்த ஐதீக விழா ஒவ்வொருவரும் காண வேண்டியதொன்று. தனது மூன்றாவது பிறந்த நாளன்று தந்தையுடன் கோயிலுக்குச் சென்ற குழந்தை, பிரமதீர்த்தத்தில் மூழ்கி அகமர்ஷன ஜபம் செய்யும் தகப்பனாரைக் காணாது, பசி மேலிட, தோணி சிகரத்தை நோக்கி அம்மே அப்பா என்று அழவே, அக்குழந்தையின் பசி தீர்க்குமாறு சுவாமி அம்பிகையை அனுப்பினார். அம்பிகையும் பொற்கிண்ணத்தில் தனது ஞானப் பாலைக் கறந்து அக் குழந்தைக்கு அளிக்க, அது சிவ ஞானப் பால் ஆதலால், அந்தக் கணமே, எல்லா ஞானமும் அக்குழந்தைக்கு அருளப் பெற்று,சிவஞானசம்பந்தர் ஆனார். சிறிது நேரத்தில் நீரிலிருந்து வெளியில் வந்த தந்தை, குழந்தையின் வாயில் பாலைக் கண்டு, ஒரு குச்சியை ஓங்கி "யார் கொடுத்த பாலை வாங்கி உண்டாய்?" என்று கோபிக்கவே, தனக்குப் பால் கொடுத்த ஆதி தம்பதிகளை அடையாளங்களுடன் தந்தைக்குத் தெரியும்படியாகத் "தோடுடைய செவியன்" எனத் தொடங்கித் தேவாரப் பதிகம் பாடினார்.
சம்பந்தர் சன்னதியில் காலையில் நால்வர் அபிஷேகம் நடைபெறுகிறது. பிறகு சம்பந்தருக்கு விசேஷ அலங்காரங்கள், தீபாராதனைகள், தருமபுர ஆதீன கர்த்தரின் முன்னிலையில் நடக்கிறது. பிறகு, சம்பந்தரை பல்லக்கில் எழுந்தருள செய்கிறார்கள். ஒரு ஒதுவாமூர்த்திக்குப் பாராட்டு நடைபெறுகிறது. பிரம தீர்த்தக் குளக்கரைக்கு வரும் வழியில் சம்பந்தரின் புராணமும் அவர் ஆற்றிய அற்புதங்களும் மக்கள் அறியும்படி எடுத்துஉரைக்கப் படுகிறது.
சம்பந்தர் குளக்கரைக்கு வந்தவுடன், மலைக்கோவிலில் இருந்து கையில் தங்கக் குடத்தில் பாலும் , தங்கக் கிண்ணமும் ஏந்தியபடி அம்பிகை சம்பந்தரிடம் வருகிறாள்.இருவருக்கும் தீபாராதனை நடைபெறுகிறது. அம்பிகையிடமிருந்து, ஞானப்பாலை வாங்கி, சம்பந்தப்பெருமானின் வாயில் ஊட்டு கிறார்கள். பக்தர் கூட்டம் ஆனந்த பரவசம் அடையும் அந்த வேளையில் அம்பிகை திரும்பவும் சுவாமியிடம் சென்றுவிடுகிறாள். சிவபாதஹ்ருதையர் கேட்டவுடன் ஞானக் குழந்தை தோடுடைய செவியனைக் காட்டிய ஐதீகப் படியே, சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளுகிறார்கள். பட்டு சார்த்தி தீபாராதனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் தாம் கொண்டுவந்த பாலை சுவாமி-அம்பாளுக்கு நிவேதிக்கச் செய்து, அதை விநியோகிக்கிறார்கள்.நாமும் அந்த ஞானப் பாலைப் பெறுவதோடு, தூ வெண் மதி சூடி விடையின் மேல் வந்த உமா-மகேஸ்வரர்களைத் தரிசிக்கும் பாக்கியமும் பெறுகிறோம்.
No comments:
Post a Comment