ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி
விச்வநாதம் – IX
சிவபாதசேகரன்
காசி மாநகரத்தில் உள்ள சிவாலயங்கள் (தொடர்ச்சி):
பைரவர் : நன்றி:வலைத்தளப் படம்
அகஸ்த்யேச்வரர் கோயில்: மேரு மலை உயர்ந்திருப்பதைக் கண்ட விந்தியமலை தானும் அவ்வண்ணம் உயர ஆரம்பிக்கவே, அஞ்சிய தேவர்கள் , பிரமனுடன் காசிக்குச் சென்று அகஸ்திய ரிஷியிடம் முறையிட்டனர். அப்போது அகஸ்திய முனிவர், சிவலிங்கம் ஒன்றையும் அகஸ்திய குண்டத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அமரர்களின் கவலையைப் போக்கியதாகக் காசிக் காண்டம் கூறுகிறது. இக்குண்டத்தில் நீராடி, பித்ரு காரியங்களைச் செய்தால் காசியில் வசித்த பலன் உண்டு என்று அதில் கூறப்படுகிறது. நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு அருகில் அகஸ்த் குண்ட் என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது.
அங்கீரசேச்வரர் கோயில்: ஜங்கம்பரி மடத்து வளாகத்துள் இக்கோயில் உள்ளது.
அங்கீரஸ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
புலஹேச்வரர் & புலஸ்தீச்வரர் கோயில்கள்: சௌக் என்ற இடத்தில் மணிகர்ணிகா கட்டம் செல்லும் வழியில்
ஸ்வர்கத்வார் / பிராமணாள் சௌராஹா என்ற இடத்தில் புலஹர் மற்றும் புலஸ்திய
மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகள் ஒரே வளாகத்திற்குள் இவ்விரண்டு
சன்னதிகளில் அமைந்துள்ளன. அருகில் ஒரு சலவைக்கல் நடைமேடை உள்ளது.
வசிஷ்டேச்வரர் கோயில்: வருண சங்கமத்திற்கு
அருகில் உள்ள கோயிலும் சௌக்கிலிருந்து ஸங்கட் காட் என்ற இடத்திற்கு ஸங்கட தேவி
கோயில் வழியே சென்றால் அதன் அருகிலுள்ள
உள்ள கோயிலும் வசிஷ்டர் பிரதிஷ்டை செய்தவைகளாகக் கருதப்படுகின்றன. காசியில்
வசிப்போர் தினமும் வழிபடவேண்டிய கோயில்களுள் வசிஷ்டேச்வர் கோயிலையும் வாமதேவேச்வரர்
கோயிலையும் குறிப்பிடுவர்.
வாமதேவேச்வரர் கோயில் : வாமதேவர் வழிபட்ட லிங்க
மூர்த்தியின் கோயில் மேற்கண்ட சங்கட் காட் என்ற இடத்தில் உள்ளது.
வ்யாசேச்வரர் கோயில் :
காசி விச்வநாதர் சன்னதியில் நின்று கொண்டு,தனது கைகளைத்
தூக்கியபடி விஷ்ணுவே முழுமுதற்கடவுள் என்று வியாஸ மகரிஷி சொன்னவுடன் அங்கிருந்த நந்திதேவரது
சாபத்தால் அவரது உயரத் தூக்கிய கைகள் செயலற்றதோடு பேசும் தன்மையையும் இழந்தார்.
விஷ்ணுவின் வழிகாட்டுதல் படி வியாசர் பேசும் திறன் பெற்றார். கைகளும் பழையபடி
ஆயின. தனது பிழைக்கு வருந்திய வியாஸ முனிவர், சிவபிரானைத் துதித்தார். தனது
பெயரில் ஒரு லிங்கத்தையும் ஸ்தாபித்தார். கர்ண கண்ட புஷ்கரணியில் உள்ள வ்யாசேச்வர
லிங்கம் மழைக் காலத்தில் நீருக்குள் மூழ்கி விடுகிறது.
பாரபூதேச்வரர் கோயில்: பாரபூத் என்னும் சிவகணத்தால் பிரதிஷ்டை
செய்யப்பட்ட இம்மூர்த்தியைத் தரிசிக்க, சௌக்கிலிருந்து நீசி பாக் செல்லும்
வழியில் ராஜா தர்வாசா சென்றால் இக்கோயிலை
அடையலாம். இந்த மூர்த்தியைத்
தரிசிக்காதவர்கள், காய்க்காத மரம் போல பூமிக்குப் பாரமாக இருப்பார்கள் என்று காசி
காண்டம் கூறும்.
கிராதேச்வரர் ஆலயம்: மேற்கூறிய பாரபூதேச்வரர்
கோயிலுக்குப் பின்புறம் உள்ள அத்தர் விற்பனைக்கடைக்கு எதிரில் உள்ள வளாகத்தில் தரை
மட்டத்திற்குக் கீழ் கிராதன் என்ற சிவகணம் ஸ்தாபித்த கிராதீச்வர மூர்த்தியைத்
தரிசிப்பதால் மறு பிறவி இல்லை என்று காசி காண்டம் மூலம் அறியலாம்.
க்ஷேமேச்வரர் கோயில்: க்ஷேமக் என்ற சிவகணம் ஸ்தாபித்த லிங்க மூர்த்தி,
க்ஷேமேச்வரர் என்ற பெயருடன் காட்சியளிக்கும் கோயிலுக்குச் செல்பவர்கள்,கேதார்
கட்டத்திலுள்ள க்ஷேமேச்வரர் காட் என்ற இடத்தை அடைந்தால் கோயிலை அடையலாம்.
குக்குடேச்வரர் கோயில்: துர்கா குண்டம் என்ற
இடத்திலுள்ள குக்குடேச் வரர் கோயிலில் உள்ள லிங்க மூர்த்தி, குக்குடன் என்ற
சிவகணத்தால் ஸ்தாபிக்கப் பெற்றதாகும்.
லங்லீச்வரர் கோயில்: லங்லீ என்ற சிவ கணம் ஸ்தாபித்தது. இவரை வழிபடுவோர்
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பர் என்று காசி காண்டம் கூறுகிறது. சௌக்கிலிருந்து
கத்ரி மெடிக்கல் ஹால் வழியே செப்ரால் கோவா
கல்லி சௌராஹா என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு தானம் அளிப்பது சிறப்பு.
பஞ்சாக்ஷேச்வரர் கோயில்: த்ரிலோசன் காட்டில்
அமைந்துள்ள த்ரிலோசநேச்வரர் கோயிலுக்கு
அருகில் ருத்ராக்ஷேச்வரரைத் தரிசிக்கலாம்.
பிங்கலேச்வரர் கோயில்: பிசாச் மோச்சன் பகுதியில்
கபர்தீச்வரருக்கு அருகில் உள்ள இந்த சிவலிங்கத்தைப் பிங்களன் என்ற சிவகணம்
ஸ்தாபித்தது.
திலபர்ணேச்வரர் ஆலயம்: திலபர்ணன் என்ற
சிவகணத்தால் ஸ்தாபிக்கப் பெற்றது. துர்க்கா குண்ட் என்ற இடத்திலுள்ள துர்க்கை
ஆலயத்தருகில் உள்ளது.
அமரேச்வரர் ஆலயம்: லோலார்க் குண்ட் க்குப்
பின்புறம் அஸிக்கு அருகில் உள்ளது. இவரை வழிபடுவோர்க்கு அகால மரணம் இல்லை.
பூர் புவ ஸுவ லிங்கம்: கந்தமாதனத்திலிருந்து
நந்திதேவரால் எடுத்துவரப்பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூத் பைரவ் அருகில்
உள்ளது. பெரிய சிவலிங்க மூர்த்தி.
ஈசாநேச்வரர் ஆலயம்: ஈசானபுரியிலிருந்து
காசிக்கு வந்த பதினொரு சிவ பக்தர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. சதுர்தசியில்
வழிபட்டால் மோக்ஷம் கிட்டும். பன்ஸ்படக் என்ற இடத்திலுள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்குள்
உள்ளது.
ஹரேச்வரர் கோயில்: நந்தி தேவர் ஹரிச்சந்திர
க்ஷேத்ரத்திலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தது. ராஜ்காட் போர்ட் என்ற இடத்தில் உள்ளது.
ஜடீச்வரர் கோயில்: பாடலீச்வரர் என்றும்
அழைக்கப்படும் ஜடீச்வரரை பெங்காலி
தோலாவிலுள்ள ஒரு வீட்டின் வெளியில் காணலாம். ராமேச்வரத்திலிருந்து வந்ததாகக்
கூறப்படுகிறது. அருகில் ஏகதந்த விநாயகர் உள்ளார்.
ருத்ரேச்வரர் சன்னதி: இவரை வழிபடுவதால் ஒரு கோடி ருத்ர மூர்த்திகளை
வழிபட்ட பலன் கிடைக்கும் ருத்ர
மஹாலயம் என்ற இடத்திலிருந்து எழுந்தருளப்பெற்றவர் . திரிபுரா தேவி கோயிலுக்கு
அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் இருக்கும் கோடீச்வர லிங்கம் மிகப்
பெரியது.சத்ர்தசியும் திருவாதிரையும் இனைந்து வரும் நாளில் இவரை வழிபடுவது மிகுந்த
பலனை அளிப்பதாகக் காசிக் காண்டம் கூறுகிறது.
த்ரிபுரேச்வரர் கோயில்: மேற்கண்ட ருத்ரேச்வரருக்கு
அருகில் உள்ளது. மிர் காட் என்ற இடத்தில் திரிபுரா பைரவி தேவி சன்னதிக்கு அருகில்
உள்ளது.
ஸஹஸ்ராக்ஷேச்வரர் கோயில்: ஸ்வர்ண
தீர்த்தத்திலிருந்து காசிக்கு எழுந்தருளிய இவரை வழிபட்டால் நூறாயிரம் ஆண்டுகளில்
செய்த பாவங்கள் நீங்குவதாகக் காசிக் காண்டம் கூறுகிறது. சைலபுத்ரி என்ற இடத்தில்
உள்ளது.
சூல் டங்கேச்வரர் கோயில்: தசாச்வமேத கட்டில் படா
லிங்கம் என்று இக்கோயில் பிரசித்தமாக விளங்குகிறது. வேகமாகப் பாய்ந்து வரும்
கங்கையை, சிவபெருமான் , தனது சூலத்தை நிறுத்தித் தடுத்ததாகப் புராண வரலாறு
கூறுகிறது.
சூக்ஷ்மேச்வரர் கோயில்: தூப் சண்டி பகுதியில்
தூமாவதி கோயிலில் உள்ள விகடத்வஜ விநாயகருக்கு அருகிலுள்ளது.வரமனைத்தும் தரும்
இந்தப் பெருமான் ஆம்ரதகேச்வர க்ஷேத்திரத்திலிருந்து காசிக்கு எழுந்தருளப்பெற்றவர்.
விமலேச்வரர் கோயில்: நீல் கண்ட் மகோதியோ என்று
அழைக்கப்படும் இவரைத் தரிசிக்க, நயா மகோதியோ- ப்ரஹலாத் காட் என்ற இடத்திற்குச்
செல்ல வேண்டும். அருகில் ஸ்வர லீனேச்வரரையும் தரிசிக்கலாம்.
வ்ருஷேச்வரர் கோயில்: கேதார்நாத் மைதாகின் என்ற
இடத்தில் உள்ளது இக்கோயில். வ்ருஷபத்வஜ தீர்த்தத்திலிருந்து தோன்றிய மூர்த்தி
இவர்.
அமிர்தேச்வரர் கோயில் : காசியில் வாழ்ந்த சனரு
என்ற முனிவரின் குமாரன் உபஜன்கினி என்பவன் பாம்பு கடித்ததால் இறக்கவே, அவனது உடலை
இடுகாட்டில் இட்டு அந்திம சம்ஸ்காரங்களை முனிவர் செய்யத் துவங்கும் வேளையில்
அக்குமாரன் உயிர் பெற்று எழுந்தான். அவனைக் கிடத்திய இடத்தின் கீழ் சிறியதொரு
லிங்கம் இருப்பதைக் கண்ட முனிவர் அதற்கு இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் சக்தி
இருப்பதைக் கண்டு வியந்து அந்த லிங்க மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார்.
அமிர்தேச்வரரை வழிபட்டால் பிறவிப்
பிணியிலிருந்து நீங்கலாம். இந்த லிங்க மூர்த்தியின் பெருமையை அம்பிகைக்குப்
பரமசிவனே கூறியதாகக் காசிக் காண்டம் உரைக்கிறது. சௌக் என்ற இடத்திலிருந்து நடந்தால்,
நீல்கண்ட் பச்சா மஹராஜ் கங்கா புத்ர ஹவுஸ் என்ற இடத்தில் இக்கோயில் இருக்கிறது.
வழியில் நீலகண்டேச்வரர் மற்றும் காளி கோயில்களைக் காணலாம். இதன் அருகில் கர்நாடக மாநிலத்தைச்
சேர்ந்த ஆதி சுஞ்சனகிரி சமஸ்தான மடம் இருப்பதைப் பார்க்கலாம்.
ஜ்யோதி ரூபேச்வரர் கோயில் : மஹா விஷ்ணுவுக்கு ஜோதி
ரூபமாகக் காட்சியளித்த லிங்கப்பெருமானை மணிகர்ணிகைக்கு அருகில் தரிசனம் செய்யலாம்.
கோமத் என்ற இடத்திலுள்ள அபய சன்யாஸ ஆசிரம வளாகத்தில் இக்கோயில் உள்ளது.
கருணேச்வரர் கோயில்: தசாஸ்வமேத் விச்வநாத்
கல்லியில் சென்று லஹோரி டோலா –பூத கணேஷ் என்ற இடத்தில் மோக்ஷ த்வாரேச்வரர் கோயிலுக்கு
அருகில் ஒரு வீட்டிற்குள் இக்கோயிலை அடையலாம்.
மோக்ஷ த்வாரேச்வரர் கோயில்: மேற்கூறிய கருணேச்வரருக்கு
அருகில் வீட்டிற்குள் உள்ளது.
ஸ்வர்க த்வாரேச்வரர் கோயில்: காசிக் காண்டத்தில்
குறிப்பிடப்பெறும் இந்த மூர்த்தியின் கோயிலை ப்ராஹ்மணாள் என்ற இடத்தில் புலஹேச்வரருக்கு
எதிரில் இருக்கக் காணலாம்.
கூஷ்மாண்டேச்வரர் கோயில்: மேற்குறிப்பிட்ட ஸ்வர்க
த்வாரேச்வரர் அருகில் கூஷ்மாண்டேச்வரரை வழிபடலாம்.
ஆபஸ்தம்பேச்வரர் கோயில்: பிஷேஷ்வர் கஞ்ஜ் வழியாகத் தாரா நகரை அடைந்தால் மத்யமேச்வரருக்கு
அருகாமையில் இந்த லிங்க மூர்த்தியைத் தரிசனம் செய்யலாம்.
ஆஷாடேச்வரர் கோயில்: லோஹாடியா வழியாகவோ
ஜ்யேஷ்ட கௌரி வழியாகவோ சென்று காசிபுரா என்ற இடத்தை அடைந்தால் இக்கோயில் இருக்கக்
காணலாம்.
அவதூதேச்வரர் கோயில்: சௌக்கிற்கு அருகில்
பசுபதேச்வரர் கோயிலுக்கு எதிரில் உள்ளது.
பத்ரேச்வரர் கோயில்: சௌக்கிலிருந்து சங்கட
தேவி கோயில் வழியாகப் போசலா காட்டில் படனிடோலா என்னுமிடத்தில் உள்ளது. இங்குள்ள
பத்ர ஹ்ருத தீர்த்தத்தில் நீராடி, கோதானம் செய்வது மிக்க புண்ணியத்தை அளிக்கும்.
பூரட்டாதி நக்ஷத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்த நாளன்று இங்கு தரிசிப்பது
விசேஷமானது.
பூதேச்வரர் கோயில்: தசாஸ்வமேத் பகுதியிலிருந்து
பூதேச்வர் கல்லியை அடைந்தால் இக்கோயிலைத் தரிசிக்கலாம்.
சக்ரேச்வரர் கோயில்: அன்னபூர்ணா கோயிலில்
உள்ளது. இங்குள்ள சக்ர தீர்த்தத்தையும், சக்ரம் பொறித்த லிங்கத்தையும் பற்றிக்
காசிக் காண்டம் குறிப்பிடுகிறது.
சதுர்முகேச்வரர் கோயில்: ராஜ்காட் போர்ட்டில் உள்ள
ஆதி கேசவர் கோயிலுக்கு அருகில் வருண சங்கமேச்வரருக்கு முன்பு இந்த சதுர்முகப் ப்ரயாக லிங்கம் உள்ளது. சதுர்முகப் பிரமனால் ஸ்தாபிக்கப்பட்டது.
தக்ஷேச்வரர் கோயில்: பிஷேஷ்வர் கஞ்ஜ் வழியாக வ்ருத்தகாலை அடைந்து ம்ருத்யுஞ்ஜேச்வரருக்கு
அருகிலுள்ள தக்ஷேச்வரரைத் தரிசனம்
செய்யலாம். நோய்களை நீக்க வல்ல காலோதக கூபம் என்ற கிணறு இங்கு உள்ளது.
தன்வந்தரேச்வரர் கோயில்: மேற்கூறிய ம்ருத்யுஞ்ஜேச்வரருக்கு அருகிலுள்ள
மாலதீச்வரர் பக்கத்தில் தேவ வைத்தியரான தன்வந்திரி பூஜித்த சிவலிங்கம் உள்ளது.
அனைத்து நோய்களையும் நீக்க வல்ல சன்னதி இது. பல மூலிகைகளை இங்குள்ள கிணற்றில்
தன்வந்திரி போட்டுள்ளதாகக் காசிக் காண்டம் கூறுகிறது. இக்கிணறு தற்போது காலோதக
தீர்த்தத்துடன் கலந்து விட்டதாகக் கூறுகின்றனர்.
ஹஸ்தி பாலேச்வரர் கோயில்: மேற்கூறிய
தக்ஷேச்வரருக்கு அருகில் தாரா நகரில் உள்ளது. யானையாக வழிபடப்படுவதால் இப்பெயர்
வந்தது.
மாலதீச்வரர் கோயில்: மேற்கூறிய ஹஸ்தி
பாலேச்வரரருகில் மாலதீச்வரர் உள்ளார்.
த்வாரேச்வரர் கோயில்: துர்கா தேவி கோவிலின்
தெற்கு வாயிலில் துர்க் விநாயகர் அருகில் த்வாரேச்வரி தேவியுடன் த்வாரேச்வரர்
தரிசனம் தருகின்றார்.
கௌதமேச்வரர் கோயில்: காசி நரேஷ் சிவாலயா என்று
அழைக்கப்படும் இக்கோயில், கோடோவ்லியா என்ற இடத்தில் மார்வாரி ஹாஸ்பிடல் அருகில்
உள்ளது. முசுகுந்தேச்வரருக்கு அருகிலுள்ள இம்மூர்த்தியைக் கௌதம முனிவர் பிரதிஷ்டை
செய்ததாகக் கூறுவர்.
கோப்ரக்ஷேச்வரர் கோயில்: லால் காட் பகுதியில் கௌரிசங்கர் எனப்படும்
இக்கோயில் , பிர்லா சம்ஸ்க்ருத வித்யாலயாவுக்கு அருகே உள்ளது. இதற்குப் பக்கத்தில்
ஆதி மகாதேவர் கோயில் உள்ளது.
ஜ்வரஹரேச்வரர் கோயில் : கோப்ரக்ஷேச்வரர் கோயிலுக்குக் கிழக்கில் ஸ்கந்த
மாதா கோயில் செல்லும் வழியில் ஜயத்புரா என்ற இடத்தில் இருக்கிறது. கொடிய நோய்களால்
பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டு நலம் பெறுகின்றனர்.
ஜம்புகேச்வரர் ஆலயம்: லோஹாட்டியா சென்று
அங்கிருந்து, பாரா கணேஷ் கோயில் வளாகத்திற்குச் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
ஜனகேச்வரர் கோயில்: தாரா நகரில் ம்ருத்யுஞ்
மகாதேவ் பகுதியில் உள்ளது. அருகில் மாலதீச்வரரையும் தரிசிக்கலாம். நோய் நீக்கம்
அளிக்கவல்ல காலோதக கூபம் என்ற கிணறு இங்கு உள்ளது.
கச்சேச்வரர் கோயில்: காலிகா கல்லியிலுள்ள
சுக்ரேச்வர் அருகில் இருக்கிறது.இதனை அடுத்து, விச்வநாதர்- அன்னபூரணி கல்லி உள்ளது. அருகில் சுக்ர கூபம் என்ற கிணறு உள்ளது.
கஹோலேச்வரர் கோயில்: காமச்சாவில் படுக் பைரவர்
கோயிலில் ஆதி பைரவரைக் காணும் முன்னர் கஹோலேச்வரரைத் தரிசிக்கலாம்.
காலேச்வரர் கோயில்: பைரோநாத்திலிருந்து
தண்டபாணி போகும் வழியில் உள்ளது. பஞ்சகங்கா கட்டம் வழியாகவும் செல்லலாம்.
கர்தமேச்வரர் கோயில்: லோலார்க் பகுதியில்
மகிஷாசுர மர்த்தனி கோயில் வளாகத்தில் உள்ளது.
கரவீரேச்வரர் கோயில்: லக்ஷா வரை சென்று
மகாலட்சுமி சக்தி பீடத்தை அடைந்தால் அங்குள்ள மகாலக்ஷ்மீச்வரருக்கு அருகில்
கரவீரேச்வரரைத் தரிசிக்கலாம்.
மகாலக்ஷ்மீச்வரர்
கோயில்: லக்ஸா வழியாகச் சென்று, ஸோராஹியா மகாதேவ் எனப்படும் மகாலக்ஷ்மீச்வரது கோயிலை
அடையலாம். அருகில் மகாலக்ஷ்மி குண்டம் உள்ளது.
மதாலகேச்வரர் கோயில்: விச்வநாதர்
கோயிலருகிலுள்ள காலிகா கல்லி என்ற இடத்தில் சுக்ரேச்வரருக்குக் கிழக்கே பஞ்சம்
மந்த்ரேச்வரர் எனப்படும் மதாலகேச்வரர் கோயில் உள்ளது.
மஹாஸித்தேச்வரர் கோயில்: அஸி பகுதியில் கோயங்கா
காலேஜ் என்ற இடத்தில் இக்கோயில் இருக்கிறது. அருகில் ஸித்த குண்டம் உள்ளது. ஸித்தி
தரவல்ல சன்னதி இது. அருகில் ஸித்த கூபம் என்ற கிணறு உள்ளது.
ம்ருத்யுஜ்யேச்வரர் கோயில்: பிசேச்வர் கஞ்ச் தாண்டி,
வ்ருத்தகால் பகுதியில் காலேச்வரருக்கு அருகில் உள்ளது. நோய் தீர்க்கும் காலோதக
கூபம் என்ற கிணறு அருகில் உள்ளது. இவரை அபம்ருத்யு ஹரேச்வரர் என்கிறது காசி
காண்டம்.ம்ருத்யுஞ் மகாதேவ் கோயில் என்றும் கூறுவர்.
( காசியின்
சிவலிங்க தரிசனங்களும் பெருமைகளும் தொடரும் )