Sunday, December 13, 2020

தலையாலங்காடு

 

                                                                                                         தலையாலங்காடு

                                                                                                         சிவபாதசேகரன்                                                  


கங்கை என்னும் கடும் புனலைக் கரந்தான் தன்னைக்

 காமரு பூம்பொழிற் கச்சிக் கம்பன் தன்னை

 அங்கையினில் மான்மறி ஒன்று எந்தினானை

 ஐயாறு மேவினானை ஆரூரானைப்

 பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்

 பரிதிநியமத்தானைப் பாசூரானைச்

 சங்கரனைத் தலையாலங்காடன் தன்னைச்

 சாராதே சால நாள் போக்கினேனே .

                                       -- திருநாவுக்கரசர் தேவாரம்   

 தலமும் இருப்பிடமும்: புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் தெய்வப் பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் 93 வது தலமாக விளங்குவது திருத்தலையாலங்காடு என்னும் தலம். இது வரலாற்று சிறப்பும்புராணச் சிறப்பும் மிக்க தலமாக விளங்குகிறது. இருப்புப்பாதை வழியாகச் செல்வோர் திருவாரூரில் இறங்கி கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் 11 கிலோமீட்டர் பயணித்தால் தலத்தை அடையலாம்சோழசூடாமணி (கடுவாய்) ஆற்றின் வடகரையில் ஐந்து நிமிட நடையில் ஆலயம் அமைந்துள்ளதுதமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து ரயிலில் வருபவர்கள்கும்பகோணத்தில் இறங்கி 25  கிலோமீட்டர் திருவாரூர் செல்லும் பேருந்தில் பயணித்தால் இத்தலத்தை அடையலாம்.

 


தலத்தின் தொன்மை: இந்த ஊரானது தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.இங்குநடைபெற்றபோரில், பாண்டியன்நெடுஞ்செழியன்சோழனை வென்றதால்,தலையாலங்கானத்துச்செருவென்றநெடுஞ்செழியன் எனப்பட்டான் என்று புறநானூறு கூறுகிறது.

தலத்தின்பெருமை:ஆலங்காடுஎனப்படும்தலங்களில் இது முதன்மையானது .இதனை முக வடாரண்யம் என்று வடமொழியில் கூறுவர்.

 


கோவில் அமைப்பு: ஊரின் நடுவே  இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. எதிரில் மகிமை வாய்ந்த சங்கு தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. அதில் அல்லிமலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றனஇதன் மேல்கரையில் படித்துறை விநாயகர் சன்னதி உள்ளது மேல் கரையிலும்தென்கரையிலும் ஸ்நான கட்டங்கள் உள்ளன. மேல்கரையில் ஆலய மதிலை ஒட்டி  ஜப மண்டபம் உள்ளது. 

ராஜகோபுரம் இல்லாததால் நுழைவு வாயிலில் பஞ்சமூர்த்திகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளனர். வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம் பலிபீடம் நந்தி ஆகியவற்றைத் தரிசிக்கலாம்இதன் அருகில் வலப்புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியை காணலாம். மூலவர் சன்னதி சற்று உயரத்தில் காணப்படுகிறதுநின்ற கோலத்தில் கணபதியும்அமர்ந்த கோலத்தில் பாசாங்குசம் ஏந்திய  அம்பிகையும் முன் மண்டபத்தில் இரு புறமும் காணப்படுகின்றனர். சுவாமி சந்நிதி நுழைவாயில் மண்டப முகப்பில் கணபதியும் கந்தனும் காட்சி அளிக்கின்றனர் மகாமண்டபத்தில் நடராஜர் சன்னதியைப் பார்த்தபடி சமயக் குரவர்கள் நால்வர் உள்ளனர். அப்பர் பெருமான்,இத்தலத்துஇறைவனைப்பாடியதிருத்தாண்டகப்பாடல்கள்   கல்வெட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

 


தெற்குப் பிரகாரத்தில்காசி விஸ்வநாதரும் விசாலாக்ஷியும் தனிச் சன்னதி கொண்டுள்ளனர். கன்னி மூலையில் கணபதிக்குத்  தனிச்  சன்னதி உள்ளதுவடமேற்கு மூலையில்முருகன்வள்ளி தெய்வானை சமேதராகக்  காட்சி அளிக்கிறார். வடக்குப் பிராகாரத்தில் தலவிருட்சமான பலாமரம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகக்  காணப்படுகிறது.  கோமுகத்தின் அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளதுஇதன் அருகில் பத்துக்கரங்களுடன்வட திசையை நோக்கியபடி  காளி தேவி காட்சி அளிக்கிறாள்.  பிராகாரத்தில் வில்வ மரம் உயர்ந்து விளங்குகிறதுபைரவர் சன்னதியில்  இரு பைரவர்கள் இருக்கிறார்கள். தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி முகப்பில் கிழக்கு நோக்கியவாறு அனுகிரக சனிபகவான் சன்னதி கொண்டுள்ளார்அம்பிகை சன்னதியின் கோமுகிக்கு அருகில் சண்டிகேஸ்வரி இருக்கக் காணலாம். சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபக் கோஷ்டங்களுள் தக்ஷிணாமூர்த்தி மட்டுமே காணப்படுகிறார். 


மூலவர்விமானம்உயரமானது. இதில் தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணுபிரம்மா முதலிய சுதைச்  சிற்பங்கள் காணப்படுகின்றனஇதன் தென்கிழக்கு முகப்பில்பெரியவடிவில்சோமாஸ்கந்தர்காட்சியளிக்கின்றார். மூலவர்சதுரஆவுடையார்மீதுதரிசனம்தருகிறார்.  ஆடல்வல்லான்  என்றும் நர்த்தனபுரீச்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இப்பெருமானைத் தரிசிக்காது  நாட்களை வீணாக்கி விட்டேன் என்று அப்பர் சுவாமிகள் பாடல் தோறும் குறிப்பிடுகிறார்மேலும்இப்பெருமான்தொண்டர்களுக்குத்தூநெறி காட்டுபவனாகவும்நரகத்தில் விழாமல் நம்மைக் காப்பவனாகவும், மும்மூர்த்தி வடிவில் விளங்குபவனாகவும், அடியார் சிந்தையுட் புகுந்து, நீங்காதவனாகவும், வேத வடிவினனாகவும்கயிலை மலையை எடுத்த அரக்கனை மன்னித்துஅவனுக்கு இராவணன் என்ற பெயர் கொடுத்த கருணாகரனாக விளங்குவதாகவும்  அப்பரின் தேவாரப் பதிகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

அம்பிகையின் திருநாமம் பாலாம்பிகை என்றும் திருமடந்தை என்றும் வழங்கப்படுகிறது. அழகுக்கு ஒருவரும் நிகர் இல்லை எனும்படிக் காட்சி அளிக்கிறாள்உலகன்னையாகிய இவள் கருணையே வடிவமான கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்திருநள்ளாற்றில் இருப்பது போலவே அம்பாள் சந்நிதி வாயில் அருகில் கிழக்கு நோக்கியபடி அனுகிரக சனிபகவான் சன்னதி கொண்டுள்ளார்சனிப்பெயர்ச்சியின் போது இவருக்கு விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. 

 


தேவகோஷ்டத்தில் கண்கவர் குருநாதனாகக் காட்சிதரும் தக்ஷிணாமூர்த்திக்கு வியாழக் கிழமைகளில்அர்ச்சனைகள்நடைபெறுகின்றன. பத்துக்கரங்களுடன் வடக்கு முகமாக அருள்பாலிக்கும் காளிதேவியை மக்கள் வெள்ளிக் கிழமைகளில்வழிபட்டு,வேண்டியவரங்கள்யாவும்பெறுகின்றனர்.   பிராகாரத்தில் மேற்குப் பார்த்த வண்ணம் உள்ள பைரவர் சன்னதியில்  இரண்டு பைரவர்கள் காட்சி அளிக்கின்றனர். ஒரு மூர்த்தியிடம் மட்டும் நாய் வாகனம் உள்ளது தேய்பிறை அஷ்டமியில் இவரை வலம் வந்து எல்லா நலமும் பெறுகிறார்கள்.

தீர்த்தங்கள்: கோவிலுக்கு எதிரிலுள்ள சங்க தீர்த்தம் தீராத பல நோய்களைத் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கப் பெற்றதாக பலரும் கூறக் கேட்கலாம். அருகிலுள்ள செம்பங்குடியில் பல்லாண்டுகளுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்கள் 48 நாட்கள் அதிகாலையில் இங்கு வந்து திருக்குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டு நர்த்தனபுரீச்வரர் சந்நிதியை 11 முறை வலம் வந்துவிட்டுமூலவரைத் தரிசிப்பார்களாம்.  சோழ சூடாமணிஆறுகோயிலுக்குத் தெற்கில் ஓடுகிறது. இதனைக் கடுவாய் நதி என்றும் அழைப்பார்கள்.  இந்தப் புனித நதியின் கரையில் பல சிவாலயங்கள் இருக்கக் காணலாம்.

தலவ்ருக்ஷம்: வடக்குப்பிராகாரத்தில்உள்ளபழமையானபலாமரம்தலவிருக்ஷமாகக் கருதப்படுகிறதுதலத்தின் பெயரோடு கூடிய ஆலமரம் கோயிலுக்குள் தற்போது இல்லை.

புராண வரலாறு: தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசாரவேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான் அம்முயலகன் மீது நடனமாடிய தலம் இது. எனவே தான் சுவாமிக்கு நர்த்தனபுரீச்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. கிருதயுகத்தில் கபில முனிவர்பூஜித்து,தைஅமாவாசை அன்று சிந்தாமணியைப் பெற்றார். . சரஸ்வதிதேவி பூஜித்துஜோதிர் லிங்க தரிசனம்பெற்றாள். இக்கலியுகத்திலும்சங்குதீர்த்தத்தில் நீராடுபவர்கள்குன்மம், முயலகன் நோய்சித்தபிரமைவெண்குஷ்டம்  முதலிய மகாரோகங்களில் இருந்து நிவர்த்திபெறுகிறார்கள். 

வழிபட்டோர்:கபிலமுனிவர்தாருகாவன முனிவர்கள்காளிசனிபகவான், திருநாவுக்கரசு நாயனார் ஆகியோர்.  இத்தலத்திற்கு அருகிலுள்ள குடவாயில்நாலூர்மயானம், பெருவேளூர், கரவீரம் ஆகிய தலங்கள் திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்களைப் பெற்றுள்ளதால், சம்பந்தப் பெருமான் தலையாலங்காட்டிற்கும் எழுந்தருளி, பதிகங்கள் பாடியிருப்பார். அதுபோலவே அருகிலுள்ள ஊர்களான திருவாஞ்சியத்தையும், திருவாரூரையும் பாடியுள்ள சுந்தரரும் இத்தலத்துஇறைவரைப் பாடியிருப்பார். நமது தவக்குறைவால் நமக்கு அப்பதிகங்கள் கிடைக்கவில்லை.

பிறசெய்திகள்:ஆண்டுதோறும்,பங்குனிமாதத்தில் கடைசி இரு நாட்களும்  தொடரும் சித்திரை மாதத்து முதல் இரு நாட்களும் விடியற்காலை சூரிய உதயத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும்போது சூரியபூஜை நடத்தப்படுகிறதுசில ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிகையின் மீது பாம்பு இருப்பதைப் பலரும் கண்டு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த பொழுதுஅப்பாம்பு தனது சட்டையை உரித்து அம்பாள் திருமேனியின் மீது போட்டுவிட்டு மறைந்துவிட்டது.

இங்குள்ளபைரவர்,மிகவும்சக்திவாய்ந்தமூர்த்தியாவார்.தீராதபகைகள், பிரச்சினைகள்பிணிகள்ஆகியவற்றைத்தீர்த்துவைப்பவர். எனவேதேய்பிறை அஷ்டமியின் போதுமக்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து நலம் யாவும்பெறுகின்றனர்.செவ்வாய்க் கிழமைகளில்   காளிதேவியை வழிபட்டுத் திருமணபாக்கியம், புத்திரபாக்கியம் ஆகிய கோரிய வரங்களைப் பெறுகின்றனர்ஒரு காலத்தில் பெரிய ஊராக இருந்ததால் எஞ்சிய கோயில்களின் மூர்த்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

 


கல்வெட்டுகள்: தெற்குப் பிராகாரச் சுவற்றிலும்வடபுறச் சுவற்றிலும்மகாமண்டப முகப்பிலும் உள்ள கல்வெட்டுகள், படி எடுக்கப்பட்டுள்ளனராஜராஜனின் ஆறாவது ஆண்டில் அளிக்கப்பட்ட தேவதானங்களும்அருமை உடையார் குமாரன்மண்டபம் கட்டித் தந்த செய்தியும்அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காலிங்கராயன்என்பவர்,இக்கற்றளியைத்திருப்பணிசெய்ததும் ,   கல்வெட்டுகள் மூலம் அறியப் படுகின்றன.

பூஜைகளும் விழாக்களும்: இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இயங்கும்  இக் கோயிலில்காலையும்மாலையும் பூஜைகள் நடைபெறுகின்றன பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறுகிறதுகுளக்கரை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை நடக்கிறதுதவிரவும் தை அமாவாசையை முன்னிட்டு இரு தினங்கள் சுவாமி புறப்பாடாகிசங்க தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்திரை மாதப் பௌர்ணமி சித்திரை சதயத்தில் அப்பர் குருபூஜைவைகாசி விசாகம்ஆடிப்பூரம்ஆடி-தை வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு விசேஷ அலங்காரம்விநாயகர் சதுர்த்திநவராத்திரி, கந்தசஷ்டிஅன்னாபிஷேகம்கார்த்திகை தீபம் மார்கழி பூஜை மகர சங்கராந்திமகா சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருப்பணிகள்: திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 5.7.1970 அன்று இதற்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதுசில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாலயம் செய்து திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுஅன்பர்கள் ஆதரவுடன் ஆடல்வல்லானின் திருவவருளுடன், பல்வேறு திருப்பணிகள் நிறைவேறி ,8.7.2012 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டுத் திருவாவடுதுறை ஆதீன 23 வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகளால் இக்கோயிலுக்கு ஆடல்வல்லான்சிவகாமி அம்பிகைகாரைக்கால் அம்மையார் ஆகிய உற்சவத் திருமேனிகள் அளிக்கப் பெற்றுப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதுமுதல், நடராஜர் அபிஷேகங்கள் ஆறும் அன்பர்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.   

 


 

உள்ளூர்க்கோவில்கள்: மயிலம்மன்திரௌபதிஅம்மன்ஐயனார்காளி,புற்றடிஅம்மன்ஆகிய கிராமதேவதைகளின் கோவில்கள் இங்கு இருக்கின்றன

சுற்றிலும் உள்ள தலங்கள்இங்கிருந்து திருவாரூர் செல்லும் வழியிலிருந்து மூன்றுகிலோமீட்டர் தொலைவில் எண்கண் சிவாலயம் உள்ளது. இதில் உள்ள முருகன் சன்னதி பிரசித்தமானது. திருவாரூர் சாலையில் காப்பணாமங்கலமும்,  அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கங்காதேவி பூஜித்த  கைலாசநாத சுவாமி ஆலயமும் உள்ளனஇதன் அருகில் அருணகிரிநாதரால் பாடப்பெற்றதலமான த்ரயம்பகபுரம்உள்ளது. இன்னும் சற்றுத் தொலைவில்அப்பரும் ,சம்பந்தரும் பாடிய பெருவேளூரும்கரவீரமும் அமைந்துள்ளன. வடகிழக்கில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் நால்வராலும் பாடப்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் உள்ளது. கும்பகோணம் செல்லும் பாதையில் குடவாயில்நாலூர்நாலூர் மயானம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் உள்ளன .இன்னும் சற்றுத்தொலைவில் திருச்சேறையும்நறையூர்சித்தீச்சரமும் உள்ளன. சேங்காலிபுரம், பருத்தியூர், சிமிழிபுதுக்குடி,  மஞ்சக்குடிஓகை ஆகிய ஊர்களிலும் சிவாலயங்கள் இருக்கின்றன. தலையானங்கானப் போரில் வில்லுக்கு நாண் தயார் செய்து கொடுத்த இடம், நாணல்சேரி எனப்படுகிறது. இங்கு இரு சிவாலயங்கள் உள்ளன. மேலும்தேவார வைப்புத் தலங்களான மணக்காலும், இராப்பட்டீச்சரமும், தனிச்சாத்தங்குடியும் (வடகண்டம்), காட்டூரும்  இதன் அருகில் அமைந்துள்ளன.

சமயப்பணி: சமயப்பணி செய்யும் ஆர்வலர்களும்தல யாத்திரை செய்யும் அடியார்களும் இக்கோயிலின் வளர்ச்சியில் பங்காற்றி, ஆலயம் மேலும் வளர்ச்சியடையவும் ஆலய சிப்பந்திகளின் வாழ்வாதாரம் மேம்படவும், உதவி இறையருள் பெற வேண்டுகிறோம். அடியார் பெருமக்கள் தங்கள் வருகையைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9443500235


 

4 comments:

  1. மிக் அருமையான பதிவு.
    சங்க காலத்தில் பாண்டிய நாட்டிலிருந்து இறைவனடியார் சோழ நாட்டுத் திருத்தலங்களில் வழிபடவென்று வழி நடந்தபோது, சிறுமலை அருகாமையிலிருந்து சோணாட்டுப் பதியான கொடும்பாளூரை அடைய ஒரு காட்டு மார்க்கம் இருந்ததாகவும் அந்தக் காட்டில் வறட்சி மிகையாகி நீர் நிலைகளெல்லாம் வறண்டிருந்ததாக சிலப்பதிகாரத்துக் காடுகாண்காதையிலிருந்து புலப்படுகிறது. சற்றே சுற்றுவழியாக இருப்பினும் கிழக்கு நுழைவு வாயிலாகக் கோடை வெயிலுக்கு இதமான ஆலமரங்கள் நிறைந்த வனமாகத் தலையாலங்காடு இருந்திருக்க வேண்டும்.அக்காரணத்தாலேயே நெடுஞ்செழியனும் தனது போருக்கு அக்காட்டைத் தேர்ந்தெடுத்திருக்க்க் கூடும்.
    தங்கள் குறிப்பின்படி, 'சங்குதீர்த்தத்தில் நீராடுபவர்கள், குன்மம், முயலகன் நோய், சித்தபிரமை, வெண்குஷ்டம் முதலிய மகாரோகங்களில் இருந்து நிவர்த்திபெறுகிறார்கள் என்று அறியப் படுகிறது. ஆடல்வல்லானின் திருவடிகளால் மிதிபட்டு நற்பேற்றுக்கு ஆளாகும் முயலகனின் நோயை வெறும் வலிப்பு என்று கொள்ளாமல், அசுரத் தன்மைகளான அறியாமையையும் ஆணவத்தையுமே குறிப்பிட்டிருப்பரென்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கம். நன்றி.

      Delete
  2. Asirvadams nallapadivu. Sameepa kaalam varai Rama iyer Enra periyavar Angu vasithu vandaar. Miga sirantha jotida nibunar.antha sivan Koil patri romba solvaar.Sanskrit scholar too. He used to advise us to visit the temple and offer prayers. Best wishes Janakiraman

    ReplyDelete
  3. Asirvadams nallapadivu. Sameepa kaalam varai Rama iyer Enra periyavar Angu vasithu vandaar. Miga sirantha jotida nibunar.antha sivan Koil patri romba solvaar.Sanskrit scholar too. He used to advise us to visit the temple and offer prayers. Best wishes Janakiraman

    ReplyDelete