Monday, November 8, 2010

துலா காவேரி புராணம்- 3


மந்திரன் என்ற பிரம்மச்சாரியின் சாபத்தால் பேய் உருவம் கொண்ட மனோக்யை என்ற பெண் , சுசிதன்என்ற முனிவரின் கட்டளைப்படி, அறுபது கோடி தீர்த்தங்களும் தங்களது பாவத்தைப் போக்கிக்கொள்ளும் காவேரி நதியில் ஸ்நானம் செய்து, பழைய உருவம் பெற்றதோடு, தன விருப்பப்படி, மந்திரனையே மணாளனாகப் பெற்றாள்.

நியமத்தோடு,காவேரி ஸ்நானம் செய்துவந்த ச்வேதவதி என்ற பதிவ்ரதையின் கால் மாண்டல்ய முனிவரின் மேல் படவே, அவர் கோபப்பட்டு, "சூரியன் உதயமாவதற்குள் உயிர் நீப்பாய்" என்று சாபமிட்டார். கற்புக்கரசியான ச்வேதவதி, "அப்படியானால் சூரியனே உதிக்காமல் போகட்டும்" என்று சபிக்கவே, சூரிய உதயம் ஆகாமல் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மாதி தேவர்கள் அவளிடம் சென்று, அவள் கணவன் சாபப்படி உயிர் நீங்காமல் இருக்கவும், இருவரும் துலா காவேரி ஸ்நானத்தைத் தொடர்ந்து செய்யவும் வரம் அளித்தார்கள்.

நியமம் தவறி வாழ்ந்துவந்த பிரம்ம சர்மா என்ற வேதியர் , தனது தர்ம பத்தினியான சுசீலையின் வாக்குப்படி, அவளோடு காவேரி தீரத்தை அடைந்து, அரசமர பிரதிஷ்டை செய்தும்,காவேரி ஸ்நானம் செய்தும் சிவ பூஜை செய்து கொண்டிருந்த காலத்தில், அவரது ஆயுட்காலம் முடிந்ததால் ,அவரது உயிரைக் கொண்டுபோக யமதூதர்கள் வந்தனர். சுசீலையின் கற்பு ஜ்வாலையால் அவர்களால் பிரம்ம சர்மாவை நெருங்க முடியாமல் போகவே, யமனிடமே மீண்டும் திரும்பினர். யமனுடைய கட்டளைப்படி சித்திரகுப்தன் அக்காரியத்தை செய்துவரச் சென்றான். அதை அறிந்த, சுசீலை, தனக்கு மாங்கல்யப் பிச்சை அளிக்குமாறு மன்றாடினாள். அவளது காவேரி ஸ்நானத்தின் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு, அவனது உடலைப் பாதுகாத்து வரும்படி சொல்லிவிட்டு, பிரம்ம சர்மாவின் உயிரை யமனிடம் கொண்டு சென்றான் சித்திர குப்தன்.

யமலோகம் செல்லும் வழியில் இரண்டு சண்டாளர்கள் வழிமறித்து, "எங்களிடம் செருப்பு வாங்கிவிட்டுப் பணம் தராமல் ஏமாற்றிவிட்டாய். இப்போது அதற்குப் பதிலாகத் தோல் தந்துவிட்டுப் போக வேண்டும்"என்றனர். தவித்துக்கொண்டு நிற்கும் பிரம்மசர்மாவின் நிலைக்கு இறங்கி அங்கு வந்த இரு பிரம்மச்சாரிகள்,தங்களது தொடையிலிருந்து தோல் எடுத்துக்கொடுத்தார்கள். சண்டாளர்கள் போனவுடன்,பிரம்ம சர்மாவை வணங்கி , இரு பிரம்மச்சாரிகளும்,"நாங்கள் இருவரும் தங்களால் வளர்க்கப்பட்ட அரச மரங்களே. அதன் பலனாகத்தான் உங்கள் பாவம் நிவர்த்தி ஆனது.நீங்கள் ஊருக்குத் திரும்பியவுடன் அந்த அரச மரங்கள் தோல் இல்லாமல் இருப்பதைப் பார்ப்பீர்கள்." என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்.

யமனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு ஸ்தோத்திரத்தை பிரம்ம சர்மாவுக்கு உபதேசித்தார் சித்திரகுப்தன். அதன்படியே, யமனைக் கண்டவுடன் ,அதனைப் பக்தியோடு சொன்னார் பிரம்ம சர்மா.

(யம சுலோகம்;

தர்ம ராஜ நமஸ்தேஸ்து சாக்ஷாத் தர்ம ச்வரூபினே;
தர்மிஷ்ட சாந்த ரூபாய சத்திய ரூப நமோ நம்:
யமாய ம்ருத்யவே துப்யம் காலாய ச நமோ நம்:
சூர்யபுத்திர நமஸ்தேஸ்து சர்வ பூத க்ஷயாயதே.... )

இதைக் கேட்ட யம தர்மனும் மிகவும் மகிழ்ந்து, நீண்ட ஆயுளைக் கொடுத்தான். அதற்குக் காரணம் , சுசீலையின் காவேரி ஸ்நான பலனும் ,யம ஸ்தோத்திர பலனும் ஆகும்.

மீண்டும் தனது சரீரத்தில் புகுந்து, உறக்கத்திலிருந்து எழுந்திருப்பவனைப் போல எழுந்த பிரம்ம சர்மாவைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப் பட்டார்கள். சில காலத்திற்குப்பின், சுசீலை,தனது கணவனிடமும், குழந்தைகளிடமும், தான் பகவானிடம் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று சொல்லி,எல்லோரையும் தன்னுடன் பகவன் நாமாக்களைச் சொல்லச் சொன்னாள். அவளின் காவேரி ஸ்நான பலனானது ,அவளுக்கு சுமங்கலியாக,
திவ்ய லோகம் கிடைக்கும்படி செய்தது.

விதி வசத்தால் மீண்டும் பாவங்களையே செய்ததால் பிரம்ம சர்மா,
எல்லோராலும் விரட்டப்பட்டு ஊர் ஊராகத்திரிந்து வந்தார். ஒரு வீட்டில் சிவ பூஜை செய்பவருக்குத் தீட்டு வந்து விடவே, அப் பூஜையை பிரம்ம சர்மா செய்து வந்தார். ஒரு நாள்,சாப்பிட்டு விட்டுப் பூஜை செய்த பாவத்தால், பன்றியாகப் பிறந்தார். அப்பொழுது, காவேரி ஸ்நானம் செய்யப் போய்க்கொண்டு இருந்த பத்மகர்பன் என்ற அந்தணனை காவேரி நதிக் கரை வரையில் அப்பன்றி துரத்தியது. அங்கு ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையில் இருந்து தெறித்த காவேரி ஜல்த்துளிகள் அப் பன்றி மேல் படவே, அப் பன்றி உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்றது. பாவம் நீங்கப்பெற்ற பிரம்ம சர்மனும் விமானம் ஏறி தேவலோகத்தை அடைந்தார்.

(காவேரி மகிமை தொடரும்)

No comments:

Post a Comment