முன்னுரை: சோழ நாட்டைப் பொன்னி நாடு என்றும் , சோழ அரசனைப் பொன்னி நாடன் என்றும் சொல்வதுண்டு. தனது இரு கரைகளிலும் சிவ ஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் கொண்டு ,தெய்வப் பொன்னி இதனை "சோறுடைய" நாடாகச் செய்கிறாள். "சோறு" என்பதற்கு மோக்ஷம் என்றும் பொருள் உண்டு. இப் பிறவிக்கு உணவையும் அடுத்த பிறவியே இல்லாத மோக்ஷத்தையும் அளிக்கும் வள்ளல் இவள். இத் தெய்வ நதியின் பெருமைகளை ஆக்னேய புராணம் முப்பது அத்தியாயங்களால் விரித்துரைக்கிறது. காவேரி ரகசியம் என்றும் வழங்கப்படுகிறது. இதனைத் துலா (ஐப்பசி) மாதத்தில் பாராயணம் செய்வதும் ,உபன்யாசம் செய்வதும் சிறந்த பலன்களைத் தரும். காவேரியைத் தியானித்து, இதனைப் படிப்பவர்கள் காவேரி ஸ்நான பலன்களைப் பெறுவார்கள் என்று சொல்லப் படுகிறது. இதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களைச் சுருக்கமாகவாவது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால், இதனை வாரம் ஒரு பகுதியாக நான்கு வாரங்கள் துலா மாதத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதோடு, அனைவரும் எல்லா நலன்களும் பெற்று உய்ய வேண்டும் என்று, ஸ்ரீ காவேரி மாதாவின் மலரடிகளை வாழ்த்தி வணங்குகிறோம்.
௨
துலா காவேரி மகாத்மியம்
अच्चास्वच्चालासध्धुकूलावासनाम पद्मासनाध्यायिनीम
हस्थान्यास्थावाराभायाब्जकालासाम राकेंधुकोतिप्रभाम।
भास्वध्बूशानागंधामाल्यारुचिराम चारूप्रसंनानानाम
गाधिसमास्थाथीर्थानिलायाम ध्यायामि कावेरिकाम।
- ஸ்ரீ காவேரி ஸ்துதி
ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை , தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத் திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன் , மேலும் கூறலானார்: கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும்,தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம்,தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார்.அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை , முனிவர்கள் , பிராயச்- சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.
காவிரியின் பெருமையை யாரால் சொல்ல முடியும்?
நாத சனமா என்பவன் , பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும் , கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள்,தங்கள் பத்திநிகளுடனும்,புத்திரர்களுடனும் தங்கி, ஹோமாக்னி செய்து,பலவித தானங்களை செய்துவரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால். காவேரி, மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று, அனவித்யை கேட்க, நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.
கவே ரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி, தன மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர், அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.
துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறைகளை,நாதசன்மா விளக்கினார்: உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேச்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால்,இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு,ஆயுள், ஆரோக்கியம், செல்வம்,கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும். "
பிறகு இருவரும் துலா ஸ்நானம் செய்து, ஸ்ரீ அபயாம்பிகையையும் ஸ்ரீ கௌரி மாயூர நாதரையும்,தரிசித்து, மோக்ஷம் பெற்றனர்.
(குறிப்பு: மாயூரம் ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்திலும் காவிரியின் வடகரையில் உள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி ஆலயத்திலும், ஸ்ரீ நாதசன்ம- அனவித்யாம்பிகை தம்பதிகளின் பெயரில் சிவ லிங்கங்களை உடைய சன்னதிகள் உள்ளன.)
(காவேரி மகிமை தொடரும்)
No comments:
Post a Comment