Thursday, February 11, 2010

சிவார்ப்பணம் மலர்-1 இதழ்- 1 March2010


அன்பார்ந்த வாசகர்களுக்கு:

சிவார்ப்பணம் என்ற இப்பகுதியை வெளியிடவேண்டும் என்ற ஆவல் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஈடேறுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மற்ற வெளியீடுகளைப் போல் இதுவும் இளைய தலைமுறைக்கு எளிமையாகப் புரியும் படி அமையும் என்று நம்புகிறோம். இதன் மூலம் புராண வரலாறுகள் , மகான்களின் வரலாறுகள் மற்றும் உபதேசங்கள் , பண்டிகைகளின் சிறப்புக்கள் ஆகியவை வெளி வர உள்ளன. தங்களின் மேலான கருத்துக்கள் இதனை மேலும் பயனுள்ளதாக ஆக்கும் என்பதால் அவற்றை வரவேற்கிறோம்.
எல்லாம் சிவன் செயல்.
"எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே."
சிவ சிவ

மகா சிவராத்திரியின் மகிமை

இறைவன் உருவமும் அருவமும் ஆனவன். "உருவமும் அருவமும் ஆகி" என்று கந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. பிரம்ம விஷ்ணுக்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக்கொண்டபோது இருவருக்கும் இடையில் அக்னி மலையாக சிவ பெருமான் தோன்றினான். அம்மலையின் முடியைத் தேடி அன்ன வடிவில் பிரமனும் அடியைத்தேடி பன்றி வடிவில் விஷ்ணுவும் சென்றனர்.இறைவனது முடியில் இருந்து விழுந்த தாழம்பூ, பிரமனுக்கு அஞ்சி,பிரமன் முடியைப் பார்த்ததாகப் பொய் சாட்சி சொல்லியது. அதனால் பிரமனுக்கு உலகில் கோயில் இல்லாமலும்,சிவ பூஜைக்கு தாழம்பூ பயன்படாமலும் சாபம் ஏற்பட்டது. பாதத்தைக் காண முடியவில்லை என்று விஷ்ணு உண்மையை ஒப்புக் கொண்டதால் இறைவனது அருளால் உலகத்தவர் வணங்கும்படி வரம் பெற்றார். இது நிகழ்ந்த தினம் மாசி மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி அன்று நடு இரவில் ஆகும். சிவ லிங்கமாக பிரம்ம விஷ்ணுக்களுக்கு நடுவில் தோன்றியதால் இந்த நேரத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள்.


உருவமும் இல்லாமல் அருவமும் இல்லாமல் உருவாருவமாய் ஏற்பட்டதே இதன் தனிச் சிறப்பு ஆகும். சோழர் கால ஆலயங்கள் பலவற்றிலும் சிவ சன்னதியின் பின்புறம் தேவகோஷ்டத்தில் லிங்கோத்பவ மூர்த்தியை தரிசிக்கலாம்.

சிவ ராத்திரி வகைகள்: மாசி மாத தேய் பிறை சதுர்தசி அன்று வருவது மகாசிவராத்திரி.

யோக சிவராத்திரி வகைகள் நான்கு:

சோம வாரத்தில் 24 மணி நேரமும் அது யோக சிவராத்திரி.

சோம வாரத்தில் இரவு நான்கு ஜாமமும் தேய் பிறை சதுர்தசி இருப்பது.

சோம வாரத்தில் இரவு 3 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் அரை நாழிகை அமாவாசை இருப்பது.

சோம வாரத்தில் இரவு நாலாம் ஜாமத்தில் தேய் பிறை சதுர்தசி அரை நாழிகை இருப்பது.

நித்திய சிவராத்திரி:12 மாதங்களிலும் வரும் 24 சதுர்தசிக்கள்.

பக்ஷ சிவராத்திரி: தை மாத தேய் பிறை பிரதமையிளிருந்து 14 நாட்கள் அனுசரிக்கப் படுவது.

மாத சிவராத்திரி: பெரும்பாலும் மாதத்தின் அமாவாசைக்கு முதலில் வரும் சதுர்தசி.

சிவ ராத்திரி விரதம்: சிவ ராத்திரிக்கு முன்தினம் ஒரு வேலை உணவு உண்டு மறு நாள் காலை நீராடிவிட்டு,நியமம்,பூஜைகளை செய்துவிட்டு,சிவாலய தரிசனம் செய்யவேண்டும். மாலையில் சிவாலத்தில் இரவு பூஜைக்கு வேண்டிய சாமான்களைக் கொடுக்க வேண்டும்.வீட்டில் சிவ பூஜை செய்யாதவர்கள் கோயில்களில் நடக்கும் 4 கால பூஜைகளைத் தரிசிக்கலாம்.

முதல் ஜாம பூஜை: பசும் பால்,பசுந்தயிர், பசு நெய்,கோமூத்ரம்,பசுஞ்சாணம் ஆகியவற்றை 1:2:3:1:1 என்ற அளவில் பஞ்சகவ்யமாகக் கலந்து சுவாமிக்கு அபிஷேகிக்க வேண்டும்.வில்வம்,தாமரை ஆகியவற்றால் அர்ச்சனையும் பொங்கல் நைவேத்யமும் ரிக் வேத பாராயணமும் செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமம் பாயசம் நைவேத்யமும் யசுர் வேத பாராயணமும் செய்யவேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், சாம வேத பாராயணமும் செய்வது விசேஷம்.

நாலாம் ஜாமத்தில் கரும்பு சாறினால் அபிஷேகமும் அதர்வண வேத பாராயணமும் செய்யவேண்டும்.

சிவராத்திரி பிரபலமாக எல்லா இடங்களிலும் நடைபெற்றாலும் காசி,ராமேச்வரம்,நேபாளம் ஆகிய இடங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.


சுவாமி மலைக்குப் பக்கத்தில் திரு வைகாவூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.புலிக்குப் பயந்த வேடன்,இரவு முழுவதும் வில்வ மரத்தின் மேல் கண் விழித்தபடியே உட்கார்ந்திருந்தான். வில்வ இலைகளை கீழே போட்டுக் கொண்டிருந்தான். கீழே இருந்த சுவாமிக்கு அவை யாவும் வில்வார்ச்சனையாக ஆகியது. அன்றைய தினம் மகா சிவராத்திரி ஆதலால் அவன் முக்தி பெற்றான் என்பது அந்த ஸ்தல வரலாறு.சிவ ராத்திரி என்று தெரியாமல் கண் விழித்தவனுக்கே முக்தி கிடைக்கும்போது அறிந்து செய்யும் சிவராத்திரி விரதம்,பூஜை,சிவ தரிசனம் ஆகியவற்றின் மகிமையை யாரால் சொல்ல முடியும்?

1 comment: