Tuesday, May 6, 2014

செங்காட்டங்குடியதனுள் கண்டேன்

திருச்செங்காட்டங்குடி என்ற பழமை வாய்ந்த சிவஸ்தலத்தில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பரணி நட்சத்திரத்தன்று அமுது படையல் என்ற வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். பிள்ளைக்கறி பிரசாதம் பெற்றுக்கொண்டு, விடியற்காலையில் ரிஷப வாகன தரிசனமும் செய்து கொண்டு, நிறைவான மனத்துடன் தமது ஊருக்குத் திரும்புகிறார்கள்.

கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்குவதற்காக விநாயகப் பெருமான் சிவபூஜை செய்ததால் சுவாமிக்குக் கணபதீஸ்வரர் என்றும் ஆலயத்திற்குக் கணபதீச்வரம் என்றும் பெயர்கள் வழங்கலாயின. அசுரனுடைய இரத்தம் பெருகி ஆறாக ஓடியபடியால், இத்தலம் செங்காட்டங்குடி எனப்பட்டது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி, திருமருகலில் இறங்கி அங்கிருந்து சுமார் மூன்று கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். ரயிலில் வருபவர்கள் நன்னிலத்தில்     இறங்கிக்  காரைக்கால் ,நாகை செல்லும் பேருந்துகள்  மூலம் திருமருகலை அடையலாம். திருவாரூரிலிருந்தும்  பேருந்து மூலம் திருச்செங்காட்டங்குடியை வந்து  அடையலாம்.

ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் வெளிப் பிராகாரத்தில் நந்தி,கொடிமரம்,அலங்கார மண்டபம் அம்பாள் சன்னதி ஆகியவற்றைத் தரிசித்துவிட்டு, உள்ளே நுழைகிறோம். அடுத்த பிராகாரத்தில் அமைந்துள்ள திருமாளிகைப்பத்தியில்  சிறுத்தொண்ட நாயனார்  தனது குடும்பத்தினருடன் உத்திராபதீஸ்வரர் சன்னதியை நோக்கி அஞ்சலி செய்தவராகக் காட்சி தருகிறார். எதிரில் மிகப்பழமையான ஆத்தி மரம் இருக்கிறது. மூல சன்னதியில் கணபதியால் வழிபடப்பெற்ற கணபதீஸ்வரர் தரிசனம் தருகிறார். பிராகாரத்தில் வாதாபி கணபதியின் சன்னதி இருக்கிறது.

சிவனடியார்க்கு நாள் தோறும் அமுதளிப்பதை நியமமாகக்கொண்ட சிறுத்தொண்டரைச்  சோதிக்க ,பைரவக் கோலத்தோடு உத்திராபதியாராக வந்த சிவபெருமானைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்ற சிறுத்தொண்டர், வந்தவர் கேட்டபடியே, மனமுவந்து, தனது ஒரே மகனான சீராளனைத் தன் மனைவியார் பிடிக்கத்தானே அரிந்து அமுதாக்கி , அடியவர்க்குப் படைத்தார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இறைவன் திருவருளால் அக்குழந்தை உயிர்பெற்றதோடு, அவனது பெற்றோரும்,தாதியாரும் காணும்படியாக, உமையும் கந்தனும் தன்னோடு ரிஷப வாகனத்தில் வர, அவர்களுக்குக் காட்சி தந்து, முக்தி அளித்த வரலாற்றை நினையும்படி இன்றும் அதனை விழாவாக நடத்திக் காட்டுகிறார்கள்.

காலையில் உத்திராபதீச்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளை சார்த்தி, சுமார் பத்து மணி அளவில் உள்  பிராகாரத்திலும், வெளிப்பிராகாரத்திலும் சுவாமி வலம் வந்துவிட்டு தனது சபையை அடைகிறார். வழி நெடுகிலும் சுவாமிக்குப் பன்னீரைக் காணிக்கை ஆக்குகிறார்கள் பக்த கோடிகள்.
நண்பகலில் சுமார் இரண்டு மணிக்கு மீண்டும் உத்திராபதியார் புறப்பாடு நடைபெறுகிறது. அதற்காக அலங்கரிக்கப்பட்ட பவழக் கால் சப்பரத்தில் எழுந்தருளியவாறு, தெற்கு வீதியின் கோடியில் உள்ள சிறுத்தொண்டரது மனைக்குச் செல்கிறார் பெருமான். சிவனடியாரைத்தேடிக்கொண்டு சிறுத்தொண்டர் வெளியில் சென்று விட்டபடியால், அவரது மனைவியான திருவெண்காட்டு நங்கையும்,சந்தனத்தாதியாரும் சுவாமியை எதிர் கொண்டு அழைக்கிறார்கள். ஆண்கள் இல்லாத வீட்டில் நுழைவது முறை அன்று என்று சுவாமி மீண்டும் கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடிக்கே வந்து அமர்கிறார்.

சிவனடியார் வந்துவிட்டுப் போன செய்தியை மனைவியின் மூலம் அறிந்த சிறுத்தொண்டர் ஆனந்தம் மேலிடக் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கி, உணவு அருந்தத் தனது  மனைக்கு அழைக்கிறார். தான் உண்பது நரப்பசு என்று சொல்லியும், அதற்கு உடன்பட்ட சிறுத்தொண்டர் , பெருமானைத் தன்  மனைக்கு வர அழைக்கிறார். இரவு சுமார் ஒன்பது மணிக்குச்  சிறுத்தொண்டர் பெருமானை அழைக்க வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கான பெரியபுராணப் பாடல்களை ஓதுவாமூர்த்திகள் பாடுகிறார்கள். இரவு இரண்டு மணி அளவில் உத்திராபதீச்வார் , சிறுத்தொண்டர்  மனைக்கு எழுந்தருளுகிறார். மக்கள் கூட்டம் வெளியில் அமர்ந்தவாறு அப்போது ஓதப்படும் பெரியபுராணப் பாடல்களை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அமுது படைக்கும் பொது உள்ளேயிருந்து ஒரு சப்தம் கேட்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் சுவாமி விரைவாகக் கோயிலுக்குச் சென்று விடுகிறார்.

உத்திராபதியார் அருளால் மீண்டும் உயிர் பெற்ற தனது குமாரனுடனும் மனைவி,தாதி ஆகியோருடனும்  கோயிலை நோக்கி சிறுத்தொண்டர் வரும்போது,தெற்கு வீதியில் விடியற்காலையில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்த வடிவில்  அவர்களுக்குத் தரிசனம் கிடைக்கிறது. பாடல்கள் இசைக்கப்படுகின்றன. தீபாராதனை பெருமானுக்கும் சிறுத்தொண்டருக்கும் நடைபெறுகிறது. நால்வரும் பெருமானை வலம் வந்து விட்டுக் கோயிலுக்குச் சென்று விடுகின்றனர். சுவாமி நான்கு வீதிகளையும் வலம் வந்தவாறு திருக்கோயிலைச் சென்று அடைகிறார். 

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தோளில் சுவாமியைத் தூக்கி வரும் ஆட்கள் பாராட்டுக்கு உரியவர்கள். வீதியில் உள்ள மக்களும் அந்த ஆட்களின் பாதங்கள் வெய்யிலால் வருந்துமே என்று, வழி நெடுகிலும் தண்ணீர் தெளித்து வைக்கிறார்கள். தரிசிக்க வரும் அன்பர்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர், நீர்மோர் ஆகியவை பலரால் ஆங்காங்கே தரப்படுகிறது. இவை எல்லாமே சிவபுண்ணியம் தான்! 

" சிறுத்தொண்டன் பணி செய்ய" அதனைப் பெருமான் அன்று ஏற்று அருளியவாறு, இக்காலத்திலும் அவனுக்குப் பணி செய்தால் அவனருளைப் பெறலாம் என்பது நிச்சயம்.   கண்கள் தாரையாக உருகும் சிறந்த அடியார்களைக் காண வேண்டும் என்றால் அமுது படையல் உற்சவத்தில் காணலாம். எத்தனையோ குடும்பங்களுக்குக் குல தெய்வமான உத்திராபதீச்வரரையும் அவனே கதி என இருக்கும் அடியார்களையும் "செங்காட்டங்குடியதனுள்  கண்டேன் நானே"  என்று அப்பர் பெருமான் அருளியதுபோல் நாமும் காண்கிறோம்.


Friday, April 11, 2014

ஏனமால் வழிபட்ட ஏனங்குடி

வராஹ வடிவெடுத்துத்  திருமாலானவர்  சிவபூஜை செய்த ஸ்தலங்கள் பல உண்டு. அவற்றுள் முக்கியமாகக் கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள சிவபுரம் என்ற தலத்தைக் குறிப்பிடலாம். இங்கு வெள்ளைப் பன்றி வடிவத்தில் பல காலம் தங்கி மகாவிஷ்ணு தவம் செய்ததைத் தேவாரமும் குறிப்பிடுகிறது.

" பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும் ..." என்பது தேவார வாக்கியம். வராகராக  வந்த திருமாலைக் குறிப்பிடும்போது, " ஏன மால்"  என்பார் ஞானசம்பந்தர். ஏனம் என்ற சொல் பன்றியைக் குறிக்கும். அப்போது தனது பிறை போன்று வளைந்த கொம்பை சிவபிரானுக்கு அர்ப்பணித்தார் திருமால்.  பரமேச்வரனது மார்பில் எவை எல்லாம் அணிகலன்களாகத் திகழ்கின்றன என்பதைத் தான் அருளிச்செய்த முதல் திருப்பதிகத்திலேயே குறிப்பிடுகிறார் சம்பந்தப்பெருமான். " முற்றல் ஆமை இள நாகமோடு ஏன முளைக்கொம்பு அவை பூண்டு , வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்..."  என்றார்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள சன்னா நல்லூர் என்ற ஊருக்குக் கிழக்கே காரைக்கால் செல்லும் வழியில் சுமார் நான்கு கி. மீ. தொலைவில் உள்ளது ஏனங்குடி என்ற சிறிய கிராமம். இங்கும் ஏன(பன்றி) வடிவில் மகாவிஷ்ணு சிவபூஜை செய்திருக்கிறார். ஆகவேதான் ஊருக்கு ஏனங்குடி என்ற பெயர் ஏற்பட்டது. பேருந்து சாலையிலிருந்து சுமார் ஒரு கி. மீ. தொலைவில் உள்ளது சிவாலயம். ஊர் எல்லையில் இருப்பதால் கோயிலுக்கு அருகிலேயே வயல்கள் அமைந்துள்ளன.

நுழைவு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தில் உமாமகேச்வரர்கள் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். நுழைந்தவுடன் சுவாமி சன்னதியை நோக்கிய நந்தியைத் தரிசிக்கிறோம். நந்திமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பக் கிருகம் ஆகியவை கருங்கற்களால் அமைக்கப்பெற்றவை.நந்தி மண்டப மேற்புறம் பருத்த வேர்கள் ஊடுருவியிருப்பதால் உடனே திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மேற்கூரையும் ஆங்காங்கே சிதிலம் அடைந்துள்ளது. எல்லா விமானங்களும் செப்பனிடவேண்டிய நிலை. திருமாளிகைப்பத்தி மண்டபமும் , சுற்று மதிலும் இதுபோலத்தான் இருக்கிறது பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வில்வ மரம் இருக்கிறது.

அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரில் மதில் சுவர் வாயில் வழியாகத் திருக்குளம் அமைந்துள்ளதைக் காணலாம். கிழக்கு நோக்கிய திருமாளிகைப்பத்தியில் முதலில் விநாயகரது சன்னதியும், அதை அடுத்துப் பண்டரிநாதனின் சன்னதியும் உள்ளது. இருகைகளையும் இடுப்பில் வைத்தவாறு, தேவியுடனும் நாரதருடனும் காட்சி அளிக்கின்றார் பண்டரிநாதன். இதனை அடுத்து சுப்பிரமணியர், கஜலக்ஷ்மி ஆகியோரது சன்னதிகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. கோயில் கிணற்றையும் இந்தப் பிராகாரத்தில் காண்கிறோம். மேற்கு நோக்கிய மண்டபத்தில் நவக்ரகங்கள் ஒரே திசையை நோக்கியவாறு காட்சி அளிக்கின்றனர்.

கர்ப்பகிருகத்தில் அழகிய சிவலிங்க மூர்த்தியாக திருவாலந்துறையார் என்ற பெயருடன் மூலவர் தரிசனம் தருகிறார். இந்த மூர்த்தியை வழிபட்ட வராகப் பெருமாள், மகாமண்டபத்தில் இருப்பதைக் காணலாம். சுவாமியின் பெயர் ஆல விருக்ஷத்தை ஒட்டி அமைந்திருப்பதால் , ஸ்தல விருக்ஷம் ஆலமரமாகக் கருத இடமுண்டு. அதற்கேற்ப, கோயிலுக்கு வெளியில் ஆல மரம் ஒன்றும் இருக்கிறது. மகாமண்டபத்தில் இருந்தபடியே அம்பிகையின் சன்னதியையும் தரிசிக்கிறோம். மகிழம்பிகை என்று தேவி அழைக்கப்படுகிறாள்.புத்திர பாக்கியம் வேண்டி மகாவிஷ்ணு மகிழ மலர்களால் பூஜித்து, மன்மதனைப் புத்திரனாகப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. ஆலயத்தில் மகிழமரமும் இருக்கக் காணலாம். எனவே இங்குள்ள வராக தீர்த்தத்தில் நீராடி சுவாமியையும் அம்பாளையும் வழிபடுவோர் புத்திர பாக்கியம் கிடக்கப் பெறுவர் என்று கூறுவர். இங்குள்ள பைரவ மூர்த்தியை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்தால் வேண்டிய வரங்கள் யாவும் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது என்றும் சொல்லப்படுகிறது.

அபூர்வ தரிசனம்: எங்கும் இல்லாத வகையில் இங்கு மட்டுமே சண்டிகேஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஆலய சிவாசாரியார் திருப்புகலூரிலிருந்து வந்து பூஜை செய்கிறார்.
இத்தலத்தின் அருகில் உள்ள புத்தகரம், ஆதலையூர், கோட்டூர் ஆகிய ஊர்களின் சிவாலயங்களையும் அன்பர்கள் தரிசிக்க வேண்டும். 
  
இத்தனை பழைமையும் பெருமையும் வாய்ந்த ஏனங்குடி ஆலயத்தைப் புனரமைக்க முன்வந்துள்ள கிராம வாசிகளைப் பாராட்ட வேண்டும். விநாயகர் மற்றும் சுவாமி சன்னதிகளின் விமான வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், சென்ற மாதம் எதிர்பாராத விதமாக இத்திருக்கோயில் தரிசனம் கிடைக்கப்பெற்றோம். நாமும் இப்பணியில் பங்கேற்கவேண்டும் என்ற எண்ணத்தைத் திருவருள் தோற்றுவித்ததால், அன்பர்களின் உதவியுடன் அம்பாள், சுப்பிரமணியர், கஜலக்ஷ்மி, சண்டிகேஸ்வரர் விமானவேலைகளைத் துவக்கினோம். தற்போது அவை முடியும் தருவாயில் இருக்கின்றன.

எஞ்சியுள்ள திருப்பணிகளாவன மேற்கூரை, மதில் ஆகியவற்றைப் பழுது பார்த்தலும், பிராகாரத்தில் வலம் வரத் தரை அமைப்பதும் ஆகும். அன்பர்கள் முன்வந்தால் இவற்றையும் விரைவிலேயே பூர்த்தி செய்து, வரும் ஆனி மாதத்தில் கும்பாபிஷேகம் செய்து விடலாம். திருவருள் துணை இருந்தால் முடியாததும் உண்டோ?  
   

 இதுபோன்ற கிராமக் கோயில்களை நாம் அவசியம் பராமரிக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. புராண வரலாறுகளை நமக்கு உணர்த்துபவை. அவற்றைத் தரிசிப்பதோடு நின்று விடாமல் நம்மால் இயன்ற அளவுக்கு அக்கோயிலின் பராமரிப்புக்கோ, திருப்பணிக்கோ உதவ முன்வர வேண்டும். புகைப்படங்களோடு கட்டுரை எழுதுவதோடு நின்றுவிடாமல் அக்கோயிலுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. பல கிராமக் கோயில்கள் பாழடைந்துவிட்ட  நிலையில் இத்தகைய சிந்தனை நிச்சயமாகப் பலன் தரும். வெளியூர்க் காரர்கள் நம் ஊருக்கு  வந்து திருப்பணி செய்வதைக் கண்டு நாமும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று உள்ளுர்க்காரர்கள் முன்வருவதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்பிக்கை வளர்கிறது.

Saturday, January 18, 2014

சப்தமங்கைத் தலங்கள்


சப்த மங்கையர் தோற்றம்; சாமுண்டியாகிய காளியானவள், சண்ட,முண்ட, ரக்தபீஜ அரக்கர்களை வதம் செய்வதற்கு எல்லாத் தேவர்களும் உறுதுணையாக இருந்தனர். ஒவ்வொருவரிடத்திலிருந்தும் ஒரு சக்தி உற்பவித்தாள்.:பிரமனிடம் தோன்றியவள் நான்கு முகம் கொண்ட பிராஹ்மி என்பவள். கைகளில் அக்ஷ மாலையும் கமண்டலமும் தாங்கியவளாக ஹம்ச வாகனத்தில் அமர்ந்தவளாகத் தோன்றினாள். மகேச்வரனிடத்தில் தோன்றியவள் மாகேச்வரி. திரிசூலத்தை  ஏந்தியும்,சந்திரனைத் தரித்துக் கொண்டும் தோன்றியவள் இவள். குமரக் கடவுளின் சக்தியாக வேலை ஏந்திய கௌமாரி வெளிப்பட்டாள். விஷ்ணுவிடம் தோன்றிய சக்தியான வைஷ்ணவி, சங்கு -சக்கரம்- கதை ஏந்தியவள். வராகமூர்த்தியிடம் வாராஹி தோன்றினாள். இந்திரனது சக்தியாக வஜ்ஜிரப்படையுடனும் ஆயிரம் கண்களுடனும் இந்த்ராணி வெளிவந்தாள். எல்லா சக்திகளும் இணைந்ததுபோல் சாமுண்டி வெளிப்பட்டருளினாள். இவ்வாறு சப்த கன்னியரும் காளி தேவிக்குத் துணையாக இருந்து போர் புரியச்சென்றனர். அதற்கு முன்பாக ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்து சிவனருள் பெற்றனர்.

சப்தமங்கைத் தலங்கள்: சப்த மங்கையரும் காளி தேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்வதன்முன் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சிவ தரிசனம் பெற்றனர். அவ்வாறு தரிசனம் பெற்ற தலங்கள் எழும் “சப்த மங்கைத் தலங்கள்” எனப்படுகின்றன. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐயம்பேட்டையைச் சுற்றி இத்தலங்கள் அமைந்துள்ளன.பார்வதி தேவியும் சப்த கன்னியர் பெற்ற தரிசனத்தைக் காண விழைந்தாள். அத்தரிசனங்களாவன: நெற்றிக் கண் தரிசனம், கங்காதேவி தரிசனம், திரிசூல தரிசனம், பாத தரிசனம், உடுக்கை தரிசனம், மூன்றாம் பிறை தரிசனம், நாக தரிசனம் என்ற ஏழும் ஆகும். சக்கரமங்கை ( சக்கரப்பள்ளி ), அரிமங்கை(ஹரிமங்கை), சூலமங்கை(சூலமங்கலம்), நந்திமங்கை(நல்லிச்சேரி), பசுபதிமங்கை(பசுபதி கோவில்), தாழமங்கை மற்றும்  , திருப்புள்ளமங்கை ஆகிய இந்த ஏழு தலங்களையும், வட திசையிலிருந்து வந்த நாத சன்மா - அனவித்தை என்ற  தம்பதிகள் வழிபட்டுப் பேறு பெற்றனர்.

                         சக்கரப்பள்ளி


சப்த மாதர்களில் ஒருவளான பிராஹ்மி பூஜித்த இத்தலம் அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது. சக்கரவாகப்பறவை தவமிருந்து இறைவனைப் பூஜித்தபடியால், சுவாமிக்கு சக்ரவாகீச்வரர் என்றும் தலத்திற்கு சக்கரப்பள்ளி என்றும் பெயர்கள் வந்தன. கோவில் சுவற்றில் ஈசனை சக்கரவாகப்பறவை பூஜிக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருமுடியைத்தேடி பிரமன் சக்கரவாகப் பறவையாக வடிவெடுத்துப் பறந்து சென்றும் காணமுடியவில்லை.தன் பிழைக்கு வருந்தி பிரமன் பூசித்துப் பழி நீங்கியதாக வரலாறு.

காசியிலிருந்து யாத்திரையாக வந்த நாதசன்மா – அனவித்தை தம்பதியர்க்கு வேதநாயகி என்ற பெயர் கொண்ட இத்தலத்து அம்பிகை, சிறுமியாகக் காட்சி அளித்தாள் பெண்களின் ஏழு பருவங்களில் முதலாவது பேதைப் பருவம். இது  சிறுமி வடிவைக் குறிப்பது. பக்தர்களைக் காக்க விரைந்து வருபவளாகத் தனது வலது திருப்பாதத்தைச் சற்று முன் நோக்கி வைத்திருக்கிறாள் அம்பிகை.
 
திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இந்த ஆலயம் பழமையானது. வாயிலில் ராஜ கோபுரம் இல்லை. ப்ராகாரக் கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியின் சிரத்தின் மீது ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. அதற்கும் மேல் ஆலமரம்.உள்ளது.

பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப்பள்ளியே. – சம்பந்தர் தேவாரம்

சப்த ஸ்தானப் பல்லக்கு விழா: பங்குனி மாதம் சித்திரை நக்ஷத்திரமன்று சக்கரப் பள்ளி கோவிலில் இருந்து புஷ்பப் பல்லக்கில் சக்கரவாகீச்வரரும் வேத நாயகியும் எழுந்தருள வெட்டிவேர் பல்லக்கில் நாதசன்மா – அனவித்தை தம்பதிகளும் தொடருகின்றனர். இப்பல்லக்குகள், புறப்பட்டு சப்த மங்கைகளில் உள்ள மற்ற ஆறு தலங்களுக்கும் சென்று திரும்புகின்றன.

                        அரிமங்கை

ariyamangai temple
                                                                                                                  நன்றி: shaivam.org
அய்யம்பேட்டை ரயிலடிக்கு மேற்கில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் ஒரு காலத்தில் நெல்லி வனமாக இருந்தது. அங்கிருந்த அரிநெல்லி மரக் கனியை மட்டும் உண்டு, இங்குள்ள சத்திய கங்கை தீர்த்தத்தில் நீராடி, திருமாலை ஒருகாலத்திலும் பிரியாதிருக்கும் வரம் வேண்டிசிவபிரானைப் பூஜித்து வந்தாள் மகாலக்ஷ்மி.. சப்த மங்கையரில் ஒருவளான மாகேச்வரி வழிபட்ட இத்தலத்தை  பார்வதி தேவி வழிபட்டவுடன், அம்பிகைக்குத் தனது சிரத்தின் உச்சியில் கங்கை பொங்க அற்புத தரிசனம் காட்டினார் பெருமான். அதுவே தற்போது சத்திய கங்கை தீர்த்தமாகத் திகழ்கிறது. விஷ்ணுவும் இந்த முர்த்தியை வழிபட்டதால் சுயம்பு மூர்த்தியான சுவாமிக்கு, ஹரிமுக்தீச்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. தேவி ஞானாம்பிகை எனப்படுகிறாள். தனிச் சன்னதியில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் உதீட்சராஜப் பெருமாள் காட்சி தருகிறார். காசி தம்பதியர்க்கு ஞானாம்பிகை, பெதும்பை(பள்ளி)ப் பருவத்தவளாகக் காட்சி அளித்தாள்.
கோயிலின் தல விருக்ஷம் நெல்லி மரம்.  சற்று மேடான இடத்தில் அமைந்துள்ள சிறிய ஆலயம் இது. .
                                     

                        சூலமங்கை


கும்பகோணம்- தஞ்சாவூர் இருப்புப்பாதையில் உள்ள பசுபதிகோயில் ரயிலடிக்கு அண்மையிலும், ஐயம்பேட்டையிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலும் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன் கூடிய பெரிய ஆலயம் இது. அகன்ற ப்ராகாரத்தையும் உள் மண்டபத்தையும் கொண்டது. திருவிழாக்களில் முக்கிய அங்கம் வகிக்கும் அஸ்திர தேவர் இங்கு சிலாரூபத்தில் சுமார் 4 ½ அடி உயரத்தோடு நுழைவாயில் அருகில் காட்சி அளிக்கிறார். பின்னால் சூலம் பொலியக் கைகூப்பியவராகக் காட்சியளிக்கிறார் அஸ்திர தேவர். கஜாசுரனை சிவபெருமான் வென்று,அவனது (யானைத்) தோலைப் போர்த்ததால் அவருக்குக் கிருத்திவாசர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு இறைவன்  கிருத்திவாகேஸ்வரர் எனப்படுகிறார். இவரிடம் சூலதேவர் வரம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சப்தமாதர்களில் கௌமாரி வழிபட்ட தலம் இது. அன்னை பராசக்தியும் இங்கு வந்து இறைவனை நோக்கித் தவம் செய்தபோது, தனது கரத்தில் சூலம் ஏந்தியவராக சுவாமி அவளுக்குக் காட்சி அளித்தார். வட நாட்டிலிருந்து வந்த நாதசன்மா – அனவித்தை தம்பதிகளுக்கு அம்பிகை மங்கைப்பருவத்தினளாகத் தரிசனம் தந்தாள். தேவாரத் திருப்பதிகம் இத்தலத்திற்குக் கிடைக்காவிடினும், அப்பர் பெருமான் வாக்கில் இத்தலப்பெயர் எடுத்தாளப்பட்டுள்ளதால்,இதனைத் தேவார வைப்புத்தலம் என்பர்
.  
நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாய நாதனையே காணலாமே.
                                           --திருநாவுக்கரசர் தேவாரம்
   
இங்கு கோஷ்டத்திலுள்ள தக்ஷிணாமூர்த்தி ஆலமரம் இல்லாமல் ஜடாமுடியுடன் தரிசனம் தருகிறார். சுவாமி சுயம்பு மூர்த்தி. கவசம் சார்த்தப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.

தை அமாவாசையன்று வரும் சூலவிரதம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்து, மகாவிஷ்ணுவானவர் , காலநேமி என்ற அசுரனை வென்றார். பிரமன் தனது கடுமையான வயிற்றுவலி நீங்கப்பெற்றான்.சூல விரதம் மேற்கொள்வதால், எதிரிகளின் தொல்லைகளும், நோய்களும், வறுமையும், தோஷங்களும் நீங்கப்பெறலாம்.
                             

                 நந்திமங்கை 
                 ( நல்லிச்சேரி )


நந்திகேச்வார் பரமேச்வரனைப் பூஜை செய்து, பெருமானது பாத தரிசனம் பெற்ற தலமாதலால் நந்தி மங்கை எனப்படுகிறது. சப்த கன்னிகைகளுள் வைஷ்ணவி தேவி இத்தலத்து ஈசனை வழிபட்டுப் பேறு பெற்றாள். அகிலாண்டேச்வரி என்ற பெயருடன் அம்பிகையும் இங்கு வந்து தவம் செய்து ஈச்வரனது பாத தரிசனம் பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது. காசியிலிருந்து வந்த தம்பதிகளுக்கு அம்பிகை கன்னிகை வடிவில் காட்சி கொடுத்தாள்.பாத தரிசனம் பெற்ற அம்பிகை தனது அம்சமாக அலங்காரவல்லி ஆனாள். காசியைப்போலவே அருகில் மயானமும் அதன் எதிரில் ஒரு சிவ சன்னதியும் உள்ளன. இந்த ஆலயத்தின் ஸ்தல விருக்ஷமாக நாவல் மரம் அமைந்துள்ளது. கோவிலின் அருகில் தேவகாத தீர்த்தமும் சுவாமி சன்னதிக்கு அருகில் ஒரு கிணறும் உள்ளன. 


வயல்கள் சூழப்பெற்று இந்த ஆலயம் பொலிவுடன் விளங்குகிறது.சுவாமி சன்னதி மேற்கு நோக்கியது. சுவாமிக்கு ஜம்புகேச்வரர் என்ற நாமம் வழங்கப்படுகிறது. அம்பாள் தெற்கு நோக்கியவாறு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். வாயிலில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். நந்திதேவர் சிவபெருமானை வழிபடுவதாகப் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.அழகிய வண்ண ஓவியங்கள் வௌவால் மண்டபத்தில் தீட்டப்பட்டுள்ளன. விஷ்ணு துர்க்கை சன்னதி விசேஷமானது. இத்  தலத்தில் சூரிய பூஜை நடைபெறுகிறது.

அய்யம்பேட்டையிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.


                  பசு (பதி) மங்கை
                ( பசுபதி கோவில்)


கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்றாகும். சப்த மாதர்களில் வாராகி வழிபட்டு ,ஈசனின் தமருகத்திலிருந்து (உடுக்கை) எழும் ஆதி நாதத்தைக் கேட்டு உய்ந்தாள். அதிலிருந்தே பிரபஞ்சங்கள் யாவும் உற்பத்தி ஆவதையும் அறிந்தாள். அதே தரிசனத்தை இங்கு வந்து வழிபட்ட அம்பிகையும் கண்டு,பேரானந்தப்பட்டாள். நாத சன்மா – அனவித்யா தம்பதிகள் இங்கு வந்து, பால்வள நாயகியையும் பசுபதி நாதரையும் வழிபட்டபோது, அம்பாள் அவர்களுக்கு அரிவை எனப்படும் தாய்ப் பருவத்தில் காட்சி தந்து அருளினாள்.
பிரதான வாயிலில் ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. வெளிச் சுவற்றில் பசு இறைவன் மீது பால் சொரிந்து வழிபடும் ஐதீகப் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. உச்சிஷ்ட கணபதி, பசுபதீச்வரர், பால்வள நாயகி ஆகிய மூவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. காமதேனுவும்,அகத்தியரும் சுவாமியை வழிபட்டுப் பூஜித்துள்ளனர்.

தஞ்சை – கும்பகோணம் பேருந்து வழியிலுள்ள பாபநாசத்தை ஒட்டி இத்தலம் அமைந்துள்ளது.

                              
                   தாழமங்கை   


சப்த மாதர்களில் இந்திராணி வழிபட்ட தலம் தாழமங்கை. தஞ்சாவூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதி கோயிலுக்கு அண்மையில் சாலை ஓரமாகவே ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வந்த இந்திராணி, சந்திரமௌலீச்வரனான இறைவனை நோக்கித் தவம் செய்து, அவனருள் பெற்றுக் காளிதேவிக்குத் துணையாக அசுரர்களிடம் போரிடச் சென்றாள் என்பது வரலாறு. மங்களத்தைத் தரவல்ல மஞ்சள்,குங்குமம்,சந்தனம் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஆதி வித்தாக இருந்து ஸ்ருஷ்டிக் காலத்தில் அம்பிகை விளங்கிய அற்புதத் தலம் இது. ராஜராஜேச்வரி என பெயருடன் அம்பாள் இங்கு அருள் புரிகிறாள்.

தக்ஷனின் 27 பெண்களை மணந்துகொண்ட சந்திரன், அவர்களுள் ரோகிணியிடமே மிக்க அன்புடன் இருப்பதைக் கண்ட தக்ஷன் கோபமடைந்து, சந்திரனது அழகிற்குக் காரணமான அவனது கலை தேய்ந்து மறையட்டும் என்று சாபமிட்டான். தனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்வதைக்கண்டு வருந்திய சந்திரன்,தாழமங்கையை அடைந்து இறைவனை வழிபட்டான். அவனுக்கு இரங்கிய பெருமான், அவனது மூன்றாம் பிறையைத் தனது சிரத்தில் ஏற்று அருளினான்..இதனால் பெருமானுக்கு சந்திரமௌலீச்வரன்,சந்திர சூடன், இந்து சேகரன் ,சந்திரசேகரன் ஆகிய பெயர்கள் ஏற்பட்டன.


இத்தலத்தில் தாழைச் செடிகள் நிறைந்த புதர்களருகில் சந்திரனது பத்தினி கடும் தவம் செய்து இறைவனின் பிறைசூடிய கோலத்தைத் தரிசித்தாள். அம்பிகையான ராஜராஜேச்வரியும் இப்பிறை தரிசனம் வேண்டி இறைவனை நோக்கித் தவம்  செய்தாள். அவள் விரும்பியபடியே, சுவாமியும் சந்திரமௌலீச்வரனாகக் காட்சி அளித்து அருளினார். சிவானந்தம் மேலிட்டவளாகப் பேரழகுடன் அன்னையும் அண்ணலுடன் அங்கேயே தங்கி அடியார்கள் வேண்டிய வரமளித்து வருகிறாள்.

சதய நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன் மாதந்தோறும் சதய நட்சத்திரம் வரும் நாளன்று இங்கு தரிசனம் செய்து, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சந்தனம், குங்குமம் போன்ற  வாசனாதி திரவியங்கள் சார்த்தி வழிபட்டதாகக் கூறுவர்.
காசி நகரிலிருந்து வந்த தம்பதிகளான நாத சன்மா – அனவித்தை இருவரும் இத்தலத்தை அடைந்து  வழிபட்டபோது அம்பாள் அவர்களுக்குத் தெரிவை வடிவில் பேரன்னையாகத் தரிசனம் தந்தாள்.


               திருப்புள்ளமங்கை


திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற இத்தலம், தஞ்சை – குடந்தை பாதையில் உள்ள பசுபதி கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தூரத்தில் இருக்கிறது.    சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட ஆலயம். அஷ்ட நாகங்களோடு வந்து சாமுண்டி தேவி சிவபூஜை செய்தபடியால் இங்கு வந்து வழிபடுவோர் நாக தோஷங்கள் நீங்கப்பெறுவதாகக் கூறப்படுகிறது. நாகாபரண தரிசனம் தனக்கும் கிடைக்கவேண்டும் என்று ஜகதம்பிகையும் தவம் செய்யவே, இறைவனும் அவ்வாறே காட்சி அளித்ததாக வரலாறு
.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த விஷத்தை அருந்திய இடம் இதுவே என்றும் அதனால் தலத்திற்கு ஆலந்துறை என்ற பெயர் வந்தது என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது.தேவாரத்திலும் இப்பெயர் எடுத்தாளப்படுகிறது.

மன்னானவன் உலகிற்கொரு மழை ஆனவன்; பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ் புளமங்கை
என்னானவன் இசை ஆனவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே.

   n  திருஞான சம்பந்தர் தேவாரம் 
  

பிரம தேவன் இத்தலத்து ஈசனைத் தவம் செய்து அருள் பெற்றதால், சுவாமிக்குப் பிரமபுரீச்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அல்லியங்கோதை என்ற பெயரால் தேவி அழைக்கப்படுகிறாள். சப்தமங்கைதலங்களை வழிபடவந்த நாதசன்மா-அனவித்தை தம்பதிகளுக்குத் தேவியானவள் பேரிளம் பெண் வடிவில் காக்ஷி அளித்தாள்
.
முதல் பராந்தக சோழனது கற்றளி இது. சோழர் காலச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. மூலவரின் கருங்கல் விமானத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள சிற்பங்கள் நம்மைப் பரவசப்படுத்துபவை.சின்னஞ்சிறிய வடிவில் உள்ள ராமாயண சிற்பங்களும், நாட்டியச் சிற்பங்களும் சிற்பிகளின் கைத்திறனைப் பறைசாற்றுவதாக உள்ளது. சுமார் 65 சிற்றுருவச் சிலைகளைக் கொண்ட அடித்தளத்தில்,கஜசம்ஹார மூர்த்தி, காலாரி, அந்தகாசுர சம்ஹார மூர்த்தி, தாண்டவ மூர்த்தி, வராகர் ஆகிய சிற்பங்கள் கலை நுணுக்கம் மிக்கவை.


தேவகோஷ்டங்கள் மிகவும் நேர்த்தியானவை. விநாயகர், பிரமன், லிங்கோத்பவர், மகாவிஷ்ணு சிற்பங்கள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் அஷ்டபுஜ  துர்க்கை அழகும் அருளும் மிக்கவள். கண்ணை விட்டு நீங்காத அற்புதக் கோலம். ஒருபுறம் அவளது வாகனமான சிங்கமும்,மறுபுறம் மானும் இருப்பதைக் காணலாம். அர்த்த மண்டபத்தின் மேல் உள்ள பூத கணங்களும் விமானத்திலுள்ள சுப்பிரமணியர், ரிஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூர்த்திகளின் சிற்பங்களும் இணையற்றவை.

கல்வெட்டுக்களில் இறைவன் ஆலந்துறை மகாதேவர் என்று குறிப்பிடப்படுகிறார். முதலாம் ராஜராஜன் காலத்திய கல்வெட்டால், புள்ளமங்கை ஊர்ச்சபையினர் முரசு அறைவித்து ஒன்றுகூடி, இருக்கு வேதத்திலும்,சாம வேதத்திலும் வல்ல அந்தணர் சிலருக்கு மானியம் விட்ட செய்தியை அறிகிறோம். பல கல்வெட்டுக்கள்  ஆலயத்திற்கு வழங்கப்பட்ட கொடைகள் பற்றி அறிவிக்கின்றன.

சப்த மங்கைத் தலங்களுக்கும் யாத்திரை செய்து அருள் பெற்ற நாதசன்மா-அனவித்தை தம்பதியர் ,நிறைவாக மயிலாடுதுறையை அடைந்து, காவிரியில் நீராடி கௌரி மயூரநாதரை தரிசித்துப் பின்னர் சிவபதம் பெற்றனர்.அத்தலத்தைச் சுற்றியும் சப்தமங்கைகள் பூசித்த சிவத்தலங்கள் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.